கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 7, 2025
பார்வையிட்டோர்: 302 
 
 

(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முற்றிலும் அந்நியமான அந்தச் சூழலில் தனித்து நின்றிருந்தாள் ராசிதா. தனித்துத் தெரிவதற்குக் காரணம் இருந்தது. ஆம். சிங்கள மொழி பேசுகின்ற, பௌத்த கலாசாரத்தைப் பிரதிபலிக்கின்ற, அல்லது அதைவிட ஒருபடி மேலே போய் மேனாட்டு நாகரிகப் பூச்சை அப்படியே அள்ளிக்கொண்ட அந்தக் கூட்டத்தின் நடுவில் கறுப்பு நிற ஃபர்தாவினால் தலையையும், முகத்தின் பெரும் பகுதியையும் மறைத்து, கைகள் முழுவதும் மறையும் விதமாகச் சட்டையும், சேலையும் அணிந்திருந்தாள் அவள். 

அனுராதபுரத்தில் ஆங்கில மொழியைக் கற்பிக்கப் போகின்ற ஆசிரிய மாணவர்களைப் பயிற்றுவிப்பதற்காக உருவான மத்திய நிலையம் அது. DELIC என்று அழைக்கப் படும் அந்த மாலை நேரக்கல்லூரியில் பொலனறுவையிலிருந்து தெரிவு செய்யப்பட்டு வந்த ஒரே ஒரு முஸ்லிம் யுவதியே ராசிதா. 

சரளமாகச் சிங்களம் பேசத்தெரியாத, சிங்களம் பேசுகின்ற கூட்டத்தைக் கண்டாலே உள்ளூர நடுங்குகின்ற இளம்பெண் அவள். முழுக்க முழுக்க விவசாயத்தையே நம்பியிருக்கும் ஒரு குடும்பத்திலிருந்து வந்தவள். தந்தையுடன் வந்து சேர்ந்தபோது இருந்த தைரியம், இப்போது கூட்டத்தில் கலந்து விடப்பட்டபோது முற்றிலும் குறைந்து போயிருந்தது. 

ஆசிரிய மாணவர்களுக்குரிய ஒழுக்க விதிமுறை களைத் தலைமை ஆசிரியர் விளக்கிக் கொண்டிருந்தார். எல்லோரும் அங்கு கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விதி ஒன்றுண்டு. அதுதான், எந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருந் தாலும் அவர்கள் ஆங்கிலத்தையே பேச வேண்டும் என்பது. அவரும் முற்றிலும் ஆங்கிலத்திலேயே உரையாற்றிக் கொண்டிருந்தார். 

கூட்டம் முடிவுற்றதும் அனைவரும் தத்தமது வகுப்புகளுக்குச் செல்லத் தொடங்கினர். படிகளில் மேலே ஏறிச்செல்லும்போதே, புதிதாகக் கட்டிய சேலை சரியாகக் கட்டப்படாததால் கால் தடுக்கி இடறினாள் ராசிதா. ஒருவாறு சமாளித்துக்கொண்டு போய்ச் சேர்ந்தபோது, வகுப்பில் மாணவர்கள் அனைவரும் சென்று அமர்ந்திருந்தனர். 

குனிந்த தலை நிமிராமலே நேராகக் கடைசி வரிசைக்குச் சென்று மேசையில் புத்தகங்களை வைத்தாள். உட்காருவதற்கு ஒரு கதிரைகூட இல்லை. அவள் மலங்க மலங்க விழிக்கத் தெடங்க, பக்கத்திலிருந்து ஓர் இனிய பெண்குரல் ஆங்கிலத்தில் சொல்லிற்று. 

“அடுத்த வகுப்புக்குப் போய் கதிரை எடுத்து வாருங்கள்…”

ராசிதா பக்கவாட்டு மேசையைத் திரும்பிப் பார்த்தாள். வெள்ளை வெளேரென்று, உயரமான, அழகிய, இளம் பெண்ணொருத்தி புன்முறுவலுடன் அமர்ந்திருந்தாள். அவளுடன் மெல்லிதாய்ப் புன்னகைத்துவிட்டு மெல்ல மெல்ல நடந்து சென்று ஒரு கதிரையை எடுத்து வந்தாள். 

பிற்பகல் இரண்டு மணிக்குத் தொடங்கி மாலை ஐந்து மணிவரை விரிவுரைகள் நடைபெற்றன. ஒரு மணித்தியாலம் கழிவது ஒரு வருடம் கழிவது போலிருந்தது ராசிதாவுக்கு. ஐந்து மணியானதும் விரைவாகக் கையெழுத்திட்டுவிட்டு, வெளியே காத்து நின்றிருந்த தந்தையிடம் ஓட்டமும் நடையுமாகச் சென்றாள். 

புதிய பஸ் நிலையத்தை நோக்கி இருவரும் நடக்கத் தொடங்கினார்கள். சிறிது தூரம் சென்றதும் பின்னால் தற்செயலாகத் திரும்பியபோது அந்தப்பெண் வந்து கொண்டிருந்தாள். அவள் வந்து சேரும்வரை தந்தையுடன் தாமதித்து நின்று தானாகவே அறிமுகம் செய்து கொண்டாள். 

“நான் ராசிதா. நீங்கள்..?” 

“நான் ஸ்வர்ணா…” 

பளீரென்று வெண்முத்துப் பற்கள் ஒளிவீச அவள் பேசினாள். மயிலும், குயிலும் கலந்த ஒரு வடிவமோ இவள் என்று ஒரு திகைப்பு உண்டாயிற்று ராசிதாவுக்கு. தான் அவ்வளவு அழகானவள் இல்லை என்ற ஞாபகமும், தவிப்பும் உடன் எழுந்து ஹிம்ஸை செய்தாலும் சமாளித்துக் கொண்டாள். 

“நான் பொலனறுவையிலிருந்து வருகிறேன். புதிய பஸ் நிலையத்திற்குப் போகிறேன். நீங்கள்..?” 

“நானும் அந்தப் பக்கம்தான்..” 

தந்தை சற்று முன்னால் செல்ல, இருவரும் பேசிக் கொண்டே நடந்தனர். இருவருக்கும் தாய்மொழிப் பிரச்சினை தடையாக இருந்தபோதும் இரண்டாவது மொழியாகிய ஆங்கிலம் கை கொடுத்தது. அந்தப்பெண் கலகலப்பாகப் பேசினாள். 

“எனது சொந்த ஊர் குளியாப்பிட்டிய. எனது பெற்றோர் இங்கே அரசாங்க உத்தியோகம் செய்கின்றவர்கள். ஆவர்களுடன் வாடகை வீட்டில் தங்கியிருக்கிறேன்.” 

சிறிது தூரம் மௌனமாக நடந்தனர். மீண்டும் அவளே பேசினாள். 

“நீங்கள் ஏன் இவ்வாறு உடையணிந்திருக்கிறீர்கள்?”

“இப்படித்தான் பெண்கள் உடுக்கவேண்டுமென எமது மார்க்கம் சொல்கிறது…” 

”உள்ளே வேர்த்துக் கொட்டுமே….” 

“அதையெல்லாம் பார்க்க முடியுமா? நாங்கள் சொர்க்கம், நரகம் பற்றி நம்புபவர்கள். மறுமையில் நமது இந்த உடைக்கெல்லாம் நமக்கு நற்கூலி வழங்கப்படும்…” 

“இப்படி அணிந்து நடமாடுவது கஷ்டமாக இல்லையா?” 

“இல்லையே. பெண்களுக்கு அதியுயர் பாதுகாப்பு வழங்குவதற்காகவே இந்த உடை கட்டாயமாக்கப்பட்டது. இதை அணிந்துகொண்டு ஆண்கள் மத்தியில் நாம் பயமின்றிப் போய் வரலாம்…” 

புன்னகை மாறாமலே கேட்டுக் கொண்டிருந்துவிட்டு ஸ்வர்ணா சொன்னாள். 

“பொதுவாக உங்களைப் போன்ற முஸ்லிம் பெண்கள் எங்களுடன் நெருங்கிப் பழகுவதில்லை. நீங்கள் வித்தியாசமாக இருக்கிறீர்கள்…” 

ராசிதாவும் இதுவரை அந்நியப் பெண்கள் யாருடனும் நெருங்கிப் பழகியவளல்லள். எனினும், ஸ்வர்ணாவை அவளுக்கு முதல் பார்வையிலேயே பிடித்துப் போயிருந்தது. பெளத்த மதம், சிங்களப் பெண்கள் பற்றியெல்லாம் அவளுக்குள் நிறைய அசூயைகள் இருந்தன. எனினும் மறைத்துக்கொண்டு கூறினாள். 

“ஒரு முஸ்லிம் பிறர்மீது எப்போதும் நல்லெண்ணம் கொண்டிருக்க வேண்டும். அதிகமாக வணக்க வழிபாடுகள் பற்றிப் பேசுகின்ற எங்கள் மார்க்கத்தில், அவற்றை அதிகம் செய்யாவிட்டாலும்கூட பிறர்மீது நல்லெண்ணம் கொண்ட ஒரு முஸ்லிம் சுவர்க்கம் செல்ல வாய்ப்புண்டு என்று எங்கள் நபிகளார் கூறியுள்ளார்கள்…” 

“ஓ… அப்படியா….!” ஸ்வர்ணா சிலாகித்தாள். 

இப்படித்தான் ஆரம்பிக்கலாயிற்று அவர்கள் நட்பு. 

ஒருநாள் முற்பகல் ஸ்வர்ணா ராசிதாவின் விட்டுக்குச் சென்றிருந்தாள். பொலனறுவையில், ஒரு குக்கிராமத்தில் மிகச் சாதாரணமான ஒரு வீடு. வீட்டின் பின்னால் பெரியதொரு காய் கறித் தோட்டமும், விசாலமான விவசாயக் கிணறும் இருந்தன. 

ராசிதாவின் பெற்றோர் முகம் மலர அவளை வரவேற்றனர். குளிர்பானம் அருந்தியபின் ராசிதாவும், ஸ்வர்ணாவும் தோட்டத் திற்குச் சென்று மரநிழலில் சிறிதுநேரம் அமர்ந்திருந்தனர். 

“ஒரு முஸ்லிம் வீட்டுக்கு விஜயம் செய்வது இதுதான் முதல் தடைவ…..” ஸ்வர்ணா மகிழ்ச்சியுடன் சிரித்தாள். 

“எனக்கும் நீங்கள் வந்தது ரொம்பச் சந்தோஷம். இன்னும் இரண்டு மாதங்களில் பரீட்சை முடிந்துவிட்டால் பிறகு எப்படிச் சந்திக்கப் போகிறோமோ?” 

“அதுமட்டுமா? எந்த மூலையில் எந்த ஸ்கூலுக்குத் தூக்கிப் போடுவார்களோ?” 

சிறிதுநேரம் அதுபற்றிய சிந்தனையில் இருவரும் லயித்திருந்தனர். 

“ராசிதா, உங்கள் குடும்பத்தில் யார் இந்தத் தோட்டத்தைக் கவனிக்கிறார்கள்..?” 

ஆங்காங்கே மாங்கனிகளும், கொய்யாப் பழங்களும் நிறைந்திருந்த மரங்களைச் சுட்டிக்காட்டி ஸ்வர்ணா கேட்டாள். 

“வாப்பாவும் நானாவும்தான். இதுதவிர குளத்திற்குப் பக்கத்தில் வயலும் உண்டு. போய் வருவோமா?” 

“இப்பாது முடியாது. நான் சீக்கிரம் போகணும்” 

இருவரும் எழுந்து தோட்டத்தைச் சுற்றிப் பார்த்து விட்டு வீட்டினுள் வந்து சேர்ந்தபோது மேசையில் மத்தியான உணவு தயாராக இருந்தது. மின்சாரம் போன்று விரைவாக ஓடியாடி வேலை செய்கின்ற ராசிதாவின் தாயாருக்கு ஏறத்தாழ நாற்பது வயதுதானிருக்கும் என்று ஸ்வர்ணா அனுமானித்தாள். அவள் எப்படித்தான் வேலை செய்கின்ற போதிலும் அவளது தலையிலிருந்து முக்காடு கழன்று விழவேயில்லை என்பதையும் அவள் ஆச்சர்யத்துடன் அவதானித்தாள். அதுமட்டுமல்ல, ராசிதாகூடத் தனது மார்பி லிருந்து தாவணி நழுவிடா வண்ணம் இழுத்து இழுத்து மூடிக் கொள்வதையும் அவள் அவதானிக்கத் தவறவில்லை. 

ராசிதாவின் தாய் எதோ சொல்ல அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொன்னாள் ராசிதா. 

“இப்போ வாப்பா சாப்பிடும் நேரம். அவர் சாப்பிட்டபின் நாம் சாப்பிடலாம். வா உள்ளே போவோம்..” 

அவர்கள் இருவரும் உள்ளே செல்ல, ராசிதாவின் தந்தை வந்து சாப்பிட அமர்ந்தார். அவரது முகத்தில் தனது மகள் ஆங்கிலம் பேசுவது பற்றிய பெருமிதம் மிளிர்ந்தது. 

“நீங்கள் யாருமே முதலில் சாப்பிடுவதில்லையா?’ 

“எங்கள் வீட்டு வழக்கம் அப்படி. வாப்பாவுக்குத்தான் முதலில் சாப்பாடு வைப்பார் உம்மா. பிறகுதான் மற்றோருக்கு.” 

அவள் சொல்ல, வார இறுதித் தினங்களில் மாலை வேளைகளில், ஒன்றாக அமர்ந்து மதுபானம் அருந்திவிட்டு, இரவிரவாகச் சண்டையிட்டுக் கொள்கின்ற தனது பெற்றோரை எண்ணிப் பார்த்தாள் ஸ்வர்ணா. 

தனது அறையிலுள்ள ஒவ்வொரு பொருளையும் அணுஅணுவாக ஆராய்ந்து அவள் ரசிப்பதை மௌனமாக அவதானித்துக்கொண்டிருந்த ராசிதா கேட்டாள். 

“நீங்கள் மலைநாட்டு நடனம் ஆடுவீர்களா?” 

“ஆமாம். உங்களுக்கெப்படித் தெரியும்…? ” 

“உங்களது ஒவ்வொரு அடியிலும் கண்டிய நடன அசைவுகள் வருகின்றன. ப்ளீஸ், எனக்காக ஒரு நடனம்…” 

மறுக்காமல் ஆடிக்காட்டினாள் ஸ்வர்ணா. உள்ளே யிருந்து ராசிதாவின் தாயார் சாப்பிட அழைக்க, இருவரும் எழுந்து சென்றனர். 

ராசிதாவின் தமையன் வயலிலிருந்து வந்து கொண்டிருந்தான். ராசிதா அவனை அறிமுகம் செய்து வைக்க, அவன் நாணம் கலந்த மெல்லியதோர் புன்னகை யுடன் அப்பால் சென்றான். உணவை ரசித்துச் சாப்பிட்டபடியே ஸ்வர்ணா சொன்னாள். 

“உங்கள் எல்லோரிடமும் மத நம்பிக்கை அதிகமாகக் காணப்படும் அதே நேரம், ஏதோ ஒரு மென்மையுணர்ச்சியும் இழையோடுகின்றதே..” 

“உண்மைதான். எங்கள் மார்க்கத்தில் எப்போதும் மென்மைக்கு அதிக இடமுண்டு. உங்களில் யார் அதிகம் மென்மையைக் கையாளுகின்றாரோ, அவர் அதிகம் நற்கருமங்களைச் செய்துவிட்டார் என்று எமது இறைத்தூதர் கூறியுள்ளார்கள்…” 

“ஓ…” என்று வியந்த வண்ணம் சாப்பிட்டு முடித்தாள் ஸ்வர்ணா. 

பொழுது சாய்ந்தபின்னர் அவள் புறப்படத் தயா ரானாள். தோட்டத்திலே பறித்த புதிய கனி வர்க்கங்களைச் சிறிய பையொன்றிலே இட்டு அவளிடம் வழங்கினாள் ராசிதாவின் தாய். ராசிதாவும், அவளது தமையனும் அருகி லிருந்த பஸ் நிலையத்திற்கு அவளை அழைத்துச் சென்று பஸ் வரும்வரை கூடவே நின்று அவளை வழியனுப்பி வைத்தனர். விடை பெற்றுச் செல்லும்போது ஸ்வர்ணாவின் உள்ளத்தில் புதியதோர் மகிழ்ச்சி நிறைந்திருந்தது. 

அவர்களது ஒருவருட கற்கைநெறியும், பரீட்சையும் நடைபெற்று முடிந்துவிட்டன. இருவருக்கும் தொலைதூரக் கிராமப்புறப் பாடசாலைகளில் நியமனங்களும் கிடைத்தன. தொழிலின் தன்மை காரணமாகவும், வேறு பல வேலைப் பளுக்கள் காரணமாகவும் இருவரும் அதிகம் சந்தித்துக் கொள்ளவில்லை. பேசவும் முடியவில்லை. இருந்தாற் போலிருந்து கடிதத்தில் அல்லது தொலைபேசியில் பேசிக்கொள்வது மட்டுமே! 

இடையில் ஸ்வர்ணா திருமணம் செய்துகொண்டாள். தான் காதலித்த எட்னா சொக்லேட் கம்பனி விற்பனைப் பிதிநிதியையே பெற்றோரது ஆசியுடன் மணமுடித்துக் கொண்டாள். திருமணத் திற்குக்கூட ராசிதா வராதது குறித்து ஸ்வர்ணா மிகுந்த கவலை கொண்டாள். 

ஒருநாள் மாலை. அநராதபுரம் பொது நூலகத்திற்கு சென்றுவிட்டு முன்றலில் தனது கணவருடன் கைகோர்த்தபடி வந்து கொண்டிருந்தாள் ஸ்வர்ணா. எதிரே வீதிக்கு அடுத்த கோடியில், பஸ் நிலையத்தில் ராசிதா நின்றிருப்பதைக் கவனித்தாள். அவளது தந்தை எங்கோ கடைக்குச் செல்ல, அவர் போன திக்கையே பார்த்துக் கொண்டு ராசிதா நின்றிருந்தாள். 

வழக்கமான அவளது உடையைக் கொண்டுதான் ஸ்வர்ணா அவளைக் கண்டுபிடித்தாள். வேகமாக அவளிடம் சென்றாள். 

“அசோக அங்கே பாருங்கள் ராசிதா…” 

“வா, போய்ப் பேசலாம்…” 

இருவரும் வந்து சேர்வதற்குள் அசோகவின் பால்ய நண்பன் வழிமறிக்க, அசோக அவளிடம் அனுமதி பெற்றுக்கொண்டு நண்பனுடன் அப்பால் நகர்ந்தான். 

ஸ்வர்ணா ஓட்டமும், நடையுமாகச் சென்று ராசிதாவின் முன்னால் நின்றாள். தந்தை போன திக்கையே பார்த்துக் கொண்டிருந்த ராசிதா தற்செயலாகத் திரும்ப, அவள் முன்னால் மலர்ந்த முகத்துடன் ஸ்வர்ணா நின்றிருந்தாள். ராசிதா சடாரென ஒரு நொடிப்பு நொடித்துவிட்டு வெறுப்புடன் அப்பால் திரும்பிக் கொண்டாள். 

ஸ்வர்ணாவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. பொங்கி வந்த பால் பானையில் ஒரு துளி நீர் பட்டு விட்டதைப்போல அவளது உற்சாகம் யாவும் வடிந்து போயின. முகம் கறுத்து அசடு வழியத் தொடங்கிற்று. 

ராசிதா ஏன் அப்படி ஒரு வெட்டு வெட்டினாள்? அவளால் எதையும் அனுமானிக்க முடியவில்லை. 

திடீரென இவளுக்கு என்ன வந்தது? இவ்வளவு காலமும் ஒரு கல்மிஷமும் இன்றிப் பழகினாளே… 

என்னிடத்தில் ஏதாவது கெட்ட குணம் பிடிக்கவில்லையோ? பிடிக்காவிட்டால் அதை நேரிடையாக அல்லது கடிதம் மூலம் சொல்லியிருக்கலாமே… அப்படி எதுவுமே இதுவரை தெரியவில்லையே! 

தனக்கு முதுகைக் காட்டிக் கொண்டிருக்கும் தனது நண்பியைப் பார்த்து உதட்டைக் கடித்தபடி யோசித்தாள் ஸ்வர்ணா. 

ஒருகணம், ராசிதாவின் தோளைத் தொட்டுத் திருப்பி முகம் பார்த்துப் பேச வேண்டும் போலிருந்தது. மறுகணம் அந்த எண்ணத்தை வலிந்து மாற்றிக் கொண்டாள். 

தனது மார்க்கம் பற்றியும், அதன் நல்லியல்புகள் பற்றியும் வாய்க்கு வாய் பேசுகின்ற ராசிதாவா இவள்? 

“தனது சகோதரனைப் பார்த்து புன்னகைப்பதும் தர்மமே ஆகும்” என்ற நபிகளாரது கூற்றை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்கின்ற ராசிதாவா இவள்? 

தனது மார்க்கம் பற்றி உயர்வாக, வாய் கிழிய இத்தனை நாள் பேசிய இவளுக்கே தனது மார்க்கத்தைப் பின்பற்றி நடக்கத் தெரியாவிட்டால் நான் என்ன செய்ய முடியும்? 

எதையுமே சுட்டிக் காட்டத் தேவையற்ற, அவ்வளவு நூதனமான இந்தப் பெண்ணுக்கு நான் எதை சுட்டிக் காட்டுவது? எப்படிச் சுட்டிக் காட்டுவது? 

எந்தவொரு நல்ல செய்கைக்கும், நல்லெண்ணத்திற்கும் இறைவனிடம் நற்கூலியை யாசிக்கின்ற இவளுக்கே தனது மார்க்கம் கூறியபடி நடக்க முடியவில்லையெனில், நான் அது பற்றிக் கவலைப்பட்டு என்ன ஆகப்போகிறது? 

சிந்தித்தபடியே திரும்பி நடந்தாள் ஸ்வர்ணா. 

– மல்லிகை 41வது ஆண்டுமலர், ஜனவரி 2006.

– முடிவில் தொடங்கும் கதைகள் (சிறுகதைகள்), முதற்பதிப்பு: டிசம்பர் 2012, நூலாசிரியர் வெளியீடு, கெகிறாவ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *