கதாநாயகி குளித்த கதை

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 18, 2024
பார்வையிட்டோர்: 5,146 
 
 

(1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஐந்து நாட்கள் மிகக் கடுமையாகப் பாடுபட்டு அந்த ‘சீனை’ எடுத்து முடித்தோம். வேலை முடியும் போது சாயங்காலம் ஆகி, இருட்டவும் தொடங்கியது. 

சாம்பலைத் தூவி விட்டது மாதிரி, பனி பெய்வதை அந்த நட்சத்திர ஓட்டலின் நாலாவது மாடியில் இருந்த என்னால் பார்க்க முடிந்தது. நான்கு மணியில் இருந்தே ராகினியின் அம்மா, ‘சாரு… பாப்புக்கு மன்ச்சு அவ்வது சாரு…’ என்று என்னைக் கூப்பிட்டுச் சொல்லிக் கொண்டிருந்தாள். அவளுக்குத் தெலுங்கு மட்டுமே தெரியும். எனக்குத் தமிழ் மட்டும். ஏதோ புரிந்துகொண்ட அளவில், டைரக்டரிடம் போய்ச் சொன்னேன். ‘சார்… ராகினிக்குப் பனி ஒத்துக்காதான் சார்…’ 

‘சரியான கழுத்தறுப்பா இருக்காளே… இன்னும் ரெண்டே ரெண்டு ஷாட் தான் இருக்கு. அதுக்குள்ள பறக்கறா? பனி ஒத்துக்கா தாமா? சும்மா இருக்கிற போது, சோத்துக்குத் தாளம் போடுவாளுக. கதவைத் தொறந்து வைச்சுக்கிட்டு எவனாவது வர மாட்டானா… ஏதாவது ஒரு படத்துல தலையைக் காட்ட மாட்டோமான்னு இருப்பாளுக. போனாப் போவுதுன்னு ஒரு ‘சான்ஸ்’ கொடுத்தா, நான் தான் ஜீனத் அமன், ரேகா’ன்னு நம்மகிட்டயே சொல்றாளுக… இருங்க… அடுத்தப் படத்துல இதுகள யாரு சீண்டப் போறா?… சீமிக்கப் போறா பாருங்க..’ என்றார் டைரக்டர் எரிச்சலோடும். டைரக்டர் சொன்னதில் பல பகுதிகளை நீக்கிவிட்டு நல்லதை மட்டும் ராகினியின் அம்மாவிடம் சொன்னேன் ‘தேங்க்ஸ் சாரு… என்றாள். அவ்வாறு சொல்லும்போது அவளது சிரிப்பும், அந்தக் குறுகிய காலத்தில் அவள் காட்டிய பாவனையும், அவள் ராகினிக்கு அம்மாவாக இல்லாமல் அக்காவாக இருப்பாளோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தின. 

எங்கள் படத்தின் கதை, மூன்று நட்சத்திர ஓட்டல் ஒன்றின் பணியாளனைப் பற்றியதாகும். கதை ஓட்டல் சூழ்நிலையில் நடப்பதால், அதைச் சித்திரிக்கச் சில காட்சிகள் சேர்க்க வேண்டும் என்று நான் சொன்னேன். தயாரிப்பாளர் ஒரு சம்பவத்தைச் சொன் னார். இளைஞன் ஒருவன் இளம்பெண் ஒருத்தியை அழைத்து வந்து அவளோடு மூன்று இரவுகள் தங்கிவிட்டு, அவளை ஏமாற்றித் தவிக்க விட்டுவிட்டு ஓடிப்போய் விடுகிறான். அபலையாகிவிட்ட அந்த இளம் பெண்ணை அடைய ஓட்டல் மானேஜர் பயங்கரச் சதித் திட்டம் தீட்டுகிறான். கதாநாயகன், கடைசிக் கட்டத்தில் தோன்றி மானேஜரின் சதியைச் சுக்கு நூறாக்கி, அவளைத் தப்புவிக்கிறான். 

தயாரிப்பாளர் சொன்னது அருமையான டிராக் என்று எல்லோரும் ஒப்புக் கொண்டனர். டைரக்டரும் அது நன்றாக ஒர்க்-அவுட் ஆகும் என்றார். ஆனால் ஒரு சிறு திருத்தம் செய்தார். யாரோ ஓர் இளைஞன் யாரோ ஒரு பெண்ணை ஓட்டலுக்கு அழைத்து வருகிறான் என்பதைக் காட்டிலும், பணக்காரக் கல்லூரி மாணவன் ஒருவன் ஏழைக் கல்லூரி மாணவியை அழைத்து வருவதாக வைத்துக் கொண்டால், இன்னும் ‘எபக்டாக’ இருக்குமே என்று டைரக்டர் சொன்ன திருத்தத்தை எல்லோருமே ஒப்புக் கொண்டார்கள். ரொம்பப் புதுமையாக இருக்கிறதே என்றும் சொன்னார்கள். ‘புதுமை மட்டுமல்ல, அது புரட்சியும்கூட. பணக் காரத்தனத்தை தோலுரித்துக் காட்டுகிற பணி’ என்று டைரக்டர் சொன்னார். எங்கள் டைரக்டர் இங்கிலீஷ், ஃப்ரென்ச், ஜெர்மன், முத்தான வெளிநாட்டுப் படங்களை மட்டுமே பார்ப்பவர். அவர் படங்கள் மிக நவீனமாக, இருப்பதாய்ப் பெரிய பத்திரிகைகள் எல்லாம் எழுதின. அவர் வெளிநாட்டுப் படங்களிலிருந்து கதை களையும், சீன்களையும், ஏன் ஷாட்டுகளையும் கூடக் காப்பி அடிப்பதாகச் சிறு பத்திரிகைகள் எழுதத்தான் செய்தன. தாக்கி எழுதிய பத்திரிகைகள் எல்லாம் ஐநூறு பிரதியே விற்கிற சின்னப் பத்திரிகைகள். ஆகவே சிலவற்றை நாங்கள் அலட்சியப்படுத்தி விட்டோம். உலகம் பூராவும் பெரியவர்கள் ஒரே மாதிரியாகத்தான் சிந்திக்கிறார்கள். ‘கிரேட்மென் திங்க் அலைக்’ ஏன் இருக்கக் கூடாது…? எங்கள் டைரக்டரும் பெரியவர்தானே! 

‘பணம் ஏழ்மையை வெல்லுகிற இந்தக் காட்சியை எடுத்து விடுங்கள்!’ என்று சொல்லிவிட்டு, அடுத்த ஷெட்யூலுக்குப் பணம் புரட்டச் சொந்த ஊருக்குப் புறப்பட்டுப் போனார் தயாரிப்பாளர். 

நாங்கள் உடனடியாகக் காரியத்தில் இறங்கினோம். கல்லூரி மாணவன் வேஷத்துக்கு வங்கியில் வேலை செய்துகொண்டு சினிமாவில் வாய்ப்புத் தேடிக் கொண்டிருந்த ஓர் இளைஞனைக் கண்டு பிடித்தோம். அந்தப் பாத்திரத்துக்குத் தேவையான அதி நவீன ஆடைகளை தன் வசம் இருக்கிறது என்று சொன்னதன் பேரில் அந்த வாய்ப்பை அவன் பெற்றான். 

ஏழைக் கல்லூரி மாணவியாக நடிக்க, நடிகையைத் தேடும் போதுதான், தயாரிப்பாளர்களுக்குப் புதுமுகங்களை அறிமுகப் படுத்தும் ஏஜெண்டு மூலம் ராகினியைச் சந்தித்தோம். ஏஜெண்டைப் பற்றிப் பலர் பலவிதமாக எங்களுக்குச் சொன்னார்கள். நாம் நல்ல விதமாகச் சிந்திப்போமே! தமிழ்நாட்டின் பிரபலமான டைரக்டர் ஒருவரின் இந்திப் படத்தில் ஒன்றரை நிமிஷம் வந்து போயிருந்தாள் ராகினி. அது நூறு நாட்களுக்கு மேலேயும் ஓடவே, எல்லாப் பத்திரிகையிலும் ராகினியின் படமும், விலாவாரியான பேட்டியும் பிரசுரமாகி அவள் பிரபலமாகியிருந்தாள். எங்கள் படத்தில் சின்ன ரோலில் நடிக்கத் தயங்கினாள். டைரக்டர் ராகினியிடம் என்னைத் தள்ளிவிட்டார். ‘சின்ன ரோல் என்றாலும் சிறப்பான ரோல். இரண்டாவது கதாநாயகி என்றாலும் மக்கள் மனசில் நிற்கப் போவது என்னவோ ராகினிதான்’ என்று மனசாரப் பொய் சொல்லி, ராகினியைச் சம்மதிக்க வைத்தோம். 

இளைஞனும் அவளும் அறை எண் 501-இல் இரண்டடி பாடி விட்டு, அடுத்து இரண்டடி பாடுவதற்காகக் கோல்டன் பீச்சுக்குப் போனார்கள். அடுத்த நான்கு அடி மகாபலிபுரத்திலும், முட்டுக் காட்டிலும், கடைசி இரண்டு அடியை, நைட்கவுனில் படுக்கையிலும் முடிக்கிறாள் அவள். ராகினி பாடி முடிப்பதற்கும், பூனை பாலைக் குடிப்பதற்கும் சரியாக இருந்தது. 

இளைஞன் ராகினியின் கற்பைச் சூறையாடி விட்டுச் சென்ற பின், அவள் ஒரு சோகப் பாட்டுப் பாடுகிறாள். 

பல்லவி 

‘இழக்கக் கூடாததை இழந்த பின்னே – நீ
இருக்கக் கூடாது இந்த உலகில் பெண்ணே 

அநுபல்லவி 

ராஜ வசந்தம் வீணாய்ப் போனதே…
ராகப் புரட்சி காற்றில் கலந்ததே… 
ரோஜா – அத்தர் கண்ணீர் வடிக்குதே…
பொன்மணி குப்பையில் கொட்டிப் போனதே… 

என்று பலவாறு பாடியவாறு அழுகிறாள். சோபாவில், படுக்கையில், வராண்டாவில், தரையில் படுத்துக்கொண்டு, நின்று கொண்டு, இருந்து கொண்டு தாரைதாரையாகக் கண்ணீர்விட்டு உள்ளத்தை உருக்கும் விதத்தில் நடித்திருந்தாள் ராகினி. தாய்மார்கள் பிழியப் பிழிய இந்தக் காட்சியில் அழப் போகிறார்கள் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். இடையிடையே காமுகனாக மானேஜர் அவளை ஒளிந்து நின்று பார்ப்பதும், தலையாட்டுவதும் குளோஸ் – அப்பில், ஒரு புலியின் ஒப்பிடுதலோடு படமாக்கப்பட்டது. 

அப்புறம்தான், டைரக்டர் ராகினியைப் ‘போகலாம்’ என்று உத்தரவு கொடுத்து அனுப்பி வைத்தார். ராகினி தந்த ஒத்துழைப் புக்கு நன்றி கூறி, தன் அடுத்த படங்களிலும் அவளுக்கு நிச்சயம் இடம் உண்டு என்று வாழ்த்தி அனுப்பி வைக்க மறக்கவில்லை டைரக்டர். 

ராகினி எங்களை நோக்கி டாடா, சீரியோ, பையை என்றெல் லாம் கையசைத்துச் சொல்லிவிட்டுப் போன ஐந்தாவது நிமிஷத்தில், டாக்சியில் வந்து இறங்கினார் தயாரிப்பாளர். ஊரிலிருந்து நேராக ரயில் அழுக்கோடு வந்திருந்தார். தான் ஊரில் இல்லாத நாட்களில் எடுக்கப்பட்ட காட்சிகளைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆசைப் பட்டார். எங்கு, என்ன விதத்தில், என்னென்ன காட்சிகள் எடுக்கப் பட்டன என்று டைரக்டர் விலாவாரியாகச் சொன்னார். எல்லா வற்றையும் மிகுந்த கவனமாகக் கேட்ட தயாரிப்பாளர், ‘ராகினி குளியல் காட்சி எடுத்தீர்களா’ என்று கேட்டார். 

நாங்கள் திடுக்கிட்டுப் போனோம். ராகினி குளிக்கும் காட்சியை நாங்கள் எடுக்கவில்லை. 

‘என்ன சார்… ஒரு பெண், ஒரு பையனுடன் மூனு நாள், மூனு பகல், மூனு இரவு ஓர் அறையில் தங்கியிருக்கிறாள். மூனு நாளும் அவள் ஒரு தடவைக் கூடாவா குளிக்காமல் இருப்பாள்’ என்று கேட்டார் தயாரிப்பாளர். 

நியாயம்தானே! ஒரு கல்லூரியில் படிக்கும் பெண்ணுக்கு இது கூடவா தெரியாமல் இருக்கும். மூனு நாள் குளிக்காமல் இருப்பதால் வரும் சுகாதாரக் கேடு, அழுக்கு, அழுக்கினால் ஏற்படும் கிருமிகள், மற்றும் எத்தனை சங்கடங்கள், ராகினிக்குத்தான் தோணவில்லை. எங்களுக்கும் ஏன் இது தோன்றவில்லை? 

‘டைரக்டர் சார்… டிஸ்ரிபியூட்டர்களுக்கு நான் என்ன பதில் சொல்றது… நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகறமாதிரி கேட்பாங்களே கேள்வி…? சரி… பரவாயில்லை. என்ன செலவானாலும் சரி… கையோடு, கையா இன்னைக்கே ‘டபுள் கால்ஷீட்’ போட்டு, ராகினியைக் குளிக்க வச்சுடுங்க…” என்றார் தயாரிப்பாளர். 

வாழ்க்கையில் தர்மசங்கடமான விஷயங்கள் என்னைத்தான் தேடிக்கொண்டு வரும். ராகினியைக் குளிக்க அழைத்து வரும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. போனேன்… ராகினி தங்கியிருந்தது பெரிய ஓட்டல். அறைக் கதவைத் திறந்தது ராகினியின் அம்மா. உள்ளே ஹாலில் வெள்ளைச் சட்டையும், அதி வெள்ளை வேட்டியுமாக ஒரு மனிதர் உட்கார்ந்திருந்தார். கருத்த மனிதர் குண்டாக. கண் சிவந்திருந்தது. சாப்பிட்டு முடித்த தட்டுகள், காலி டம்ளர்கள். சோபாவில் நானும் ராகினியின் அம்மாவும் அமர்ந்து கொண்டோம். அவள் என் காதருகே குனிந்து ‘ஏமி சார்… ஏமி சங்கதிலு… என்றாள். நான் இன்னும் எடுக்க வேண்டிய காட்சி பற்றிச் சொன்னேன். ‘படானிக்கா. லேக போதே தனிக லேசி சூசே தானிக்கா’ என்றாள். (படத்துக்கா… தனியா போட்டுப்பாத்துக்கவா..’ என்றதோடு, கண்ணையும் சிமிட்டினாள்) அப்புறம், ‘மீரு தனிகா டப்பு ஸ்தாரா…’ என்றாள். (தனியா பணம் கொடுப்பீங்களா). நான் ‘கொடுப்பேன்’ என்றேன். ‘மீரு. நிஜங்களே மன்ச்சி மனுஷி சாரு…’ என்றாள் என் தோள்மேல் கை போட்டு. (நான் நல்லவனாம்) 

என்னைப் படுக்கை அறைக்கே அழைத்துப்போய், அங்கிருந்த ஒற்றைச் சாய்வு நாற்காலியில் உட்கார வைத்துவிட்டுப் போய் விட்டாள். நான் அறையில் தனியாக விடப்பட்டிருந்தேன். படுக்கை அறை, நான் குடியிருந்த வீட்டைவிடப் பெரிசாக இருந்தது. அகலமான கட்டில், மெத்தை, நகக்கண் அளவுக்கும் அழுக்குப்படாத வெள்ளை விரிப்பு. அறையை ஒட்டிய குளியல் அறையிலிருந்து ஷவர் சப்தம். இனிமையான மணம் அந்த அறையில் கமழ்ந்தது. கதவைத் திறந்துகொண்டு, அங்கி மாதிரி ஆடை போர்த்திருந்த ராகினி வெளிவந்தாள். 

என்னைப் பார்த்ததில் ஆச்சரியம். 

‘என்னா சாரு…’ என்றாள் நான் விஷயத்தைச் சொன்னேன்.

‘நான் கிளாமர் ரோல் பண்ணமாட்டேன் சாரு… ஊஹும்…’ என்றாள். 

நான் அவசரமாக மறுத்தேன். 

‘இது நிச்சயம் கிளாமர் ரோல் இல்லே… ஒரு ஸ்டூடன்ட் டுன்னா…’ என்று என்னவோ ஒரு பொய்யை உண்மை போலச் சொல்லத் தொடங்கினேன். நான் சொல்வது பொய்யானதால், என் குரல் எனக்கே கேட்காமல் மெலிந்து சோகையாய் வெளிப்பட்டது. 

‘பச்’ என்று என்னை மறுத்தாள் ராகினி. யோசித்தவாறு, தலைமுடியைச் சிக்கெடுத்தவாறு, குறுக்கும் நெடுக்கும் நடந்தாள் ராகினி. பிறகு அம்மாவிடம் போனாள். நான் தனியாகவிடப் பட்டது எனக்கு ஆசுவாசமாக இருந்தது. ராகினி, அம்மா, அந்த ஆள் மூவரும் பேசுவது எனக்குச் சன்னமாகக் கேட்டது. அம்மாவும் பெண்ணும் அறைக்குள் வந்தார்கள். அம்மா கேட்டாள். ‘மீரு தனிகா டப்பு ஸ்தாரா சாரு…’ 

‘சீனை முடித்தவுடன் கையிலேயே வாங்கிக் கொடுத்துடறேன்’ என்று நான் சொன்னேன். 

ராகினி மட்டும் என்னுடன் வந்தாள். 

வண்டியில் ராகினி என்னிடம் சொன்னாள். 

‘இது என்னோட முதல் படம். இது வெளிவரனும். நாலு வாரமாவது ஓடினாத்தான் அடுத்து எனக்கு சான்ஸ் வரும்… இதுல. இந்த சீன்ல நான் நடிக்க மாட்டேனு சொன்னா ராகினி தகராறு பன்றவள்னு சொல்லுவாங்க. இது பீல்டுல பரவிச்சுன்னா எனக்கு வர சான்சும் போயிடும். இப்பவே லாட்ஜ் மானேஜர் பணம் கேட்டுத் தொந்தரவு பண்றாரு சாரு…’ 

நான் வெளியே பார்த்துக்கொண்டு வந்தேன். 

பனி கவிந்து, குளிர் நடுங்கியது. அப்போதுதான் குளிர்ந்த நீரில் குளித்து வந்தவள், மீண்டும் பச்சைத் தண்ணீரில் குளிக்க முடியாது. ஆக, உடனே சுடுநீர் தேவைப்பட்டது ராகினிக்கு. 

நான் ஓட்டல் மானேஜரை அணுகினேன். ஓட்டல் விதிப்படி காலைகளில் மட்டும்தான் சுடுநீர் விட முடியும் என்றும், அந்த ஐம்பது மாடியில் இருக்கும் அத்தனை அறைகளுக்கும் சுடு தண்ணீர் போய்ச் சேர வேண்டும் என்றால் குறைந்தது மூன்று மணியாவது ஆகும் என்றார் அவர். 

தெருமுனைத் திருப்பத்தில் உடுப்பி ஹோட்டல் ஒன்று இருந்தது. அண்டாவெந்நீர், மற்றும் அண்டா வாடகை அண்டா வைத் தூக்கிக் கொண்டுபோய் மாடியில் வைக்க என்று இருநூறு ரூபாய் செலவாயிற்று. 

அந்தச் சின்ன குளியல் அறையில் ஏகப்பட்ட விளக்குகளைப் பிடித்துக் கொண்டு லைட்மேன்கள் நின்றார்கள். இருந்தும் ஒளி போதாது என்று கேமராமேன் கருதி, மேலிருந்தும் வெளிச்சம் வர ஏற்பாடு செய்தார். குளியல் அறையின் தளத்தில் பல்லி மாதிரி ஒருவர் தவழ்ந்துகொண்டு விளக்கைப் பிடித்தார். வெளிச்சம் கண்ணைக் கூசியது. 

ராகினி, மிக மென்மையான ஒற்றை ஆடையோடு அண்டாவுக் குப் பக்கத்தில் வந்து நின்றாள். இப்போது இன்னொரு சிக்கல் பிறந்தது. அண்டாவில் இருந்து ஒரு பெண், குவளையால் மொண்டு ஊற்றிக்கொண்டு குளிப்பது நன்றாகவா? இருக்கும்?… யாருக்கோ ஒரு நல்ல யோசனை பளிச்சிட்டது. ஓடினார்கள். ஓட்டல் ‘லானில்’ பூச் செடிகளுக்குத் தண்ணீர் தெளிக்கத் தோட்டக்காரனிடம் பூவாளி இருக்குமே! பத்து ரூபாய் வாடகையாகக் கொடுத்து வாங்கி வந்தார்கள். மீண்டும் ஒருவர் பல்லி மாதிரி ஷவர்க் குழாய்க்கு மேல் தொற்றிக் கொண்டு தண்ணீர் ஊற்றினார். ஷவரிலிருந்து வருவது போலவே சுடுநீர் கொட்டியது. 

பூவாளி நீரில், மிகமிக மென்மையான இரவுக் கவுனில், ஷாம்பு நீர் உடம்பில் வழிய, அசுர வெளிச்சத்தில், தேய்த்துத் தேய்த்துக் குளித்தாள் ராகினி. 

– 1985

– பிரபஞ்சன் சிறுகதைகள், முதற் பதிப்பு: 2004, கவிதா பப்ளிகேஷன், சென்னை.

பிரபஞ்சன் பிரபஞ்சன் (ஏப்ரல் 27, 1945 - டிசம்பர் 21, 2018) தமிழ் எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். வார இதழ்களில் பணியாற்றிய இதழாளர். அரசியல் கட்டுரையாளர். தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது 1995-ம் ஆண்டு பெற்றவர். பிரபஞ்சன் 1980-1982-ல் குங்குமம் வார இதழிலும், 1985-1987-ல் குமுதம் வார இதழிலும் பின்னர் 1989-1990-ல் ஆனந்த விகடன் வார இதழிலும் பணியாற்றினார். நக்கீரன் இதழில் அரசியல்கட்டுரைகளும், மொழியாக்கங்களும் செய்துவந்தார். பிரபஞ்சன் பொதுவாசிப்புக்குரிய பெரிய இதழ்களில் பணிக்குச்…மேலும் படிக்க...

1 thought on “கதாநாயகி குளித்த கதை

  1. நான் மகள் வர மறுத்து அம்மாவை நடிக்க அனுப்பி விடுவாள் என்று நினைத்தேன் 😀😀

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *