மேற்குவீடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 21, 2025
பார்வையிட்டோர்: 1,559 
 
 

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மேற்குப் பார்த்த வீடுகளுக்கு மாலையில்தான் வெளிச்சம் அதிகம் வருகின்றது. சூரியன் மறைவதை வீட்டிலிருந்து நன்றாகப் பார்க்க முடியும். காரை உதிர்ந்த சுவர்களைப் பிடித்த படி பத்மா பல நாள் சூரியன் மறைவதைப் பார்த்தபடி இருக்கிறாள். இப்போது நெடுநேரம் வரை வெயிவடிக்கிறது. சூரியன் மெல்லத் தணிந்து தணிந்து மேற்கில் முங்கி மறைகிறது. இவ்வளவு பெரிய வீட்டைக் கட்டிய தாத்தாக்களை பத்மா பார்த்ததில்லை. கட்டுக் கட்டாகப் பிரிந்து போய்க் கொண்டி ருக்கும் மேற்கு வீட்டில் பதினெட்டு அறைகள் இருந்தன. அறைகளில் விளக்கு வைப்பது கூட இல்லை. பகலில் கூட அதில் இருட்டு ஒழுகிக்கொண்டேயிருக்கிறது. சுவர்களில்கூட இருட் டின் பிசுபிசுப்பு அப்பிப்போயிருக்கிறது. ஆள் கதவைத் திறக்கும் சப்தம் கேட்டு இருள் திரும்பும். குமிழ்ப்பிடி போட்ட கதவுகள். கனவின் ஊடே நடந்து போவது போல அறைகளுக்குள் நடப்பாள் பத்மா. ஒற்றை ஜன்னல்கள் கொண்ட அறை. எல்லா அறைகளும் காலியாக இருந்தன. உடைந்த மரஜாமான்கள், சாக்குகள் கிடக்கும் அறை. பெண்கள் உபயோகித்து வந்த கீழ்ப்பக்க அறைகளில் பிரசவித்த பெண்ணின் உடல் வாடை எப்போதுமிருக்கும்.

அந்த வீட்டில் நிறைய பெண்கள் இருந்தார்கள் முன்பு. அறை களில் அவர்கள் ஓடுவதும் சிரிப்பதும், கீழ்ப்பகுதியெங்கும் கேட்கும். பெரியக்கா, அவளின் பிள்ளைகள், சின்னக்கா எல் லோரும் இருந்து புழங்கிய அறைகளில் ஆள்தடம் இல்லாது போய் உத்தரத்தில் இருந்து மரத்தூசிகள் விழுகின்றன. வண்டுகள் உத்தரங்களைத் துளைக்கின்றன. வண்டின் இடைவிடாத ரீங்காரம் கேட்டுக்கொண்டேயிருக்கிறது. எல்லாப் பெண்களும் பிரிந்துபோனார்கள். குட்டையாக, பெரிய உதடுகளோடு உள் அறையிலே சுற்றிச் சுற்றி வந்த சின்னக்கா கூடப் பிரிந்துபோனாள். அவளின் பழைய தாவணிகள் வெளுத்துப் போய் இப்போதும் கொடியில் கிடக்கின்றன. சின்னக்கா இருந்த அறையெங்கும் மருதாணி உதிர்ந்து கிடக்கிறது. மருதாணி பூசிய விரல்கள் கொண்ட சின்னக்காவை ஹோட்டலில் வேவை செய்யும் சுப்பையாவுக்கு கட்டிக் கொடுத்துப் போனார்கள். கல்யாண நாளில் அவள் விரல்களுக்கு மருதாணி வைக்கவில்லை. மேற்கு வீட்டின் தனி அறையில் பெத்தையா பெத்தையா என அய்யாவை நினைத்து அழுதாள், நாற்பது மாடுகள் நின்ற தொழுவம் வெறிச் சோடிப் போனது. கல் தரைகளில் மூத்திரக் கறை மாறவில்லை. மாடுகள் கழுத்து திருப்பி அசைபோட்டபடி அப்படியே கூளம் அள்ளாமல் கிடக்கிறது. பெத்தையாவோடு எல்லாமும் போய் விட்டது. வேலையாட்கள் வருவதில்லை. தொழுவத்தில் மிஞ்சிய வைக்கோல் போரைக் காற்று இழுக்கிறது. காற்று கண்டவுடன் பழுத்த வைக்கோல் பறக்கத் தொடங்குகிறது. சுழல் காற்று தினமும் வருகிறது. சிறு புள்ளியில் சுழன்று சுழன்று பெரிதாகிக் காற்றின் கைகள் வைக்கோல், சருகு, தட்டைகள் எல்லாவற்றையும் கருட்டி வீட்டு உயரத்துக்குத் தூக்கி எறிகின்றது. காற்றின் சப்தம் நாளெல்லாம் கேட்கிறது.

மேற்கு வீட்டிவ் நாச்சியாரம்மாவும் அவள் மகள் பத்மாவும் மட்டுமே இருந்தார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துப் பேசிக்கொள்வது கூட இல்லை. நாச்சியார் கிழக்குப் பார்த்த சமையல் அறைவாசலில் தலை வைத்துப் படுத்தே கிடக்கிறாள். வீட்டில் நிழல் போல அலையும் பத்மாவைப் பார்க்கும்போது தாச்சியார் அழுவாள். மாலையில் வீட்டின் அறைகள் வெளிச்சம் கொள்ளத் தொடங்கும். அறை வாசல்களைத் திறந்து வைப்பாள் பத்மா. யாரும் வருவதில்லை வீட்டுக்கு. அழிந்துபோன வீடுகளுக்கு யார் வருவார்கள். பத்மா மாலையில் தொழுவத்தில் போய் நின்றுகொள்வாள். குருவிகள் வரத் தொடங்கும். எண்ணிக்கையற்ற குருவிக்கூட்டம். விரல் அளவில் சிறகு கொண்ட குருவிகள் சப்தமிடுகின்றன. தொழுவமெங்கும் சுற்றித் திரிகின்றன. புடலைப் பந்தலில் நின்று பாடுகின்றன. அவள் குருவிகள் முன் போய் நிற்பாள். அவனைச் சட்டை செய்யாது பறக்கும் குருவிகள். அச்சு ஒடிந்த கூண்டு வண்டி மேவேறி குருவிகள் ஏன் கத்துகின்றன. பூளைக் குட்டிகள் வண்டியினுள் பதுங்கி வெறிக்கின்றன. வெயில் தொழுவம் நிறைய வருகிறது. எண்பத்தி எட்டு வயதாகிய பெரிய அவ்வா நேற்று செத்துப் போனாள். தாச்சியார் ஆண்கள் போன பின்பு இருட்டும்போது துக்கம் கேட்கப் போனாள். பெரிய அவ்வா இருந்த வீட்டில் கூட ஆட்கள் இல்லை. ஆண் பிள்ளைகள் வெளியூர்கள் போய் விட்டார்கள். வீடெங்கும் சாம்பல் வாடையடிக்கிறது. நாச்சியார் போனபோது வள்ளியம்மாள் இருந்தாள். நாச்சியாரைக் கண்டதும் அவள் சப்தமிட்டு அழுதாள். பெரிய அவ்வா, பெத்தையா இருந்தவரை மேற்கு வீட்டின் அறைகளில் தன் இஷ்டம் போலத் திரிந்தாள். நாச்சியார் ஆண்கள் வரும் சப்தம் கேட்டுத் தலை நிமிர்ந்தாள். வந்தவர்கள் நாச்சியாரிடம் எதுவும் கேட்கவில்லை. ஈரத்தலையோடு வந்தவர்கள் மேற்கு வீட்டை வெறித்துப் பார்த்தார்கள்.

நாச்சியாருக்கு நினைவிலிருந்து எதுவும் மறையவில்லை. நடமாட்டம் குறைந்துபோன இப்போதும் தெரு பழைய சாயலில்தான் இருக்கிறது. வேப்ப மரங்களுக்கு அழிவில்லை. நாலு பெண்கள் நின்று ஆட்டும் ஆட்டு உரல், வேப்பம் பூக்கள் உதிரக் கிடக்கின்றது இன்றும். காவி பூசிய வீடுகள். கல் திண்ணை களுக்கு அழிவில்லை. யானை முகம் கொண்ட வளைவுகள். கம்பி போட்ட முகப்பு. மேற்கு வீட்டின் முன்னால் இரண்டு கல் திண்ணைகள் இருந்தன. பெரிய திண்ணைகள். எப்போதும் அதில் ஆள் கிடப்பார்கள். மாடு வாங்க வந்தவர்கள். வியாபாரிகள், தரகர்கள், வேலையாட்கள். சிலர் உறங்குவார்கள். கல்திண்ணை யில் உறக்கம் ஊற்றைப் போலப் பெருகிவரும். சுண்ணாம்பால் வரையப்பட்ட ஆடு புலி ஆட்டக் கட்டத்தில் ஆடுகள் புலியை மறைக்கும். வீட்டின் உள்ளேயிருந்து வெல்லமும் தண்ணீரும்” திண்ணைக்குப் போய்க்கொண்டிருக்கும். அடைபடாத ஆடு. புலிகளின் ஆட்டம் இரவெல்லாம் நடக்கும். நாச்சியார் திண்ணையில் எட்டிக் கூப்பிடுவாள்.

‘வந்து சாப்பிட்டுப் போயி விளையாடுறது. பொம்பளைகளுக்கு வேற ஜோலிக இருக்குல்ல’

இந்தப் பொய்க் கோபத்தைக் கேட்டுச் சிரித்தபடி ஆண்கள் உள்ளே போவார்கள். பித்தளை அண்டாக்களில் தண்ணீர் நிறைந் திருக்கும். நீண்ட பந்திகளில் உட்காருவார்கள். சாப்பாட்டைப் போட்டபடி நகரும் நாச்சியாரின் கைகள். பேச்சரவமற்ற அமைதியில் சாப்பாடு நடக்கும். தண்ணீர் குடிக்கும் சப்தம் கேட்கும் அமைதி, கடைசி ஆளாக பெத்தையா வருவார். பச்சைக்கட்டம் போட்ட சட்டையும் தலைப்பாகையோடு. ஆட்கள் எழுந்து நிற்பார்கள். பெத்தையாவின் சிரிப்பில் அவர்கள் உட்கார்ந்து கொள்வார்கள்.

பெண்கள் பின் அறைகளில் எதற்கெடுத்தாலும் சிரித்தார்கள் அப்போது.மொட்டை மாடியில் ஏறி ஊரின் புறவெளியைப் பார்த்தார்கள். காற்று ஊரைச் சுற்றும் பனைகள் நிற்கும். பிரசவத்துக்கு வரும் மகளைக் கைத்தாங்கலாகத் தெருவில் கூட்டி வருவாள் நாச்சியார். மாலையிலும் அவர்கள் கோவிலுக்குப் போவார்கள். கரையில் இருந்த கோவிலில் பேச்சியம்மன் இருந்தாள். பருத்த வயிறும், வீங்கின கால்களுமாக நடக்கும் மகள் நாச்சியாரின் தோளைப் பிடித்துப் போவாள். ஆட்கள் பலரும் பார்ப்பார்கள் அதை, மாமரங்கள் அடர்ந்த பாதை. பூவாடையடிக்கும். அசைந்து அசைந்து கோவிலுக்குப் போவார்கள். கரைமேல் நிற்கும்போது மூச்சு வாங்கும். விறகுக் கட்டைகளை இழுத்துவரும் கீழத்தெருப் பெண்கள் விலகிப் போவார்கள். நாச்சியார் அவர்களிடமும் ஸ்நேகமாகவே நடந்தாள். வீடு திரும்பிய இரவில் மகளின் கால் நாச்சியார் மடியில் இருக்கும். விரல்களுக்கு சொடக்கு எடுத்து, தைலம் தேய்த்துவிடுவாள்.

பிரசவித்த பெண், அறையின் ஒற்றை ஜன்னல் வழியாக வரும் வெயிலைப் பார்த்தபடியிருப்பாள். பிள்ளை வெயிலைக் கண்டு சிணுங்கி முழிக்கும். அறை எங்கும் எப்போதும் சாம்பிராணிப் புகை போட்டு வாடை நிரப்புவாள் நாச்சியார். நாச்சியாரை எதிர்த்துச் சண்டையிட்டு முதலில் பிரிந்துபோனது அவளின் பெரிய மகள்தாள். பெத்தையா இறந்த வீட்டிலே அது நடந்து போனது. தெக்குக் காட்டை விற்று ஊரோடு இருந்த உறவை அறுத்துப்போனாள் பெரிய மகள்.

ஆழிகள் ஆடி வரும் காலம் வரும். ஆழிப் பொம்மைகள் ஆடி வருவார்கள். ஆண் பெண் பொம்மைகள். வைக்கோல் தலை கொண்ட பொம்மைகள். உலை மூடியால் தொப்பி அணிந்த பொம்மைகள். இருட்டில் வீட்டின் முன் வந்து ஆடும். ஆடும் ஆழிகளின் உள்ளே இருப்பவனின் கண் வீட்டின் உள்புற மெங்கும் அலையும். ஆழிகள் தெரு சுற்றி வருவார்கள். ஆழிகள் போனதும் ஓலைப் பெட்டியில் விளக்கு எடுத்து வரும் கீழத் தெருப் பெண்கள் வருவார்கள். ஓலைப் பெட்டியில் நெல் நிரப்பி விளக்கு எடுத்து வருவார்கள். கூட்டமாக விளக்கு அசைந்து வருவதை பத்மா பார்ப்பாள். வீட்டின் முன் வரும்போது எண்ணெய் ஊற்றுவார்கள் தாச்சியாரும் அவளும். ஆழியாடிகள் காலையில் பின் வாசலுக்கு வருவார்கள். மீசை மழித்த சின்னப் பையனும், வயதான ஆளும் இரண்டு ஆழிகள்.

அவர்கள் கையில் நார்ப்பெட்டியிருக்கும். வாசலுக்கு வந்து சப்தமிடுவார்கள். ஆழியாடிகள் சாமியோவ்… பெண்கள் பின்கட்டில் நிறைந்து போவார்கள். மீசை மழித்து நின்ற பையன் அவர்களைக் கண்டு சிரிப்பான். பெண் ஆழி போல ஆடுபவன் அவன். அவன் மேல் பெண்களுக்குப் பிரியம் உண்டு. அவன் பெட்டிக்கு நிறைய தானியம் குவியும், அவனுக்கு மட்டும் பண்டங்கள், ரூவாய்கள் கிடைக்கும், ஆழியாடிகள் மேற்கு வீட்டில் தானியம் வாங்கிப் போவார்கள். அவர்கள் நடக்கும் போது கூட அடி தப்பாமல் ஆடிப்போவது போலவே தெரியும். மேற்கு வீட்டுக்கு லைட் கிடையாது. பெத்தையா இருந்த வரையிலும் எண்ணெய் விளக்குகள்தான். விளக்கு மாடங்கள் இருந்தன. சின்ன அகல் விளக்குகளில் எண்ணெய் விட்டு விளக்கு வைப்பார்கள். பாதி இருளும் வெளிச்சமும் கலந்து தெரியும் மஞ்சளும் இருட்டுமாக அறை இருக்கும். அதன் ஊடே கடந்து வரும் ஆட்கள் விநோதத் தோற்றம் கொள்வார்கள். வீட்டில் கிடந்த ஏழெட்டுப் பூனைகள் வாலைச் சுருட்டி மடக்கிச் சுவரோரமாக அலையும். பெத்தையாவின் சாவுக்கு ஏராளமான கூட்டம் வந்தது. கறுப்புக் குடைகளோடு வெயிலில் வந்திறங்கும் ஜனங்கள். தெரு கொள்ளவில்லை. பெத்தையாவோடு வீட்டின் நிலை சரிந்துபோய்விட்டது. பூனைகள் கூட வெருகுகள் ஆகிப்போய்விட்டன என நாச்சியாருக்குத் தோன்றும்.

அந்த வீட்டில் வளர்த்த பூனைகளுக்கு உடம்பில் சாம்பல் நிறமிருக்கும். பச்சை நிறக் கண்கள். பெத்தையா போன பின்பு அறைகள் காலியாயின. பொட்டைப் பூனை நிறைய குட்டி போட்டது. பூனைகள் அறை அறையாக அலைந்தன. இரவில் சில பூனைகள் விட்டிலைப் பிடித்துத் தின்பதை நாச்சியார் பார்த்தாள். பொட்டைப் பூனை குட்டிகளைக் கவ்வி ஓரிடம் விட்டு மற்றோர் இடம் எனத் தூக்கி அலைவதைப் பார்த்த நாச்சியார் மாட சாமியிடம் சொல்லிக் குட்டிகளைத் தூக்கிப் போய்க் கிணற்றில் போடச் சொன்னாள்.

அவன் பூனைக்குட்டிகளைச் சாக்குப்பையில் அள்ளிப்போனான். பூனை இரவில் தட்டளிந்தது. சப்தமிட்டது. ஆள் இல்லாத வீட்டில் பூனை சப்தமிடுவது அகோரமாக இருந்தது. பாத்திரங் களை உருட்டியது, நெடுநாள்களுக்குப் பின்பு கரைப் பக்கம் போனபோது சாம்பல் நிற வெருகுப் பூனைகள் அலைவதை நாச்சியார் கண்டாள். மேற்கு வீட்டின் பூனைக் குட்டிகள் வெருகுகளாகிப் போயின.

பெத்தையாவின் சாவுக்கு நாச்சியாரின் அய்யாவும் வந்திருந்தார். பல காலமாகப் பேச்சுவார்த்தை அற்றுப்போன அய்யாவின் முகத்தை நாச்சியார் பார்த்தாள். சுருக்கங்கள் எல்லாம் துக்கம் உறைந்து நின்றன. கண்ணின் கீழ் நீர்கட்டிப்போயிருந்தது. யார் சொல்லிவிட்டார்கள் எனத் தெரியவில்லை. அவர் நாச்சியார் பக்கத்தில் வந்து நின்றார். அவள் எதுவும் பேசவில்லை. பெத்தையாவைத் தூக்கும்போது அவர் அழுதது மட்டும் நாச்சியாரால் தாங்க முடியவில்லை. உள் அறைக்குள் போய் அய்யா… அய்யா… என அழுதாள்.

மேற்கு வீட்டுக்கு வருபவர்கள் குறைந்துபோனார்கள். சின்னக்கா வும் சண்டையிட்டுப் போனாள். போலீஸ்காரனைக் கட்டிய பத்மா உருக்குலைந்து வந்தாள். நாச்சியாரின் மேற்கு வீடு பாழ்பட்டது. பத்மா புருஷனை விட்டுப் பிரிந்து வந்தாள். பதினெட்டு வயசுக்குள் முடிந்துபோன பத்மாவின் கல்யாண கதியை நினைத்து நாச்சியார் புலம்புவாள். வெயில் காலத்தில் வீட்டின் காரைகள் உதிரத் தொடங்கின. பத்மா அம்மை கண்டு படுத்தாள். உடல் எங்கும் முளைத்தது வேனல் கொப்பளங்கள். அரற்றினாள். அறைகளில் பத்மாவின் முனங்கல் கேட்டபடி யிருந்தது. தாங்க முடியாத வெக்கை புகுந்தது எங்கும். மழையே யில்லை. பத்மாவின் உடம்பில் அம்மைத் தழும்புகள் மிஞ்சின. யாராவது தன்னைப் பார்க்க வர மாட்டார்களா என பத்மா நினைத்துப் புரளுவாள். வெக்கை தாங்காது உத்தரத்தில் பதுங்கிய பூரான்கள் செத்து விழுந்தன. வெயிலின் வெறிச்சி கொண்ட நாய்கள் இரவில் கூடக் குலைத்து உறக்கம் கலைத்தன.

நீண்ட நாள்கள் வராதுபோன ஆழியாடிகள் பகலில் ஒரு நாள் வந்தார்கள். ஆழியாடும் ஆள்கள், அவர்கள் குடும்பம் எல்லாமே வந்தது. ஆழியாடியின் பெண், சிறு பிள்ளையைக் கையில் வைத்து நின்றுகொண்டிருந்தாள். நாச்சியார் பின்வாசலுக்குப் போய் பத்து ரூவாயும் சேலையும் கொடுத்து வந்தாள். ஆழியாடிகள் அந்த ஊரைப் பிரிந்துபோனார்கள். ஆழியாடிகளும் கலைந்துபோன பின்பு ஊர் மீள்வது முடியாது என நாச்சியார் நினைத்தாள். ஆழியாடிகள் அற்ற ஊரில் வெயில் உக்கிரம் கொண்டு வீசியது. சுவர்கள் பற்றி எரிந்தன. மரங்கள் உயிர்பற்றி நின்றன.

மேற்கு வீட்டின் தானிய அறை காலியானது. பொருள்கள் ஒவ் வொன்றாக விலைபோய்க் கொண்டிருந்தன. வீட்டில் இருந்த ஆள் உயரக் கண்ணாடியை துணி விற்கும் ராவுத்தர் வாங்கிப் போனார். அவருக்குப் பல காலமாகவே அந்தக் கண்ணாடியின் மேல் பிரியமிருந்தது. பெத்தையா அதை வாங்கிவந்த நாளில் பெண்கள் தங்கள் முழு உருக் கண்டு சந்தோஷித்தார்கள். சடங்காகியிருந்த பெண் அதன் முன்னால் நின்று சடை அவங்காரம் செய்து கொள்வாள். ராவுத்தர் அதைக் கேட்டதும் நாச்சியார் மறுக்காமல் கொடுத்தாள். ராவுத்தர் அதை ஒரு துணியில் சுற்றி சைக்கிளில் கொண்டு போனார். வீடு போய்ச் சேரும்வரை ராவுத்தர் கொண்ட சந்தோஷம் அளவில்லாமல் இருந்தது.

பத்மாவின் உடலில் இருந்த தழும்புகள் மறையவில்வை. இருட்டி வெகு நேரம் ஆனபிள்பும் அவள் பின் வாசலில் உட்கார்ந்து இருந்தாள். லாந்தர் விளக்கில் நடக்கும் ஆள் உருவம் பார்த்துக் காத்திருந்தாள். பெத்தையா லாந்தர் விளக்கோடுதான் வருவார். இரவில் நிவா வந்தது. எண்ணிக்கையற்ற நட்சத்திரங் கள். காற்று வந்தது. நிலாவை பார்த்துக் கொண்டிருந்தாள். பெத்தையாவின் ஞாபகம் முட்டியது.

பெத்தையா பத்மாவுக்கு அதிசயமான பண்டங்களாகக் கொண்டு வருவார். சில நேரம் பனம்பழம் கொண்டு வருவார். அதனை நாரை உரித்து கருப்பட்டி போட்டு பத்மா திங்கும்போது பெத்தையா மாடுகளின் ஊடே அலைவார். மாடுகள் அவரைக் கண்டு குதியாளமிடும். மழைக்காலத்தில் காளான் பறித்து வருவார். காளான்களை மடியிலிருந்து உதிர்ப்பார். அவரின் டயர் செருப்பு பதிந்த பாதையில் பெரிய சுவடுகள் இருந்தன. நாச்சியார் பகல் எல்லாம் யோசித்தபடியிருந்தாள். மேற்கு வீடு மட்டும்தான் மிஞ்சி நின்றது அவனிடம். அதையும் கேட்டு ஆன் வந்து கொண்டிருந்தார்கள். நாச்சியார் சின்ன மகளைப் போய்ப் பார்த்து வந்தாள் ஒரு நாள். வந்த இரண்டு நாள்களுக்குள் தரகர் வீட்டைச் சுற்றிப் பார்த்துப் போனார். பத்மாவுக்குத் தெரிந்தது எல்லாமும்.

அடுத்த நாள் இருட்டும் சமயம் நாச்சியாரைத் தேடி பத்மாவின் புருஷனும்,இன்னமும் சிலரும் வந்தார்கள். பத்மா உள்ளிருந்து கேட்டுக்கொண்டிருந்தாள். பலத்த சப்தம் கேட்டது. நாச்சியார் மகளை அனுப்ப முடியாது என்றாள். வீட்டை விற்கக் கூடாது என அவர்கள் தடுத்தார்கள். மகளை அனுப்ப ஒரு வாரக் கெடு கொடுத்துப் போனார்கள்.

நாச்சியாருக்கு இரவில் தூக்கமேயில்வை. காற்று அறைகளை உருட்டியது. பத்மாவும் அறையில் படுத்தே கிடந்தான். நடுச் சாமத்தில் நாச்சியார் எழுந்து பத்மா படுத்துக் கிடந்த இடத்துக்கு வந்து எழுப்பினாள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி விடியும்வரை இருந்தார்கள். விடியும்போது வீட்டில் சாமான்கள் உருளும் சப்தம் கேட்டது. அவர்கள் போகும்போது காற்று தெருவில் தனியாக வீசியது. அதன் சப்தம் அவர்களைத் துன் புறுத்தியது. யாருமில்லை, யாருமில்லை என்பது போல காற்று சப்தமிட்டது. அவர்கள் விடியும் முன்பு போய் விட்டார்கள்.

மறுநாள் காலையில் மேற்கு வீடு பூட்டப்பட்டிருந்தது. அவர்கள் இல்லை. யாருமில்லாத போதும் வீடெங்கும் வெளிச்சம் அடித்துக்கொண்டிருந்தது. குருவிகள் படை படையாக வந்து அலைந்தன. நெடுநேரம் வரை சூரியன் மூடிய கதவுகளைப் பார்த்தபடியிருந்து மறைந்தது. மேற்கு வீட்டிவ் நின்று சூரியனைப் பார்க்க எவருமில்லை. ஆள் இல்லாத வீட்டில் வெருகுகள் அலைகின்றன. குருவிக் கூட்டம் எப்போதும் போல வருகின்றது. பந்தலில் நிற்கின்றது. சுழிக்காற்று வைக்கோலை அள்ளி இறைக்கின்றது. வெற்று வீட்டின் கதவை இரவெல்லாம் தட்டி ஓய்கிறது காற்று தன்னிஷ்டம் போல.

– எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள், முதற் பதிப்பு: 2014, உயிர்மை பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *