கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 10, 2025
பார்வையிட்டோர்: 552 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரே அழகியை இரண்டு ஓவியர்கள் காதலித்தார்கள். அவர்கள் இருவரில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்று அவளுக்குப் புரியவில்லை. 

இருவருடைய சுபாவங்களும் திராக்ஷைக் கனி யைப்போல இனிமையாக இருந்தன. 

இருவருடைய கலைகளும் மின்னலைப்போல ஒளி வீசின. 

இருவருடைய உருவங்களும், பிரம்மா ஒரே பிம்பத்தை இரண்டு ஓவியங்களாக வரைந்தானோ என்று சொல்லும்படி இருந்தன. 


அழகியின் தோழியர் அவளிடம், “நீ ஏதாவது ஒரு பணயம் வை. அதில் எவன் வெற்றி பெறுகிறானோ அவனுக்கே மாலையிடு” என்றார்கள். 

ஆனால் எதைப் பணயமாக வைப்பது? 

வில்லை முறிப்பதா? சே! தூலிகையைக் காட்டிலும் கனமான வஸ்துவை அவ்விருவரில் ஒருவனாவது கையால் எடுத்ததில்லையே! 

மத்ஸ்யத்தைப் பேதிக்கும் பணயமா? 

இருவருமே ஓவியர்களாகப் பிறந்தவர்கள். மீனைக் குறி பார்த்து அடிப்பதற்குப் பதிலாக, அதன் அழகிய கண்களையே அவர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள்! 

வெகு நேரம் சிந்தித்தபின்பு அவளுக்கு ஓர் எண்ணம் தோன்றிற்று. 

அவர்கள் இருவரையும் கூப்பிட்டு, “எனக்கு ஒரு சித்திரம் வேண்டும்” என்று சொன்னாள். 

“ஒன்றா? சித்திரங்களையே நடைபாவாடையாக அமைத்துக்கொண்டு வேண்டுமானால் பூப் பிரதக்ஷிணம் செய்” என்றான் முதல்வன். 

இரண்டாமவன், “உனக்கு எத்தகைய சித்திரம் வேண்டும்?” என்று கேள்வி கேட்டான். 

“மாலைநேரத்துச் சித்திரம்.” 

இரண்டு ஓவியர்களும் மாலைநேரத்துச் சித்திரம் வரைய, சேர்ந்தாற்போல் உட்கார்ந்தார்கள். அந்த அழகியின் ரஸிகத்தன்மையை நினைந்து இருவருமே வியந்தார்கள். ‘இயற்கையினிடத்திலே உள்ள மிகவும் அழகிய சித்திரம் மாலைவேளை தான்’ என்றது அவர்களுடைய கலைப்பார்வை. 

இனிய மாலை நிறங்கள் கிர் கிர் என்று மாறிச் சுழன்றன. இளம்பருவத்து மங்கையின் உள்ளத்திலே எழும் காதல் உணர்ச்சிகளோ இவை என்று தோன்றின. 

கதிரவனின் சூடு அணுவளவும் தென்படவில்லை. அந்தப்புரத்து வாசலில் நிற்கும் வீர புருஷனுடைய வதனத்தில் கடுமையின் நிழலை யாராவது பார்த்தது உண்டா? 

பறவைகள் கூட்டங் கூட்டமாகக் கூடுகளை நோக்கி விரைந்தன. ஆனந்த அலைகள் உருவெடுத்துப் பாய்ந்தால், இப்படித்தானே தென்படும்? 

இரண்டு கலைஞர்களும் இனிய கற்பனை அலைகளில் விளையாடிக் கொண்டே மாலையழகை ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தனர். 

காற்றினால் உதிர்ந்த சருகு ஒன்று அந்தரத்தில் மிதந்துகொண்டே வந்து முதல் ஓவியனுடைய உட லின்மேல் விழுந்தது. எதிரே காணும் அழகிய காட் சிக்கு அது அடியோடு ஒவ்வாதது என்று அவனுக்குத் தோன்றிற்று.கோபாவேசத்தில் அவன் அதைப் பொடி சூர்ணமாக்கிவிட்டான். பக்கத்திலே ஆட்டு மந்தை ஒன்று குதித்துக்கொண்டே போயிற்று. கன்னங் கரியகிழக் கோவலன் எருமைக் குரலில் பாடிக் கொண்டே அந்த மந்தைக்குப் பின்னால் போனான். அவன் கையில் ஏதோ ஒன்று இருந்தது.ஆனால் அது என்ன என்று தென்படுவதற்கு முன்பே, முன்பே, முதல் ஓவியன், “அடே கிழவா, பெரிய பாடகனாகிவிட் டாயோ நீ, பாட்டுப் பாட!” என்றான். 

கிழவன் திடுக்கிட்டான். சட்டென்று முதுகைத் திருப்பிக்கொண்டு நொடிப்பொழுதில் மறைந்து போனான். 

நேர்த்தியான மெல்லிய திரையினால் மூடிய இரண்டு சித்திரங்கள் அழகியின் அந்தப்புரத் துக்கு வந்தன. இரண்டு ஓவியர்களும் அவரவர் சித் திரத்தின் அருகில் நின்றார்கள். கையில் மாலையை ஏந்தி, அழகி முன்னால் வந்தாள். அவள் கைகள் மட்டுமல்ல, இருதயமும் நடுங்கிக்கொண்டிருந்தது. 

முதல் ஓவியன் தன் சித்திரத்தின் திரையை. விலக்கினான். 

‘ரங்கநாதன்’ என்பது சித்திரத்தின் பெயர். மாலை நேரத்துக் கதிரவன் ராஸக்கிரீடை செய்கிறான்; 

பலவித நிறங்களால் தம்மை அலங்கரித்துக்கொண்ட மேகமாலைகள் கோபிகளைப்போல அவனைச் சுற்றி வட்டமிட்டுக் கும்மியடிக்கின்றன. சாயங்காலத்தில் வீடு திரும்பும் மாடுகன்றுகள் இந்த ரங்கநாதனின் குழ லோசையில் மயங்கித்தான் அப்படி ஓடுகின்றனவோ என்று தோற்றியது. 

அவனுடைய தூலிகை தன் மாயவித்தையினால் சாயங்காலத்து அற்புதம் முழுவதையும், அழகு முழு வதையும், வசப்படுத்திக்கொண்டது. 

இரண்டாவது ஓவியன் பயந்துகொண்டே தன் சித்திரத்தின் திரையை அகற்றினான். 

முகிலழகன் என்பது சித்திரத்தின் பெயர். அந்த ஓவியத்தில், அழகிய மாலைப்பொழுது யாரையோ அன்போடு பார்த்துக்கொண்டிருப்பது போலத் தோற்றியது. ஒரு கிழக் கோவலன் உரு வம் அது. தாடி வளர்ந்து, மூலைக் கோவணம் கட் டிய அந்த மனிதன், அறுவடையான வயல் வழியே மெதுவாகப் போய்க்கொண்டிருந்தான். 

அந்த ஆயன் ஓர் ஆட்டுக் குட்டியை மார்பில் அணைத்திருந்தான். முன்னால் போகும் மந்தையி லிருந்து ஒரு வெள்ளாடு பின்னால் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தது. அதுதான் அந்த ஆட்டுக் குட்டியின் தாயாக இருக்கவேண்டும். 

அழகி இரண்டாவது ஓவியன் கழுத்தில் புஷ்ப மாலையை அணிந்தாள். உடனே, முதல் ஓவியனின் பக்கமாகத் திரும்பி, “உங்களுடைய சித்திரம் எத் தனை அழகாக இருக்கிறது, அண்ணா! தங்கைக்குப் பரிசாக நீங்கள் அதை எனக்குக் கொடுத்துவிட வேண்டும்” என்றாள். 

– அரும்பு (உருவகக் கதைகள்), மூலம்: வி.ஸ.காண்டேகர், மராட்டியிலிருந்து மொழிபெயர்ப்பு: கா.ஸ்ரீ.ஸ்ரீ., முதற் பதிப்பு: 1945, கலைமகள் காரியாலயம், சென்னை.

கா.ஸ்ரீ.ஸ்ரீ. கா.ஸ்ரீ.ஸ்ரீ (காஞ்சீபுரம் ஸ்ரீரங்காச்சாரியார் ஸ்ரீனிவாசாச்சாரியார்) (டிசம்பர் 15, 1913 - ஜூலை 28, 1999) தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர். முதன்மையாக வி.எஸ்.காண்டேகரின் நூல்களை மொழியாக்கம் செய்தமைக்காக அறியப்படுபவர். நூல்கள் பதினந்து நாவல்கள், ஏறத்தாழ முன்னூறு சிறுகதைகள், பதினெட்டு திரைக்கதைகள், பதினெட்டு கட்டுரைத் தொகுதிகள், ஆறு நீதிக்கதைத் தொகுதிகள், ஐந்து இலக்கியத் திறனாய்வுகள், ஒன்பது ஆராய்ச்சிக் கட்டுரைகள், மூன்று சொற்பொழிவுத் தொகுப்புகள், இரண்டு சுயசரிதை நூல்கள் கா.ஸ்ரீ.ஸ்ரீயால் எழுதப்பட்டவை. கா.ஸ்ரீ.ஸ்ரீ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *