பயம் வேண்டாம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: ஈழநாடு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 16, 2025
பார்வையிட்டோர்: 508 
 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அது மெதுவாகத்தான் நகர்ந்தே வந்- தது. அது வந்த பாதை காட்டுப்பாதை. மனிதர்கள் உள்ள கிராமம் வர இன்- னமும் தூரம் இருந்தது. தான் துணிந்து வருவதாகக் காட்டிக் கொண்டாலும், அது தயங்கித் தயங்கித் தான் வந்தது. அதற்கு அதன் கால்களில் போட்டிருந்த இரும்புத் தகடுகள் தான் காரணமா? அது முறைத்து முறைத்து பாதையின் இரு பக்கக்காடுகளைப் பார்த்தது. மரங்களின் உச்சிகளை எட்டி உதைத்தது. 

அதனைத் தெருப் புழுதி முதலிற் கண்டது. கண்டதும் வாலைச் சுருட்டிக் கொண்டு காட்டு மரங்களின் உயரத்தைத் தாண்டித் துள்ளியது. பிறகு அதனை விட்டுப் பிரிய மனமில்லாதது போல சோர்ந்து துவண்டு அதன் பின்னாலேயே அரைந்தது. 

காட்டு மரக் கிளைகளில் இருந்த குருவிகள் அச்சங் கொண்டு ஓடுங்கியபடி எழுவானில் தெரிந்த சூரியனைச் சபித்தன. 

“ஏய் சூரியனே! உலகத்துக்குப் பொதுவாக இருந்து என்ன பயன்?” “இதுகளை ஏன் அரைய விடுகின்றாய்?” என்று சொல்ல நினைத்து மௌனம் சாதித்தன. 

குரங்குகள் வசதியான மரக் கொப்புகளில் மறைந்தபடி வேவு பார்த்தன. “ஐயையோ ஆபத்து!” என்றது ஒரு குரங்கு. 

“என்ன!” 

“காடு தொலைந்தது” 

“அப்ப மனிதர்கள் இரட்சிக்க வரேல்ல” 

குரங்குகள் குசுகுசுத்தன குட்டிகளை “அலேட்டாக்கின” 

காட்டுப் பூக்கள் பொலிந்து நின்ற செடிகள் யௌவனம் துறந்தன. பூக்கள் நிறம் வெளிறி உருமாறிக் கொண்டன. 

யௌவனம் துறக்கத் தவறிய செடிகளை ஏனைய செடிகள் கோபமாக பார்த்தன. 

“எல்லோருக்கும் முடிவு ஒன்றுதானே! பிறகேன் யௌவனத்தைத் துறப்பான்?” 

“அது உண்மை தான் ஆனால் எலும்புக் கூடாவது மானமுள்ளதாக மிஞ்சுமே!” 

காடு தளர்ந்து வெட்டை ஒன்று வந்தது. வெட்டை துளிர்த்து, வயல் வெளியாகப் பரவியது. ஆழமும் மனவிரிவும் கொண்ட பெருங் கவிஞனின் கவிவரிகள் போல நெற்கதிர்கள் துள்ளி விளையாடின. 

வயலைப் பார்த்து அது நின்றது. மனிதர்கள் வசிக்கும் கிராமம் வரப் போகிறது என்ற ஆனந்தமா? அறுவடைக்கு முன் வந்து விட்டோம் என்ற பெருமிதமா? புரியவில்லை. 

தண்ணீர், கசிந்து கொண்டிருந்த டச்சுக் காலத்து மதவடியில் நின்று நிதானித்தது. கூடவே வந்த புழுதி ஒரே ஓட்டமாக ஓடிவிட்டது. 

தண்ணீரில் சுதந்திரமாக ஒற்றைக் காலில் நின்ற கொக்குகள். தங்கள் சுதந்திரத்தைத் தக்க வைத்துக் கொள்ள வாய்க்கால்க- ளின் ஓரம் மருவிக் கொண்டன. தண்ணீர் குடிக்கப் போகிறதா? முகம் கழுவப் போகிறதா? என மருளும் கண்களால் அவை பார்த்தன. ஒன்றும் நடக்கவில்லை. அது மெதுவாக அந்தப் பாதையைத் தின்று பார்த்தது. பாதையின் இடது பக்கத்தை பின் வலது பக்கத்தை பிறகு நடுப்பக்கத்தை சப்பிக் கொண்டது. 

ருசி பிடிபடவில்லையோ அதன், கொழுப்பேறிய நாவுக்கு பதமாக வரவில்லையோ அது பாதையைத் தின்பதை நிறுத்திக் கொண்டு நகரத் தொடங்கியது. 

மதவினைத் தாண்ட மதவு பொரித்த அப்பளமாக நொருங்கிப் போனது கொக்குகள் அதனை வியப்போடு பார்த்தன. 

“வானம்பாடி நிற்கிறதா பார்! “ஒரு கொக்கு கேட்டது. மற்றது தண்ணீரைப் பார்த்தது. 

“அட மடச் சகோதரமே! வானத்தைப் பார்! வானலைகளைப் பார்! மற்றது கழுத்தை மடக்கி முறித்துப் பார்த்தது. 

“காற்று உதைத்து வீசி மதவினை உடைத்து விட்டது என்று அவை வானலை ஊடாகச் சொல்லப் போகின்றன” நமட்டுச் சிரிப்போடு முதல் கொக்கு சொன்னது. 

வயல் வெளிகளில் ஆங்காங்கே சில மூளையுள்ள மனிதர்கள் தெரிந்தார்கள். வயலைப் பார்த்தும் பெருமை பட்டுக் கொண்டு எப்போது கதிர்களை அறுவடை செய்ய வேண்டும் என்பது தொடர்பாகவும் அவர்கள் கதைத்துக் கொண்டிருந்தனரே தவிர பாதை ஊடாக அது நகர்வதை அவர்கள் காணவில்லை. வானில் நகர்ந்த சிறிய முகிற் கூட்டம் ஒன்று தயங்கியபடி பாதையில் அது நகர்வதை மனிதர்களுக்குச் சொன்னது தான் என்றாலும் அதனை மனிதர்கள் கவனிக்கவில்லை. 

புழுதி வேகமாகச் சுழன்றது. காட்டில் இருந்தவை என்ன மாதிரிப் புரிந்து கொண்டன. சா! என்ன மனிதர்கள் இவர்கள்? என்று சலித்தது புழுதி. 

மனிதர்களைக் கண்ட அது மீண்டும் நகர்வை நிறுத்தி, மனிதர்- களைப் பார்த்து பதுங்கியது. 

மனிதர்கள் கையில் மண்வெட்டி, கத்தி எதுவுமே இல்லை. சாப்பிட மட்டும் பாவிக்கும் கைகள் மாத்திரம் உள்ளன என்று சொல்ல அங்கு யாரும் இல்லை. 

அது கைகளைத் தட்டியது. பிறகு கைகளை அசைத்து, “போங்க, போங்க” என்றது கரகரத்த சத்தம் காற்றில் கலந்தது. 

காற்று அதனைப் பக்குவமாகக் காவிக் கொண்டு மனிதர்களிடம் சென்றது. 

நலுங்காமல் குலுங்காமல் கொண்டு சென்றால் அது ஏதாவது நன்மை செய்யும் என்று! 

மனிதர்கள் அப்போது தான் பாதையைப் பார்த்தார்கள். பாதையை மறைத்துக் கொண்டு அது உழைவு எடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். 

“ஐயய்யோ” என்றான் ஒருவன். 

மோசம் போய்விட்டோம்!, மற்றவன். 

“போங்க, போங்க எண்டுதானே சொல்லுது போவம்” 

“அப்பிடி இல்லை. போங்க போங்க எண்டால், வாங்க வாங்க எண்டுதான் கருத்து! வா போவம்” 

“எனக்குப் பயமாயிருக்கு” 

“எனக்குந்தான்” 

“இப்படியே போறதா? 

“வேறை” 

“பொறு” என்றான் ஒருவன். 

வேட்டி மடிப்புக்குள் இருந்து ஒன்றினை எடுத்தான். அது முகமூடி கறுப்பும், வெள்ளையும் கலந்து நரை நிறங் கொண்ட அதனை எடுத்துப் போட்டான். 

“அடடா அற்புதமான மூளை!” என மற்றவர்கள் சந்தோசப்பட்டார் கள். 

எங்கள் மடிப்புக்குள் இருப்பது எங்களுக்கு ஞாபகம் வரவில்லை என்றபடி எல்லோரும் தங்கள் தங்கள் முகமூடிகளைப் போட்டுக் கொண்டார்கள். 

“அப்பாடா” என்றபடி வயல் வரம்புகளின் வழியே நடக்கத் தொடங்கிப் பாதையை அண்மித்தார்கள். 

“நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு போகாதே. சற்று வளைந்து போ!’ என்றான் பின்னால் வந்தவன். 

“அவசரப்படாதே அதை அதுவே செய்யும்” நடுவில் போனவன் சொன்னான். 

வயல் வரம்பால் பாதையில் ஏறி முகமூடிகளை சரி செய்ய முனைந்தார்கள். ஆனால் அது அதற்கிடையில் அவர்களின் முகங்களோடு இயல்பாகி விட்டது. 

“அட பாரன். ஒரு மாலை இல்லை!” 

“ஓமடாப்பா” 

“ஒரு வெள்ளைப்புறாவைப் பறக்க விட்டிருக்கலாம்”. 

இந்த உரையாடல்களை அது கேட்டதாகத் தெரியவில்லை. 

அதற்கு முன்னே கணிசமான தூரத்திற்கு அப்பால் அவர்கள் நிறுத்தப்பட்டார்கள். 

“உங்கள் காப்பாற்ற நாம வந்திற்றம். இப்ப சந்தோசந்தானே?” அது கேட்டது. 

மனிதர்கள் இடப்பக்கமாகவும், வலப்பக்கமாகவும் தலைகளைப் படபடவென ஆட்டினார்கள். 

“உங்கட ஆக்கள் எல்லாரிலையும் நாம சந்தோசம். எல்லாரும் போளினில் பள்ளிக்கூட கிறவுண்சுக்குப் போகணும் சரியா! அங்க போறது. போனா நாங்க சாப்பிட புல்லுத்தாறது, தண்ணி தாறது, படுக்க சாக்கு தாறது, இனிக்குறை இருக்காது. போங்க போங்க போளின்ல போங்க. 

அவர்களின் முகமூடி முகங்கள் சிரித்தன. கைகூப்பி விடை பெற்று முன்னே நடக்கத் தொடங்க, அதுவும் பின்னால் நகரத் தொடங் கியது. 

நெடு நெடு மரங்கள் எதையோ பறிகொடுத்தவை போல சரிந்து நிழல் தராமல் இருந்தன. மரங்களின் கீழே இருக்கப் பயந்த மனிதர்கள் அப்பால் விரிந்த மனமாய்ப் பரந்திருந்த விளையாட்டு மைதானத்தில் சூரியனின் உச்சிக் குளிரில் நடுங்கிக் கொண்டிருந் – தார்கள். 

வடக்குப் புறத்தே இருந்த பாடசாலைக் கட்டிடங்களின் மெழுகு- சீலைக் கூரைகள் காற்றில் முட்டி மோதிக் கொண்டிருந்தன. 

“வந்திட்டுது வந்திட்டுது. இனி நிரந்தரக்கூரை போடும். ஆனால் படிக்க பிள்ளைகள் தான் இருக்க மாட்டார்கள். இருப்பவர்களையும் படிக்க விட மாட்டுது”. 

மேற்குப் புறத்தே இருந்த கோயிலின் முன்னே தனித்து அமர்ந்- திருந்த அது அமீபாக்கள் போல பிரிந்து பிரிந்து பிரிந்து அந்தப் பெருவெளியெங்கும் விரியத் தொடங்கியது. 

மனிதர்கள் மாத்திரம் எங்கெல்லாமோ இருந்து வந்து சொல்லி வைத்த மாதிரி மைதானத்தின் நடுவே படியத் தொடங்கினர். அழுது பழக்கமில்லாத சின்னப் பிள்ளைகள் கூட சிரிக்க மறந்து விழிகளால் பேந்திக் கொண்டிருந்தன. 

மனிதர்கள் சேரச் சேர விளையாட்டு மைதானத்திற்கு மாத்திரம் பயம் வலுக்கத் தொடங்கியது. என் கொள்ளளவு இவர்களைத் தாங்குமா? இடம் காணா விட்டால் என்னை ஆழமாக அல்லவா வெட்டும். 

மைதானம் கவலைப் பட்டுக் கொண்டிருக்க, மைதானத்தின் ஒரு புறத்தே கிடாரங்களில் கஞ்சி தயாராகிக் கொண்டிருந்தது. அதை மனிதர்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டிருந்த அந்தக் கோப்பைகளை இவ்வளவு நுட்பமாக, சின்னதாக செய்திருக்- கின்றார்களே என்று தான் நடுக்கத்தினிடையேயும் மனிதர்கள் கதைத்தார்கள். 

– ஈழநாடு மாதமலர், ஏப்ரல் 1999.

– மணல்வெளி அரங்கு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: மாசி 2002, தேசிய காலை இலக்கிய பேரவை, கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *