பூமி எப்படித் தணிந்தது?
கதையாசிரியர்: கா.ஸ்ரீ.ஸ்ரீ.
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: July 14, 2025
பார்வையிட்டோர்: 2,651
(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மிகப்பழங்காலத்துக் கதை:
உள்ளுக்குள்ளே கொதிக்கும் எரிச்சலைத் தாங்க முடியாமல், ஒரு பரந்த ஒளிவட்டம் வெடித்துச் சுக்கல் சுக்கலாகிவிட்டது.
அந்தச் சுக்கல்களில் ஒன்று பெருந்தொலைவில் போய் விழுந்தது.
அந்தத் துணுக்கிலிருந்து ஒரு புதிய சிருஷ்டியை உண்டாக்கவேண்டும் என்ற ஆசை பிறந்தது கடவு ளுக்கு. அவர் அதை எடுத்துத் தண்ணீரில் போட் டார். அதன் வெளிப்பரப்பு தணிந்துபோயிற்று. கடவுள் மிகவும் பிரீதியோடு அதற்குப் ‘பூமி’ என்று பெயர் வைத்தார்.
“ஏன் இப்படிச் சோர்ந்துபோய் உட்கார்ந்திருக் கிறாய்? சற்றுச் சிரியேன், பார்க்கலாம் ” என்று கடவுள் பூமியிடம் சொன்னார்.
“கடவுளே, வலிய வரவழைப்பதனாலே சிரிப்பு வந்துவிடாது. உள்ளத்திலிருந்து மலர்ந்து அது தானாகவே வரவேண்டும். என் உள்ளத்தில் பெரு நெருப்பு எரிந்துகொண்டிருக்கிறது. அது அணைந்தா லொழிய, நான் சிரிப்பதேது?” என்று பூமி பதில் சொல்லியது.
அந்த நெருப்பு, தன்னைப் பொசுக்கியதனால் தானோ என்னவோ, பூமி கிடுகிடென்று நடுங்கலாயிற்று. அந்தப் பூகம்பத்தைப் பார்த்துக் கடவுளே திகைத்தார்.
வெகு நேரம் யோசனை செய்தபின்பு, “உன் உள் ளத்தில் தகிக்கும் எரிச்சலைத் தணிக்க நான் ஒரு புதிய பிராணியை ஸ்ருஷ்டிக்கிறேன். அவன் பெயர் மனி தன் !” என்று கடவுள் பூமியிடம் சொன்னார்.
மனிதன் பூமியின் மேற்பரப்பில் விளையாட ஆரம்பித்தான். கல்லும் பாறையும் நிரம்பிய பூமியை மலர்களாலும் கனிகளாலும் அலங்கரிப்பதற்காக அவன் அல்லும் பகலும் உழைக்கலானான்.
மனிதர்களின் உடலிலிருந்து வழிந்த வேர்வை வெள்ளத்தினால் பூமி நனைந்தது. நொடிப்பொழுதில் அதன்மீது பசுமை பூத்தது; கொடிகள் ஒய்யாரமாக அசைந்தாடின; மரங்கள் கிளைகளை உயரப் பரப்பி ஆகாயத்தைத் தொட முயன்றன.
வயல்களெல்லாம் பொற்கதிர்கள் நிரம்பியிருந் தன, அணிகலன்களினால் சிங்காரித்த குழந்தைகளைப் போல.
மாடமாளிகைகள் தம்முடைய ஸௌந்தர்ய வைபவத்தைக் காட்டிக்கொண்டு கம்பீரமாக நின் றன, இளமையிலே கால் வைத்திருக்கும் மோகனாங் கிகளைப்போல!
நகரங்கள் பரபரவென்று விஸ்தாரமடைந்தன, பராக்கிரமசாலிகளின் மனத்திலுள்ள பேராவலைப் போல!
பூமியின் இந்தப் புத்துருவத்தைக் கண்டு, கடஷ ளுக்கு மனிதனிடம் மிகுந்த பரிவு உண்டாயிற்று.
“இப்பொழுதாவது உன் உள்ளம் குளிர்ந்ததா இல்லையா?” என்று அவர் பூமியைக் கேட்டார்.
பூமி ஒன்றும் பதில் சொல்லவில்லை. மனத்தை எவ்வளவோ அடக்கியுங்கூட, அதன் வாயினின்றும் ‘ஹூம்!’ என்று ஒரு பெருமூச்சு வெளி வந்தது.
“எரிமலை வெடித்தது!” என்று மனிதர்கள் சொன்னார்கள்.
கடவுள் கோபமாக, இந்த விடியாமூஞ்சிப் பூமிக்கு எப்போதும் ஆறுதல் உண்டாகாது. இதன் பொருட்டு நான் ஒரு புது ஜீவனை ஸ்ருஷ்டித்தேன். மந்திரவாதியைப்போல, இதன் முழு உருவத்தையும் அவன் மாற்றிவிட்டான்; தன் உடலிலிருந்து வேர் வையை வடித்து இதற்குப் புதிய அழகைத் தந்தான். இவ்வளவு செய்தும் இதன் முணுமுணுப்பு இன்னும் ஓய்ந்தபாடில்லையே!” என்றார்.
இனிமேல் பூமியோடு ஒரு வார்த்தைகூடப் பேசுவதில்லை என்று அவர் கோபத்தோடு கோபமாக நிச்சயித்துவிட்டார்.
பூமியின் மீது எல்லாப் பொருள்களும் மேன் மேலும் வளர்ந்துகொண்டே இருந்தன : தனம், தானியம், மாடமாளிகைகள், நகரங்கள், மனிதர்கள் ; துன்பங்களுங் கூடத்தாம்!
செல்வம் வளர வளர, மனிதர்களுக்குப் பொறாமை வளர்ந்தது; பிறரை அடிமையாக்கி அவர் களது உழைப்பைக் கொண்டு உல்லாசமாக ஜீவிக்கும் எண்ணமும் வளர்ந்தது. மனிதர்களுக்குள்ளே சச்சரவுகள் ஆரம்பமாயின். பார்த்துக்கொண்டே இருக் கையில், அவை மகாயுத்தங்களாக உருவெடுத்தன.
பூமியின்மீது ரத்த வெள்ளங்கள் ஓடின.
‘மனிதனின் உடலிலிருந்து பாயும் இந்த ரத்தத்தி னால் பூமியின் எரிச்சல் தணிந்தே தீரும்’ என்று கடவுள் நினைத்தார்.
தாம் ‘டூ’ விட்டிருந்ததை மறந்து, அவர் பூமி. யிடம் சிரித்துக்கொண்டே, “மனிதனுடைய வேர்வை வெள்ளத்தினால் உன் தாபம் தணியவில்லை; ஆனால் இப்போது அவனுடைய இந்த ரத்தப் பிரவாகத்தினா லாவது அது தணிந்தது அல்லவா?” என்று கேட்டார்.
“இந்த ரத்தத்தினால் அந்த அக்கினி பின்னும் அதிகமாகிக் கொழுந்து விட்டு எரிகிறது” என்றது பூமி,விக்கி விக்கி அழுதுகொண்டே.
அதைக் கேட்டுப் பற்றிக்கொண்டு போயிற்று கடவுளுக்கு. “அப்படியானால் உன்னுடைய இந்த நெருப்பு எப்போதுமே அணையாது. ரத்தத்தைவிட அதிக மதிப்பு வாய்ந்த பொருள் மனிதனிடம் வேறு ஏதும் இல்லை !” என்று மிகவும் கோபத்தோடு சொல்லிவிட்டு, அவர் ஸ்வர்க்கத்திலே போய்த் தூங்கினார்.
பல காலம் கடந்தது.
ஒரு நாள் கடவுளுக்குத் தம் சயனகிருகத்தில் ஒரு பாட்டுக் கேட்டது. அது அவருக்குப் பழக்கமான குரல். பூமிதான் பாடிக்கொண்டிருந்தது; சந்தேகம் இல்லை.
அவருக்கு அது ஆச்சரியமாக இருந்தது. பூமி மறுபடியும் ஏதாவது ஒரு காலத்தில் தம்மிடம் வந் தால், அதன் குரல் பெரிய அழுகுரலாகத்தான் இருக் கும் என்று அவர் நிச்சயமாக நம்பியிருந்தார்.
கடவுள் எழுந்து ஓடிவந்தார். ஸ்வர்க்கத்தின் எல்லையைத் தாண்டியவுடனே, அவர் காது கொடுத் துக் கேட்டார்.
எவ்வளவு அமைதியான, எவ்வளவு மதுரமான குரல்கள் அவை! துன்பப்படும் மனிதனின் கண்டத் திலிருந்து இப்படிப்பட்ட குரல்களா வரும்? சேச்சே! நெருப்பிலிருந்து எப்போதாவது பூக்கள் மலர்ந்தது உண்டா?
அந்த நிலையிலே கடவுள் ஒரு குழந்தையைப் போல ஆகிவிட்டார். மிகவும் ஆவலோடு ஓடிவந்து, என்ன நடக்கிறது?” என்று பூமியைக் கேட்டார்.
“சிரிப்பு – பாட்டு!”
“பாட்டா? உள்ளத்திலே தீப்பிடித்து எரியும் போது உனக்கு எப்படிப் பாடத் தோன்றுகிறது?”
“அந்தத் தீ அணைந்துவிட்டதே!”
“அணைந்துவிட்டதா? அதை யார் அணைத்தது?” “மனிதன்!”
“எதனாலே அணைத்தான்?”
“தன்னுடைய உள்மனத்திலே எழுந்த சகோ தர பாவனையினால் அணைத்தான்! அந்தப் பாவனை யின் காரணமாகத் தன் கண்களிலே துளும்பிய கண்ணீரினால் அணைத்தான்!”
– அரும்பு (உருவகக் கதைகள்), மூலம்: வி.ஸ.காண்டேகர், மராட்டியிலிருந்து மொழிபெயர்ப்பு: கா.ஸ்ரீ.ஸ்ரீ., முதற் பதிப்பு: 1945, கலைமகள் காரியாலயம், சென்னை.
![]() |
கா.ஸ்ரீ.ஸ்ரீ (காஞ்சீபுரம் ஸ்ரீரங்காச்சாரியார் ஸ்ரீனிவாசாச்சாரியார்) (டிசம்பர் 15, 1913 - ஜூலை 28, 1999) தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர். முதன்மையாக வி.எஸ்.காண்டேகரின் நூல்களை மொழியாக்கம் செய்தமைக்காக அறியப்படுபவர். நூல்கள் பதினந்து நாவல்கள், ஏறத்தாழ முன்னூறு சிறுகதைகள், பதினெட்டு திரைக்கதைகள், பதினெட்டு கட்டுரைத் தொகுதிகள், ஆறு நீதிக்கதைத் தொகுதிகள், ஐந்து இலக்கியத் திறனாய்வுகள், ஒன்பது ஆராய்ச்சிக் கட்டுரைகள், மூன்று சொற்பொழிவுத் தொகுப்புகள், இரண்டு சுயசரிதை நூல்கள் கா.ஸ்ரீ.ஸ்ரீயால் எழுதப்பட்டவை. கா.ஸ்ரீ.ஸ்ரீ…மேலும் படிக்க... |
