கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: August 27, 2025
பார்வையிட்டோர்: 4,150 
 
 

கண்களைத் திறந்தேன் என்று சொல்லக்கூடாது. அவை என்னிடம் ஆலோசனை யெல்லாம் இல்லாமல் தாமே விழித்துக்கொண்டன. சூரியன்கூட “இன்னும் ஒரு பத்து நிமிஷம்…” என்று போர்வையை மேல் இழுத்திருந்தான். ஆனால், என் உள்ளே ஒளிந்திருந்த ஒரு அலாரம் – வங்கிக் கடன் விவரங்களைக் கூவிக் கூவித் தூக்கத்தை வீழ்த்தியது..

அது கடிகார ஒலி அல்ல. என் வங்கிக் கணக்கிலிருந்து ஒவ்வொரு மாதமும் “நீ இருக்க வேண்டிய இடம் இதுவல்ல” என்று இழுத்துச் செல்லப்படும் பணத்தின் கதறல் ஓசைதான் அது.

மீராவுக்கான பள்ளிக் கட்டணம், சித்ராவுக்கான மருந்து பட்டியல், வீட்டு இ.எம்.ஐ, காஸ்மெடிக்ஸ் இல்லாத மளிகைப் பட்டியல்… எல்லாம் சேர்ந்து ஒரு சர்வதேச கடன் நிறுவனமாக என் மார்பில் பணியமர்த்தப்பட்டிருக்கின்றன.

ஒரு மனிதனின் உயிர் இப்போது ஒரு மாதாந்திர செலவுப் பட்டியலாக இருக்கிறதே என்று எண்ணும்போது, பூமியின் சுழற்சியே எனக்குச் சலிப்பளிக்கிறது.

பக்க மெத்தையில் சித்ரா. அவள் உண்மையில் தூங்கினாளா? அல்லது தூங்குகிறவளாகவே என்னைச் சோதிக்க முயலுகிறாளா? அவளின் முகத்தில் பதிந்த அமைதி கூட, என்னுள் பூரிப்பாய் நுழைந்த பயத்திற்கான பிரதிபலிப்பாய் தெரிந்தது.

மீரா – பத்து வயதான பச்சைநிறக் கவிதை. ஆனால் அந்த கவிதையே இப்போது ஒரு கட்டாய பாடப்புத்தகமாயிருக்கின்றது.

இவர்களுக்காகத்தான் வாழ்கிறேன் என்ற பாசம், இன்று தலையில் கோமாளி தொப்பி போடச் சொல்லும் கதாபாத்திரமாக மாறி நிக்கின்றது.

ஒரு காலத்தில் கண்ணாடி பார்த்ததும் தெரிந்தது – கனவுகளோடு கூடி இருக்கும் இளைஞன்.

இப்போது? அதே கண்ணாடி, ‘நீதானா இது?’ என்று தயக்கத்தோடே முகம் காட்டுகிறது. நானும் குழப்பத்தோடே பார்க்கிறேன் – முகமா இது? முகமூடியா? புரியவில்லை.

கண்ணாடியும் அசந்து போயிருக்கிறது போல…


நேற்று முன்தினம்தான் அப்பா கிராமத்திலிருந்து வந்தார். இரண்டு நாட்களாக என்னுடன்தான் இருக்கிறார்.

அவரை வரவேற்ற என் முகத்தில் இருந்தது ஒரு வெண்பனிப் புன்னகை – புறநோக்கு கண்களுக்கு பசுமையாக, ஆனால் உள்ளுக்குள் ஒரு குற்றவுணர்ச்சி பசையாய் ஒட்டியபடி.

இந்த இரண்டு நாளும் என் உள்ளத்தில் ஒரு நீதிமன்றம் நடக்கிறது. நீதிபதியும் நானே. வழக்கறிஞராக என்னையே சிக்கலான கேள்விகளால் வாட்டுகிறேன். குற்றவாளியா? சந்தேகம் இல்லை – என் மனதே ஒப்புல் வாக்குமூலம் எழுத்தாக எழுதி தருகிறது!

அப்பா – விவசாயி. பள்ளிப்படிப்பு இல்லை. ஆனால் பள்ளி தெரியாமலேயே வாழ்க்கையுடன் கலந்த ஆராய்ச்சி பண்ணியவர்.

“கடன்” என்ற வார்த்தை அவர் காதுக்கு விழுந்தாலே – எட்டிக்காயை விழுங்கிய மாதிரி துடிக்கத் துடிக்க ஓர் ஒவ்வாமை. “கடனில்லாத வாழ்க்கையே கௌரவம் ரவி… ஒரு ரூபாய் கடன் இல்லாம சாகணும்டா,” அதுதான் அவருடைய நியதி.

நான்கு தங்கைகளின் வாழ்க்கையே அவரது வாழ்க்கை. கையிலே பணமில்லாதபோதும், மனத்தில் எண்ணம் இருந்ததால், ஒவ்வொருவருக்கும் கல்யாணமும், சீரும் நடத்தி வைத்தார். மேளதாளமெல்லாம் இல்லாமல் இருந்தால் என்ன? மனநிறைவு பூரணமாக இருந்தது.

ஒரு காட்சி மனத்தில் சுழன்றது. பத்து வயதில் நழுவிய கண்ணீர் – என் அத்தை அடகுக்கடையிடம் எடுத்த கடனுக்காக அவமானப்பட, பணம் இல்லாத அப்பா, வளர்த்த மாட்டை விற்றார். அது அவர் சொத்து அல்ல – அவர் உயிரின் ஓரங்கம்.

மாடு போன மாலை. கொட்டில் வெறிச்சோடி இருந்தது… அப்பா அந்த வெறிச்சோட்டை பார்த்தபடியே நின்றார். பக்கத்தில் பழைய நண்பர் ராமலிங்கம். “சின்ன விஷயத்துக்கே இப்படி…” என்றார் அவர், ஆனால் அப்பா நொடி முன் தலையை ஆட்டிவிட்டார்.

“அது என் உசிரு ராமா… என் ஆத்தா மறுபடியும் என்னை விட்டுட்டு போன மாதிரி இருக்கு…” என்றார்.

அது ஒரு உரத்த ஓசை இல்ல; ஆனால் அந்தச் சொற்களில் அவர் தன் வயதை இழந்து, ஒரு சிறுவனாக நின்றார். அங்கே நின்றது ஒரு குழந்தை. நான் பேசத் தெரியாமல் நின்றேன். ஆறுதலோ, ஆற்றலும் இல்லாமல் பக்கத்தில் நிழலாய் இருந்தேன்.

அன்று அவர் மாட்டை விற்கவில்லை; மானத்தை வாங்கினார். மானத்துக்காக மாட்டை விற்றவர். விலை பேசாமல், விலைமதிப்பை நிரூபித்தவர்.

நான்?.. யோசனை என் மனதுக்குள் காலணி போட்டுக் கடந்து நடந்தது. ஒவ்வொரு அடியிலும் பழைய கணக்குகள் விழித்துக்கொண்டன.


அலுவலக வாசலில் என் பைக் ஓய்வெடுக்க நானும் சற்று சாய்ந்து நின்றிருந்தேன். பழமையானது. ஆனால் வட்டியில்லாதது.

சந்துரு வந்தான். புதிய கார். பழைய நகைச்சுவை… “என்ன சார், இன்னும் இந்த டைனோசர் காலத்து பைக்கில்தான் வரீங்களா?” நான் புன்னகையாய் பார்க்க முயன்றேன். சுற்றிலிருப்பவர்கள் கத்தி சிரித்தார்கள்.

அந்த சிரிப்புக்குள்ளே, நான்தான் இந்த நவீன உலகின் பின்தங்கியவன் என முத்திரை. அந்த நொடியிலே… என் உள்ளத்திலோ ஒரு சங்கிலிப் பிடிவாதம்: “நானும் ஒரு கார் வாங்கவேணும்!”

ஆசையா? இல்லை. ‘நானும் மனிதன்தான்’ என்று கத்த வேண்டிய அவலம்.

அன்றிரவே இணையத்தில்: “லோன் – குறைந்த வட்டி, அதிக தவணை.” எனும் வகையில் தேடல்கள்.

மனசு உறுதி செய்தது: கடன் – கட்டாய நாகரிகத்தின் அடையாளம்.

கார் வந்தது. சமூக ஊடகங்களில் புகைப்படம் வந்தது. “கங்கிராட்ஸ் ப்ரோ” கமெண்டுகள் வந்தன. “நீயும் இப்போ நம்மள மாதிரி தான்” – கட்டித் தழுவியது உலகம்.

முதல் தவணை சென்றது. அந்தத் தவணையோடே மனசுக்குள் வேரிட்டது – இன்னொரு ஆசை. “நம்ம நண்பன் போஸ்ட் பண்ணிருக்கான் பாரு, மாடி வீடு!”

என் வீடு… பக்கத்து வீட்டுத் தென்னை மரத்துக்கு மண்டியிடும் கூரைக்கொட்டில்… தொடர்ந்து – வீட்டுக்கடன். அதுக்குப் பின் – **‘இது கடைசி’**ன்னு எடுத்த முடிவுக்கடன். ஆனா அந்த முடிவு – ஒரு டிஜிட்டல் வாக்குறுதி மாதிரி.

மீரா பிறந்தாள். முகம் பார்த்த உடனே – “இவளுக்கு சிறந்ததையே தரணும்” எனும் உலகெங்கும் பரவும் பைத்தியம் வந்தது. சிறந்த பள்ளி, சிறந்த வீடு… சிறந்த கடன்கள்.

இப்போது என்ன இருக்கிறது? நிம்மதி இல்லை. நிம்மதியாயிருக்க முயல்கிற முகமூடி மட்டுமே..


அலுவலகம். ஒரு காலத்தில் அது புதுமை தூண்டிய மைதானம். இப்போது? ஒரு வாசனை நீங்கிய காற்றில்லா அறை போல. வெளியே செல்லவே முடியவில்லை. உள்ளே நிம்மதியாக இருக்கவே முடியவில்லை.

நான் இங்கே மென்பொருள் பொறியாளன் இல்லை. ஒரு ‘எம்பிளாய் ஐடி’ – ஆறு இலக்க எண்.

நேற்று… ராஜன். என் மேலதிகாரி. ஒரு சின்ன தவறை பெரும்குற்றமாய் மாற்றும் வித்தைக்காரன்.

கூட்டத்தில்… “ஐ டோன்ட் அன்டர்ஸ்டாண்ட் ஹௌ சம்வன் வித் யுவர் எக்ஸ்பீரியன்ஸ் குட் மேக் சச் எ பேசிக் மிஸ்டேக். ஆர் யூ ஸ்யூர் யூ ஆர் அப் பார் திஸ் ரோல் எனிமோர்?”

என்று தொடங்கிய வார்த்தைகள், என் உள்ளத்தை துண்டித்துக் கொண்டே சென்றன.

இப்போது புரிகிறது – அலுவலகத்தில் அடிமையாய்க் கூட வாழ்ந்திடலாம். யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள். ஆனால், ஆங்கிலம் தெரியாமல் வாழவே முடியாது.

அந்தக் கணம்… பதிலுக்குத் தேடிய வார்த்தைகள் – நாக்கின் உச்சியில் பிறக்கவே பிறந்து, பிறந்தவுடனே இறந்தன.

மனிதமாய் இருக்க, ஒரு அடிப்படை இருக்க வேண்டும்: “சொல்வதற்கான இடமும், உரிமையும்.” அதுவே அந்த நொடியிலிருந்து எனக்கில்லை.

அவமானம் – வெளி நுழையும் ஒன்றல்ல. இது நம்முள் ஏற்கனவே இருந்திருக்கும் ஓர் இருளின் வெளி. அந்த இருளில், நம் குரலும் நம்பிக்கையும் மெதுவாக கரைந்து விடுகின்றன.

வெளியே வந்தேன். சுரேஷ் – என் சக ஊழியர். தோளில் கைகளை வைத்தான்.

“விடு ரவி… ராஜன் எல்லோருடனும் அப்படித்தான். இந்த இ.எம்.ஐ மட்டும் இல்லேன்னா…” அவன் வாக்கியம் முடிக்கவில்லை. கண்ணில் இருந்த வெறுமைதான் செய்தியை சொன்னது.

நாங்கள் இருவரும்… ஒரே வலையில் சிக்கிய இரு டிஜிட்டல் பறவைகள். சிறகுகள் இருக்கிறது. ஆனால், பறக்க முடியாது.


இந்தக் கடன் சுமை – வேலை மட்டுமல்ல. சமூக உயிரையும் மூச்சுத்திணற விட்டது.

மூச்சுக்குப் போராடும் மனிதன் வாசனை பற்றி யோசிப்பான் என்பதே ஒரு புனைவுப் பொய்!

ஒரு நாள், எங்கள் குடியிருப்புக்குப் பக்கத்தில் தொழிற்சாலை கட்டப்படவிருக்கிறதென்று ஒரு வதந்தி – மன்னிக்கவும் – “அதிகாரபூர்வ அறிவிப்பு” பரவியது.

அது காற்றையும் நீரையும் மாசுபடுத்துமாம். அதன் புகை – நமக்கே தெரியாமல் ஆவி வாங்கும் புதிய வகை ஆயுதமாம்.

நிலத்தடி நீர் உறிஞ்சப்படும்; பின், பிறக்கும் குழந்தையின் மூச்சு கூட பஞ்சாயத்து முடிவாகிவிடும்.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வந்தார்கள். மக்கள் கொதித்தார்கள்.

என் வாசலிலும் ஒரு துண்டுப் பிரசுரம்: “போராட்டத்தில் கலந்துகொள்ளுங்கள்!”

ஒரு பெரியவரின் வாசல் தேடிய அழைப்பும் வந்தது.

தலைக்குள் ஒரு உணர்வு – “தூய காற்று என் குழந்தைக்கு வேண்டாமா?” நிச்சயமாக வேண்டும்.

ஆனால் முதலில் இ.எம்.ஐ கட்ட வேண்டாமா?

அடுத்த நொடியே – வங்கிக் கணக்குகள், தவணைப் பட்டியல்கள், ராஜனின் ‘ரூட் காஸ் அனாலிசிஸ்’ முகம் –

என் நெஞ்சை ‘எக்ஸல் அப்ளிகேஷன்’ போல Freeze Panes செய்தது.

“போராட்டத்தில் கலந்துகொண்டால்… வேலையே போய்விடுமோ?”

அந்த ஒரு கேள்வி – மனச்சாட்சியை க்ளாக் ரூமில் -ல் பத்திரமாக வைத்தது.

தூரத்தில் நின்ற சிலர் – பத்திரமான அமைதியில் – “இப்படி எல்லாத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்தா, எப்படி முன்னேற்றம் சாத்தியமாகும்?” என்ற மௌனக் கலந்தாய்வை நடத்தினர்.

நானும் அந்த கூட்டத்தில் ஒருவன். கடன் என்னும் சங்கிலி பாதத்தில் இறுக்கி, எதிர்ப்புகளை வெளிக்கொணர முடியாமல், புரட்சிகளைப் பக்கவாட்டில் நின்று கண்ணால் மட்டும் விழுங்கும் ஒரு ஒப்புதல் ஊமை.

“தலைவலிங்க… வர முடியாது,” என்றேன். சுரேஷும் அதே சொல்லுக்கு பின்னால் பதுங்கினான்.


அப்பா வந்திருந்த நாளின் மாலை வேளை. சகோதரியின் அலைபேசி அழைப்பு…

எப்போதும் சிரிப்பில் ஒளிந்திருக்கும் அவள் குரல், அன்று சுருண்டிருந்தது. சுருக்கி வைக்கப்பட்ட இருண்ட துணிபோல.

கண்ணுக்குத் தெரியாத தயக்கம், மனதுக்குப் புரியாத ஏக்கம் – அவை ஒலியின் நடுவே சில்லென்று கடந்து சென்றன.

“அண்ணா… உன்னிடம் ஒரு விஷயம் பேசணும்…”

அந்தக் குறும்பொருள் வாக்கியத்தில், ஒரு குடும்பத்தின் உச்சியிலிருக்கும் சுமை ஒளிந்திருந்தது. என் மீதான ஒரு உணர்வுப்பூர்வமான தேடலும்.

“ஸ்வாதிக்கு காலேஜ் அட்மிஷன் பணம் கட்டணும்… முப்பதாயிரம் தேவைப்படுது. அப்பா ஏற்கனவே நிறைய செஞ்சுட்டாரு. அவர்கிட்ட திரும்ப திரும்ப கேக்கக் கஷ்டமா இருக்கு… அதான் உன்கிட்ட…”

அவள் குரல் தவிக்கவில்லை. தவிக்காமலிருப்பதிலேயே அவள் மனச்சோர்வு ஒலித்தது.

ஒரு தாயின் பசிப்போல. ஒரு உறவின் இறுதி நம்பிக்கையைத் தவிர வேறெதுவும் இல்லாத ஒலி.

கேட்கும்போது, அது உதவிக்கேட்ட குரல் இல்ல; அது என் முன் இறங்கி விழும் ஒரு பிச்சை.

மனதில் கணக்கு ஓடின. ஒவ்வொரு இலட்சம் கடனும் எண்ணெய்போல் மூளையில் ஒட்டிக் கொண்டது.

உதவ வேண்டுமென்றால் எனக்குச் சுருக்கவேண்டும் – என்னுடைய நிதானப்பட்ட வசதிகளின் ஒரு மூலை துண்டிக்க வேண்டும்.

“இல்லை” என்று சொல்லத் தயங்கினேன். ஆனால் “ஆம்” என்று சொல்லும் தைரியம் எனக்குள் கிடைக்கவில்லை.

அவளுக்கு உதவ முடியவில்லை என்பதுக்கும், முயற்சி செய்துவிடத் துணியாத அதிர்ச்சிக்கும் இடையே ஒரு பரிதாபமான இடைவெளி இருந்தது.

அந்த இடைவெளி என்னைக் கொன்றது.

என் உள்ளம் என்னைக் கேட்டது: “இந்த கார்? இந்த குளிர்சாதன பெட்டி? இந்த வசதிகள்? இவை எல்லாம் இருந்தும், நீ உன் சகோதரியின் மகளுக்காக முப்பதாயிரம் தர முடியாதவனாகிவிட்டாயா?”

“‘கடனோடு வாழ்கிறேன்’ என்ற ஓர் ஏட்டுப் போர்வையில் ஒளிந்து, நீ உன் மனிதத்தன்மையையே விற்றுவிட்டாயா?”

மனிதத்தன்மை – அந்தச் சொல் உண்மையாகவே என்னுள் இருந்திருந்தால்… அந்த நொடியில் நான் ஏன் உதவவில்லை?

அல்லது… உதவ மனம் வரவில்லை என்பதுதான் உண்மையா?


அந்த மாலை, அப்பா வீட்டில் இருந்தபோது, தொலைபேசியில் ஒரு செய்தி வந்தது.

மூத்த அத்தை உடம்பு சரியில்லையாம். அப்பா பழைய நோக்கியா கீ பேட் போன் ஒன்றில் நிமிர்ந்து பேசினார்.

பேசும்போது, அந்த வார்த்தைகள் – பட்டாம்பூச்சி இறக்கை மாதிரி மெதுவாய் விழுந்தன. அவசரமில்லாமல், ஆனாலும் எதையோ சுமந்து வரும் ஓசை.

நான் அருகிலிருந்தேன்.

“வைத்தியச் செலவைப் பத்தி நீ கொஞ்சம்கூட கவலைப்படாத… மேட்டுத்தெரு பக்கத்துல புதுசா நிலம் வாங்கினேன் இல்லையா? அதுல ஒன்னை வித்துடறேன். நீ தைரியமா இரு. உடம்பைப் பார்த்துக்க.”

அந்த வார்த்தைகள் என்னை ஆழமாக வெட்டி விட்டன.

அது வெறும் சமாதானம் அல்ல. அது “நான் இருக்கிறேன்” என்ற ஒரு உறுதி.

வாக்குறுதியும் அல்ல; வெறும் சொத்துப் பற்றும் இல்லை. அது அப்பாவின் இருப்பின் சத்தமற்ற நிழல்.

வீணாக ஒரு விநாடி நான் என்னை உற்றுப் பார்த்தேன்.

“அவளுக்காக நிலம் விக்கக் கூடும்” என்று சொல்லும் மனம் எனக்குள் ஏன் இல்லை?

அப்பா, ஒரு சொல் கூட என்னிடம் கேட்கவில்லை.

அவருக்குள் என்ன இருந்தது? நம்பிக்கை இல்லையா? நானோ உதவ மாட்டேன் என்ற அனுமானமா? அல்லது, “நான் இருக்கிறேன்; யாருக்கும் வேண்டாம்” என்ற ஊறு இல்லாத தன்னம்பிக்கையா?

அவரும் நானும் – தலை மாறானவர்கள்.

அன்று இரவு, தூக்கம் வரவில்லை. என் வாழ்க்கை முடிவற்ற ஒரு வட்டத்தில் சுற்றிக்கொண்டிருந்தது.

அதை உடைக்க முடியுமா? முடியுமென்ற நம்பிக்கை கூட கடன் தவணையைப் போல மாதாமாதம் தேய்ந்து கொண்டிருக்கிறது.

கண்களை மூடினேன். உள்ளே மட்டும் விழித்திருந்தது –

“கட்டு!… இல்லையென்றால் பறிக்கப்படும்!” என்று கத்தும் அந்த அரக்கக் குரல்!


அடுத்த நாள் காலை.

அப்பா இன்று கிராமத்திற்குப் புறப்படவேண்டும். அலாரம் ஓலமிடுவதற்குள், பழக்கத்துக்கு உகந்தபடி விழித்தேன்.

தண்ணீரோடு சண்டை போட்டு குளித்துவிட்டு, அலுவலக பொம்மையாக தயாரானேன்.

அந்த நேரம்தான் – வீட்டின் கதவு படாரென்று திரும்பியது.

அப்பா உள்ளே வந்தார் – மூச்சு ஒலிக்க, வியர்வை வழிய, நிலையற்ற கால்களில் கவலை ஓடுகிறது.

“என்னப்பா ஆச்சு? ஏன் இப்படி மூச்சிரைக்க ஓடி வர்றீங்க?” நான் கேட்டேன்.

கைகளைத் துடைத்தபடி, மூச்சை சரி செய்து, பின்னர் சொன்னார்:

“அதாண்டா… தெருமுனையில உள்ள டீக்கடையில ஒரு டீ குடிச்சேன். பர்ஸை வீட்ல வெச்சுட்டுப் போய்ட்டேன் போல.. அவன் உன்ன தெரிஞ்சவனு சொல்லி, அப்புறம் கொடுத்தா போதும்னு சொன்னான். ஆனா… நான்தான் கிளம்புறதுக்கு முன்னாடி அந்தக் கணக்கை முடிச்சுடணும்னு ஓடி வந்தேன். நம்ம பேர்ல ஒரு கடனை வெச்சிட்டு எப்படி நிம்மதியா போக முடியும்?”

அந்த வார்த்தைகள் மனதுக்குள் ஓர் ஓசையோடு விழுந்தன.

சிறு கணக்குக்காக சோகச் சக்கரமாக ஓடி வந்தவர். வாழ்க்கையின் முழு நேர்த்தியையும் அந்த ஒரு கணக்கிலே அடக்கி வைத்திருப்பவர்.

அவர் வாழ்க்கையின் ஒரு சுருக்கப்பட்ட சுருக்கம் – அந்த பழைய பர்ஸ்.

அதிலென்ன இருக்கு? சில ரூபாய் கசங்கிய நோட்டுகள். கிரெடிட் கார்டு, ப்ளாட்டினம் வரிசை எதுவும் கிடையாது.

ஆனால் அதில் இருந்தது – அவரது உயிரின் மதிப்பு.

நான்? என் பேரையே இ.எம்.ஐ -க்கு ஒப்படைத்துவிட்டு வாழ்கிறவன்.

அப்பா… வாழ்ந்திருக்கிறார். நான்? வாழும் பாவனை செய்துகொண்டிருக்கிறேன்.


அப்பாவை ரயில் நிலையம் வரை அழைத்துச் சென்றேன்.

அவரது முகத்தில் சிரிப்பில்லை, ஆனால் கை செயலில் சீர்மை இருந்தது – வியர்வையை நேராக துடைத்தார்.

பின்னர் என் அருகில் வந்து மெதுவாக:

“ரவி… தங்கச்சி உங்கிட்ட பணம் கேட்டாளாமே?…”

அந்த வார்த்தை… ஒரு யு.பி.ஐ பேமென்ட் நெட்வொர்க் பிழை போல என் நெஞ்சை துண்டித்தது.

நான் ஒன்றும் பேசவில்லை.

அவர் சிறிது நேரம் என் முகத்தைப் பார்த்தார். பின்னர் தலையை சாய்த்தபடியே மெதுவாக சொன்னார்:

“நான் இருக்கிற வரைக்கும் அவளுக்குத் தேவையானதை நான் பார்த்துக்கிறேன். நீ கவலைப்படவேண்டாம். ஆனா… எனக்கு பிறகு அவளுக்கு நீதானே எல்லாம்? ஞாபகம் வச்சுக்கோடா…”

அந்த ஒரு வரியிலேயே…

என் உள்ளம் உடைந்தது.

உறவை வசதிக்காக விட்டுவிட்டேன் என்பதற்கான குற்றவுணர்ச்சி முழுச்சதவீத வட்டியுடன் என்னை கடத்தியது.

கண்கள் கலங்கின.

அவர் சொற்கள் என் குற்றவுணர்ச்சியை நஞ்சாக ஊட்டி, “இனிமேல் போதும்” என்பதற்கான தீர்மானத்தை தந்தன.

அப்பாவை ரயிலில் ஏற்றி விட்டு புறப்பட்டேன்.

என் மனத்தில் ஒரு தீர்மானம் – “இதற்கப்புறம் கடன் வேண்டாம்.”

சந்த்ரு ஜோக்கடிக்கட்டும். பேஸ்புக் ஹாஷ்டேக்குகள் வீணாகப் பறக்கட்டும்.

நான் மட்டும் என் முகத்துக்குள் வாழ முடிவு செய்துவிட்டேன்.

உறவுகளுக்குத் தேவைப்படும் நேரத்தில் உதவ முடியாமல், சமூகத்துக்கு ஒரு சிறிய பங்களிப்புக் கூட செய்ய முடியாமல், கைகளை கட்டிப் பொன்னாடை போடும் எந்த உத்தமச் சங்கிலியும் வேண்டாம்.

கார் நிதானமான வேகத்தில் நகரத் தொடங்கியது – தீர்மானத்தின் திசையில்.


அலுவலகம் சென்றடைந்தேன்.

தீர்மானத்தை பவர் பாயிண்ட்-க்குள் மாற்றி, வேலையெனும் மேடைச் சாயம் பூசிய முகத்தை அணிந்தேன்.

ஆனால் இறைவனுக்கும் திரை எழுத்தாளர்களுக்கும் ஒரே பழக்கம் – கடைசி காட்சியில்தான் “முகம் கிழிக்கும் மாஸ்க்” போட்டுவைப்பார்கள்.

‘‘சேவ் அண்ட் க்ளோஸ்’ என்பதை கிளிக் செய்யும் முன், வாசலில் சத்தமில்லாமல் கசியும் தண்ணீரைப் போல ஓர் அழைப்பு.

பள்ளியிலிருந்து.

“மீராவின் டெர்ம் ஃபீஸ் இன்னும் நிலுவையில் இருக்கு. இன்றைக்கே கடைசி நாள். இல்லாட்டி அபராதம்…”

மனம் மெளனமான புள்ளியில் நின்றது.

சற்று முன்னாடி வரை “இனிமேல் கடன் வேண்டாம்!” என்று பொங்கி எழுந்தவன், இப்போது?

வங்கிக் கணக்கு – அது வறண்ட பள்ளத்தாக்கு. கிரெடிட் கார்டு – அது தொட்டால் சுடும் பழைய நரகம்.

சிறிய தயக்கம். இது புதிய வாழ்வின் முதல் தோல்வியா? அல்லது பழைய தவறுக்கு அழகான மறுபதிப்பா?

இப்போது செய்யவேண்டியது: கட்டணத்தை செலுத்துவது.

ஆனால்… கடனின்றி? முடியுமா?

இந்த ஒரு சிறியக் கேள்வியின் மேல்தான்

என் திறமைக்கு எதிரான நிஜத்தின் சவால் தொடங்குகிறது.

இது எந்தவித க்ளைமேக்ஸ் இசையுமின்றி வந்த ஒரு புதிய போராட்டத்தின் முதல் அத்தியாயம்.

சு.அப்துல் கரீம் சு.அப்துல் கரீம் (மே 1979) மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர். கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் கணிதம் படித்து, பின்னர் கணினி பயன்பாடுகளில் முதுநிலை பெற்றார். தற்போது தகவல் தொழில்நுட்பத் துறையில் மென்பொருள் நிபுணராகப் பணியாற்றி வருகிறார். தொழில், வாசிப்பு, எழுத்து என அனைத்தையும் ஒருங்கே இணைத்து மதுரையில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். சிறுவயதிலிருந்தே புத்தக வாசிப்பில் ஆர்வம் கொண்ட இவருக்கு, அந்த வாசிப்பு தமிழின் மீதான காதலாகவும், பின்னர் எழுத்தின் மீதான…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *