மலர்ச்சி
கதையாசிரியர்: கா.ஸ்ரீ.ஸ்ரீ.
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: July 14, 2025
பார்வையிட்டோர்: 2,035
(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)3

களகளவென்று தண்ணீர் பெருக ஆரம்பித்தது. பாடகன் தன் கண்டத்திலிருந்து வெளிவரும் இன்னிசையில் சொக்கிப்போவதுபோல, அந்தக் கள களவொலியைக் கேட்டு மலையரசன் சமாதியில் ஆழ்ந்தான்.
ஆனால் அவனுடைய சமாதி நெடு நேரம் நிலைத்து நிற்கவில்லை.
தாயின் மடியிலுள்ள பெண்குழந்தையின் கால் சிலம்பு ‘ஜண் ஜண்’ என்று ஒலிப்பது போல அது முதலில் அவன் காதுக்குக் கேட்டது. ஆனால் சிறிது நேரம் கழித்து, ‘எங்கோ ஒரு நாட்டியக்காரி நர்த்தனமாடிக் கொண்டிருக்கிறாள். நமக்குக் கேட்கும் இந்த ஒலி அவள் கால்களிலுள்ள சிலம்புகளின் ஓசையே!’ என்று அவன் நினைத்தான்.
அவன் கண்ணைத் திறந்து பார்த்தான்: களகளவென்று ஓடிய தண்ணீர்’ ‘கல் கல்’ என்று ஒலித்துக்கொண்டு நெடுந்தூரம் போய்க்கொண்டிருந்தது.
நதியைப் பார்த்ததும் மலையரசன், “பெண்ணே!” என்று கூப்பிட்டான்.
நதி பின்னால் திரும்பிப் பார்த்தது. அலைகளின் நுரையா அது? அல்ல; நதியின் இளமுறுவல்.
“எங்கே போகிறாய்?” என்று பர்வதராஜன் கேட்டான்.
“வெகு தொலைவுக்கு!”
“என்னை விட்டுவிட்டா?”
“ஆமாம். இங்கே இருந்தால் என் வாழ்க்கை மலரவே மலராது!”
நதி வேகமாக ஓடியது.
அதன் அகலம் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே போயிற்று.
சிலர் அதற்குப் பூஜை செய்யலானார்கள்.
சிலர் நிலாவெளிச்சத்தில் ஆற்றுநீரில் படகிலேறி ல்லாசமாக விளையாடினர்.
நதி கர்வத்தோடு மேலே ஓடியது.
ஓடிக்கொண்டே இருக்கையில், தூரத்திலிருந்து தண்ணீரின் களகளச் சத்தம் அதற்குக் கேட்டது. “இது யார் பாடுவது ?” என்று அது கரையில் இருந்த மரங்களைக் கேட்டது.
“இது மகாநதி; இனி நீ இந்த மகாநதியோடு கலப்பாய்” என்று மரங்கள் பதில் கூறின.
நதி, தான் நின்ற இடத்திலேயே அசையாமல் நின்று, கோபத்தோடு, ‘மற்றொரு நதியோடு கலந்தால் என் வாழ்க்கை மலர முடியாது!” என்றது.
மரங்களின்மீது இருந்த பறவைகள், “மகாநதியி லிருந்து நீ கடலில் போய்க் கலப்பாய்!” என்று கூவின.
நதி முகத்தைச் சிணுங்கிக்கொண்டு, “ஹும்! கடலா! உப்புநீர் கொண்ட அந்தப் பெரிய வெட்டுப் பள்ளம் / அதில் போயா நான் கலப்பேன்? சீ / அங்கே என் வாழ்க்கை மலரவே முடியாதே!” என்றது.
ஒரு பெரிய திருப்பத்தோடு நதி வேறொரு திசை யில் பெருகி ஓடியது.
எவ்வளவு வறண்ட பிரதேசம் அது! உலகத்தில் பசுமை என்று ஒரு நிறம் இருக்கிறது என்பதே அதற் குத் தெரியாது போலும்!
நதியின் களகளவோசையைக் கேட்டவுடனே ஆயிரக் கணக்கான ஜனங்கள் நதிக்கரைக்கு ஓடிவந் தார்கள்.
சிலர், “தேவதரிசனம் கிடைத்துவிட்டது!” என்றார்கள்.
பின்னும் சிலர், “இந்த ஆற்றிலிருந்து கால்வாய் கள் வெட்டினால் இந்தக் கற்களிலிருந்துகூட மலர்கள் மலரும் !” என்று முணுமுணுத்தார்கள்.
கால்வாய்களை வெட்ட ஆரம்பித்தவுடனே ஆற்று நீர் குறையலாயிற்று.நதி கோபத்தோடு,”இப்படிச் செய்தால் என் வாழ்க்கை மலருவது ஏது? அங்கே உங்கள் வயல்கள் செழித்து வளரும்; ஆனால் இங்கே என் கரையின் இரு மருங்கும் நீர் இல்லாமல் வற்றிப் போகுமே!” என்றது.
அந்தப் பக்கம் மகாநதி ; அதைக் கடந்ததும் கடல்; இந்தப் பக்கம் கால்வாய்களைத் தோண்டும் இந்தக் குடியானவர்கள் !
இவர்கள் எல்லோரையும் ஏமாற்றிவிட்டு நதி ஓட்டமெடுத்தது.
ஆனால் இப்போது அதன் வேகம் குறைந்தது. அது முன்னால் பார்த்தது : மிகப் பெரிய பாலை வனம் ஒன்று பரந்து கிடந்தது. அது வலது புறமாகப் பார்த்தது, இடது புறத்தில் பார்த்தது: கடும்புயல் ஒன்று வீசி அடித்துக்கொண்டிருந்தது. சமதரையில் பரபரவென்று மணற்குன்றுகள் எழுந்தன.
எவளோ ஒரு சூனியக்காரி இவை யாவற்றை யும் செய்துகொண்டிருக்கிறாள் என்று நதி நினைத் தது. ” எனக்கு வேறு ஒன்றும் வேண்டாம்! என் மலர்ச்சிதான் வேண்டும்!” என்று அது சத்தமிட்டுக் கூவியது.
பத்துத் திசைகளும் விகட நகை புரிவதாக அதற் குத் தோற்றியது. ஆனால், ராக்ஷஸச் சிரிப்பா அது? அல்ல ; பிரசண்டமான மணற்புயல்கள்!
இன்று தீப்பட்டெரியும் அந்தப் பாலைவனத்தின் வழியே போகும் யாத்திரிகர்கள் ஒரு சின்னஞ்சிறு சுனையைக் காண்கிறார்கள். அந்தச் சுனைக்கு அக்கம் பக்கத்தில் வளர்ந்துள்ள பசுமையைக் கண்டு அவர் களுக்குப் பேரானந்தம் உண்டாகிறது. அந்த இளம் பசுமையை அணுகாமல் எந்த யாத்திரிகனும் மேலே அடியெடுத்து வைப்பதில்லை. பசுமையின் மெல்லிய ஸ்பரிசத்தினால் அவன் முகத்தில் ஆனந்த ஜோதி மிளிர்ந்தவுடனே அந்தச் சின்னஞ்சிறு சுனையில் சிறிய அலைகள் எழுகின்றன. அவை நகைத்துக்கொண்டே, “மலர்ச்சி!” என்ற ஒரே ஒரு சொல்லை முணுமுணுக்கின்றன.
– அரும்பு (உருவகக் கதைகள்), மூலம்: வி.ஸ.காண்டேகர், மராட்டியிலிருந்து மொழிபெயர்ப்பு: கா.ஸ்ரீ.ஸ்ரீ., முதற் பதிப்பு: 1945, கலைமகள் காரியாலயம், சென்னை.
![]() |
கா.ஸ்ரீ.ஸ்ரீ (காஞ்சீபுரம் ஸ்ரீரங்காச்சாரியார் ஸ்ரீனிவாசாச்சாரியார்) (டிசம்பர் 15, 1913 - ஜூலை 28, 1999) தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர். முதன்மையாக வி.எஸ்.காண்டேகரின் நூல்களை மொழியாக்கம் செய்தமைக்காக அறியப்படுபவர். நூல்கள் பதினந்து நாவல்கள், ஏறத்தாழ முன்னூறு சிறுகதைகள், பதினெட்டு திரைக்கதைகள், பதினெட்டு கட்டுரைத் தொகுதிகள், ஆறு நீதிக்கதைத் தொகுதிகள், ஐந்து இலக்கியத் திறனாய்வுகள், ஒன்பது ஆராய்ச்சிக் கட்டுரைகள், மூன்று சொற்பொழிவுத் தொகுப்புகள், இரண்டு சுயசரிதை நூல்கள் கா.ஸ்ரீ.ஸ்ரீயால் எழுதப்பட்டவை. கா.ஸ்ரீ.ஸ்ரீ…மேலும் படிக்க... |
