என் பெண்டாட்டி எதிர் வீட்டு வைப்பாட்டி..!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 16, 2025
பார்வையிட்டோர்: 3,542 
 
 

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9

அத்தியாயம் – 4

“என்னங்க உங்க நண்பர் வந்திருக்கார்!” கணவன் வீட்டிற்குள் நுழைந்ததுமே நித்யா சொன்னாள்.

“யார்?” சம்பத் சட்டையைக் கழற்றி கொடியில் போட்டுக்கொண்டே கேட்டான்.

“அவர்தான் சுபான்!“

“எப்போ வந்தான்?”

“காலையில. நீங்க அலுவலகத்துக்குக் கிளம்பி அந்தண்டைப் போனீங்க. இந்தண்டை வந்தார்.”

சுபான் இவனுக்கு உயிர் நண்பன். பள்ளி கல்லுாரி நாட்களிலிருந்தே பழக்கம். எல்லாரையும் விட இவனைத் தான் அவனுக்குப் பிடிக்கும் ஒட்டி உறவாடுவான். நித்யாவிற்கு இவனைப் பிடிக்காது. ஆரம்பத்தில் விருந்தாளியை அன்பு பண்பாய்த்தான் வரவேற்றாள். அவன் அடிக்கடி வர…

“என்ன உங்க நண்பர் அடிக்கடி இங்கே வந்து டேரா போடுறார்? நீங்க இல்லா நேரத்திலேயும் இருக்கார்! நீங்களும் கண்டுக்காம போறீங்க வர்றீங்க?” ஒரு நாள் கணவனின் காதைக் கடித்தாள்.

“ஏன் நித்யா உனக்குப் பிடிக்கலையா?”

“பிடிக்கலை!”

“நான் இல்லாத சமயம். உன்கிட்ட தப்பா பேசறான் நடந்துக்கிறானா?”

“ஐயையோ அந்த ஒரு வார்த்தை மட்டும் சொல்லாதீங்க. தங்கம்!”

“பின்னே ஏன் பிடிக்கலை?”

“எதுக்கு இங்கே அநாவசியமா வர்றார் போறார்?”

“அவன் பெரிய பணக்காரன். அப்பா நிறைய சொத்து சேர்த்திருக்கார். வேலைக்குப் போகனும்ன்னு அவசியம் கெடையாது. வீட்டுல அம்மா இல்லே. அப்பாவும் வியாபாரம், பணம்ன்னு அடிக்கடி வெளியூர் போயிடுறதுனால இவனுக்கு வீட்டுல அடைஞ்சு கிடக்க விருப்பம் இல்லே. தனிமை சிறை வாட்ட..அவன் எங்கு பாசம் கெடைக்கும்ன்னு தேடி இங்கே வர்றான். அடுத்து உன்னையும் அவனுக்குப் பிடிச்சுப் போக…ஒரு சகோதர சகோதரி பாசத்துல வர்றான்.”

நித்யாவிற்கு இது ஏற்பாக இருந்தாலும் மனம் இளகவில்லை.

“இதுக்கு இது வழி இல்லே. கலியாணம் முடிச்சு இந்த அன்பு பாசத்தை மனைவி மேல் காட்டலாம்!” என்றாள்.

“செய்யலாம். ஆனா எடுத்துச் செய்ய ஆளில்லே. மேலும் அவனுக்குத் திருமணத்துல விருப்பமில்லே”.

“சரி விடுங்க. ஒரு வேலை வெட்டித் தேடி அதில் மனசைச் செலுத்தலாமே!?“

“செய்யலாம். அவனுக்குச் சொல்ல ஆளில்லே. நாமதான் சொல்லனும். சொல்லலாம்.”

“சொல்லுவோம். சொந்தக் கால்ல நிக்கிறது. நாளை திருமண வாழ்க்கைக்குப் பலம் இல்லையா?”

“அவன் திருமணமே முடிக்கப் போறதில்லே நித்யா!”

“ஏன்?”

“அவன் கல்லுாரியில படிக்கும் போது ஏஞ்சல்ங்குற பொண்ணைக் காதலிச்சான். கெடைக்கலை. மனம் வெறுத்துட்டான்.”

“ஒருதலைக்காதலா?”

“ச்சேச்சே! அவளும் காதலிச்சாள். அப்பா மறுக்க விட்டுட்டாள்”.

“ஒருத்திக்காக வாழ்வையே வீணடிச்சிக்கிறது எப்படி சரி?”

“நாமதான் இவன்கிட்ட பேசி சரி படுத்தனும் நித்யா! அதனாலதான் இவன் வரவையும் நான் சகிச்சிருக்கேன்.” நித்யாவிற்கு கணவன் மனசு தெரிந்தது,

கொஞ்ச நாளில் முதலில் சம்பத் ஆரம்பிக்க அடுத்து, இவள் தொடர…. இருவரும் சேர்ந்து அவனுக்குப் புத்தி சொன்னார்கள். நிறைய வாக்குவாதங்களுக்குப் பிறகு..

“கலியாணத்துக்கு மட்டும் என்னைக் கட்டாயப்படுத்தாதீங்க. உங்க பேச்சுக்கு மதிப்புக் கொடுத்து தொழில் வேணும்ன்னா செய்யுறேன்.” என்றவன் அன்றிலிருந்து அதற்குண்டான வேலைகளில் மும்முரமாக இறங்கினான். மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக் கொடுப்பது அவசியமில்லாதது போல விளையாட்டாய் ஒரு ஏஜென்சி எடுத்து… பொருட்களை இப்படி வாங்கி அப்படி கை மாற்றி பணம் பெருவாரியாக புழக்கம். ஆனாலும் அவன் வரவு நித்யாவிற்கு இடைஞ்சல் பிடிக்கவில்லை.

பிடிக்காத ஆளை சரியாக வரவேற்காமல் முகம் கோண நடந்து அனுப்பி விட்டாளா? சம்பத்திற்கு மனைவி மேல் சந்தேகம் வந்தது.

”நீ ஒன்னும். சொல்லலையே?” கேட்டான்.

“இல்லே.”

“எங்கே போயிருக்கான்?”

“தெரியலை”

“எப்போ திரும்புவான்?”

“தெரியாது.”

“போயிட்டானா?”

“என்ன.! நான் அந்த ஆள் பொண்டாட்டி போல என்கிட்ட கேள்வி கேட்குறீங்க?” நித்யாவிற்கு இப்போது உண்மையிலேயே கோபம் வந்து பாய்ந்தாள்.

“கோவிச்சுக்காதே! ஆள் இல்லே வரலைன்னா நம்ம வேலையை நாம பார்த்து சாப்பிட்டுவிட்டு படுக்கலாம்.”

நித்யாவிற்குப் புரிந்தது. தழைந்தாள்.

“ஆள் பையை வைச்சுட்டு இதோ வர்றேன்னு சொல்லிப் போனார். திரும்பலை.” என்றாள்.

‘அப்போ திரும்பி வருவான்!’ சம்பத்திற்குள் நம்பிக்கை வந்தது.

“என்ன நட்போ?!“ நித்யா தலையிலடித்துக் கொண்டாள்.

“அவனுக்குச் சாப்பாடு தயார் தானே?”

“இல்லே.”

“ஏன்?“

“வந்தா ரெடி பண்ணிக்கலாம்.”

“என்ன நித்யா சொல்றே?!” சம்பத்திற்கு மனைவி நண்பனை அவமதித்து விடுவாளோ என்கிற பயம், பதற்றம் வந்தது.

“அந்த ஆள் வருவான்னு நான் நான் வடிச்சு வைச்சுக்கிட்டு காத்திருக்க முடியாது. வர்ற ஆளுக்கு அடுத்தவங்களுக்குத் தொந்தரவு கொடுக்கக் கூடாதுன்னு தெரியனும். இனிமே இப்படியெல்லாம் வந்தால் என்னால பணிவிடை பண்ண முடியாது. வெளியில சாப்பிட்டுவிட்டு வந்துடச் சொல்லிடுங்க.” உள்ளே சென்றாள்.

‘பாவி! பாசமாக வருகிறவனையும் கெடுக்கின்றாள்! அவனிடம் இருக்கும் பணம் காசுக்கு தினம் நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்து தின்று செல்லலாம். பாசம் காரணமாக வந்து செல்பவனை வெறுக்கிறாள்!’ சம்பத்திற்கு மனசு சரி இல்லை.

வரும் விருந்தாளியை வராதே சொல்லக்கூடாது. அடிக்கடி வந்து தொல்லை கொடுப்பதும் தவறு. நாசூக்காக சொல்ல வேண்டும். கொஞ்சம் கோடி காட்டினாலே போதும் சுபான் தெரிந்து கொள்வான். ஆனால் திரும்ப மாட்டான். ரோசக்காரன். எவனுக்குத் திரும்ப மனசு வரும்?

“நித்யா! நீ அவனைக் கோபமா எதுவும் சொல்லலையே?” திரும்பவும் கேட்டான்..

“இல்லே!“

“முகத்துல இந்த வெறுப்பு, சுளிப்பு காட்டுனீயா?”

“வந்த விருந்தாளிகிட்ட இதெல்லாம் செய்வாங்களா ? பிடிக்காததை நான் உங்ககிட்டத்தான் சொல்றேன். மத்தப்படி உங்க நண்பர்கிட்ட நான் கோபம், வெறுப்பு எதையும் காட்டலை. கோவிச்சுக்கிட்டுப் போயிடுவார் போயிருப்பார்ன்னு கவலைப்படாதீங்க?”

அப்பாடா! இவனுக்கு நிம்மதி வந்தது.

சுபானிடம் எப்படி சொல்ல? மறுபடியும் யோசனையி லிறங்கினான். அவன் நட்பை இழக்கப் போகிறோம்! கவலை அரித்தது. பிடிக்கவில்லை என்றாலும் வந்த விருந்தாளிக்குச் சாப்பாடு செய்யாமல் உட்கார்ந்திருக்கிறாள்! நினைத்து மனைவியைப் பரிதாபமாகப் பார்த்தான்.

“அவனுக்குச் சாப்பாடு?” மெல்ல இழுத்தான்

“கவலைப்படாதீங்க. சப்பாத்திதான். அஞ்சே நிமிசத்துல சுட்டுக் குடுத்துடலாம்!”

அதற்கும் தயாராக இருந்து தான் நம்மிடம் சொல்கிறாள். இந்த மதிப்பம் மரியாதையும் அவனுக்குக் குறையாமல் இருக்க வேண்டும். குடும்பத்திலும் கணவன் மனைவிக்குள் இது குறித்து சண்டை வரக்கூடாது என்றால் வா அடிக்கடி வராதே சொல்ல வேண்டியதைத் தவிர வேறு வழி இல்லை. படுத்தான்.

தொலைபேசி அடித்தது. நித்யாதான் எழுந்து போய் எடுத்தாள்.

“ஹலோ!“

“அண்ணி! நான் சுபான் பேசறேன்!“

“சொல்லுங்க?“

“சம்பத் இருக்கானா?”

“இருக்கார்.“

“போனை அவன்கிட்ட கொடுங்க.”

“என்னங்க?” ஒலி வாங்கியை மூடிக்கொண்டு துாரத்தில் நின்றவனை அழைத்தாள்.

“என்ன?“

“உங்களுக்குப் போன். சுபான் பேசறார்.”

சம்பத் சென்று மனைவியிடமிருந்து வாங்கினான்.

“என்ன சுபான்?”

“எப்படிடா இருக்கே?”

“நல்லா இருக்கேன். எங்கேயிருந்து பேசறே?”

”காஞ்சிபுரத்திலேர்ந்து.”

“அவ்வளவு துாரம் எங்கே போனே?“

“வியாபார விசயமா வந்தேன். அப்படியே தங்க வேண்டியதா போச்சு”.

”சரி. என்ன விசேசம்?”

“இன்னைக்கு ராத்திரி நான் வரமுடியாது. காலையில வர்றேன்.”

“சரி.”

“உனக்கு அலுவலகம் இருக்கா?”

“இருக்கு. என்ன விசேசம்?”

“நல்லது. காலையில எட்டு மணிக்கெல்லாம் உன்னைச் சந்திக்கிறேன்.”

“சரி.” வைத்தான்.

விருந்தாளி சாப்பாட்டுப் பிரச்சனை தீர்ந்தது. நிம்மதிபட்ட சம்பத் மனைவியிடம் சேதி சொல்லிவிட்டு படுத்தான்.

என்ன முக்கியமான விசயம். காலையில் சந்திக்கிறேன் என்று சொன்னான்? நித்யாவைப் பற்றி ஏதாவது புகாரா? இவனுக்குள் ஓடியது?

அத்தியாயம் – 5

காலை மெல்ல புலர்ந்தது. இளம்பனி. கொஞ்சம் குளிராய் இருந்தது. நித்யா வழக்கம் போல் ஐந்தரை மணிக்கெல்லாம் எழுந்து வீட்டு வேலைகள் பார்த்தாள். சுபான் வருவதால் காலை டிபனுக்கு அவனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் ? என்று யோசித்து பூ ரி போட்டுக் கொள்ளலாம் முடிவிற்கு வந்தாள்.

சம்பத் ஆறுமணிக்கெல்லாம் எழுந்து காலைக் கடன்களை முடித்து காபி குடித்து விட்டு வாசலில் கிடந்த தினசரியை எடுத்து மேய்ந்து கொண்டு உள்ளே வந்து சோபாவில் அமர்ந்து ஆழ்ந்தான். கணவன் சந்தேகம். மனைவி கொலை! செய்தி கண்ணில் பட்டது.

எதற்கு சந்தேகம்? தவறு ருசுவானால் விலக்கி வைத்துவிட்டு இல்லை தான் விலகி வாழ்வதை விட்டு விட்டு கொலை இப்போது இரண்டு பேருக்குமே வாழ்வில்லை. சிந்தித்து அடுத்தப் பக்கம் புரட்டி மேய்ந்தான்.

“சம்பத்!“ அழைத்துக்கொண்டே சுபான் கைப் பெட்டியுடன் வீட்டிற்குள் நுழைந்தான்.

“வாடா. எட்டு மணிக்கெல்லாம் வர்றேன்னு போன் பண்ணிவிட்டு இதென்ன ஏழு மணிக்கெல்லாம் வந்துட்டே…?” கேட்டு சம்பத் தினசரியை மூடிவிட்டு நண்பனை ஆச்சரியமாகப் பார்த்தான்.

“பன்னிரண்டு மணிக்கு வேலை முடிஞ்சுது. துாக்கம் வரலை. அறையைக் காலி செய்துவிட்டு நாலு மணி முதல் பேருந்தைப் பிடிச்சு வந்துட்டேன்.” பெட்டியைப் பக்கத்தில் வைத்துவிட்டு அமர்ந்தான்.

“என்ன அவ்வளவு அவசரம்?”

“விசயம் இருக்கு. அண்ணி! அண்ணி!” சமையலறையைப் பார்த்து அழைத்தான்.

இவன் எதற்கு வந்ததும் வராததுமாய் வேண்டாதவளை உடனே அழைக்கிறான்!? சம்பத்திற்குப் பிடிக்கவில்லை.

சுபான் குரல் கேட்ட நித்யா அவனுக்கும் தயாராக காபி கலந்து வைத்திருந்ததால் எடுத்துக்கொண்டு வந்தாள்.

“வாங்க.” வரவேற்று சோபாவிற்கு எதிரிலுள்ள டீபாயில் வைத்தாள்.

சுபான் காபியைத் தொடவில்லை.

“அண்ணி சம்பத்தோட சேர்ந்து நில்லுங்க?”

கட்டளையிட்டான்.

“எதுக்குடா?!”

“சேர்ந்து நில்லுங்க சொல்றேன்.”

தனக்குப் பெண் பார்த்துவிட்டு வந்து தங்கள் காலில் விழுந்து நல்ல சேதி சொல்ல இப்படி நிற்கச் சொல்கிறானா? சுபான் நீ சின்ன வயசில்லே. என் வயசு. இவள் கால்ல விழுந்து சின்னவளைப் பெரிய மனுசி ஆக்கிப்புடாதே! சம்பத்திற்குள் மனசு துடித்தது.

நித்யா ஒன்றும் பேசாமல் கணவன் அருகில் வந்து நின்றாள்.

சுபான் காலில் விழுந்தெல்லாம் நண்பனைச் சங்கடப்படுத்தவில்லை. தன் கைப்பெட்டியைத் திறந்து புத்தம் புதிய நகைப் பெட்டி ஒன்றை எடுத்தான்.

“இது அண்ணிக்கு என் பிறந்த நாள் பரிசு. வாங்கி அவுங்க கையில கொடு.” சம்பத்திடம் நீட்டினான்.

கொடுத்தான்.

“என்னடா இது?!”

“நீ கொடு அவுங்க பிரிச்சுப் பார்த்து சொல்லட்டும்.”

சம்பத் அதை அப்படியே நித்யாவிடம் நீட்டினான். வாங்கிப் பெட்டியைத் திறந்தவளுக்குச் சின்னதாய் இன்ப அதிர்ச்சி. பளபளவென்று நெக்லஸ்.

“அஞ்சு பவுன்!” சுபான் சொல்ல நித்யாவிற்கு முகம் சிவந்து மலர்ந்தது.

“பரிசா? எதுக்குடா இவ்வளவு செலவு?” சம்பத் பதைபதைத்தான்.

“நெனைச்ச நேரம் உரிமையாய் வந்து தங்கறேன் சோறு திங்கிறேன்ல்ல அதுக்கு”.

“வந்து…” சம்பத் எதுவோ சொல்ல வாயெடுத்தான்.

“நீ எதுவும் சொல்ல வேணாம். நான் சொல்றதைக் கேட்டா போதும்! சும்மா சுத்திக்கிட்டு இருந்தவனுக்குப் புத்தி சொல்லி சம்பாதிக்கச் சொன்னீங்க. அதுக்குக் குருதட்சணை. அடுத்து நான் எந்த நேரம் வந்தாலும் முகம் சுளிக்காம வரவேற்று பாசம் நேசம் காட்டுறதுக்குக் கைமாறு.” என்று சொல்லிக் கொண்டே மறுடியும் பெட்டியைத் திறந்து ஒரு ஜவுளிக் கடை அட்டைப் பெட்டியை எடுத்தான்.

“இதுவும் அவுங்களுக்குப் பிறந்த நாள் பரிசு. உன் கையாலேயே கொடுத்திடு.” சம்பத்திடம் கொடுத்தான்.

வாங்கிப் பிரித்தவனுக்குக் கண்கள் விரிந்தது. பட்டுப்புடவை!

“விலை ஐயாயிரம்!” சொல்ல… நித்யாவிற்கு நம்பவே முடியவில்லை. கணவன் கொடுத்ததை வாங்கிப் பார்த்தாள். நல்ல அரக்கு நிறத்தில் அளவான பொன் சரிகையில் புடவை மின்னியது,

“இது ரொம்ப அதிகம்!” சம்பத் சங்கடப்பட்டான்.

“அதிகமில்லே குறைச்சல். சம்பத்! நீ! நீ சிக்கனக்காரன் மட்டுமில்லே. உன் சம்பளத்துல இதெல்லாம் வாங்க முடியாது. அது மட்டுமில்லே… தன் பொறந்த நாள், திருமண நாளுக்கெல்லாம் புருசன்கிட்டே இருந்து மனைவிகள் இது போல எல்லாம் பரிசுகள் எதிர்பார்ப்பாங்க.” பெரிதாய் அனுபவப் பட்டவன் போல் சொல்லி அமர்ந்தான்.

சம்பத்திற்கு இது ஆச்சரியமாக இருந்தது

“இதெல்லாம் உனக்கு யார் சொல்லி கொடுத்தா?” கேட்டான்.

“இதெல்லாம் சொல்லிக் கொடுத்து அனுபவப்பட்டா வரனும் ? இப்போதான் தொலைக்காட்சி தொடர்ல எல்லாத்தையும் சொல்லிக் கொடுக்கிறாங்களே!” என்ற சுபான் “ஓ.கே. எனக்கு அவசர வேலை இருக்கு புறப்படுறேன்!” பெட்டியைத் துாக்கினான்

“டேய்! சாப்பிட்டுட்டுப் போடா.”

“சாப்பிடவெல்லாம் எனக்கு நேரமில்லே. அடுத்து வரும்போது சவகாசமாய் வந்து சாப்பிட்டுக்கிறேன். இப்போ எனக்கு அவசரமான முக்கிய வேலை இருக்கு கிளம்பறேன்.” நடந்தான்.

“காபி குடிக்கலை!“ நித்யா ஞாபகப்படுத்தினாள்.

“மறந்துட்டேன்! இதையும் விட்டுப் போனா உங்க நோகும்!” சொல்லி திரும்பி வந்தவன் ஆறிப் போன காபியை ஒரே மடக்கில் குடித்துவிட்டு “நாளைக்கு பொறந்த நாளை நல்லவிதமாய்க் கொண்டாடுங்க. நான் வரலை இருக்கலைன்னு வருத்தம் வேண்டாம். நான்தான் நினைச்சா வருவேனே. அடுத்தமுறை வரும்போது அண்ணி கவனிச்சாப் போதும்.” சொல்லி சிட்டாகப் பறந்தான்.

‘இவனென்ன….! கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டும் என்பது போல வந்தான் கொடுத்தான் பறந்தான்!‘ சம்பத்இ நித்யா அவன் சென்ற பிறகும் பிரமைத் தட்டியவர்களாய் அப்படியே இருந்தார்கள்.

‘இவளுக்குப் பிறந்த நாள் எப்படி தெரியும். யார் சொல்லிக் கொடுத்திருப்பார்கள்?’ சம்பத்திற்குள் யோசனை ஓட….

“நித்யா! நீ சுபான்கிட்ட உன் பொறந்த நாளைச் சொன்னீயா?” கேட்டான்.

“இல்லியே!“

“பின்னே எப்படி?” நெற்றியைச் சுருக்கினான்.

“அதான்ங்க எனக்கும் ஆச்சரியமா இருக்கு. பூனை போல இருக்கிறவர் எப்படி இப்படி அள்ளி வீசிட்டுப் போறார்?!” நித்யாவிற்கும் முகத்தில் சிந்தனை ரேகைகள் படர்ந்தது,

“விடு. நாலு வருசமா நம்ம வீட்டுக்கு வந்துட்டுப் போறவனுக்கு வருசா வருசம் கொண்டாடுற நம்ம பொறந்த நாள், திருமண நாள் தெரியாம போகிறது ஒன்னும் ஆச்சரியமில்லை.” என்றான் சம்பத்.

நித்யாவும் சமாதானப்பட்டாள்.

மணி எட்டு அடித்தது.

சம்பத் விருக்கென்று எழுந்து அலுவலகம் செல்ல தயாரானான் அலுவலகத்தில் புத்தியை எதிலும் செலுத்தாமல் ஒழுங்காகத்தான் தன் வேலையைப் பார்த்தான் சம்பத். கிரண்தான் குழப்பினான்.

“எவன் எப்படி நடப்பான் எவள் எப்படிப் போவாள்ன்னே தெரியலை?” வேலையை நிறுத்தி வம்பை ஆரம்பித்தான்.

மணி அய்யருக்கு இதிலெல்லாம் சுவாரஸ்யம் அதிகம்.. தன் தகுதிக்கு மீறி வயசுப் பையன்கள், இளைஞர்கள் பேச்சில் கலந்து கொள்வார்.

“என்னப்பா சொல்றே?” தன் இருக்கையில் இருந்தபடியே ஏறிட்டார்.

“இன்னைக்குத் தினத்தந்தி படிச்சீங்களோ?”

“படிச்சேன்!”

“அதுல மொதல் பக்கத்துல கொட்டை எழுத்துல ரெண்டாவது சேதி படிச்சீங்களா?”

“ஞாபகமில்லே.”

“சொல்றேன். களவொழுக்கம். புருசன்காரன் பொண்டாட்டியைப் போட்டுத் தள்ளிட்டான்.”

“அடப்பாவமே?“

“எது பாவம்? போட்டுத் தள்ளினதா, களவொழுக்கமா ?”

“ரெண்டுந்தான்!”

“இன்னொரு பாவமும் இருக்கு. இப்போ புள்ளைங்க ரெண்டும் வீதியில”

“அடடே! புள்ளை வேற பெத்தவளா? அவளை வைச்சிருந்தவன் கையில ஒப்படைச்சு காப்பாத்த வழி செய்யனும்…” ஐயர் தனக்குள் தெரிந்த நியாயத்தைச் சொன்னார்.

“அவனுக்கும் வெட்டு, பலத்த காயம். மருத்துவமனையில உயிர் ஊசலாடிக்கிட்டிருக்குன்னு போட்டிருக்கான். நாளைக்கு அவனும் குளோஸ்ன்னு சேதி வரும்.”

“அடடா!“ மணி அய்யர் பரிதாபத்தில் வாயைப் பிளந்தார்.

“இன்னைய நிலைமை அந்த குழந்தைங்களுக்குத் தாய் கிடையாது. தந்தைக்குச் சிறை. அனாதை!”

மற்றவர்களுக்கும் பிசைந்தது,

“இந்த சேதியைப் படிச்ச பிறகு நண்பன் நல்லவன்னு எவனையும் வீட்டுக்குள் அனுமதிக்கப் பயமா இருக்கு. தவறிப் போகாம இருக்க பொண்டாட்டிகளையும் நாம அடிக்கடி போய் செக் பண்ணனும் போலிருக்கு.” முடித்து வேலையைப் பார்த்தான்

பெண்டாட்டி எப்படி துரோகம் செய்வாள் ? நண்பன் எப்படி துணிவான்? சம்பத்திற்குள் யோசனை ஓடியது, அப்படி செய்வள் நல்ல மனைவி இல்லை. நல்ல நண்பனுமில்லை. நட்பு பேரில் போலி! மனசுக்குள் சத்தியம் செய்தான். அவன் கண்களுக்கு சுபானும் நித்யாவும் அப்பழுக்கற்றவர்களாகத் தோன்றினார்கள்.

ஆனால்…..?

அத்தியாயம் – 6

சம்பத் அலுவலகம் சென்ற பிறகு காத்திருந்த கொக்காய் பங்கஜம், நித்யா வீட்டிற்குள் நுழைந்தாள். இவள் வந்ததுகூட தெரியாமல் அவள் கூடத்தில் தீவிர சிந்தனையில் அமர்ந்திருந்தாள்.

பங்கஜத்திற்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

“என்ன நித்யா நான் வந்தது கூட தெரியாமல் என்னவோ யோசனையிலிருக்கே?” கேட்டு அவள் அருகில் அமர்ந்தாள்.

“ஒ…ஒன்னுமில்லேக்கா.”

“என்கிட்ட ஏன் ஒளிமறைவு. சும்மா சொல்லு?“

“இதோ வர்றேன்” எழுந்து அறைக்குள் சென்றவள் அலமாரியைத் திறந்து சுபான் பரிசளித்த பட்டுப்புடவை நகைப் பெட்டியை எடுத்து வந்து பங்கஜம் கையில் கொடுத்தாள்.

வாங்கிப் பார்த்த அவளுக்குக் கண்கள் விரிந்தது.

“ஏது இதெல்லாம்?!“

“என் பொறந்த நாள் பரிசு.”

“உன் புருசன் மனசு வந்து வாங்கி வந்தானா?”

“இல்லே. சுபான்!”

“சுபான்னா..? ஓ… அந்த பையனா?“

“ஆமாக்கா. எல்லாம் முப்பதாயிரம்”

“அன்பளிப்பா கடனா?”

“அன்பளிப்பு!”

“கள்ளி! அவனை வளைச்சுட்டியா?” சந்தோசமும் சந்தேகமுமாய் கேட்டாள்.

“ஐயோ அக்கா இல்லே.”

“பின்னே எதுக்குடி இவ்வளவு இவ்வளவு செலவு செய்து உனக்கு எடுத்து வந்தான் ?”

“அதான் தெரியலை”

“சத்தியமா சொல்லு. அவனுக்கும் உனக்கும் தொடர்பில்லே?“

“சத்தியமா இல்லேக்கா.”

‘ஆதாயம் இல்லாம எவனும் ஆத்தைக் கட்டி இறைக்க மாட்டானே!‘ என்ற பங்கஜத்திற்குள் சிந்தனை வேறு வகையில் ஓடியது.

“ஒரு வேளை இப்படி இருக்குமோ?!” தனது யோசனையைத் திருப்பினாள்.

“எப்படிக்கா?”

“உன் மேல அவனுக்கு ஆசை. வளைக்கத் திட்டம் போட்டு இப்படி இறைக்கிறான்?!”

“அக்கா!”

“ஏன் அலர்றே? இதுதான் விசயம். முடிஞ்சா சோதனை செய்து பாரு”.

“எப்படி?“

“என்ன…! எப்படின்னு ஒன்னும் தெரியாத பாப்பாப்போல கேக்குறே? ஆம்பளையைப் பொம்பளை மடக்க சொல்லியா கொடுக்கனும்?! அடிக்கண்ணால ஒரு பார்வை, முகத்தில் கொஞ்சம் குழைவு நெளிவு, முந்தானையைக் கொஞ்சம் விலக்கினா ஆள் எந்த மாதிரின்னு டக்குன்னு புரிஞ்சுடும்.” பங்கஜம் தேர்ந்தவளைப் போல் சொன்னாள்.

“அந்த ஆள்கிட்ட அப்படியெல்லாம் நடக்கப் பயமா இருக்குக்கா.” நித்யாவிற்குச் சொல்லும்போது உதறல் எடுத்தது.

“ஏன்?” பங்கஜம் அவளை ஆழமாகப் பார்த்தாள்.

“அவர் என் வீட்டுக்காரரோட உயிர் நண்பர். யோக்கியம். நாம இப்படி நெனைச்சு அப்படி போக. அந்த ஆள் என் வீட்டுக்காரர்கிட்ட போய் போட்டுக் கொடுத்துட்டார்ன்னா…. வம்பு!”

“அப்படிப்பட்ட யோக்கியவான். இப்படி ஏன் கொடுத்தான்?”

“ஆள் மனசுல என் மேல ஆசை, மனசுல கல்மிசமிருந்தால் சுபான் என் வீட்டுக்காரருக்குத் தெரியாம கொடுத்திருக்கனும். அப்படி செய்யலை. எங்களை அழைச்சு அவர்கிட்ட கொடுத்து இல்லே என்கிட்ட கொடுக்கச் சொன்னார்.”

“அதிலேயும் சூட்சமமிருக்கு. இப்படி நேரடியாய்க் கொடுத்தால்தான் அவனுக்கும் உனக்கும் நல்லது, தெரியாமல் கொடுத்தால் நீ உன் புருசன் கண்ணுல மாட்டாம நகை, புடவைகளை உபயோகப்படுத்த முடியாது. பொட்டிக்குள்ளேயே வைச்சு பூட்டி இருக்கனும். அப்படியும் ஒரு நாள் அவன் கண்ணுல பட்டால் ஏன் என்னன்னு கேட்டு உங்க குட்டு உடைஞ்சுடும். சங்கடம். இதெல்லாம் கூடாதுன்னுதான் அவன் சம்பத் கண்ணுல பட்டு கொடுத்திருக்கான். இப்போ சம்பத் நட்பு மேல நம்பிக்கை வைச்சு சாதாரணமாய் எடுத்துக்க…. விசயம் சுலபம்.” பங்கஜம் உடைத்தாள்.

‘அப்படி இருக்குமோ ?!’ நித்யாவிற்குள் திக்கென்றது.

“என்ன யோசனை ?”

“எங்களுக்குக் கலியாணம் முடிச்ச நாள் முதலா சுபான் இங்கே வர்றார் சுதந்திரமா தங்கறார் போறார். இத்தினி நாளாய் இல்லாம இப்போ என்ன திடீர் ஆசை?“தனக்குள் எழுந்த சந்தேகத்தை வெளியிட்டாள்.

“ஆம்பளை மனசுக்குள்ள ஆசை, சபலம் இருக்கு. அதை வெளியிடத்தான் காலம் நேரம் சரி இல்லாமத் தயக்கம். சுபானுக்கு இத்தினி நாள் கழிச்சு இப்போ துணிவு வந்திருக்கு!”

‘அப்படியா? இது உண்மையா?!’ நித்யா மனசுக்குள் வண்டு குடைந்தது,

“அவன் எந்த நேரத்திலும் வீட்டுக்கு வந்து நமக்கு இடைஞ்சலாய் இருக்கான், துரத்தனும்ன்னு நெனைச்சு அவன் மேல வெறுப்பு வைச்சு உன் புருசன்கிட்ட ஏதேதோ சொல்லி முயற்சி செய்யுறே. பலிக்கலை. இப்போ அவன் உனக்காகத்தான் சுத்தி சுத்தி வர்றேன்ங்குறதைக் காட்டிட்டான்.“ பங்கஜம் தனக்குத் தெரிந்ததைச் சொன்னாள்.

“அந்த ஆள் மனசு அப்படின்னா நாங்க எத்தினியோ சமயம். என் வீட்டுக்காரர் இல்லாத நாட்களில் தனியே இருந்திருக்கோம். கையைப் புடிச்சிருக்கலாமே!”

“இப்பத்தான் பையனுக்குத் துணிச்சல் வந்திருக்கு உனக்குச் சந்தேகம்ன்னா நான் சொன்னபடி சோதிச்சுப் பாரு. அவன் மனசு தெரியும் அதன்படி நடந்துக்கலாம்.”

“அந்த ஆள் யோக்கியம். நட்புக்குத் துரோகம் செய்யாதவர். உன் பொண்டாட்டி இப்படின்னு என் புருசன்கிட்ட வத்தி வைச்சுட்டா என்ன பண்றது?” நித்யா பயத்துடன் பங்கஜத்தைப் பார்த்தாள்.

“கவலைப்படாதே! அவன் என் கையைப் புடிச்சு இழுத்தான்னு கதையை மாத்தி உன் புருசன்கிட்டே அழுதுனீன்னா முடிஞ்சுது வேலை. எதிர்வீட்டுக்காரி புராணம் பாடி புருசன் புத்தியை மாத்தி நம்மை மறைச்சுக்கலையா. அது போல இது ஒன்னு”.

நித்யா மனம் இன்னும் சமாதானமாகவில்லை.

“ஏன்க்கா! அந்த ஆளு எனக்கு அள்ளிக் கொடுத்து தனக்கும் அவருக்கும் தொடர்பு இருக்கிறாப்போல காட்டி என் வீட்டுக்காரர் என் மேல சந்தேகப்படட்டும்ன்னு செய்திருக்கலாமோ?!” தன் யோசனையைச் சொன்னாள்.

“அதனால சுபானுக்கு லாபம்?” இவள் அவளைத் திருப்பிக் கேட்டாள்.

நித்யாவிற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

“நித்யா! அவன் நம்ம மேல ஆசைப் பட்டால் நேரடியாய்ச் சொல்லனும். இல்லே இது போல பரிசு, பணங்களை அள்ளி வீசி தன் மனசைத் தெரியப்படுத்தனும். நாம அவனுக்கு மறுப்புச் சொன்னாத்தானே அவன் வில்லங்கம் செய்வான் செய்யனும். எதுவும் இல்லாம சும்மா வில்லங்கம் செய்யனும்ன்னா.. நீயும் அவனும் பரம எதிரியா, இல்லே… பழைய எதிரியா?”

பங்கஜத்திற்கு எப்படி இப்படியெல்லாம் யோசனை வருகிறது? பத்தாண்டுகளுக்கும் மேலாக கணவனுக்குத் தெரியாமல் காரியம் சாதிக்கிறாளென்றால் சும்மாவா?!

இல்லை நான் இப்படித்தான் இருப்பேன்! என்று தன் நடத்தையினால் அவரை அடக்கி விட்டாளோ என்னவோ. புருசன் ஏதுவும் கண்டு கொள்வது கிடையாது. இல்லை.. தளர்ந்து எதையும் கண்டு கொள்ளாத சுபாவம். அதைப் பயன்படுத்திக் கொள்கிறாளோ என்னவோ?

“ஏன் நித்யா! உன் புருசன் உன் மேல சந்தேகப்படுவான்ங்குறே?!“ பங்கஜம் கேட்டு அவளை நேருக்கு நேர் கூர்ந்து பார்த்தாள்.

ஏன் இப்படி கேட்கிறாள்?! காரணம் இருக்கும் நினைத்த நித்யா “இதுவரைக்கும் இல்லே. இனிமே சந்தேகப்படமாட்டார்ன்னு என்ன நிச்சயம்?” பதில் சொன்னாள்.

“கண்டிப்பா சந்தேகப்படமாட்டான். சந்தேகப்படுற அளவுக்கு ஆள் இல்லே. அந்த அளவுக்கு அவன் உன் மேல் பிரியம். அந்த பிரியம் விடாம இறுகுற அளவுக்கு நாமும் அவன்கிட்ட இன்னும் நகமும் சதையுமாய் இருக்கிறாப்போல நடிச்சோம்ன்னா சந்தேகமே தலை துாக்காது. அது மட்டுமில்லே.. உன் புருசன் சந்தேகப்படுற பிராணி இல்லே. அப்படி சந்தேகப்படுறவனாய் இருந்தால் அக்கம் பக்கம் கவனிப்பான். சுதந்திரமா விடாம மனைவி முதுகு மேல கண்ணு வைப்பான். உன் புருசன் சம்பத்கிட்டே இப்படி எந்த பழக்கமும் கெடையாது.”

‘உண்மை!’ நித்யாவிற்கு இந்த வார்த்தைகள் நிம்மதியாய் இருந்தது.

“பிரச்சனையை விடு. எதிர்வீட்டுல இன்னைக்கு என்ன விசேசம்?” கேட்டு சன்னல் வழியே பார்த்தாள் பங்கஜம். வாசலில் புத்தம் புது சாண்ட்ரோ நின்றது.

“ஆள் வந்துட்டான்டி!” மெல்ல உற்சாகமாய் சின்னக்குரலில் கூவினாள். “ஆனா வழக்கம் போல கதவு அடைச்சு கெடக்கு.” என்றவள் “நித்யா! சம்பத்தை வழக்கம் போல உன் கட்டுக்குள்ளேதானே வைச்சிருக்கே. விட்டுடாதே! விட்டால் எதர்க்க கண் வைச்சுடுவான்!” எச்சரித்தாள்.

“அதெல்லாம் நான் சரியாய்த்தான்க்கா வைச்சிருக்கேன். சாதாரணமாவே நான் அக்கம் பக்கம் பார்க்க விடுறதில்லே. எதர்க்க இவ வந்ததிலேர்ந்து திரும்ப விடுறதில்லே.” பதில் சொன்னாள்.

“ம்ம்.. இது முக்கியம். அப்பப்போ அதைச் சரி படுத்திக்கோ. இடையில புருசனைப் பரிசோதனைப் பண்ணிக்கோ.” என்ற பங்கஜம் “இன்னைக்குச் சம்பத்துக்கு என்ன கதை சொல்லப் போறே?” கேட்டாள்.

“எதையாவது மனசுல தோன்றதைச் சொல்ல வேண்டியதுதான்.”

“என் சொல்படி நம்ம மேல புத்தி பாயாதபடி சம்பத்துக்கு எதையாவது சொல்லு. அப்போதான் புருசனுக்கு நம்ம மேல சந்தேகம் வராது.“ சொன்னாள்.

தொலை பேசி அடித்தது. பங்கஜம் உரிமையாய்ப் போய் எடுத்தாள். எதிர் முனையில் பேசிய குரலைக் கேட்டதும் அவள் முகம் மலர்ந்தது, ஒலிவாங்கியின் வாயை ஒரு கையால் பொத்திக் கொண்டு, “நித்யா! இன்னைக்கு இங்கே வர்றேன்னு சொன்ன ஆள் பேசறான்!” கிசுகிசுத்தாள்.

நித்யாவிற்குள்ளும் புது உற்சாகம் பாய்ந்தது.

– தொடரும்…

Karai adalarasan என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *