சிரிக்கச் சிரிக்கச் சின்ன சந்தேகம்!
(கதைப் பாடல்)

கோவில் பாச்சா என்றுசிலர்
கரப்பான் பூச்சியைச் சொல்கின்றார்!
கரப்பான் பூச்சி என்றைக்குக்
கோவில் போச்சு சொல்லுங்க?!
குங்குமம் விபூதி இட்டிருக்கா?
குழைச்ச மஞ்சள் பூசிருக்கா?
சிரைக்கா இரட்டை முடியோடு
சிறகுடன் பறக்கும் பூச்சியிது!
அடுப்பங் கரையில் குடியிருக்கு!
அரிசி மாவின் அடியிருக்கு!
எண்ணைப் பிசுக்கு இருக்குமிடம்
எங்கும் தங்கிக் குடியிருக்கு!
பொம்பளை புள்ளையை மிரட்டிடுது!
புடவை மடிப்பில் ஒளிஞ்சிடுது!
பல்லியைக் கூட ஏய்த்திடுது!
பசங்க மேலயும் பாய்ந்திடுது!
காஞ்சி புரத்தின் நேசனிதோ?
கரகர பட்டினை வெட்டிது?!
பட்டு ரொட்டித் துணியென்றால்
பல்லால் கடிச்சுக் குதறிடுது!
இருட்டில் எங்கும் குடியிருக்கு!
இலட்சுமி என்றும் பெயரிதுக்கு!
வரமிளகாய் போன்ற வடிவத்தில்
வாட்டி வதைக்கிற ஜந்துயிது!
எதுக்கும் அஞ்சா மங்கையரும்
இதுக்கு அஞ்சி அடிபணிவர்!
அசிங்கம் ஒன்றும் இல்லையிது
அழகு வழவழப் பூச்சியிது!
மருந்து அடிச்சுக் கொல்வதற்கும்
மனசு வரலை பாருங்கள்!
விருந்தாய் வீட்டில் இருக்கிறது!
விரட்டும் வழியைச் சொல்லுங்கள்!
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |