கேளாத கானம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 9, 2025
பார்வையிட்டோர்: 194 
 
 

(1955ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“தமிழ்நாட்டின் சங்கீதம் என்றால், தேவாரங் களும் அவற்றை ஒட்டிய பண்களுந்தான் என்று, இதுவரை நினைத்திருந்தேன். ஆனால் இந்தக் கோவிலைப் பார்த்த பிறகு என் கருத்தை மாற்றிக் கொண்டு விட்டேன்!” என்று சொன்னார், என்னோடு வந்த வடநாட்டு நண்பர். வடநாட்டுச் சங்கீதத்தில் மிகவும் தேர்ச்சி பெற்ற ஒரு பெரிய பாடகர் அவர். 

“நீங்கள் சொல்வது உண்மையான வார்த்தை. தமிழ் நாட்டில், சங்கீதம் என்ற கலை, எத்தனையோ பல நூற்றாண்டுகளாய்ப் பல துறைகளிலும் உன்னத மாக இருந்து வந்திருக்கிறது. தேவாரம் முதலிய துதிகீதங்களின் பண்களோடு, நாகஸ்வரம், புல்லாங் குழல், வீணை போன்ற வாத்தியங்களும், நாட்டிய மும் நாடகம் போன்ற அருங்கலைகளும், இந்த நாட்டில் மிகவும் மேன்மையான நிலையில் இசையை வளர்த்து வந்திருக்கின்றன” என்றேன். 

“ஆனால் இவற்றில் வழங்கி வந்த பாடல் களையும், இசை மரபுகளையும் பற்றி நீங்கள் சிந்தித் துப் பார்ப்பதே இல்லை” என்றார் நண்பர். 

மதுரைக் கோவிலின் ஆயிரங்கால் மண்டபத் துக்கு உள்ளே நுழைந்தோம். “உங்களுடைய ஆராய்ச்சிக்கு இந்த மண்டபத்தினுள் அநேக விஷயங்கள் இருக்கின்றன. உள்ளே போங்கள் என்று சொல்லிவிட்டு, படியிலே உட்கார்ந்து என் மனத்தில் எழுந்து வந்த ஏதேதோ எண்ணங்களைப் பின்தொடர்ந்தேன். 

2

கடம்பவன நாதர் என்ற யாழ்ப்பாணரின் மர பிலே நைவள நாதர் என்ற ஒரு மகான் இருந்தார். தமிழ் நாட்டில் பூர்வந்தொட்டு வழிவழியாக வந்த இசையையும், அதோடு ஒட்டிய கலைகளையும் நன்கு கற்றுத்தேர்ந்து நிகரற்ற நிபுணராக அவர் விளங் கினார். கன்னிகைகள் பலர் அவரிடம் நாட்டியக் கலை பயின்றார்கள். இளம் மாணவர்கள் பலர், வீணை, புல்லாங்குழல் முதலிய வாத்தியங்கள் கற்றார்கள். இன்னும் சிலர், அவரிடம் குரலிசை பயின்று வந்தார்கள். மதுரை வட்டத்தில், அவரை அறியாதவர் இல்லை. மூன்று ஸ்தாயிகளில், அபார மான இலாகவத்தோடு உலாவிவரக் கூடிய நயமான குரல் படைத்தவர் என்பதில், நைவள நாதரைப் பற்றி எல்லையில்லாத புகழ். 

இப்படிப்பட்ட அதிசயமான இசைவாணர், தம் முடைய ஒரே புதல்வனான இந்தள குமாரனுக்கு இருபது வயது வரை சங்கீதமே சொல்லிவைக்க வில்லை என்றால், யார்தான் ஆச்சரியப்படாமல் இருப்பார்கள்? அதிலும் நுட்பமான அறிவும், சங்கீதம் என்றால் அளவு கடந்த ஆர்வமும் கொண்ட ஒரு மகனுக்கு, சங்கீத வாசனையே வேண்டாம் என்று இவர் ஒதுக்கினால்? 

மாணவர்களில் யாருக்கும் இந்த விநோதத்தை அவரிடம் கேட்கப் பயம்! மற்றவர்களுக்குமே இதைக் கேட்டுத் தெரிந்துகொள்வதற்கு வேண்டிய துணிவு இல்லை! அவ்வளவு கண்டிப்பான மனிதர் அவர். 

வயதாக வயதாக, நைவள நாதர் தமது மாண வர்களின் எண்ணிக்கையையும் குறைத்துக்கொள்ள ஆரம்பித்தார்! பையனுக்கோ ஒரே துடிப்பு! அவனுடைய மனசில் பெருகிக் கொண்டிருந்த சங்கீ தப் பித்து, மாணவர்களோடு குருநாதர் இருந்து பாடும்போதெல்லாம் அவனைப் பிடித்து என்னவோ செய்தது! தானும் பாடவேண்டும் என்று உதடு துடிக்கும். தகப்பனார் இதைப் புரிந்து கொண்டாலும், கவனிக்காததுபோல் இருந்து விடு வார். இந்தள குமாரனுக்கு இதயம் குமுறும். என்ன செய்வான்? 

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தான். ஒரு நாள் குமாரன் தந்தையிடம் நேருக்கு நேராகவே கேட்டுவிட்டான்: “அப்பா, இத்தனை நாளும் சும்மா இருந்து விட்டீர்கள். இனியாவது என்னைப் பாட அனுமதிக்க மாட்டீர்களா? இன்றுவரை கேள்வி மூலம் என் காதிலே பட்டுள்ள சங்கீதமே போதும், மீன் குஞ்சுக்கு நீந்தச் சொல்லிக் கொடுக்க வேண்டாம். அநுமதி மட்டும் கொடுங்கள், பாட ஆரம்பிக்கிறேன்!” என்றான். 

நைவள நாதர் சிரித்தார். சொன்னார்: “குமாரா, இந்த அனுமதி ஒன்றை மட்டும் கேளாதே. வேறு எந்தக் கலைக்கும் உனக்கு என் ஆசீர்வாதம் உண்டு. சிற்பியாகவோ சித்திரகாரனாகவோ, பயிற்சி பெறு. தடையில்லை. ஆனால் சங்கீதம் மட்டும் உனக்கு வேண்டாம்!” 

தந்தையின் குரலில் கண்டிப்புக்கு மேலாக ஒரு விவரிக்க ஒண்ணாத வேதனை இருந்தது. இந்தள குமாரன் அதைக் கவனித்தான். அதற்குமேல் அன்று அவரை அவன் தொல்லைப்படுத்த விரும்பவில்லை. 

3

மதுரைக் கோவிலைப் புதுப்பிக்கும் பணி அரிய நாதருடைய பெரும் முயற்சியால் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்து வருவதற்காகக் கோவிலுக்குச் சென்ற இந்தள குமாரன், அங்குள்ள சிற்பங்களையும் ஓவியங்களையும் கண்டுவிட்டு, ஒரே அதிசயத்தோடு வீடு திரும்பினான். தகப்பனார் கேட்டார், “குமாரா, கோவிலில் என்ன கண்டாய்?” என்று! மகன் சொன்னான்: “நம்முடைய தமிழ் நாட்டின் சிற்பச் செல்வமும் ஓவிய நிதியும் எவ் வளவு அற்புதமானவை என்பதை இன்றுதான் கண்குளிரக் கண்டேனப்பா. அங்கிருந்து திரும்பவே மனம் இல்லை!” 

தகப்பனார் சிரித்தார். “சங்கீதம் சங்கீதம் என்று பைத்தியமாக நிற்பாயே. அந்தச் சங்கீதத்தை எங்காவது கண்டாயா” என்று கேட்டார் அவர். குமாரனுக்கு ஒன்றும் புரியவில்லை. 

“சங்கீதத்தை எங்காவது காண்பது என்று உண்டா? கோவிலில் எத்தனையோ பேர் அற்புதமாகப் பாடினார்கள்! குழலும் வீணையும் இயம்பின! கேட்டேன்.” 

தகப்பனார் சொல்லுவார். “எத்தனையோ பல ஆண்டுகளுக்கு முன் மறைந்துபோன சிற்பிகள் அங்கே தாங்கள் செதுக்கிய சிலைகளில் வாழ்கிறார் கள். பார்த்தாய். எத்தனையோ பல நூறு வருஷங் களுக்கு முன் வாழ்ந்த ஓவியர்கள், தங்களுக்குப்பின் தோன்றக்கூடிய மக்களுக்கு என்று, தங்கள் கை. வண்ணத்தைச் சுவர்களிலே பதித்துப் போயிருக் கிறார்கள். அவற்றையும் பார்த்தாய். ஆனால், எந்தச் சங்கீ த வித்துவானாவது தன்னுடைய இசைக்கு அந்தக் கோவிலிலே இடம் கண்டானா, பார்த்தாயா? எந்த வித்துவானாவது அந்தக் கோவிலிலே இன்று நிரந்தரமாக நிற்கிறானா, சொல். வாத்தியங்கள் காட்சிப் பொருள்களாக நிற்கும். ஆனால் அவற்றிலே தவழ்ந்த இசை? அது அந்தந்த வித்துவான்களோடு சரி.” 

தகப்பனாருடைய குரலில், கருத்தின் உறுதி இருந்தது. அந்த உறுதி காரணமாகவே, ஒலியில் துக்கம் மிதந்தது. மகன் சொல்லுவான்: “சிஷ்ய பரம்பரை என்று ஒன்று இருக்கிறதல்லவா? ஒரு கலைஞனுக்குப் பிறகு, அவனை நிரந்தரமாக்குவது அதுதானே?” 

பளிச்சென்று பதில் வந்தது, தகப்பனாரிடமிருந்து 

“சிற்பம், ஓவியம், கவிதை ஆகிய எல்லாக் கலை க களுக்குமே சிஷ்ய பரம்பரை உண்டுதான்! அதோடு இந்த மூன்று கலைகளுக்கும் இன்னொரு விசேஷச் சிறப்பும் இருக்கிறது. ஒரு சிற்பி தன்னுடைய கலையை அப்படியே கல்லில் பொதிந்து வைத்து விட்டுப் போகிறான். ஓவியன், தன் திறமைகளை யெல்லாம் வர்ணங்களிலே கொட்டி வைத்துவிட்டுப் போகிறான். ஒரு கவிஞன், தன்னுடைய ஆன் மாவையே ஏடுகளில் பொறித்து வைத்துவிட்டுப் போகிறான். சிஷ்ய பரம்பரையை மட்டுமே நம்பி, இவர்கள் உயிர் வாழ்வதில்லை. ஆனால் சங்கீதக் காரன் காரியம் அப்படியில்லை! காற்றோடு காற்றாகப் போய்விடுகிற அவசர அநித்தியம் அது ! சிஷ்ய பரம்பரையை -சில சமயங்களில் அதன் விபரீதமான கோணல்களையும்-நம்பித்தான் அவன் வாழ வேண்டும்! அதனாலேதான் நம்முடைய தொன்மை யான சங்கீதத்துக்கு ஆதாரமான வடிவமே இல்லாது போய்விட்டது!” 

இந்தள குமாரன் தன்னுடைய கோவில்- அனுபவங்களோடு, தந்தையின் வார்த்தைகளை ஒப் பிட்டுப் பார்த்துக்கொண்டே நீண்ட நேரம் கலக்கத்துடன் உட்கார்ந்துவிட்டான்! தன்னைச் சிற்பம் அல்லது ஓவியம் பயிலும்படி தகப்பனார் சொன்ன தன் பொருள், அவனுக்கு இப்பொழுதுதான் விளங்கியது. ஆனாலும் அவன் மனமோ எந்த நேரமும் சங்கீதத்திலே அல்லவா லயித்துக் கிடந்தது-! சொன்னான் 

“அப்பா, என் மனத்தின் ஈடுபாடெல்லாம் உங்களுக்கு நன்றாகத் தெரியும். என்றாலும் தங்க ளுடைய ஆசையின்படி சிற்பக் கலையைப் படித்து வரவாவது அநுமதி கொடுங்கள்!” 

நைவள நாதர் இதற்கும் சிரித்தார். 

“குமாரா, உண்மையான பற்று என்று ஒன்று இருக்குமானால், எந்தக் கலையுமே எளிதில் வசமாகும். நீ நினைக்கிறபடி, அதற்கு அசுர சாதகம் அவசியம் இல்லை. எண்ணங்கள் பழுக்க வேண்டும்; அவ்வளவு தான்!” 

4

நைவள நாதர் தம்முடைய மகனுக்குச் சங்கீதம் சொல்லிக் கொடுக்காமலேயே மறைந்தார். ஆனால் மரணத்திற்குச் சற்று முன்பு, மகனை அருகிலே கூப் பிட்டு, சுத்தியலைக் கொண்டு உளியைத் தட்டுவது போல ஒரு சமிக்ஞை செய்துவிட்டு, இமைகளை மூடினார். 

இந்தள குமாரன் தகப்பனாரின் அந்தக் கடைசி சமிக்ஞையையே, குருவின் மௌன வியாக்கியான மாகக் கொண்டான். உளியையும் சுத்தியலையும் கையிலே எடுத்துக்கொண்டு போய், திருப்பரங் குன்றத்துப் பாறைகளிலே குடியிருக்க ஆரம்பித்து விட்டான். 

ஆமாம்; முறையான பயிற்சி ஏதுமே இல்லாத இந்தள குமாரன், தன்னுடைய உள்ளத்தில் பொங்கி வந்த சங்கீத வெள்ளத்தை யெல்லாம் தடுத்து அணைகட்டி விட்டான். தகப்பனாருடைய அந்த சமிக்ஞையையே கண் முன்னால் நிறுத்திக் கொண்டு, பாறைகளைச் செதுக்கத் தொடங்கினான்! ஆனால், பாவம்; உருவம் என்று ஒன்றுமே உளியிலே கிட்டவில்லை: உடம்புதான் இளைத்தது. 

இந்தள குமாரன் உளியை – அந்த மகத்தான முயற்சியை கைவிடவில்லை. அநேக நாட்கள், வீட்டிற்குக்கூடத் திரும்புவதில்லை. காட்டிலே கிடைத்த கனிகள் சுனையிலே பெருகும் தண்ணீர்-இவற்றின் துணை கொண்டு, இரவு பகலாகப் பாறைகளோடு உளியும் சுத்தியலுமாகப் போராடிக் கொண்டிருந் தான். களைத்துப் போய் அவன் உட்கார்ந்துவிட் டால் மட்டும், அப்படியே அவனுடைய செவியில் நெடுநாளைத் தொந்தமான சங்கீதம் வட்டம் சுற்றும்! 

சில இரவுகளில், பாறைகளிலேயே படுத்துவிடு வான் இந்தள குமாரன். நடு நிசியின் போது, அவன் செவிகளில் ஏதோ தேவகானம் போன்ற இசை கேட்கும். எங்கிருந்தோ யாரோ யாழை மீட்டுவது போலவும், யாரோ அந்த யாழுக்கு இசையத் தெய்வகீதம் பொழிவது போலவும், எங்கோ தொலைவிலே தேவமாதர்கள் சலங்கை குலுங்க நடனமாடுவது போலவும் எல்லாம், அவன் காதில் கேட்கும்! உடனே, எழுந்து கண்களைத் துடைத்துக் கொள்வான் இந்தளன்! 

5

அன்று பௌர்ணமி. வானமும் பூமியும் பளிச் சென்றிருந்தன! திருப்பரங் குன்றத்துப் பாறைகள் எல்லாம், நிலவின் குளுமையில் நீராடிக் கொண் டிருந்தன! மரஞ்செடி கொடிகள் வெள்ளி இலைகளைக் கல கலத்தன! சந்திரன் என்ற தெய்வ சிற்பி, நிலவு என்ற ஒரு மாபெரும் வெள்ளி மலையைக் குடைந்து, அதில் வெள்ளியினாலேயே மரங்களும் செடிகொடி களும் நீரோடைகளுமே செதுக்கி ஓடவிட்டானோ என்னும்படி இருந்தது, அந்தக் காட்சி ! 

இந்தள குமாரன் குன்றையெல்லாம் தட்டிக் களைத்துப்போய், உளியும் சுத்தியலும் கையிலிருந்து சோர, பாறையிலேயே படுத்துவிட்டான்! அப் பொழுது, அவனுடைய செவிகளில் மீண்டும் அந்த இசை கேட்டது. எங்கிருந்தோ வரும் ஒரு தேவ கானம்! யாழின் ஏக்கம்! நரம்புகளின் துடிப்பு! பாதச் சலங்கையின் ஒலி! 

இது என்ன, திடீரென்று வானத்திலிருந்து குதித்து வந்தவர்கள் போல, இந்தள குமாரனுக்கு எதிரே ஏழு இளங் கன்னியர்கள்! அவர்கள் குதித்த வரிசையில் ‘சரிகமபதநி’ என்று ஏழு ஸ்வரங் கள் ஒலித்தன. அந்த ஸ்வரம் ஒவ்வொன்றும் அவர் களுடைய பாதச் சிலம்பிலிருந்தும் கை வளையல் களிலிருந்தும் வந்தது. அவன் அப்படியே மெய்ம் மறந்தான். 

“இந்தள குமாரரே, என்ன திகைத்துவிட்டீர்?” என்று கேட்டாள் முதலிலே குதித்த மங்கை! அவ ளுடைய சாயல் மயில்போல் இருந்தது! கூந்தலில் மௌவல் மலரின் மணம் ‘கம்’ என்று வந்தது.பால் மொழி என்பார்களே, அப்படி யிருந்தது அவளுடைய பேச்சு! 

குமாரன் அவளுடைய அழகிலே சொக்கிப் போனான். ஒன்றும் பேச வரவில்லை அவனுக்கு. 

“என்னை யாரென்று திகைக்கிறீரோ? என் பெயர் குரல். ‘ஸா’ என்று செல்லமாகக் கூப்பிடுவார்கள்.இதோ என் அருகில் முல்லை மலர் சூடி நிற்கிறாளே, அவள்தான் ‘ரி’ – பெயர் துத்தம்! பேசினால் தேனாக இருக்கும்.” 

இந்தள குமாரன் மெய்ம்மறந்து, பரவசமாகி அப்படியே மயங்கினான். மௌவல், முல்லை, கடம்பு, வஞ்சி,நெய்தல், பொன்னாவிரை. புன்னை என்று ஏழு வகையான மலர்களைச் சூடி நின்ற அந்த ஏழு கன்னியரும், ஏழு விதமான தோற்றத்தில் நின்றா லும் அவர்களுக்குள் ஒரு ஒற்றுமை இருந்தது. இவர்களில் யார் அதிக அழகி என்று சொல்ல முடியாதபடி,எழுவருமே ஒருசேர மனத்தை மயக் கினார்கள். குமாரனுடைய புத்தி பேதலித்தது! அது கண்டு ‘கலகல’ என்று ஒரு ஒலிக்கோவை! ‘ச ரிக மபதநி’ என்று ஒரு ஆரோகணம். அடுத்த வினாடி எழுவரும் இந்தள குமாரனைச் சுற்றி வட்டமாக ஆரோகணத்து நடனமாட ஆரம்பித்து விட்டார்கள்! 

ஆகா! என்ன அனுபவம் அது! அழகின் சுழலில், இன்னிசையின் சுழற்சியில், வாலிபத்தின் வளைப்பில், இந்தள குமாரன் தன்னை மறந்து கிறங் கினான்! தேவமாதர் நடனமாடும் சூழலில், இந்திரன் இன்பமாக வீற்றிருக்கிறான் என்றும், கோபியர்கள் வட்டத்தில் கிருஷ்ணன் ஆனந்த லாகிரியில் ஆழ்ந் திருக்கிறான் என்றும் சொல்கிறார்களே, அப்படி யிருந்தது இந்தள குமாரனுக்கு! அழகும், இளமை யும் இசையுமாகச் சேர்ந்து வழங்கிய அந்த இங்கித அழைப்பிலே சொக்கிப் போய் அவர்களோடு கை கோத்து ஆடலாம் என்று எழுந்தான் அவன்! அவனுடைய உள்ளத்தின் ஆழத்தில் இருந்து பொங்கிவந்த இசையை வெளியிட என்று, உதடுகள் துடிதுடித்தன! 

ஆனால் இதென்ன? வானத்தில்இருந்து இரண்டு கைகள் படர்ந்து வந்தன. ஒரு கை அவனை அமர்த் தியது. மற்றொரு கை உளியையும் சுத்தியலையும் நீட்டியது. தகப்பனாரின் கைகளா அவை? திமிறிக் கொண்டு எழுந்தான். ஆனால் பாடுவதற்கு உதடுகள் துடித்தனவே, தவிர வார்த்தை வரவில்லை. மங்கை யரை நோக்கி எழுந்தானே தவிர, கைகளை நீட்ட முடியவில்லை. இது கண்டு, ஏழு கன்னியரும் ஏக காலத்தில் ‘கலகல’ என்று சிரித்தார்கள். ‘சநிதபமகரி’ என்று அந்தச்சிரிப்பொலி அவரோகணித்தது. மறு விநாடி, ஏழு பெண்களும் துள்ளிக் குதித்து ஓடிவிட்டார்கள்! 

இந்தள குமாரன் பதறி விழித்தபோது, பாறை யின் மேலே நிலவு பூரண நகை புரிந்துகொண்டிருந் தது. அருகிலே சுனையின் தண்ணீர் ‘கலகல’ என்று சிரித்துக்கொண்டு ஓடியது. மரங்களிலே காற்று வேடிக்கையாகக் கைகொட்டி ‘ஓ’ என்று சிரித்தது. ஆனால் இவை யொன்றும் அவன் செவியில் கேட்க வில்லை. ஏழு கன்னியர்களும், தங்கள் பாதச்சிலம் பின் ஒலியையும் மீறிச் சிரித்தார்களே, அந்த ஸ்வரக் கோவை, கனவு உலகின் கோடியில் இருந்து, நினைவுக் காற்றிலே இழைந்து வந்துகொண்டிருந் தது! ஆத்திரமாக எழுந்தான். உளியையும் சுத்தி யலையும் எடுத்துப் பாறையிலே தட்டினான். என்ன ஆச்சரியம்! சற்று முன்பு அவனைச் சுற்றி ஏழு கன்னி யர்கள் நின்று நடனமாடிய இடத்தில்,இப்பொழுது புதிதாக ஒரு இசையொலி கேட்டது. அது சிலம்பின் ஒலியா? கை வளையல்களின் ஒலியா?  இல்லை! பாறையிலே ஏழு ஸ்வரங்கள் ஒலித்தன! கல்லிலே கானம் பிறந்தது! 

அவ்வளவுதான்: விறுவிறு என்று உளியைத் தட்டினான். பாறைகளை யெல்லாம் செதுக்கித் தள்ளினான்! கனவிலிருந்து சிரித்துக்கொண்டு ஓடிய இசைக் கன்னியர்களைக் கல்லிலே பிடித்து நிறுத்தி விட்டான் இந்தளகுமாரன்! 

6

நினைவின் ஒலி – அலைகளிலே மிதந்து சென்று: கொண்டிருந்த என் எண்ணங்களைக் கலைத்தது, ஆயிரக்கால் மண்டபத்து இசைத்தூண்களின் ஒலி. ஜலதரங்கம் போன்று வந்த அந்த இன்னிசையில் ஈடுபட்டு உள்ளே சென்று பார்த்தேன்.என்னுடைய சங்கீத நண்பர் மண்டபத்தின் தூண் ஒன்றிலிருந்த ரதியின் சிலையை, சிறு சுத்தியல் கொண்டு மெது வாகத் தட்டி, ஸ்வரக் கோவைகளை இசைத்துக் கொண்டிருந்தார்! என்னைக் கண்டதும் தட்டுவதை நிறுத்திவிட்டு, “இந்த அதிசயத்தைப் பாருங்கள்!” என்று சொல்லி அப்படியே இன்னொரு கற்சிலையாக நின்றார். 

உண்மையில், ஆனந்த வியப்பிலே சொக்கிய எங்கள் கண்ணுக்கு முன்னால் நின்றது, ரதியின் சிலையா? இல்லை! ‘கேளாத கானம்’ என்ற பாடலுக்குப்பொருளாகக் கல்லுக்குள்ளே காட்சி தந்தது இசை! 

– கேளாத கானம் முதலிய கதைகள், முதற் பதிப்பு: பெப்ருவரி 1955, பாரி நிலையம், சென்னை.

மீ.ப.சோமு மீ. ப. சோமசுந்தரம் (Mi. Pa. Somasundaram; 17 சூன் 1921 – 15 சனவரி 1999) ஒரு தமிழ் எழுத்தாளர். மீ. ப. சோமு என்பது இவரது புனைபெயர். இவர் பத்திரிக்கை, கவிதை, புதினம், சிறுகதை, கட்டுரை, இசை போன்ற பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர். 1962ல் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர். அகில இந்திய வானொலியில் பணியாற்றியவர். வாழ்க்கைக் குறிப்பு சோமு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *