இருட்டினில் வாழும் உயிர்களுக்கு…!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 4, 2025
பார்வையிட்டோர்: 1,002 
 
 

(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“சொல்லடா வாய் திறந்து அப்பா என்று! சொல்லடா!” என ‘நீலவானம்’ திரைப்படத்தில் தேவிகா ‘பாடியது போலக் குழந்தையைத் தோளில் போட்டுக்கொண்டு பாடவேண்டும் போல இருக்கிறது எனக்கு. 

“பின்னை என்ன? கொழும்பிலிருந்து வந்து ஏழோ எட்டு நாட்களாகியும் இன்னமும் இந்தப் ‘பயல்’ என்னுடன் சேரவோ, என்னுடன் பழகவோ மறுக்கிறானே?” 

“அவன் உடம்பு பிரட்டும்போது ஊரிலிருந்து போனியள். அவன் தவழ்ந்து, நடந்து, கதைக்க ஆரம்பிச்சதற்குப் பிறகு இப்ப திரும்ப வந்திருக்கிறயள். ஏறத்தாழ ஒண்டரை வருஷ காலமாக உங்கடை அரவணைப்பில்லாமலேயே வளர்ந்தவனைப் பார்த்து, இப்ப திடீரென்று ‘அப்பா எண்டு சொல்லடா’ எண்டால், எப்படி……. அப்பா?” இது என் மனைவி சாந்தியின் சமாதானம். 

நேற்று காலையிலாக இருக்க வேண்டும். நிவாரண உலர் உணவுப் பொருட்களைப் பெறுவதற்கென கூட்டுறவுக் கடைக்குச் செல்வதற்காக சாந்தி புறப்பட்டபோது, மகனை என்னிடம் தந்துவிட்டு, வீட்டுக் கேற்றைக் கூடத் தாண்டியிருக்கமாட்டாள். அழுது குளறி அயலில் உள்ள சனங்கள் எல்லோரையுமே கூட வைத்து விட்டான் மகன். பக்கத்து வீட்டுத் தங்கம் மாமி வந்து குழந்தையை என்னிடமிருந்து வாங்கியது தான் தாமதம்… அவனது அழுகை, குளறல் எல்லாமே பறந்து விட்டது. 

இந்தப் பதினாறோ பதினேழு மாதங்களும் அப்படி எங்கும் வெளிநாட்டில் இருந்துவிட்டு வந்தவனல்ல நான். இதே நாட்டில் ஒரு நானூறு கிலோமீட்டர்கள் தூரத்திற்கு அப்பாலில் தான் இருந்து விட்டு வந்திருக்கிறேன். இந்தக் குறுகிய தூரமே எப்படியாக எம்மை அந்நியப்படுத்தி வைத்திருக்கிறது? 

வாழ்வில் திருமணத்தின் பின் போராட்டமோ என்னவோ, எமது திருமணம் நடந்தது ஒரு போராட்ட காலச் சூழலில்தான். மணமுடித்த மறுநாளே வடமராட்சித் தாக்குதலால் பிறந்த மண்ணுக்குள்ளேயே இடம் பெயர ஆரம்பித்தோம். அன்று தொட்டு இன்று வரை இந்தப் பத்து வருட காலமும் வடக்கிலும், தெற்கிலுமாக அகதியும், பயணியுமாகத்தான் காலங்கள் கடந்திருக்கிறது. 

“இஞ்சாருங்கோ அப்பா, தம்பியை ஒருக்கால் பார்த்துக் கொள்ளுங்கோ. நான் ஓடிப்போய் நல்ல தண்ணி அள்ளிக்கொண்டு ஓடி வாறன். பிறகு ‘ரியூசன்’ முடிஞ்சு மீராவும் வந்திடுவள். எல்லாரும் ஒண்டாகச் சாப்பிடலாம்” என்றவாறே ஒரு நாரியில் வெறுங் குடமும்,மறு நாரியில் மகனுமாகச் சாந்தி என் முன் வந்து நின்றாள். 

“என்னாலை ஏலாதப்பா! வேணுமெண்டால் நல்ல தண்ணியள்ள நான் போட்டு வாறன். உந்தப் பயல் அழ வெளிக்கிட்டானெண்டால் என்னால ஆத்தேலாது. அயலையே கூட்டி விடுவான். பிறகு மரியாதை கேடு!” 

“கதையை விட்டுட்டு பேசாமல் பொடியைத் தூக்கி வைச்சிருங்கோ. அவன் அழான். அழுறான். அமுறான் எண்டு கொண்டு இப்படியே விலகியிருந்தியள் எண்டால் எப்ப அவன் உங்களோட அணையிறது? எப்ப சேருறது?” சாந்தி கூறும்போது ‘கேற்’ திறந்து யாரோ வளவுள் நுழையும் அவரங் கேட்டது. 

மகள் மீரா தான் ‘ரியூசன் கிளாஸ்’ முடிந்து ஓடி வந்து கொண்டிருந்தாள். “நாலாம் ஆண்டுக்கே நாளைக்கு நாலு மணித்தியாலங்கள் ‘ரியூசன்’ வைக்கினமே. என்ன படிப்பப்பா இது? கொஞ்ச நாளைக்காவது பொடியளோட சந்தோசமாக இருக்கலாமெண்டு பள்ளிக்கூட விடுமுறையாகப் பார்த்து வந்தன். இதென்னடா எண்டால் பள்ளிக்கூட காலங்களிலை வந்திருந்தால் இன்னும் நல்லாயிருந்திருக்கும் போலை கிடக்கு. 

‘அப்பா! அப்பா!! ‘ரீச்சர்’ கேட்டுக்கொண்டு வரச் சொன்னவா… நீங்கள் எப்ப கொழும்புக்குப் போறியளாம் எண்டு” வீட்டு முன் தாழ்வாரத்தில் சாய்வு நாற்காலியில் படுத்திருந்த, எனது மடி மீது வந்தமர்ந்தவாறே மகள் கேட்கிறாள். 

“ஏனாம் மகள்? ‘ரீச்சரும்’ அப்பாவோட கொழும்புக்குப் ‘பிளேனிலை’ வரப்போகிறாவாமோ? அப்பா கொழும்பிலையிருந்து வரைக்குள்ளேயே போறதுக்குமாகச் சேர்த்து ரிக்கட” எடுத்துக் கொண்டு வந்தனான் எல்லே? பிறகு என்னெண்டு மகள் ‘ரீச்சரையும்’ கூட்டிக்கொண்டு போறது?” 

“இல்லை அப்பா!. ‘ரீச்சர்’கனடாவுக்கு ஆருக்கோ ‘லெட்டர்’ அனுப்ப வேணுமாம். உங்களட்டைத் தந்து போடுவிக்கவாம்” புத்தகப் பையினை அருகிலிருந்த வாங்கிலில் வைத்தவாறே மகள் கூறுகிறாள். 

“இன்னும் ஆறேழு நாளைக்குள்ளை அப்பா போயிடுவார் எண்டு ‘ரீச்சருக்கு’ நாளைக்குச் சொல்லுங்கோ மகள்” என்று நான் கூறியபோது “சரி சரி… அப்பாவும் அக்காவுமாகத் தம்பியைப் பார்த்துக் கொண்டிருங்கோ. நான் ஓடிப்போய் நல்ல தண்ணி அள்ளிக்கொண்டு ஓடி வாறன்” என்றவாறே மீராவுக்கருகில் மகனை இறக்கிவிட்டுச் சாந்தி வெறுங் குடத்துடன் வெளியே சென்று கொண்டிருந்தாள். 

நானில்லாத காலங்களில் நடைபெற்ற மாறுதல்களை மகள் என்னிடங்கூறிக் கொண்டிருந்தாள். “அப்பா எங்கட வீட்டுக்குப் பின்னால் நிண்ட பனை மரங்கள் எல்லாத்தையும் புள்டோசர்’ போட்டு தறிச்சுப் போட்டாங்கள் எண்ட கவலையிலை அம்மா இரண்டு மூண்டு நாட்களாகச் சாப்பிடாமல் அழுது கொண்டிருந்தவ. பனையெல்லாந் தறிச்சு பிறகு பெரிய வரம்பும் போட்டு ‘சென்றியும்’ போட்டதுக்குப் பிறகு அஞ்சாறு மாதங்களாக இங்கை இருக்கப் பயந்து நாங்கள் எல்லாரும் அப்பம்மா வீட்டிலை போயிருந்தம் அப்பா. இந்த ‘சென்றியை’ எடுத்து வல்லிபுரக் கோயிலடியிலை போட்டதுக்குப் பிறகுதான் இப்ப திரும்பவும் எங்க வீட்டிலை வந்திருக்கிறம்”. 

அவ்வப்போது சாந்தி கடிதங்களில் எனக்கெழுதிய விடயங்களைத் தனது அனுபவங்களாக இப்போது மீரா கூறிக்கொண்டிருந்தாள். 

“தம்பி அழேலையோ?” கேட்டுக்கொண்டே நிறை குடத்துடன் சாந்தி வந்து கொண்டிருந்தாள். 

“அக்காவின்ரை கதைகளைத் தம்பியும் கேட்டுக் கொண்டிருந்தான். அதால இண்டைக்கு ஊரைக் கூட்டேல்லை” என்று நான் கூறியபோது “அப்பா, அப்பா வாங்கோ தம்பியோடை ஒழிச்சு விளையாடுவோம்” என்று எனது கைகளை உலுப்பிக் கொண்டிருந்தாள் மகள். 

“இப்ப வேண்டாம் மகள். வெய்யில் தணியட்டும். பின்னேரம் விளையாடுவோம்.” 

“அப்பா! அப்ப இப்ப எனக்கு ஏதாவது சோதனை வையுங்கோ.” 

“ஏன் மகள் உள்ள சோதனைகள் போதாதெண்டா?”

“என்னப்பா சொல்லுறியள்?” 

“இல்லை மீரா. பள்ளிக்கூடத்திலை மீரா தானே முதலாம் பிள்ளை. பேச்சுப் போட்டி, விளையாட்டுப் போட்டி எல்லாத்திலையும் மகளுக்குத் தானே முதலாமிடம்? பிறகுமேன் அப்பா சோதனை வைப்பான்?” 

“சும்மா புகழாதையுங்கோ. சின்னப் பருவத்துக் கெட்டினத்தனமும் ஒரு கெட்டித்தனமே? ஏன் நீங்களும் கூடத்தான் அந்த நாளையிலை ‘ஸ்கொலஷிப் எல்லாம் பாஸ் பண்ணினியள். பிறகு என்ன நடந்தது?” சாந்தி எப்போதும் இப்படித்தான். மகள் முதலாம் பிள்ளையாக வந்தாலும்…. அதற்கு மேலும் ஏதோ கிடைக்க வேண்டும் என்பது போல! 

“ஓகே மகள். இப்ப அப்பா மீராவுக்கு ஒரு சோதனை வைக்கப்போறேன். ஒரு ‘பேப்பரும்’, பென்சிலும் கொண்டு வாங்கோ பார்ப்போம்” என்று நான் கூறியதுமே, தம்பியையும் தள்ளிவிட்டு விட்டு துள்ளித் குதித்தவாறே மீரா எழுந்து சென்று ‘பேப்பரும்’, ‘பென்சிலும்’ எடுத்து வந்து பரீட்சைக்கு ஆயத்தமானாள். 

நான் வைக்கப்போகும் பரீட்சை என்னவாக இருக்கலாம்…. என்ற ஆர்வம் மேலிட தம்பியையும் தூக்கியவாறே சாந்தியும் என்னைப் பார்த்தாள். 

“இப்ப ஒரு எழுத்தை நான் சொல்லுவேன். அதைக் கொண்டு ஒரு ஆணின் பெயரும், ஒரு பெண்ணின் பெயரும், ஒரு இடத்தின் பெயரும், ஒரு பொருளின் பெயரும் எழுத வேணும். சரி தானே மகள்? உதாரணத்துக்கு ‘து’ எண்ட எழுத்தை நான் சொன்னன் எண்டால், ஒரு ஆணின் பெயருக்குத் தம்பியின்ரை பெயரையும் அது தான் துவாரகன் எண்டும், ஒரு பெண்ணின் பெயருக்குத் துளசி எண்டும், ஒரு இடத்தின் பெயருக்கு துன்னாலை எண்டும், ஒரு பொருளின் பெயருக்கு தும்புக்கட்டை எண்டும் எழுதலாம். விளங்குது தானே மீரா?” என்று நான் சொன்ன போது “இதிலை என்னப்பா திறமை இருக்கு? அப்படி என்ன புதுமை இருக்கு?” என்பது போலச் சாந்தி என்னை நோக்கினாள். 

“இப்படிப்பட்ட பரீட்சைகளாலை வளரிளம் குழந்தைகளின் அனுபவங்களை, எண்ணங்களை, அந்தக் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை, பிடிப்புகளை அறிந்து கொள்ள முடியும். எதிர்காலச் சமுதாயத்தை, ஏன் எதிர்கால நிகழ்வுகளைக் கூட ஊகிக்க முடியும்” என்று நான் கூறினேன். 

“அப்ப ஒரு எழுத்தைச் சொல்லுங்கோவன் பாப்பம்” என்றாள் சாந்தி. 

“மீரா பரீட்சைக்குத் தயார் தானே? இப்போ உனக்குத் தரப்பட்டுள்ள எழுத்து கீ அல்ல கி” என்றேன். வானொலியில் பாட்டுக்குப் பாட்டு நாடாத்தும் பி.எச். அப்துல் ஹமீட் பாணியில். 

“என்னப்பா கினாவோ?” என்று கேட்டாள் மீரா.

”ஓம் மீரா கி! கிளிக்கு வாற கி” என்றேன். 

மகள் சிந்திக்க ஆரம்பித்தாள். 

ஏறத்தாழ சாந்திக்கு மட்டுமே கேட்கும் வகையிலே சொல்கிறேன். ‘சாந்தி இந்த எழுத்தை வைச்சுக்கொண்டு சாதாரணமாவுஞ் சிந்திக்கலாம். சர்வதேச மட்டத்திலையும் சிந்திக்கலாம். இதே எழுத்தை கொழும்பிலை ஒரு நாள் ஐந்தாம் ஆண்டு படிக்கிற உன்ரை கொண்ணற்றை மகனுக்கும் குடுத்தவன். அவன் கிளிங்டன். கிளியோபாத்ரா, கிரீஸ், கிற்றார் எனச் சர்வதேச மட்டத்திலை சிந்திச்சு எழுதியிருந்தான். ‘ 

“ரிவி பார்த்து, ரேடியோ கேட்டு வளருகிற பிள்ளையள் அதுகள். அழகு ராணிப் போட்டியையும், கிரிக்கெட் மச்சையும் அன்றாடம் இருந்த இடத்திலேயே இருந்து பார்க்கிறதுகள்… அப்படிச் சிந்திக்கிறதலை என்ன வியப்பு?ஆறேழு வருஷங்களாக, பிறந்ததிலையிருந்தே இருட்டுக்குள்ளேயே வாழுகிற சீவன்கள் எங்கட பிள்ளையள். இதுகளட்டை அப்படியெல்லாம் எதிர்பார்க்க முடியுமா?” என்பது சாந்தியின் அங்கலாய்ப்பு. 

“பாப்பம் இந்த மண்ணிலை படிக்கிற ஒரு முதல்தர மட்டத்திலை இருக்கிற பிள்ளை எப்படிச் சிந்திக்குது எண்டு?” என்றவாறே திரும்பி மகளை நோக்கினேன். 

“சரியா அம்மா?” 

“ஓமப்பா எழுதிப்போட்டேன்” 

“எங்கை மகள் எழுதினதை வாசியுங்கோ பாப்பம்.” 

‘கி’ னாவிலை ஆணின் பெயர் கிட்டு, பெண்ணின் பெயர் கிருஷாந்தி, இடத்தின் பெயர் கிளாலி, பொருளின் பெயர் கிரனைட்டு. 

சாந்தி என்னை நோக்கினாள். ‘இதுவும் சர்வதேச மட்டத்து சிந்தனை தானே?’ என்பது போலிருந்தது அவளது பார்வை. 

நான் அண்ணாந்து வானத்தை நோக்கினேன். பெருமழை ஒன்றைப் பொழிந்து ஓய்ந்திருந்தாலும் மறுபடியும் பெய்வேன் எனப் பயங்காட்டிக் கொண்டிருக்கிறது நீலவானம். 

– வீரகேசரி வாரவெளியீடு, 1995.

– திக்கற்றவர்கள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2005, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

புலோலியூர் ஆ.இரத்தினவேலோன் புலோலியூர் இரத்தினவேலோன், ஆறுமுகம் 1958.12.25 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம், புலோலியூரில் பிறந்தார். சிறுகதை எழுத்தாளர். இவர் புற்றளை மகாவித்தியாலயம், ஹாட்லிக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றுள்ளார். இவர் யாழ் புற்றளை மகா வித்தியாலயம், யாழ் ஹாட்லிக் கல்லூரி மற்றும் யாழ் சென் ஜோன்ஸ் அக்கடமி ஆகியவற்றின் பழைய மாணவராவார். தினகரன் பத்திரிகையில் பிரசுரமான புரளும் அத்தியாயம் எனும் சிறுகதையூடு 1977 இல் இலக்கிய உலகத்திற்கு அறிமுகமானவர். 1977 ஆம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *