என் பெண்டாட்டி எதிர் வீட்டு வைப்பாட்டி..!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 23, 2025
பார்வையிட்டோர்: 2,806 
 
 

அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-16

அத்தியாயம் – 13

‘நித்யா அனாதை ஆசிரமத்திற்கு ஏன் சென்றாள், எதற்குச் சென்றாள். தன்னிடம் தெரிவிக்காமல் செல்ல வேண்டிய காரணம்?’ சம்பத்திற்கு அலுவலகம் வந்த பிறகும் இதே கேள்விகள் மனதைக் குடைந்தது.

‘வீட்டில் இவன் பயன் படுத்தாத கைத்துண்டு, சிகரெட் புகை நாற்றம், போன், நமக்கு முகம் தெரியாத ஆளோடு பேச்சு, கடைசியில் அனாதை ஆசிரம்! என்ன.. எல்லாம் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல்? குழம்பினான். அவன் குழப்பத்தை தொலைபேசி மணி அடித்து கலைத்தது,

“ஹலோ!” எடுத்தான்.

“நான் அம்பலவாணன் பேசறேன் தம்பி!”

“யார் அம்பலவாணன்?“

“பக்கத்து வீட்டுக்காரன்!”

“சார்ர்!” சம்பத்திற்கு அவனையும் அறியாமல் ஆச்சரியம் வழிந்தது.

காரணம் பக்கத்து பக்கத்து வீடாக இருந்தாலும் இவர்கள் பேசிக் கொண்டதாக சரித்திரம் இல்லை. சம்பத்திற்கு அவர் பெரியவர், பெரிய வேலையில் இருப்பவர், பணக்காரர் என்கிற எண்ணம் ஒதுங்கல்.

அம்பலவாணன் ஒரு மாதிரி. உலகத்தையே இவர் ஒதுக்கி வைத்து விட்டது போல யாரிடமும் அனாவசிய சோலி கிடையாது. தன் வேலை உண்டு வித்துண்டு, அடுத்து அவர் தன்னிடம் யாராவது பேசினால்தான் பேசுவார். இதனால் இவர்கள் எதிரெதிரில் பார்த்துக் கொண்டால்கூட இருவரும் தலையைத் தாழ்த்திக் கொண்டு அவரவர் வழியில் செல்வார்கள்.

“என்னால நம்ப முடியலை சார்!”

எதிர் முனையில் அவர் சின்னதாக ஒரு சிரிப்பு சிரித்தார்.

“சொல்லுங்க சார்?”

“நாம ரெண்டு பேரும் சந்திக்கனும். முக்கியமா ஒரு விசயம் பேசனும்…”

“என்ன விசயம் சார்?”

“அதை நேரடியாய்ப் பேசலாம். அலுவலகம் விட்டு இன்னைக்கு மாலை சந்திக்கலாமா?”

“சந்திக்கலாம் சார்”.

“அலுவலகத்துல அதிகப்படியாய் வேலை அது இதுன்னு தொந்தரவு இல்லையே….!”

“இல்லே சார்!”

“எங்கே சந்திக்கலாம்?”

“நீங்களே சொல்லுங்க?”

“சாயந்தரம் அலுவலகம் முடிஞ்சதும் என் அலுவலகத்துக்கும் பக்கத்துல இருக்கிற பைங்கிளி பூங்காவுக்கு வந்துடுங்க. அதுதான் நல்ல ஒதுக்குப்புறமான இடம். ஒரு டீ, காபி சாப்பிட்டுட்டு மனம்விட்டு சாவகாசமாக பேசலாம். சிகரெட் பழக்கம் உண்டா?”

அவர் இப்படி அதிரடியாய்க் கேட்டதும் துணுக்குற்றான்.

“இ..இல்லே சார்.” என்றான்.

“இருந்தாலும் பரவாயில்லே. எனக்கு மரியாதை கொடுக்கனும்ன்னு நெனைச்சு திருட்டுத் தம் அடிக்க வேண்டியதில்லே.”

‘என்ன ஒரு மனிதர்!’ சம்பத்திற்கு ஆச்சரியமாக இருந்தது.

“நான் இப்பவே உங்களைச் சந்திச்சு பேசனும் போல இருக்கு சார்.” தனக்குள் எழுந்த ஆவலை வெளியிட்டான்.

“வேணாம் சாயந்தரம் பேசிக்கலாம்” வைத்தார்.


கடற்கரையை ஒட்டி பல ஏக்கரில் பரந்துள்ள பிரம்மாண்டமான பூ ங்கா. ஓய்வாக பலர் வந்து போக சரியான இடம். ஒரு துாங்கு மூஞ்சி மரத்தடியில் நாலு சக்கர தள்ளு வண்டியில் ஒரு டீக்கடை. எந்த நேரமும் அங்கு நான்கு பேர்களாவது இருந்து வியாபாரம் நடந்து கொண்டிருக்கும். வியாபாரம் நடக்காத நேரமே கிடையாது. இரவு பத்து மணி வரை பெட்ரோமாக்ஸ் விளக்கு வெளிச்சத்திலும் அங்கு கூட்டம் இருக்கும். அந்த டீக்கடை நாயருக்கு அவ்வளவு கை மணம். காலையில் இட்லி தோசை. மாலையில் வடை பஜ்ஜி. கடையில் வேறு எந்த வித ஆடம்பரம் ஆட்களும் கிடையாது. நாயர் ஒரே ஆள் வியாபாரத்தைக் கவனிப்பார்.

பத்தடி தொலைவில் ஒரு பெட்டிக்கடை. அதுவும் ஒரு தள்ளு வண்டி கடை. ஆனால் சக்கரங்கள் மரத்தோடு இணைத்து சைக்கிள் செயின் போட்டு பூ ட்டி இருக்கும். மூன்று பக்கங்களும் பலகை அடைப்பு. முன் பக்கம் கதவைச் சாத்திப் பூ ட்டிவிட்டால் கடை கச்சிதம். அந்த கடைக்காரர் ஒரு மலையாளி. அந்த கடை கொள்ளாத அளவிற்குச் சமான்கள். மலைாளிகள்தான் இப்படி யாருமே வராத இடமாகப் பார்த்து தேர்ந்தெடுத்து வியாபாரத்தைத் துவக்குவார்கள். பொழுது போக்க வரும் பெரிசுகள், லுாட்டி அடிக்கும் வாலிபர்கள், திருட்டுத் தம் அடிக்கும் இளசுகள் என்று வியாபாரம் பிய்த்துக் கொண்டு போகும். பத்தோடு பதினொன்றாக கடைத் தெருவில் கடை வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு வயிற்றெரிச்சலாக இருக்கும்.

அம்பலவாணன் அந்த டீக்கடைக்கு அருகில் தன் சைக்களுடன் நின்றார். சைக்களும் அதில் தொங்கும் ஒரு மஞ்சள் பையும் ஆளையும் பார்த்தால் ஏதோ ஒரு ஏழை பாவப்பட்ட ஆளைப் போல தெரிந்தார்.

சம்பத் அவர் ஓரம் அவர் ஓரம் வந்து தன் ஹீரோ ஹோண்டாை நிறுத்தினான். இறங்குவதற்கு முன்பே அவருக்கு வணக்கம் சொன்னான். இறங்கி ஸ்டாண்ட் போட்டு பூட்டு விட்டு அவர் அருகில் வந்தான்.

“டீ குடிக்கலாம்!” அவர் கடையை நோக்கி நடந்தார்.

“சரி சார்.” அவரைத் தொடர்ந்தான்.

“கடை எதிரில் நின்று பஜ்ஜி?” இவனைத் திரும்பி பார்த்தார்.

“உங்க விருப்பம் சார்.”

அம்பலவாணன் நாயர் தாம்பாளத்தில் சூடாக எடுத்துப் போட்ட பஜ்ஜியில் இவனுக்கு இரண்டு எடுத்து கொடுத்து விட்டு தானும் இரண்டு எடுத்துக் கொண்டார்.

“நாயர்! ரெண்டு டீ!” அதற்கும் ஆர்டர் கொடுத்தார். பஜ்ஜிகளைச் சவகாசமாத் தின்று தண்ணீர் குடித்துவிட்டு இவனுக்கும் மொண்டு கொடுத்தார்.

டீ வந்தது. குடித்தார்கள்.

சம்பத் பாதி குடித்துக் கொண்டிருக்கும் போதே “சார்! நான் காசு கொடுக்கிறேன்.” என்று சொல்லி பாக்கெட்டில் கை விட்டான்.

“நீ குடுத்தாலும் நாயர் வாங்க மாட்டார்!” சிரித்தார்.

நாயரும் இவன் நீட்டிய பணத்தைத் திரும்பிப் பார்க்கவே இல்லை.

“அவர் கொடுப்பாருங்க’ சொல்லி வேலையைப் பார்த்தார். சம்பத்திற்கு அம்பலவாணன் இங்கு வாடிக்கையாளர் புரிந்தது, அடுத்து அவரே இருபது ரூபாயைக் கொடுத்து மீதி சில்லரையை வாங்கிக் கொண்டார்.

அடுத்து பங்க் கடையை நோக்கி சென்றார். “சிகரெட்?“ இவனைத் திரும்பிப் பார்த்துக் கேட்டார்.

“பழக்கம் இல்லே சார்!“

“எனக்கு ஒரு கோல்டு பில்டர்!” கடைக்காரனிடம் காசு நீட்டி வாங்கினார்.

“சார்! நீங்க…?” சம்பத் அதிர்ச்சி ஆச்சரியமாக பார்த்தான்.

“எப்போதாவது உண்டு. எல்லா பழக்கமும் உண்டு. ஆனா எதையும் நிரந்தரப் படுத்திக்கலை. புண்பட்ட மனதை புகையை விட்டு ஆத்து, வருத்தம் வந்தா தண்ணி அடி, மனம் அமைதிப்படும்ன்னா சீட்டாடு கதையெல்லாம் கெடையாது. எப்போ எது தோணுதோ அதை செய்வேன்.” சொல்லி பற்ற வைத்தார்.

சம்பத்திற்கு அவர் மறு முகம் வியப்பு திகைப்பாய் இருந்தது,

“மாமிக்கு இது தெரியுமா சார்?“

“பொண்டாட்டிக்குத் தெரியாத ரகசியம் இருக்கா என்ன? எல்லாம் தெரியும்! ஆனா கண்டுக்க மாட்டாள். நானும் அவளை அவ போக்குக்கு விட்டுட்டேன். ஏன் தெரியுமா?”

“தெரியலை சார்.”

“அவ அழகுக்கு நான் எடுப்பு கெடையாது, இதுல எனக்கே கொஞ்சம் வருத்தம். அவளுக்கும் மனக்குறை. என் உத்தியோகம் சம்பளம் காலம் நேரம் எங்களை முடிச்சுப் போட்டுடுச்சு. இதுனால வெளியிடங்களுக்கு நாங்க சேர்ந்து போறது இல்லே. எப்படியோ நாங்க ரெண்டு பெத்து வளர்த்து ஸ்டேட்ஸ்ல விட்டாச்சு. நான் பொண்டாட்டி புள்ளைங்களுக்கு என்ன செய்யனுமோ அதை யெல்லாம் செய்ஞ்சுட்டேன். இப்போ பொண்டாட்டி மதிக்கலை. அவ ஆட்டம் பிடிக்கலை!” நிறுத்தி ஆழமாக சிகரெட்டைப் புகைத்து விட்டார்.

மனுசன் மனதிலுள்ள பாரத்தையெல்லாம் என்னை அழைத்து வந்து கொட்டக் காரணம்? சம்பத் அவரைப் புரியாமல் பார்த்தான்.

சொந்த சோகம். மனுசன் இதனால்தான் எதிலும் ஒட்டாமல் இருக்கிறாரோ?! தோன்றியது.

“விடு. என் சோகம் என்னோட விசயத்துக்கு வர்றேன். இப்போ பங்கஜத்தோட சேர்ந்து உன் மனைவியும் கெடுறாப்போல தோணுது” சொல்லி சிகரெட்டைத் துாக்கி எறிந்தார்.

“சார்ர்..!” சம்பத் திடுக்கிட்டான்.

“நேத்தைக்கு ரெண்டு பேரும் ரங்கோன் ரங்கமணி வீட்டுக்குப் போயிருக்காங்க. ரங்கமணி யார் தெரியுமா…? பெரிய பொம்பளைப் பொறுக்கி! பணக்காரன்! இந்த ரெண்டு பொம்மனாட்டிகளும் அங்கே ஏன் எதுக்குப் போனாங்கன்னு தெரியலை. இதை என் பியூன் பிச்சமூர்த்தி வந்து சொன்னான். கஷ்டம்ன்னா அவன் மாசத்துல நாலைஞ்சு நாள் லீவு போட்டுட்டு ஆட்டோ ஓட்டுவான். அலுவலகம் விட்டு வந்ததும் தினம் ராத்திரி பத்து மணிவரை ஆட்டோ ஓட்டுறது அவன் உபதொழில்.”

சம்பத்தின் இதயத்தை எதுவோ செய்தது,

“அடுத்து நித்யாவிற்கு வந்த சில கடிதங்கள் என் மனைவி அலமாரிக்குள்ளே இருக்கு. எல்லாம் ஆரோக்கியா அனாதை ஆசிரமத்திலேர்ந்து வந்த கவர்கள். இவளுங்க ரெண்டு பேரும் சேர்ந்து நமக்குத் தெரியாமல் ஏதோ திருட்டுத்தனம் துரோகம் பண்றாளுங்களா தெரியலை.”

“? ? ?”

“நித்யாவுக்குத் தெரியாம அவளுக்கு வந்த கடிதங்களை பங்கஜம் வாங்கி வைச்சிருக்கலாம்ன்னு யோசனை செய்து பார்த்தேன். வாய்ப்பு இல்லே. ரெண்டு பேரும் வீட்டு மனைவிகள். தோழிகள். கண்டிப்பா நித்யா எதுக்கோ இவள்கிட்ட கொடுத்து பத்திரம் பண்ணி வைச்சிருக்காள். குழந்தை சம்பந்தமா கடிதம் வந்தாலும் அதை உனக்குத் தெரியாம மறைக்க காரணம்? பங்கஜத்தை என்ன அது கேட்டேன். பொம்மனாட்டிக்குள்ளே ஆயிரம் இருக்கும்ன்னு சொல்லி புடுங்கி வைச்சு பூட்டிட்டாள். அடிக்கடி இவுங்க ரெண்டு பேரும் அனாதை ஆசிரமத்துக்குப் போறாங்க. வெளி இடங்கள்ல சுத்துறாங்க. யார் யார்கிட்டேயோ பேசுறாங்க. உனக்குத் தெரியுமா?”

“தெ….தெரியாது சார்.”

“எல்லாம் எனக்குத் தெரிந்த ஆள் மூலம் கேள்விபட்டேன். நன்றி விசுவாசம், அனாதை குழந்தைங்களுக்கு தின்பண்டங்கள் வாங்கி, ஏதோ நல்லது செய்யப்போறாங்கன்னாலும் அதை ஏன் நம்ம கிட்ட மறைக்கனும்? மறைக்கிற அளவுக்கு அதுல என்ன தப்பு இருக்கு? குழந்தைங்களுக்குச் சோசியல் சர்வீஸ் செய்யாதேன்னு நாம மறைப்போம் தடுப்போம்ன்னு பயமா? ரொம்ப குழப்பமா இருக்கு.”

“….”

“அங்கே தப்பு நடக்க வாய்ப்பே இல்லே. அவுங்க ரெண்டு பேரும் பிள்ளை இல்லாதவங்களுக்கு அங்கே பிள்ளை வாங்கி கொடுக்கிறாங்களான்னும் தெரியலை. அது சம்பந்தமாககூட அந்த கவர்கள் இருக்கலாம். எந்த முடிவுக்கும் வர முடியலை. மனைவி மேல சந்தேகம் வேணாம் சம்பத். அவுங்க முதுகு மேல கண்ணை வைச்சு கண்காணிச்சா போதும். ஆனா யார் எது செய்தாலும் ஒரு காரணம் இருக்கும்.” முடித்தார்.

சம்பத்திற்குத் தலை கிறுகிறுத்தது.

அத்தியாயம் – 14

“சார்! அந்த கவர்ல என்ன விசயம்ன்னு நீங்க படிச்சுப் பார்க்கலையா?” சம்பத் சமாளித்துக் கேட்டான்.

“நான் பிரிச்சுப் படிக்கிறதுக்குள்ளே பங்கஜம் புடுங்கி அலமாரியில வைச்சுப் பூ ட்டிட்டாள்.”

“இனி பார்க்க முடியாதா?”

“முடியும்ன்னு தோணலை. முதலை வாய்க்குள்ளே போனது திரும்பாது. இன்னொரு முக்கியமான விசயம் அந்த கவர்ங்க இப்போ இடம் மாறி இருக்கும். பங்கஜம் நான் எடுத்துடுவேன்ங்குற பயத்துல எங்காவது மறைச்சு வைச்சிருப்பாள்.”

“அதுல என்ன இருக்குன்னு எப்படி சார் கண்டுபிடிக்கலாம்?”

அம்பலவாணன் கொஞ்ச நேரம் மௌனமாய் இருந்து யோசித்தார்.

“ஆசிரமத்துக்குப் போன் போட்டு கேட்கலாம். சரியான பதில் வரும்ன்னு சொல்ல முடியாது. நேரடியாய்ப் போய் முயற்சி செய்து பார்த்தால் ஓரளவுக்குப் பலன் இருக்கும். இந்த பொம்பளைங்க புத்திசாலிங்களாய் இருந்தால் எங்க விசயம் உங்களைத் தவிர மத்தவங்களுக்குத் தெரியக்கூடாதுன்னு எச்சரிச்சுட்டு வந்திருக்கலாம்.”

அந்த வழியும் அடைபட்டு போயிருக்கும் என்பது நினைக்கு சம்பத்திற்கு மலைப்பாக இருந்தது,

“இவுங்க ரகசியத்தைக் கண்டுபிடிக்க என்ன தான் சார் வழி?” குழப்பத்துடன் கேட்டான்.

“அதான் எனக்கும் தெரியலை. யோசிக்கிறேன்.” தலையை அன்னாத்தி பார்த்தார்.

“சார்! இவுங்க ரெண்டு பேரும் அங்கே எப்படியாவது சிக்கல்ல மாட்டி இருக்கலாமா?” தனக்கு உதித்ததைச் சொன்னான்.

“எப்படி?“

“நித்யாவிற்கு ஏற்கனவே அருணை எடுத்து வந்த அனுபவம் இருக்கு. அந்த வகையில வழி தெரிஞ்சவள் முறையில அவள் போல குழந்தைகள் இல்லாதவள் இவளோட தொடர்பு கொண்டு எனக்கும் தத்து வேணும்ன்னு இவளை அணுகி இருக்கலாம். இவளும் உதவி மனப்பான்மையில அவர்களை அழைச்சுப் போய் குழந்தைங்களைத் தத்து எடுத்து கொடுத்திருக்கலாம். டெபாசிட் பணம் குறைவு நித்யா ஜாமீன் போட்டு தன் பொறுப்புல ஏத்திருக்கலாம். குழந்தையை எடுத்துப் போனவள் கால தாமதம் செய்ய….அவள் ரெண்டு பேருக்கும் நடுவல மாட்டிக்கிட்டு முழிக்கலாம். தோழிங்குற முறையில நித்யா தன் கஷ்டத்தை உங்க மனைவிகிட்ட சொல்லி இருக்கலாம். இவுங்க ரெண்டு பேரும் போய் ஆசிரமத்துல பேச்சு வார்த்தை நடத்தி வந்திருக்கலாம். அது சம்பந்தமான கடிதங்கள் நித்யாவுக்கு வர… எனக்குத் தெரிஞ்சா ஆபத்துங்குற பயத்துல கடிதங்களை உங்க மனைவிகிட்ட கொடுத்து வைச்சிருக்கலாம்.” நிறுத்தினான்

“இருக்கலாம்!” அம்பலவாணனுக்கும் அப்படி தட்டுபட்டது, “இருந்தாலும் நமக்கு அந்த ரகசியம் தெரியாம எந்த ஒரு முடிவுக்கும் வரமுடியாது.” என்றார்.

“ஆமாம் சார். அதுக்கு ஒரே வழி அந்த கடிதங்கள் நமக்குக் கெடைக்கனும். கெடைக்காது. மாற்று வழி நாம ரெண்டு பேரும் ஆசிரமத்துக்குப் போய் விசாரிச்சுத் திரும்பனும்.”

“போவலாம்.” சம்மதமாகத் தலையை ஆட்டினார்.

“ஓகே சார். நாளைக்கு அலுவலகத்துக்கு விடுப்பு சொல்லிட்டு கிளம்பலாம்.”

“அந்த ஆசிரமம் எங்கே இருக்கு?”

“இங்கே இருந்து 150 கிலோ மீட்டர்ல இருக்கு. எனக்கு வழி தெரியும் கூட்டிப் போறேன். நாம பத்து மணிக்கெல்லாம் பேருந்து நிலையத்துல சந்திப்போம் சார்.”

“சரி.” என்ற அம்பலவாணன் “வீட்டுல இதைப் பத்தி கேட்க வேணாம்!” எச்சரித்தார்.

“சரி சார்.” சொல்லி சம்பத் வந்து வண்டியிலேறி புறப்பட்டான்.


மறுநாள் மதியம் போய் இறங்கியபோது அந்த ஆசிரமம் சுறுசுறுப்பாக இருந்தது. ஆசிரமத்துத் தலைவி அமர்தவள்ளி கண்ணாடி போட்ட பெரிய மேசையில் அமர்ந்திருந்தாள். அவளுக்குப் பின்னால் சுவரில் புத்தர், ஏசு, காந்தி, இராமங்க அடிகள். அறை அதிக ஆடம்பரமில்லாமல் ரம்மியமாக இருந்தது, தகவல் பலகையில் ஆண் 24 பெண் 56 என்ற குழந்தைகள் புள்ளி விபரங்கள் இருந்தது, “வணக்கம் மேடம்!” சம்பத் அவளுக்கெதிரில் நின்று கைகூப்பினான்.

“வணக்கம். நீங்க……?”தன் கண்ணாடி வழியே பார்த்தாள்.

“நான் அருண் அப்பா இவர் நண்பர் மேடம்!”

“ஓ…! உட்காருங்க.”

எதிரில் அமர்ந்தார்கள்.

“என்ன விசயம்?“

“எங்களுக்குச் சின்ன தகவல் வேணும் மேடம்.”

“சொல்லுங்க?”

“எங்க மனைவிகள் ரெண்டு பேரும் அடிக்கடி இங்கே வர்றாங்க.”

“பேர் ?“

“நித்யா, பங்கஜம்.”

அமர்தவள்ளி ஒரு நிமிடம் நிதானித்தாள். உண்மையைச் சொல்லலாமா கூடாதா? யோசித்தாள்.

பின் ஒரு முடிவிற்கு வந்து…”அவுங்க ரெண்டுபேரும் அருண் பிறந்தநாளுக்கு வந்து இங்கே உள்ள குழந்தைங்களுக்கு இனிப்பு கொடுப்பாங்க. அடுத்து…”

“சொல்லுங்க மேடம்?“

“பண உதவி பண்றாங்க. தி கிரேட் மாசம் ஐயாயிரம் அனுப்புவாங்க.”

சம்பத்தும் அம்பலவாணனும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தார்கள்.

“இந்த அனாதை ஆசிரமத்து மேல அவுங்களுக்கு ரொம்ப அக்கறை. குழந்தை மேல பரிவு, பாசம். இந்த அளவுக்கு அவுங்க பண உதவி செய்வாங்கன்னு நானே எதிர்பார்க்கலை. இவுங்களைப் போல நல்ல மனசு உள்ளவங்க பத்து பேர் கிடைச்சா போதும். நான் இந்த ஆசிரமத்தை இன்னும் சிறப்பா நடத்துவேன்.”

“நான் பெரிய பணக்காரி கெடையாது. இந்த ஆசிரமத்தினால பெரிய பலா பலன் அடையனும்ங்குற எண்ணத்துல இதை நான் ஆரம்பிக்கலே. இயற்கையாகவே அனாதை குழந்தைங்க மேல எனக்கு அன்பு, அக்கறை. ஆண்டவன் பொறப்புல யார் அனாதை? கெடையாது. சந்தர்ப்ப சூழ்நிலை பெத்தவங்க பிள்ளைங்க விட்டுப் பிரிய வேண்டிய கட்டாயம். அது நல்லதுக்காகவும் இருக்கலாம் கெட்டதுக்காகவும் இருக்கலாம். இந்த பிரிவுனால குழந்தைங்க பாதிக்கக்கூடாதுன்னுதான் நான் ஆசிரியையாய்த் தொழில் செய்த வருமானத்தை வைச்சு இதை ஆரம்பிச்சேன். அடுத்து சில நல்ல உள்ளங்கள் உதவி செய்தாங்க. எப்போதாவது குழந்தைங்கள் தத்து போகும் போது வர்ற வருமானம். எல்லாம் வைச்சு சமாளிச்சேன். என் கஷ்டத்தைப் பார்த்து நித்யா அம்மாவே உதவ முன் வந்து கூட பங்கஜம் அம்மாவும் சேர்ந்து வர்றது ஆச்சரியம். ஏறக்குறைய அவங்களுக்கு என் மனநிலை. அருண் கைங்கரியம். அவனாலதான் இவுங்க ரெண்டு பேரும் எனக்குக் கெடைச்சாங்க.” அவர்களைப் பெரிதாக சொல்லி நிறத்தினாள்.

அம்பலவாணனுக்கும் சம்பத்திற்கும் கேட்க பெருமையாய் இருந்தாலும் இந்த அளவிற்கு அவர்கள் உதவி செய்ய வருமானம்? உறுத்தியது.

“இதுக்காக நீங்க கடிதம் போடுவீங்களா மேடம்?“

‘பணம் கெடைச்சதும். நன்றி தெரிவிச்சு கடிதம் போடுவோம். அவுங்களும் மாசம் ஒரு தடவை தின்பண்டங்களோட வந்து குழந்தைங்களுக்குக் கொடுத்து கொண்டாடிட்டுப் போவாங்க.”

தகவல் திருப்தியாக இருந்தது, கடிதங்களில் வில்லங்கம் இல்லை என்பது புரிந்தது.

“ரொம்ப நன்றி மேடம்!” இருவரும் கை கூப்பி வணக்கம் தெரிவித்து விட்டு வெளியே வந்தார்கள்.

“இப்போ விசயம் என்னன்னு புரியுதா?” அம்பலவாணன் சம்பத்தைப் பார்த்துக் கேட்டார்.

“என்ன சார்?“ அவரைக் குழப்பமாகப் பார்த்தான்.

“நம்ப பொண்டாட்டிங்க நல்லது செய்யுறாங்க. நமக்குத் தெரிஞ்சா தடுப்போம். பணம் விசயம் புதிர் மறைக்கிறாங்க”

“மாசம் இவ்வளவு கிடைக்க வழி?”

“என் சம்பாத்தியத்திலேர்ந்து எடுக்கலை.”

“என் சம்பாத்தியத்திலேர்ந்தும் எடுக்கலை.” சம்பத் சொன்னான்.

“வழி?”

சம்பத்திற்கு… சிகரெட் புகை. கைக்குட்டை எல்லாம் ஞாபகம் வந்தது.

“ஒரு வேளை தப்பா…” இழுத்தான்.

“எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு.” அம்பலவாணன் சொன்னார்.

“நமக்குத் துரோகமா?!“ சம்பத் அதிர்ச்சியாக அவரைப் பார்த்தான்.

“பின்னே பணம் எப்படி வரும்?” அம்பலவாணன் கேள்வியைப் போட்டார்.

சம்பத்தால் தாங்க முடியவில்லை.

“நாம எந்த குறையும் வைக்கலையே சார்?” துவண்டான்.

“வைக்கலை. வழி?” அவர் மீண்டும் கேட்டு அவனைப் பார்த்தார்.

சம்பத்திற்குத் தலை வெடித்துவிடும் போலிருந்தது,

“என்னை என் மனைவிக்குப் பிடிக்கலை. அடுத்து அவளுக்கும் எனக்கும் பதினைஞ்சு வயசு வித்தியாசம். அவ 35 வயசு இளமை திமர்ல இருக்காள். நான் 50 வயசு அரைக் கிழமா இருக்கேன். கண்ட கண்ட பசங்ககிட்ட பேசுறதா பழகறதா கேள்வி. வில்லங்கம் வந்து விகல்ப்பம் வராதவரை நமக்குக் கவலை இல்லேன்னு நான் கண்டுக்கிறதில்லே. இன்னைக்கு ரங்கமணி விசயம் வரை வந்ததும்தான் நான் இப்படி இருக்கலாமோன்னு யோசனை பண்றேன்”.

“எப்படி சார்?” கசங்கிப் போனவனாகக் கேட்டான்.

“செத்துப் போனா உடல் உறுப்பெல்லாம் தானம் பண்றாங்க. வீணாப் போற உடலை மாணவர்கள் பயன்படட்டும்ன்னு மருத்துவக் கல்லுாரிக்குக் கொடுக்கிறாங்க. இப்படியெல்லாம் இருக்கும் போது பிள்ளை பேறு இல்லாமல் வீணா இருக்கும் இந்த உடம்பை பிள்ளைகளுக்காக பயன்படுத்தலாம்ன்னு நித்யா நெனைச்சிருக்கலாம்.”

“ஒரு பெண்ணால் இப்படி யோசிக்க நடக்க முடியுமா?” சம்பத் கற்பனை செய்து பார்க்கவே நடுங்கினான்.

அவன் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டஅம்பலவாணன்…

“மனுச மனசு எப்படி வேணும்ன்னாலும் மாறலாம் சம்பத். ராபின்ஹுட் தான் திருடன், கொள்ளைக்காரன், குற்றவாளின்னு பேரெடுத்து இருக்கிறவங்கள்கிட்ட பிடுங்கி இல்லாதவங்களுக்கு ஏன் கொடுக்கனும்….? அப்படி கொடுக்க வேண்டிய காரணம்.. ? மனசு. நல்லதுக்காக பொய் சொல்லலாம்ன்னு வள்ளுவரே சொல்லி இருக்கார். இவுங்க மனசும் இப்படி ஏன் மாறி இருக்கக்கூடாது?“

“அது இப்படித்தான்னு நாம திட்டவட்டமா முடிவெடுத்து மனைவிகளை வெறுக்க வேணாம். எது உண்மைன்னு தெரிஞ்ச பிறகுதான் நாம அடுத்த கட்ட நடவடிக்கைக்குப் போகலாம். துாரத்திலேர்ந்து பார்க்கும்போது சில பாதைகள் நமக்குத் தவறாய்ப்படலாம். ஆனால் நெருங்கிப் போனால்தான் நம்ம நெனைப்பு தப்பு, சரியான பாதைன்னு படும். உதாரணத்துக்கு ரயில் தண்டவாளங்கள். துாரத்துப்பார்வைக்குச் சேர்ந்தாப் போல தெரியும். கிட்ட போகப் போக அது சேராமல் விலகித்தானிருக்கும். அதனால அவசரப்படவேணாம். நிறுத்தி நிதானமாய் உண்மையைக் கண்டு பிடிப்போம்.”

சம்பத்திற்கும் அது சரியாகப் பட்டது.

இருந்தாலும் இப்படி ஏன் இருக்கக்கூடாது? சம்பத்திற்குள் யோசனை ஓடியது. நித்யாவா நமக்குத் துரோகம் செய்கிறாள்?! நினைக்க இதயம் படபடத்தது, கையும் மெய்யுமாய்ப் பிடிக்காதவரை யாரும் இதற்கு ஒத்துக் கொள்ளப் போவதில்லை. எப்படி பிடிக்க?

நிறைய சிந்தித்தான்.

அத்தியாயம் – 15

இரவு சரியான தூக்கம் இல்லை. அலுவலகத்தில் கண் எரிந்தது, கான்டீன் போய் முகம் கழுவி வந்து அமர்ந்தான்.

“சார்! உங்களைத் தேடி யாரோ வந்திருக்காங்க.” பியூன் வந்து சொன்னான்.

‘யாராய் இருக்கும்?’ எழுந்து வெளியே வந்தான். வரவேற்பறைக்குள் நுழைந்தவனுக்குள் ஆச்சரியம். லேசான அதிர்ச்சி. எதிர்வீட்டு சொர்ணமுகி.

‘ஏன் என்ன காரணம் தன்னைத் தேடி வந்திருக்கிறாள்? அவர்களுக்குள் பிரச்சனை. தலையிட்டுத் தீர்த்து வையுங்கள் என்று தன்னிடம் முறையிட்டு உதவி நாடி வந்திருக்கிறாளா?’

“வணக்கம்!”

“வ….வணக்கம்,“

“உங்ககிட்ட ஒரு முக்கியமான விசயம் பேசனும். கொஞ்சம் வெளியே போகலாமா?”

ஏற்கனவே இவளைப் பார்த்தால் நித்யாவிற்குப் பிடிக்காது. தன் கணவனை அபகரித்துக் கொண்டு விடுவாள் என்கிற பயத்தில் தன்னை வாசல் பக்கமே விடாதவள் இப்போது இவளுடன் பேசுவது தெரிந்தால்? சம்பத்திற்கு நினைத்துப் பார்க்கவே நடுங்கியது. மேலும் இவள் வந்த விசயம் தெரிந்தால் போதும் கிரண் ‘புடிச்சுட்டான்ய்யா!‘ குதிப்பான். அலுவலகத்தை நாற அடித்துவிடுவான். அதோடு மட்டுமில்லாமல் இவளோடு பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தாலே மற்றவர்கள் தவறாக நினைப்பார்கள். முக்கியம் அலுவலகம் நாற கூடாது. இந்த இடத்தை விட்டு காலி செய்ய வேண்டும்.

“பேசலாம்!” தலையசைத்து வெளியே வந்தான். அதற்குள் இவளை யாரும் அலுவலகத்தில் பார்த்துவிடக்சுடாது என்கிற பயத்தில் ‘சீக்கிரம் வாங்க” அழைத்து வேகமாக நடந்து அருகிலுள்ள உணவு விடுதிக்குள் புகுந்து ஒரு குடும்ப அறைக்குள் நுழைந்து மறைந்தான். சொர்ணமுகியும் அவன் பின்னால் சென்று முன் அமர்ந்தாள்.

பணியாள் உள்ளே வந்தான்.

வெறுமனே உட்கார்ந்து எப்படி பேசமுடியும்?

“சூடா கொரிக்க ஏதாவது எடுத்து வாப்பா.” அவன் நகர்ந்தான்.

“இப்போ சொல்லுங்க என்ன விசயம்?“

“சொல்றதுக்கு முன் சில நிபந்தனை. நான் சொல்றதைக் கேட்டு நீங்க ஆத்திரப்படக்கூடாது. தப்பான முடிவு எடுத்துடக்கூடாது.”

‘என்ன இது புதிர்?!’ பின்னால் இடி. புரிந்தது,

“என்ன யோசிக்கிறீங்க. சொல்லுங்க?”

பணியாள் இரண்டு தட்டு பகோடா கொண்டு வந்து வைத்துவிட்டு “அடுத்து இரண்டு காபியா சார்?” கேட்டான்.

“நான் கூப்பிடும் போது வரலாம்ப்பா.”

“சரி சார்!” அவன் நகர்ந்தான்.

“சாப்பிடுங்க.” சொல்லி இவன் ஒரு துண்டு எடுத்து கடித்தான்.

“என் நிபந்தனைக்கு நீங்க பதில் சொல்லலை.” சொர்ணமுகி பகோடாவைத் தொடாமல் சம்பத் முகத்தைப் பார்த்தாள்.

“நான் உங்க நிபந்தனையை ஒத்துக்கிறேன். சாப்பிடுங்க.”

“உங்களுக்கு நிறைய நண்பர்கள் இருக்காங்களா?” ஒரு துண்டு எடுத்துக்கொண்டே கேட்டாள்.

“ஏன் கேட்குறீங்க?”

“நீங்க இல்லாத சமயம். வீட்டுக்குத் தினம் யாராவது தேடி வர்றாங்க.”

“புரியும்படி சொல்லுங்க?”

“நீங்க அலுவலகம் போனதும் பெரும்பாலும் தினம் யாராவது ஒரு ஆம்பளை உங்க வீட்டுக் கதவைத் தட்டுறாங்க. திறந்து உள்ளே நுழையுறாங்க. அதே மாதிரி பக்கத்து வீட்டுக்கும் சில பேர் வந்து போறாங்க. அநேகமா இதுக்கு மூலகாரணம் அந்த மாமியாத்தானிருக்கும்ன்னு எனக்குப் படுது. மாமியும் உங்க மனைவியும்தான் எங்கே போனாலும் சேர்ந்து போறாங்க வர்றாங்க. ஒரு நாள் கோயில்ல இவுங்க ரெண்டு பேரும் ஒரு ஒரு ஆம்பளையோட சிரிச்சுப் பேசிக்கிட்டிருந்தாங்க. அடுத்த நாள் அந்த ஆள் சரியா வந்து உங்க வீட்டு கதவைத் தட்டி உள்ளே நுழைஞ்சவர் ரொம்ப நேரம் கழிச்சுத் திரும்பினார். ஒரு உதாரணத்துக்குச் சொன்னேன். இது போல பல தடவை.”

“இது எனக்குத் தப்பாத் தெரியுதோ இல்லையோ மத்தவங்களுக்குத் தப்பா தெரியுது. ஒரு குடும்பப் பெண் இப்படியெல்லாம் நடந்துக்கலாமான்னு பேசிக்கிறாங்க.”

காபி வந்தது. இருவரும் குடித்தார்கள்.

“அடுத்து வீட்டைப் பூ ட்டிட்டு ரெண்டு பேரும் எங்கோ போறாங்க. திரும்புறாங்க. எங்கே போறாங்க என்ன செய்யுறாங்கன்னு தெரியலை. இந்த விசயத்தை நான் சொல்றதுக்குக் காரணம்… புருசன் சரியாய் உள்ள குடும்பப் பெண் கெட்ட பேர் எடுக்கக் கூடாது”. முடித்தாள்.

சம்பத்திற்குப் பூமி பிளந்து தன் காலடியில் நழுவவதைப் போலிருந்தது.

“நான் எந்த தப்பையும் கண்ணால பார்க்கலை. நடக்கிற நடப்பை வைச்சு சொன்னேன். அதனால நான் சொன்னது தப்பாச்கூட இருக்கலாம். அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்துடாதீங்க. உண்மை என்னன்னு தெரிஞ்சபிறகு அதைப் பத்தி யோசிக்கலாம்.” என்றாள்.

சொர்ணமுகி விசயத்தைச் சொல்லிச் சென்றபிறகு அலுவலகத்தில் இருக்க முடியவில்லை. மனதை தைரியப்படுத்திக் கொண்டு வண்டியை வீடு நோக்கி விட்டான்.

வழியில் “சம்பத்!” மல்லிகா கை காட்டினாள்.

‘இவ எப்படி இங்கே?’ நிறுத்தினான்

“எப்போ வந்தே?” கேட்டான்.

“நான் இங்கே வந்து நாலு நாளாச்சு.” என்றாள்.

“என் வீட்டுக்குப் போன் பண்ணுனீயா?”

“இல்லியே!”

“இதுக்கு முந்தி?”

“ஒரு தடவைகூட செய்யலை.”

இப்போது இவளை வீட்டிற்கு அழைத்தால் வந்துவிடுவாள். சூழ்நிலை சரி இல்லை. ஒதுக்கினான்.

“அப்புறம் என்ன சேதி?“

“நான் இன்னைக்கு ஊருக்குக் கிளம்பறேன். அடுத்த முறை வரும்போது உன் வீட்டுக்கு வர்றேன்”

“சரி”.

“வர்றேன்” அகன்றாள்.

‘ஆக… இவள் போன் செய்யவில்லை. அலுவலகத்தில் உள்ள மாலா நீலாவும் செய்யவில்லை. வேறு பெண் நண்பர்கள் கிடையாது. யார் செய்திருப்பார்கள்..?

வண்டியை வேகமாக விட்டான். வீட்டு முன் நிறுத்தி படி ஏறினான். உள்ளே பேச்சுக் குரல் நின்றான்.

“நித்யா! உன் புருசனும் என் புருசனும் சேர்ந்து ஏதோ சதித் திட்டம் தீட்டுறாங்க.” பங்கஜத்தின் குரல்.

“என்னக்கா சொல்றீங்க?!”

“நமக்குத் தெரிஞ்சு இதுநாள் வரை பேசாதவங்க முந்தா நாள் பூங்காவுல உட்கார்ந்து ரொம்ப நேரம் பேசி இருக்காங்க.”

“உங்களுக்கு எப்படித் தெரியும்!?”

“நம்ம பழைய ஆள் பாலு சொன்னான்.”

“நிசமாவா?“

“ஆமாம். எதிர் வீட்டுக்காரியைப் பத்தி இல்லாததும் பொல்லாததும் பேசி புருசன் புத்தியை அவள் மேல் திருப்பி ஆள் நம்ம மேல சந்தேகப்படாதவாறு செய்யுறது. எவனாவது நமக்குச் செய்த போனை மறைச்சு பொம்பளை பேசினா எவ அவன்னு கேட்டு பயமுறுத்தி பெட்டிப்பாம்பாய் ஆக்குற வேலையெல்லாம் இனி நடக்காதுன்னு நெனைக்கிறேன்.”

“ஏன்?“

“ஆள் சுதாரிப்பா இருக்காங்க. ஒரு வார காலமா நம்ம புருசன்ங்க முகம் சரியே இல்லே.”

“ஆமாக்கா!”

சம்பத் அதற்கு மேல் எதையும் காதில் வாங்காமல் மெல்ல திரும்பினான்.

‘பெண் ஆணை எப்படியெல்லாம் முட்டாளாக்குகிறாள்! நினைக்க அவமானமாக இருந்தது, ஏன் என்ன காரணம் துரோகம்? பிள்ளை இல்லாத குறை எப்படியாவது பெற வேண்டுமென்கிற நினைப்பில் இவ்வாறா? எதற்கு அனாதை ஆசிரமத்திற்குப் பணம்? ஒரு வேளை செய்யும் பாவத்தைக் கழுவும் முயற்சியா? இல்லை அம்பலவாணன் சொன்னது போல் உருப்படாமல் போகும் உடலை இப்படி நல்லது செய்ய பயன்படுத்திக் கொண்டாலென்ன நினைப்பா? யார் சொல்லி இப்படி தப்பான வழியைக் காட்டி இருப்பார்கள்? நித்யா எங்கே கற்றாள்? கற்றார்கள்!’ அப்படியே காலாற நடந்து வந்து ஒரு மரத்தடியில் உட்கார்ந்து சாய்ந்து கண் மூடினான்.

அத்தியாயம் – 16

உரியவனிடம் எதிர்பாராமல் அகப்பட்ட அதிர்ச்சி கட்டிலுக்கருகில் நித்யாவும் அவனும் நடுக்கத்துடன் நின்றார்கள். ரொம்ப வேர்த்து நடுங்கி நித்யாவைவிட அவனைப் பார்க்க ரொம்ப பார்க்க ரொம்ப பாவமாக இருந்தது சம்பத்திற்கு அசிங்கத்தைப் பார்த்த அருவருப்பு. அந்த இளைஞனை நிமிர்ந்து பார்க்கவே பிடிக்கவில்லை. ‘நீ போ!‘ என்பது போல கையை அசைத்தான்.

அவன் உயிர் பிழைத்த அதிசயத்தில் தப்பித்தோம் பிழைத்தோமென்று வாசலுக்கு ஓடி மறைந்தான். இப்போது கணவன் மனைவி மட்டுமே எதிரெதிரில் நின்றார்கள்.

சம்பத் தனக்குள் எழுந்த கோபம் ஆத்திரம் அவமானத்தையெல்லாம் தன் கட்டுக்குள் கொண்டு வந்து அடக்கி சிரமப்பட அங்கே கனத்த மௌனம். ஒருவாறாக தன்னைச் சமப்படுத்தி…

“ஏன் இப்படி செய்தே நித்யா?” கொஞ்சமாய் தலையை நிமிர்த்தி மனைவியைக் கூர்ந்து பார்த்து கேட்டான்.

அவள் இப்போது அதிர்ச்சியிலிருந்து மீண்டு திடமாக நின்றாள். தலைக்கு மேல் வெள்ளம் இனி சாண் போனாலென்ன முழம் போலலென்ன திடம். வாயைத் திறக்கவில்லை.

“நமக்குள் குழந்தை இல்லை என்கிற ஏக்கம் தாக்கம். எவன் மூலமாவது குழந்தைப் பெத்துக்கலாம்ங்குற முயற்சியா நித்யா?” கடினமான குரலில் அதே சமயம் மெல்ல கேட்டான்.

“…..”

“அதுக்குத்தான் அருணை எடுத்து வளர்க்கிறோமே! அப்புறம் ஏன் இப்படி? என்ன குறை? எனக்கு அந்த குழந்தையில திருப்தி இல்லே. சுமந்து பெத்துக்கிறதுலதான் இன்பம் திருப்தி, பெண்ணோட பேறு முழுமை. அதனாலதான் இப்படின்னு யாராவது உன்னை மூளை சலவை செய்தாங்களா. ஏதாவது சொல்லு நித்யா? நமக்குக் குழந்தை இல்லேங்குற ஒரு குறையைத் தவிர வாழ்க்கையில வேற என்ன குறை?” சம்பத் குரல் உயர்ந்தது.

“…..”

“நீ மௌனமாய் இருக்கிறதுனால நடந்ததெல்லாம் பொய்யாகி உன்னை மன்னிக்க முடியாது, என்னை ஏமாத்தி வெளியே ஓடி தப்பிக்க முடியாது. காரணத்தைச் சொல்லாமலும் நீ இந்த இடத்தை விட்டு நகர முடியாது, தயவு செய்து மேலும் மௌனமாய் இருந்து என்னை மிருகமாக்கிடாதே நித்யா.”

“…..”

“ஒழுக்கம் கெட்ட சொர்ணமுகி எதிர்வீட்டுக்காரி ஒருத்தனோட ஒழுங்கா குடித்தனம் நடந்துறாள். நீ ஒருத்தனோட வாழ்ந்து பல பேர்கிட்ட….” சம்பத் வார்த்தையை முடிக்கவில்லை…

“நிறுத்துங்க?” நித்யா தாங்கமுடியாதவள் போல் காட்டுக்கத்தலாய்க் கத்தினாள்.

“எனக்கு ஒழுக்கம் கெட்டவள் விபச்சரி பட்டம் வேணாம். நான் வெறி எடுத்தோ குழந்தை ஆசையிலேயோ அடுத்தவன்கிட்ட போகலை. என் உடம்பை அனாதை குழந்தைங்களுக்காக உபயோகப்படுத்தறேன்!”

“புரியலை நித்யா!”

“இந்த பணத்தையெல்லாம் நான் அனாதை ஆசிரமத்துக்குக் கொடுக்கிறேன்.”

“புரியலை?!” குழப்பமாகப் பார்த்தான்.

“அருணைத் தத்தெடுக்கும்போதே ஒரு பெண்ணோடு பலாபலனே பிள்ளைக்குத் தாயாகுறதுதான். தாய்மை இல்லாத பெண்ணோட உடல் வீண். இப்படி வீணாக இருக்கும் உடலை அனாதை பிள்ளைகளாவது வளர்க்க பயன்படுத்தினால் என்னன்னு யோசனை. ஏன் செய்யக்கூடாதுன்னு முடிவுக்கு வந்து இறங்கினேன். எந்த புருசனால இதைச் சகிச்சுக்க முடியும் சம்மதிப்பாங்க. அதனால என் வாழ்க்கையைக் காப்பாத்திக்க உங்களுக்குத் தெரிவிக்கலை.”

சம்பத்திற்கு ஆத்திரம் வந்தது, அடக்கினான்.

“செத்து வீணா சுடுகாட்டுக்குப் போகிற உடலை மாணவர்கள் பயனுக்காக மருத்துவக்கல்லுாரிக்குக் கொடுக்கிறாப்போல. கிட்னி கண் உடறுப்புத்தானம் போல. ஏன் இந்த உடம்பை இப்படி பயன்படுத்தக்கூடாது? மனைவின்னா புருசன் ஒருத்தனோட படுத்து ஒழுங்கா குடித்தனம் நடத்தி இந்த வீண் உடம்பை வீணாக்கனுமா? இப்படி நல்லது செய்ய உபயோகப்படுத்தக் கூடாதா? என்ன தப்பு? உங்களுக்கு என்ன குறை?” நித்யா ஆவேசப்படாமல் அழுத்தம் திருத்தமாக கேள்வி மேல் கேள்வி அடுக்கினாள்.

சம்பத்திற்கு மனைவியின் மனசு புரிந்தது. அதே சமயம் அவள் தவறும் தெரிந்தது, நல்லதுக்காக தவறை நியாயமாக நினைக்கும் மனப்போக்கு நீக்கினால் இவள் சுத்தம். எப்படி போக்க? சிந்தித்தவன்..

“இது தப்பு நித்யா!” மெல்ல சொன்னான். “இந்த உடலை இப்படி பயன்படுத்தனுன்னு அவசியமில்லே. நல்லா உழைச்சு அந்த வருமானத்தைக் கொடுத்து உதவலாம். இது துரோகம்!” என்றான்.

இத்தனைக் காலம் உடலை நல்ல காரியத்திற்காக உபயோகப் படுத்துகிறோம். தவறில்லை என்று இருந்தவளுக்குள் இப்படியும் செய்திருக்கலாம் பட…துணுக்குற்று அவனைப் பார்த்தாள்.

சம்பத் தொடர்ந்தான்.

“நித்யா! உடலையும் உயிரையும் இறைவன் வாழ் படைச்சான். அந்த வாழ்க்கையில மனுசன் மத்தவங்களுக்காக வாழ்றது உதவி செய்யிறது ரொம்ப பேறு புண்ணியம். ஆனா எந்த உதவி ஒத்தாசையும் யார் மனசையும் புண்படுத்தக்கூடாது. யார் மனசையும் உறுத்தாம யாரையும் கஷ்டப்படுத்தாம உதவுற உதவிதான் செய்யிறவங்களுக்கும் செய்யப்படுறவங்களுக்கும் நல்ல பலா பலனைத் தரும். டாக்டர் ஒரு நோயாளியைக் கொன்னு இன்னொரு நோயாளியைப் பிழைக்க வைக்கிறது எந்த விதத்துல நியாயம்? அப்படி செய்யுறது எப்படி சரி?“ கேட்டான்.

நித்யாவிற்கு அடிவயிற்றில் உதை விழுந்தும் பேசவில்லை. முகம் தெளிவில்லை.

சம்பத் அப்படியே அடுத்த கட்டத்திற்கு மாறினான்.

“ஓ.கே. நித்யா நீ செய்தது சரின்னே வைப்போம். குழந்தை பேறு இல்லாத உன் உடம்பை அனாதை குழந்தை வளர்ப்புக்காக உபயோகப்படுத்தறே. நல்ல காரியம். பாராட்டப்பட வேண்டிய விசயம் பாராட்டுறேன். நான் ஒரு குழந்தைக்குத் தகப்பனாக தகுதி இல்லாத ஆம்பளை. உன் உடம்பைப் போல என் உடம்பும் வீண். உன்னைப் போல எனக்கும் இந்த உடம்பை குழந்தைங்க வளர்ப்புக்காக உபயோகப்படுத்த ஆசை. உறுப்புத்தானம் செய்து உடலை விண்ணப்படுத்தாம உபயோகப்படுத்த விரும்பம். வழி என்ன?” கேள்வியைப் போட்டான்.

நித்யா இப்போது அவனை ஆடிப்போய் பார்த்தாள்.

“பெண் வாய்ப்பு வசதி இருக்கிறதுனால உடலை தவறாய்ப் பயன்படுத்தக்கூடாது. உதவிங்குறது பொது. நல்ல காரியம். அந்த நல்ல காரியத்தை ஆணும் பெண்ணும் சரியாய்ச் செய்யனும். அதுதான் சரி. நியதி. இப்போ சொல்லு. நீ செய்ஞ்சது தப்பு. நடப்பு துரோகம். பல பேர் தொட்ட உன்னோடு என்னால குடும்பம் நடத்த முடியாது. துரோகத்துக்குத் தண்டனை என்ன செய்ய?” கேட்டு ஏறிட்டான்.

நித்யா தன் தலையில் தானாகவே இடி இறங்குவதை உணர்ந்தாள்.

“விவாகரத்து!” அவளே உணர்ந்து மெல்ல முணுமுணுத்தாள்.

சம்பத் கண்களைத் திறந்தான். முகம் தெளிவாய் ஆனது.


இனி கையும் மெய்யுமாகப் பிடிக்க வேண்டியதுதான் பாக்கி! நினைத்தான். அதுகூட தேவை இல்லை. அன்றைக்கு எவனோ விட்டுப்போன கைத்துண்டு சாட்சிக்கு இருக்கிறது. எவனோ பிடித்துப் போன சிகரெட் துண்டு நாற்றம். கடைத்தெருவில் ஒருவன் பேசிப் போனது எல்லாம் சாட்சி. எதையும் மறைக்க முடியாது, நேரடியாகவே கேட்டு விவாகரத்தை முடித்துவிடவேண்டியதுதான். திடமாக எழுந்தான்.

“சம்பத்!“ யாரோ அழைத்தார்கள்.

திரும்பினான். சுபான்! அவன்தான் அழைத்தான். இவனை நோக்கி வந்தான்.

‘இவனும் உடந்தையா?’

‘பட்டுப்புடவை நகையெல்லாம் வாங்கிக் கொடுத்தானே நித்யாவிற்குத் தொடுப்பா?’ மனசுக்குள் யோசனை வெறித்தான்.

“வீட்டுக்குப் போனேன் காணோம். தேடி வந்தேன். என்ன இங்கே?” வியப்பாய்க் கேட்டு அருகில் வந்தான்.

“நல்ல நட்பு அன்பு பாசம் அக்கறை காட்டுவது. எப்படி முடியும்?”

“என் மனைவி எனக்குத் துரோகம் செய்யுறாடா!” சட்டென்று உடைந்து அழுதான்.

“சம்பத்!”

எல்லாவற்றையும் கொட்டினான். மெல்ல ஆரம்பித்து முழுதும் கொட்டினான்.

எல்லாவற்றையும் பொறுமையாக கேட்ட சுபான் “தப்பு சம்பத்! தப்பு. நீ நெனைக்கிறது அத்தனையும் தப்பு!” என்றான்.

“என்னடா சொல்றே?!” இவன் அவனை அதிர்ச்சியாக ஏறிட்டான்.

அதே சமயம் அம்பலவாணன் இவர்களை நோக்கி வேர்க்க விறுவிறுக்க வந்தார்.

“விலாவாரியா அதே சமயம் சுருக்கமா சொல்றேன். மாமியும் நித்யாவும் யாருக்கும் துரோகம் செய்யலை. நல்ல ஆளுங்களைச் சந்திச்சு பேசி வீட்டுக்கு வரவழைச்சு அனாதை பிள்ளைங்களுக்கு நல்லது செய்யச் சொல்லி உபதேசிச்சு அவுங்ககிட்டே இருந்து ஒரு தொகையை வாங்கி சேர்த்து அனாதை ஆசிரமத்துக்கு அனுப்பறாங்க. அப்படி வரவழைக்கப்பட்ட ஆட்கள்ல ஒருத்தன் உன் வீட்டுக்குள்ளே சிகரெட் பிடிச்சான். கைத்துண்டு விட்டுப்போனான். உனக்கு தன் மேல சந்தேகம் வரக்கூடாதுங்குறதுக்காகத்தான் எதிர்வீட்டுக்காரி மேல் இல்லாததும் பொல்லாததும் நித்யா சொல்லி உன் கவனத்தைத் திருப்பினாள். இந்த செய்கையை உங்ககிட்ட சொல்லாம செய்தது தப்பு. அதுக்கும் காரணம் இருக்கு. நீயும் அம்பலவாணன் சாரும் தடுத்துடுவீங்களோன்னு பயம். அந்த பயம்தான் உன் கண்ணுக்கு ஒரு தடையமும் தெரியக்கூடாதுங்குறதுக்காக அனாதை ஆசிரம கடிதங்களெல்லாம் மறைப்பு. நீ என்னை நம்பு. அவுங்க செயலைப் பாராட்டி நானே ஆயிரம் கொடுத்து உதவி இருக்கேன். பிறந்த நாள் போர்வையில நகை புடவையின்னு பரிசு கொடுத்து பாராட்டி இருக்கேன்.” முடித்தான்.

“ஆமாம் சம்பத். எனக்கும் இப்போதான் விசயம் தெரிஞ்சுது. ஆத்திரம் பங்கஜத்தைப் போட்டு மிதி மிதின்னு மிதிச்சேன். எல்லா உண்மைகளையும் கக்கினாள். நாம நம்ம பொண்டாட்டிங்க மேல் சந்தேகப்பட்டது தப்பு!” தன் பங்கிற்குச் சொல்லி வருந்தினார்.

சம்பத் முகம் மலர்ந்தது, மனைவி அவன் கண்களுக்கு மலையாகத் தோன்றினாள்.

(முற்றும்)

Karai adalarasan என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *