காட்டு நெடுவான நிலவு




(2009ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மார்கழி மாதம். மெல்லிய இளங்காற்று வீசிக் கொண்டிருந்தது. அது கடும் பச்சையான மரங்களின் இலை களுக்கூடாக குளிர்ச்சியாகி உடலைத் தழுவி நடுங்க வனத்துக் கொண்டிருந்தது. அந்தக் குளிரைத் தாங்குவதற்கு அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான இளைஞர்களில் ஒருவரிடத்தும் ஒரு கம்பளி ஆடைகூட இல்லை. ஆனால், அவர்களுக்கு நடுவே பெரிய பாறாங்கல் ஒன்றை சிம்மாசனம் போன்று கருதி அமர்ந்திருக்கிறானே அந்த வீரன், அவனிடத்து மட்டும் ஒரு வுல்லன் சால்வை கழுத்தை மூடியிருந்தது. தலையில் ஒரு குல்லாத் தொப்பியும் அணிந்திருந்தான்.
தூரத்தில் நின்று பார்த்தாலுமே அந்த வீரன், அவ்விளைஞர் கூட்டத்தின் தலைவன் என்பது புரிந்துவிடும். உண்மைதான் அவன்தான் அந்தப் புரட்சிக் குழுவின் தலைவன்.
என்றோ…முப்பது வருடங்கள் இருக்கலாம். தோன்றிய சில சம்பவங்கள், சில துயரகரமான நிகழ்வுகள் அவனை ஒரு புரட்சி வீரனாக மாற்றியிருந்தன என்று சுருக்கமாக ஒரே வார்த்தையில் அவனது பூர்வீகம் பற்றிக் கூறிவிடலாம். மூர்க்க மாக நிகழ்ந்த ஒரு தாக்குதலின்போது, தனது தாய் தந்தை உட்பட ஏறத்தாழ நூற்றுக்கணக்கான அப்பாவிகள் கொன்று குவிக்கப்பட்ட ஓர் இரத்தக்கறை படிந்த நாளில், ஒன்றன் மேல் ஒன்றாக விழுந்த பல சடலங்களின் அடியில் மயங்கி விழுந்ததன் காரணமாக அதிர்ஷ்டவசமாக அவன் உயிர் தப்பியிருந்தான். அப்போது அவனுக்கு ஐந்து வயது இருக்கும். பிறகு எப்படியோ காப்பாற்றப்பட்டு, ஓடி ஒளிந்து, கடைகடையாக வேலை செய்து.. இறுதியில் ஓர் இளைஞனாக அவன் வளர்ந்தபோது, இயல்பாகவே அவனிடம் புரட்சி மனோபாவமும் குடிகொண்டிருந்தது.
தனது தோழர்களோடு தங்கியிருக்கும் பாசறையில்–அவனது பாசறை மத்தியிலும், ஏனைய தோழர்களின் பாசறைகள் அதைச் சுற்றிலுமாக அமைந்திருந்தன– தன்னந்தனியனாக அவன் கண்விழித்துப் புரண்டுகொண்டிருக்கும் இரவுப் பொழுதுகளில்கூட, தனக்கும் தன்னைச் சார்ந்து நிற்கின்ற இந்தக் கூட்டாளிகளுக்கும் ஒரு நல்ல வழிமுறையைக் காட்டிவிடவேண்டும் என்ற சிந்தனையே அவனிடத்து தூக்கலாக இருக்கும்.
பால்ய வயதிலேயே அவன் ஒரு இரத்தக் களரியைக் கண்டிருந்தாலும், மனித ரத்தமும், சதையும் பந்து போல வீசியெறியப்படுகின்ற அவலத்தை எதிர்நோக்கிக் கொண்டி ருந்தாலும், அவனது அந்தராத்மா அதனை உண்மை என நம்ப மறுத்தது. அவையெல்லாம் பொய்; கணநேரத் தோற்றங்கள்; மாயைகள் என்று அவன் தனக்குத்தானே கூறிக்கொள்வான்.
முகமூடியணிந்து வந்து சரமாரியாக வேட்டுக்களைத் தீர்த்த அந்தக் கூலிப்படைகள், வெறும் கறுப்புப் பிண்டங் களாகவே அவனது ஞாபகங்களில் வந்து போனார்கள். இதெல்லாம் அவர்கள் நினைத்து, மனம் வைத்து செய்த வேலைகள் அல்ல யாரோ ஒருவன் இயக்கினான்—அவர்கள் இயங்கினார்கள், ஒரு நூலில் கோர்க்கப்பட்ட பொம்மைகள் போல-என்பதாகவே அவன் தனது ஞாபகங்களின் பக்கங்களில் கண்டுகொண்டிருந்தான்.
அவன் ஒரு புத்தகக் கடையில் வேலை பார்த்தபோது அவனுக்கு எழுதப் படிக்கக் கற்றுக் கொடுத்து, வாசிக்கும்படி செய்து, அவனது சந்தேகங்களையும் தீர்த்து வைத்தாரே, அந்தப் பெரியவரை அவன் எப்போதும் நன்றியுடன் நினைவு கூர்வதுண்டு. தன்னையும், இந்த உலகத்தையும் சரிசமமாகப் பிரித்து, இந்த உலகத்தில் தனது பங்கு என்ன என்பதையும், தான் யார் என்பதையும் உண்மையாக விளக்கியவர் அவர்தான். பொய்யும், இருளும் கவிந்த முகமூடிகளைக் கிழித்து, உண்மையும், தெளிவும், அன்பும் நிறைந்த ஆன்ம சொரூ பத்தைக் காட்டிக் கொடுத்தவர் அவர்தான். அவர் அடிக்கடி சொல்வார், காந்தியைக் கொன்ற கோட்ஸேகூட சிறிது நேரம் ஆற அமர யோசித்திருந்தால், தனது முடிவி லிருந்து பின்வாங்கியிருப்பான்; மகாத்மா காந்தி எத்தகைய பெரியார் என்பதையும், முழு மனித இனத்துக்கு மான பொதுச்சொத்து அவர் என்பதையும்கூட விளங்கிக் கொண்டிருப்பான்” என்று.
யாரோ ஒரு அறிஞர் சொன்னாராமே, அவர் ஜித்து கிருஷ்ணமூர்த்தியோ, யாரோ…’போர் நமக்குள்ளேயே தொடங்குகின்றது’ என்று. அதைப் பற்றி அதிக நேரம் சிந்தித்துப் பார்த்திருக்கிறான் அவன். விளைவாக, போர் நமக்குள்ளேயே தொடங்குகின்றது என்றால், சமாதானமும் நமக்குள்ளாகவே தொடங்க வேண்டும் அல்லவா என்று அவன் உள்ளம் வினா எழுப்பும்.
உலகின் மாபெரும் வெற்றி வீரர்களாகிய ஜெங்கிஸ்கான், அலெக்சாந்தர், நெப்போலியன் பொனபாட் ஆகியோரெல்லாம் எவ்வளவோ கட்டிக் காத்தபோதும், அவர் களுக்குப் பின்பு அவர்களது பேரரசுகள் நிலைக்க வில்லையே… அப்படியென்றால் மனித குல வரலாற்றில் மாபெரும் தடம் பதித்த வெற்றி வீரர்கள் என்று அவர்களை எவ்வாறு கொள்ள முடியும்? அதைவிடவும் புத்தர், யேசு, முஹமது நபி போன்ற பெரியோர்கள் காட்டிய சீரிய நெறிகள் இன்றுவரை நிலைத்து நிற்கின்றனவே. என்றெல்லாம் யோசிக்கும்போது, மனிதனுக்கு வன்முறை மீதான வேட்கை இருந்தபோதிலும், அது காலப் போக்கில் இயல்பாகவே குறைந்து, நலிவடைந்து போய் விடுகிறது என்பதாக அவன் கருதினான்.
தனது படைகளை, குடிகளை…அழிவுப் பாதையில் இட்டுச் சென்ற பேரரசர்கள் எத்தனை? மன்னர்கள் எத்தனை? அவர்கள் எல்லோரும் அடுத்த தலைமுறைக்குள்ளாகவே மறக்கப்பட்டுப் போனார்கள். ஆனால், மிக எளிமையாக வாழ்ந்த பெரிய மனிதர்களை உலகம் நினைவில் வைத்துக் கொண்டி ருக்கிறது. சாந்தியைத் தேடித் தவித்துக் கொண்டி ருக்கும் இந்த உலகத்திற்கு வழிகாட்டப் போகும் பெரியார் ஒருவர் இனி எப்போதாவது வந்தால்தான் உண்டு என்பதாக அவனுக்குத் தோன்றும்.
மீண்டும் ஒரு வாரத்திற்குப் பிறகு அந்த இளைஞர் கூட்டம் கூடியிருந்தது. இப்போது அதே இடத்தில் அல்ல. அடர் காட்டின் நடுவே, வெட்டி வீழ்த்தப்பட்டிருந்த ஒரு மரத்தின் அடிப்பாகம் மீது அந்த இளைஞன் அமர்ந்திருந்தான். முன்பு கூடியிருந்தவர்களைவிட மிகக் குறைந்தளவு எண்ணிக்கை யான மனிதர்களே அவனைச் சூழ்ந்திருந்தார்கள்.
“சொல்லுங்கள் தலைவரே…இப்போது என்ன செய்யப் போகிறோம்…?”
ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்த அவன் தலை நிமிர்ந்தான்.
“எமது பிள்ளைகள் கல்வி பெறுவதற்குக்கூட உரிமை யிழந்து தவிக்கிறார்கள். அறநெறிப் பாடசாலையில் கூடியிருந்த மாணவர்களை ஷெல் வீசி தாக்கி அழித்திருக்கிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பலியாகி விட்டார்கள்….”
கூட்டத்தின் மத்தியிலிருந்து இன்னொருவன் எழுந்து நின்றான்.
“அவர்களில் இருநூறு பேரையாவது நாம் முடிக்க வேண்டும்.”
உடனே அதை ஆமோதித்து பல குரல்கள் எழுந்தன. கசமுசா என்ற கிசுகிசுப்புகளும்கூட.
“நாங்கள் ஆயுதமேந்திய இந்தப் பதினைந்து வருட காலங்களில் குறைந்தளவு பேரைத்தான் பலி வாங்கி யிருக்கிறோம்… இப்படியே போனால், எமது புரட்சிக் குழுவின் பெயர்கூட மறக்கப்பட்டு விடும்….” சற்று வயது முதிர்ந்த ஒருவர் எழுந்து நின்று கூறினார்.
“நீங்கள் எல்லோருமே அவர்களைப் பலிவாங்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். இல்லையா தோழர்களே…?” முதியவரின் முகத்தைக் கூர்ந்து பார்த்துத் தலைவன் கேட்டான்.
“ஆமாம்…. ஆமாம்….” ஒருசேர, ஆனால் தணிந்த குரலில் கூட்டம் கர்ச்சித்தது.
“சரி, இப்போது சொல்லுங்கள். நாம் ஆயுதமேந்தி போராட வந்தது எதற்காக?”
“எமது எதிரிகளைப் பலிவாங்குவதற்காக…”
“இல்லை… இல்லை…” அவன் உறுதியாகத் தலையசைத்தான்.
\
சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு அதே முதியவர் எழுந்து நின்று கூறினார்.
“தற்காப்புக்காக…! எதிரிகளை நேருக்கு நேராகச் சந்தித்து வெல்வதற்காக…!”
“மெத்தச் சரி…” அவன் தலையை ஆட்டினான்.
“நமது எதிரிகளைத் தவிர வேறு யாரையும் பலி வாங்கக் கூடாது என்பது நமது பிரமாணங்களில் ஒன்று. அதேபோல, எதிரி ஒருவன் எம்மை வம்புக்கிழுத்தால் அவனை சும்மா விடுவதில்லை என்பதும் நமது பிரமாணங்களில் ஒன்றுதான்.”
“ஆமாம்….” கூட்டம் ஆமோதித்தது.
“அப்படியானால், அவர்கள் எமது குழந்தைகளைக் கொல்கிறார்கள் என்பதற்காக அவர்களது குழந்தைகளை நாம் கொல்லுவது எந்த வகையில் நியாயம்?” அவன் திருப்பிக் கேட்டான்.
“இப்படியே மௌனமாகிப் போனால் நமது மக்கள் நம்மைப் புறக்கணித்துவிட மாட்டார்களா?” ஒரு இளம் வீரன் பவ்வியமாகக் கேட்டான்.
“எம்மைப் பற்றி சரியாக விளங்கிக் கொண்டால் அவர்கள் ஏன் அப்படிச் செய்கிறார்கள்? உலக வரலாற்றில் ஹிட்லரைப் போல காண்பவர்களைளெல்லாம் கொன்று குவித்த, கொலை வெறி கொண்டு அலைந்த ஒரு தலைவனை அவனது மக்களே வெறுக்கவில்லையா? அவனையெண்ணி ஒவ்வொரு ஜெர்மனியனும் வெட்கித் தலை குனியவில்லையா?”
“இப்போது என்ன செய்வது?” மீண்டும் அதே முதியவர் கேட்டார்.
“நீங்கள் சொல்வதுபோல அவர்களைப் பலிவாங்கத் தான் வேண்டும். எப்படி…?”
கேள்வியெழுப்பிவிட்டு அவன் நீண்ட நேரமாக மௌனத்தில் ஆழ்ந்தான். பிறகு நிஷ்டை கலைந்தாற்போல தலையை உலுப்பிக்கொண்டு மேலும் தொடர்ந்தான்.
“நான் சேகரித்து வைத்திருக்கிற இலக்குகளில் அவர்களது பாடசாலையும் ஒன்றுதான். அந்தப் பாடசாலை மாணவர்களை எப்படி அணுகுவது? உண்மையிலேயே என்னை நீங்கள் உங்கள் தலைவனாக ஏற்றுக் கொள்வீர்கள் என்றால், நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள்…. அந்த மாணவர்கள் சில வேளை எமது தாய்மார்களின் வயிறுகளில் பிறந்திருந்தால்…? நமது பிள்ளைகளும், அவர்களும் ஒன்றாக இருந்திருப்பார்கள். விளையாடிக் களித்திருப்பார்கள் இல்லையா?”
‘நானும் அவனும் எதிரெதிர் தளங்களில் இருந்ததால் தானே அவனுடன் நான் போரிட்டேன்? இல்லையென்றால், ஒரே ஓட்டலில், ஒரே பீடியைப் பகிர்ந்து கொள்கின்ற நல்ல நண்பர் களாகக்கூட நானும், அவனும் இருந்திருப்போமே…’ என்ற, எப்போதோ படித்த ஆங்கிலக் கவியின் வரிகளை மனதில் நினைத்துக் கொண்டு மேலும் தனது திட்டங்களை அவன் கூறத் தொடங்கினான். ஆரம்பத்தில் கூச்சலிட்ட சில இளைஞர்களும் கூட, அவன் பேசப் பேச, அந்தச் சுண்டியிழுக்கும் நாவன்மை யின் வசீகரத்தின்பால் கட்டுண்டு போனார்கள்.
அந்தக் கூட்டம் கூடி சரியாக மூன்று தினங்களுக்குப் பிறகு, அவர்களது கிராமத்திற்கு அருகிலுள்ள, வேற்றுமொழி பேசுகின்ற, பெரிய நகரத்தின் பிரபலமான ஒரு பாடசாலை யின் மீது புரட்சிக் குழுவினரின் யுத்த விமானங்கள் தாழ்வாகப் பறக்கத் தொடங்கின. பாடசாலைக்குள்ளிருந்து பீதியுடன் அவதானித்துக் கொண்டிருந்த மாணவர்களில் ஒரு சிலர் வெளியே ஓடிவந்து பார்த்தார்கள். அவர்களைத் தொடர்ந்து சில ஆசிரியர்களும் ஓடி வந்தார்கள். அவர்களது அண்ணாந்த முகங்களின்மீது வாச மலர்களும், வண்ண ரிப்பன்களும், விதவிதமான பலுான்களும் வந்து விழத் தொடங்கின.
– மல்லிகை 44வது ஆண்டு மலர், ஜனவரி 2009.
– முடிவில் தொடங்கும் கதைகள் (சிறுகதைகள்), முதற்பதிப்பு: டிசம்பர் 2012, நூலாசிரியர் வெளியீடு, கெகிறாவ.