காணாமல் போனவன்





(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கனதியான இருள் வீட்டு லைற் மாத்திர- மல்ல. தெருவிளக்குகளும் பரலோகம் போயிருந்தன.
மரக்கட்டிலில் மல்லாக்கக் கிடந்த பொன்னுத்துரைக் கிழவருக்கு மின்- சாரம் நின்று போன சங்கதி தெரியவரத் தாமதமாயிற்று.
எப்படிப் புரண்டு படுத்தாலும், துரத்திக் கொண்டிருக்கும் எலும்புகள் மரப்பலகை- யுடன் முரண்பட்டுக் கொண்டிருந்தன. கண்பார்வையும் அப்படி இப்படியாகி விட்டது. விடாமல் துளைத்தால்தான் எதிரே நிற்பவர் தூக்கலாகத் தெரிவார்.
சில எடுகோள்களின் அடிப்படையில் தான் யார் எதிரே நிற்பது என்பதை இறுதியாக முடிவு செய்ய முடியும்.
அப்போது வீட்டில் ஆட்கள் இல்லாதது ஆழமான சோகம் தான். தனிய இருப்பது ஒன்றும் புதினமில்லை. லைற் இல்லாத இரவுகளில் இருள் மேல் இருளாகக் கழிந்த எத்தனையோ இரவுகள் இப்படி கழிந்திருக்கின்றன.
இப்போது அப்படியல்ல. நிலைமை மோசம். அவரது நாளாந்த மன வருத்தங்களுடன் கூடவே புதிய தொரு சோகம் அவரைப் போலவே வீட்டில் உள்ளோரை கஞ்சி வடித்துக் கொண்டிருந்தது.
முன் போல உஷாரான ஆளாக இருந்திருந்தால் அவர் எத்தனை இடங்களுக்கு ஓடித்திரிந்திருப்பார்? இப்போது ஊன்று கோலை விட்டால் வேறு நம்பிக்கையான ஆட்கள் யாரும் இல்லை.
வாசல் கேற் இறுகச் சாத்தியிருக்கும். மகனும் மருமகளும் போகும் போது வீட்டையும் பூட்டிக் கொண்டு போயிருப்பார்கள் என்று கிழவர் யோசிக்கும் போதே வாசல் கேற் திறக்கப்படுவது போல சத்தம். மகனும் மருமகளுந் தானா என்று நினைத்து காதுகளை கூர்மை- யாக்கினார். ஆனால் அவர்கள் வருவதாயின் அவர்களின் ஸ்கூட்டர் சத்தம் கேட்குமே? அப்படியானால்…?
கிழவர் சற்றுக் குழம்பினார். ஊரைச் சுற்றி வளைத்துத் தேடுதல் வேட்டை நடத்துபவர்களா?
அவர்கள் என்றால் இப்படி ஒரு அமைதி இருக்காதே? அமைதி எங்கேயோ ஓடியிருக்குமே? யார் என்று குழம்பும் போதே மீண்டும் கேற் திறக்குமாப் போன்ற சத்தம்.
ஆர் அது?” உரக்கக் குரல் கொடுத்தும் பதில் குரல் கிடக்க- வில்லை. கேற்றடியில் யாரோ நடமாடுவது போன்ற ஒரு உணர்வு அவருக்கு ஏற்பட்டது.
தட்டுத் தடுமாறி ஊன்று கோலை எடுத்துக் கொண்டார். இருளில் பாதை பிடிப்பது கஷ்டம் தான். என்றாலும் முயற்சித்தார். தயங்கித் தயங்கி அடிமேல் அடி வைத்து கேற்றடியை நோக்கி நடந்தார் நடையா அது? ஊர்வு!
முன் போட்டிக்கோவில் ஏறி சீமேந்துக் குளிரில் கால் சிலிர்த்தது, கேற்றை அண்மித்தார். மூடு திரையிட்டுத் தெரிவது போல கேற் தெரிந்தது. அதனைத் தொட்டார். என்ன ஆச்சரியம்! அது இறுக்கமாக வழக்கம் போல பூட்டப்பட்டுக் கிடந்தது. என் மாயம்? கேற் திறந்த சத்தம் கேட்டதே? தன்னைத் தானே கேட்டுக் கொண்டார். மருமகள் சொல்லுவது போல் தனக்கு மண்டை பிசகி விட்டதா? மனது சுழன்று விட்டதா? தடவித் தடவிக் கேற்றைப் பார்த்தார். எந்த விதமான ஐயுறவும் இல்லாமல் அது பூட்டுத்தான். முற்றிலுமாக நிலை குலைந்த கிழவர் வீட்டின் பக்கம் திரும்பினார். சர்வ வியாபகமாக எங்கும் இருள். இருளைத்தவிர வேறு ஒன்றும் இல்லை. தெருவில் வெளிச்சக் கதிர்களை வீசியடித்த படி இரண்டு கனரக வாகனங்கள் போயின. பகலிலே பதுங்கிப் பதுங்கித் திரியும் சனங்களின் நடமாட்டம் இப்போது அறவே அடங்கிப் போய் இருந்தது. அடையாள அட்டைகளை நீட்டியபடி பொழுது படவும் திரியத் துணிந்த மனிதர்களைக் காணவில்லை.
முடிவில் போட்டிக்கோவின் முன்புறத்தில் பூந்தொட்டி வைக்கும் சீமேந்துக் குந்தில் கொஞ்ச நேரம் இருக்க அவர் நினைத்த போது- தான் அந்தக் குந்துக்கு அப்பால் யாரோ நிற்பது போல பிரமை.
கிழவர் மீண்டும் கடகடத்தார். தொண்டைக் குழிக்குள் என்னவோ ஒன்று திரள்வது போல விடாமல் பார்க்க பார்க்க அசைவில்லாத ஒரு உருவமாக கலங்கலாகத் தெரிந்தது. வழக்கமாக வந்து வளவைக் கிளறிப் பரிசோதனை செய்யும் கூட்டமா?
“தாத்தா ஐ.சீ. இருக்கா? எடு எடு” என்று தானே கேட்பார்கள்.
கேட்பது என்னவோ ஒரு ஐ. சீ. தான். ஆனால் காட்ட வேண்டியது மூன்று நான்கு ஐ.சி. கள். உலகத்தில் இல்லாத புதினமாக ஒருவருக்கு மூன்று நான்கு அடையாள அட்டைகள் உள்ள நாடு வேறு எங்காவது உண்டா என்று கிழவர் நினைத்ததுண்டு.
இப்போது மடியைத் தொட்டுப் பார்த்தார். பொலித்தீன் பைக்குள் சகல அடையாள அட்டைகளும் இடுப்பிலிருந்தன. இந்தப் பொலித் தீன் பையை அவிழ்த்தால் திரும்பிச் சுற்றிக் கட்ட அரை- மணித்தியாலமாவது வேணுமே என்பது தான் உடனடியாகக் கிழவருக்கு எழுந்த கவலை.
ஆனால் அவர்களாக இருந்தால் இவ்வளவு நேரம் காக்க மாட்டார் களே? கிட்டப் போய்ப் பார்க்க மனமும் உடலும் சம்மதம் தெரிவிக்க- வில்லை.
“ஆர் அது?” என உரத்த குரல் எடுத்துத்தான் கேட்க முனைந்- தாலும், அது கழுதைச் சத்தமாகவே வெளிப்பட்டது. தன் குரல் மீதே அவருக்கு வெறுப்பும் சலிப்பும் ஏற்பட்டது. மீண்டும் அடித் தொண்டையால் “ஆர் அது? என்ன வேணும்?” என்றார். முன்பை விடக் குரலில் இறுக்கமான தொனி தோன்றியிருந்தது.
பதில் கிடைக்கவில்லை.
“ஆர் அது? என்ன வேணும்?”
அது பதில் பேசாமலே நின்றது.
ஆனால் அதில் ஒருவகை அசைவு ஏற்பட்டது. தெருவில் ஒரு மாட்டு வண்டில் போனது. மாட்டின் கழுத்துச் சலங்கை சீராக சப்திக்க, வண்டியின் அடி வயிற்றில் இருந்த அரிக்கன் லாம்பு ஒளி விரித்து ஆடிக் கொண்டிருந்தது.
வண்டில் வாசல் கேற்றைத் தாண்டிய போது மின்னல் கீற்றுப் போல ஒளிச் சிதறல்கள் முன் போட்டிக்கோவைத் தாண்டி அதன் மீதும் பட்டன.
அந்த சில விநாடித் துடிப்புக்குள் அது சாடையாகத் தெரிந்தது. புதினமாக உருவமாக கொழுந்து, முறுக்கேறிய மீசை, தோளிற் பரந்த சடை. காதிலும் ஏதோ மின்னியது. தலை உச்சியில் பளபளப்பான அரசின் முடியாக.
உடை கூட வித்தியாசமாக என்ன இது? என்று கலங்கித் தவித்த கிழவருக்கு, தான் சிறு வயதில் பார்த்த சத்தியவான் சாவித்திரி கொட்டகைக்கூத்து பற்றி நினைவு ஏற்பட்டது.
கன்னிகா பரமேஸ்வரி குழு, வேப்பம்பில சம்பந்த முதலியார் குழு என்று ஏதோ ஒரு குழு யாழ்ப்பாணத்தில் வந்திருந்து பல இடங்களிலும் விடிய விடியக் கூத்துப் போட்ட போது அதைப் பனியில் நனைந்து நனைந்து பார்த்திருந்தார்.
பல கூத்துக்களில் இவ்வாறான ஒரு ஆளை சந்தித்திருந்தாலும் சத்தியவான் சாவித்திரியில் கண்டது தான் இப்போது ஞாபகத் திற்கு வருகிறது. அந்த மாதிரி வேசம் கட்டிய ஆள் இந்த இடத்தில் எப்படி?
யாரோ நிற்பது உறுதி. அதனை விட வேசம் போட்ட ஆள் என்பதும் உண்மை. ஆனால் அந்த ஆள் ஏன் குத்துக் கல்லாட்டம் நிற்கி- றான்? கிட்டப் போகவும் பயம். அப்படியே நிற்கவும் அந்தரம். கிழவர் பாடு திண்டாட்டமாகி விட்டது. தூக்கியடித்தாற் போல திடீர் என குளிர்காற்று வீசியது. அதனைத் தொடர்ந்து வினோதமான சில சத்தங்கள் கேட்டன. ஆனால் தெரு ஆளரவம் அற்று முற்றாக ஒடுங்கிப் போய்ச் செத்திருந்தது.
கிழவர் உடலில் நடுக்கம் ஏற்பட்டது. மூச்சு விடுவது கூட கஷ்டமாக. “என்ரை அம்மாளே ” தன்னுடைய குல தெய்வத்தை அழைத்தார். கண் முன்னே ஜெகஜோதியாக சர்வாலங்கார சொரூபியாக, சிவகாமி அம்மன் வந்தாள்.
சற்று மனதில் நிம்மதி ஏற்பட்டது. அம்மனைக் கூப்பிட்டது அந்த உருவத்துக்குக் கேட்டிருக்க வேண்டும். சற்றே நகரத் தொடங் கியது.
எந்த விதமான மாற்றமும் இல்லாமல் ஒரு மனிதரைப் போல் நடந்தது. நிச்சயம் அரச வேசம் போட்ட ஆள் தான்.
பூட்டிக் கிடக்கும் கேற்றினைத் திறந்து கொண்டு உள்ளே வந்த பின்னர் கேற்றினைச் சாத்தியிருக்க வேண்டும். எத்தகைய துணிச்ச- லான ஆள்!
இத்தனை தடை முகாம்களையும் தாண்டி எப்படி வந்தான்? இவனது அடையாள அட்டை எப்படி இருக்கும்? கிழவன் நினைக்கும் போதே கிழவருக்கு முன்னால் அந்த ஆள் வந்தான்.
“ஆர் அது? என்ன வேணும்?” தனது கேள்வியைத் திருப்பிக் கேட்டார். ஆனால் அது உச்சத் தொனியில் வரவில்லை. அதற்கு அந்த ஆள் பதில் கூறவில்லை. பேசாதவனாகவே இருந்தான். கிழவருக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
“ஆர் அப்பா நீ? உன்ர காது என்ன செவிடா?” அந்தக் கத்தலில் கிழவரின் உடல் முன்பை விட நடுங்கியது.
ஆள் இப்போது சிரித்தான். அது சிரிப்பா? தடை முகாமில் சில வேளைகளில், அங்கு காவலுக்கு நிற்பவன் அப்படிச் சிரித்ததை கிழவன் கண்டிருக்கிறார். இப்போது இந்த ஆள் அதே மாதிரித்தான் சிரிக்கிறான்.
ஆனால் ஆளின் விழிகளில் ஏதோவொரு ஒளிர்வு இருந்தது. தீக்கோளம் போல தகதகவென்று அவனின் சிரிப்பால் வெலவெலத்- துப்போன கிழவர், அவனின் கையில் இருந்த கயிற்றைப் பார்த்தார். சுருக்குப் போட்ட கயிறு.
ஆளின் பின்னே வேறு ஒன்று. ஒருவகை வாகனம் போல, கிழவரைத் தாண்டி ஆள் கேற்றை நோக்கி நடந்தான். அவன் பின்னால் வாகனமும் அதுவும் நகர்ந்தது. அதற்கு சில்லுகள் இல்லை. நான்கு கால்கள் மாடு போல எருமைதான்!
முன்னே சென்ற ஆள் திரும்பிக் கிழவரைப் பார்த்து சைகை செய்தான். அதன் அர்த்தம் “பின்னால் வா” என்பது தான்.
கிழவருக்கு நா உலர்ந்து போனது. ஏன்? எதற்கு? கேட்க மனம் துடித்தாலும் வார்த்தை வரவில்லை. ஆள் முன்னே நடக்க அவனின் பின்னால் வாகனம் சென்றது. கிழவரில் சடுதியான மாற்றம் ஏற்பட்டு வேகம் உண்டானது. அவனின் பின்னால் பயணிக்க ஆரம்பித்தார்.
பின்னால் நடக்கும் போது கிழவருக்கு எல்லாமே தெளிவாகி விட்டது. தன் இறுதிக் காலம் வந்து விட்டது என்பதைப் புரிந்து கொண்டார்.
“ஏன் வீட்டில் வைத்து உயிரை எடுக்காமல் எங்கோ கூட்டிப் போகிறான்? இவனது பொது வழக்கம் இந்த இடத்தில் வைத்து உயிரைப் பறிப்பது தானே. சமகாலத்து பழக்கம் இவனுக்கும் தொற்றி விட்டதா? எனவும் கிழவர் யோசித்தார்.
சட்டென்று சோகம் அவரைப் பற்றிக் கொண்டது. தன் இறுதி நேரத்தில் மகனை மருமகளைப் பார்க்காமல் போகிறேனே என்பதை எல்லாவற்றையும் விட பேரனைக் காணாமல் போவது தான் சொல்ல முடியாத வேதனையைக் கொடுத்தது.
இரண்டு கிழமைகளாக மகனும் மருமகளும் படாதபாடு படுகிறார்- கள். ஏறாத முகாம்கள் இறங்காத அலுவலகம் ஒன்றும் இல்லை. பத்தொன்பது வயது பேரன் மறைபொருள் ஆகிவிட்டான். அடை – யாள அட்டைகளுடன் தான் போனான். கடைசியில் அவை கூட மிஞ்சவில்லை.
கிழவரின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. ஓவென்று அழவேண்டும் போல் இருந்தாலும் முன்னால் செல்லும் அந்த ஆளின் பின்னால் போவது சீராக நடந்து கொண்டிருந்தது.
சந்தித் தடைமுகாம் ஒளி வெள்ளத்தில் பூத்திருந்தது. ஜென- ரேற்றரின் சீரான ஓசையில் அந்தப்பகுதி கலகலத்தது.
முள்ளுக் கம்பிகள், கேடர்கள், தென்னை பனை மரக் குற்றிகள், மண் மூடைகள் என தெருவில் இருபக்கமும் அலங்காரமாக தெருவைத் தடைசெய்து படுத்திருந்த கேடர்களை லாவகமாகக் கடந்து கொண்டு அந்த ஆள் போனான். மின்சார விளக்கு ஒளியில் தகதகவென்று அவனின் ஆடைகள் மின்னின. தலையில் இருந்த முடி, தோளில் புரண்ட சடை எல்லாமே வித்தியாசமாக அற்புதமாக.
அந்த ஆளை அங்கு காவற்கடமையில் இருந்த ஆட்கள் எப்படி கண்டு கொள்ளாமல் விட்டார்கள் என்று புரியவில்லை. யாரும் ஆளை மறிக்கவில்லை.
பழக்க தோஷத்தால் கிழவர் மடியில் இருந்த அடையாள அட்டை- கள் கொண்ட பொதியை எடுக்கப்போனார். ஆனால் அதனை உணர்ந்தோ என்னவோ அவன் திரும்பிப் பார்த்தான். கிழவர் தன் முயற்சியை நிறுத்தினார். யாரும் அவரை அடையாள அட்டை கேட்கவில்லை. கிழவருக்கு அந்த நேரத்தில் உச்ச சந்தோஷமாக இருந்தது. தொண்ணூற்றி ஆறு ஏப்ரலில் தென்மராட்சியில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பின்னர் முதல் தடவையாக அடையாள அட்டை காட்டாமல் ஒரு இடத்தைத் தாண்டிய நாள்தான் இறுதி நாளாக இருக்க வேண்டுமா?
மீண்டும் இருள் வந்தது. தெரு, வாய்க்கால் தண்ணீராக வளைந்து போனது. மறுபடியும் பேரனின் ஞாபகம் கிழவனைத் தொற்றிக் கொண்டது. இந்த ஆளைக் கேட்டால் பேரனுக்கு என்ன நடந்தது என்று தெரிய வரலாம். ஆனால் இவனுக்குத் தெரிய வருவது என்றால் பேரன் செத்துப்போய் இருக்க வேண்டுமே?
அந்த நினைப்பே கிழவரை இம்சைப்படுத்தியது, “கொஞ்சம் நிப்பம்” என்றார் வேதனையுடன். அதற்குப் பதில் ஏதும் கிடைக்கவில்லை. என்ன மனிதன் இவன்? உயிரைப் பறிக்கத் தான் கூட்டிக் கொண்டு போகிறான். கடைசியில் இந்தத் தகவலையாவது சொல்லக் கூடாதா?
“என்ரை பேரன் எங்கையெண்டு தெரியுமா? விம்மலுடன் கிழவர் கேள்வி எழுப்பினார்.
இப்போதும் பதில் வரவில்லை. அவர்களது நடை பயணம் அழுது வடியும் நகரின் பிரதான பஸ் நிலையம் வரை வந்து விட்டது. பஸ் நிலையம் ஆட்கள் இல்லாமல் மூலைக்கொன்று இரண்டு மூன்று பஸ்களுடன். பஸ் நிலையத்தின் முன் பக்கமாக உள்ள முனியப்பர் வீதி ஊடாக நடை சென்றது. முற்ற வெளி ஓவென வரவேற்றது. முனியப்பர் கோயில் மூச்சடங்கி மௌனித்துப் போய் இருக்க ஒரு சிறு விளக்கு மாத்திரம் எரிந்து கொண்டிருந்தது. தொடர்ந்து நடக்க விளையாட்டு அரங்கு தலை காட்டியது.
பேரனின் நினைவுடன் வந்த கிழவருக்கு எரிச்சல் உச்சக் கட்டத்தை அடைந்தது.
“கொஞ்சம் நில்லப்பா” அழுகையும் சீற்றமுமாக வெடித்துச் சிதறினார்.
பதில் கிடைக்காததால் கிழவர் சட்டென்று நின்றார்.நிற்க முடியவில்லைத்தான். என்றாலும் அசையவில்லை. முன்னால் போய்க் கொண்டிருந்த அந்த ஆள் அதை உணராமலே சற்றுத் தூரம் போய் பிறகு தான் உணர்ந்திருக்க வேண்டும். திரும்பிப் பார்த்தான். கல்லுப் பிள்ளையார் போல கிழவர் நிற்பதையும் கண்டு திரும்பிக் கிழவரை நோக்கி வந்தான்.
“என்ரை பேரன் எங்கே எண்டு தெரியுமா? எத்தனை தடவை உன்னைக் கலைத்துக் கலைத்துக் கேட்டேன்.” என்று கேட்கும் போதே கிழவருக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தது. ஆள் இப்போதும் பதில் பேசவில்லை. ஆனால் அவன் முகத்தில் தீவிரமான மாற்றம். ஒரு கையில் வைத்திருந்த சுருக்குக் கயிற்றை மறு கைக்கு மாற்றினான்.
“எங்கையப்பா என்ரை பேரன்? உயிரோடை இருந்திருந்தால் இவ்வளவுக்கும் தெரிஞ்சிருக்கும். செத்துப் போயிருந்தால் உனக்குத் தெரியாமல் இருக்காது. தயவு செய்து சொல்லு.என்ரை உயிரை நீ எடுக்க முதல் இதைச் சொல்லிப் போடு”தாங்க முடியாத துக்கத்தோடு கிழவர் கேட்டது அந்த ஆளுக்குக் கவலையை உண்டு பண்ணியதோ என்னவோ அவன் விழிகள் கண்ணீர் நிறைந்து பளபளத்தன. அவன் உடலில் நடுக்கம் ஏற்பட்டது.
வெடித்துச் சிதறியது போல ஒரு வெளிச்சம் அடித்தது. கிழவரின் கண் மூடுண்டு திறந்த போது அந்த வேசம் கட்டிய ஆளைக் காணவில்லை. அவனின் நாலுகால் வாகனத்தை, அவன் கையில் இருந்த கயிற்றையும் தான்.
– தினக்குரல், 22-08-1999.
– மணல்வெளி அரங்கு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: மாசி 2002, தேசிய காலை இலக்கிய பேரவை, கொழும்பு.