மன ஊனம்




(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு ஊர்ல ஒரு ராசா இருந்நதாரு. அவரு, நல்லாவே ஊரப் பரிபாலனஞ் செஞ்சு வந்தாரு. இப்டி நடந்து வரயில, ராசா பொஞ்சாதி, அரமணயில வேல செய்ற, பண்ணக்கார மேல ஆச வச்சிட்டா. ராசா பொஞ்சாதிகிட்டக் கள்ள ஒறவு வச்சுக்கிறதப் பண்ணக்கார் விரும்பல. பண்ணக்காரனுக்கு அரமணயில மாடு மேக்கிற வேல. ராணி, அவனோட நீண்ட நாளா ஒறவு வச்சுக்கிட்டிருந்தா. இது ராசாவுக்குத் தெரியாது.
ஒருநா,ராணி, பண்ணக்காரங் கூட ஓடிப் போயிட்டா. ஆனா, பண்ணக்கார் பயந்துகிட்டே இருந்தர். ராணியோட தைரியத்லதர் இவ் போயிக்கிட்டிருக்ககா. பண்ணக்கார் மனசில, ஒரு எண்ணம் வந்திச்சு. எப்டிண்டா, ராணியோட, நாம வாழ முடியாது. ராசா பாத்தா, கொண்டு போடுவாரு. எண்ணக்கிருந்தாலும், இது ஆபத்தான வாழ்க்கதாண்டு நெனச்சவ், ராணிகிட்ட இருக்ற பொருள்கள் பறிச்சுக்கிட்டு ஓடிறணும்ண்டு நெனச்சுக்கிட்டு, ராணி கூட நடந்து போயிக்கிட்டிருக்கர்.
இப்டிப் போகயில, குறுக்க ஒரு ஆறு வருது. ஆத்து நெறையா தண்ணி, ஆத்து வெள்ளத்த, ரெண்டு பேரும் கடக்க முடியல. சீல – நகைக, பணம் எல்லாத்தையும் பொட்டணமாக் கட்டி எங்கிட்ட குடு. மொதல்ல போயி, அக்கரயில வச்சிட்டு வந்து, ஒன்னயக் கூட்டிட்டுப் போறேண்டு சொல்லவும், ராணியும் சம்மதிச்சு எல்லாத்தையும் கழத்திக் குடுத்திட்டு, ஒரு துண்டுத் துணியமட்டுங் கட்டிக்கிட்டு, இக்கரயில நிண்டுகிட்டிருந்தா. ஆத்து வெள்ளத்தக் கடந்து போன பண்ணக்கார், பொருள் களக் கொண்டுகிட்டுத் திரும்பிப் பாக்காம ஓடிப் போயிட்டா.
பொருளும் போச்சு, உடுத்தியிருந்த சீலயும் போச்சு. மாட்டுக் காரன நம்பிப் புகழும் போச்சுண்டு நெனச்சுக்கிட்டு, இக்கரயில-ராணி, முண்டுத்துணியக்கட்டி நிண்டுக்கிட்டிருந்தா. அரமணக்கி திரும்பிப் போக மனசு வரல.
அப்ப அந்தப் பக்கமா, ஆத்துக்கர வழியா ஒரு நரி, ஒரு கவிச்சுத் துண்டக் கவ்விக்கிட்டு வருது. அப்ப, ஆத்துக்குள்ள இருந்து ஒரு மீனு, கரயில தவ்வி விழுந்துச்சு. மீனப் பாத்த நரி, கவிச்சுத் துண்ட கக்கி வச்சுட்டு, மீனப் புடிக்கப் போச்சு. அதுக்குள்ள மீனு தவ்வி ஆத்துக்குள்ள போயிருச்சு. மீனு போயிருச்சுண்ட்டு, திரும்பிக் கரித்துண்ட நரி பாத்துச்சு. அதுக்குள்ள கவிச்சுத்துண்ட ஒரு பெறாந்து (பருந்து) தூக்கிக்கிட்டுப் போயிருச்சு.
ரெண்டயும் எழந்திட்டு நிண்டுகிட்டிருந்த நரிய, ராணி பாத்தா, ஏ.. நரியே! ஒனக்கு எதுக்கு இந்த ஆச. பேசாமக் கரித்துணட திங்க வேண்டியதானே. மீனுமேல ஆசப்பட்டியே! இப்ப, கரித்துண்டும் போச்சு, மீனும் போச்சு. இப்ப, என்ன செய்யப் போறேண்டு ராணி கேக்குறா.
ராசாவ விட்டுட்டு, மாட்டுக்காரங்கூட வந்து, உடுத்திக்கச் சீல கூட இல்லாம, முண்டுத் துணியக் கட்டிக்கிட்டு நிக்கிறியே நீயா எனக்குப் புத்தி சொல்ற! இந்தக் கரித்துண்டு போனா, வேறொரு கரித்துண்ட எடுத்துக்கிருவே. இந்த மீனு போனா, வெறோரு மீனப் புடுச்சுக்கிருவே! ஆனா, நிய்யி – மாட்டுக்காரன நம்பி, புத்திக்கெட்டுப் போயி நிக்கிறியே! ஒன்னயக் காட்டிலுமா, நா ஆசப்பட்டுப் போயிட்டேண்டு நரி சொல்லுது.
ஒடனே! ராணிக்குப் புத்தி வந்து, நரியண்ணே! அரமணக்கிப் போக ஒரு வழி சொல்லுண்டு நரிகிட்டக் கேட்டா.
அதுக்கு நரி, இப்ப, நிய்யிக் கிருக்கச்சி போல நடக்கணும். கிருக்கச்சி மாதிரி நடிச்சாத்தர். நிய்யி, அரமணக்கிப் போக முடியுமண்டு நரி சொல்லுச்சு.
அப்ப அந்த வழியாப் போறவங்க, ராசாகிட்டப் போயிச் சொல்லுவாங்க. அப்ப, ராசா வந்து, ஓ… மேல எரக்கப்பட்டு, ராணிக்கு ஏதோ மூளக்கோளாறுண்டு நெனச்சு அரமணக்கிக் கூட்டிக்கிட்டுப் போவாரு. கொஞ்ச நாள்ல கிறுக்கு விட்டதுபோல நடிச்சு, மீண்டும், நிய்யி ராணியாக வாழலாம்ண்டு சொல்லிட்டு நரி போயிருச்சு.
பழய சீலய வாங்கிக் கட்டிக்கிட்டு, சுடுகாட்டுச் சாம்பல அள்ளிப் பூசிக்கிட்டு, சுடுகாட்ல கெடந்த ராணியப் பாத்த ஊராளுங்க, ராசாகிட்டப் போயிச் சொன்னாங்க. ராசா பரிவாரத்தோட வந்து, ராணி அரமணக்கிக் கூட்டிக்கிட்டுப் போனாங்க. கொஞ்ச நாள்ல கிறுக்கு மாறிப் போச்சுண்டு சொல்லி, ராணி நல்லா வாந்தாளாம். மனசார நரிய நெனச்சு சந்தோசப்பட்டாளாம், படமாட்டாளா? நல்லதுக்கு வழி சொல்லிக் குடுத்தா படமாட்டாளா!
– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், நீதி விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.