கண்டறியாதன கண்டேன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 9, 2025
பார்வையிட்டோர்: 199 
 
 

(1955ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“மித்திர தேவனிடமிருந்து பெறும் ஞானக் கேள்வி தொழில் செய்பவரைத் தாங்குவது; இன்பங்களை வென்று தருவது; உண்மையுடையது; ஒளிப் புதுமைகள் வாய்ந்தது. அதனை வாழ்த்துகிறோம்!” 

குருதேவருடைய வார்த்தைகள் கம்பீரமாக ஒலித்தன. 

“மித்திரா! விரதத்தாலே நின்னை உணர்வான் யாவன், அம்மனிதன் இன்பங்களை நன்கு நுகர்க. உன்னாலே காக்கப்படுவோன் அழிவுபெறுவதில்லை; தோல்வி அடைவதில்லை; அருகே யிருந்தும் தொலையிலிருந்தும் அவனைப் பாபம் வந்து சார்வதில்லை.” 

மித்திரன் என்ற சூரிய தேவனைப் பாடிய விசுவாமித்திர மஹரிஷியின் இந்த ரிக்குக்களைக் குருநாதர் விளக்கம் செய்யத் தலைப்பட்டார். 

சிவசூரியனுடைய முகத்தில் இந்த ரிக்குக்களின் ஒளி பிரதிபலிக்கக் காணோம். அவனுடைய கண்களைப் பார்த்தால், அவன் இந்த உலகத்தில் சிஷ்யர்களின் மத்தியில் இருந்து, வேதத்தைக் கேட்கிற மாதிரியாகவே தெரியவில்லை. குருநாதருக்கு அது புரிந்துவிட்டது. 

“சூரியா, எங்கே இருக்கிறாய்?” என்று கேட்டார்.  

சிவசூரியன் எழுந்து நின்றான். 

“க்ஷமிக்கவேண்டும் ப்ரபோ!” என்று சொல்லிக் கை கூப்பினான். 

“குமாரா, என்றும் இல்லாத விதத்தில் இன்று ஏன் கலக்கத்தோடு காணுகிறாய்? என்ன நேர்ந்தது?” என்று மேலும் கேட்டார். 

“இன்று வைகறைப்பொழுதில் நதியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த சமயம், நம்முடைய ஆசிரமத்துச் சோலைக்கு அருகே ஒரு காட்சி கண்டேன்.” 

“என்ன கண்டாய்?” 

“எங்கிருந்தோ தப்பி வந்துவிட்ட இளம் மான் ஒன்று, திக்குத் திசை தெரியாமல் மருண்டு விழித்துக் கொண்டிருந்தது. நம்முடைய சோலையை அது எத்தனையோ தடவை சுற்றிச் சுற்றி வந்து களைத்திருக்க வேண்டும்.” 

“பிறகு என்ன நேர்ந்தது, சூரியா?” 

“நான் அதைப் பிடிக்கலாம் என்று ஓடித் தொடர்வதற்குள் நம்முடைய ஆசிரமத்து வண்ண மான் தும்பை அறுத்துக்கொண்டு வெளியே ஓடி வந்தது. இரண்டுமாகச் சேர்ந்து காட்டுக்குள்ளே பாய்ந்து சென்றுவிட்டன!” என்றான் சிவசூரியன். 

“என்ன சொல்லுகிறாய்! நம்முடைய மாரஜித்தா ஓடிவிட்டான்? ஆசிரமத்தைவிட்டு வெளியே ஓடத் தெரியாதே அவனுக்கு!” என்று கேட்டான் சிஷ்யர்களில் ஒருவன். 

“அதுதான் நானும் யோசிக்கிறேன். காட்டிலே அந்தப் புதிய மானோடு எங்கெல்லாம் போய்த் திண்டாடுகிறானோ மாரஜித்! குருதேவா, அந்த விநாடியி லிருந்து என் சித்தம் ஒரு நிலையில் இல்லை!” 

குருதேவர் உடனே பதில் சொல்லவில்லை.அவ ருடைய முகத்தில் புன்முறுவல் ஓடியது. 

“சூரியா, பெண்மானுடன் ஓடிப்போன மாரஜித்தைப் பற்றிய கவலையை இந்த விநாடியே விட்டு விடு.” என்றார் அவர். 

சிவசூரியன் கலங்கி நின்றான். குருதேவர் மேலும் சொன்னார். 

“குமாரா, ஆத்ம வளர்ச்சியில் உன்னுடைய இந்தக் கலக்கம் ஒரு முக்கியமான கட்டம். இந்தக் கட்டத்திலே தான் நீ வெளி உலகுக்குச் செல்ல வேண்டும்!” 

இதைக் கேட்டதும் சிவசூரியனுக்கு ஒரு கணம் உடம்பெல்லாம் அக்கினியாகத் தகித்தது. ஏதோ பேச முயன்றான். உதடு படபடத்தது. வார்த்தை வரவில்லை. 

“கலங்காதே! சூரியா. ஆசிரமத்தில் இப்பொழுது தெரிந்துகொள்ளவேண்டியவற்றைத் தெரிந்து கொண்டு விட்டாய். இனி உலகத்துக்குள் செல். பிறகு ஒரு நாள் இங்கு திரும்புவாய், அப் பொழுது ஆசிரம வாசல் உனக்காகத் திறந்திருக் கும்!” 

2

“மாதர் பிறைக் கண்ணி யானை 
மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர் சுமந் தேத்திப் 
புகுவார் அவர்பின் புகுவேன்!” 

‘உலக’த்துக்குள் சிவசூரியன் புகுந்தபோது, அந்தப் பாடல், உமா மகேசுவரர் ஆலயத்திலிருந்து சுகமாக வந்து கொண்டிருந்தது. ஆடவரும் பெண் டிரும், பல குரல் ஒரு குரலாக இசைந்து, இனிமை யான காந்தாரத்தில் பாடிக் கொண்டிருந்தார்கள்.

சிவசூரியன் கோவிலுக்குள்ளே நுழைந்தான். 

சித்திரமண்டபத்தில் அடியார்களும் பிரபுக்களு மாக ஒரே கூட்டம். அரங்கத்தில் செளந்தரிய வடிவ மான ஒரு கன்னி நடனம் ஆடிக் கொண்டிருந்தாள். 

‘வார’மாக ஒலித்த பின்னணிக் குரல்கள் நின் றன. யாழும் குழலும் இணைந்த வாத்திய இசை,இறை வனை நாடும் இதயத்தைப்போல் பய பக்தியோடு அந்தப் பாடலைத் தொடர்ந்தது. மத்தளம்பாதத்தின் நடையைக் காட்டியது. அவள் அந்த அரங்கிலேயே ஒரு விநாடி கை கூப்பி நின்றாள். அடுத்த விநாடி, 

யாதும் சுவடு படாமல் 
ஐயாறு அடைகின்ற போது 
காதல் மடப்பிடி யோடும் 
களிறு வருவன கண்டேன்! 

என்று ஒரு முறை பாடினாள். வாரமாக ஒலித்த குரல்கள் அந்த அடிகளை மீண்டும் பாடின. அப் பொழுது அவள், அரங்கிலே களிறும் பிடியும்நடந்து போவது போல அபிநயித்து, கம்பீரமாக ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்கு நடந்தாள்.வாத்திய இசை பின் தொடர்ந்தது. 

கண்டேன் அவர் திருப்பாதம் 
கண்டறியாதன கண்டேன்! 

என்று சொல்லி நின்றாள். சிவசூரியன் சித்திரமண்ட பத்தின் ஒரத்தில் தூணிலே சாய்ந்தவாறு உட் கார்ந்து விட்டான். அவனுடைய உள்ளம் காதல் மடப்பிடியும் களிறும் நடந்து செல்வதிலே லயித்து விட்டது. 

நடனக் கன்னி, அந்த அரங்கிலே பாடலின்மற்ற அடிகளை அபிநய ஓவியமாகச் சித்திரித்தாள். 

சிறையிளம் பேடையொ டாடிச் 
சேவல் வருவன கண்டேன்! 

என்று தலையை அசைத்தும், 

பேடை மயிலொடுங் கூடிப் 
பிணைந்து வருவன கண்டேன்! 

என்று ஒசிந்து ஒசிந்தும், அவள் நடன அரங்கிலே இயங்கியபோது, சிவசூரியன் இந்த உலகத்தில் இல்லை. 

கருங்கலை பேடையோ டாடிக் 
கலந்து வருவன கண்டேன்! 

என்று குரல்கள் ஒலித்தபோது, அவள் ஆண்மானும் பெண்மானும் துள்ளி ஓடுவதுபோல அந்த அரங்கிலே துள்ளிக் குதித்தாள். அந்தக் காட்சி யைக் கண்டதும் சிவசூரியனுடைய உடம்பெல்லாம் ஒரு மின்னல் துவண்டது. 

3

“கண்டறியாதன கண்டே னென்று அரங்கிலிருந்து பாடினீர்கள். உண்மையில் அந்த வார்த்தைகள் அரங்கிலிருந்து வரவில்லை. என் இதயத்தின் அந்தரங்கத்திலிருந்து வந்தன!” என்றான் சிவ சூரியன், மாதங்கியைப் பார்த்து. இதற்கு முன் அவன் யாரிடமும் இந்த மாதிரிப் பேசியதே இல்லை. 

“கேட்டறி யாதன கேட்கிறேன்!” என்றாள் மாதங்கி. 

“சத்திரத்தில் படுத்திருந்தேன். ஆனால், இருந்த தெல்லாம் சித்திர மண்டபத்திலேதான். கண்டறி யாத காட்சிகளை யெல்லாம் இமையை மூடியதும் கண்டேன்!” என்று மேலும் தொடர்ந்தான் சிவ சூரியன். அவனுடைய குரலில் ராசனுபவத்தின் போதை தொனித்தது. 

மாதங்கியின் வீட்டில் சேடிப் பெண்கள் வரு வதும் போவதுமாக இருந்தார்கள். இது போலவே கானகச் சோலையில் மிடுக்கான இளம் மான்கள் மருண்டு மருண்டு செல்வதை அவன் கண்டதுண்டு. 

ஆனால், இதுவரை எந்த மானும் பாடிக் கேட்ட தில்லை அவன். எந்த மானும் அவனோடு இவ்வளவு இனிமையான குரலில் இத்தனை வாஞ்சை மொழி களைப் பேசியதில்லை. இதுவரை இந்த மாதிரியான இன்ப அனுபவம், அவனுக்கு எந்த மான் கூட்டத் தின் மத்தியிலும் இருந்ததில்லை. 

உலகமே சிவசூரியனுடைய கண்ணுக்கு ஒரு விசித்திரானந்தக் காட்சியாக விளங்கியது. 

ஆமாம்; அன்று முதல் அவன் அடிக்கடி மாதங்கியின் வீட்டுக்குப் போக ஆரம்பித்தான். உலகம் சொல்லிற்று: சிவசூரியன் தங்கியிருந்த சத்திரத்திற்கும், மாதங்கி இருந்த வீட்டிற்கும் தொலை என்று. அவனால் அதை நம்ப முடியவில்லை. 

மாதங்கி? – இளமையும் ஞானக் கேள்வியும் சேர்ந்து ஒரு அசாதாரணமான தேஜஸ் சிவசூரிய னிடம் பிரகாசிப்பதைக் கண்டு மாதங்கி வியந்தாள். வாரம் பாடும் பெண்களின் இசையை விட அவளுக்குச் சிவசூரியனுடைய பேச்சு இனிமையாக இருந்தது. 

சிவசூரியன் நினைத்தான்: – இருவரையும் ஒரு பெரிய கானகம் பிரித்திருந்தது. இப்பொழுது காட் டைக் கடந்து விட்டோம்; கை தட்டினால் கேட்கும் என்கிறார்களே, அவ்வளவு தொலைதான் இப் பொழுது. இதையும் கடந்து விட்டால்! 

புதிதாகத் தோன்றிய உணர்ச்சி, இதயங்களை இப்படி சுருதி சேர்க்க யத்தனித்துக் கொண்டிருந்த சமயத்திலேதான் மகேசுவரருடைய ஆலயத்தில் திருக் கல்யாண மகோற்சவம் வந்தது. 

4

ஆலயத்தில் அன்று மாதங்கியின் நடனம். 

சித்திர மண்டபத்தில் ஜன சமுத்திரம் தலைகளை அலைகளாக வீசிக்கொண்டிருந்தது. அந்தக் கூட்டத் தில் இந்தத் தடவை எங்கோ ஓர் ஓரத்தில் ஏதோ ஒரு தூணிலே சாயவில்லை சிவசூரியன். ஜனக் கடலின் கரை முகப்பிலே, எல்லோருக்கும் முன்பாக அமர்ந்திருந்தான் அவன். 

நடனம் ஆரம்பமாயிற்று. வாரம் பாடுகிற ஆடவரும் பெண்டிரும் உமையொரு பாகனை மலையான் மகளொடும் பாடித் துதித்தார்கள். மாதங்கி அரங்கிலே வந்து கை கூப்பி நின்றாள். 

காதல் மடப்பிடி யோடும் 
களிறு வருவன கண்டேன்! 

என்று அபிநயம் புரிந்தாள். ஆனால் ஏனோ தெரிய வில்லை,சிவசூரியன் திகைப்படைந்தான். 

என்ன ஆச்சரியம்! அன்று கேட்ட அதே பாட்டுத்தான்.அன்று நடனம் ஆடிய அதே மாதங்கி தான். அதே அபிநயந்தான். ஆனால் இன்று ஏன் இந்த மாறுதல்? சிவசூரியனுடைய கண்களுக்கு அன்று அதில் ஒரு தெய்விக எழில் துலங்கியது. இன்றோ அதில் ஒரு, ஒரு……அந்த ‘ஒரு’ என்னவென்று அவனுக்கே தெரியவில்லை ! 

இசையில் அபஸ்வரம் என்கிறோம்: இது அப்படியில்லை. அபிநயத்தில் அபஸ்வரம் என்று உண்டா? சிவசூரியன் யோசித்தான்; மனிதர்களின் இதயத்தில் அபஸ்வரம், அந்த இதயம் விளையாடு கிற ரூப அரங்கத்தில் அபஸ்வரம் என்று உண்டா? அப்படி ஒன்றைச் சொல்லக் கூடுமானால் அந்த அபஸ்வரந்தான் இது! 

அதற்குமேல் சிவசூரியன் அரங்கிலே நடந்த நடனத்தைக் காணவில்லை. ஆத்ம நிலை என்ற மலை உச்சியிலிருந்து ஒரு மென்மையான இதயம் அதல பாதாளத்தில் நழுவி விழப் பார்க்கிறது என்பதையே அவன் கண்டான்! 

5

மறுநாள் விடிந்ததும் சத்திரத்திலிருந்து சிவ சூரியன் மாதங்கி வீட்டிற்குச் சென்றான். 

“நேற்று நடனத்திற்குப் பிறகு அந்த மண்ட பத்தில் எங்குமே உங்களைக் காணோமே, ஏன் ஒரு மாதிரி வாடியிருக்கிறீர்கள்?” என்று கேட்டாள் அவள், மிகவும் கவலையோடு. 

”நான் இன்று கானகம் போகிறேன்!” 

கார்காலத்து வானில் பயங்கரமான மின்னல் துவளுவதைக் கண்ட ஓர் இளம் மான் போல் அவள் திகைத்துப்போய் நின்றாள். 

“மாதங்கி, உன்னுடைய நடனத்தின் லக்ஷியம் மனசிலிருந்து அகல முயற்சிக்கிறது. அதைப் பார்த்த போதுதான் என் தவற்றையும் நான் உணர ஆரம்பித்தேன்” என்றான் சிவசூரியன். அவன் வார்த்தைகளில் ஒரு நிச்சயம் இருந்தது. 

“நீங்கள் என்ன சொல்கிறீர்கள்!” என்றாள் மாதங்கி திகைப்பு நீங்காமல். 

“கண்டேன் அவர் திருப்பாதம் என்று ஆடிப் பாடிக்கொண்டே இறைவனை அணுகி விட உன்னால் முடியும். நாங்கள் எல்லாம் அப்படியில்லை. உடம்பை வருத்துகிறோம். உள்ளத்தைச் சாக அடிக்கிறோம். இலை காய்களைப் புசித்துக்கொண்டு, கடுமையாகத் தவங்கள் புரிகிறோம். இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு நாங்கள் 

அடைய முயற்சிக்கிற பேரின்பத்தை நீ ஆடியும் பாடியும் எளிதில் அடைந்துவிட முடியும். அதனால் தான் சொல்கிறேன். அந்த அற்புதமான சாதனத் தில் மாசு கற்பித்து விடாதே!” என்றான் சிவ சூரியன். அவனுடைய குரலில் ஒரு தெளிவு இருந்தது. 

மாதங்கி கண்கலங்கி நின்றாள். அவளுடைய எண்ணங்களுக்குச் சொல் இல்லை. 

“தெய்வம் வந்து நடனம் செய்யக்கூடிய இதய அரங்கில், ஒரு மானுடன் புகுந்துவிட்டால் என்ன கேடு நேரும் என்பதை நேற்றுக் கண்டேன். அந்தக் காட்சி என் கண்களைத் திறந்தது. இனி நான் இங்கு இருந்தால், நாம் இருவருமே நம்முடைய லக்ஷி யத்தை மறந்து விடுவோம்.” 

அவனுடைய வார்த்தைகளில் பொங்கிய உணர்ச்சியிலே மாதங்கி ஆழ்ந்து நின்றாள். அவன் சொன்னான்: 

“மாதங்கி!நாம் இருவரும் இறைவனை நோக்கிச் செல்ல வேண்டியவர்கள். உன்னுடைய பாதை நடனப் பாதை; இசை அரங்கு. எனது பாதை கரடு முரடானது; அது கானகம். நான் அங்கேதான் செல்ல வேண்டியவன். செல்கிறேன். விடை கொடு.” 

ஒரு விநாடி மாதங்கியினுடைய விழிகளில் கண்ணீர் துளித்துக் குலுங்கி நின்றது. மறு கணம் றுதி வந்தவள் போல, சிதற நின்றநீர்த்துளியைத் துடைத்துக்கொண்டு, “நமஸ்காரம்!” என்றாள். 

6

சூரியன் உதயமாகிக் கொண்டிருந்தான். சிஷ் யர்களை ஒருமிக்கிற மணி நாதத்துடன் ஆசிரம் வாசல் திறந்தது.சிவசூரியன் உள்ளே நுழைந்தான். 

“குமாரா!” என்றார் குருதேவர். சிவசூரியன் அவருடைய பாத கமலங்களைக் கண்ணிலே ஒற்றி னான். 

பூஞ்செடிகளுக்கு மத்தியில் ஒரு சல சலப்புக் கேட்டது. எல்லாரும் பார்த்தார்கள். மாரஜித் ஆசிரமச் சோலைக்குள்ளே திரும்பிக் கொண்டிருந்தான். 

“குமாரா! முதலாவது காரியமாக இன்று மாரஜித்தை ஆசிரமத்திலே சேர்ப்பாய். இனி அவன் ஓட மாட்டான்!” என்றார் குருதேவர் புன் முறுவலுடன். 

சிவசூரியன் எழுந்து சென்று மராஜித் என்ற அந்த வண்ண மானை ஆசிரமத்தின் தறியிலே கட்டினான். 

அதே சமயம் நகரத்திலே, உமா மகேசுவரர் ஆலயத்தில், இறைவன் சந்நிதியில் மாதங்கி புத்துணர் வோடு பாடினாள்: 

கண்டேன் அவர்திருப் பாதம், 
கண்டறியா தன கண்டேன்! 

– கேளாத கானம் முதலிய கதைகள், முதற் பதிப்பு: பெப்ருவரி 1955, பாரி நிலையம், சென்னை.

மீ.ப.சோமு மீ. ப. சோமசுந்தரம் (Mi. Pa. Somasundaram; 17 சூன் 1921 – 15 சனவரி 1999) ஒரு தமிழ் எழுத்தாளர். மீ. ப. சோமு என்பது இவரது புனைபெயர். இவர் பத்திரிக்கை, கவிதை, புதினம், சிறுகதை, கட்டுரை, இசை போன்ற பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர். 1962ல் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர். அகில இந்திய வானொலியில் பணியாற்றியவர். வாழ்க்கைக் குறிப்பு சோமு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *