இளமைக் கோலங்கள்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 24, 2025
பார்வையிட்டோர்: 3,342 
 
 

(1975ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21

அத்தியாயம்-16

கடலலைகளின் தாலாட்டில் இரவு உறங்கிக் கொண்டிருக்கிறது. கடற்கரைப் பாதையில் வருகின்ற புகையிரதம் இந்தப் பாடலுக்குப் பின்னணி இசைக்கிறது. மென்மையாக ஆரம்பித்து தாளலயத்துடன் படிப்படியாக உயர்ந்து மீண்டும் அதே தொனியில் மறைந்து போகும்வரை மனதை லயிக்கச் செய்கின்ற ஓசை. 

ஜெகநாதன் எதையோ பறிகொடுத்தவனைப் போல கட்டிலில் படுத்திருந்தான். தலையணை அவனது அணைப்பிலிருந்தது. அவன் கிடக்கிற கோலத்தைப் பார்த்துவிட்டு, 

“எப்பிடி மச்சான் முதலிரவு?” என்றான் மகேந்திரன்.

ஜெகநாதன் ஒரு சிரிப்பை மாத்திரம் உதிர்த்தான். 

பின்னேரம் அவனைக் கண்ட நேரம் முதலே அவனிடம் கேட்க வேண்டுமென மகேந்திரன் நினைத்திருந்த கேள்வி இது, இப்பொழுதுதான் அதற்குச் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. 

இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்த ஜெகநாதன் மாலை எங்குமே புறப்படவில்லை. இரவு சாப்பாட்டுக்கு மாத்திரம் கடைக்குப் போய்விட்டு வந்தான். பின்னர் நீண்ட நேரம் கட்டிலிலேயே கிடக்கிறான். 

மகேந்திரன் படுக்கையை விரித்துக் கொண்டே மீண்டும் அதே கேள்வியைக் கேட்டான். ஜெகநாதன் சிவகுமாரைத் திரும்பிப் பார்த்துச் சிரித்துக்கொண்டான் வெட்கப்படுகிறானோ? அல்லது எதையுமே சொல்ல விரும்பவில்லையோ? 

கட்டிலில் படுத்திருந்தவாறே சிவகுமார் கேட்டான் : 

“எப்பிடி கலியாணமெல்லாம்?” 

“பறவாயில்லை.” 

“என்ன நான் கேட்டதுக்குப் பேசாமலிருக்கிறாய்… எப்பிடி மச்சான் பொம்பிளை?” என அவனது கன்னத்தைத் திருப்பினான் மகேந்திரன். அதற்கும் ஒரு புன்முறுவலை மாத்திரம் உதிர்த்துவிட்டு மௌனம் சாதித்தான் ஜெகநாதன். 

பின்னர் எழுந்து ஒரு சிகரட்டைப் பற்றவைத்தவாறே சொன்னான் : “சுவீப் அடிச்ச மாதிரித்தான்… சீதனமும் எக்கச்சக்கம்… பொம்பிளையும் நல்ல வடிவு.” 

“நல்ல புளியம் கொப்பாய்த்தான் பிடிச்சிருக்கிறாய் எண்டு சொல்லு.” சிவகுமார் ஏளனமாகத்தான் அப்பிடிச் சொல்கிறானா என்று புரியவில்லை. 

“பின்னை… லேசுப்பட்ட ஆளெண்டு நினைச்சியே?… காரும் வேண்டித்தாறதெண்டு சொல்லியிருக்கினம்.” 

“அப்ப மாப்பிள்ளையை நல்லாய் பிடிச்சிட்டுது போலை… எங்களுக்கெல்லோ தெரியும் மாப்பிளையின்ர திருகுதாளங்கள்… பொம்பிளை எந்தப் பகுதி?” – மகேந்திரன் குறுக்கிட்டான். 

“உங்கடை ஊர்தான்.” 

“அதாரடாப்பா எங்கட ஊரிலை இவ்வளவு பணக்காரர்?” ஜெகநாதன் விபரம் சொன்னான். 

“ஆ… இப்ப எனக்கு ஆக்களைத் தெரியும்…” 

கதை வளர்ந்து கொண்டு போவதை உணர்ந்த சிவகுமார்… “மச்சான் லைட்டை ஒஃப் பண்ணுவம்… வெங்கடாசலத்தார் அண்டைக்கும் பெரிய நியாயங்கள் எல்லாம் பேசினார்…” 

“என்னவாம்?” – ஜெகநாதன் கேட்டான். 

“அண்டைக்கு பார்ட்டியிலை சொல்லச் சொல்ல கூத்தடிச்சுக் கொண்டு நிண்டீங்கள்… அந்தாளுக்கு ஆரோ… சொல்லிப் போட்டினம் போலை… பெரிய குறையெல்லாம் சொன்னார். அப்பிடி நாங்கள் செய்தால் தங்களுக்குத்தான் கௌரவக் குறைச்சலாம்…”. 

“அவரும் அண்டைக்கு எங்கையோ போய் குடிச்சிட்டு உலகம் தெரியாமற்தானே வந்தவர்… – ஜெகநாதன் நியாயம் பேசினான்.

“அது ரகசியமாய்த்தானே,” சிவகுமார் தொடர்ந்தான்; “இனியும் இப்பிடி நடக்குமெண்டால் அறையை விட்டிட்டுப் போகட்டாம்… லைட் எல்லாம் ஒஃப் மற்றது இரவு பத்துமணிக்குள்ளை பண்ணிப்போட வேணுமாம்… அதுக்கு மேலையும் பாவிக்கிற தெண்டால் லைட் பில்லுக்கும் சேர்த்துத் தரவேணுமா..” 

மகேந்திரன் எரிச்சலோடு, “அந்த விசரன்ரை கதையை விடடாப்பா! அவர் ஒருத்தர்தான் இந்த உலகத்திலை வீடு வைச்சிருக்கிற மாதிரிக் கதைக்கிறாய்… அவங்கள் நித்திரை… நாங்கள் மெதுவாய்க் கதைப்பம்.” 

“நித்திரையில்லை!… வரயிக்கை வெங்கடாசலத்தின்ரை இருமல் சத்தம் கேட்டதெல்லே?” 

“அவையளுக்குப் பயந்துகொண்டு கதைக்காமல் படுக்கிறதே… இதில்லாட்டி இன்னொரு வீடு…” 

சிவகுமார் சிரித்துக்கொண்டே சொன்னான்; “நாங்கள் நினைச்சவுடனை போறதுக்கு இங்கை எல்லாரும் வீடுகளைத் திறந்தா வைச்சிருக்கிறாங்கள்?” 

“அந்தத் துணிவிலைதான்… அவரும் இப்பிடிக் கதைக்கிறார்?…” என்று கேட்ட மகேந்திரன் சற்று நேர மௌனத்துக்குப் பின்னர்… “புது மாப்பிளை வந்திருக்கிறான்… புது அனுபவங்களைக் கேக்கிறதை விட்டிட்டு இதென்ன தேவையில்லாத கதை கதைச்சுக் கொண்டிருக்கிறாய்?… ஜெகா!… எப்படி முதலிரவு?” என்றான். 

அந்தப் புதிய அனுபவங்கள்! அம்மி மிதித்து அருந்ததி பார்த்து… கல்யாண வைபோகம்! விருந்து கொண்டாட்டங்கள்! சுபநேரம் இரவு பத்து சொச்சத்துக்கும் பன்னிரண்டுக்கும் இடையில் இருந்தது. சம்பிரதாய பூர்வமான சடங்குகள் எல்லாம் முடிந்து இளம் மனைவியை இவனிடம் ஒப்படைத்தபொழுது அதிகாலை இரண்டு மணிக்கும் மேலாகிவிட்டது. 

முன்பின் அறிமுகமில்லாத ஒருத்தியை திருமணத்திற்கு சில தினங்களுக்கு முன்னர் தான் காண நேர்ந்த ஒருத்தியை, தனிமையில்… எப்படிக் கதைக்கலாம்? திருமண நேரங்களிலும் முன்னரும் அவள் சரியாக முகம் கொடுத்துக் கதைக்கவுமில்லை. அந்த அளவுக்கு வெட்கப்பட்டவள், இப்போது நாணத்தை விட்டு எப்படிக் கதைப்பாள்? 

வெளியே நல்ல நிலவு எறித்துக் கொண்டிருந்தது. குளிர்மையான இளங்காற்றும் வீசியது. 

மிகவும் மென்மையான வெளிச்சத்தில் இளம் மனைவி தங்கச்சிலையென இருந்தாள். 

“என்ன யோசிக்கிறீங்கள்… படுக்கயில்லையா?” ஜெகநாதன் மனைவியைப் பார்த்துக் கேட்டான். 

“நீங்கள் படுங்கோ…” அவள் தலையைக் குனிந்தவாறே பதிலளித்தாள். என்ன கரிசனை! எவ்வளவு ஆதரவான வார்த்தைகள்! அவனது சுக துக்கத்தில் அக்கறை கொள்ள ஒருத்தி! அவன் ஆதரவோடு அவளது கையைப் பிடித்தான். 

“என்னடாப்பா! நாங்கள் கேக்கிறம் நீ ஏதோ கோட்டையைப் பிடிக்கிற யோசினையிலை இருக்கிறாய்?” மீண்டும் மகேந்திரன்… 

ஜெகநாதன் சிந்தனை கலைந்து ஓர் அசட்டுச் சிரிப்பை உதிர்த்தான். 

“தாலி கட்டெல்லாம் முடிய நேரஞ்செண்டு போச்சுது… அவவுக்கும் சரியான களைப்பு… ‘வாழ்க்கை முழுக்க ஒண்டாயிருக்கிற நாங்கள் தானே, இண்டைக்கு என்னத்துக்கு’ எண்டு சொன்னா… பின்னப் பேசாமல் படுத்திட்டம்.” 

“நீ சரியான பேயன்ரா…!” மகேந்திரன் ஏளனம் செய்தான்; “இப்பிடி ஒரு அருமையான இரவை ஆரேன் கோட்டை விடுவானே!” 

ஜெகநாதனுக்கு, தான் ஏதோ தவறு விட்டதைப் போன்ற உணர்வு முளைவிட்டது. அவனது முகமாற்றத்தைக் கண்டு, “இல்லை… அவன் செய்ததுதான் சரி… எங்கடை ஆசைகளுக்காக பொம்பிளையின்ரை மனசைப் பாதிக்கிற மாதிரி நடக்கக்கூடாது சிவகுமார் பரிந்து பேசினான். 

“ஆர் சொன்னது மனசைப் பாதிச்சு நடக்கச் சொல்லி? ஆதரவான அணைப்பாலையும் அன்பான பேச்சாலையும் மனதை மாற்றியிருக்கலாமெண்டுதான் சொல்லுறன்.” 

“சரி… சரி…! அந்தக் கதையைவிடு. இப்ப என்ன குடிமுழுகிப் போச்சே?… உன்ரை கதையைக் கேட்டிட்டு அவன் நாளைக்கே ஊருக்கு ஓடப்போறான்!” 

சிவகுமார் சொன்னதைக் கேட்டு ஜெகநாதன் சிரிப்போடு கூறினான். “போய் லீவு போட்டிட்டு வாறனெண்டு தான் சொல்லிப் போட்டு வந்தனான்… நாளையிண்டைக்குப் போக வேணும்…” 

“அப்ப நீ இனி… எங்களோடை இருக்கமாட்டாயெண்டு சொல்லு!… ஒண்டு செய்யடாப்பா… ஒன்றில் யாழ்ப்பாணத்துக்கு மாற்றம் எடு! அல்லது மனிசியை இஞ்சை கொண்டுவா! இல்லையெண்டால் வேலைக்கு முழுக்குப் போட வேண்டித்தான் வரும்.” 

“இந்த வேலையைக் காட்டித்தானே அந்தச் சீதனம் எடுத்த… பிறகு இதுகும் போயிட்டால்?” மகேந்திரனின் வழக்கமான கேலிப் பேச்சு. 

“இவனுக்கு எப்பவும் பகிடிதான். இனிக் கதைச்சது காணும் மச்சான் படுப்பம்” என்றவாறே லைட்டை அணைத்துவிட்டுப் படுத்தான் சிவகுமார். 

தன் கட்டிலின் பக்கத்தில் பாயில் படுத்திருந்த மகேந்திரனிடம் ஜெகநாதன் ரகசியமாகக் கேட்டான், “மச்சான் உன்னட்டை ஏதாவது புத்தகங்கள் இருக்கோ?” 

“என்ன புத்தகமடாப்பா?” 

“வேறை என்ன?… விளங்காத மாதிரிக் கேக்கிறாய்… எங்கடை ஊர்ப் பெட்டைகளைத் தெரியாதே? ஒரு சவமும் தெரியாது!” 

மகேந்திரனுக்குப் பெருமையாக இருந்தது. இந்த விஷயத்தில் தன்னை ஒரு பொருட்டாகப் பாவித்து அவன் பாடம் கேட்கும் பொழுது உதவாமல் இருக்கலாமா? 

“ஒரு ஃபிரண்டிட்டை இருக்குது. நாளைக்கு வேண்டித் தாறன்.”

“கட்டாயம்… மறந்திடாதை…” 

“நீ ஒண்டுக்கும் யோசியாதை எல்லாம் வெல்லலாம்.” 

கடற்கரைப் பாதையில் ஒரு ‘சிலோ றெயின்’ ஓடிக் கொண்டிருக்கிற சத்தம் இரவின் அமைதியைக் குலைக்கிறது. 

அத்தியாயம்-17

வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில்  மேடையேறவிருக்கும் கட்டுப்பெத்த வளாக தமிழ் மன்ற மாணவர்களின் நாடகத்திற்குப் போகலாம் என மகேந்திரன் சிவகுமாரை அழைத்தான். சிவகுமாருக்கும் அது நல்ல ‘ஐடியா’வாகத் தோன்றியது. இருவருமாக, கதைத்துக் கொண்டே மண்டபத்துக்கு நடந்து சென்றார்கள். 

சில ஏழைச்சிறுவர்கள் வீதியோரத்தில் கொட்டப்பட்டிருக்கும் குப்பைகளிலிருந்து அவர்களுக்குப் பெறுமதியான பொருட்களைப் பொறுக்கிக் கொண்டிருக்கிறார்கள். 

“இவங்கள் ஏன் குப்பையைக் கிளறிக் கொண்டிருக்கிறாங்கள்?” என்றான் மகேந்திரன். 

“குப்பையில்தானே குண்டுமணி கிடக்குமாம்” என்றவாறு அவர்கள் பக்கமாக சிவகுமாரும் நோட்டம் செலுத்தினான்; வெற்று பால்மாத் தகரங்கள், அரைகுறையாகப் பழுதடைந்த விளையாட்டுப் பொருட்கள், சிறிய போத்தல்கள், கிழிந்த சப்பாத்துக்கள், அறுந்த செருப்புக்கள்! இவற்றைக் கொண்டு சென்று அவர்கள் காசாக்கக் கூடும். சிறு துரும்பும் பல்லுக்குத்த உதவுமாமே? எல்லாம் வயிற்றை நிரப்புகிற முயற்சிதான்! 

“மச்சான் வயிறு பசியெடுக்குது ஏதாவது கடிச்சிட்டுப் போவோம்.” 

“சரி!” 

எக்கவுண்ட் கடை வரவேற்றது. ஜெகநாதன் கடையிலிருந்து வெளியே வந்தான். நண்பனொருவன் இரவுச் சாப்பாட்டிற்கு அழைத்திருப்பதாகவும் வருவதற்கு நேரமாகும் என்றும் கூறிச் சென்றான். இரண்டு நாட்களில் வருவதாக மனைவியிடம் கூறிவிட்டு வந்தவனுக்கு அலுவலகத்தில் லீவு கிடைக்காதது பெரிய மனக்குறை, மேலதிகாரிகளுக்கு அவனது கஷ்டத்தைப் புரிந்துகொள்ள மனதில்லை. நேற்றைய இரவும் எங்கேயோ பார்ட்டிக்கு என்று சென்றவன் நிறை தண்ணியிற்தான் வந்தான். (“மாப்பிளையெண்டால் தங்கக் கம்பி!… பீடி சுருட்டு தொடுறதில்லை… தண்ணிவென்னி பாவிக்கிறதில்லை…” – கலியாணப் புறோக்கர்கள் வாழ்க!) 

கடையினுள் வந்து அமர்ந்துகொண்டே மகேந்திரன் சொன்னான்; 

“மச்சான்!… உனக்கு ஒரு சங்கதி சொல்ல வேணுமெண்டிருந்தனான்…” 

“என்ன?” 

“ஜெகநாதன் முடிச்சிருக்கிற பொம்பிளையைப் பற்றி…. எனக் கூறிவிட்டு மேற்கொண்டு சொல்லத் தயங்குபவன் போல வாயை மூடினான். 

“உனக்கு ஆரையேன் பற்றி நொட்டை சொல்லாமல் இருக்கேலாது!” 

“இல்லை… இது உண்மைக்கதை மச்சான்… அவள் முந்தி ஒருத்தனோடை இருந்தவள்…” 

“நீ… நேரிலை கண்டவன் மாதிரிச் சொல்லுறாய்?” 

“ஊரெல்லாம் தெரிஞ்ச கதைதானே… அவள் முந்தி யூனிவசிற்றியிலை படிக்கயிக்கை… ஆரம்பிச்ச தொடர்புதான்.” 

“தொடர்பெண்டால்…?” 

“‘லவ்’தான்… ரெண்டுபேரும் ஒரே வீட்டிலைதான் இருந்தவையெண்டும் கேள்வி.” 

“அப்ப, கேள்விப்பட்ட கதையைத்தான் சொல்லுறாய்?”

சிவகுமாரது கேள்வி அவனைச் சினங்கொள்ளச் செய்தது. 

“உனக்கு ஒண்டும் சொல்லேலாது, நான் உண்மையைத்தான் சொல்லுறன்… யூனிவசிற்றியாலை வெளிக்கிட்ட பிறகும்… இவ வேலை செய்கிற இடத்துக்கு அவர் போய்வாறவராம்… சிங்கள வீட்டிலைதான் இவ இருந்தவ… அவரும் அங்கை மாசக்கணக்கிலை தங்கியிருந்தவராம்.” 

“‘மறி’ பண்ணிக் கொண்டோ?” 

“அந்த மாதிரித்தான்!” 

“பிறகேன் விட்டவையள்?” 

“சாதிப் பிரச்சனைதான்…. அவன் ஏதோ குறைவாம்… இவையள் காசுக்காறாக்கள்… விடுவினமே?” 

“பெட்டையும் ஓமெண்டு விட்டிட்டாளே?” 

“அதுதானே… பெரிய இழுபறி நடந்து கதையும் சந்திக்கு வந்தது… அவளுக்கு வேலையும் வேண்டாமெண்டு கொண்டு வந்து எத்தினைநாள் வீட்டுக்கை பூட்டி வைச்சிருந்தவங்கள்.” 

“அவன் இப்ப எங்கை?” 

“பாவம் மச்சான்! இப்ப எங்கேயோ தெரியாது… அவனையும் பெரிய சித்திரவதை செய்துதான் விட்டவங்கள்… காசு என்னதான் செய்யாது?” 

இவ்வளவு நேரமும் குறுக்கு விசாரணை செய்து கொண்டு வந்த சிவகுமார் மௌனம் சாதித்தான். அந்த அப்பாவிக்காக வேதனைப்படுகிறானா இந்தப் பேதையை எண்ணி வருந்துகிறானா அல்லது அரக்கத்தனமான செயல்களை எண்ணிக் குமுறுகிறானா என்பது புரியவில்லை. மூன்று காரணமாகவும் இருக்கலாம். 

கணக்குக் கொப்பியை எடுத்து தேநீருக்குரிய கணக்கைக் குறித்துவிட்டு வெளியேறினார்கள். கஷியருடைய செயற்கையான சிரிப்பு, போலித்தனமான சம்பிரதாயம். 

“எங்கை நாடகத்துக்குப் போறியளோ?” தேவையற்ற முகஸ்துதி. 

“இப்ப இவள் ஜெகநாதனை முடிச்சிட்டாள்தானே?” சிவகுமாருக்கு எல்லாமே குழப்பமாக இருந்தது. 

“காசு எல்லாத்தையும் மறைச்சுப் போட்டுது.” 

“அவள் மனமில்லாமல் தான் இது நடந்திருக்கும் எண்டு சொல்லுறியோ?” 

“அது எப்படியோ!… இவன் பேயன் ஏமாந்து போனான்.” 

ஜெகநாதன் அடைந்திருப்பது உண்மையில் ஏமாற்றம்தானா என்ற எண்ணம் சிவகுமார் மனதில் முளைவிட்டது. ஜெகநாதனது சுபாவத்தோடு ஒப்பிடுவதானால் அவனுக்கு இது பெரிய இழப்பில்லை. ஆனால், நியாயமாகவே ஆண்கள் அனைவரும் ஒரு புதிய மனைவியிடம் எதிர்பார்க்கின்ற புனிதத்தன்மை இல்லாது போவதே பெரிய ஏமாற்றம் தானோ? அப்படி எதிர்பார்ப்பதற்கு அவன் அருகதை உள்ளவனாகவும் இருக்க வேண்டுமே? 

“மகேந்திரன்… உனக்கு ஜெகநாதனைப் பற்றி தெரியும்தானே?… அவனும் லேசுப்பட்ட ஆளில்லை.” 

“அது வேறை விஷயம் மச்சான்… ஆரெண்டாலும் தனக்கு வருகிற மனைவி முந்தி ஒருத்தனுக்கு வாழ்க்கைப்பட்டவள் என்றால் ஒத்துக் கொள்வானோ?” 

சிவகுமாரால் அதை ஒத்துக்கொள்ள முடியவில்லைத்தான். தெரிந்து செய்வது வேறு விஷயம். தெரியாமல் முடித்து ஏமாறுவது என்றால் கவலைக்கிடமான சங்கதிதான். இந்த நேரத்தில் ஜெகநாதனுக்காக அனுதாபம் ஏற்பட்டது. மடையன், ‘காசு, காசு’ என்று ஆசைப்பட்டதனாற்தானே இது நேர்ந்தது. இனிக் கடைசிவரையும் இது ரகசியமாகவே இருக்க வேண்டும். இடையில் அறிய வந்தால் அவனது குடும்பத்தில் என்ன மாதிரியான பிளவுகளும் விளைவுகளும் நிகழக்கூடும். எல்லாவற்றிற்கும் மேலாக அவளும் மனமொத்துத்தான் இவனை மணமுடித்தாளோ என்பதும் கேள்விக்குரிய விஷயமே. அல்லது நிர்ப்பந்தமோ என்னவோ? 

“மகேந்திரன்!…. அவளும் மனமொத்துத்தானே செய்திருப்பாள்?” என்று தனது சந்தேகத்தை மீண்டும் கேள்வியாக்கினான். 

“அது என்னவோ தெரியாது.. எனக்கெண்டால் ஐமிச்சம்… அவன் முதலிரவுக் கதை சொல்லயிக்கை கேட்டுக் கொண்டிருந்தனிதானே?… ‘வாழ்க்கை முழுக்க ஒண்டாயிருக்கிற நாங்கள்தானே… இண்டைக்கு வேண்டாம்’ என்றாளாம்!… ஆரெண்டாலும் இப்பிடிச் சொல்லுவாளவையே?” 

மீண்டும் மௌனம் சாதித்தவாறு நடந்து கொண்டிருந்தான் சிவகுமார். உல்லாசப் பிரயாணிகளாக வந்து வாகனங்களில் பவனிவரும் வெளிநாட்டுக்காரர்களின் மேல் பார்வை விசேஷமாகச் சென்றது. இரு ஆண்களுடன் மிக அன்னியோன்னியமாகப் பழகியவாறு செல்லும் ‘வெள்ளை’ உள்ளம் படைத்த பெண்! இரு பெண்களுடன் செல்லும் ஒரு ஆண். நீண்ட வயது வித்தியாசமான கிழ, இளம்சோடிகள். எல்லோரும் வாழ்க்கையை அக்குவேறு ஆணிவேறாக, அனுபவிப்பதையே தங்கள் தலையாய கடமையாகக் கொண்டவர்கள் போன்ற கோலங்கள். இவர்களுக்கு எந்தப் பிரச்சினைகளுமே இல்லையா? 

ஆறுமாதங்கள் லண்டனுக்கு உல்லாசப் பிரயாணிகளாக சென்று வந்த நடுத்தர வயதான அலுவலக நண்பனும் மனைவியும் சொன்ன விஷயங்கள் சிவகுமாரது நினைவிற்கு வந்தது. அங்கெல்லாம் இளைஞர்களும் யுவதிகளும் மிக அன்னியோன்னியமாகப் பழகுகிறார்களாம். தங்களை ‘செக்ஸ்’சில் திருப்திப்படுத்துகிறவர்களை சரியாக ஊர்ஜிதப்படுத்திக் கொண்டுதான் மணம் செய்கிறார்களாம். நமது நாட்டுத் திருமணங்கள் “பெரியோர்களால் நிச்சயிக்கப்படுகிற” சங்கதியைக் கேட்டு அவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்! ஒருவரை ஒருவர் பூரணமாக அறிந்து கொள்ளாமல் எப்படி ஒன்று சேர்ந்து வாழ்வது? 

உண்மையோ பொய்யோ கேள்விப்பட்ட அவ்விஷயத்தை மகேந்திரனுக்குச் சொன்னான் சிவகுமார். 

“மச்சான்!… அவங்கடை பண்பாடு… அந்தச் சூழ்நிலையில் வளந்தவர்களுக்கு அது ஒரு பாரதூரமான விஷயமாகவே இருக்காது… எங்கடை பண்பாடு வேறை!… பெண்கள் பூவைப் போல புனிதமாக இருக்க வேண்டுமெண்டு கருதுறவை எங்கடை ஆக்கள்!” 

கதையோடு கதையாக இராமகிருஷ்ண மண்டபம் வரை நடந்ததே தெரியவில்லை. 

ஒரு தவறு நடந்தால் அதற்கு மன்னிப்பு இல்லையா? அல்லது ஒரு விபத்து நடந்தால் அதிலிருந்து மீட்சியே இல்லையா? 

சிவகுமார் சொன்னான்: “இனி என்ன செய்யிறது?… மச்சான்? நாங்கள் நினைக்கிற மாதிரி வாழ்க்கை அமையாவிட்டால் எங்களுக்கு அமையிற வாழ்க்கையை ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்.” 

“நீ வலு லேசாய்ச் சொல்லிப் போட்டாய்… தலையிடியும் காச்சலும் தனக்கு வந்தாத்தான் தெரியும்.” 

“எனக்கு இப்ப உன்ரை கதையைக் கேக்கத் தலையிடிக்குது… பேசாமல் வா!… நாடகத்தைப் பார்ப்பம்…” 

அண்மைக் காலங்களில் கட்டுப்பெத்தை வளாக மாணவர்கள் தமிழ்நாடகத்துறைக்கு அளித்து வரும் பங்களிப்பை வியந்து பேசினான் மகேந்திரன். சிவகுமாருக்கு அது ஆச்சரியத்தை அளித்தது; இவனுக்குக் கலைஞானமும் இருக்கிறதே! 

நாடகம் நிறைவு பெற்றதும் பலவித அபிப்பிராயங்களுடன் சனங்கள் கலையத் தொடங்கினர்; “நாடகம் நல்லலாய்த்தான் இருக்குது… ஆனால், வேறைமொழிக் கதைதானே?” – “வழக்கமான தமிழ் நாடகங்களிலை இருந்து இது வித்தியாசமாயிருக்குது… அது நல்ல வளர்ச்சிக்குரிய அறிகுறிதானே?” – “பிற நாட்டுக் கதையெண்டாலும் கெட்டித்தனமாய் மொழிபெயர்த்து இயக்கியிருக் கிறாங்கள்” – “இதைப்போல எங்கடை தமிழ் சமூகத்திலை இருக்கிற பிரச்சினைகளையும்… புதுக் கோணங்களிலே அணுகிச் சித்தரிச்சால் நல்லாய் இருக்கும்.” 

மகேந்திரன் தனது தொலைநோக்குக் கண்களால் யாரையோ கண்டுவிட்டு அவதிப்பட்டான்! “மச்சான்!… ஒரு சோடி வருகுது கண்டியோ?” 

“ஆரடாப்பா?” 

“மிஸ்டர் அன்ட் மிஸிஸ் அகிலா!” 

அகிலா தூரத்தில் வந்து கொண்டிருந்தாள். ஏற்கனவே திருமணமான தம்பதியரைப் போல அவனோடு அணைந்து இணைந்து அவள் வருவதைப் பார்க்க நல்ல பொருத்தமான துணையாகத்தான் தேடியிருக்கிறாள் எனத் தோன்றியது அண்மையில் வந்து சிவகுமாரைக் கண்டதும் புன்னகையை மலர்த்தினாள். அவனையும் அழைத்துக் கொண்டு அருகே வந்தாள். ராஜேசனுக்கு முதலில் சிவகுமாரையும் பின்னர் மகேந்திரனையும் அறிமுகப்படுத்தினாள். சிநேகபூர்வமான சிரிப்புக்கள், சம்பாஷணைகள். ஒரு பண்பாளனைப் போல ராஜேசன் பழகிய எண்ணத் விதம் அவனைக் கள்ளங்கபடமற்ற ஒருவன் என தோன்றியது. இவனையா மலருக்கு மலர் தாவும் வண்டு என மகேந்திரன் சொல்கிறான்? 

அகிலாகூட அந்த மாதிரித்தான் சொல்லியிருக்கிறாள். தப்புக் கணக்கா? எப்படியோ இனி அவன் நல்லவனாக இருந்துவிட்டால் போதுமானது. 

“ராஜேஸ்… இவங்களும் பக்கத்து அறைதானே? நான் இவங்களோட போறன்… நீங்க போங்களன்…” என அகிலா கூறியதும் ராஜேசனுடைய முகத்தில் சற்று மாற்றம் ஏற்பட்டது. தனது புதிய ஹொண்டா சைக்கிளில் அவளை ஏற்றிக்கொண்டு செல்லலாம் என்ற அவனது இதமான எண்ணத்தில் இடி விழுந்துவிட்டது! குளிர்மையான காற்று ஊடுருவும் பொழுது அவள் மென்மையான கரத்தினால் தனது வயிற்றைச் சுற்றி வளைத்து அணைத்திருப்பாளென்ற கற்பனையின் சுகமும் போய்விட்டது. வேண்டா வெறுப்பாகச் ‘சரி’ சொல்லிவிட்டுச் சென்று சைக்கிளை எடுத்து சீற்றத்தோடு உதையத் தொடங்கினான். மோட்டார் சைக்கிள் சீறிக்கொண்டு ஓடியது. 

இவர்கள் நடக்கத் தொடங்கினார்கள். வர்த்தக நிலையங்களில்… ஓடுவதுபோல ஜாலவித்தை காட்டிக் கொண்டிருக்கும் விளம்பர விளக்குகளின் சிரிப்பு! அகிலா செய்த காரியம் சரியில்லையென சிவகுமாருக்குப் பட்டது. ராஜேசனுக்கு அது சம்மதமாயிருக்குமோ என்று சந்தேகமாயிருந்தது. அதை அவளிடமே சொல்லலாமெனத் தோன்றினாலும் மகேந்திரனும் கூட வந்ததால் பேசாமலே வந்தான்.

“சிவா, நாளைக்கு இரவு எங்கட வீட்டில் சாப்பாடு… மூன்று பேரும் வாங்க!” 

“என்ன விசேஷம்?… கலியாணச் சாப்பாடா?” 

அகிலா மென்மையாகச் சிரித்தவாறு அவன்மேற் கோபப்படுவது போன்ற பாவனையிற் பார்வையைச் செலுத்தினாள். அந்தக் கோபமும் சிரிப்பும் கலந்த நளினம் மகேந்திரனை மயக்கியது. 

“… அப்பிடியில்லை… அதுக்கு இன்னும் நாள் கிடக்கு… இப்ப சும்மாதான்!” 

“அதென்ன… ஒரு நாளும் இல்லாத திருநாள் சும்மா?” 

மகேந்திரன் தேவையில்லாமற் சிரித்தான். அகிலாவோடு சமமாக நடந்து வருவதிலும்… அவளது பேச்சைக் கேட்பதிலும் அற்ப திருப்தி ஏற்பட்டது. 

“நாளைக்கு என்ர பேர்த்டே…” என்றாள் அகிலா. 

“அப்பிடியா சங்கதி… வெறிகுட் ராஜேசும் வருவாரா?” 

“அவருக்கும் சொன்னன்… வரயில்லை என்னுட்டார்… அவர் வீட்டுக்கு அவ்வளவாய் வாறதில்லை… அதுகும் நல்லம்தானே… பிறகு ஏதேன் கதைப்பானுகள்… நீங்கள்… இப்பெல்லாம் கடையில தானே சாப்பிடுறீங்க… அதுதான் சொன்னன்… ஒரு ‘சேன்ஞ்’சாய் இருக்கும்தானே? வாங்க….” 

தெரிந்தோ தெரியாமலோ அவளுக்குப் பொருளாதாரச் சிக்கலை ஏற்படுத்த விரும்பாதவன் சிவகுமார். எனினும் அவளது வற்புறுத்தலையும் புறக்கணிக்க முடியவில்லை. 

“அகிலா… ஜெகநாதனையும் கூட்டியாறதா? அவன் வருவானோ தெரியாது… பிறகு நீங்கள் மருந்து போட மாட்டீங்கள்தானே?” என பகிடியாகக் கேட்டான் சிவகுமார். 

அகிலா கபடம் இல்லாமல் சிரித்தாள். 

அத்தியாயம்-18

இருள்வதற்கு முன்னரே சிவகுமார் வந்து விட்டான். அகிலாவிற்கு ‘ஹப்பி பேர்த்டே’ கிடைத்தது.  முகத்திலே தென்பட்ட மகிழ்ச்சி செயற்கை யாகப்பட்டது. அப்படியென்றால் மனப்பூர்வமாக இல்லையா? என்ன காரணம்? ஏதேனும் கவலையாக இருக்குமா? அகிலாவுக்குக் காரணம் கேட்கத் துணிவில்லாமலிருந்தது, குழம்பிய மனநிலையில் அவன் இருக்கும்போது நேரடியாகக் காரணத்தைக் கேட்டால் சிலவேளைகளில் சினந்தும் கதைத்து விடுவான். பின்னர் அதற்காக அவனே வருத்தப்படுவான். அது அவளுக்கும் கவலையைக் கொடுக்கும். சுற்றி வளைத்துத்தான் விஷயத்தைக் கேட்டறிய வேண்டும். 

“என்ன சிவா, உங்கட பிரன்ட்ஸ் வரமாட்டானுகளா?… தனிய வந்திருக்கிறீங்க?” 

“வருவாங்கள்… ஓசிச் சாப்பாடென்றால் விடுவாங்களே?” சிவகுமார் சற்று வேடிக்கையாகப் பேசிய விதம் அவன் அவ்வளவு மோசமான மனநிலையில் இல்லையென்பதை உணர்த்தியது. 

“ஐயோ, பாவங்கள்… அப்பிடிச் சொல்லாதையுங்கோ!” 

“நான் விளையாட்டுக்குத்தான் சொன்னனான்… நீங்கள் எல்லாரையும் பாவம் பாக்கிறீங்கள்…. அவங்களும் அப்படி நினைக்க வேணுமே?” 

“அவனுகள்… எப்படியும் இருக்கட்டும்… எங்களுக்குத் தொல்லை தராட்டிச் சரிதான்!” 

“அதைத்தான் நானும் சொல்லுறன்.” 

“அது சரி… சிவா?… என்ன ஒரு மாதிரி இருக்கிறீங்க?”

“எனக்கு ஒரு குறையுமில்லை நல்லாய்த்தான் இருக்கிறன்…”

“சும்மா… டூப் விடாதையுங்களேன்… குறையில்ல என்கிறதே ஏதோ குறை இருக்கு என்னுமாப்போலை யிருக்கே?” 

குசினியிலிருந்து ‘சுவையான’ வாசனை வருகிறது. ‘பேர்த்டே’ பார்ட்டிக்கு அம்மா சமையலில் ஈடுபட்டிருக்கிறாள். 

“அகிலா… உங்களுக்கேன் இந்தத் தேவையில்லாத சிலவெல்லாம்?….” 

“இதென்ன பெரிய சிலவு?… கடயில சாப்பிட்டு உங்களுக்கும் அலுத்திருக்கும்… அதுதான் ‘பேர்த்டே’யை சாட்டி வரச் சொன்னன்.. இல்லைன்னா வரவேமாட்டீங்க… ஒரு நாளைக்காவது உங்கட வயிறு குளிரச் சமைச்சுப் போடவேணுமெண்டுதான் ஆசை… அதுதான் கூப்பிட்டன்.” 

அகிலா சொன்ன காரணம் அவனை உணர்ச்சி வசப்பட வைத்தது. என்ன பெண் இவள்? அல்லது பெண்கள் எல்லோருமே இப்படித்தானா? அவங்கள் இவளைப் பற்றி இல்லாத பொல்லாத கதைகளையெல்லாம் சொல்லித் திரிவதைத் தன் காதுபடக் கேட்ட பின்னரும் இப்படியொரு எண்ணமா? அவங்கள் தின்றால் என்ன கிடந்தால் என்ன என்ற கோபம் வரவில்லையா? கடைகளிலும் கன்ரீனிலும் தின்றது பாதி தின்னாதது பாதி என்று அவர்கள் திரிவது இவளது மனதையும் பாதிக்கிறதா? அல்லது ‘உங்கள்’ என அவள் குறிப்பிட்டது தன்னை மாத்திரமா? அப்படி நினைத்த பொழுது ஒரு குதூலகம் மனதை ஆட்கொண்டது. இந்தக் கையால் சீவியம் முழுக்க சாப்பிட்டுக் கொண்டிருக்கலாமே! மறுகணமே அந்த நினைவு ‘சுருக்’கென்று தைத்தது. அதற்குக் குடுத்து வைத்தவன் ராஜேசன்தான். 

சடுதியாக எதையோ நினைத்துக் கொண்டவன் போலக் கேட்டான். 

“அகிலா நேற்று இரவு நீங்கள் செய்த வேலை சரியில்லை?”

அகிலா திடுக்குற்றாள். தான் ஏதாவது தவறு செய்துவிட்டேனா? அதுதான் அவனது வாட்டத்திற்குக் காரணமா? 

“என்ன சிவா?” 

“மிஸ்டர் ராஜேசனை அனுப்பிவிட்டு எங்களோடை தனிய வந்தீங்கள்… அவர் என்ன நினைச்சாரோ தெரியாது. 

பெரிய ஹாஸ்யத்தைக் கேட்டவள்போல அகிலா சிரித்தாள். “இதுதானா உங்கட கவலை? நான் என்ன தனியவா வந்தன்?… நீங்க இரண்டு பேர் துணைக்கு வந்தீங்க… வீணா அவர் அலையிறது ஏன் என்று நினைச்சுத்தான் போகச் சொன்னன்.” 

“அதை அவர் விரும்பியிருக்க மாட்டார்!” 

“நீங்கள் சொல்லுறது விளங்குது… அப்பிடி அவர் சந்தேகப்படத் தேவையில்லை… என்னில எனக்கு நம்பிக்கையிருக்கு.” 

“நீங்கள் இப்படிச் சொல்லுறீங்கள். ஆம்பிளையளின்ரை மனம் அதைக் கேட்காது! ஒரு பெண்ணைக் காதலிக்கிறானென்றால் அவன்ரை மனதும் அவளைச் சுற்றியே சுருங்கிவிடும்… அவள் எதைச் செய்தாலும் தனக்காகத்தான் செய்ய வேணும் என்று விரும்புவான். உங்கட துணைக்காக வேறை ஆம்பிளை வாறது என்பதே அவனைப் பொறுத்தவரை பாரதூரமாக மனதைத் தாக்கியிருக்கும்!” 

அகிலாவுக்கு இனம்புரியாத கவலையொன்று உள்ளத்தை நெரித்தது. ராஜேசன் நேற்றைய இரவு மோட்டார் சைக்கிளுக்கு உதைத்த உதை பளிச்சென நெஞ்சிலிடித்தது. இன்று அலுவலகத் துக்கு லீவு போட்டதற்கும் அது தான் காரணமோ? ‘சிக்’ என்று துண்டு அனுப்பியிருந்தான். என்ன சிக்? மனமோ? கொஞ்சமாவது முன் யோசனையோடு நடந்திருக்கலாம் தான். 

“இனி என்ன செய்யிற… இருங்க தேத்தண்ணி போட்டிட்டு வாறேன்” என்றவாறே எழுந்து சென்றாள். அவள் அப்போதைய நிலைமையச் சமாளிக்கத்தான் அப்படிச் செய்கிறாள் என அவன் நினைத்தாள். 

சற்று நேரத்தில் மகேந்திரனும் ஜெகநாதனும் வந்தார்கள். ‘ஹப்பி பேர்த்டே ரூ யூ சொன்னார்கள். (ஆஹா என்ன பண்பு!) சிரித்துச் சிரித்துப் பேசினார்கள்! பேசிக் கொண்டே இருக்க நேரம் கடந்தது. 

சாப்பாடு மேசைக்கு வந்தது. கண்களை மூடிக் கொண்டு மூக்குமுட்டப் பிடித்தார்கள். உண்மையிலேயே நல்ல சாப்பாடு எனப் புகழ்ந்தான் ஜெகநாதன். எதற்கெடுத்தாலும் மருந்து மாயம் எனப் பழி சொல்கிறவனுக்கு இன்றைக்கு எப்படி ஞானம் பிறந்தது! தனக்குத் திருமணம் முடிந்து விட்டபடியால் இனி எதற்கும் பயப்படத் தேவையில்லையென நினைக்கிறான் போலும். 

சிவகுமார் அவ்வளவு உற்சாகமாகக் காணப்படவில்லை. நண்பர்கள் விடைபெற்ற பின்னரும் சிவகுமார் அங்கேயே இருந்தான். அவனிடம் கவலைக்கான காரணத்தைக் கேட்டாள் அகிலா. அன்று வீட்டிலிருந்து வந்திருந்த கடிதமொன்றை எடுத்து நீட்டினான் பதிலுக்கு. 

கடிதத்தை வாசித்து முடித்ததும் அவளுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. அந்த மகிழ்ச்சியில் மலர்ந்த முகத்தோடு அவனைப் பார்த்தாள்… அவன் புன்முறுவல் செய்தான். அதில் நிறைவில்லை. 

இந்த விஷயத்துக்குப் போய் யாராவது கவலைப்படுவார்களா என்று தோன்றியது – “என்ன சிவா?… மகிழ்ச்சிப்பட வேண்டிய விஷயத்துக்குக் கவலைப்படுறீங்க!” 

“மகிழ்ச்சிதான். ஆனால், என்ன செய்கிறது?” 

“ஏன்?” அவனது புதிரைப் புரிந்து கொள்ள முடியாமல் கேள்வி கேட்டாள். 

“இப்ப இதுக்காகக் காசுக்கு எங்கை போறது? இருக்கிற பிரச்சினைக்குள்ள இது வேறை தலையிலை விழுந்திட்டிது… என்ரை கஷ்டம் எனக்குத்தானே தெரியும்.” 

சிவகுமாரது தம்பி சிவராசனுக்குப் பல்கலைக்கழக அனுமதி கிடைத்துவிட்ட செய்தி தான் கடிதத்தில் வந்திருந்தது. அதை நினைக்க அவனுக்குப் பெருமையே ஏற்பட்டது. 

தான் படித்து டொக்டராக வேண்டுமென சிவகுமாரும் நினைத்திருந்தான். குடும்பத்தில் பொருளாதாரச் சிக்கலினால் இடையிலே படிப்பை நிறுத்தி உத்தியோகத்துக்குப் போக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விட்டமை அவனைப் பொறுத்தவரை பெரிய ஏமாற்றமே. இப்பொழுது தனது உடன்பிறந்த தம்பி அந்த ஆசையை நிறைவு செய்யப் போகிறான். அப்படியே ஓடிச் சென்று அவனைக் கட்டியணைத்துத் தனது நன்றியைச் சொல்ல வேண்டும் போன்ற துடிப்பு. அதையும் மீறிச் சடுதியாக அவனைப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்புவதானால் அதற்கு வேண்டிய செலவுகளை எப்படிச் சமாளிப்பதென்ற தவிப்பு. 

அகிலாவுக்குக் கவலை மேலிட்டது. எத்தனையோ பேர் எத்தனையோ விதமாகவெல்லாம் பணத்தைச் சேர்த்து வீண் பொழுதுபோக்குகளுக்கும் அநியாயக் கருமங்களுக்கும் செலவு செய்கிறார்கள். இப்படி நல்ல மனதோடு முன்னேறத் துடிக்கின்ற பிள்ளைகளைத்தான் கடவுள் சோதிக்கின்றார். 

“சிவா!… எவ்வளவு காசு தேவைப்படும்?” 

அவனுக்குச் சிரிப்பு வந்தது. 

“என்ன அகிலா… ஏதோ கேட்டவுடனை தரப்போற மாதிரிக் கேட்கிறீங்கள்?” 

“சரி!… எனக்கு அவ்வளவு உதவி செய்யிற அருகதை யில்லத்தான்! உங்கட கவலையிலை நானும் சேரக்கூடாதா? சும்மா அறியிறதுக்காகத்தான் கேட்டன்” -பொய்க் கோபம், அதுகூட அவனை அசைத்து விட்டது. 

சொன்னான்… 

அகிலா தெம்பூட்டினாள் “என்ன சிவா இதுக்குப்போய் பயப்படுறீங்க..நீங்க ஆம்பிளை தானே?… ‘சிம்பிளா’ யோசியுங்க எல்லாம் சரி வரும்.” 

“அதுக்கில்லை அகிலா… இப்பவே சம்பளத்திலை மிஞ்சிறதில்லை… வீட்டுக்கு அனுப்புறது… என்ர சாப்பாட்டுச் சிலவுகள்… பாங்க் லோன் எடுத்தது மாதம் நூற்று அறுபது சொச்சம் வெட்டியிடுவாங்கள்… இந்த விசித்திரத்திலை நான் இன்னொரு கடனைப்பட்டிட்டு அதை எப்படி அடைக்கிறது? அவன் கம்பசுக்குப் போனாப் பிறகும் மாசம் மாசம் அனுப்ப வேண்டியிருக்குமே?” 

“பிறகு வாறதை நினைச்சு ஏன் ‘வொறி’ பண்றீங்க… இதுதான் உங்கள்ளை இருக்கிற பலவீனம்… எங்கட கஷ்டத்தைப் பார்த்து ஒரு பிள்ளையிட… படிப்பைக் கெடுக்கிறதா?… இப்ப உள்ள பிரச்சினைக்கு ஏதாவது வழி செய்வம்… பிறகு எல்லாம் சரி வரும். 

அதுகூடச் சரியான வாதம்தான். இன்றைக்கு வசதியில்லை யென்று கையை விரித்துவிட்டால் நாளைக்கு அவன் எங்கேயாவது ஒரு சாதாரண கிளார்க்காக… தனக்குத் தானே சுமையாகவும் தனக்கு மேலும் இறக்க முடியாத பளுவைச் சுமந்து கொண்டு? 

இரவு நேரம் கடந்துவிட்டது. அவன் விடைபெற்ற போது அகிலா தன் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைக் கழற்றி அவனிடம் நீட்டினாள். 

“அகிலா என்ன இது?” 

“உங்களுக்குத் தேவையான காசைத் தருகிற வல்லமை இப்ப இதுக்கு இருக்கு.” 

அவனது வாய் அடைத்துப் போய்விட்டது. முயன்று கதைத்தான். 

“அகிலா… உங்களிட்ட இருக்கிறதே இந்த ஒரேயொரு சங்கிலிதான். நீங்கள் வேலைக்கும் வெளியிலேயும் போகைக்கை இதுதான் கழுத்திலை இருக்குது. அதைக் கழட்டித் தந்திட்டால்?” “சிவா, சங்கிலி தங்கத்தில செய்து போடுறது இப்பிடி ஏதாவது ஆபத்துக்கு உதவுமெண்டுதான்.” 

அவனுக்கு மனது கேட்கவில்லை. 

“வேண்டாம் அகிலா… அம்மாவுக்குத் தெரியாமல் நீங்கள் இதைச் செய்யுறீங்கள்… சரியில்லை… நான் எப்படியாவது காசு பிரட்டுவன். கவலைப்படாதையுங்கோ” எனக் கடத்தினான். 

“அம்மாவுக்கும் சொல்லி விட்டன்…” 

“இல்லை… எனக்காகத்தான் இப்படி எல்லாம் சொல்லுறீங்கள். என்ர கஷ்டம் என்னோடை! தயவுசெய்து வைச்சிருங்கோ…’ என்றவாறு சங்கிலியை வேண்ட மறுத்தான். 

“என்ன சிவா இது? அது ஒரு நல்ல காரியத்துக்கு உதவுவது என்ட சந்தோஷம் எனக்கு இல்லையா?… இதுக்கும் மேலே கேக்காட்டி எனக்குக் கோபம்தான் வரும். கதைக்க மாட்டன்” என்றவாறு அவனது கையைப் பிடித்துக் கொடுத்தாள். 

அவனது கண்கள் பனித்து விட்டன. 

– தொடரும்…

– 1975-ம் ஆண்டளவில் சுதாராஜ் எழுதிய முதலாவது நாவல்.

– இளமைக் கோலங்கள், முதல் பதிப்பு: 2005, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

சுதாராஜ் விபரக்குறிப்பு இயற்பெயர்: சிவசாமி இராஜசிங்கம்புனைபெயர்: சுதாராஜ்கல்வி: பொறியியற் துறை, மொரட்டுவ பல்கலைக்கழகம், இலங்கை. தொடர்புகளுக்கு:முகவரி: சி.இராஜசிங்கம், (சுதாராஜ்)சீ கிறெஸ்ட் அபார்ட்மென்ட்,189/1, 6/1, மகாவித்தியாலய மாவத்த,கொழும்பு 13, இலங்கை. S.Rajasingham (Sutharaj)Seacrest Appartment,189/1, 6/1, Mahavithyalaya Mawatha,Colombo 13, Srilanka. தொலைபேசி: 0094 112380999 (இலங்கை)தற்போதைய தொலைபேசி தொடர்பு: 00218 913084524 (லிபியா) E mail: rajsiva50@gmail.comrajasinghamsivasamy@yahoo.com படைப்புகள்: (வெளிவந்த நூல்கள்) சிறுகதைத் தொகுப்பு பலாத்காரம் - தமிழ்ப்பணிமனை வெளியீடு -1977…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *