கோடரிக் காம்புகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 7, 2025
பார்வையிட்டோர்: 218 
 
 

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வரவுப் புத்தகத்தில் கையெழுத்திட்டுவிட்டுத் திரும்பினேன். திரு.பெர்னாண்டோ நின்றிருந்தார் மலர்ச்சியுடன். 

”குட்மோனிங் sir”

”குட்மோனிங்” 

நான் வெளியேறத் திரும்புகையில் இனிய குரலில் ஆங்கிலத்தில் சொன்னார். 

“மிஸ் ஹினாயா. நான் உங்களுடன் கொஞ்சம் தனியே பேசணும்.” 

“யெஸ் sir”

“இங்கேயில்லை. மாலை ஆறுமணிக்கு என் வீட்டுக்கு வரமுடியுமா?”

தலையைக் குனிந்து கொண்டேன். ஒரு வினாடி மௌனத்தின்பின் “ஓகே” என்று சொல்லி காரியாலயத்தை விட்டும் வெளியேறினேன். 

உளவியல் விரிவுரைகள் தொடங்கிவிட்டிருந்தன. இன்று செவ்வாய்க்கிழமை. ஏறத்தாழ அனைத்து ஆசிரிய மாணவர்களும் சமுகமளித்திருந்தனர். விரிவுரை மண்டபம் நிரம்பி வழிந்தது. பின்புறமாக மூலையில் ஒரு ஆசனத்தில் அமர்ந்து கொண்டேன். 

ஏதும் புரியாமலும், விளங்காமலும் இருள் சூழ்ந்தது போன்ற பிரமை. தலை கனத்தது. தண்ணீர் போத்தலைத் திறந்து மடமடவென்று தண்ணீரைக் குடித்தேன். 

பெர்னாண்டோ sir பெண்களைக் கவர்ந்திழுக்கின்ற எந்தவிதமான சாமுத்திரிகா லட்சணமும் கொண்டவர் அல்லர். கரிய நிறம். நெடுநெடுவென்ற உயரம். சுருள் கேசம். கண்கள் மட்டும் உயிர்த்துடிப்புடன் நாலாபுறமும் சுழலும். அது ஒன்றே அவரில் என்னைக் கவர்ந்த அம்சம். இவ்வளவுக்கும் மத்தியில் அவரது ஆங்கில இலக்கியப் புலமை அனைவராலும் மெச்சப்படும் ஒன்று. மாலை வேளைகளில் அவரது இலக்கிய வகுப்புகளுக்குச் சென்று தம்மையே பறிகொடுத்துத் திரும்பிய எத்தனையோ ஆசிரிய மாணவிகளின் கதைகளை முன்னம் கேள்விப்பட்டிருக்கிறேன். 

“ஏனோ தெரியல்ல. அவர் கூப்பிட்டால் மறுக்க முடியாமல் இருக்கு. அப்படி ஒரு கவர்ச்சி அவரிடம்…!” என்று மாணவிகள் அவரைப்பற்றி அடிக்கடி பேசிக்கொள்வதுண்டு. அந்த பெர்னாண்டோ sir இப்போ என்னை அழைப்பதா? 

எங்காவது தலையைச் சாய்த்து சிறிது தூங்கணும் போலிருந்தது. விடியற்காலையில் ஊரிலிருந்து புறப்பட்ட அசதி வேறு. எழுந்து வெளியே நடந்தேன். 

இரண்டு மாதங்களுக்கு முன்னால் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியே அதிரும்படியாக அந்தச் சம்பவம்! மாலை விரிவுரையின்போது திடீரென இடைநடுவில் எழுந்து பேராதனை ரயில் நிலையத்துக்குச் சென்று ஓடும் ரயிலின் முன்னால் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட நில்மினி… அவள்கூட காதல் தோல்வி காரணமாகத்தான் தற்கொலை செய்துகொண்டதாக பின்னர் தெரிய வந்தது. அவளது மரணத்தால் பெனிதெனிய மட்டுமல்ல முழு பேராதனையுமே அதிர்ந்து நின்றது. 

எமது மாதாந்த கல்லூரி சஞ்சிகையின் அடுத்த இதழில் பெர்னாண்டோ sir ஒரு கவிதை எழுதியிருந்தார். “The Feet” என்பது தலைப்பு. 

முழு உடம்புமே சிதைந்து போனாலும், தண்ட வாளத்தின் இடுக்கில் சிக்கியதால் அதிர்ஷ்டவசமாய் தப்பிய நில்மினியின் நகப்பூச்சு மின்னும் கால் பாதங்களை வர்ணித்து அவர் எழுதிய அக்கவிதை கல்லூரியில் பலத்த சலசலப்பை ஏற்படுத்தியது. மாணவர்கள் குசுகுசுவென்று பேசிக் கொண்டார்கள். 

எமது டோமை அடைந்து வராண்டாவில் நடந்து மாடிப்படிகளில் ஏறி எனது அறையை வந்தடைந்தேன். கதவைத் திறந்து ஹேன்ட் பேக்கை மேசைமீது விசிறி எறிந்துவிட்டு பாத்ரூமுக்குச் சென்று குளிர்ந்த நீரில் முகம் அலம்பினேன். சுகமாக இருந்தது. 

டீ குடிக்கணும் போலிருந்தது. மண்ணெய் அடுப்பை எரித்து டீ தயாரித்துக் கொண்டேன். கட்டிலில் அமர்ந்து டீயை உறிஞ்சத் தொடங்கினேன். மீண்டும் மனது அதே பாதையில் தறிகெட்டு ஓடத் தொடங்கியது. 

ஆறுமாதங்களுக்கு முன்னால் ரயிலின் முன்னால் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட ப்ரியாதான் இந்த சங்கிலித் தொடரை முதலில் ஆரம்பித்து வைத்தவள். அவள் நேரடியாகவே ஒரு கடிதத்தில் தன் சாவுக்குக் காரணம் தனது காதலன் தன்னை ஏமாற்றியமைதான் என்று குறிப்பிட்டிருந்தாள். பின்னர் நில்மினி….! இப்படி எத்தனையோ பெண்கள்!! கல்விக் காக இந்தக் கல்லூரியை நாடிவந்து காதலில் தம்மைப் பறிகொடுத்து, விரக்தியின் விளிம்பில் உயிரைப் பணயம் வைத்த எத்தனை பெண்கள்! இவர்கள் அறியாமையில் இருப்பவர்கள் அல்லர். அறிந்தும் அறியாதவர்கள் என்றுதான் எண்ணத் தோன்றிற்று. 

இந்த இரண்டு தற்கொலைகளும் காரணமாக முழு பேராதனையுமே எமது ஆங்கில ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியை ஒரு மாதிரியாகத்தான் பார்த்தது. இதைப் புரிந்துகொண்ட அதிபர் திருமதி நாணயக்கார பல கடுமை யான செயல்திட்டங்களை வகுத்தார். “காதல் … தோல்வி… தற்கொலை… இவை ஒருக்காலும் இனி இந்தக் கல்லூரியில் நிகழக்கூடாது” என்று அவர் மாணவர் மத்தியில் அடித்துப் பேசியபோது சில மாணவிகளுக்குக் கசப்பாகத்தான் இருந்தது. எனினும், பலர் அவரது திட்டங்களை வரவேற்று ஆதரவளித்தனர். 

மேடம் நாணயக்கார ஒரு பெண்ணீயவாதி. எங்கே பெண்களுக்கு ஹிம்ஸை ஏற்பட்டாலுமே தயங்காமல் குரல் கொடுக்கக் கூடியவர். கண்டிப்பானவர். அவரிடம் சொன்னால் என்ன? 

கையிலிருந்த தேநீர் ஆறிவிட்டிருந்தது. மனம் இன்னுமே கொதித்துக் கொண்டிருந்தது. தேநீரை ஒரே மூச்சில் குடித்து முடித்தேன். உடைமாற்றிக்கொண்டு ‘அப்பாடா’ என்று கட்டிலில் சாய்ந்துகொண்டேன். கண்கள் தாமாகவே இறுக மூடிக் கொண்டன. 

இரவுச் சாப்பாட்டின் பின்னர் வெளிமுற்றத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். தூரத்தே ஆண் மாணவர் விடுதி மங்கிய ஒளியுடன் தெரிந்தது. திடுமென காலையில் பெரி sir உடன் நடந்த உரையாடல் ஞாபகம் வர, விளையாட்டுப்போல எல்லோரிடமும் கூறினேன். 

“அடடா…இப்போ உனக்கும் வலை வீசிட்டாரா?” மாணவிகள் கேலி செய்தனர். 

“ஏய் ஹினாயா…அப்புறம் உன் finance க்கு என்னடி சொல்லப் போகிறாய்….?” 

“எங்களைப்போல உனக்கு தெவனி கமன இல்லைத் தானே… அதனால் ஒரு பிரச்சினையும் இல்லை… எங்களைப் போல பயப்படவும் தேவையில்லை…” 

அவர்களது கிண்டலில் நானும் என்னை மறந்து சிரிக்கத் தொடங்கினேன். எல்லாப் பெண்களும் கலகலத்து உரத்துச் சிரிக்க…. ஒருத்தி மட்டும் அழத்தொடங்கினாள்… அவள் தம்மிகா! 

இறுதியாண்டுத் தேர்வு நெருங்கி விட்டது. நான் திரு. பெர்னாண்டோவின் வேண்டுகோளை முற்றாக மறந்துபோய் படிப்பில் மூழ்கிவிட்டிருந்தேன். எப்போதும் அவரைத் தனியே எதிர்கொள்வதைத் தவிர்த்தேன். அவ்வப்போது என்னைக் கடந்து செல்ல நேர்கையில் எல்லாம் அவர் என்னை முறைத்துப் பார்ப்பதை அவதானிக்கத் தவறவில்லை. இன்னும் கொஞ்ச நாள்தானே! பரீட்சை முடிந்ததும் ஊரோடு போய்விடலாம் என்ற தைரியம். எதையும் கண்டு கொள்ளவில்லை. 

கதவு லேசாகத் தட்டப்பட்டது. நள்ளிரவு. அனேகமாக யாவரும் தூங்கிவிட்டிருந்தனர். நான் மட்டும் சக்தி ரேடியோவில் பாடல் கேட்டபடி பழைய கொப்பியொன்றைப் புரட்டிக் கொண்டிருந்தேன். 

கதவைத் திறந்தபோது வீங்கிச் சிவந்த கண்களுடன் தம்மிகா!

“என்ன தம்மிகா இந்தப் பக்கம்…?” 

பொதுவாக கல்லூரியில் ஆங்கிலத்தில்தான் பேசுவது வழக்கம். அவசரமான வேளைகளில் அச்சொட்டாக உணர்ச்சி களை வெளிப்படுத்துவதற்கு தாய்மொழிதான் கைகொடுப்ப துண்டு. எனக்கு சிங்களம் தாய்மொழிக்கு நிகராகிவிட்டிருந்தது இங்கே. 

எமது டோமின் கடைசி அறையில் இருப்பவள் தம்மிகா. நான் முதல் அறையில். அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் வாய்ப்புகள் குறைவு. 

அன்றைய அவளது அழுகைக்குக் காரணம் என்ன என்பதை காற்று வாக்கில் அறிந்திருந்தேன். எனினும், அதுபற்றி நான் அலட்டிக்கொள்ளவில்லை. காதலும், தோல்வியும், தற்கொலையும் இங்கு சகஜம்தானே! 

அவள் பதில்சொல்லாது என் தோளில் சாய்ந்து விம்மத் தொடங்கினாள். எனக்கு எரிச்சலாக இருந்தது. இந்த நடுநிசியில் என்ன தொல்லை இது? 

கதவை மூடித் தாழிட்டுவிட்டு அவளை அணைத்த வாறே அழைத்து வந்து கட்டிலில் உட்கார வைத்தேன். 

“சொல்லு சீக்கிரம். நான் நிறைய படிக்கணும்…” 

“உன்னைத்தவிர எனக்கு உதவிசெய்ய யாரும் இல்லை ஹினாயா…” 

“என்ன உதவி? சீக்கிரம் சொல்லு…” 

“நான் இப்போ நாலு மாச கர்ப்பம். பெரி sir தான் காரணம்.” சப்தநாடியும் ஒடுங்கிப்போக தீனமாக அவளைப் பார்த்தேன். என்ன இந்தப் பெண்கள்…? ஆட்படுவதற்கு எந்தத் தகுதியும், ஆளுமையும் இல்லாத ஒரு மனிதனிடம் வரிசையாகத் தோற்றுப் போகிறார்களே… 

இவளுக்குப் பைத்தியமா? 

குனிந்து அழுதுகொண்டிருந்தவளது முகத்தை நிமிர்த்திக் கடுமையான குரலில் கேட்டேன். 

“இதையெல்லாம் ஏன் என்னிடம் சொல்கிறாய்? நான் படிக்கணும். பரீட்சைக்கு இன்னும் ஒரு வாரம்கூட இல்லை. உனக்குத் தெரியாதா…?: 

அவள் சடாரென்று கட்டிலிலிருந்து எழுந்து கீழே உட்கார்ந்து என் கால்களைக் கட்டிக்கொண்டாள். 

“நீதான் நான் நம்பத்தகுந்த ஒரு ஆள்… உன்னிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டால் நான் நிம்மதியாகச் சாவேன்….” 

என்னையறியாமலேயே அவள் கன்னத்தில் பளாரென்று அறைந்தேன். தலைமுடியைப் பற்றியிழுத்து முகத்தை நிமிர்த்தினேன். 

“உனக்கென்ன பைத்தியமா? நீயும் தற்கொலை செய்து கொள்ளப் போகிறாயா? உன் பெற்றோரை நினைத்துப் பார்த்தாயா…?” 

அவள் என் கால்களைக் கட்டிக்கொண்டு நீண்ட நேரம் அழுதுகொண்டிருந்தாள். 

தம்மிகாவும் ஏனைய பல மாணவிகளைப்போல பெர்னாண்டோ sir இன் மாலை நேர ஆங்கில இலக்கிய வகுப்புகளுக்கு ஒழுங்காக சென்று வந்தவள். எப்படியோ அவரது கடைக்கண் பார்வையில் விழுந்துவிட்டாள். 

ஆங்கில இலக்கியக் காதல் கொண்டே அவளை வீழ்த்திவிட்டார் பெர்னாண்டோ. விளைவாக அவருடன் பல இரவுகளை அவள் கழித்திருக்கிறாள். 

அவரது மனைவி இல்லாத பொழுதுகளில் அவரது குவாட்டர்ஸிலேயே யாவும் நிகழ்ந்து முடிந்தன. 

சீக்கிரமே தன் மனைவியை விவாகரத்து செய்து விடுவதாகவும், தம்மிகாவை திருமணம் செய்து கொள்வதாகவும் வாக்களித்திருக்கிறார். இவளும் பரிபூரணமாக நம்பி விட்டாள். 

தான் கர்ப்பமுற்றிருக்கும் செய்தியைத் தெரிவித்தபோது பெர்னாண்டோ அதிர்ந்து விட்டாராம். கர்ப்பத்தைக் கலைத்து விடச்சொல்லி வற்புறுத்தினாராம். இவள் பிடிவாதமாக மறுக்கவே அவளைச் சந்திப்பதைச் சிறிது சிறிதாகத் தவிர்த்து விட்டாராம். இப்போது தன்னை முற்றாக மறந்த நிலையில் என்னையும் வீட்டுக்கு அழைத்திருக்கிறார் என்றதும் தம்மிகா பொறி கலங்கிப் போய்விட்டாள். 

மற்ற பெண்களைப்போல அவரது வலையில் நானும் விழுந்து விடவில்லை என்ற காரணத்தினால் அவள் என்மீது மதிப்பு கொண்டு அவ்வளவு விஷயத்தையும் தெரிவித்து விட்டாள். 

தலையில் பெரிய பாறாங்கல்லைத் தூக்கி வைத்தது போன்ற நிலை எனக்கு. பரீட்சை பற்றிய பயம். தம்மி பற்றிய குறுகுறுப்பு. என்ன செய்வது? 

என்ன செய்வது? அதிபரிடம் சென்று முறையிடுவதா? பேசாமல் விட்டு விடுவதா? பேசாமல் விட்டு விடலாம் என்றால் தம்மிகாவின் நிலை பரிதாபமாக இருந்தது. முன்பெல்லாம் என்னைக் கண்டால் குத்தலாகப் பேசுபவள். எனது தனித்துவ உணர்வுகளைப் பலவேளைகளில் புண்படுத்தியவள். ஏதாவது ஒரு பிரச்சினைக்கு இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன என்று அவர்களே கேட்டு, நான் விளக்கம் அளித்த பின்னர், அதனை கேலி செய்கின்ற ஒரு இளம் பெண் என்னிடம் தனது அவலத்தைச் சொல்லத் துணிந்திருக்கிறாள் என்றால் என்னை அவள் அந்த அளவுக்கு நம்புகிறாள் என்றுதானே அர்த்தம்? அவளைக் கைவிடுவது சரியா? 

பல குழப்பமான சிந்தனைகளுடன் அதிபரிடம் சென்று முறையிடுதல் பற்றிய எந்தத் தெளிவும் இல்லாத போதும், மாலை மங்கி இருள் கவிந்திருந்த ஒரு பொழுதில் திருமதி நாணயக்காரவின் குவாட்டர்ஸிற்குச் சென்றேன். 

உள்ளே தொலைக்காட்சியில் மாலைச் செய்தி அறிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர் எழுந்து வந்து என்னைச் சந்திக்கப் பத்து நிமிடங்கள் ஆயிற்று. துடிக்கும் இதயத்துடன் காத்திருந்தேன். 

நெற்றியில் நரைத்த ஒன்றிரண்டு தலைமயிர்களுடன் மெல்லிசாக, ஆயினும் கம்பீரமாகக் காட்சியளிக்கும் திருமதி நாணயக்கார கவுன் அணிந்து சின்னப்பெண் போலிருந்தார். வினோதமாக இருந்தது. 

இந்த நேரத்தில் அவசரமாக அவரைச் சந்திக்க வென்று ஒரு முஸ்லிம் பெண் வந்திருக்கின்றமை அவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். புன்னகையுடன் கேள்வி ரேகையும் சூழ என்னைப் பார்த்தார். 

ஒரு அதிபர்-மாணவி உரையாடலில் என்ன சம்பிரதாயம் இருக்க முடியும்? நேராக விஷயத்துக்கு வந்தேன். 

கேட்டுக்கொண்டிருக்கையிலேயே அதிபர் இறுகி கல்லெனச் சமைந்து போனார். இந்த அதிர்ச்சிக்குக் காரணம் அவர் இந்தக் கல்லூரியின் அதிபர் என்ற பொறுப்புணர்ச்சியா? அல்லது பெண்ணீயச் சிந்தனையா? புரியாமல் விழித்தபடி உட்கார்ந்நிருந்தேன். 

நீண்ட மௌனத்திற்குப் பின்னர் சொன்னார். 

“இந்தக் கல்லூரியில் இன்னொரு தற்கொலைக்கு அனுமதிக்க முடியாது. நான் இருக்கும்வரை அது நடக்காது. நீ போ… நான் உரிய நடவடிக்கை எடுப்பேன் விரைவில்…” 

தலையில் சிலநாட்களாக கனத்துக்கொண்டிருந்த பாறாங்கல்லை இறக்கிவைத்த நிம்மதியுடன் நான் என் அறைக்குத் திரும்பினேன். 

அதிபர் கனகச்சிதமாகவும், துரிதமாகவும் காரியத்தில் ஈடுபட்டார். அடுத்த நாளே பெர்னாண்டோ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். பல குற்றச் செயல்கள் நிகழக் களமாக இருந்த அவரது குவாட்டர்ஸ் அதிபரால் பறிமுதல் செய்யப்பட்டு சீல் வைக்கப் பட்டது. 

இத்தனை களேபரங்களின்போதும் பெர்னாண்டோவின் மனைவியும், அவரது ஒரு வயதுக் குழந்தையும் ஊரில் இல்லை. பெர்னாண்டோ ஓட்டலில் அறை எடுத்துத் தங்கவேண்டி ஏற்பட்டது. குனிந்த தலை நிமிராமல் வந்து விரிவுரைகளை நடாத்தி விட்டுச் சென்றார். ஆங்கில இலக்கிய வகுப்புகளில் மாணவிகளின் வருகை பெரும் வீழ்ச்சி காணத் தொடங்கியது. 

தம்மிகா அதிபரின் கண்காணிப்பின் கீழ் ஒரு வாடகை வீட்டில் குடியமர்த்தப்பட்டாள். தற்கொலை முயற்சியிலிருந்து எப்படியாவது அவளைக் காப்பாற்றியாக வேண்டும் என்ற அதிபரின் முயற்சி வீண்போகவில்லை. அவள் சிறிது சிறிதாக மனந்தேறி பரீட்சைக்குப் படிக்க ஆரம்பித்தாள். அவளது சகல நடவடிக்கைகளும் அதிபரின் பணிப்புரையின் கீழ் சக மாணவர் களால் அவளுக்குத் தெரியாமலேயே கண்காணிக்கப்பட்டன. 

அன்றிரவு எல்லோரும் உணவு மண்டபத்தில் உண வருந்திக் கொண்டிருந்தோம். தம்மிகா விவகாரம் மாணவர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டிருந்தது. பரீட்சை பற்றிய பயம் வேறு. யாவரும் அமைதியாக சாப்பிட்டுக் கொண்டி ருந்தோம். 

மாடிப்படிகளில் டக் டக் என்ற காலடி ஓசை. யாவரும் திகைத்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டோம். வாசல்படியருகே தெரிந்த உருவம்…. பெர்னாண்டோவின் இளம் மனைவி ப்யூமி! அப்போதுதான் ஊரில் இருந்து வந்திருக்க வேண்டும். அயர்ச்சியாகத் தென்பட்டாள். தோளில் பயணப்பை தொங்கிக்கொண்டிருந்தது. கையில் குழந்தை. ஒரு வயதுகூட நிரம்பாத அழகிய பச்சிளங் குழந்தை. 

“இப்பொதுதான் ஊரிலிருந்து வந்தேன். வீடு பூட்டிக் கிடக்கு. காவல்காரன் எல்லா விபரமும் சொன்னான. இப்போ தம்மிகா எங்கே?” 

ஏறக்குறைய அரைநிமிட மௌனம். யாரும் வாய் திறக்கவில்லை. நான் சொன்னேன். 

“அவள் அதிபரின் கண்காணிப்பின் கீழ் இருக்கிறாள்….” 

“நடந்த தப்புக்கு யார் காரணம்? அவள்தானே…! அவளாகத்தானே என் கணவரைத் தேடிப்போய் இருக்கிறாள்…?” 

முழு மண்டபமுமே ஒருகணம் குலுங்கி அதிர்ந்தது. விறைப்பான மௌனம் தொடர்ந்து ஆட்சி செலுத்தியது. 

“சரி அதை விடுங்கள். என் கணவர் தவறு செய்து விட்டார். ஒப்புக்கொள்கிறேன். அதற்காக என்னைப் பழி வாங்குவது என்ன நியாயம்? நான் ஒரு ஏழை… எங்கு போவேன்…?” 

“பேசாமல் டைவர்ஸ் பண்ணிடுங்க….” 

தைரியசாலியான குசுமலதா மெதுவாகச் சொன்னாள். 

“அதெப்படி முடியும்? அவரைப்பற்றி எல்லாம் தெரிந்தும் கூட அவரோடு நான் வாழ்கிறேன். எதற்காக? எல்லாம் அந்த வீட்டுக்காகத்தான். எனக்கொரு வீடு வேண்டும். அதற்காகத் தான் நான் இத்தனைக் கஷ்டங்களையும் தாங்கி நிற்கிறேன். இப்போ நான் என்ன செய்வது? எங்கு போவது சொல்லுங்கள்….?” 

அவள் சுண்டி வீசிய அந்தக் கேள்வி நீண்ட மலைப்பாம்பென எங்கள் முன்னால் விழுந்து கிடந்தது. 

– ப்ரவாகம், செப்டம்பர் 2001.

பி.கு: தெவனிகமன – புதுமணப்பெண் திருமணத்திற்குப்பிறகு முதல் தடவையாக கணவனின் வீடு செல்லும் சம்பிரதாயபூர்வ நிகழ்ச்சி. இதன்போது பெண்ணின் கன்னித்தன்மை கணவன் வீட்டாரால் பரிசோதிக்கப்படும். 

– முடிவில் தொடங்கும் கதைகள் (சிறுகதைகள்), முதற்பதிப்பு: டிசம்பர் 2012, நூலாசிரியர் வெளியீடு, கெகிறாவ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *