ஒரு நெஸ்பிறேயும் இரு சிநேகிதிகளும்




எனது அன்புத் தந்தை எஸ். அகஸ்தியரின் பிறந்த தினம் ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி (29.8.1926 – 08.12.1995) அதனை முன்னிட்டு தாமரையில்(1965) வந்த அவரது சிறுகதையை அனுப்பி வைக்கின்றேன்.
அன்புடன் இனிய நன்றி கூறிவிடைபெறும்
நவஜோதி ஜோகரட்னம். 25.8.2025.

மிஸிஸ் சரோஜா சுந்தரலிங்கம் அவர்கள், தனது ‘உயிர்த் தோழி’ மிஸிஸ் விஜேயா சிற்றம்பலம் சகிதம் கிளம்பி மெயின் வீதியில் இறங்கியபோது, மணி ஐந்து ஐந்தேகால் ஆகிவிட்டது.
இலங்கை நாகரிகத்தின் உச்சக்கட்டமான ‘கொழும்பு செவன்’ என்ற ‘சினமன் கார்ட’னிலிருந்து, ‘லவ் ஓடை’ என்னும் ‘அடல்ற்ஸ் ஒன்லி’ பிக்ஸர் பார்க்க, வெகு துல்லியமாக – ஒய்யாரமாக – ‘மஜெஸ்ரிக்’ தியேட்டரைத் தேடி, வழக்கத்துக்கு மாறாக இன்று ;கோல் ரோட்’ பக்கமாக இருவரும் ‘வோக்’ (றயடம) பண்ணிக் கொண்டிருந்தார்கள்.
அன்று மிஸிஸ்களின் ‘கார்’கள் ஓய்வெடுத்துக்கொண்டு ‘கறாஜ்’ஜில் கிடந்தன.
‘டிரைவர்’ செமன்சிகோ வலு குஷாலாக ‘வெறாண்டா’வில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான்.
அவனுக்கென்ன, அம்மாக்கள் வந்தால் வேலை, வேலை இல்லாவிடின் அவன்பாடு சும்மா.
மணி ஐந்தரை ஐந்தே முக்காலாகிக் கொண்டிருந்தது.
துரிதமாக நடந்துகொண்டுபோன மிஸிஸ் விஜேயா, பாம்பை மிதித்தவபோல் ஒரு ‘திடுக்’காட்டத்துடன், ‘ஓமைசறோ’ இண்டைக்கு நாங்க ஆக ‘லேட்டாயிட்டம்’ ‘பிக்ஷர்’ சரியாகச் ‘சிக்ஸக்குளொக்’குக்கு ‘ஸ்ராட்’(ளவயசவ) டாயிருக்கும், ‘கம் குய்க்லி’ என்று தனது கைக் கடிகாரத்தைப் பார்த்த வண்ணம், ஒரு கிளிக் குரலில் கீச்சிட்டுச் சொன்னா.
அந்தடியலாக உடனே இருவர் நடையிலும் ‘சடா’ரென்று ஓர் அசுர வேகம் தட்டியது. என்றாலும், இருவர் மனதுள்ளே, நடைபறிகிறதாயில்லை.
அந்தரமான இந்த வேளையிலே…
கொள்ளுப்பிட்டி ‘ஜங்ஷனி’ல் உள்ள ஹோட்டல் முகப்பிலே எப்பவோ தொங்கப் போட்டிருந்த ‘நெஸ்பிறே’க்கான ஒரு பெரிய ‘அட்வடைஸ்மென்ற் போட்’ ஒன்று இப்பவும் வெகு பரிதாபமாகச் செத்த சவம்போல தூங்கிக் கொண்டிருந்தது.
அந்த விளம்பர ‘போட்’ பலகையைக் கண்டதே தாமதம், கால்கள் தரித்தபடி மிஸிஸ்கள் இருவரும் தத்தமக்குள்ளே நாவூறிக் கொண்டனர்.
இருந்தாற் போல் இலங்கையில் கூப்பன் அரிசிக்கு வெட்டு விழ, கூடவே ‘மில்க்டின்’களுக்கும் துண்டு விழுந்து விலை ஏறிவிட்டதுதான் மிஸிஸ்களின் இந்த ‘நாவூறல்’களுக்குக் காரணமென்றாலும், கொலம்பு செவன்…சினமன்காடன், தனக்கெனப் பிரத்தியேகமாகத் திணித்து வைத்த புது நாகரிகத்தில் பழகிப்போன தோஷமும் இந்த ‘நெஸ்பிறே’யில் இவர்கள் இப்படிக் கண்வைக்க ஒரு காரணமாயிருந்தது. இந்த உண்மைகள் யாவும் மிஸிஸ்களின் குழந்தைச் செல்வங்களை அநாதைகளாகத் தூக்கித் தாலாட்டிச் சீராட்டி வளர்க்கிற இவர்களின் ‘ஆயா’க்களுக்கே வெளிச்சம்…
‘இது யுத்த காலத்திலும் இல்லாத நெருக்கடி, எந்தக் காலத்திலும் இப்படியாக எங்கள் மென்னிகளை இந்தப் பொருளாதாரம் நெரிடியது கிடையாது. ஆர் எங்கே சோத்துக்குத் தவண்டையடித்தாலும் இந்தக் கொழும்பு செவன்’ பாதிக்கப்பட்டதே இல்லை. ஆனால், இப்ப இந்த ‘மில்க்டின்’களினால்த்தான் தவண்டையடிக்கிறது என்று தனக்குள்ளே வெகுவாகத் துக்கித்துக் கொண்டா, மிஸிஸ்சறோ.
‘நெஸ்பிறே’யும் தட்டுப்பாடாகி இப்போ அறவே இல்லாமல் போய் விட்டதே. புலி பசித்தாலும் புலு;லுத் தின்னாது. மில்க் சாப்பாடு இல்லாவிட்டால் அந்தப் புலியின் கதிதான் எங்களுக்கும்’ என்று மிகவும் சலித்துக்கொண்டா, மிஸிஸ்விஜே.
இருவருக்கும் மீளாத சலிப்பு.
‘நோணாம்மா….’
கரடி கத்தினமாதிரி நண்பிகளின் ‘இன்ப அமைதி’யைக் கலைத்துக் கொண்டு. நொணாக்கள் முன்னே கை நீட்டி நிற்கும் ஒரு பிச்சைக்காரக் கிழவன் …. அவன் கிழவனாகத் தோன்றவில்லை… அம்மாக்களின் உயிர் எடுக்க வந்த யம
கிங்கரனாகவே அப்போது தெரிந்தான்.
இதனால் மிஸிஸ்களின் ‘வெறுப்புணர்ச்சி’ முகங்களில் அப்பட்டமாகச் சில்லிட்ட போதும், அதன் அப்பாவிப் பிச்சைக்காரனான கிழவனுக்கு அது புரியவேயில்லை.
‘நோணாம்மா, ஒங்களுக்குப் புண்ணியம் கிடைக்குமம்மா….’
‘புண்ணியம் கிடைக்குமம்மா’ என்று கிழவன் சொல்லி அடுத்த வாய் திற்க்கவஜல்லை, மிஸிஸ் சறோ குனிந்து ‘களுக்’கென்று சிரித்தா.
அந்தச் சிரிப்பில் நெளிந்த பெரும் ‘நையாண்டியம்’ கேவலம், அந்தப் பரதேசிக்குப் புரிந்ததோ என்னவோ, மிஸிஸ் விஜேயாவுக்கு அது நன்றாகப் புரிந்து விட்டது.
அவன் மறுபாட்டம் அவர்களைப் பார்த்துக் கை நீட்டிய வண்ணம் பழைய பல்லவியான ‘புண்ணியம் கிடைக்குமம்மா’ என்று உச்சரிக்க, மிஸிஸ் சறோ ஒரு நச்சரிப்போடு ‘சும்மா’ அலட்டாமல போப்பா, எங்களுக்குப் புண்ணியம் கிடைத்திருந்தால் ஒரு ‘நெஸ்பிறே’க்காக இப்படியெல்லாம் அம்பலோதிப்படுவோமா?’ என்று அவனை ஏளனமாகப் பார்த்துக் கேட்கிற ஒரு தோரணையில் தன்னிலே முணுமுணுத்தார்.
அதைக்கேட்டபோது அந்தக் கிழவனுக்கு, அந்தப் பரதேசிப் பிச்சைக் காரனுக்கு ஒரு பக்கம் சிரிப்பாகவும், மறுபக்கம் ஆச்சரியமாகவும், இன்னொரு பக்கம் பரிதாபமாகவும் இருந்தது.
அவனுக்கு நோணாக்களின் ‘அந்தர நிலை’ துப்பரவாக விளங்கிவிட்டது.
சற்றுத் திமிர் பிடித்தவன்போல் சிரித்துக்கொண்டு கேட்டான்:
‘நோணாம்மா ஒங்களுக்கு ‘நெஸ்பிறே’ உண்மையாகவே தேவைதானா?’
‘ஓமோம், தேவைதான்’
இருவர் வாய்களிலும் ஒரேவிதமாக உதிர்ந்த, இந்த ஆமோதிப்பு, ஒரு பச்சைக் குழநதை வாயிலிருந்து வந்த மாதிரி வெளிக்கிட்டது.
பரதேசிக் கிழவன் அதையும் கவனித்துக் கொண்டான்.
எந்த வித காரணமோ, கூச்சமோ, அருவருப்போ இன்றி இப்போது நோணாக்களின் கண்கள் அந்தப் பிச்சைக் காரனையே நுணாவின.
‘நோணாம்மா, கனக்க யோசியாதையுங்க, அவசரமாத் தேவையெண்டால், நேரே ‘மவுண்ட்லவேனி’யாச் சந்திக்குப் போங்க அங்கபோய் மாப்பாணிக் கவுண்டர் சாயுபா ஸ்ரோஸ் மனேஜரை ‘ரகசியமாக’ச் சந்திச்சால், அடுத்த நிமிஷமே தங்களுக்கு வேண்டிய ‘நெஸ்பிறே ஒங்க காலடியில் தேடி வந்து விழும்’
அனேக அர்த்தங்களை உள்ளடக்கி, இந்தச் சமாச்சாரத்தை மெதுவா அம்மாக்கள் காதுகளில் அவன் போட்டான்.
ஆனால், அது அம்மணிகளுக்குச் சரியாகப் புரியவே இல்லை. காரணம் அவர்களின் காதலெல்லாம் இந்த ‘நெஸ்பிறே’ யில் விழுந்து விட்டதுதான்.
இனங்காணாத ‘கிளுகிளு’ப்பு நண்பிகள் நெஞ்சுகளுக்குள் கிடந்து துளுத்திற்று.
ழூழூழூழூழூழூழூழூ
‘மவுண்ட்ல வேனியா’வுக்குச் செல்லும் ‘டபிள் டெக்கர் பஸ்ஸிலே. ஆதன் ‘அபஹட்டிலே, வேக்கண்ட்’ டாயிருந்க ஒரு ‘பாக்சீட்’டில் இரு சிநேகிதிகளும் வெகு பக்குவமாக அமர்ந்து கொண்டபோது, இருவரும் இந்த உலகத்தையே மறந்தவர்களாகவும், போனவாக்கில் ‘நெஸ்பிறே’ மில்க்டின்’களில் குறைந்தபட்சம், ஒரு ‘குரோஸக்காவது ரகசிய ‘ஓடர்’ கொடுத்து விட்டு உடனே திரும்பி விடலாம் என்ற ஒரு பெரும் மகிழ்ச்சியிலும் வலுவாகப் பூரித்துப் போயிருந்தனர்.
இவர்களின் மனவேகத்துக்குத் தோதாக பஸ் ஓடுவதாகத் தெரியவில்லை. நல்லூர் கந்தசாமிக் கோயில் தேர் ஊர்வது போலிருந்தது.
மிஸிஸ் சரோ இருந்தவாக்கில் ‘சடா’ரென்று துள்ளி எழுந்து அங்கலாய்த்தபடி எதையோ தேடிக்கொண்டிருப்பதை உற்றுக் கவனித்த மிஸிஸ் விஜே. ‘வட் ஆர் யூ சேச்சிங்..?’ என்று கேட்கவே மிஸிஸ் சரோ அழுகிற பாவனையில் அவளைப் பார்த்து, ‘மை ஹான் பாக் கோன் ரு தற் வே’ என்று எதிரே இருந்த இரண்டாவது சீட்பக்கம் சுட்டிக் காட்டினா.
‘கோ அண்ட் டேக்’
‘ஹவ் கான் ஐ கோ?’
‘வை?’
‘வண் ஒவ் த ஜென்டில்மன் சிற்றட்தெயா’
‘ஓ ஐ ஸி?’
எதிரே வலு குசாலாக இருந்த அந்த ‘ஜென்டில்மான்’ சற்றும் ஆசுவாசப்படாமல், மெதுவாகக் கண்களை உருட்டிக் கீழே பார்த்தார்.
அங்கே … அவரின் கால்களுக்குக் கீழே ;ப்ளாக் ஹான்பாக் ஒன்று’ செத்தேனே சிவனே என்ற வாக்கில் ஓர் அநாதையைப்போல் வெகு பரிதாபமாகக் கிடந்தது.
‘எடுப்போபோமா விடுவோமா’என்ற ஒரு தப்பாசை அவர் மனசுக்குள் ததிங்கிணதோம் போட்டது. சுற்றஞ் சூழ மனிதகணங்கள் என்ன செய்வது. ஆசைகளை வெளிக்குக் காட்டாமல் உள்ளே புழுங்கும் தபசிபோல் பேசாமல் இருந்து கொண்டார்.
‘அதற்குச் சொந்தக்காரி எவளாயிருப்பாள்?’ என்று அவர் தனக்குள் யோசித்துக் கொண்டிருந்த போதும், அதைப்பற்றி அவர் எந்தவித அக்கறையும் காட்டாதவராகத் தானும் தன்பாடும்மாக இருந்தார்.
அப்படி இருந்க அந்த ‘ஜென்டில்மான்’, ‘சட்டென்று விழித்துத் துடித்தவராகத் தான் கெண்டு வந்த ஒரு ‘டின்’ பார்சலை’ வெகு பக்குவமாக அணைத்து வைத்தபடி மீண்டும் ‘ஏனோ தானோ’வென்று ‘அசண்டை’யாக இருந்து கொண்டார்.
மிஸிஸ் சரோ, மேனியைச் சாடையாக நுளுத்தி வெகு பவ்வியமாக எழுந்து, சிறு நாரி வளைப்புக் கொடுத்து, அங்கே அவரின் கால்களுக்குக் கீழே மெல்ல எட்டிப் பார்த்தா.
பஸ்ஸில் இருந்த பிரயாணிகளின் கண்கள் அனைத்தும் ஒருசேர அவ மீது விழவே, அதனைப் பின் சீட்டிலிருந்து அவதானித்துக் கொண்ட மிஸிஸ் விஜேயா கீச்சிடும் தொனியில், ‘ஏ சறோ, வாட் ஆர்
யூ லுக்கிங்? யூ பெட்டர் கோ அண்ட்; டேக் தட்’ என்று உசுப்பிவிட்டும் மிஸிஸ் சறோ ஆடாமல் அசையாமல் அப்படியே தான் நின்றா.
பஸ் தன் பாட்டுக்கு ஓடிக்கொண்டிருந்தது.
அந்த ஜென்டில்மான் அப்பவும் முழுமையாகவே தன்னை மறந்து தூங்கி வளிந்து கொண்டிருந்தார்.
காதுக்குள் ஏதோ’கிறீச்’சிட்டது.
‘எக்ஸ்யூஸ் மீ ப்ளீஸ்….’
அந்த மனிதருக்கு இந்தக் குயில் குரல் இப்போது இதமாக – மெல்லக் கேட்டது.
சதிரம் அசையாமல் கண்களை உருட்டி மிஸிஸ் சறோவை அந்த ‘ஜென்டில்மான்’ பார்த்தபோது அவ தனது தேகம் நாணிச் சுருங்கிக் கூசுகிறதான ஒரு பாவனையில் நின்று, தெறித்துக் கக்கிய ஒரு காந்தச் சிரிப்போடு அவர் கால்களுக்குக் கிழே அநாதையாக விழுந்து கிடக்கும் ‘ஹான்பாக்’ கைச் சுட்டிக் காட்டி, ‘ப்ளீஸ் எக்ஸ்யூஸ் மீ ஐ வோன்ட் யூ ரேக் தற் பாக்’ என்று சொல்லவே, அவர் அவளைப் பார்த்து பாராதவர்போல மிகச் சாதாரணமாக, தனது கால்களை மெதுவாகத் தூக்கி எடுத்தவாறு கீழே குனிந்து பார்த்தார்.
கீழேயுள்ள விரிதடத்தில் அவளின் அந்தக் கறுத்த ‘ஹான்பாக்’ ஒரு சள்ளைப் பாடாகக் கிடந்ததைக் கண்டதும் முகத்தில் ஒரு புன்னகை, மலர ஓரக் கண் வைத்துச் சாடையாக அவளைப் பார்த்து, ‘இஸ் இட் யுவர்ஸ்?’ என்று அவர் கேட்கவே, அவ நாணித் திமிறிச் சிரித்த சாடை, ‘யேஸ், தற் இஸ் மைன்’ என்று ஆங்கிலத்திலேயே சொன்னா.
அப்படி அது சொன்னவுடன், அவர் அதனை எடுத்துக் கொடுக்கவென ;அவுக்’கென்று குனியும்போது, அவரோடு மருவி இருந்த அந்தப் பெரிய ‘டின் பார்சல்’ – அது டின் பார்சல் அல்ல, சுமார் ஐந்து ராத்தல் கொள்ளக்கூடிய ஒரு ‘நெஸ்பிறேடின்’ என்பது மிஸிஸ் சறோவுக்கு வள்ளீசாகத் தெரிந்து விட்டது.
‘நெஸ்பிறே டின்’னைக் கண்ட மிஸிஸ் சறோ தனது ஹான்பாக்கின்’ நினைவுகூட அற்றவளாய், அவர் வைத்திருந்த அந்த ‘நெஸ்பிறே டின்’னையே பார்த்துக்கொண்டு, நாறல் மீனைக் கண்ட பூனை சாடை வாயூற நின்றா.
அந்த ‘ஜென்டில்மான்’ இந்த இவளின் ‘ஹான்பாக்’கைக் குனிந்து எடுத்து அவ கையில் சேர்ப்பிக்கும்வரை, அவ, இவர் வைத்திருந்த அந்த ‘நெஸ்பிறே’யையே உற்றுப் பார்த்தபடி நிலைகுத்தி நின்றா.
அவளின் அந்தப் பார்வையைச் சாடையாக நுணுகி ஆராய்ந்து உணர்ந்து கொண்டார்.
அப்போது அவர் முகத்தில் ஒரு மெல்லிய புன் சிரிப்புச் சிலிர்த்து அவருக்குள்ளே உறைந்து விட்டது.
ஒரு ராத்தல் ‘நெஸ்பிறே’ எடுக்க்கூட நாங்கள் நாய்படாப் பாடுபட்டும் முடியாமல் இருக்கும்போது, இந்த ஆள், இந்தப் பெரிய ‘நெஸ்பிறே டின்’னை எங்கெ ‘அடித்து’க்கொண்டு வந்திருப்பார்?’ என்று ஒரு கணம் ஆன்ம விசாரணை நடத்தத் தொடங்கினா, மிஸிஸ் சறோ.
அந்த ‘நெஸ்பிறே டின்’னைக் கண்ட பிறகு மிஸிஸ் சறோ பிரமித்து நிற்கிற கோலத்தை அவர் அவதானித்துக் கொண்டபோது, அவரிடம் ஒரு புதிய ஆணவமும், வீம்பும் தலைவிரித்தாடின மாதிரி அவரின் ஓர் அநாசயப் பார்வையில் தெரிந்தன.
தனது ‘ஹான்பாக்’கை எடுத்து வந்து அவ இவவுடன் அமர்ந்துங்கூட, அவளின் வாயோ அமரவில்லை.
அந்த ‘ஜென்டில்மான்’ வைத்திருக்கும் ‘நெஸ்பிறே’டின்னைப் பற்றியே ‘குசு குசு’த்துக் கதை கதையாக மிஸிஸ் விஜேயாவுக்குச் சொல்லி ‘அளந்து கொட்டி’க் கொண்டிருந்தா.
மிஸிஸ் விஜேயா, இவவுக்கு ஏதோ ஒரு பாவனை காட்டி முதல் எடுப்பை இங்கிலீஷில் தான் மனவருத்தப்பட்டுச் சொல்கிறா.
‘யூ ஆர் ப்ளடி பூள், அந்த ‘நெஸ்பிறே’யை எங்கே வாங்கினிங்கள், என்று அந்தாளிட்டக் கேட்டிருக்கலாம் தானே?’
இப்படியாக இந்த இரு சிநேகிதிகளான மிஸிஸ் சறோவும் மிஸிஸ் விஜேயாவும், மனம் வாக்கு, காயம், சிகையினாலும் களேபரப்பட்டுக் கொண்டிருப்பதை, ஒரு விநோதக் காட்சியாக, சக பிரயாணிகள் இமை வெட்டாமல் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர்.
இதையும் இந்த மிஸிஸ்கள் இருவரும் இதுவரை கொஞ்சங்கூடக் கவனித்ததாகத் தெரியவில்லை. எனவே, தாங்கள் எதற்காகக கிளம்பினோம் என்பதையும் வள்ளீசாக மறந்து, தொடர்ந்து அந்த வாய்ப்பேச்சும், இந்தக் கைப்பாவனையும் முகச் சுழிப்பும், சிரிப்பும், கனைப்பும், உடல் நெளிப்புமாகவே இருந்தார்கள்.
மிஸிஸ்களின் இந்தவிதமான குதூகலச் சந்தடியைக் கலைத்துக் கொண்டு, ஒரு ‘ஹோல்டிங் பிளேஸில்’ வந்து தரித்தது பஸ்.
அதுதான், ‘மவுண்ட்லவேனியா பஸ் ஸ்ராண்ட்’
பிரயாணிகளின் புற்றீசல் கிளம்புவது போல் பஸ்ஸிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.
மிஸிஸ் விஜேயும் மிஸிஸ் சறோவும் தாங்கள் இங்கேயுள்ள மாப்பாணிக் கவுண்டர் சாயுபா ஸ்ரோஸ் முதலாளியிடம் தான் அந்த நெஸ்பிறேயை வாங்க வந்தோம் என்பதைக் கூடத் துப்பரவாக மறந்து விட்டவர்கள் போல் வடிவாகத் ‘தாக்கற’க் கால்மேல் கால் போட்டுக் கொண்டேயிருந்தனர்.
இரைச்சல் குறைந்ததும் அவரே ஒரு மௌன அமைதி சூழ்ந்தது.
சற்று வேளையால், மிஸிஸ் விஜேயா பஸ்ஸை விட்டு இறங்குவதற்குத் தன்னைத் துரிதப்படுத்தியபோது, மிஸிஸ் சறோ மிஸிஸ் விஜேயாவின் தொடையில் சிமிக்கிணாமல் நுள்ளி, எல்லாரும் இறங்கிப் போகுமட்டும் அமைதியாக இரடி’ என்று ஒரு சமிக்ஞை செய்து அவவை இருத்தினா.
மிஸிஸ் விஜேயாவுக்கு விசயம் புரியவில்லை. ‘தறு தறு’வென்று முழிசத் தொடங்கினா.
அப்போது அந்த ‘ஜென்டில்மான்’ கொட்டாவி விட்டவராக வாயைப் பிளந்து சோம்பல் முறிக்கும் பாவனையில் கைகளை மேலே உதறித் திருகாணி மாதிரி வளைத்து நாரி நிமிர்த்தி அமைதியாக உன்னி எழுந்தார்.
அவர் என்ன நினைப்பில் எழுந்து போகிறாரோ தெரியவில்லை. அவர் உயிர்போல் பொத்திப் பாதுகாத்துக் கொண்டு வந்த அந்த ‘நெஸ்பிறேடின் பார்சல்’ அவர் கையில் அவர் வசம் அப்பொழுது இருக்கவில்லை.
இதை நன்றாக உற்றுக் கவனித்த மிஸிஸ் சறோ, கண்களை அகல விரித்து நிலைகுத்த விழித்து அந்த ‘ஜென்டில்மானை’யே கடைக் கண் எறிந்து சாடையாகப் பார்த்துக் கொண்டார்.
அவர் பஸ்ஸை விட்டு மெதுவாக இறங்கியதுபோலவே மிகச் சாதாரணமாக வீதி வழியே சந்தடியின்றி நடந்து போய்க் கொண்டிருந்தார்.
இந்தப் பெரிய ‘நெஸ்பிறேடின்’னை இவ்வளவு கரிசனையோடு கொண்டு வந்து மிகப் பக்குவமாக வைத்திருந்த அந்த ஜென்டில்மான், அதையே இப்படி மறதியாக விட்டு விட்டு, வெட்ட வெறுங் கையோடு எழுந்து போவதைக் கவனித்த மிஸிஸ்கள் இருவருக்கும் தலைகால் தெரியாத ஒரு புளுகம் அப்போது தலைவிரித்தாடியது.
‘ஹி இஸ் எ மாட்’ எந்தப் பெண்பிடியில் போறாரோ?’ என்று இங்கிலீஷிலும் தமிழிலும் கலந்து சொல்லித் தங்களுக்குள்ளே அந்த ஜென்டில்மானைப் பரிகசித்துச் சிரித்துக் கொண்டார்கள்.
இந்த உன்னதமான இன்ப சாகரநிலையைச் ‘சடா’ரென்று ஒடித்து விடுவது போல, மிஸிஸ் சறோ ‘திடீரென்று முகத்தைக் கறுக்க வைத்துக் கொண்டு, இருந்த வாக்கில் உடனே ‘அவுக்’கென்று எழுந்து முன் பக்கச் ‘சீற்’றை எட்டி ஆவலோடு பார்த்தார்.
அதே ‘நெஸ்பிறே டின்’ அந்த ஜென்டில்மான் இறுகப் பொத்திப் பொத்தி வைத்திருக்க அந்த நெஸ்பிறே, அவர் இருந்துவி;ட்;டுப்போன அந்த முன் பக்கவாட்டுச் ‘சீற்’றில், இப்பொழுது தேடுவாரற்று ஓர் அநாதைபோல் கிடந்தது.
மிஸிஸ் சறோ, மின்னிவிழித்தாற்போல் ‘அவுக்’கென்று கால்களை உன்னி இடறி எடுத்து, இரண்டு கவடு ‘சடா’ரென்று பாய்ந்து போய் அந்த ‘நெஸ்பிறேடின்’ னை இடுக்கி வறுகிக் கையில் எடுத்துக் கொண்டு, எதுவித சுணக்கமும் இல்லாமல் தன்பாட்டில் பஸ்ஸைவிட்டு இறங்கியபடி, மிஸிஸ் விஜேயாவைக் கூடப் பாhக்காமலே ‘ ஐ ஆம் கோயிங்’ என்று சொல்லிவிட்டு அடுத்த சுவடு வைக்கவே, மிஸிஸ் விஜேயா உண்மையாகவே மின்னல் அடிபட்ட மாதிரி ஏங்கி மலாரடித்து விறைத்துப் போனா.
இரண்டு பிள்ளைகளின் சந்திரபிம்ப வதனங்களில் இப்போது மருதந்துக்குக்; கூடச் சிரிப்பு இருக்கவில்லை. அந்த இரண்டு அழகான கொவ்வைப் பழ முகங்களும் சிலிர்த்துக் ‘கடுகடு’ த்தபடியே தெரிந்தன.
‘ஓ மை கோட்…. நான் மிஸிஸ் சறோவை நம்பி வழி நடந்தேன். ஒரு நெஸ்பிறேக்காக – அதுவும் யாரோ ஊர்பேர் தெரியாதவன் இலவியத்தில் விட்டிட்டுப்போன அந்த நெஸ்பிறேயைக் கண்டு போட்டு, அதைத் தனக்குமட்டும்’ உரிமையாக்கிக் கொண்டுபோக இந்தத் ‘தேவடியாள்’ எத்தனிக்கிறாளே’ என்று ஒருகணம் நினைத்தபோது இவ தலையில் கடுங்கோபம் ஏறிவிட்டது.
நகமும் சதையும்போல என்றும் இணைபிரியாதிருந்த இந்த இரண்டு ‘உயிர் சிநேதி’களுக்கும் மேலாக, கேவலம் இந்த வயிறு வேண்டி நிற்கும் மிகச் சிறு அற்பப் பொருளான இந்த ‘நெஸ்பிறே’ குறுக்கே வந்து நின்று இப்படி மோதிக் கொண்டு கிடந்தது.
‘இந்த இன்பமே சொந்தமானால் வேறு எதுவுமே வேண்டாம்’ என்கிற தோரணையில் மிஸிஸ் சறோ வெகு உற்சாகத்துடன், ஏதோ தனக்கு நிரந்திரமாக உயில் எழுதி வைத்திருக்கிற ஓர் ஆதனத்தை எடுக்கிறவாக்கில் அந்த ‘நெஸ்பிறேடின்’னைக் கையில் எடுத்து வைத்துக்கொண்டு, ‘இது என்னுடைய நெஸ்பிறே’ என்ற பாவனையில் சதிரத்தை உலுப்பிக்காட்டி, சற்றுத் ‘திடும்பு’ப் பார்வையில் நடையைக் கட்ட ஆயத்தமானா.
உடனே அங்கே விசுவாசமித்திர கோலம் தாண்டவமாடிற்று.
‘சறோ, டோன் டேக் த நெஸ்பிறே… தற் இஸ் மைன்’ என்று இங்கிலீசிலேயே
கீச்சிட்டு மிகவும் அழுத்தமாகத் ‘தனது’ என்பதை ஆக்ரோஷமாக நாக்குத் தெறிக்க உறுத்தி மிஸிஸ் விஜேயா சொன்னபோது, மற்றவ ஓடி முழிசினா.
அடுத்த வாக்கில் மிஸிஸ் சறோ தனது மேனியை ஒருபாட்டம் சிலுப்பிக் கொண்டு முன் வாய்ப் பற்களை நரிடிக் கடித்தவாறே, ‘வட் ஆர் யூ நொன்ஸென்ஸ்… திஸ் இஸ் மைன்’ என்று அடுத்த வாய் கொடுத்து அழுத்தி அடிக்கவே, மிஸிஸ் விஜேயாவும் அவ பேச்சை மடக்கி வாய்க்கு வாய் இறுக்கிக் கொடுத்தா.
கொஞ்ச நேரம் ‘பஸ்ஸ_க்குள் ‘இங்கிலீஷ்’ ‘துவள் பறந்தது’
இதைத் தொடர்ந்து ஆளையாள் மாறி மாறி அடியே, கள்ளி, காதல், பாதகி, வேசை, தாசி என்றெல்லாம் ஒரு பாட்டம் இரு சிநேகதிகளின் ‘பதிவிரதப் பட்டோலை’களும் ‘கரக்ற்’ராக வாசிக்கப்பட்டன.
அந்தப் பட்டோலையில் மிஸிஸ் சறோஜா சுந்தரலிங்கம் அவர்களுக்கு ஆகக் குறைந்தது பத்து ‘ஆசைநாயகர்கள்’ உண்டு என்றும், மிஸிஸ் விஜேயா சிற்றம்பலம் அவர்களுக்கு அவ ‘டிரைவர்’ உட்பட ஆறு அல்லது ஏழு ‘கீப்ஸ்’கள் உண்டென்றும் அப்போது வள்ளீசாகத் தெரிய வந்தது.
அந்தச் சமாச்சாரங்களையெல்லாம் இந்த இரண்டு ‘பெண்டுகளும்’ ஒரு சாவாய்ப் பரிபாஷை செய்து ஓய்ந்தும் கூட, அது சவம், அந்த ‘நெஸ்பிறே’ச் சிக்கல் தீருவதாவே இல்லை.
சொற்பவேளை இருவரும் தங்கள் வாய்களை ஊமையாக்கி;க் கொண்டு அந்த ‘நெஸ்பிறேடின்’னில் கை வைத்தவண்ணம், என்னுடையது, உன்னுடையது’ என்று ஆளையாள் ‘இழுபறி’ப்பட்டுக் கொள்ளத் தொடங்கினார்கள்.
இதையெல்லாம் சற்றுப் பொறுமையோடு கேட்டும் பார்த்துங் கொண்டிருந்த ‘பல் கண்டக்டர்’ ஓடி வந்து, ‘அனே நோணால்லா கயணாக்கரமெத்தன ரண்டுவ எப்பா’ என்று சி;ங்களத்தில் அம்மணிகளைத்; தயவு செய்து சண்டை போட வேண்டாம் என எச்சரித்தும், சீமாட்டிகள் தங்களின் அந்த உக்ர யுத்தத்தைக் கடைசி வரை விடுகிறதாயில்லை.
கண்டக்டருக்குப் பொல்லாத ‘கேந்தி’ வந்து விட்டது.
‘நோணால்லா, அப்ப நாங் பொலிஸிட்டங்கொண்டு போய்விடுறங், அங்கிட்டு ஒங்கபாடு ஓங்க, நெஸ்பிறேபாடு’ என்று கண்டக்டர் தமிழில் சொல்லிவிட்டு, ட்ரைவருக்குச் சமிக்ஞை காட்டிய அடுத்த நிமிஷம், பஸ் பக்கத்தில் இருந்த பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் புகுந்தது.
மிஸிஸ் சறோஜா சுந்தரலிங்கம் அவர்கள் அந்தப் பெரிய நெஸ்பிறேடின் பார்சலுடன் பொலிஸ் ஸ்டேஷனுக்குள் நுழையும் போது தான் உடுத்தி இருந்த சேலை கழன்று தொப்புளுக்குக் கீழே கழுவுகிற மாதிரி அவளுக்கு வந்த வெட்க உணர்வு, அவளின் மேனியை ஒருவாட்டி பிடுங்கித் தின்றது.
பண்பான கிராமத்து வியாபாரப் பெண்கள் தங்கள் கடகங்களில் காய்களி மீன் கொண்டு சந்தைக்குப் போவதுபோல இவ, இந்த நாகரிகத்தின் பிற்பிடமான ‘கொலம்பு செவன் – சினமான் காடனி’லிருந்து வந்து, எங்கோ கிடந்த ஒரு வாய்விடாச் சாதியான ‘நெஸ்பிறேடின்’னோடும் பங்கப்பட்டுத் துடிதுடிக்கும் நெஞ்சத்தோடும் அந்தப் பொலிஸ் ஸ்டேஷனுக்குள் கால் எடுத்து வைத்தா.
மிஸிஸ்களின் இந்தக் கோலத்தைக கண்ட போலிஸ் இன்ஸ்பெக்டர், விவகாரத்தை ஊகித்தறியும் தோரணையில் எத்தனையோ யுக்திகளைப் பாவித்துச் சில வழிகளைச் சொல்லிப் பார்த்தார். அவற்றில் ஒன்றாலும் மிஸிஸ்களின் செவிகளில் ஏற மறுத்து விட்டது.
‘கெடு குடி சொற் கேளாது, சா குடி மருந்துண்ணாது’ என்ற நிலையில் விவகாரம் சூடு பிடித்து விட்டது என்பதையும் உணர்ந்து கொண்டார் பொலிஸ் இன்ஸ்பெக்டர்.
‘எப்படியாவது அந்த ;நெஸ்பிறே’யைத் தனக்கே சொந்தமாக்கி, அதைத் தானே தனியே அடித்துக் கொண்டுபோக இன்ஸ்பெக்டர் வழி கோலி வைக்க வேணும்’ என்று இரு ‘சிநேகிதி’களும் அவரிடம் எதிர்பார்க்கத் தொடங்கியதையும் அவர் புரிந்து கொண்டார்.
நோணாக்களின் ‘மேல் தட்டு வர்க்கம்’ என்ற நினைப்பில் அஞ்சியதால், ‘சமரசம்’ செய்ய எத்தனித்த இன்ஸ்பெக்டரின் பிரயத்தனங்களும் தோல்வி கண்டன.
இந்தக் கட்டத்தில் இன்ஸ்பெக்டருக்குச் சலிப்புத் தட்டி விட்டது. முகத்தைச் சற்றுக் ‘கடுகடு’க்க வைத்துக்கொண்டு சொல்கிறார்.
‘மேடம்ஸ், இனி நான் கேட்கிற கேள்விகளுக்கு நீங்கள் ‘சட்’டென்று பதில் கூறவேண்டும்?’
‘யேஸ் சேர்’
‘றையிட், மிஸிஸ் சறோஜா, இந்த ‘நெஸ்பிறே’ யாருடையது?’
‘தற் இஸ் மைன்சேர்’
‘நோ சேர். இற் இஸ் மைன்’
‘மிஸிஸ் விஜேயா, நௌ டெல் மி த ட்ருத். இந்த நெஸ்பிறே உம்முடையதுதானா?’
‘யேஸ் சேர்’
‘அக்சுவலி?’
இருவரும் ‘தறுதறுத்து’ முழிசலாயினர்.
இத்துடன் விசாரணை நின்று விட்டது.
இந்த ‘ஸ்றேற்மன்ட்; பதியப்பட்டபின் இன்ஸ்பெக்டர் இரு நோணாக்களையும் அதிலே ‘சிக்னேச்சர்’ வைக்குமாறு பணித்து விட்டு மிஸிஸ்களையே மீண்டும் கண்ணூனிப் பார்த்தார்.
அப்போது இன்ஸ்பெக்டரை முகம் கொடுத்துப் பார்க்க இரு அம்மாக்களும் லஜ்ஜைப்பட, அதையும் அவர் கண்டுங்காணாதவர் போல் பாசாங்கு பண்ணிச் சிரித்துக் கொண்டு, வெகு ‘சிம்பிளா’கச் சொல்கின்றார்:
‘கேஸ் பைல்’ பண்ணுகிறேன். உங்கள் ப்றொப்ளத்தை இனிக் கோட்டி’டிலே வந்து தீர்த்துக் கொள்ளலாம்’
மிஸிஸ்களின் கண்கள் பேந்தப் பேந்த முழிசின, மண்டைக்களுக்குள் மின்னி இடி முழக்கங்கள் கேட்டன.
ஒரு நெஸ்பிறேக்காகப் பொலீசுக்கு வந்து வழக்கு வைத்துக் கொண்டு ஏறுவதா என்பதாலும், வழக்காளி – எதிராளி இருவரும் ‘திருமாங்கல்யப் பெண்களான மேடம்ஸ்’கள் என்பதாலும், விவகாரத்துக் குரியவர்கள் மேல் தட்டு நாகரிக மோகினிகள் என்பதாலும் இன்ஸ்பெக்டர் கடுவலாக யோசித்தவிட்டு, ‘சரி, நான் ஒரு ஆலோசனை கூறுகின்றேன். அதன்படி செய்ய இருவருக்கும் விருப்பமா?’ என்று கேட்டார்.
உடனே மிஸிஸ்கள் ‘அது என்ன?’என்று வினவும் பாவனையில் மிரண்டபோதே, நெஸ்பிறே தனக்குத்தான் கிடைக்கப் போகிறது’ என்ற நினைப்பின்
சாங்கம் அதனால் எழுந்த உற்சாகம் ஒவ்வொருத்தர் முகத்திலும் மறுவாட்டியும் தோன்றியது.
இந்த நெஸ்பிறேக்காகக் கோட்டுக்குப் போய் வீணாக அலைந்து மரியாதை கெடுவதிலும் பார்க்க – நாங்கள் இன்னும் மரியாதை கெடவில்லை என்கிற பாங்கில் ஆளையாள் கொஞ்சம் விட்டுக் கொடுத்து இந்த ‘நெஸ்பிறே’ப் பவுடரைச் சரிபாதியாகப் பங்கிட்டு எடுத்துக் கொண்டால் நல்லது என்ற இன்ஸ்பெக்டரின் கோரிக்கையை நியாயமாக்கி – அந்தத் தர்க்க நியாயத்தை, ‘இனி என்ன செய்வது ஏற்றுக் கொள்வோம். இல்லாவிட்டால் வீண்கரைச்சல் தான் வந்து சேரும்’ என்று நினைத்து, ஓர் ஒப்புக்கு இருவருமாக வந்து சேர்ந்தனர்.
இதன்பின், இந்த உன்னத ஸ்திரீகளான ‘உயிர்ச் சிநேகிதிகள் இருவரும் தங்களுக்குள் ஆளையாள் பார்த்துச் சிரித்துக் கொண்டனர்.
இன்ஸ்பெக்கடர் தனது கிருத்தியத்தில் இறங்கினார்.
‘நெஸ்பிறேடின்’னை மேசையில் வைத்து அதன் மூடியைத் திறக்க, இரண்டு பொலீஸ் கொன்ஸ்ட்பிள்ஸ்’கள் எடுத்த கடும் பிரயத்தனங்கள் படு தோல்வியில் முடிந்தன.
அப்பவும் மிஸிஸ்கள் இருவரும் கண்கள் வெட்டிக்கூட முழிக்காமல், அந்த ‘நெஸ்பிறே’யை ஆவல் கொதித்த மனசோடு, நாவூறிப் பார்த்துக் கொண்டேயிருந்தார்கள்.
இன்ஸ்பெக்டர் அநாயாசமாக ஒரு கேலிச் சிரிப்போடு தேகத்தை உலுப்பிக் கொண்டு, தன் முழுப் பலத்தையும் திரட்டி, ஏலவே ‘பொலீஜ்கான்ஸ்டபிள்ஸ் திருகி இளக்கிவிட்ட ‘நெஸ்பிறேடின்’டப்பா மூடியை அழுத்தலானார்.
இந்தப் ’பெண்மணி’களுக்கு எதிரே தன் ‘ஆண்மை’யினைப் புலப்படுத்தும் ஓர் ஆவேச வெறியோடு அந்த ‘நெஸ்பிறே டின்’னை அமத்திப் பிடித்துக்கொண்டு வாயை அஷ்டகோணமாக்கி ஒரு ‘தெண்டு’ கொடுக்க, நெளிந்துபோன அதன் மூடி ‘சடக்’கென்று திறபட்டதோடு, அந்த வாக்கில் ‘நெஸ்பிறேடின்’னும் இன்ஸ்பெக்டர் கை தவறி ‘சடா’ரென்று கீழே விழுந்தது.
ஆவல் மிஞ்சிய கெடுவோடு, மிஸிஸ்கள் இருவரும் தங்கள் வாய்களை ‘ஆ’வென்று பிளந்தபடி நெஸ்பிறே டின்னை இமை சொடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்த போது….
தவறிவிழுந்து உருளுகிற அந்த ‘நெஸ்பிறேடின்’னுக்குள்ளேயிருந்து ரத்த வடுக்களுகளுடன், பிணவெடிலடித்து நாறியவண்ணம், செத்து விறைத்துச் சூம்பிப்போன் ஒரு பால்மணம் மாறா பச்சைக் குழந்தை நெக்குவிட்டுப் போன உடலும், சிதறி நொறுங்கிய மண்டையுமாக முகங்குப்புற விழுந்து இந்த நோணாக்கள் காலடிகளில் சரணடைந்து கிடந்தது.
‘ஓ மை கோட்…! நோ… நோ… திஸ் இஸ் நொட் மைன்… திஸ் இஸ் நொட்மைன்…!’
மிஸிஸ் சறோஜா சுந்தரலிங்கம் அவர்களும் மிஸிஸ் விஜேயா சிற்றம்பலம் அவர்களும் அங்கே ‘குய்யோ முறையோ’ என்று போட்ட பெருங்கூச்சல், அங்கேயே எதிரொலித்து மடிந்து செத்தது.
‘பதிவிரதை’களான அந்த இரண்டு நோணாக்களையும் ‘வெறித்து உற்றுப் பார்த்துக் கொண்டேயிருந்தார் இந்தப் போலிஸ் இன்ஸ்பெக்டர்.
– தாமரை, 1965.