ஊர்வலம் செல்கிறது!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: ஈழநாடு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 5, 2025
பார்வையிட்டோர்: 1,369 
 
 

(1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

விண்ணதிரும் வெடிகள் வெடித்து – அங்கு குழுமி நின்ற மனித உள்ளங்களை ஒரு நிமிட அதிர்ச்சிக்குள்ளாக்கி நிலை தளரச் செய்து விட்டு மறைந்து போய் விடுகின்றன. தொடர்ந்து பல வெடிகள்… கிட்டத்தட்ட நூறு யார் நீளமுள்ள அத்தப் பிரேத ஊர்வலம் ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. 

மலர் வளையங்களால் அலங்கரிக்கப்பட்ட அந்த விலை உயர்ந்த சவப்பெட்டிக்குள் பொன்னி பிணமாக மடிந்து யோய்க் கிடக்கிறாள். 

எத்தனை புகழ் மொழிகள்… அனுதாபங்கள்… பொன்னி கடந்த கால வாழ்வு பற்றிய சிறப்புரைகள்… உயிரற்றுப் பிணமாகி விட்ட அவளுடைய காதுகளுக்கு இவைகள் கேட்குமா…? தனக்கு இவைகள் கேட்கக் கூடாதென்றுதானோ என்னவோ பிணமாகச் சாய்ந்து விட்டாள். 

அவள் உயிரோடிருந்த போது அவளை வெறுத்தவர்கள்…. உறவிருந்தும் உறவென்று கூற மறுத்தவர்கள்… திரும்பிப் பார்க்க வெட்கப்பட்டவர்கள்… அவளையும் ஒரு பெண்ணாக மதிக்காதவர்கள்… வாய்பிட்டுக் கூற முடியாத வேதனைகளுக்குள்ளாக்கியவர்… இன்று பலரும்… ஒரு முகப்பட்டு “அனுதாபம்” என்ற வரம்பிற்குட்பட்டு நின்று புகழ்ந்து முடித்து விட்டனர். 

இவ்வளவு பெரிய ஊர்வலத்தை நடாத்துகிறார்களே, அவள் என்ன பெரிய அரசியல் தலைவியா…? அல்லது பொது நலவாதியா… அல்லது யாருமே வாழ முடியாத பெரும் வாழ்வை வாழ்ந்து விட்டவளா…? 

இவ்வளவுக்கும் அவள் ஒரு பைத்தியகாரி! 

பைத்தியகாரி பொன்னி என்று கூறினால் அந்த ஊரில் தெரியாதவர்களே இருக்க முடியாது. 

திரண்டு, சுருண்டு முறுக்கேறி கழுத்து வரை நீண்டிருக்கும் தலைமயிர்… இன்றைய நாகரீக மங்கையரைப் போன்று… இதை யாரும் நாகரீகமாகக் கொள்ளவில்லை! ஏனென்றால் அவள் ஒரு பைத்தியம்…! கறுப்பையே தனது நிறமாகக் கட்டுப்படுத்த முடியாமல் தோல்வியை ஒப்புக் கொண்ட நிலையில் இருக்கும் ஒரு சீலை ஆண்களைப் போல் கட்டி இருப்பாள். கறுத்த தளதளப்பான உடல்… 

“கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்ட பொருள்” இப்படி அவளது உடையையும், உடலையும் ஒப்பிட்டுக் கூறி விடலாம்! 

இந்த நிலையிற்றான் பொன்னியை ஊரிற் காணலாம். 

அவளை ஒரு முறை பார்த்தவர்கள் இரண்டாந்த தடவையும் பார்க்கத் தான் செய்வார்கள். 

நீர்க்குமிழி போல இவளுடைய வாழ்க்கையில் வந்து போன ‘கதாநாயகர்கள்’ அனந்தம். 

சில நாட்களுக்கு முன்பு… 

ஊரின் சந்தியிலிருந்து பட்டினம் செல்லும் வீதியிற் கிட்டத்தட்ட அரை மைல் தூரத்தில் ஒரு சந்தி. இந்தச் சந்தியை மருவினாற் போல் ஒரு வைரவ கோயில். அதோடு ஒரு தங்கு மடமும் காணப்படும்… பொன்னி வந்து கொண்டிருக்கும் போது அந்த மடத்தில் “சீட்டு” விளையாடிக் கொண்டிருந்த சில முரடர்கள் அவள் கையைப் பிடித்திழுத்து…?…!… இப்படிப்பட்ட… 

உணர்ச்சியற்ற மரக்கட்டையாகி விட்ட அவளால் அந்தக் கையாலாகாதவர்களின்” ஒருவரின் பெயரைக் கூட கூறிவிட அவளுக்குச் சக்தியோ சிந்தனையோ இல்லை. 

இவளைப் பற்றிய பேச்சுக்கள் சர்வ சாதாரணமாகி விட்டாலும் இவளுடைய கடந்த கால வாழ்வின் சிறப்புப் பற்றிய விசயம் அந்தரங்கமாகவே இருந்து கொண்டு வந்தது. உண்மையை அறியாதவர்கள் இல்லாமலில்லை. அவர்களுக்கு உணர்ச்சியும் இல்லாமலில்லை… 

அதை வெளியில் கூறி விட பயந்தாள் காரணம் பொன்னியின் கடந்த கால வாழ்வு பற்றியோ சொத்துக்கள் பற்றியோ யாரும் பேசக் கூடாதென்பது கந்தையாவின் தனிக்கட்டளை! மீறியவர்கள் ஏதோ ஒரு வகையில் தண்டிக்கப்படுவர் – தண்டிக்கப்பட்டுள்ளனர். கிராமத்தில் கந்தையா தான் பெரும் பணக்காரர். சிறப்புப் பெயரால் கூட அழைப்பார்கள். சர்வ வல்லமை மிக்கவரெனப் பெயர் பெற்றவர். 

கந்தையாவின் தங்கை மகள் தான் பொன்னி. 

கந்தையாவிற்கு ஒரே ஒரு தங்கை தான் பூரணம். 

பூரணம் அழகானவள், குணமானவள் சாதாரண அழகல்ல – தங்களுடைய அழகின் அந்தரங்கத்தை புரிந்து கொண்ட பெண்களே வர்ணிக்கும் அழகுடையவள். 

பூரணம் வசதியான வாலிபன் ஒருவனுக்கு வாழ்க்கைப் பட்டாள். அழகுதான் அதற்குக் காரணம் என்ற கூறவும் வேண்டுமா? இயற்கையை அவள் வாழ்த்தினாள். ஏனென்றால் அவளைச் சீரும் சிறப்புமாக வாழ வழி வகுத்தது அந்த இயற்கைதான். 

அழகை மையமாக வைத்து உருவான பூரணத்தின் வாழ்வு அவளுடைய குணத்தால் பூரணம் பெற்றுக் கோபுரமாக மாறியது. 

கந்தையா பூரணத்தை அண்டியே வாழ்ந்தான். பூரணத்தின் வாழ்வு பூரணமாகி விட முத்திரையாக ஒரு பெண் குழந்தைக்குத் தாயானாள். வைடூரியம் போலத் தோன்றிய அந்தக் குழந்தைக்குப் பொன்னரியம் என்று பெயர் சூட்டினாள். 

பைத்தியக்காரி பொன்னிக்கு பூரணம் தம்பதிகள் அன்போடு வைத்த பெயர் பொன்னரியம். 

பூரணம் தம்பதிகளின் பூரணத்தை நிலை நிறுத்த முதல் முத்திரையாகப் பிறந்த பொன்னரியமே கடைசி முத்திரையாகவும் அமைந்து விட்டாள். ஆவர்களுக்கு வேறு குழந்தைகளே பிறக்கவில்லை. 

கால விருட்சத்தில் ஆண்டுகள் எத்தனையே மலர்கள் அரும்பாகி, மொட்டாகி மலராகி வாடிவதங்கிப் போய் விட்டன. 

பொன்னரியம் கன்னி வாழ்வின் செழிப்பான பகுதியை நெருங்கி விட்டாள். 

அவளைத் தொட்டு விட வட்டமிட்ட “இளவட்டங்கள்” எத்தனை… கருவாகி, உருவாகி, உரம் பெற்ற அவர்கள் ஆசைகள், நப்பாசைகளாகிவிட… அவர்கள் அவளைப் பற்றிக் கூறி விட்ட வார்த்தைகள்… தூற்றல்கள் காதால் கேட்கத்தான் முடியுமா? 

இவளை மையமாக வைத்து தங்களுக்கு ஆதரவு தேடிக் கொள்ள இவளை வாழ்த்தி விட்ட -புகழ்ந்த -ஆதரவு கொடுத்த உள்ளங்கள் தான் எத்தனை 

இவ்வளவுக்கும் தன் பணம்தான் காரணமென்பதை உணர்ந்து விட அவளுடைய அறிவு வளர்ச்சி யடைந்திருக்க வில்லை. செல்வத்தில் வளர்ந்த அவள் வெள்ளையுள்ளம் படைத்தவள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு நாள் “விபத்து”என்ற உருவில் வந்த காலன் பூரணம் தம்பதிகளைக் கொண்டு சென்று விட்டான். பூரணம் தம்பதிகள் சமாதியாகி விட பொன்னரியம் தனித்து நின்றாள். 

பொன்னரியத்தின் பொறுப்பு கந்தையாவிடம் கைமாறியது. கந்தையா பணக்காரக் கந்தையாவானான்! 

உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அவளுடைய கொள்ளையழகும் துயரத்தால் கொள்ளை போய் விட, நிதர்சனமற்ற நிலையில் கந்தையாவின் ஆதரவோடு ஏதோ வாழந்தாள். 

தனது நிலையையும் பணத்தையும் உணர்ந்த கந்தையா கடமை என்ற போர்வையில் தனது அதிகாரத்தால் பொன்னரியத்திற்குத் திருமணம் செய்து வைக்க முனைந்தான். திருமணமும் நடக்க வேண்டும். தனது அதிகாரமும் நிலைக்க வேண்டும் ஒரே கல்லில் இரு கனிகள்! 

ஊரிலுள்ள ஒரு தரப்பட்ட பைத்தியங்களின் மீது தனது கண்ணோட்டத்தைச் செலுத்தினான்… நீண்ட நாள் சிந்தனையின் பின் அவனது பார்வை சாஸ்திரி கணவதிப்பிள்ளையின் மீது நிலைக்குத்தி நின்றது. 

சாஸ்திரி கணபதிப்பிள்ளைக்கு வாழ்க்கையில் நடுப்பகுதியை தாண்டி விட்ட வயது காலத்தால் நரைத்த தலைமயிர் உரம் படிந்த தேகம் அந்தத் தேகத்தில் கடவுள் பக்தியை எடுத்துக் காட்டும் திருநீற்றுக்கீறுகள் கையிலே சகல ஏட்டுச் சுவடிகள் சகிதம் இவரைக் காணலாம். 

கணபதிப்பிள்ளை முன்பே திருமணமானவன். திருமணமாகி முதலாம் வருடமே அவள் அவனை விட்டுப் பிரிந்து பழைய புதிய உறவுகளோடு உள்ளுர் வைத்தியசாலையொன்றில் பணிபுரிந்து கொண்டிருக்கின்றான். 

கந்தையாவின் முயற்சியினால் சாஸ்திரி கணபதிப்பிள்ளை மணமகனாக நிர்ணயிக்கப்பட்டு முடிவும் செய்யப்பட்டு விட்டது. 

பலரும் புடை சூழ மேளங் கொட்ட வாழ்த்தொலிகள் காதைப் பிளக்க ஒரே மகள் மாங்கல்யம் தாங்கிய கழுத்துடன் மணமகளாய் மணமகனோடு மனைமகளாய் ஊர் வலம் வரும் காட்சியைக் கடண்டுவிட பூரண தம்பதிகள் கண்டுவிட்ட கனவுகள் கனவுகளாய்ப் போய் விட, 

பதிவுத் திருமணமாகக் காரியாலயத்தில் திருமணம் நடந்தது! 

மனித வர்க்கத்துக்காக மனித வர்க்கத்தால் உருவாக்கப்பட்ட சட்டம் கந்தையாவின் பணத்தால் திரையிடப்பட அதே சட்டம் பொன்னரியத்தையும் கணபதிப்பிள்ளையையும் மணமக்களாக்கி விட்டு மெளனமாகி விட்டது. 

உணர்ச்சியற்ற வண்டு அவன் புத்தம் புதுமலர் அவள் இயற்கைக்கு மீறிய தொடர்பு சட்டம் செய்து வைத்த பெரும் நற்கைங்கரியம்! 

தாய் தந்தையாரின் பிரிவு விருப்பற்ற திருமணம், தெளிந்த நீரோடையாக இருந்த அவள் உள்ளத்தில் இரு பெரும் பாறாங்கற்கள்! சிந்தித்தாள் நிதர்சனமற்ற அவளது சிந்தனை தொடர்ந்தது. 

கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் சென்றிருக்கும், கணபதிப்பிள்ளை பொன்னரியத்தை விட்டுப் பிரிந்து கோயிலுக்கு வந்து விட்டான். 

பொன்னரியம் பொன்னியாகி மீண்டும் தனித்து நின்றாள். 

கடந்த ஆறு மாத காலத்தில் கண்டு விட்ட “மொட்டான புதிய அனுபவங்கள்” அவளது உள்ளத்தோடு சங்கமித்து உள்ளத் தழும்பாகி மாறாத வேதனையாகப் பரிணமித்துப் போயிருந்தது. 

சிந்தித்தாள்… “நிம்மதி கிடைக்காத” என்ற சிந்தித்தாள். இப்போது அந்த வெறும் சிந்தனையிலே நிம்மதியைக் கண்டாள்… குறிக்கோளற்ற சிந்தனைக்கு முடிவேற்படுமா?… 

வெறுஞ் சிந்தனையோடு தன்னையறியாமலே நடந்தவள் இப்போது சூனியமான உள்ளத்தோடு நடந்தாள் அந்த நடை பயிற்சியாகி பழக்கமாகிவிட்டது… தினமும் நடக்கிறாள். 

காலை ஊரிலிருந்து புறப்பட்டு வந்து பத்து மைல் தொலைவிலுள்ள அம்மன் கோயில் ஒன்றில் படத்திலிருக்கும் கணவனோடு இருந்து விட்டு திரும்பவும் நுணாவிலுக்கே வந்து விடுவாள் தினப்பழக்கம்! 

உணர்ச்சியோடு இருந்த போது கணவனை வெறுத்தவள் உணர்ச்சியற்ற நிலையில் அவனைத் துேடிச் செல்கிறாள். இது பைத்தியக்காரச் செயலா?… அல்லது… இது தான் கணவன் மனைவி உறவா? இது தொடர்ந்தது. 

நேற்றுப் பின்னேரம் கைதடிப் பாலத்தடியில் இறந்து கிடந்தாள் பொன்னி! உண்மைக்குத் திரை போடப்பட்டது. கௌரவத்தோடு பிண ஊர்வலம் சென்று கொண்டிருக்கிறது. 

பொன்னியின் இறுதி யாத்திரையை மையமாக்கி சிறு பணச் செலவுடன் கந்தையா தனது யோக்கியத்தையும் “மருமகள்” என்ற உறவையும் கிராம மக்கள் மத்தியில் ஒப்புக்காக நிலை நிறுத்துகிறான். 

கண்ணுக்கெட்டிய தூரத்தில் பிண ஊர்வலம் சென்று கொண்டிருக்கின்றது. எல்லோருடைய தலைகளுக்கும் மேலாக…… பொன்னியின் சவப்பெட்டி அது கூடத் தெளிவாகத் தெரிகிறது. 

மீண்டும் ஒரு பீரங்கி வெடி… சத்தம் ஒய்ந்து விடவில்லை தொடர்ந்து பல வெடிகள்… பொன்னியின் ஊர்வலம் தொடர்கிறது. கந்தையாவும் செல்கிறார். அவர் கண்களில் நீர் எப்படி வந்தது. அது அவருக்கே தெரியாது. 

– ஈழநாடு, 02.02.1971.

– மண்ணின் முனகல் (சிறுகதைகள்), முதலாம் பதிப்பு: செப்டெம்பர் 2012, கு.வி. அச்சகம், கொழும்பு.

கே.ஆர்.டேவிட் கே.ஆர்.டேவிட் யாழ்ப்பாணம், சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். 1971 ஆம் ஆண்டு ஆசிரியராக நியமனம் பெற்றுப் பின்னர் சாவகச்சேரி வலய உதவிக் கல்விப்பணிப்பாளராக உயர்வு பெற்றார். கடமையின் நிமித்தமாக 1971 இல் நுவரேலியா சென்றிருந்த இவர், அங்குள்ள மக்களின் அவலங்களால் ஆதங்கப்பட்டு அதனை எழுத்துருவாக 'வரலாறு அவளைத் தோற்றுவிட்டது' என்னும் நாவலைப் படைத்தார். இவர் சிரித்திரன் இதழில் தொடராக எழுதிய 'பாலைவனப் பயணிகள்' என்னும் குறுநாவல் மீரா…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *