வக்கீல் வைத்த பீஸ் பாக்கி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 31, 2024
பார்வையிட்டோர்: 2,259 
 
 

பொதுவாக, நீதிமன்றத்தில் கச்சா முச்சாவென்று ஒருவருக்குமே புரியாதபடி வாதாடி, நீதிபதியையும், சக வழக்கறிஞர்களையும், நீதிமன்றத்தையும் நீங்காத குழப்பத்தில் ஆழ்த்துவதோடு என் பணி முடிவடைந்து விடும். ஒரு சந்தர்ப்பத்தில், என் மூத்த வழக்கறிஞர் மகுடபதி அவர்கள், ஒரு சிவில் வழக்கின் தீர்ப்பை என்னிடம் கொடுத்து, அதைத் தமிழில் மொழிபெயர்த்துத் தரச்சொன்னார். நானும், அவர் சொன்ன வண்ணம் அதைச் செய்து தந்தேன். எனக்கு, காலைப் பலகாரம் சாப்பிட ஐம்பது ரூபாய் தந்தார். பிறகு, சில சட்ட ஆவணங்களைத்தந்தார். நானும் அவைகளை மொழிபெயர்த்தேன். புரியாத தமிழ் எழுத்தில் எழுதப்பட்டிருந்த 1905-ம் வருஷத்திய அமராவதி ஜமீன்தார் வம்சத்துப் பத்திரங்களை கஷ்டப்பட்டு வாசித்து, வேறு தாள்களில், தெளிவாக, திருத்தமாக எழுதித்தந்த போது, ஒரு பக்கத்துக்கு நூறு ரூபாய் என்ற கணக்கில் எனக்குச் சம்பளம் தந்தார்.

“உங்களை விட்டா, இந்த மாதிரி மொழிபெயர்க்க யாரு இருக்காங்க சாமி?” என்ற சிலாகிப்பை அவர் என்னிடம் சொல்லியிருக்கக்கூடாது. புகழ்ச்சி என்பது எனக்குப் போதை தந்தது. கொஞ்சம் கர்வமும் வந்து விட்டது. அதிலிருந்து, ஒரு பக்கத்துக்கு இருநூற்று ஐம்பது என்று மொழிபெயர்ப்புக்கட்டணம் என்று நிர்ணயித்துக்கொண்டேன். ஆங்கிலத்தில் வாதிடும் வழக்கறிஞர் என்ற பெயர் என்னை விட்டுப்போய், “ட்ரேன்ஸ்லேட்டர்” என்ற அடையாளம் எனக்கு வந்து சேர்ந்தது.

வக்கீல் மகுடபதி ஒரு கோட்டை முரசு என்று எனக்குத்தெரியாது. போகின்ற இடங்களிலெல்லாம் அடியேனது “துபாஷி” வேலையைப்பற்றி முரசறைந்து சொல்லி, அநேகர் என் வீடு நோக்கி வர ஆரம்பித்து விட்டனர். போதாக்குறைக்கு, பாரில் போய் என்னைப்பற்றி நிறைய பிரஸ்தாபித்து விட்டார். (“பார்” என்பது நீங்கள் நினைக்கும் சோம பானம் அருந்தும் பார் அல்ல. இது வழக்கறிஞர்களின் சங்கமம்).

இப்படி, கருப்பு கவுன் மாட்டிக்கொண்டு வாதாட வேண்டிய என்னை, கணினியில் நாள் முழுவதும் தட்டச்சு செய்ய வைத்த பெருமை திரு. மகுடபதி அவர்களையே சாரும். அவருக்கு நான் நன்றி சொல்லியே ஆக வேண்டும். இந்த “துபாஷி” திருப்பணியை நாடி என்னிடம் வந்து சேர்ந்தவர்களில் ஒருவர் தான் வழக்கறிஞர் செந்தில் ஆறுமுகம்.

தெற்கு ரத வீதியில் இருந்த என்னுடைய அலுவலகத்துக்கு நேரடியாக பைக்கில் வந்தார்.

“நான் செந்தில் ஆறுமுகம். க்ரைம் சைடு பார்க்குறேன். நான் உங்களை கோர்ட்டுல பாத்துருக்கேன். நான் விஷயத்துக்கு வர்றேன். சார், என் கிட்ட ஒரு க்ளையன்ட் வந்துருக்காங்க. அவங்க ஒரு விடோ. அவரோட ஹஸ்பண்ட் ஆர்மில இருந்தாரு. ஆனா, இறந்துட்டாரு. இப்ப அவரோட வீட்டுக்காரம்மா மிலிடரி பென்ஷன் வாங்கிட்டு இருக்காங்க. அவங்களோட உண்மையான பேரு முத்தாலம்மாள். ரேசன் கார்டு, வாக்காளர் அட்டையில அவங்க பேரு முத்தாலம்மாள்னு தான் இருக்கு. ஆனா, அவங்க வீட்டுக்காரர் மிலிடரில இருந்த போது, அவங்க பேரை தவறுதலா, முத்தழகுன்னு எழுதிக்குடுத்துட்டாரு. முத்தழகுங்கறது அவங்களோட செல்லப்பேராம். இப்ப, நீங்க ஒரு அஃபிடவிட் எழுதி, முத்தழகுங்கறதும், முத்தம்மாளும் ஒரே ஆளு தான்னு சொல்லணும். இதை மட்டும் எழுதிக்குடுங்க சார். நீங்க கேக்குற பீசை குடுத்துர்றேன்.”

சில வேண்டுகோள்களை, உத்தரவாகவே ஏற்றுக்கொண்டு செயல்படுபவன் அடியேன்.

வக்கீல் செந்தில் ஆறுமுகம் சொன்னதும், “சார், நீங்க போயிட்டு, ஒரு மணி நேரம் கழிச்சு வாங்க. நான் முடிச்சுத் தர்றேன். உங்களுக்கு பிரிண்ட் போட்டு, என்னோட சீல் போட்டுத்தரவா?” என்றேன்.

“சரிங்க சார் ! அப்படியே குடுங்க! நான் அதை டில்லி ஆர்மி ஹெட் ஆபீசுக்கு அனுப்பணும். சட்டுன்னு முடிச்சுக்குடுங்க.” என்று கட்டளையிட்டார்.

வீட்டுக்குள் திரும்பி, எனக்கென ஒதுக்கப்பட்ட அலுவலக அறையில் அமர்ந்து கொண்டு, என் மடிக்கணினியை இயக்கி, குடுக்கப்பட்ட தகவல்களைப் பார்த்துக்கொண்டே, விசைப்பலகையில் மடமடவென தட்டச்சு செய்தேன். அரை மணி நேரம் கூட ஆகி இருக்காது. என்னுடைய மன நிலை என்ன விதமாய் இருந்ததோ தெரியவில்லை. கண்களும், விரல்களும் ஒத்துழைக்க, அரை மணித்தியாலத்தில் அதை முடித்து விட்டேன். தட்டச்சு செய்த விடயத்தை, கணினியின் திரையில், ஒரு முறை நன்றாகச் சரி பார்த்துக்கொண்டேன். மிகச்சரியாக வந்திருந்தது. ஓர் விதவையின் வீட்டுக்கு மாதா மாதம் ராணுவத்தின் ஓய்வூதியத்தை கொண்டு வந்து தரப்போகும் அஃபிடவிட்டை நான் தயார் செய்திருந்தேன்.

மீண்டும் ஒரு முறை வாசித்துப்பார்க்கும் போது, எனக்கே ரொம்ப திருப்தியாக இருந்தது. உடனடியாக வக்கீல் செந்தில் ஆறுமுகத்தைத் தொலைபேசியில் அழைத்தேன்.

“இதோ, அஞ்சே நிமிஷத்துல நான் அங்க வந்துர்றேன் சார் !” என்றார்.

சொன்னபடியே வந்தார். உள்ளே வரவேற்று என் அறையில் அமர வைத்து விட்டு, குடிப்பதற்குச் சுத்தமான தண்ணீர் தந்தேன். திருப்தியோடு குடித்து விட்டு, “சார், அது ரெடியா ?” என்றார்.

“சார், நீங்க சொன்ன அஃபிடவிட் ரெடியா இருக்கு சார் ! இந்தாங்க!” என்று சொல்லி விட்டு, நான் தயாராக அச்சடித்து வைத்திருந்த அந்த அஃபிடவிட் ஆவணத்தை அவரிடம் நீட்டினேன். வாங்கிக்கொண்டவர் அதைச் சில நிமிடங்களில் வாசித்து விட்டார்.

“வெரி குட் சார் ! ரொம்ப கரெக்டா வந்துருக்கு ! நான் நெனச்சதுக்கு மேலாவே நல்லா பண்ணிட்டீங்க !” என்று முகஸ்துதி செய்தார்.

எந்த விஷயமானாலும் சரி, எனக்குரிய ஊதியத்தை உரிமையோடு கேட்டு வாங்கிக் கொள்ளுவேன். இந்த “துபாஷி” வேலையில் வரும் வருமானத்தில், வீட்டில் பலசரக்கு சாமான்கள் அனைத்தையும் வாங்கிப்போட்டு விட்டு, மின்சாரக்கட்டணம், செய்தித்தாளுக்கான மாதக்கட்டணம், இணைய இணைப்புக்கான கட்டணம் என்று சகல கட்டணங்களையும் கட்டிச் சமாளித்து விடுவேன்.

செந்தில் ஆறுமுகம் என் முகத்தை நோக்கினார்.

“சார் உங்க பீஸ் எவ்வளவு?” என்றபடியே தன்னுடைய சட்டைப்பைக்குள் கையை விட்டார்.

“சார், ஒரு பக்கத்துக்கு எரநூத்தி ஐம்பது. ரெண்டு பக்கத்துக்கு ஐநூறு.”

தன்னுடைய சட்டைப்பைக்குள் விரல்களால் துளாவியவர், “சார், என்னோட பர்சை எடுத்துட்டு வர மறந்துருச்சு. நான் என்னோட ஆபீசுக்குப்போயி, என்னோட குமாஸ்தா மூலமா, உங்களோட பீசை குடுத்து விடுறேன்” என்றார்.

“பரவாயில்ல சார் ! ஒண்ணும் அவசரமில்ல. நீங்க போயி பணத்தைக் குடுத்து விடுங்க!” என்றேன். “சார், எதுக்கும் உங்களோட ஜீபே நம்பரைக்குடுங்க. நான் அதுல பணத்தைப் போட்டுர்றேன்” என்றார்.

என்னோட் ஜீபே எண்ணை அவருக்குத்தந்தேன்.

“சார், நான் போயி குமாஸ்தா கிட்ட அனுப்புறேன். நான் நிறைய க்ரைம் பாக்குறேன். நேரமே இல்லை. நான் சிவில் பாக்குறதில்ல. எல்லாமே க்ரைம் தான். எனக்கு சொந்த ஊரு இங்க தான் பிள்ளையார் நத்தம் கிராமம். நான் தேவைப்பட்டா, உங்க கிட்ட ட்ரேன்ஸ்லேஷனுக்கு அடிக்கடி வர்றேன்” என்றவர், முகத்தை சுருக்கிக்கொண்டு, கீழே தலையைக்குனிந்தபடி பைக்கின் கீழே ஒரு உதை உதைத்தார்.

பைக் உயிர் பெற்றது. ஆக்சிலேட்டரை முடுக்கி, அதை அரை வட்டத்தில் திருப்பி, அகலமான தெற்கு ரத வீதியில் சரேலென்று அம்பு போலப்பறந்து போனார் செந்தில் ஆறுமுகம்.

நான் என்னுடைய் அறைக்குத்திரும்பினேன். வேறு வேலைகள் இல்லை. பணம் வருமென்று அரை மணி நேரம் காத்திருந்தேன். ஒருத்தரும் வரவில்லை. ஒரு மணி நேரம் காத்திருந்தேன். அவர் சொன்ன குமாஸ்தா வரவில்லை. வீட்டுக்குள் போய், சாப்பிட்டு விட்டு, யாராவது வாசலில் தென்படுகிறார்களா என்று எட்டிப்பார்த்தேன். ம்ம்ஹூம், ஒரு ஆளும் வந்தபாடில்லை.

‘என்னாச்சு? அவர் ஆபீசுக்குப் போயிட்டாரா? ஏன் பணம் அனுப்பலை?’ என்ற கேள்விகள் என்னுள்ளே எழுந்தன.

பெரும்பாலும் நான் என்னிடம் வரும் க்ளையன்ட்களிடம் பணம் வாங்கிக்கொண்டு தான் இந்த ஆணவ வேலையை, மன்னிக்கவும், ஆவண எழுத்து வேலையைத் தொடங்குவது வழக்கம். என்னோடு பணியாற்றும் சக வக்கீல்களிடம் கறாராக நடந்து கொள்ள எனக்கு மனதில்லை. எனவே, வேலையை முடித்துக்கொடுத்து விட்டு, என் கட்டணத்தை வசூல் செய்து கொள்ளுவேன். இதில ஒரு சில நல்ல பிரகஸ்பதிகளும் உண்டு.

வேலையை முடித்து விட்டு, கூப்பிட்டால், “சார், அந்த கட்சிக்காரர் எனக்கு இன்னும் பணம் தரல. அவரு தந்ததும் நான் உங்க கிட்ட பீசை குடுத்துட்டு வாங்கிக்குறேன்” என்பார்கள அரை நாள் கடும் பணி செய்து தயார் செய்த ஆவணம் என்னுடைய அலமாரியில் எடுத்து வைக்கப்பட்டு, அது கடைசி வரை வாங்கப்படாமலே போய் விடும்.

தூக்கம் கண்ணை அசத்தியது. என் அறையைப் பூட்டி விட்டு, உறங்கப்போனேன்.

மறுநாள் காலையில், பல் துலக்கும் போது, வாய் நிறைய பல்பொடி இருக்க, வக்கீல் செந்தில் ஆறுமுகம் என் முகத்தின் முன்பு நின்றார். “சார், பணத்தைக்குடுத்து அனுப்புறேன்” என்றார்.

“எப்ப்ப்ப்ப தருவீங்க?”

“என்னோட குமாஸ்தா மூலமா குடுத்து விடுறேன்!”

“குமாஸ்தா.எப்ப வருவாரு ?”

“இப்ப வந்துருவாரு !”

‘அங்க என்ன சுவத்தைப்பாத்து பேசிக்கிட்டு இருக்கீங்க. என்னாச்சு உங்களுக்கு? சட்டுன்னு பல்லை தேச்சுட்டு வாங்க. நான் குளிக்கணும்’ என்று சகதர்மிணி ரோகினி சத்தமிட்டாள்.

காலைப் பலகாரம் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது, பிள்ளையார் நத்தம் தந்த பிள்ளை செந்தில் ஆறுமுகத்தின் நினைவு மறுபடி வந்தது. உடனே, அவருக்கு செல்போனில் செல்லினேன்.

பதில் இல்லை. இன்னொரு தடவை கூப்பிட்டேன். பதில் இல்லை.

அன்னாருக்கு மின்னஞ்சல் போட்டேன். ஆள் பலே கில்லாடி. அந்த ஆள், சுந்தர் பிச்சையிடம் சொல்லி, என்னுடைய ஜீமெயில் மின்னஞ்சல் கணக்கையே முடக்கி வைத்து விட்டார்.

எனக்குக் கற்பூர புத்தி உண்டு அவரது குள்ளநரித்தனம் எனக்குப்புரிந்து விட்டது. இதைக்கூட புரிந்து கொள்ளாமல் இருக்க நான் என்ன மடையனா?

செந்தில் ஆறுமுகம் எனக்குத்தர வேண்டிய அந்த ஐநூறு ரூபாய் பீஸ் பாக்கியை எந்தக் கணக்கில் எழுதி வைக்கலாம் என்று எனக்குக் குழப்பம் வந்தது. வராத கணக்குகள் என்று ஒரு நீண்ட பட்டியலே என்னிடம் உண்டு.

எனக்கு பீஸ் கொடுக்காமல் டேக்கா குடுத்து விட்டுச்சென்ற இந்த ஆள், எதிர்காலத்தில் குற்றவியல் வழக்கறிஞராகி விட்டால், எனக்கு வர வேண்டிய பீஸ் பாக்கி வராமலே போய் விடும். ஏதாவது ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் கோரி, நான் மனுப்போட்டால், இந்த ஆள் அதற்கு ஆட்சேபம் தெரிவிக்கலாம். அது எனக்கு பாதகமாக அமையலாம். குற்றம் சாட்டப்பட்டவர் வெளியே ஜாமீனில் வரவே முடியாமலும் போகலாம்.

ஒரு வக்கீல் இன்னொரு வக்கீலுக்கு பீஸ் பாக்கி வைத்த வரலாற்றை முதன் முதலாய்ப் படைத்தது இந்த செந்தில் ஆறுமுகம் தான்.

தான் ஒரு கிரிமினல் வக்கீல் என்று அவர் என்னிடம் சொன்னார். வக்கீலே கிரிமினலாக இருந்தால் என்ன செய்வது?

Ramesh photo அடியேனின் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர். தொழில் தனியார் பள்ளி ஆசிரியர். இது வரை மொழிபெயர்ப்பு, புனைவு இலக்கியம், குறு நாவல்கள், கட்டுரை நூல்கள், ஆங்கிலக்கவிதை, தமிழ்த்திரைக்கதை, என்று 15 நூல்கள் வெளியிட்டுள்ளேன். எமது 3 நூல்களுக்கு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை நூல் வெளியிட நிதி தந்துள்ளது. தொலைந்து போன கால்டுவெல் ஐயரின் நூல்களை மீட்டெடுத்து, மீள் பதிப்பு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ். ரமேஷ்.அலமேலு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *