தொண்டு செய்யும் திருக்கூட்டம்




(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அப்படிப் பார்க்கப்போனால் இந்த உலகமே தொண்டு செய்யும் நிலைத்தான். இந்த உலகம் எதற்காக இருக்கிறது? தொண்டுக்காக, உலகத்தில் பிராணிகள் எதற்கு வாழ்கின்றன? தொண்டு செய்வதற்காக, பிராணிகள் இல்லாவிட்டாலும் உலகம் இருக்கும்: ஆனால் தொண்டு இல்லாவிட்டால் பிராணிகள் ஒருவேளை இருந் தாலும் கூட, உலகம் இராது.
இதோ இந்த மின்சார விளக்கின் வெளிச்சத்திலே நான் எழுதுகிறேன். எனக்குத் தெரியாத எத்தனையோ பேர் சேர்ந்த ஒரு சமூகத்தின் தொண்டினால் இந்த வெளிச்சம் எனக்குக் கிடைக்கிறது. இதே மின்சார விளக்கு, திடீரென்று அணைந்து போகிறது. எங்கும் ஒரே இருட்டு! ரிப்பேர் முடிந்து மறுபடி வெளிச்சம் வர இன்னும் ஒரு மணிநேரம் பிடிக்கும். அதுவரையில் என் மனைவி விளக்கைக் கொண்டு வருகிறாள். என் கை எனக்காக இந்தக் கட்டுரையை எழுதுகிறது. இப்படியாக எனக்குச் சமூகம் தொண்டு செய்கிறது; குடும்பம் தொண்டு செய்கிறது; எனக்கு நானே தொண்டு செய்கிறேன்.
எனக்கு நானே தொண்டு செய்வது எனக்கு மிகவும் நன்றாகப் புரிகிறது அதைப் பற்றிக் கேள்வி கேட்கும் போது, “ஆம், உனக்கு நீ தொண்டு செய்கிறாய்” என்ற பதிலும் என்னுள்ளிருந்து கிடைக்கிறது. குடும்பத் தொண்டும் புரிகிறது. பிரம்மச்சாரியாக இருந்தால் குடும்பத்துக்குத் தொண்டு செய்யலாம்; மணம் செய்து கொண்டாலோ பல குடும்பங்களுக்குச் சேவை புரியலாம்? “நான் குடும்பத்துக்குத் தொண்டு செய்கிறேனா?” என்று கேட்கும்போது, குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும், “கட்டாயம் உன் தொண்டு இல்லாவிட்டால் எங்கள் கதி என்ன?” என்கிறார். ஆனால் நான் சமூகத்துக்கு ஊழியம் செய்கிறேனா என்பது எனக்குத் தெரியவில்லை. சமூகத்துக்கு நான் ஏதாவது தொண்டு செய்திருக் றேனா?” என்று நடுத்தெருவில் நின்று கொண்டு நான் கேட்கிறேன். தெருவில் எத்தனையோ பேர் குறுக்கும் நெடுக்கும் போகிறார்கள், வருகிறார்கள்; வண்டிகளில் அமர்ந்து ஓடுகிறார்கள். எல்லோரும் என்னைப் பார்த்துச் சிரித்து வேடிக்கை பார்ப்பவர்கள் சிலரும் இல்லாம லில்லை. ஆனால் என் கேள்விக்குப் பதில் என்ன? நான் கேள்வியை விடவில்லை, கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.
ஒரு பெரியவர், எங்கோ அவசரமாய்ப் போனவர், என் கேள்வியைக் கேட்டதும் சடக்கென்று, பிரேக் போட்ட வண்டிபோல நிற்கிறார். “ஐயா, சமூகத்துக்காக நீங்கள் ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப் போடவில்லை. அப்படிச் செய்திருந்தால் இத்தனை பேரிலே யாராவது ஒருவர் உமக்குப் பதில் சொல்லியிருப்பார்” என்கிறார்.
“அதுதான் நீங்கள் பதில் சொல்லுகிறீர்களே!'”
அவர் ஒரு கணம் திகைத்து நிற்கிறார்; உடனே சமாளித்துக் கொண்டு, “உங்களுக்கு மூளை இருக்கிறது?” என்கிறார்.
“மூளை யாருக்கு இல்லை? இதோ போகிற இத்தனை பேருக்கும் இருக்கிறது.”
“அதைப்பற்றியெல்லாம் நான் சொல்லத் தயாராக இல்லை. நான் உங்களைக் கேட்பது ஒரே கேள்வி: சமூகத்துக்குத் தொண்டு செய்ய உங்களுக்கு விருப்பமா?’
“கேட்பானேன்? சமூகம் எனக்குத் தொண்டு செய்யும் போது – செய்வதை நேரில் காணும்போது, நான் மட்டும் எப்படி அதற்குத் தொண்டு செய்யாமல் இருக்கமுடியும்? நான் ஏற்கனவே அப்படி ஏதோ செய்துகொண்டிருப்ப தாகத்தான் நினைக்கிறேன்.”
“அதுதான் தப்பு, சமூகத்தொண்டு செய்யவேண்டு மானால் அதற்குச் சில நிலையங்கள் இருக்கின்றன. அவற்றில் ஏதாவது ஒன்றில் நீங்கள் சேரவேண்டும். சமூக சேவை என்றால் அதில் எத்தனையோ விதங்கள் இருக் கின்றன. நீங்கள் எந்த விதமான ஊழியம் செய்ய விரும்பு கிறீர்கள் என்பதை முதலிலேயே தீர்மானித்துக்கொள்ள வேண்டும். இதோ எங்கள் நிலையமே ஒன்று இருக்கிறது. அதில் வேண்டுமானாலும் நீங்கள் சேரலாம். நான்தான் அதன் காரியதரிசி அட! ஒரு சமூக ஸ்தாபனத்தின் காரியதரிசியா இவ்வளவு நேரம் என்னோடு பேசிக் கொண்டிருக்கிறார்! எளிதாகக் கிடைக்கும் சந்தர்ப்பமா இது?
“சரி; உங்கள் நிலையத்தில் கட்டாயம் சேருகிறேன். அதில் எந்தவிதமான தொண்டு நடக்கிறது?” என்றேன். காரிய தரிசி விளக்கெண்ணெய் குடித்தவர்போல முகத்தைக் கடுத்துக் கொள்கிறார். பிறகு, என்னை எப்படியாவது கடைத்தேற்றவேண்டும் என்ற பெரு நோக்கத்தோடு என் அறியாமைக்கு இரங்கியவராய், “உங்கள் பேச்சு எனக்கு அடியோடு பிடிக்கவில்லை. முதலில் ‘நம்முடைய நிலையம்’ என்று நீங்கள் சொல்ல வேண்டும். என்ன தொண்டு நடக்கிறதென்பதை விவரித்துச் சொல்ல முடியாது. தொண்டு என்பது ஓர் ஆள் அல்ல. கோபுரம் அல்ல; மிட்டாய்க் கடை அல்ல. உங்களுக்கு வர்ணித்துச் சொல்வதற்கு! நம் நிலையத்தில் சேர்ந்து நீங்கள் ஊழியம் செய்துகொண்டே இருந்தால், போகப்போக உங்களுக்கே அந்த உருவற்ற பொருள் உருவாகும்; அதன் சுவை தெரியும். இவ்வளவுதான் உங்களுக்கு நான் சொல்ல முடியும். அதுவும் இந்த நடுத்தெருவிலே இதைவிட அதிகமாச் சொல்லவே கூடாது” என்கிறார்.
நான் மறுநாள் அந்த நிலையத்துக்குப் போகிறேன். அதன் தொண்டர்களில் ஒருவனாகச் சேருகிறேன். காரிய தரிசி மிகவும் நல்லவரென்று தெரிகிறது. அவர் எல்லா வேலைகளையும் தாமே கவனிக்கிறார்.தமது அறையி லுள்ள மேஜை நாற்காலிகளைத் தாமே துடைத்து, இடம் மாற்றி வைத்துக்கொள்கிறார். வேலைக்காரர்களை அடிக்கடி கூப்பிட்டுத் தொந்தரவுபடுத்துவதில்லை. ஒவ்வொரு பகுதிக்கும் தாமே நேரில் போய் வேலைகளை ஒழுங்குபடுத்துகிறார். ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு தனி அதிகாரி. அவரிடம் எத்தனையோ வேலையாட்கள், காரியதரிசி இந்த அதிகாரிகளிடம் அன்போடு பழகுகிறார். ஒவ்வொரு வேலையாளையும் தம்பிபோலப் பாவித்து நடத்துகிறார். ஒரு நாளைக்கு நிலையத்துக் கட்டடம் முழுவதையும் குறைந்தது ஐம்பது தடவையாவது அவர் சுற்றி வராமல் இருக்கமாட்டார். தெருக்களில் வேலை யாட்களைத் தனியே சந்தித்தால் அவர்களுடைய நலங் களைக் கேட்பார்; அவர்கள் வேலைசெய்யும் பகுதியின் அதிகாரியைப் பற்றித் துருவித் துருவித் தகவல்கள் கேட்பார் ; வேலை விவரங்களையும் விசாரித்துத் தெரிந்து கொள்வார். அதிகாரிகளைச் சந்திக்கும்போதும் இப்படித் தான் ஆட்களைப்பற்றிக் கேட்பார்.
அதிகாரிகளோ தங்களைக் குட்டி அரசர்களாக மதித்து வந்தார்கள். அந்த அந்தப் பகுதிக்குள்ளே அர் கள் இட்டது சட்டம். குறித்த வேளையில்தான் அவர்கள் வந்து வேலை செய்யவேண்டும் என்பதில்லை. ஒருவர் காலை ஐந்து மணிக்கே வந்து எட்டு மணிக்குப் போய் விடுவார்; பிறகு அன்று முழுவதும் தலைகாட்ட மாட்டார். இன்னொருவர் பத்தரை மணிக்கு, எதிரே வரும் ஆட்களையெல்லாம் மிரட்டிக்கொண்டு ஆர்ப் பாட்டமாய் வருவார்.”ஏய்! மேஜையைத் துடைத்தால் இப்படியா காகிதங்களையெல்லாம் மாற்றிவைக்கிறது? நீ ஒன்றுக்கும் லாயக்கில்லை. அந்த மின்சார விசிறியைப் போடுவதற்கென்ன? மரம்போல். நிற்கிறாயே!” என்று வேலைக்காரப் பையனை மிரட்டுவார். பிறகு குமாஸ்தா வருவார், காகிதக் கட்டுகளில் கையெழுத்து வாங்க.”ஓய்? இந்த நிலையத்தில் நீங்கள் எத்தனை ஆண்டுகளாக வேலை செய்கிறீர்கள்?” என்ற கேள்வி பாயும்.”பன்னி ரண்டு வருஷமாக” என்று அடக்கமாகப் பதில் வரும். “ராமராயர் கம்பெனிக்கு உங்களை எத்தனை கோணி மூட்டைகளுக்கு எழுதச் சொன்னேன்?’
”இருநூறு.”
“போமையா போம்! எழுநூறு என்று சொன்னேன், உங்களுக்குக் காது மந்தமென்றால் என்னை மறுபடி கேட்பதற்கென்ன?”
”மீதி ஐந்நூறு இன்று வாங்கிக்கொண்டு வரட்டுமா?”
“சே! எவ்வளவு சொன்னாலும் உங்களுக்குப் புரிகிற தில்லை. அந்த படுபாவி நேற்று விலையை உயர்த்தி விட்டான். நீங்கள் போய் என்னத்தை வாங்கிவருவது? பெரிய அசகாயசூரன் போலத்தான் பேச்செல்லாம். இங்கே வேலையில் ஒன்றையும் காணோம்.- சரி. உள்ளே போய்க் கன்னியப்பனைக் கூப்பிடுங்கள்.”
கன்னியப்பன் வேலையாட்களின் தலைவன். ஏழாவது வயதில் இந்த நிலையத்துக்கு வந்தவன். இங்கே வேலை செய்து இப்போது தலை நரைத்துப் போனவன். ”இவர் எம்மாம் மட்டும்! அட, இவரெ போல எத்தினியோ அதிகாரிங்களே நானு கண்ணுலே வெரலெ விட்டு ஆட்டி ருக்கேன். இது நேத்துப் பொறந்த பிள்ளே!” என்று பேசுவான். அவன் குழைந்துகொண்டே வந்து, “என் னாங்க!” என்றான்.
“இதோ பார்.எத்தனை பழகியும் உனக்குச் சிறிதும் மரியாதையே தெரியவில்லை. ஆட்களை அடக்கி வேலையை நடத்திப்போகலாம் உனக்குத்திறமை இல்லை. ஏதோ உன் ஆயுளை இங்கே சுழித்து விட்டாய்; உன்னைப் போகச் சொல்லவும் எனக்கு மனமில்லை. வரவர வேலை யாட்களின் போக்கு எனக்குப் பிடிக்கவில்லை. தடியெடுத் தவனெல்லாம் வேட்டைக்காரனாக இருக்கிறான். வேலையை ஒழுங்காகச் செய்வதில்லை; ஏதாவது கேட் டால், அங்கே அந்தச் சம்பளம் கொடுக்கறாங்க. அவுங்க பண்டு கொடுக்கிறாங்க’. ‘அங்கே எத்தினி நாளு லீவு கிடைக்குது!’ என்று ஷறாப் பேசுகிறார்கள். எல்லாம் நீ கொடுக்கும் இடந்தான் – ஓ! ஷண்முக முதலியாரா? நீ வாங்க, வாங்க! – சரி, நீ போய் நான் சொன்ன வேலைகளைப் பார்.”
ஐந்து நிமிஷங்களுக்கு அப்புறம் அந்த அதிகாரியை நாம் காணமுடியாது. மறுநாள் மறுபடி எப்பொழுது வருவாரோ! காரியதரிசி ஏதாவது கேட்டால், நிலையத் தின் வேலையாக வெளியே போயிருந்ததாகச் சொல்லுவார்.
வேறோர் அதிகாரி, பெரும்பாலும் மாலையில் வேலைக்கு வருவார். அவருடைய இரவுச் சாப்பாடு நிலை யத்தின் கணக்கில்தான். இரவு பத்து மணிவரையில் இருந்துவிட்டு, வீட்டுக்குப் போவார்.
வேலையாட்கள் குறித்த நேரத்தில் வேலை செய்வார் கள். அதற்கு முன்பும் பின்பும் எப்போது கூப்பிட்டாலும் வருவார்கள். அவர்கள் ஒருவரோடு ஒருவர் பேசக்கூட ஓய்வு இராது ஓய்வு இருந்தாலும் பேச மாட்டார்கள். அதைவிட, கொஞ்ச நேரம் வெளியே சென்று சுருட்டுக் குடிப்பதோ, காபி அருந்துவதோ அவர்களுக்கு லாபகர மாகத் தோன்றும். ‘நமக்குக் கஷ்டமோ சுகமோ இன் னொருவனுடைய பங்கு எதற்கு?’ என்ற மனப் பான்மையே பெரும்பாலும் உடையவர்கள். செத்துப் போனவன்போலப் படுத்திருந்தவனை மோந்து பார்த் துக் கரடி அவனை விட்டுப்போனதாகக் கதையில் தான் படிக்கலாம். இங்கே உயிரே போய் நீட்டிக்கிடந்தாலும் எந்தக் கரடியும் எட்டிக்கூடப் பார்க்காது. அவன் அவன் வேலை அவன் அவனுக்கு! செடிகளும் மரங்களும் ஒன் றோடு ஒன்று இழைந்து வளருவது இந்த உலகத்துக்குப் புறம்பேதான். இங்கே செடி, மரம், கவிதை -ஏதும் உத வாது. இது கடுமையான வாழ்க்கை ; கற்பனைக்கு இங்கே இடம் இல்லை. எவனாவது மற்றொருவனுடன் கொஞ்சம் இழைந்தால், அவனுக்கு இவன் குழி தோண்டு கிறான் என்று அர்த்தம். நான் சொல்லப்போவது உங்க ளுக்கு வேடிக்கையாக இருக்கலாம்; ஆயினும் து உண்மை, ஒரு நாளைக்கு வேலைகள் அதிகமாக வந்து விட்டன என்று வைத்துக்கொள்ளுங்கள். அன்று பல பேர்களுக்கு அடிக்கடி கக்கூசுக்குப் போகவேண்டிய வேலைகளும் வந்துவிடும். மணிக்கணக்காக அங்கே உட் கார்ந்திருப்பவர்களும் இருப்பார்கள். வேலை செய்வதற் கென்றே சிலர் உண்டு; அவர்கள்தாம் உள்ளே ஓய்வு ஒழிச்சலின்றி மடிவார்கள். அவர்களுக்கு வெளியுலகமே தெரியாது!இந்த நிலையம் தெரியும்; தங்கள் வீட்டைப் பற்றிச் சிறிதளவு தெரியும். ஏன், இந்த நிலையத்திற்கு உள்ளேகூடப்பிற் பகுதிகளைப்பற்றி ஒன்றுமே தெரியாது. ந்த ஆசாமிகள்தாம் கன்னியப்பனுக்குப் பிரியமானவர் கள்; உயிர்போன்றவர்கள் இவர்களைப் பின்னும் கசக்கி வேலை வாங்கி அவன் தன் பிரியத்தை வெளியிடுவான்.
காரியதரிசிக்கு ஊரிலுள்ள பெரிய மனிதர்களைத் தெரியும்? கார் நம்பர்கள் தெரியும், அவர்களுடைய பணத்தை நிலையத்துக்குக் கொண்டு சேர்க்கத் தெரியும். அதிகாரிகளுக்கு அந்தப் பெரிய மனிதர்களுக்குச் சலாம் போடத் தெரியும்; தமக்குக் கமிஷன் கொடுக்கவல்ல வியா பாரிகளைத் தெரியும்; நிலையத்துக்கு வேலை கொடுக்கும் வாடிக்கைக்காரர்களைத் தெரியும்; வீட்டுக்கு வேண்டிய கறிகாய்கள், நெய், தயிர், பழம் முதலியவை கொண்டு வரும் வேலையாட்களைத் தெரியும், வேலையாட்களுக்கு வேலை தெரியும்; வீட்டிலே போட்டதை ருசி பார்க்கா மலே சாப்பிடத் தெரியும்; மறுநாள் சோற்றுக்கு வழி இல்லை என்றால் முணுமுணுக்கத் தெரியும்; காரசாரமாக மேலதிகாரிகளுக்கு விண்ணப்பங்கள் எழுதத் தெரிந்த சில வெளி மனிதர்களைத் தெரியும்.
நான் இப்பொழுது இந்த நிலையத்தின் தொண்டன் இந்த நிலையத்துக்கு ஒரு தனி அடையாளம் உண்டு. அதை என் சட்டையில் மாட்டிக்கொண்டுதான் நான் வெளியே போகவேண்டும். வழியில் என்னைப் பார்க்கிற வர்கள் நமக்குள்ளே, “அவர் எந்த நிலையத்லைச் சேர்ந் வர்?” என்று கேட்டுக்கொள்கிறார்கள். அவர்கள் கேள்வி எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. என்னை அவர்கள் சமூகத்தொண்டன் என்று ஏற்றுக்கொண்டதற்கு இது அறிகுறி. தனியே நான் என்ன செய்தாலும் அது வெறும் தொண்டாக இருக்கலாம்; இதுதான் சமூகத் தொண்டு. தனியே இருந்தபொழுது நான் செய்த வேலைகள் எனக்குத் தெரிந்தன; இப்போது நான் என்ன செய்கிறேன். என்பது எனக்கே தெரியவில்லை. இருந்தாலும், இதுதான் சமூகத் தொண்டு. “நான் சமூகத் தொண்டு செய் கிறேனா?” என்று பொழுது நான் கேள்வி கேட்கத் தேவையே இல்லை. அதோ ஒரு தொண்டர் போகிறார்” என்று மக்கள் சொல்லுகிறார்கள்.
இந்த நிலையத்தில் நான் நான்கு வருஷங்களாக வேலை செய்கிறேன், என் மூளை நாளுக்கு நாள் மழுங்கு கிறது புதிதாக எந்த வேலையும் கற்றுக்கொள்ளவில்லை. தெரிந்த வேலையிலும் வேகம் குறைகிறது. அதிகாரிகள் மூளைதான் என் மூளை. அவர்கள் சொல்வதைத்தான் நான் செய்யவேண்டும். நானாக ஏதாவது செய்தாலும், அது அவர்களுக்குப் பிடித்திருக்கவேண்டும்? அவர்களுக்குப் பிடிக்காவிட்டால், பிடிக்கும்படியாக மறுபடி அந்த வேலையை மாற்றவேண்டும். இந்த வேலை எனக்குப் பிடிக்கவில்லை; ஏனெனில் என்னிடம் இன்னும் கொஞ்சம் மூளை இருக்கிறது. எனவே வேறொரு நிலையத்துக்குப் போகிறேன்.
நான் எங்கே போனாலும் இந்த அவதி என்னோடு கூடவே வருகிறது அந்த நிலையத்திலும் இதே கதை மறுபடி வேறுநிலையம் இப்படி ஏழு நிலையங்களில் மாறி மாறி எழுபிறப்பிலும் தெரிந்து கொள்ள முடியாத விஷய மாகிய தொண்டு’ என்ற விஷயத்தை நான் ஓரளவு அறிந்து கொள்கிறேன். இப்பொழுதும் நான் ‘தொண்டன்’ தான்.
‘அப்படியானால் தொண்டு என்பது என்ன? நீங்கள் எந்த வகையான தொண்டு செய்கிறீர்கள்?’? என்று நீங்கள் கேட்கிறீர்கள்.
தொண்டு என்பது ஒரு பெரிய ரகசியம், அது ஓர் ஆள் அல்ல, கோபுரம் அல்ல, மிட்டாய்க்கடை அல்ல, உங்க ளுக்கு வர்ணித்துச் சொல்வதற்கு! அதிலும், நடுத்தெரு விலே நான் அதைப்பற்றி அதிகமாகச் சொல்லக்கூடாது. தெரிந்து கொள்ளவேண்டும் என்ற அக்கறை இருந்தால், நீங்கள் என் வீட்டுக்கு வாருங்கள்? தொண்டுசெய்யும் எங்கள் நிலைத்துக்கு வராதீர்கள்.
“வீட்டுக்கு எப்பொழுது வரலாம்?” என்று கேட்கிறீர்களா?
அது எப்படிச் சொல்ல முடியும்? நான் ஒரு தொண் டன்; தொண்டு செய்யும் ஒரு நிலையத்தில் இருக்கிறேன். நிலையத்தின் மூளைதான் என் மூளை. நிலையம் எப் பொழுது கூட்பிட்டாலும். எதைச்செய்யச் சொன்னா லும் – அது எனக்குத் தெரிந்தாலும் சரி, தெரியாவிட்டா லும் சரி; எனக்குச் சொந்த வேலைகள் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, நான் தயாராகக் காத்திருக்க வேண்டும். எனவே, உங்களுக்கு என்ன பதில் சொல்வது? உங்சளுக்கு எப்படித் தோன்றுகிறதோ செய்யுங்கள். இதோ, ஓர் ஆள் வருகிறான், எங்கள் நிலையத்திலிருந்து உங்களோடு அப்புறம் பேசுகிறேன்.
– முல்லை கதைகள், 1945ல் முல்லை இதழில் வெளிவந்த கதைகள், தொகுத்தவர்: முல்லை பி.எல்.முத்தையா, முதற் பதிப்பு: செப்டம்பர் 1998, முல்லை பதிப்பகம், சென்னை.
![]() |
கா.ஸ்ரீ.ஸ்ரீ (காஞ்சீபுரம் ஸ்ரீரங்காச்சாரியார் ஸ்ரீனிவாசாச்சாரியார்) (டிசம்பர் 15, 1913 - ஜூலை 28, 1999) தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர். முதன்மையாக வி.எஸ்.காண்டேகரின் நூல்களை மொழியாக்கம் செய்தமைக்காக அறியப்படுபவர். நூல்கள் பதினந்து நாவல்கள், ஏறத்தாழ முன்னூறு சிறுகதைகள், பதினெட்டு திரைக்கதைகள், பதினெட்டு கட்டுரைத் தொகுதிகள், ஆறு நீதிக்கதைத் தொகுதிகள், ஐந்து இலக்கியத் திறனாய்வுகள், ஒன்பது ஆராய்ச்சிக் கட்டுரைகள், மூன்று சொற்பொழிவுத் தொகுப்புகள், இரண்டு சுயசரிதை நூல்கள் கா.ஸ்ரீ.ஸ்ரீயால் எழுதப்பட்டவை. கா.ஸ்ரீ.ஸ்ரீ…மேலும் படிக்க... |