பூமி





(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தான் வாசம் செய்யும் பூமி மிகவும் அற்பமென்று மனிதனுக்குத் தோன்றலாயிற்று.
அவன் மலையைப் பார்த்தான். அதனுடைய அந்த உன்னதமான சிகரம்: ஆகாயத்திலுள்ள நக்ஷத்திரங்களைத் திரட்டுவதற்காகப் பர்வதம் கை நீட்டினாற் போல இருந்தது அது!
பூமியைத் துச்சமாகப் பார்த்துவிட்டு மனிதன் மலைமேல் ஏற ஆரம்பித்தான்.
பாறைகள் தடுக்கின; கால்களில் முட்கள் குத்தின. ஆயினும் அவன் மேன்மேலும் ஏறிக் கொண்டே போனான்.
காலை வீசி நடந்துகொண்டே, அவன் மலையுச்சி யை எட்டினான். மலைமேல் ஏறுவதற்கு முன்பு, ‘பாரி ஜாதக் கிளையை ஆட்டினால் மலர்கள் கொட்டுவது போல, நாம் மலையுச்சியிலிருந்து ஆகாயத்தை ஆட்டி னால் நக்ஷத்திரங்கள் உதிரும்’ என்று அவன் நினைத் திருந்தான். ஆனால் இப்போது அவனுக்கு வேறோர் அநுபவம் உண்டாயிற்று. ஆகாயம் இன்னமும் முன்பு இருந்த அத்தனை தூரமே இருந்தது. நக்ஷத் திரங்கள் கண்ணைச் சிமிட்டி, அவனைப் பார்த்து நகைத்தன.
பசியினால் அவன் தவியாகத் தவித்தான். அந்த மலையுச்சி அவன் கண்ணுக்குப் பட்டுப்போன மரத் தைப் போலத் தோன்றியது.
அவன் தன் எதிரே பார்த்தான்:
கடலலைகள் கும்மியடிக்கும் பெண்களைப்போலத் தோன்றின.
அவன் கீழே பார்த்தான்:
மேடும் பள்ளமுமான கன்னங்கரிய பூமி, கிழிந்து போன கந்தைக் கம்பளத்தைப் போலத் தோற்றியது.
அவன் மீண்டும் முன்புறம் பார்த்தான்:
கடலின் நீல நிறப் பரப்பு ரத்ன கம்பளம் போலத் தோன்றியது. அந்த ரத்ன கம்பளத்தில் மின்னும் சிறிய பூக்கள் ! அது அலைகளின் நுரை என் பது அவனுக்கு உண்மையாகவே படவில்லை.
அவன் ஒரே ஓட்டமாக மலையிலிருந்து இறங்கி னான். பூமியைத் திரும்பிக்கூடப் பாராமல் கடலை நோக்கி ஓடினான்.
ஓடிக்கொண்டே, “நக்ஷத்திரங்கள் கிடைக்கா விட்டால் போகட்டுமே; கடலிலுள்ள ரத்தினங்கள் நமக்குக் கிடைக்கத் தடை என்ன?” என்று மன சோடு சொல்லிக்கொண்டான்.
மணல்வெளிக்கு வந்தபொழுது, அவனுக்கு நெஞ்சு உலர்ந்துபோயிற்று. தாகத்தினால் தவித்த அந்த ஜீவன், கடல்நீரில் வாய் வைத்ததுதான் தாம தம் ; ஒரேயடியாக உப்புக் கரித்தது.
வந்த வழியே, அவன் பூமியை நோக்கித் திரும்பினான்.
சாலையோரத்தில் ஒரு சிறு கிணறு தென்பட்டது. அந்தக் கிணற்றுநீரை அவன் பருகினான். கிணற்றுக்கு அருகிலேயே இருந்த மாமரத்து நிழலில் உட்கார்ந்தான். அந்த நிழல் அவனுக்கு அபூர்வமான ஆனந்தத்தைத் தந்தது. அதற்குள் மரத்திலிருந்து மாங்கனி ஒன்று விழுந்தது. அதைச் சுவைத்தவண்ணம், ‘ஆகாயத்திலுள்ள எல்லா நக்ஷத்திரங்களும், கடலிலுள்ள எல்லா ரத்தினங்களும், இந்த அற்பமான பூமியின் ஒரு சின்னஞ்சிறு துகளுக்குக்கூட ஈடாக மாட்டா’ என்று அவன் நினைக்கலானான்.
– அரும்பு (உருவகக் கதைகள்), மூலம்: வி.ஸ.காண்டேகர், மராட்டியிலிருந்து மொழிபெயர்ப்பு: கா.ஸ்ரீ.ஸ்ரீ., முதற் பதிப்பு: 1945, கலைமகள் காரியாலயம், சென்னை.
![]() |
கா.ஸ்ரீ.ஸ்ரீ (காஞ்சீபுரம் ஸ்ரீரங்காச்சாரியார் ஸ்ரீனிவாசாச்சாரியார்) (டிசம்பர் 15, 1913 - ஜூலை 28, 1999) தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர். முதன்மையாக வி.எஸ்.காண்டேகரின் நூல்களை மொழியாக்கம் செய்தமைக்காக அறியப்படுபவர். நூல்கள் பதினந்து நாவல்கள், ஏறத்தாழ முன்னூறு சிறுகதைகள், பதினெட்டு திரைக்கதைகள், பதினெட்டு கட்டுரைத் தொகுதிகள், ஆறு நீதிக்கதைத் தொகுதிகள், ஐந்து இலக்கியத் திறனாய்வுகள், ஒன்பது ஆராய்ச்சிக் கட்டுரைகள், மூன்று சொற்பொழிவுத் தொகுப்புகள், இரண்டு சுயசரிதை நூல்கள் கா.ஸ்ரீ.ஸ்ரீயால் எழுதப்பட்டவை. கா.ஸ்ரீ.ஸ்ரீ…மேலும் படிக்க... |