குனிவு





(1992ல் வெளியான குறுங்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

குனிந்த தலை குனிந்தபடியே மூட்டை சுமந்துசெல்லும் கழுதையை வேம்பில் இருந்த காக்கைகள் கவனித்து வந்தன.
ஒருநாள் காக்கைகளில் ஒன்று மற்றதைப் பார்த்து, ‘இந்தக் கழுதைமேல் உனக்கு இரக்கம் வரவில்லையா? எப்போது பார்த்தாலும் மூட்டை சுமந்து துன்பப்படுகிறதே…’ என்று சொல்லிப் பெருமூச்சுவிட்டது.
‘நாம் என்ன செய்யமுடியும்? கழுதைதான் தன்னைத் திருத்திக் கொள்ளவேண்டும்’ என்றது மற்றக் காக்கை.
‘ஏன் அப்படிச் சொல்கிறாய்?’
இறக்கைகளைக் கோதிக்கொண்டே இரண்டாம் காக்கை சொன்னது:-
‘குனிந்துகொண்டே இருப்பவன்
சுமந்துகொண்டே இருப்பான்.’
– காசி ஆனந்தன் கதைகள், முதற் பதிப்பு: மார்கழி 1992, காந்தளகம், சென்னை.