யாத்திரை
(1955ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காலம் என்ற பாதையில் அந்த ஐந்து பேரும் நடந்து சென்றார்கள்-காலம் என்ற பாதையில்.
ஐவரில் ஒருவன் பெயர் வானம். அடுத்தவன் காற்று. மூன்றாமவன் நெருப்பு. நான்காவது யாத்ரி கன் தண்ணீர். ஐந்தாவது உலகம்.
முடிவற்று வளைந்து வளைந்து செல்லும் காலம் என்ற தொலை வழியிலே இந்த ஐந்து நண்பர்களும் நடந்து சென்றார்கள்.
இந்த ஐவருக்கும் தெரியாமல் ஒரு ஆறாவது பேர்வழி இவர்களை அழைத்துச் சென்று கொண் டிருந்தான். அவனுக்குப் பெயர் நியதி.
காலப்பாதையில் அங்கங்கே தொலைக் கற்கள் நின்றன. முப்பது சிறு கல் தாண்டியதும் ஒரு பெருங்கல்; அப்படிப் பன்னிரண்டு பெருங்கல் தாண் டியதும் ஒரு உயரமான பெருங்கல். நாட்கள் என் றும் மாதங்கள் என்றும் வருஷங்கள் என்றும் உலகோர் இவற்றை அழைப்பதுண்டு.
யாத்திரை முடிவற்றுச் சென்றுகொண்டிருந் தது. யாத்திரிகர்களுக்கோ கால்கடுக்க ஆரம்பித்தது. “ஏது இந்தப் பாதை முடிவற்றுப் போய்க் கொண் டிருக்கிறதே” என்று மெதுவாக முணு முணுக்க ஆரம்பித்தான் உலகம் என்ற யாத்ரிகன்! அவனுக்கு வெகு சீக்கிரத்தில் அலுப்பு உண்டாகி விடும் போலும்! காலைத் தேய்க்க ஆரம்பித்தான்.
உலகம் காலைத் தேய்த்தாலும் மற்ற நான்கு. பேரும் அதை லக்ஷியம் செய்ததாகத் தெரியவில்லை. மேலே நடக்க ஆரம்பித்தார்கள்.
”விF! விதி!” என்று சொல்லிக் கொண்டே உலகமும் அவர்களைத் தொடர்ந்தான்.
கண்ணுக்குப் புலப்படாமல் இவர்களை அழைத் துச் செல்லும் நியதி இருக்கிறானே, அவன் அருவ மாக நின்று கொண்டு இதைப் பார்த்துப் புன் முறுவல் செய்தான்!
இதோ ஒரு பெருங்கல்.ஐந்து பேரிலே இன்னொ ருவன் ‘தாகம் எடுக்கிறது!’ என்றான். அவன் தான் தண்ணீர்! உலகத்துக்குச் சிரிப்பு வந்தது! “நண்பன் தண்ணீரா! உனக்குத் தாகம் எடுக்கிறதா! சபாஷ்!” என்று சொல்லிக் கொண்டே உலகம், தண்ணீரின் முதுகைக் தட்டிக் கொடுத்தான்! தன்னுடைய கட்சிக்கு ஒரு ஆள் சேர்ந்து விட்டதில் உலகத்துக்கு அபாரமான திருப்தி!
இந்தச் சந்தர்ப்பத்திலேதான் அந்தப் பொல் லாத நெருப்பு, முகத்தைத் திருப்பி இவர்கள் இரு வரையும் ஒரு பார்வை பார்த்தான். அவ்வளவு தான்!”விதி! விதி!” என்று சொல்லிக் கொண்டே மேலே நடக்க ஆரம்பித்தார்கள், உலகமும் தண் ணீரும் கைகோத்துக் கொண்டே!
ஆறாவது பேர்வழியான உருவம் இல்லாத நிய தியோ. மேலும் புன்முறுவல் புரிந்தான். யாத்திரை மேலும் தொடர்ந்தது.
காலப் பாதையிலே நடந்துசென்ற ஐவருக்கும் படிப் படியாக உலகத்தைப் பிடித்த அதே நோய் தொத்திக் கொண்டது! நெருப்பு சொன்னான்: “களைப்புத் தாங்க முடியவில்லை. மேலெல்லாம் வியர்க்கிறது எனக்கு!”
இன்னும் கொஞ்ச தூரம் சென்றதும் காற்று “எனக்குக் கால் கடுக்கிறது. நகர முடியாது!” என்றான். அடுத்த கல் செல்வதற்குள் வானம், “எனக்குக் கண் சுற்றுகிறது. கரு கரு என்று வருகிறது! என்று உட்கார்ந்து மயக்கமாய் விட்டான்.
உலகத்துக்குக் கோபம் வந்தது “யாரடா பைத்தியம். இந்தக் கண்மூடித்தனமான பாதையிலே நம்மை அழைத்துப் போவது?” என்று சீறினான்.
தண்ணீர் சொன்னான்: “எனக்கு அப்பொழுதே தெரியும். இந்த மாதிரிச் சண்டை பிடிப்பாய்என்று! இந்த நெருப்புத்தான் என்னை முழித்துப் பயங் காட்டினான்!”
நெருப்புக்குக் கோபம் வந்துவிட்டது. “நானும் நிற்கத்தான் போனேன். காற்று இருக்கிறானே, அவன்தான், என்னை அமரவிடாமல் தூண்டிவிட்டான்!” என்றான்.
காற்றுக்கு மட்டும் இதைக் கேட்டுக் கொண்டு பொறுமையாக இருக்க முடியுமா! சொன்னான் : “நான் என்ன செய்வேன்! இந்த வானம் இருக் கிறானே, அவன்தான், என்னை அமுக்கித் தள்ளு கிறானே! பேச்சு மூச்சுக்கு இடம் ஏது எனக்கு!”
வானம் இந்த நான்கு பேரையும் பரிதாபமாகப் பார்த்தான்; சொல்லுவான்.
“நண்பர்களே, உண்மையிலே நாம் எங்கே போகிறோம் என்ற விஷயம் எனக்கே தெரியாது!”
இவ்வாறு வானம் மேகக் குரலிலே சொல்லி விட்டு இடி இடி என்று சிரித்தான்.
உலகத்திற்கு இப்பொழுது பிடி கிடைத்து விட்டது.
“அப்படியானால் நண்பர்களே! உள்ளங்கால் வெள்ளெலும்பு தேய, நாம் ஏன் இப்படி வெள்ளங் காலம் நடக்கிறோம்?” என்று கேட்ட வண்ணம் தன்னுடைய வழுக்கை மண்டையிலே ஒரு குட்டிக் கொண்டான் உலகம்.
இந்த ஐவரையும் அருவமாக, அவர்களுக்கே தெரியாமல் நின்று அழைத்துச் செல்லும் நியதி மௌனமாகப் புன்புறுவல் பூத்தான்.
தான் கேட்ட கேள்விக்கு யாரும் பதில் சொல் லாமற் போகவே, உலகத்திற்கு ஆவேசம் வந்தது.
”நாம் எங்கு செல்கிறோம் என்று உனக்கா தெரி யாது!” என்றான் தண்ணீரைப் பார்த்து. தண்ணீ ருக்கு ஆவேசம் வந்தது. “உனக்கா தெரியாது!” என்றான் நெருப்பைப் பார்த்து. நெருப்போ காற் றைப் பார்த்துக் கேட்டான், “உனக்கா தெரியாது!’ என்று. காற்று வானத்தின் மீது பாய்ந்தான்: வானம் கையை விரித்து நால்வரையும் அமர்த் தினான்! புன்சிரிப்புடன் இருந்த நியதியோ, இந்த வேடிக்கையைப் பார்த்து உற்சாகத்தை அடக்க முடியாமல் உரக்கச் சிரித்தான்.
வானம் பலமாக அமுக்கினால் காற்று நசுங்கி விடுவான். காற்று விம்மி அடித்தால் வானம் பொடி பொடியாக வேண்டியதுதான். தீ வேகமாக எரிந் தா லோ தண்ணீர் ஆவியாகிவிட வேண்டும்! தண் ணீர் பெருகிப் பாய்ந்தாலோ, தீ அணைய வேண் டியதுதான்! அப்படியிருக்கும்போது, இந்த ஐவரும் யுத்தத்திலே கை கலந்தால் முடிவு ஏது? பாவம், கீழே விழுந்து கிடக்கும் உலகத்தை மிதித்துக் கொண்டே,நண்பர்கள் நாலுபேரும் முடிவு காண முடியாத யுத்தத்திலே இறங்கி விட்டார்களே என்றுதான், அப்படிச் சிரித்தான் நியதி!
நாலு பேருடைய கால் மிதியிலும் துவைந்து கொண்டிருந்த உலகம் ஆறாவது குரல் சிரிப்பதைக் கேட்டுத் திடுக்கிட்டான். அதே சமயம் மற்ற நால் வரும் கைகளைச் சற்றுத் தளர்த்தினார்கள்.
”யார் அது சிரிப்பது?” என்று கேட்டான் உலகம். “யார் அது சிரிப்பது?” என்றான் நெருப்பு. தண்ணீர், காற்று, வானம் மூவரும் அதையே கேட் டார்கள்.
“நான்தான் ஆறாவது பேர்வழி!” என்றான் நியதி.
“என்ன, ஆறாவது பேர்வழியா! நீ ஒருவன் இருக்கிறாயா! கண்ணுக்குத் தெரியவே இல்லையே!” என்றான் உலகம்.
மற்ற நால்வரும் கண்ணைத் துடைத்துகொண்டு பார்த்தார்கள்.
“ஆமாம், நான் ஒருவன் இருக்கிறேன். காலப் பாதையில் உங்களுக்கு வழி அமைத்துக் கொண்டு செல்கிறேன்!” என்றான் அவன்.
அடுத்த வினாடி ஐந்து பேரும் எழுந்து நின்றார் கள், ஆத்திரத்தோடு!
“அப்படியானால், உனக்கு வழி காட்டுவது யார்?” என்றார்கள் ஐவரும் ஏக காலத்தில்.
“நண்பர்களே! அன்பெனும் வானம், அன் பெனும் காற்று, அன்பெனும் கனல், அன்பெனும் புனல், அன்பெனும் உலகம், என்று ஐந்து விதமாக வும் வர்ணிக்கப்படும் சக்தி ஒன்று உண்டு. நியதியா கிய எனக்கும் நியதி அதுதான்!” என்றான் அந்த ஆறாவது நண்பன்!
“அப்படியானால்……..?” என்று வழுக்கை மண்டையைக் கையால் துடைத்துக் கொண்டே எழுந் தான் உலகம்
“நாம் நடப்பது என்பது இல்லை. நம்மை நடத்து கிறது என்றுதான் ஒன்று உண்டு. அப்படியிருக்கும் போது நமக்கு ஏது களைப்பு! நம்மை இழுத்துச் சுமக் கிற சக்திக்கே இல்லையே அது!” என்றான் நியதி-
“அப்படியானால் புறப்படுங்கள்!” என்றான் வானம்.
களைப்பு தீர்ந்தது! சண்டை நின்றது! அன்பு பிறந்தது!
காலம் என்ற பாதையிலே, அன்பு என்ற தளை யில் கட்டுண்டு, ஐந்து யாத்ரிகர்களும் நடந்தார்கள்; நடக்கிறார்கள்; நடந்துகொண்டே யிருப்பார்கள்!
– கேளாத கானம் முதலிய கதைகள், முதற் பதிப்பு: பெப்ருவரி 1955, பாரி நிலையம், சென்னை.
![]() |
மீ. ப. சோமசுந்தரம் (Mi. Pa. Somasundaram; 17 சூன் 1921 – 15 சனவரி 1999) ஒரு தமிழ் எழுத்தாளர். மீ. ப. சோமு என்பது இவரது புனைபெயர். இவர் பத்திரிக்கை, கவிதை, புதினம், சிறுகதை, கட்டுரை, இசை போன்ற பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர். 1962ல் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர். அகில இந்திய வானொலியில் பணியாற்றியவர். வாழ்க்கைக் குறிப்பு சோமு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில்…மேலும் படிக்க... |