தோப்பு உறவுகள்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 13, 2025
பார்வையிட்டோர்: 5,573 
 
 

தனிக்குடும்பமாக பெற்றோருக்கு ஒரே மகளாக வாழ்ந்து, வளர்ந்த மகிளாவுக்கு கூட்டுக்குடும்பத்திலிருந்து வந்த வரன் பிடித்துப்போயிருந்தது.

ஒரு தம்பியோ, அண்ணனோ, ஒரு தங்கச்சியோ அக்காவோ உடன் பிறக்காததால் உறவுகளுக்காக ஏங்கினாள். பெண் பார்க்கும் நாளில் மாப்பிள்ளை வீட்டிலிருந்து ஐம்பது பேர் வந்திருந்தனர். தங்கள் வீட்டிலோ ஐந்து பேர். உறவு வறுமை அவளை வாட்டியது. பண வறுமையை விட உறவுகளற்ற வறுமை மோசமானது என புரிந்திருந்தாள்.

“பாரம்பரியமான குடும்பந்தான். சொத்துப்பத்து எக்கச்சக்கமா கெடக்குது. எல்லாருமே படிச்சுப்போட்டு வந்து  விவசாயம் தான் பார்க்கிறாங்க. ஆனா சாப்பிடறது கூட ஒன்னா உக்கார்ந்து தான் சாப்புடுவாங்க. டவுன்ல வாழற உங்க பொண்ணுக்கு கிராமத்துப் பழக்கம் ஒத்துப்போகுமான்னு கொஞ்சம் ரோசன பண்ணிப்போட்டு சொல்லுங்க. பையன் டவுன்ல படிச்சவன்னாலும் பெரியவங்க பேச்சத்தட்டாமக்கேக்கறவன்” என தரகர் சொன்னதும், அவரிடம் “பொண்ணு பார்க்க வரச்சொல்லுங்க” என மகிளாவின் தந்தை சிவராமன் உறுதியாக சொன்னதைக்கேட்டதால் இன்று பெண் பார்க்க வந்திருந்தனர்.

“சொத்தெல்லாம் என்ற அப்பங்காரன், மாப்பள பையனுக்கு பாட்டன் சம்பாதிச்சது தான். நாங்க அத வெச்சு காப்பாத்தி, எங்களையும் காப்பாத்திக்கறோம்.  அவருக்கு ரெண்டு சம்சாரம். அக்காள மச்சான் நல்லா பாத்துக்கிறாருன்னு தன்னையும் தங்கச்சிக்காரி கட்டிக்கச்சொல்ல, அக்காக்காரியும் தனக்கு ஒத்தாசையா இருக்கட்டும்னு சேரின்னு சந்தோசமா சொல்லப்போயி ரெண்டு பொண்டாட்டிக்காரராயி நாலு ஆம்பளப்பசங்க, நாலு பொம்பளப்புள்ளைகள பெத்துப்போட்டாங்க. நான் எட்டாவது. அதனால தான் எனக்கு பேரு கிட்ணப்பன்னு வெச்சாங்க”

சொல்லி மூச்சிரைத்தவர், சொம்புத்தண்ணீரை மீதம் வைக்காமல் குடித்து விட்டு மீண்டும் பேசினார் மாப்பிள்ளை குமரனின் தந்தையின் தந்தையான தாத்தா கிட்ணப்பன்.

“புள்ளைகளுக்கு நகை போட்டு கண்ணாலம் மூச்சாப்போதும். அப்பெல்லாம் சொத்துக்கேட்டு இப்ப மாதர கோர்டு, கேசுன்னு போக மாட்டாங்க. பொம்பளப்புளைங்களுக்கு பொறக்கிற கொழந்தைகளை பள்ளிக்கொடம் போகற வரைக்கும் அப்புச்சி ஊட்டுலதா வளர்த்துவாங்க. அப்படித்தான் எங்க ஊட்லயும் புள்ளைகங்களோட புள்ளை பசங்க மட்டுமில்லாம அவங்களோட கொழந்தைகளையும் வளர்த்திப்போட்டோம். எல்லாருமே சந்தோசமா, ஒத்துமையா இருக்கறோம். உங்க பொண்ணும் கண்ணாலமாயி வந்து குடும்பத்த பிரிக்க நெனைக்கப்படாது. அப்புடி ஒரு நெனப்பு இருந்துச்சுன்னா இப்பவே எழுந்திருச்சு போயிடறோம். சம்மதம்னா கைய நனைச்சுட்டு போறோம். என்ன சொல்லறீங்க? ” கேட்ட மாப்பிள்ளையின் தாத்தாவை அனைவரும் வியப்பாகப்பார்க்க, யோசிக்காமல் “சம்மதம்” என்றாள் உறுதியுடன் மகிளா.

“அட… தலை இருக்கறப்ப வால் ஆடக்கூடாதுன்னு சொல்லுவாங்க. படிச்ச புள்ளைக புடிச்சமாதர பேசிப்போடுதுக. சரி வாழப்போற பொண்ணு சொன்னது சொன்னதா நெனைச்சு நாங்க கைய நனைக்கிறத நிச்சயமா நெனைச்சுக்கங்க. சேரி கண்ணு என்ற பேரனக்கட்டி சந்தோசமா வாழ்ந்துக்க. மாசி தான் எங்க குடும்பத்துக்கு ராசியான மாசம். வர்ற மாசில கண்ணாலத்த வெச்சுப்போடலாம். என்ன நாஞ்சொல்லறது….?” என பெரியவர் சொன்னதும் அவரது குடும்பத்தினர் கோரசாக ‘சரி’ எனக்கூறி ஆமோதித்தனர்.

திருமணம் முடிந்து மாப்பிள்ளை வீட்டிற்கு சென்ற போது ஊர்வலமாக மாட்டு வண்டியில் அழைத்துச்சென்றதை ஊரே வேடிக்கை பார்த்தது. ‘மாடு மிரண்டால் என்னாவது?’ எனும் பயம் மகிளாவுக்கு உச்சத்தில் இருந்ததால் அச்சத்தில் அவளுடைய முகம் வெளிறிப்போயிருந்தது. 

நடு இரவு கடந்தும் சில பெரியவர்கள் தூங்காமல் பேசிக்கொண்டே இருந்தார்கள். தனது கணவன் குமரனும் அவர்களுடன் பேசிக்கொண்டே முதலிரவை மறந்து, புது மனைவியை மறந்து உறங்கிப்போனதைக்கண்டு அதிர்ச்சியடைந்தாள் மகிளா. பின் தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தனியாக ஏக்கத்துடன் படுத்தவளை தூக்கம் ஆட்கொண்டது.

காலையில் தனது மாமியார் சுந்தரவள்ளியுடன் சமையல் கட்டில் உதவினாள். காலையில் டிபனுக்கான சமையல் வேலையில்லை. மதிய உணவுக்கான ஏற்பாடு என்பதை பின்னர் தான் தெரிந்து கொண்டாள்.

“காத்தாளச்சோறு கம்மங்கூழு, ராயிக்கூழு தான். மோரூத்தி வெங்காயம் கடிச்சு குடிச்சுப்போடு” என மாமியார் கூறிய போது பசி வயிற்றைக்கிள்ளியதால் வாங்கி குடித்து விட்டாள். 

ஆடு மேய்க்க ஒருவர், மாடு மேய்க்க ஒருவர், வயலுக்கு நீர் பாய்ச்ச ஒருவர், விளைந்த பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல ஒருவர் என பெரியவர் சொன்ன வேலைகளை மறுக்காமல் அனைவரும் செய்தனர்.

“என்ன கண்ணு சந்தோசமாத்தானே இருக்கறே…? உன்ற அத்த சோறாக்கட்டும். நீ போயி மாட்டுக்கு பருத்திக்கொட்டையாட்டி தாளில ஊத்திப்போட்டு வந்துரு. அப்பத்தா பால்ல நெறைய வெண்ணை வருந்தாயி. அதக்காய்ச்சி கொழந்தைகளுக்கு நெய் குடுத்தம்னாத்தா நல்லா வளருவாங்க. சின்ன வயிசுல சத்தா குடுத்து வளத்துனாத்தா கண்ணாலமாயி நாலு கொழந்தைங்களைப்பெத்தா ஒடம்பு  தாங்கும்” சொன்னவர் மருமகள் கொடுத்த கம்மங்கூழை வாங்கிக்குடித்து ஏப்பம் விட்டார்.

‘நாலு கொழந்தைகளை பெத்துக்கிறதுக்கு நாங்க ஒன்னு சேர நீங்க விட்டாத்தானே…..’ என தனக்குத்தானே பேசிக்கொண்டு பருத்திக்கொட்டை ஆட்டச்சென்றவளைக்காணாமல் தேடி வந்தாள் மாமியார் சுந்தரவள்ளி.

“என்ன புது மருகளே…. நீ டவுனுப்பொண்ணுங்கிறதை யோசிக்காம அந்தக்கெழடு உன்னை பருத்திக்கொட்டை ஆட்டச்சொல்லியிருக்குது பாரு. நீ இந்த ஆட்டாங்கல்லக் கூட கண்ணுல பார்த்திருக்க மாட்டே. சரி கொஞ்சந்தள்ளு, எப்புடி ஆட்டறதுன்னு சொல்லிக்கொடுக்கறேன்….” என சொன்ன மாமியாருக்கு இடம் கொடுத்து ஒதுங்கி நின்றாள் மகிளா. ஆட்டிக்கொண்டே மருமகளிடம் பேச்சுக்கொடுத்தாள் மாமியார்.

“நேத்தைக்கு ராத்திரி ஒன்னுமே நடக்கலைன்னு கவலையா கண்ணு. வளுசப்புள்ளைக்கு இருக்காதா பின்னே. அக்னி வெயிலுக்கு ரோசாப்பூ வாடுன மாதர மூஞ்சி வாடிக்கெடக்குது பாரு. எனக்கும் உன்ற மாமனாருக்கும் கண்ணானமான பின்னால மூணு மாசம் மொகங்குடுத்தே நாம் பேசுல. கூச்சந்தான். எனக்கு மட்டுமில்ல, அவருக்குந்தான். அப்பறம் என்ற மாமியாக்காரி தண்ணி வாக்கற போது முதுகு தேயச்சுடச்சொன்னாங்க. அப்படியே கூச்சம்போயி அப்பறந்தா நடக்க வேண்டியது நடந்து ரெண்டு கொழந்தைக பொறந்தாங்கன்னு வெச்சுக்கவே…. நீ கவலப்படாதே எல்லாமே நல்லாவே நடக்கும். ஆனா மெதுவாத்தான் நடக்கும். அவனோட அப்பனுக்கு மாதரியே அவனுக்கும் கூச்ச சுபாவந்தான்” கேட்கவே ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது மகிளாவுக்கு. கூச்சம் என்பதை விட பல பேர் கூட இருப்பதே காரணம் என்பதைப்புரிந்ததால் ஒரு முக்கிய முடிவை எடுத்தாள்.

“நா ஊருக்கு போகனம்…”

“போயிட்டு வா….”

“அப்ப நீங்க கூட வரலயா….?”

“நா என்னத்துக்கு வரோணும்….? இங்க தோட்டத்துல ஏகப்பட்ட வேல கெடக்கு. இந்தப்பட்டம் வெதைக்காம விட்டா ஒரு வருசம் வீணாப்போகும்… அதையும் மீறி வந்தா தாத்தா திட்டுவாரு….”

“அப்ப நான் வீணாப்போனா பரவாயில்லையா….?”

“நீ…நீ… எதுக்கு வீணாப்போறே…?”

“நீங்க நிஜமாலுமே ஒன்னுந்தெரியாத வெகுளியா….? இல்ல வேணும்னே பேசறீங்களா….?”

“எனக்கும் தெரியும். சீக்கிரம் கொழந்தை பெத்துக்கனம்னு ஆசை இருக்குது. என்ற அண்ணிக்கு கண்ணாலமாயி நாலு வருசமாயி ஒன்னங்கொழந்தை கெடைக்கல. அதுக்கு முன்ன நமக்கு பொறந்தா கவலப்படுவாங்கில்ல…. அதனாலதான்….”

“உங்க அண்ணனும் உங்கள மாதிரி இருந்தா கொழந்த எப்படி பொறக்கும்? இன்னும் பத்து வருசமானாலும் பொறக்காது….” வெறுப்பாக பேசினாள்.

“வாய மூடு. அபசகுனமா பேசாதே….” என குமரனும் கோபமடைந்தான்.

அடுத்த நாள் யாரிடமும் சொல்லாமல் பேருந்திலேறி தந்தை வீட்டிற்குச்சென்று விட்டாள் மகிளா. தனியாக தன் மகள் வந்திருப்பதைக்கண்ட பெற்றோர் பதறிப்போயினர். 

கட்டிலில் போய் குப்புறப்படுத்துக்கதறி அழுத மகளைத்தேற்றப்போய் தோற்றுப்போயினர். அழுகை நிற்க பல மணி நேரம் ஆனது.

“கூட்டுக்குடும்பம் நல்லது… கூட்டுக்குடும்பத்துல குதூலகமா வாழலாம்னு சொல்லிச் சொல்லியே என்னை வளர்த்துனீங்க. கூட்டுக் குடும்பம்னா கூட்டமா வாழற குடும்பம், குதூலகமா இருக்கும்னு நான் நெனைச்சிட்டேன். புருசன் பொண்டாட்டியக்கூட கூடாம விடற குடும்பம்னு இப்பத்தான் தெரிஞ்சுகிட்டேன்… செக்ஸ் கெடைக்கலேன்னு நான் வெக்ஸ் ஆகல. இயல்பா, சந்தோசமா இருக்க முடியலேன்னு தான் கவலைப்படறேன்” மகளின் நியாயமான பேச்சைப் புரிந்து கொண்டனர்.

அடுத்த நாள் மிகவும் பழைமையான கட்டை வண்டி போன்ற மேற்கூரை இல்லாத ஜீப் வந்து நின்றது. கணவன் குமரன் தன்னைப் பார்க்க ஓடி வந்து விட்டான் என நினைத்தவளுக்கு அதிர்ச்சி. ஐந்து பேர் பயணம் செய்யும் வாகனத்தில் பத்துப்பேர் வந்து இறங்கினர். ‘இப்போது விவசாய வேலை கெடாதா?’ என நினைத்துக் கொண்டாள்.

ஓடி வந்த மாமியார் “ஏங்கண்ணு என்னத்துக்கு சொல்லாமக் கொள்ளாம நீ தனியா ஒருத்தி மட்டுலும் பஸ் ஏறி வந்தே…? குடும்பமே பயந்து நடுங்கிப் போனமாக்கும். ஊர்ல எங்கள நாலு பேரு என்ன நெனைப்பாங்க? காலங்காலமா காத்து வெச்ச மரியாத காத்துல பறந்து போயறாதா…? நீ மட்லும் தனியா பஸ் ஏறுனதப்பாத்துட்டு ஊரே நம்ம ஊட்டுக்கு துக்கம் வெசாரிக்க வந்த மாதர வந்து போட்டாங்க. என்ற பையன் கொமரன வெசாரிச்சேன். ஏண்டா அவள ஏதாச்சும் வெசு போட்டயான்னு…. ஒன்னாச்சேர்லேன்னு வெசனமிருந்தா என்ற குட்ட ஒரு வார்த்த சொல்லகயிருக்கலாமில்ல…” பதில் எதுவும் பேசமுடியவில்லை மகிளாவாள். மாமியாரின் அனுபவமற்ற பேச்சால் துக்கம் தொண்டை அடைத்தது.

மகிளாவின் அப்பா சிவராமன் சத்தமாகப்பேசினார். “கூட்டுக்குடும்பத்துக்கு என்னோட பொண்ணு வாழ்க்கைப் படாணும்ங்கிற ஆசைல தான் நான் உங்க வீட்டுக்குப் பொண்ணு குடுத்தேன். கூடாம தடுக்கிற கும்பமா இருக்கும்னு நினைக்கவே இல்லை. கூட்டுன்னா கூட்டமா வாழறதில்லை. மனசு ஒன்னு கூடி வாழறது. அதப்புரிஞ்சுக்கங்க மொதல்ல. அவங்களுக்கு குழந்தை பொறந்தாத்தான் இவங்களுக்கு பொறக்கோணும். அவங்க சாப்பிடாம இவங்க சாப்பிடக்கூடாதுன்னு கண்டிசன் போடறதா இருந்தா என்னோட பொண்ணு உங்க கூட வர மாட்டாள்….” என ஒரே போடாகப் போட்டதால் மொத்தப் பேரும் ஆடிப்போயினர்.

கண்களில் கண்ணீர் பொங்க அழுதவாறு, தன் சேலைத்தலைப்பில் கண்களைத் துடைத்தவாறு மகிளாவின் தாய் சிவகாமியும் தன் பங்கிற்கு பேசினாள்.

“வயசானவங்க பேச்ச சின்னவங்க கேக்கனம். அதுக்காக புருசன் பொண்டாட்டி எப்ப பேசோணும், எப்ப பேசக்கூடாதுன்னு சொல்லற அளவுக்கு இருக்கப்படாது. நானும் நாலு நங்கை கொழுந்தி இருக்கற வீட்டுக்குத்தான் வாழ்க்கைப்பட்டேன். நெறைய விசயத்துல ஒத்துப்போகலை. அதனால தனியா வந்துட்டோம். நம்ம பொண்ணாவது பெரிய குடும்பத்துல ஒன்னா வாழட்டும்னு நெனைச்சோம்…” மீண்டும் அழுதாள்.

“என்னை மன்னிச்சுப்போடுங்க. எல்லாத்துக்கும் நாந்தான் காரணமாயிட்டேன். காலங்காலமா இருந்த பழக்கத்த மாத்தப்படாதுன்னு பெரியவன் பொண்டாட்டி புள்ளப் பெத்ததுக்கப்பறம் சின்னவன் பெத்துக்கட்டும்னு சொன்னது தான் தப்பாப்போச்சு. இப்ப டவுன்ல பெரியவனுக்கு முன்னாலயே சின்னவனுக்கு கண்ணாலம் பண்ணறாங்கன்னு சொன்னாங்க. அப்பறம் சோத்துப் பழக்கத்துலயும் என்ன மாதிரியே பேரம் பேத்தியும் இருக்கோணும்னு சொன்னதும் தப்புத்தான். பழசு மாறக்கூடாதுன்னு ஊரே கரண்டுல வெளக்கு எரிச்சும் வெளக்கெண்ணைல தான் இருட்டுக்கு வெளக்குப்போடோணும்னு சொன்னதும் தப்புத்தாங்கண்ணு” என கூறியவருக்கு வேர்த்ததால் துண்டை எடுத்து துடைத்துக்கொண்டார்.

“டவுன்ல உப்பசத்துக்கு குளுகுளுன்னு இருக்கற மாதர மிசினு வந்திருச்சாமில்ல. அதக்கொஞ்சம் நம்ப ஊடு பூராம் போடோணும். இன்னைக்கே போயி கரண்டு வாங்கிப்போடறேன். சின்னஞ்சிறுசுக எப்புடி இருக்கோணுமோ அப்புடியே இருந்து போடுங்க. பூராத்தையும் மிச்சம் பண்ணி தலைக்கா கட்டீட்டு போறோம்…?” கணவனின் தாத்தா பேசியதைக்கேட்டு மகிளாவின் மனம் பூரித்ததால் ஓடிச்சென்று ஒரு டம்ளரில் பூஸ்ட் போட்டுக்கொடுத்ததை வாங்கிக் குடித்தவர், “இதே காப்பித் தண்ணி நம்ம மாட்டுப்பால்ல போட்டீன்னா அமிர்தம் மாதரையே இருக்கும்” என சொன்னதும், “நீங்க அமிர்தம் குடிச்சிருக்கீங்களா தாத்தா?”  என மகிளா கேட்டதும், சற்று யோசித்தவர், “என்னைய இது நாள் வெரைக்கும் ஆரும் எதுத்துப்பேசுனதில்ல. ஆனா நீ இப்பப்பேசுனது எதுத்து இல்ல. இப்படி தைரியமா மத்தவங்க கேட்டிருந்த நானும் இந்த ஒலகத்துலயே பெரிய அறிவாளியா இருந்திருப்பேன். பழைய சோறாவே காலந்தள்ளியிருக்க மாட்டேன். ஒன்னி நீ என்னை என்ன வேணும்னாலும் கேளு கண்ணு, அப்பத்தான் என்ற புத்தி வளருமாக்கும்” எனக் கூறி சிடு, சிடு வென இருந்த அனைவரின் முகத்திலும்  சிரிப்பை வரவழைத்தார் தாத்தா கிட்ணப்பன்.

கே.ஆர்.வேலுச்சாமி ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *