கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 25, 2025
பார்வையிட்டோர்: 1,958 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பூமி – சூரியன் – சந்திரன் 

தாய் – தந்தை – குழந்தை

பக்கிரிசாமி ஒரு கொத்தனார்;

பாப்பத்தி அவர் சம்சாரம். 

இசக்கியம்மா இருவருக்கும் பிள்ளை,

ஆணுக்கு ஆண், பெண்ணுக்குப் பெண். 

அன்று விடியற்காலையில் பாப்பாத்தி படுக்கையை விட்டு எழுந்திருக்கும்போது முகத்தில் அருளே இல்லை. இரவு எப்படியும் வந்து விடுவார் என்ற நம்பிக்கையோடு, மாலையில் வெளுத்த புடவைகூடக் கட்டிக் கொண்டான். அன்றைய மஞ்சள் குளிப்பு வீணாகாது என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் அவர் வரவில்லை, ஏற்கெனவே தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த அவளுடைய விரகதாபத்துக்கு, மூட்டைப் பூச்சியும், சீகாரைப்பாயின் சிலும்பல்களும் தூபமிட்டன. அவருக்கு என்று பிழிந்து எடுத்து வைத்திருந்த வெந்நீர்ப் பழையதில், புழக்கடைக் கொசுக்கள்தான் செத்துக் கிடந்தன. 

பழையதை எடுத்துக் கழனிப் பானையில் கொட்டி ட்டு “இந்த வேலையை இவுக விட்டுத்தொலைச்சாலும் தேவலெ. இருந்தாலும் இப்படியா பள்ளி… 

இல்லாமே. இந்த இசக்கி மூதி எங்கே போய்த் தொலைஞ் சிதோ. மூதிக்கு எந்திரிச்சவுடனேயே விளையாட்டுத் தானோ?” என்று முணகிவிட்டு, அடுப்பில் தோசைக் கல்லைப் போட்டான். முந்திய நாள் மிஞ்சிப்போன தோசைமாவின் புளிப்பை மாற்றுவதற்காக, சோடா உப்பைத் தேடி, பரணில் துழாவினாள். எப்படியும் காலையில் அவர் வந்துவிடுவார் என்று அவளுக்குத் தெரியும். சோடா உப்பைத் தோசையில் கலந்து பிசைந்து விட்டு, கல் காய்ந்துவிட்டா என்று நீர் தெளிக்கப் போனாள். 

அதற்குள், “இந்தா. நான் பழயபடியும் போவணும். இப்பவே சோத்தை வடிச்சிரு” என்று குரல் அடுப்பங் கரைச் சுவரில் மோதி பாப்பாத்தி காதில் விழுந்தது. 

காய்ந்த கல்லில் தண்ணீர் சுரீர் என்றது. பாப்பாத்தி நிமிர்ந்தாள். பதில் சொல்லாமல், தோசைக்கல்லை எடுத் சுவரில் சாய்த்தாள். 

களைத்துப் போய் வந்திருந்த பக்கிரிசாமி கையில் கொண்டுவந்த போசன பாத்திரத்தையும், தச்சுமுழம், கொத்துக் கரண்டி, ரஸமட்டம் முதலிய கருவிகளையும் பரணில் வைத்து விட்டு, கிணற்றங்கரை பக்கம் போனார். போகும்போது பாப்பாத்தியைப் பார்த்தார்; அவள் பார்வை விறைத்திருந்தது. 

நேற்று இரவு வராததுதான் இதற்குக் காரணம் என்பதை ணர்ந்து கொள்ள முடியாத அவ்வளவு நபுஞ்சகன் அல்ல, பக்கிரி. எல்லாம் இருட்டுகிற வரைக்குத்தான் என்று அறிந்தவர். சிரித்துக்கொண்டே, கிணற்றில் பட்டையைப் போட்டார். “செல்லாயி நயம் சரக்கு தான்; சரியான நாட்டுக் கட்டை!” என்று எண்ணியவர் முந்திய இரவு அடிவாணந் தோண்டிய பள்ளத்தில் சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் நடந்து கொண்ட திரு விளையாடலை நினைத்தார். அவருக்கே சிரிப்புப் பொங்கியது. உடலில் இன்பம் கிளுகிளுத்தது. 

குளித்துவிட்டு வந்தவர் அடுப்பங்கரையைப் பார்த்து, “இசக்கியை எங்கே? கடைக்கி கிடைக்கிப் போயிருக்குதா?” என்று கேட்டார். 

பதில் இல்லை; வெறும் தூண்டில்தான் வந்தது. மீன் சிக்கவில்லை. 

சிரிப்பு அவருக்கு உடன் பிறந்தது. சிரித்தார். கூடத்துக்கு நடந்தார். கூடத்துக்கு வந்தபோது, தெருவிலிருந்து பெண் இசக்கியம்மா – எட்டு வயதுச் சிறுமி – சிணுங்கிக் கொண்டே ஓடிவந்தாள். 

திண்ணையில் துண்டைப் போட்ட கொத்தனார், ”ஏ புள்ளே! ஏன் அளுதுக்கிட்டே , வாரே” என்று கேட்டார். அந்தப் பிள்ளையோ பதில் சொல்லாமல் நேரே, அடுக்களைக்குப் போயிற்று. 

பாப்பாத்திக்கோ பக்கிரிமீதுள்ள கோபத்தை யார்மீது காட்டலாம் என்ற துடிப்பு. இசக்கியம்மா வரவும், “ஏ அளுகுணி முதி. ஏன் கண்ணைக் கசக்குதே?” என்று கேட்டாள். 

முதலில் வெறும் சிணுங்கல்தான் பதில். சிணுங்கலோடு சிணுங்கலாய். “இங்கெ பாரு அம்மா எதிர்த்த வீட்டுச் சுடலை என்னெப் பார்த்து, கெட்டவார்த்தை செய்யக் கூப்பிடுதாம்மா” என்ற வார்த்தைகள் பிறந்தன. 

இந்த அதீதமான புகார் பாப்பாத்தி மனதில் அந்த வேளையில் என்னவோ போலத் தைத்தது. “முதிமுதி. அந்தப் பயலோடெ சேராதென்னு உனக்கு எத்தனைதரம் மாரடிக்கது?” என்று சுத்திக் கொண்டே, முதுகில் ஒரு அறை வைத்தாள். 

இசக்கி கதறினாள். அடிகள் தொடர்ந்தன. வெளித் திண்ணையிலிருந்த பக்கிரிசாமி இத்தனையும் கேட்டுக் கொண்டுதானிருந்தார். 

“இந்தா பாரு புள்ளெயை ஏன் போட்டு அடிக்கிறே. அதட்டினால் போறாதா?” என்று மீண்டும் தூண்டிலை எட்டி வீசினார். மீண்டும் தோல்விதான். 

பாப்பாத்தியம்மா அடிப்பதை நிறுத்திவிட்டு “பெத்துப் போட்ட அப்பனுக்கே விதரணை இல்லெ. இவளை அடிச்சித்தான் என்ன ஆவுது” என்று சலித்துக் கொண்டே, பக்கிரியை முதுகில் குத்தினாள். 

காத்தனார்வாளுக்கு தன்னைத் தன் சம்சாரம் குத்தாமல் குத்துவதைத் தாங்க முடியவில்லை “இந்தா, வந்தவுடனேயே சண்டைக்கி வரிஞ்சி கட்டியே” என்றார். 

“பின்னே என்னா? நான் ஒருத்தி இருக்கேனே என்ற லட்சைகூட இல்லாமெ-” என்று இழுத்தாள் பாப்பாத்தி. 

”நீ இருக்கது தெரியாமலா இருக்கு. தொலைஞ்சா போயிட்டெ?” என்று எதிர்த்துத் தம்மைச் சமாளிக்க முயன்றார். ஆனால் வார்த்தைகள் தம்முள் விக்கின. 

தொலைஞ்சி போனாத்தான் அலுப்பு விட்டதே”. என்று கத்திவிட்டு, “ஏம் மூதி இன்னம் ஏன் அழுதுக்கிட்டிருக்கே” என்று பக்கத்தில் நின்ற இசக்கியை அடிக்க ஆரம்பித்தாள். 

“இந்தா பாரு. புள்ளெயை அடிக்காதே” என்று ஆணையிட்டார் ஆண் சிங்கம் 

“ஐயோ! பொண்டாட்டி புள்ளெமேலே எவ்வளவு கர்சனை!” என்று சிலுப்பிக் கொண்டே தாக்கினாள், பாப்பாத்தி. 

தன்மீதுள்ள கோபம் முழுவதையும் அந்த அப்பாவிக் குழந்தை மீது செலுத்துவதை அவரால் தாங்க முடிய வில்லை. 

”சொல்லிக்கிட்டே இருக்கேன்” என்று சத்தமிட்டவாறே எழுந்து சென்று, பிள்ளையை உதறிப் பிடுங்கிவிட்டு பாப்பாத்தியின் முதுகில் ஒரு அறை அறைந்தார். எதிர் பார்த்ததுக்கு விரோதமாக அடி உறைத்து விழுந்து விட்டது. 

ஓவென்று அலறிக் கொண்டே கீழே உட்கார்ந்து அழ ஆரம்பித்தாள், பாப்பாத்தி. 

“எனக்குச் சோறும் வேணாம். ஒரு மண்ணும் வேணாம் நான் போறேன்” என்று கோபித்துக்கொண்டு, தச்சு முழம், கொத்துக் கரண்டி, ரஸமட்டம் முதலிய வற்றை எடுத்துக்கொண்டு திண்ணையில் கிடத்த துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு நடந்தார் பக்கிரி. 

அடிபட்ட முதுகைத் தடவிப் பார்த்துக்கொண்ட இசக்கி. கைவிரலில் தடம் தட்டுப்படும்போதெல்லாம் விக்கி விக்கி அழுது கொண்டிருந்தது. அதன் மனம் மட்டும் எதிர்த்த வீட்டுச் சுடலை சொன்ன கெட்டவார்த்தைப் பேச்சில் நின்றது. 

பாப்பாத்தியும் அழுதாள்.
உலையில் சோறு கொதித்தது. 

பூமி – சந்திரன் – சூரியன்
கிரஹணம் பிடித்தாய்விட்டது 

பக்கிரிசாமி கொத்தப் பிள்ளைமார்.குடியில் பிறந்து விட்ட காரணத்தினால், சிறுவனாய் இருந்த காலம் முதற் கொண்டே, கரண்டி பிடிக்கும் கட்டிட வேலையில் ஈடு பட்டார். கலியாணமாகாமல் இருந்த காலத்திலும் கொகுவத்துக் கிருஷிணன் மாதிரிதான் வாழ்க்கை நடத்தினார். அந்தத் தொழிலில் வசதிகள் ஜாஸ்தி. அவர்களுடைய பறிக்க முடியாத உரிமை அது. கட்டிட வேலைக்கு செங்கல் சுண்ணம்பு சுமக்க வரும் சிறுமிகளோடு முறை செப்பி விளையாடும் உரிமையும் அவருக்கு உண்டு. ரவிக்கை அணியாத நாட்டுக் கட்டைகள் முந்தானைச் சேலையைச் சுருட்டி, தலையில் மணையாக வைத்துக் கொண்டு, செங்கல் கூடைகளைச் சுமந்து வரும்போது, அவர் தயிர்க்கலையம் கொண்டு வரும் கோபியரைக் கண்ட பரமாத்மாவே ஆய்விடுவார். அவர்களுடைய திமிறிய உடல் கட்டையும் அங்க அசைவுகளையும் பார்த்துக்கொண்டே, வேலை செய்தால், கரண்டி தன்னையறியாமலே விறுவிறுப்புக் காட்டும். கன்னிகழியாச் சிறுமியரிடம் கைச்சரசமாடுவதிலிருந்து, வித்துக்கு விட்ட விரைச் சுரையான வத்தல் தார்வரை கைவைத்து அனுபோகவகை கண்டவர், “என்ன இருந்தாலும் வருமா? பாப்பாத்தி சிவெப்பா மட்டும் இருந்தா போதுமா?” என்று அடித்துப் பேசும் திறமையுடையவர். 

எனினும் பாப்பாத்தியை ஊரறிய கைபிடித்த நாளையிலிருந்து அவளிடம் கசப்பைச் சம்பாதித்துக் கொண்டவரல்லர். இடையிடையே சிறுபூசல் வரத்தான் செய்யும். ஆனால் அதற்குரிய ஆயுசுகாலம் அவருக்குத் தெரியும். பக்கிரியின் நடவடிக்கையைப்பற்றி பாப்பாத்திக்கு மனசில் வெறுப்பு இருந்தாலும், பக்கிரியிடம் வெறுப்பு கிடையாது மனைவியை தாஜா பண்ணுவதில் கைக்காரன். பாப்பாத்தி இதை வேறுவிதமாக நினைக்கமாட்டாள். இருவருக்கும் அத்தனை பிணைப்பு, அவ்வப்போது வரும் மூன்றே முக்கால் நாழிகைப் பூசல்களெல்லாம் எங்கு, எப்போ போது. எப்படித் தீரும் என்று நன்றாக அறிந்தவர். 

பாப்பாத்தியும் அப்படித்தான். புருஷனும் தானும் வீஞ்சிக்கொண்டால்கூட, உள்ளத்திலுள்ள அன்பு குறையாது.  புருஷன் வீட்டோடு இருந்தால், ஆட்டுக்கறி வாங்கி வைப்பதிலெல்லாம் குறைச்சல் கிடையாது. பக்கத்து வீட்டுக்காரி, “நேத்து இப்படி முறைச்சிக்கிட்டு கிடந்தீக. இன்னைக்கி புருஷனுக்கு அக்கரையா கறி யெடுத்துப் போடுதியே என்ன இருந்தாலும் புருஷன் கிறது தெரியாமலா இருக்கு?” என்று கிண்டலாகக் கேட்டாலும் ”ஆமாத்தா” என்று சலிப்பதுபோல் காட்டி தன்னுள் சிரித்துக்கொள்ளும் சுபாவமுடையவள், பாப்பாத்தி. தன் புருஷனைப்பற்றி அவளுக்கு அவ்வளவு நம்பிக்கை. எனினும் அன்று காலையில் பக்கிரிசாமி முறைத்துக் கொண்டு, சாப்பிடாமல் கொள்ளாமல் போனது என்னவோ போலிருந்தது. கொஞ்சம் கிராக்கி பண்ணலாமே என்று நினைத்தாள், ஆனால் வண்டி தடம் மாறிவிட்டது. 

காலையில் கோபித்துக் கொண்டு போனவர் ராத்திரி வருவாரா என்ற சந்தேகம் அவளுக்கு. வந்தாலும் வராவிட்டாலும் சோற்றை ஆக்கி வைப்போம் என்று நினைத்தாள். இசக்கியிடம் கூட அன்று நல்லபடியாய் நடந்து கொள்ள முடியவில்லை அவளால், பக்கிரிசாமி வந்தால் வாய் கொடுத்துப் பேசக்கூடாது என்று நினைத்தாள். பழைய குறும்பின் குறுகுறுப்பு. 

மாலைக் கருக்கலில் சோற்றை வடித்து இறைக்கி விட்டு, நம்பிக்கையற்றுப்போய் வாசல் நடையில் வந்து நின்றாள். ஆனால், எதிர்பாராத விதமாக, தெரு மூலையில், கொத்தனார்வாள் கையில் உபகரணச் சுமையோடு உலா வருவது தெரிந்தது. உடனே தன்னுடைய சுயமரியாதைக்குப் பங்கம் வந்துவிடக் கூடாதே என்ற சிந்தனை அவளை வீட்டுக்குள்ளே தள்ளிக் கொண்டு போயிற்று. ஆனால், உயரமான சாரத்தில் ஏறிச் செல்லும் பெண்களின் லீலைகளையும் தீகாரண்யமாக அளந்து விடும் அவர் கண்கள் பாப்பாத்தி உள்ளே நுழைவதையும் கண்டு விட்டது. தன்னுள் சிரித்துக் கொண்டார். 

வீட்டுக்குள் வந்ததும் துண்டை உதறித் திண்ணையில் போட்டுவிட்டு, பரணில் தச்சுமுழம், ரஸமட்ட வகை யறாக்களை வைத்துவிட்டு, ஒன்றும் பேசாமல், கிணற்றடிக்குப் போனார். கால்கழுவிவிட்டு வீட்டுக்குள் வந்தார். பாப்பாத்தியிடம் நேரடியாகப் பேச, நாக்கு வளையவில்லை. ”ஏ, இசக்கி, சோறாக்கியிருந்தா போடச் சொல்லேன்.” என்று கார்வார் பண்ணிவிட்டு, வெளித்திண்ணையில் வந்து உட்கார்ந்தார். 

கொஞ்ச நேரம் கழித்து. “போட்டாச்சின்னு சொல்லு மூதி” என்று இசக்கியை, பாப்பாத்தி கார்வார் பண்ணுவது பக்கிரிசாமி காதில் விழுந்தது. பாவம் அந்த அப்பாவி இசக்கியை இழுத்தடிப்பதைவிட, தானே நேரில் போவது நல்லது என்று தடுக்கவில்லை. போய் இலையின் முன் உட்கார்ந்தார். வெறும் வெந்தயக் குழம்பும், காணத் துகையலுந்தான். சாப்பாடு ருசிக்கவில்லை. 

“காலையிலெகூடச் சாப்பிடல்லென்னு தெரியுமே. வேறெ ஏதாச்சும் வச்சா என்னவாம்?” என்று இலையைப் பார்த்து முறைத்துக் கேட்டார். காலையில் வாங்கிய அடியை மறக்காத இசக்கியும் பக்கத்திலிருந்து அப்பாவையும் அம்மாவையும் திருகத்திருக விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். 

தான் கேட்டதற்குப் பதில் வராததால் பக்கிரி சலித்து விடவில்லை. இலையைவிட்டு எழுந்திருக்கும்போது, “அடேயப்பா இன்னம் கோபம் ஆறினாப்பிலெ தெரியலியே, இன்னும் எத்தினி நேரத்துக்காம்” என்று சிரித்துக் கொண்டே கேட்டார். 

பாப்பாத்திக்கு களுக்கென்று சிரிப்பு வந்தது பல்லைக்கடித்துக் கொண்டாள். கையைக் கழுவி முடிந்ததும், பக்கிரிசாமிக் கொத்தனார்வாள் திண்ணையில் வந்து படுத்துக் கொண்டார். ஆனால், தூக்கம் வரவில்லை. உள்ளே என்னென்ன நடக்கிறது என்பதை யெல்லாம் காதாலேயே உணர்ந்து கொண்டார். 

படுக்கை விரித்த சப்தம். இசக்கியை உறக்க மாட்டிய சப்தம், அலுத்துப் போய் உடம்பை முறித்துப் புரண்டு படுக்கும் சப்தம், இடையிடையே பாப்பாத்தி தூக்கத்தில் ஆழவில்லை என்பதற்கு அறிகுறியான பெருமூச்சுக்கள். பக்கிரிக்குச் சிரிப்பு வந்தது, புரண்டு படுத்தார். 

பூமி சந்திரன் சூரியன் 
கிரஹணம் இன்னும் விடவில்லை 

எப்போதடா உள்ளே போவது என்றிருந்த யக்கிரிக்கு திடீரென்று சிலுசிலுத்த சாரல், காலத்தால் செய்த நன்றியாகத் தென்பட்டது. உடனே உதறியடித்து எழுந்திருந்து துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு வீட்டுக்குள் நடந்தார். போகும்போது, “வெளியே படுக்கலாமின்னா மழை வேறே தூறுது” என்று விட்டுக் கொடுக்காமல் வாய்விட்டுக் கூறிவிட்டு, பாப்பாத்தி படுத்திருந்த இடத்தைப் பார்த்தார். 

கலைந்து கிடந்த கூந்தல் தலைக்கு ஹிதம் கொடுக்க ஒருச்சாய்த்துக் கிடந்தாள் பாப்பாத்தி, பக்கத்தில் இசக்கி இதழ்க் கோணத்தில் உறைந்துபோன முறுவலோடு தூங்கிக் கொண்டிருந்தாள். 

கொத்தனார்வாள் தமக்குத்தாமே சிரித்துக் கொண்டார். இசக்கியம்மாளுக்கு அடுத்துப் பாயை விரித்துத் தலையைச் சாய்த்தார். இவர் படுத்ததும், பாப்பாத்தி எதிர்த்திசையில் முதுகு காட்டித் திரும்பிப் படுத்தது. அவள் தூங்கவில்லை என்பதைக் காட்டிக் கொடுத்தது. 

மாடக்குழியில் தகர விளக்கு புகைமண்டி எரிந்து கொண்டிருந்தது. 

பக்கிரிசாமி கொஞ்ச நேரம் மல்லாந்து படுத்து இரண்டு கைகளையும் தலைக்கு அண்டை கொடுத்துக் கிடந்தார். 

மூவரும் படுத்திருந்தனர். 

சூரியன் – சந்திரன் – பூமி. 


கடைசியில் பக்கிரிசாமி, “பாப்பாத்தி!” என்று மெதுவாகக் கூப்பிட்டார். குரல் கரகரத்திருந்தது. பதில் இல்லை. மீண்டும் சில நிமிஷம் மெளனம். பிறகு “பாப்பாத்தி” என்ற அதே கரகரப்பு. பதில் வந்தது. வெறும் முனகல். தூக்கக் கலகத்தில் நேர்ந்தது போன்ற ஒரு பாசாங்கு. 

பக்கிரிசாமி வெற்றி கண்டார். பக்கத்தில் கிடந்த இசக்கியம்மாவைத் தூக்கித் தள்ளிப்போட்டு விட்டு, மெதுவாக, பாப்பாத்தி பக்கம் உருண்டார். ஒட்டிப் படுத்தார். பாப்பாத்தியின் தோள் அவர் மார்பைப் பரிசித்தது. 

”பாப்பாத்தி!” என்றார். தூங்கவில்லை என்று காட்டும் முனகல். 

“பாப்பாத்தி – புள்ளெயைப் போட்டு இப்படி அடிச்சா, எனக்குந்தான் கோபம் வராதா?” என்று அருமையாய்க் கேட்டார். அவர் கை அவள் தலைமயிரைக் கோதியது. 

“அதுக்கு என்னை இப்படியா அடிக்கது?” என்று பாப்பாத்தி வாயைத் திறந்தாள். 

பக்கிரிக்கு உடல் குளுகுளுத்தது. “அடிக்கணும்னா- உறைச்சி விழுந்திட்டுது” 

பாப்பாத்தி களுக்கென்று சிரித்தாள்.

“நேத்து ஏன் வரலே” 

“அதுக்கென்ன இன்னைக்கித்தான் வந்திட்டேனே”. தூக்கம் கலைந்து உசும்பிய இசக்கியின் காதுகளில் பேச்சுக் குரல் விழுந்தது. யார்? ஒருத்தருக்கொருத்தர் ‘டூ’ போட்டுக் கொண்ட அம்மாவும் அப்பாவுமா பேசுகிறார்கள்? அதற்கே ஆச்சரியமாயிருந்தது. “நான் அம்மா பக்கமில்லா படுத்திருந்தேன்!” இது அதன் நினைப்பு. 

விழித்துப் பார்த்தது. 

கிரஹங்ங்கள் நிலைமாறியிருந்தன. 

சந்திரன் – சூரியன் – பூமி. 

கிரஹணம் விடுபட்டுக் கொண்டிருந்தது. 

இசக்கி ஒன்றும் புரியாதவாறு உர்ரென்று பார்த்தாள். மாடக்குழித் தகர விளக்கு ஆடி அசைந்து ஒளி கொடுத்தது. 

பாப்பாத்தியும், பக்கிரிசாமியும் பேசினார்கள். இசக்கியின் காதில் பேச்சு சரியாக விழவில்லை, அப்பாவும் அம்மாவும் என்னதான் செய்கிறார்கள்? 

இச்சென்ற சப்தம். அம்மாவும் அப்பாவும் ஒரே பாயில் ஒருவரை யொருவர் அணைத்துப் படுத்துக் கிடந்தார்கள். அப்பா அம்மாவை முத்தமிட்டார். அப்புறம்?…

இசக்கி உர்ரென்று பார்த்தாள். 

“சீ-கெட்ட வார்த்தை!” 

“சுடலை கெட்டவார்த்தை செய்யக் கூப்பிட்டப்போ மாத்திரம் அம்மா என்னை அடிச்சாளே! இப்போ!” 

அதன் சிந்தனை அதிகதூரம் செல்லவில்லை. கொஞ்ச நேரத்தில் அசந்து தூங்கிப் போய்விட்டாள். 

கிரஹங்கள் அந்தப்படியே இருந்தன. 

கிரஹணம் விடுபட்டது! 


காலையில் எழுந்தவுடன் இசக்கி அம்மா அப்பாவை யும் குர்ரென்று பார்த்தாள். பாப்பாத்தி இசக்கியிடம் வந்து “உடம்பு ரொம்ப வலிக்குதாடி, கண்ணு!” என்று முதுகைத் தடவிப் பார்த்தாள். அணிலின் முதுகில் ராமரிட்ட தடம்போல, கைவிரல்களின் மச்சம் அதிலிந்தது. அப்படியே குழந்தையை அணைத்துக் கொண்டாள். 

“பின்னெ பச்சைப் புள்ளெயே-” என்று உத்ஸாகத்தோடு பேச்சை ஆரம்பித்த பக்கிரிசாமி துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு வெளியே போகத் தயாரானார். 

“அடிக்கிற கைதான் அணைக்கவும் செய்யும்” என்று சொல்லிவிட்டு, குழந்தையைத் தழுவினாள், பாப்பாத்தி. “யார் கை? உங்கையா, என் கையா?” என்று இடக்குப் பேசினார் பக்கிரி. 

“நீங்கள் போங்க” என்று செல்லமாய்ச் சொன்னாள். பக்கிரி சிரித்துக்கொண்டே வெளிக்கிளம்பினார். 

வெளியே போய்விட்டு வரும்வழியில் கசாப்புக்கடை கண்ணில் பட்டது. “கால்சேர் கறி வாங்கிக்கிட்டுப் போனா என்ன?” என்ற யோசனை தட்டுப்பட்டது – வாங்கிக்கொண்டு வீட்டுக்கு நடந்தார். 

வீட்டுக்குள் நுழைந்தவுடன், “இந்தா பாப்பாத்தி, கால் சேர் கறி வாங்கியாந்தேன். எடுத்துட்டுப்போ” என்று செல்லமாய் அழைத்தார். 

“இதை எதுக்குப்போட்டு வாங்கியாந்திய. நான் தான் எசக்கியைவிட்டு மீன் வாங்கி வச்சிறுக்கேனே” என்று பதிலளித்தாள் பாப்பாத்தி. 

“அதுக்கென்ன? ரெண்டையும் வய்யி” என்று சொன்னார் பக்கிரி. 

“அப்பாவும் அம்மாவும் இப்படி நேற்று சண்டை யிட்டுவிட்டு, ராத்திரி கெட்ட வார்த்தை செய்து விட்டு, இப்போது சிரிக்கிறார்களே, ஏன்?” என்று யோசித்தாள், இசக்கி. 

கெட்ட வார்த்தை! 

“அப்போ – சுடலை சொன்னது? அம்மாவும் அப்பாவுமே – அப்போ நான் – ” 

பக்கத்திலேயே நின்று கொண்டிருந்த இசக்கி எதையோ தீர்மானித்து முடிவு கட்டியதுபோல், எதிர்த்த வீட்டுச் சுடலையைத் தேடி ஓடினாள். 

“ஏ மூதேவி எங்கே ஓடுதே?” என்று கேட்டாள், பாப்பாத்தி. 

“அது எங்கெயும் போவுது நீ இப்படி வா” என்று கையை நீட்டினார் பக்கிரிசாமி. 


மீண்டும், 

பூமி – சூரியன் – சந்திரன் 

தாய் – தந்தை – குழந்தை. 

– முல்லை கதைகள், 1945ல் முல்லை இதழில் வெளிவந்த கதைகள், தொகுத்தவர்: முல்லை பி.எல்.முத்தையா, முதற் பதிப்பு: செப்டம்பர் 1998, முல்லை பதிப்பகம், சென்னை.

தொ.மு.சி.ரகுநாதன் தமிழ்ப் படைப்பாளி தொ.மு.சிதம்பர ரகுநாதனின் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: • ‘தினமணி’யில் உதவி ஆசிரியர், வை.கோவிந்தன் நடத்திய ‘சக்தி’ இதழின் ஆசிரியர், ‘சோவியத் நாடு’ இதழின் ஆசிரியர் போன்ற பொறுப்புகளில் செயல்பட்டார். • ‘சாந்தி’ என்னும் முற்போக்கு இலக்கிய மாத இதழைத் தொடங்கி நடத்தியவர், அதன் வாயிலாக டேனியல் செல்வராஜ், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன் உள்ளிட்ட அன்றைய இளம் எழுத்தாளர்களை தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமும் செய்தார்.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *