சகோரமும் சாதகமும்





(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆகாயம் சோகம் பிடித்தாற் போல இருந்தது; அரசன் இறந்த அரண்மனையைப் போலே! சற்று முன்புதான் பூமியில் எங்காவது எரி நக்ஷத்திரம் விழுந்திருக்க வேண்டும். ஒளி வீசும் அந்த நக்ஷத்திரத்தை நினைந்துதான் ஆகாயத்துக்கு இவ்வளவு வருத்தம் உண்டாயிருக்குமோ? சே! கவிகள் கூட இத்தகைய கற்பனையை நம்பமாட்டார்களே!
நான் ஆகாயத்தை உற்றுப் பார்த்தேன்.
ஆகாய மண்டலம் முழுவதையும் சாம்பல் நிற மேகங்கள் சூழ்ந்துகொண்டு இருந்தன. அப்போது ஆகாயம் உலகத்தை வெறுத்து விட்டவனுடைய மனத்தைப் போலத் தோற்றியது. அந்த மேகங்கள் அவன் மனத்திலே தோன்றும் தற்கொலைச் சிந்தனைகளைப் போலத் தோற்றம் அளித்தன.
தற்கொலைத் தீர்மானத்தைப் போலவே கன்னங்கரிய மேகமொன்று நடுவே அசையாமல் நின்றிருந்தது. தற்கொலை யெண்ணம் நம்பிக்கையை அடியோடு அழித்துவிடுவது போல, அந்தக் கருமுகில் எட்டாம் பிறை அர்த்தசந்திரனை முற்றும் ஒளியற்றவனாக ஆக்கிவிட்டது. குற்றுயிராகிக் கிடந்த அந்த வெண்மதியின் நிலவைக் காட்டிலும் குருடனுடைய கண்ணற்ற பார்வையே மேல்!
விசித்திரமான வெற்றி முழக்கம் ஒன்று என் காதில் விழுந்தது. அந்தக் கருமுகில்தான் ஆனந்தத்தினால் கூச்சலிட்டதோ? அல்ல – அது ஆந்தையின் குரலும் அல்லவே!
பின்னால் திரும்பிப் பார்த்தேன்:
ஒரு பறவை அந்தக் கருமுகிலை ஆவலோடு பார்த்துக் கூவிக்கொண்டிருந்தது: “வா, வா, முகிற் கூட்டமே வா!” என்ற சொற்கள் தெளிவாகக் கேட்டன.
அதன் துயரத்தைக் கண்டு, ‘சாபத்தினால் பூமிக்கு வந்த கந்தர்வனாக இருக்குமோ இது?’ என்று எண்ணலானேன். அதற்குள் மற்றொரு திக்கிலிருந்து “சும்மா இரு, சாதகமே! வா, வா, நிலவே வா!” என்று ஒரு குரல கிளம்பியது.
“எங்காவது போய்த் தொலை நீ, சகோரமே! வா, வா,மேகமாலையே வா!” என்று முதற் பறவை கூவியது. அவ்விரு பக்ஷிகளும் ஒன்றை மற்றொன்று இரக்கமற்ற பார்வையோடு பார்த்துக்கொண்டே மீட்டும் மீட்டும் கூச்சல் போட்டன:
“வா, வா, மேக மாலையே வா!”
“வா,வா, சந்திரிகையே வா!”
அவற்றின் கூக்குரல் ஆகாயத்துக்குக் கேட்டதோ என்னவோ, தெரியாது. ஆனால் ஆகாயத்தில் ஒரு கணம் நிலவு வீசுவதும் மறுகணம் அந்தக் கருமுகில் வெண்மதியை மறைப்பதுமான விளையாட்டு ஆரம்பமாயிற்று.
“வா, வா, மேகமாலையே வா!” என்று சாதகம் கூவிக்கொண்டே இருந்தது.
வா, வா,சந்திரிகையே வா!” என்று சகோரம் கத்திக்கொண்டே இருந்தது.
நெஞ்சு உலர்ந்துபோகும் வரையில் அவை கூச்சலிட்டன. நீர்கொண்ட மேகமும் நிலவு கொண்ட வெண்மதியும் ஆகாயத்தில் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டே இருந்தன.
இப்போது அவ்விரு பறவைகளின் கண்களிலும் குரூரமான கழுகுப் பார்வை படர்ந்தது. ஒரு நொடியிலே அவை ஒன்றன்மீது மற்றொன்று பாய்ந்தன. கண் மூடித் திறப்பதற்குள், இரண்டு உடல்களிலிருந்தும் ரத்தம் பெருகிற்று. அந்தப் பயங்கரக் காட்சியை என்னால் பார்க்க முடியவில்லை. முகத்தைத் திருப்பிக்கொண்டேன். சற்று நேரத்துக்கெல்லாம் கூச்சல் ஓய்ந்தது. நகங்களினாலும் அலகுகளினாலும் கொத்திப் பிய்த்து அடிக்கும் ஓசை தேய்ந்தது. அலறல் நின்றது. முதலில் இறக்கைகள் படபடக்கும் ஒலி கேட்டது; மெல்ல மெல்ல அது சலசலப்பாக மாறியது. அப்புறம் – அமைதி – எல்லாம் அமைதி!
நான் பார்த்தேன்: இரண்டு பறவைகளும் பூமியிலே செத்துக் கிடந்தன. சற்று நேரத்திற்கு முன்பு உயிரோடு கம்பீரமாக வளைய வந்த அவ்வுருவங்கள் எங்கே! இதோ தரையில் சாய்ந்து கிடக்கும் கோணல்மாணலான பிணங்கள் எங்கே! அடடா! ஆகாயத்தை நோக்கினேன். என்னைச் சமாதானப் படுத்த வேண்டியே அங்கே தேவாதிதேவன் தோன்றினானோ!
அந்தக் கருமுகிலிலிருந்து இப்போது படபட வென்று நீர்த்துளிகள் விழுந்தன. ஆனால் அவற்றிற்காக வேட்கையுற்றிருந்த சாதகம் வாய் திறக்க வில்லை.
தூறல் நின்றவுடனே நிலவு பொழிந்தது. ஆனால் சந்திரிகைக்காக ஆசைப்பட்டுக் காத்திருந்த சகோரம் அதை வரவேற்கக் கழுத்தை அசைக்கவில்லை.
அவ்விரு பறவைகளுடைய பிணங்களின் மேலும் தேங்கிய நீர்த்துளிகளின்மீது நிலவு மிளிர்ந்தது!
– அரும்பு (உருவகக் கதைகள்), மூலம்: வி.ஸ.காண்டேகர், மராட்டியிலிருந்து மொழிபெயர்ப்பு: கா.ஸ்ரீ.ஸ்ரீ., முதற் பதிப்பு: 1945, கலைமகள் காரியாலயம், சென்னை.
![]() |
கா.ஸ்ரீ.ஸ்ரீ (காஞ்சீபுரம் ஸ்ரீரங்காச்சாரியார் ஸ்ரீனிவாசாச்சாரியார்) (டிசம்பர் 15, 1913 - ஜூலை 28, 1999) தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர். முதன்மையாக வி.எஸ்.காண்டேகரின் நூல்களை மொழியாக்கம் செய்தமைக்காக அறியப்படுபவர். நூல்கள் பதினந்து நாவல்கள், ஏறத்தாழ முன்னூறு சிறுகதைகள், பதினெட்டு திரைக்கதைகள், பதினெட்டு கட்டுரைத் தொகுதிகள், ஆறு நீதிக்கதைத் தொகுதிகள், ஐந்து இலக்கியத் திறனாய்வுகள், ஒன்பது ஆராய்ச்சிக் கட்டுரைகள், மூன்று சொற்பொழிவுத் தொகுப்புகள், இரண்டு சுயசரிதை நூல்கள் கா.ஸ்ரீ.ஸ்ரீயால் எழுதப்பட்டவை. கா.ஸ்ரீ.ஸ்ரீ…மேலும் படிக்க... |