கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: July 29, 2025
பார்வையிட்டோர்: 9,160 
 
 

(1976ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கண்ணனுக்குப் பிரியமான கோபி அவள், என்றாவது ஒரு நாள் அவனைக் காணாவிட் டால் அவளுக்கு உணவு இனிக்காது.

யமுனைக் கரைக்கு அவள் சென்றால், முன்னமே புன்னை மரத்தின் அடர்ந்த கிளைகளில் பதுங்கி அமர்ந்த கண்ணன் குழலூதுவான். அவள் கால் அங்கேயே தயங்கிப் பின்னித் தடுமாறும். இடுப்பில் உள்ள பானையில், அமுதினுமினிய இசை வெள்ளம் அலையலையாக நிரம்பித் துளும்புவதாகத் தோற்றும்.

சில சமயம் அவன் ஊமையாக இருப்பான். உவகை மங்கி, அவள் மெல்ல மெல்ல அடியிட்டு நகருவாள், கண் இமைக்கும் பொழுதில் “டக்” என்று ஒரு கல், குறி தவமுமல் அவளது பானையைத் தாக்கும். பானை உடையும்.

”இதோ நேரே யசோதையம்மாவிடம் போய்ச் சொல்லுகிறேன்!” என்று வீறாப்புடன் பேசிவிட்டு, அவள் தரதர வென்று நடப்பாள். கையில் உடைந்த ஐந்தாறு பாளை யோடுகள் இருக்கும். ஆனால் நந்தனுடைய அரண்மனைக்கு வரும்போது அவற்றுள் ஏதாவது ஒரு துண்டுதான் அவளிடம் மிஞ்சும். அதை வீடு எறிய மனம் வராது. தலைப்பில் அதை முடித்து மறைத்துக் கொண்டு அரண்மனைக்குள் புகுவாள்.

யசோதையிடம் அவள் பேச்சுக் கொடுப்பாள்; கண்ணனுடைய சாமர்த்தியத்தையும் வீரத்தையும் புகழ்வாள்; நேரம் போவது தெரியாது. பேச்சுப் பராக்கில், யமுனை ஆற்றிலிருந்து இன்னும் தண்ணீர் கொண்டு வரவே இல்லையே என்ற நினைவு எழும். சடக் கென்று எழுத்து வீட்டுக்கு வருவாள். தாய்க்குத் தெரியாமல் இன்னொரு பானையை எடுத்துக் கொண்டு புறப்படுவாள். காதில் ஒலிக்கும் குழலோசை துணை வர, கொதிக்கும் வெயிலும் தண்ணிலவாகக் குளிரும்.

இப்படித்து இளவேனில்கள் வந்தன, போயின.

உலக வழக்கப்படி ஆய்ப் பெண்ணுக்குத் திருமணம் நிகழ்ந்தது. உயர்ந்த நிலையிலுள்ள கணவன் கிடைத்தான் என்று ஊரார் போற்றினர். மாமன்னன் கம்ஸனது மடைப்பள்ளியில் அவன் ஓர் அதிகாரி.

தினமும் இனிய பண்டங்கள் அவளுக்கு உண்ணக் கிடைத்தன. பசைப் பூச்சினால் மிருதங்கம் கூட மதுரமாக ஒலிக்கிறது. மாந்தருக்குக் கேட்க வேண்டுமா? கணவன் வாயிலாகக் கம்ஸனைப் பற்றிக் காதில் விழுந்த புகழ் மொழிகள் மெல்ல மெல்ல அவளுக்கும் பாடமாயின. விழித்திருக்கையில் குழலோசை அவள் காதில் ஒலிக்காத நிலை வந்தது.


கண்ணனுடைய குறும்புகள் ஓயாமல் வளர்வதாக மதுரைக்குச் செய்திகள் விரைந்த வண்ணம் இருந்தன. அஞ்சி நடுங்கிய கம்ஸன், கண்ணனை அழைத்து வர அக்ருரரை அனுப்பினான். கண்ணனும் பலராமனும் மதுரைக்கு வந்ததுமே, கண்ணன் சாணுரனுடனும், பலராமன் முஷ்டிகனுடனும் மற்போர் நிகழ்த்த வேண்டும் என்ற ஏற்பாடு, மதுரை மாநகர் முழுவதும் அந்தப் பெரு விழாவைக் கண்டுகளிக்க ஆர்வமுற்று, கண்ணில் உயிரைத் திரட்டிக் கொண்டு அந்த நாளை எதிர்பார்த்திருந்தது.

ஆகா! அந்தப் பொன்னான நாள் ஒரு வகையாக உதித்தது. அன்றைக்கு ஆய்மகள், காட்சிச் சாலையில் சாமானிய மக்களுடன் கூட்டத்தில் மோதி இடிபட்டுக் கொண்டு உட்காருவதாக இல்லை. யாரும் எளிதில் கவனிக்கக் கூடிய முக்கியமான இடத்தை, அவளுக்காக அவள் கணவன் பிடித்து வைத்திருந்தான்.

பொழுது விடிந்ததிலிருந்தே அவள் எத்தச் சேலையை உடுப்பது, எந்த எந்த நகைகளை அணிவது என்ற சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். தான் பாடப்போகும் பெருங் காப்பியத்தைப் பற்றி ஒரு மகாகவி கூட அப்படிக் கவலைப்பட மாட்டான்; அவ்வளவு கவலை அவளுக்குத் தன் சிங்கார ஆடை அணிகளைப் பற்றி! என்ன செய்தும் அவளுக்கு எதுவுமே திருப்தியாக அமையவில்லை.

மற்போர் நிகழ வேண்டிய வேளை நெருங்கி நெருங்கி வந்தது. ஆனால் கோபியின் அலங்கரிப்பு முடிந்த பாடில்லை. இன்னும் சில நகைகளை அவள் அணிய வேண்டி யிருந்தது. நேரம் கடக்கக் கடக்க அவளது ஒய்யாரமும் சொருகம் கணவனுக்குப் பிடிக்க வில்லை. ”விழா முடிந்த பிறகு அங்கே போய் நீ என்ன, குப்பை கூட்டப் போகிறாயா?” என்று எரிந்து விழுந்தான்.

ஒரு கடைக்கண் வீச்சினால் அவன் சினத்தை அடக்கிய அவள், “இங்கே கொஞ்சம் உதவிதான் செய்யுங்களேன்! கருவூலத்தில் வைத்துள்ள என் நகைப் பேழையை எடுத்து வாருங்களேன்!” என்று கட்டளை யிட்டாள்.

கணவன் பேழையைக் கொண்டு வந்தான், காதணிகள், கழுத்தணிகள், தோளணிகள் – அனைத்தையும் அவன் வெளியே எடுத்தான். கடைசியில் பேழை அடியில் ஒரு சிறு பாளைச் சுக்கல் அவன் கைக்குத் தட்டுப்பட்டது. அதை எடுத்துப் பார்த்து அவன் கலகல வென்று நகைத்துக் கொண்டே, “பெண்களின் தகை நகைகளைப் பற்றி எனக்கு என்ன தெரிகிறது? இத்த நகையின் பெயர் என்னவோ? இதை எங்கே அணிந்து கொள்வாயோ?” என்று மனைவியைக் கேட்டான்.

அவன் கையிலிருந்த ஓட்டாஞ்சல்லியைக் கண்டு அவள் கண்ணை ஒரு சுழற்றுச் சுழற்றினாள்; முகத்தைச் சிணுக்கிக் கொண்டே “இது என்ன வேடிக்கை வேண்டிக் கிடக்கிறது! எனக்கு இந்த விஷமமெல்லாம் பிடிக்காது. நீங்கள்தாம் குறும்புக்காக இந்த ஓட்டாஞ்சல்லியை நகைப் பேழையில் வைத்திருப்பீர்கள்!” என்றாள்.

அவனது கையிலிருந்து அவள் அந்தத் துண்டை வெடுக்கென்று எடுத்து, அசட்டையுடன் வாசலில் வீசி எறிந்தாள், மதுரையில் பிரபலமான ஒரு காதல் கீதத்தை இனிமையாக இசைத்தபடி நகைகளை அணியலானாள்.


நள்ளிரவு கடந்து விட்டது. ஆய்மகளின் கணவன் கால் எழும்பாமல் வீட்டுக்குத் திரும்பி நடந்தான். அரண்மனையில் குழம்பிக் கொண்டு கிடந்தால் மட்டும் அவனால் என்ன செய்து விட முடியும்? மாமன்னன் கம்ஸனுடைய உயிரற்ற உடலில் உணர்வை மீட்கும் வல்லமை யாருடைய கண்ணீருக்கும் இல்லை. எவருடைய புலம்பலுக்கும் இல்லை.

நினைத்தது ஒன்று; நடத்தது வேறு! மற்போரில் கண்ணனையும் பலராமனையும் கொன்று தீர்க்கத் திட்டமிட்டிருந்தான் கம்ஸன், ஆனால், மாயக் கண்ணன், அந்தத் திட்டத்தைக் குலைத்து எய்தவன் மீதே அம்பு பாயச் செய்து விட்டான்! ‘கம்ஸன் கொலையுண்ட செய்தி இவ்வளவு நேரத்தில் ஜராஸந்த மகாராஜாலின் காதுக்கு எட்டியிருக்கும். அவன் பிரம்மாண்டமான சேனையுடன் வாயு வேகமாக மதுரைக்கு வருவான்; இந்தத் துஷ்டப் பயல் கிருஷ்ணனைக் கடுகு கடுகாகத் துளைத்துத் துண்டமாக்கி எல்லாத் திசைகளிலும் எறியப் போகிறான்!’ – இந்த ஒரே ஆறுதல்தான் இப்போது மதுரை மாநகரில் மிஞ்சி யிருந்தது.

தன் வீட்டை அணுகி விட்டதுகூடச் சிந்தனை மயக்கத்தில் கோபியின் கணவனுக்குத் தெரியவில்லை. எதிரே கண்ட காட்சி அவனைத் திடுக்கிட வைத்தது. கையில் விளக்குடன் யாரோ வாசலில் குறுக்கும் நெடுக்குமாக நடப்பது தெரிந்தது. ‘பயங்கரமான இந்த யமராத்திரியில் எதுவும் நடக்கலாம். இது யார், திருடனா, பிசாசா?’ என்று அவன் திகைத்தான்.

தயங்கித் தயங்கி மூன்சென்று அவன் அந்த உருவத்தின் அருகில் வந்தான்; நன்றாகக் கவனித்துப் பார்த்தான், கையில் விளக்கை வைத்துக் கொண்டு கோபிதான் எதையோ தேடினாள்!

அவன் கொதிப்புடன், “அடி அசடே! உள் உயிர் உனக்கு வேண்டாததாக இருக்கலாம். எனக்கு அது வேண்டும். பேசாமல் வீட்டுக்குள் வா!” என்றான்.

“நீங்கள் போங்கள் உள்ளே! இன்றைக்கு மிகவும் களைத்து வத்திருப்பீர்கள். இதோ உங்கள் பின்னாலேயே வருகிறேன்!”

”வாசலில் எதைத் தேடுகிறய், பைத்தியம் மாதிரி?”

“ஒரு நகையை.”

“நகையா? போனால் மற்றென்று செய்து கொள்ளலாமே!”

”ஒவ்வொரு நகையிலும் பெண்கள் எப்படி உயிரை வைத்திருக்கிறார்கள் என்பது ஆண்களான உங்களுக்கு எப்போதும் தெரிய முடியாது! ‘கணவனே பெண்ணுக்கு அணிகலன்’ என்று நாங்கள் சும்மாவா சொல்கிறோம்?”

“அப்படி என்ன விலை உயர்ந்த நகை போய் விட்டது?”

“என் வங்கி! இன்று பகலில் எல்லாமே விபரீதமாக நடந்தது. நான் வீடு திரும்பிய போது என் மனம் ஒரு நிலையிலே இல்லை. பாழாய்ப்போன அந்த வங்கி, இங்கே தான் எங்கோ நழுவி விழுந்திருக்க வேண்டும்!”

சிரித்துக் கொண்டே அவன் வீட்டினுள் சென்றன். ஆய்மகள் குனித்து மீண்டும் தேடலானாள். பகலில் கண்ணன் அவளை யதேச்சையாகப் பார்த்தான்; அவளும் அவனைப் பார்த்தாள். அந்தக் கண்ணிணை நோக்கு, கோகுலத்து இனிய நினைவுகளை எழுப்பி அவளை மயக்கி மகிழ்விக்கலாயிற்று.

காலையில் அவள் வாசலில் வீசி எறிந்தாளே ஒரு பாமைச் சுக்கல் – அது ஓட்டாஞ் சல்லியல்ல; அவளுடைய நெஞ்சமே அப்படித் தெறித்து விழுத்திருந்தது! அது கிடைத்தாலன்றி அவள் அமைதியாகத் தூங்க முடியாது. நெடு நாட்ளாகப் பாடாமலிருந்த கோகுலத்துப் பழம் பாடலொன்றை உருக்கமாக இசைத்துக் கொண்டே – அவள் அந்த உடைசல் துண்டைத் தேடலானாள்.

– கல்கி, 25-04-1976. மூலம்: வி.ஸ.காண்டேகர், தமிழ் வடிவம்: கா.ஸ்ரீ.ஸ்ரீ.

கா.ஸ்ரீ.ஸ்ரீ. கா.ஸ்ரீ.ஸ்ரீ (காஞ்சீபுரம் ஸ்ரீரங்காச்சாரியார் ஸ்ரீனிவாசாச்சாரியார்) (டிசம்பர் 15, 1913 - ஜூலை 28, 1999) தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர். முதன்மையாக வி.எஸ்.காண்டேகரின் நூல்களை மொழியாக்கம் செய்தமைக்காக அறியப்படுபவர். நூல்கள் பதினந்து நாவல்கள், ஏறத்தாழ முன்னூறு சிறுகதைகள், பதினெட்டு திரைக்கதைகள், பதினெட்டு கட்டுரைத் தொகுதிகள், ஆறு நீதிக்கதைத் தொகுதிகள், ஐந்து இலக்கியத் திறனாய்வுகள், ஒன்பது ஆராய்ச்சிக் கட்டுரைகள், மூன்று சொற்பொழிவுத் தொகுப்புகள், இரண்டு சுயசரிதை நூல்கள் கா.ஸ்ரீ.ஸ்ரீயால் எழுதப்பட்டவை. கா.ஸ்ரீ.ஸ்ரீ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *