மோக்ஷப் பாதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 3, 2025
பார்வையிட்டோர்: 566 
 
 

(1955ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தலைப்பைப் பார்த்ததும் மோக்ஷமாவது பாதையாவது, எல்லாம் வெறும் பொய் என்று சொல்லுகிற மெய்யன்பர் களுக்குத் தலைப்பிலேயே ஒரு விஷயத்தைக்கூறிவிட விரும்பு கிறேன். இந்தக் கதை பொய்; இதில் வரும் பாத்திரங்கள் பொய்; இதில் தோன்றும் ‘நரக பூமி ‘ஸ்வர்க்க லோகம் எல்லாம் வாஸ்தவமாகவே பொய்கள்; இந்தப் பொய்யான உலகத்தில் இவை யாரையும் எதையும் குறிப்பிடுவன அல்ல என்ற ஒரு உண்மையை மட்டும் நினைவு படுத்திக்கொண்டு இனிப் பொய்யைத் தொடருவோம். 

ஓய்வு பெற்ற டிப்யூடி கலெக்டர் உலகநாத பிள்ளை வீட்டுக் கதவைத் திறந்தார்-அதாவது, திறக்க முயன்றார். பூட்டு ‘மக்கார்’ செய்தது! 

“பூட்டைத் திறப்பதும் கையாலே- -மனப் 
பூட்டைத் திறப்பதும் மெய்யாலே
வீட்டைத் திறக்க முடியாமல் விட்ட 
விதி விதி என்பார் ஞானப்பெண்ணே”. 

என்று பாடியவண்ணம் அந்தச் சமயம் பார்த்து வாசல் முன்னால் வந்து நின்று கையை நீட்டினான் ஒரு கால் இல்லாத பண்டாரம். 

”போடா. போ. ஆறு அவுன்ஸிலே நீ வேறே பங்குக்கு வந்துட்டியா” என்று அவனைத் துரத்திய வாறு மீண்டும் பூட்டிலே கவனத்தைச் செலுத்தி வீட்டைத் திறக்க முயன்றார் ஸ்ரீமான் பிள்ளை. 

இந்த முப்பத்தைந்து வருஷ ரெவின்யூ வாழ்க் கையில் இதுவரை அந்தப் பூட்டை அவர் பூட்டியதும் கிடையாது; திறந்ததும் கிடையாது. தம் முடைய விதியின் நிழலுக்குத் துணை நிழலாகத் தம்மை விடாது பின் தொடர்ந்து வந்த வில்லைச் சேவகனே இந்த மாதிரிச் சிறிய காரியங்களை யெல் லாம் இதுவரை செய்து வந்திருக்கிறான். ஆனால் இப்பொழுது? 

இப்பொழுது ஸ்ரீமான் உலநாத பிள்ளை ஓய்வு பெற்றுவிட்டார். இனிமேல் விதியின் நிழல்தான் அவரைப் பின்தொடர வேண்டுமே அல்லாமல், வில்லைச் சேவகன் வரமாட்டான். இன்று காலை மனைவியைத் தாயார் வீட்டுக்கு அனுப்பும்போது அந்த ட்ரங்குப் பெட்டியைக்கூட அவரேதான் தூக்கி ரயில் வண்டிக்குள்ளே வைத்தார்: வண்டி வந்ததும் பெட்டி படுக்கைகளை ஏற்றி வைத்துவிட்டுப் போகும்படி சொன்னதைக்கூட அந்தப் போர்ட்டர் லக்ஷியம் செய்யவில்லை! போய் விட்டான்! வில்லைச் சேவகனா பக்கத்தில் நிற்கிறான்? 

“ஹூம்! அந்த வில்லை இருக்கிறதே வில்லை. அதற்குள்ள மதிப்பே தனிதான்” என்று சொல்லிச் கொண்டே தமக்குள் ஒரு சிரிப்புச்சிரித்தார் பிள்ளை. பூட்டு திறந்து கொண்டது! 

2

மனைவியை ஊருக்கு அனுப்பிவிட்டு வந்த அந்த நிமிஷத்திலிருந்து உலகநாத பிள்ளை இந்த வாழ்க் கை ஆடம்பரங்களை எண்ணி எடைபோட ஆரம் பித்தார். கடந்த முப்பத்தைந்து வருஷமும் அவர் என்ற எத்தனை அந்தஸ்த்துடன் இந்த ‘ரெவின்யூ’ கருங்கடல் சூழ்ந்த நில உலகத்தில் வளைய வந்திருக் கிறார்.எத்தனை பேர் மேல்துண்டை இறக்கிக் கையிலே தொங்கப் போட்டுக்கொண்டே அவரை வளைய வளைய வந்திருக்கிறார்கள், இந்த முப்பத் தைந்து வருஷத்திலும்! இனிமேல்? 

உலகநாத பிள்ளை யோசனை செய்ய ஆரம்பித் தார்,மனிதனுக்கு மதிப்பா, அல்லது அவனுடைய உத்தியோகத்துக்கு மதிப்பா என்று! எதிரே காபி டம்ளரைக் கொண்டு வந்து ‘டக்’ கென்று வைத்துத் தம்முடைய ஏகாந்த விசாரத்துக்கு ஒரு பெரிய முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய மனைவியோ ஊரில் இல்லை. எனவே பிள்ளையவர்களின் யோசனை படிப் படியாக அதிகரித்து மனிதன் என்ற இந்த உடம் புக்கு என்ன மதிப்பு என்ற ஞான விசாரத்திலே சென்றது. “இந்த இக உலகம் மனிதனுடைய உத்தியோகத்தையே மதிக்கிறது. உண்மையில் மனிதனை அவனுடைய உண்மையான மதிப்புக்காக மதிப்பிடுவது இக லோகத்தில் இல்லை; அது அடுத்த உலகத்திலேதான்!” என்று நினைத்தார் ஸ்ரீமான் உலகநாதர். 

ஆமாம், மனிதனுக்கு மதிப்பு அடுத்த உலகத் திலேதான். அப்படியென்றால் அடுத்த உலகத்தில் தன்னை மதிக்கும்படி இதுவரை தாம் என்ன காரியம் செய்திருக்கிறார்? 

மளிகைக் கடையிலே வருஷ முடிவில் ‘ஐந் தொகை’ எடுப்பது போல, தனக்குள்ளேயே இந்த முப்பத்தைந்து வருஷத்திற்கும் ஒரு வரவு செலவு போட்டுப் பார்த்தார். காலை ஒன்பது மணிக்கு டிபன்பாக்ஸுக்குள்ளே இரண்டு இட்டிலியைத் திணித்து வைத்துக்கொண்டு புறப்படுவதிலிருந்து இரவு ஏழுமணிக்குத் தலைக்கிறக்கத்துடனும் இரண்டு கட்டுப் பழைய பைல்களுடனும் திரும்புகிறது வரை பாப புண்ணியங்களை வரவு செலவிலே அடக்கிக் கணக்குப் போட்டார். ரெவின்யூ இன்ஸ்பெக்டராக ‘For Approval’ போட்டதிலிருந்து, முதல் வகுப்புத் துணை மாஜிஸ்ட்ரேட்டாகி ‘ஜட்ஜ்மென்ட்’கள் எழுதி யது வரை ஒரு ஓட்டம் நினைவுகளை ஓடவிட்டுப் பார்த்தார் பிள்ளை. முடிவில் என்ன செய்தார்? 

அன்று மாலை ஸ்ரீமான் உலகநாத பிள்ளை கோவில் வாசலிலே பரத்திப் போட்டிருக்கும் ஞானக் கடையிலிருந்து ஒரு ‘ஞானக் கோர்வை’ (கோவைக்கு ஒரு இர்ரன்னாப்போட்ட திருத்தமான பதிப்பு!) வாங்கி வந்தார். அந்த நிமிஷத்தில் ஆரம் பித்து அவருடைய நடை உடை பாவனைகள் மாறத் தலைப்பட்டன. 

“தூலத்தை விட்டுவி டாயாகில் – அதில் 
சூட்சத்தைக் காண முடியாது 
பாலத்தில் ஏறி நடந்தாக்கால் –பெரும் 
பாதை இதல்லவோ ஞானப் பெண்ணே!”

என்பார்; அப்படியே கண்ணீர் வடிப்பார். ‘இந்த உலகம் பொய்’ என்று ஒரு முறை சொல்வார். ‘இந்த ஆசை பொய்’ என்பார். “இந்த வீடு பொய். இந்த உடம்பு பொய். நான் இதோ என் மனைவிக்கு எழுதுகிற இந்தக் கடிதம் பொய்” என்பார். அடுத்த கணம் அந்தக் கடிதத்தைச் சுக்கு நூறாகக் கிழித்துப் போட்டு விட்டு, ‘இந்த பௌண்டன் பேனாவும் பொய்’ என்று சொல்லி விம்மி அழுவார்!

“பாம்பிருக்குது புற்றுக்குள்ளே -சக 
பந்தம் இருக்குது நெஞ்சுக்குள்ளே 
வீம்பை அடக்கி உயர்தாக்கால் – பரி 
வேடிக்கை பார்க்கலாம் ஞானப் பெண்ணே!”

என்று பாடிப் பாடி ஸ்ரீமான் உலகநாத பிள்ளை அவர்கள் நாட் கணக்காக மனைவிக்குக் கடிதம் எழுதாமலே இருந்து விடுவார்! 

3

அன்று கடைசி வெள்ளிக் கிழமை. ‘வைகறைத் துயில்’ எழுந்து ஸ்நானத்தை முடித்து விட்டுப் பிள்ளை யவர்கள் பூஜை மடத்திலே உட்கார்ந்து ஞானக் கும்மியைப் பாராயணம் பண்ண ஆரம்பித்தார். 

‘குதிரை கட்டிய லாயத்திலே- மனக் 
கோட்டையி லேசந்தைப் பேட்டையிலே
எதிரி தான்வந்து தட்டுகிறான் – இதை 
ஏதென்று கேளடி ஞானப் பெண்ணே” 

என்று சொல்லி முடித்திருப்பார். யாரோ கதவைத் தட்டுகிற சத்தம் கேட்டது.பிள்ளை கும்மியைக் கொஞ்சம் நிதானித்தார். சத்தம் நிற்பதாகக் காணோம். தென்னடா சனியன்!” என்று சொல்லிக்கொண்டே எழுந்தார். 

கடைசி வெள்ளிக்கிழமையல்லவா? சனியன்கள் என்று சொல்லிக்கொண்டே வந்த பிள்ளையின் கண் முன்பு ஒரு அச்சடித்த தாளை நீட்டினான் அந்த ஊமை. முன்பெல்லாம் வில்லைச் சேவகனே விரட்டி அடித்திருப்பான் இந்த ஊமைகளை! இப்பொழுது என்ன செய்வது! கதவையே தட்டிப் பிச்சை கேட்கிற நிலைமைக்கு வந்துவிட்டது தம்முடைய பிழைப்பு! 

“போடா போ போ!” என்று சொல்லிக் கதவைப் படாரென்று சாத்திவிட்டு உள்ளே வந்தார். மறுபடியும் ஞானக் கும்மியைத் தொடர்ந் தார். 

‘குரு விருப்பது நெஞ்சுக் குள்ளே – மனக் 
கோணல் அறுப்பதும் தன்னுக்குள்ளே’ 

என்றார். 

‘ஸா ……ர்’ என்று யாரோ கூப்பிட்டார்கள். உலகநாதர் இந்தத் தடவை நிதானிக்கவில்லை, பாட்டை மேலும் ஒரு முறை மடக்கினார். 

‘குரு விருப்பது நெஞ்சுக்குள்ளே’ 

‘ஸா…….ர்’ என்று மறுபடியும் கேட்டது குரல். உலகநாதர் ஒரே எரிச்சலோடு எழுந்தார்.கதவைத் திறந்தார். 

‘க்ஷயரோக நிவாரண நிதி’ என்று சொல்லிக் கொண்டே ஒரு ஆசாமி தகர உண்டியலைக் கிலுக்கினான். ஸ்ரீமான் பிள்ளை அவனை முறைத்துப் பார்த் தார். 

“தீரயோசித்தால் இந்த உலகத்தில் ஒவ்வொரு மனிதனும் ஒரு க்ஷயரோகிதான்” என்று அந்த உண்டியலைப் பார்த்தவாறு ஒரு மகத்தான உண்மை யைத் தூக்கி எறிந்துவிட்டுக் கதவை ஓங்கி அடித் தார் உலகநாதர்! மறுகணம் ‘ஞானக் கோ(ர்)வை’ ஒவ்வொரு பக்கமாகச் சுழல ஆரம்பித்தது! 

4

”பிள்ளையவாள். இப்படி, இப்படி!” என்றான் அந்த மனிதன். அவன் காட்டிய பாதையைப் பார்த்தார். ‘நரக பூமி’ என்று கொட்டை கொட் டையாக எழுதி ஆறடி உயரக் கம்பத்திலே, இரண்டு கை அகலத்தில், மாட்டியிருந்தது. பாதையும் மிக மிக விசாலமான பாதையாக இருந்தது! 

“அட, தள்ளப்பா நான் ஸ்வர்க்கத்துக்குப் போகிறவன்!” என்றார் பிள்ளை உதாசீனமாக. 

“இல்லை. இல்லை. உங்கள் பாதை இதுதான் நல்ல விசாலமான பாதை!” என்றான் மறுபடியும். 

உலகநாத பிள்ளைக்கு அவனை எங்கோ பார்த்த ஞாபகம். தலையைச் சொறிந்தார். நினைவு வந்து விட்டது. அன்றைக்குப் பூட்டைத் திறக்க முயன்று தவித்தபோது ஞானக்கும்மி பாடிப் பிச்சை கேட் டானே அதே நொண்டிப் பண்டாரந்தான் இவன். 

“போடா, உனக்கென்ன தெரியும். நான் வெட்டி பழைய உலகநாத பிள்ளை இல்லை. ஞான யான், ஞான மாஜிஸ்ட்ரேட் உலகநாதன்!” என்று சொல்லிக் கொண்டே குறுகலான சின்னஞ் சிறு சுவர்க்கப் பாதையிலே திரும்பி மேலே நடந்தார் 

இதோ மீண்டும் யாரோ தடுத்தார்கள் – ஏறிட் டுப் பார்த்தார். ஒரு ஊமை. ‘போகாதே’ என்று வாய்திறந்து வார்த்தைகளினால் சொல்லக்கூட முடி யாத ஊமை. கையைக் காட்டி வழிமறித்தான் அவன்! உற்றுப் பார்த்தார் பிள்ளை. அன்று அச்சடித்த தாளை நீட்டிக் காண்பித்துப் பிச்சைக் கேட்டானே அதே பேர்வழி. 

ஓய்வு பெற்ற முதல் வகுப்பு மாஜிஸ்ட்ரேட் உலகநாத பிள்ளையவர்களுக்குக் கோபம் வந்தது. இந்த வாயற்ற பயல் நம்மை என்ன சுவர்க்கத்துக் குப் போகாதே என்று தடை செய்வது என எண்ணிய வண்ணம், அவனை ஒரு தள்ளுத் தள்ளி விட்டு ஸ்வர்க்கப் பாதையிலே மேலே நடந்தார். 

இதென்ன விந்தை! இன்னொரு பேர்வழி! இமை யாமல் பார்த்தார் அவனை. அன்று க்ஷயரோக நிவாரண நிதிக்கு என்று உண்டியலைக் கிலுக்கினானே அதே ஆசாமிதான் சந்தேகமில்லை ! 

“நகராதேயும் பிள்ளையவாள். அநுமதி இல்லா மல் நுழைகிற பழக்கம் இந்த மேல் உலகத்தில் இல்லை. காம்ப்ளிமென்ட்ரி டிக்கட்டுகள் இங்கே செல்லாது!” 

உலகநாதர் அவனைப் பார்த்தவாறு,

‘வாசலிலே ஒரு மேல் வாசல்’ 

என்று ஞானக் கும்மியை ஆரம்பித்தார். 

“பிள்ளையவாள்! பாட்டுப் பாடி ஏய்க்கிற காரியத்தை ஸ்வர்க்க பூமிக்குள் அனுமதிப்பதில்லை. தயவு செய்து நடவுங்கள் திரும்பி!” 

உலகநாத பிள்ளைக்குக் கோபம் வந்தது. எப்படிப் பட்ட பாட்டு தான் சொல்ல வந்த பாட்டு! அந்த அருமை இந்த முரடனுக்கு எப்படித்தெரியும்! 

“ஏய் என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்; இந்தப் பாட்டைப் பற்றி ஏதாவது சொன்னே..” என்று சொல்லிக்கொண்டே அவனை நெருங்கினார் பிள்ளை. அவனோ, இவருடைய பாட்டுக்கு எதிர்ப்பாட்டாக, 

“அன்பர் பணி செய்ய” 

என்று வேறொரு பாடலைப் பாட ஆரம்பித்து விட்டான்! 

5

‘படார் படார்’ என்று கதவு தட்டும் சத்தம் கேட்டுப் பதறி விழித்தார் உலகநாதபிள்ளை. கையிலே விரித்துப் பிடித்திருந்த ‘ஞானக் கோ(ர்) வைப் புத்தகம் கீழே நழுவிக் காலில் விழுந்தது. அந்த அவசரத்திலும் கால் பட்டுவிட்டதே என்று புத்தகத்தைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொண்டே, வெளியே ஓடிவந்து கதவைத் திறந்தார். அதிசயம்! மனைவி நின்றுகொண்டிருந்தாள். தெரு விலே வண்டியும் வண்டிக்காரனும்! 

“போட்ட காயிதத்துக்கெல்லாம் பதில் இல் லைண்ணா, எனக்கு எப்படி இருக்கும். ஹும்! எப்படி இருக்குமாம்?” 

உலகநாத பிள்ளை திகைமுட்டுகிற ஒரு புன் சிரிப்பை முகம் முழுவதுமாகச் சிரித்தார்! 

“எந்த ரயிலுக்கு வர்றேன்னு ஒரு லெட்டராவது போட்டிருக்கக்கூடாதா?” என்று ஒரு இங்கிதத்துடன் வார்த்தைகளை இழுத்தார் பிள்ளை. 

“போதும் போதும். நான் ஒருத்தி வீட்டிலே இல்லைண்ணா ஒங்களுக்குப் புத்தியே இராதே!” என்று தீர்மானத்துடன் சொன்னாள் அம்மாள்! 

மோக்ஷத்தில் தமக்கு ஒரு இடம் ‘ரிஸெர்வ் செய்கிற மும்முரத்தில், இக உலகத்திலே பிறமனிதர்கள், மனைவி உள்பட – படும் வேதனைகளுக்கெல்லாம் கதவைச் சாத்திவிட்ட பிள்ளையவர்கள்,தம்முடைய புத்தியைப் பற்றி மனைவி கூறிய அபிப்பிராயத்துக்குப் பதிலே பேசாமல் நிலை வாசலில் நின்றார். 

‘அன்பர்பணி செய்ய எனை ஆளாக்கி விட்டுவிட்டால் 
இன்ப நிலை தானே வந்து எய்தும் பராபரமே!’ 

என்ற பாட்டுத்தான் அவருடைய மனத்திலே வட்ட மிட்டுக் கொண்டிருந்தது! 

“சரி சரி! வண்டிக்காரனுக்குச் சில்லறையைக் குடுத்து அனுப்புங்க” என்று நினைவுபடுத்தி, மோக்ஷப் பாதையிலிருந்து உலகநாதரை இந்த உலகத்துக்குக் கொண்டுவந்தாள் அவருடைய வாழ்க்கை நாயகி! 

– கேளாத கானம் முதலிய கதைகள், முதற் பதிப்பு: பெப்ருவரி 1955, பாரி நிலையம், சென்னை.

மீ.ப.சோமு மீ. ப. சோமசுந்தரம் (Mi. Pa. Somasundaram; 17 சூன் 1921 – 15 சனவரி 1999) ஒரு தமிழ் எழுத்தாளர். மீ. ப. சோமு என்பது இவரது புனைபெயர். இவர் பத்திரிக்கை, கவிதை, புதினம், சிறுகதை, கட்டுரை, இசை போன்ற பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர். 1962ல் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர். அகில இந்திய வானொலியில் பணியாற்றியவர். வாழ்க்கைக் குறிப்பு சோமு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *