தன்னூழியமும் தற்சார்பும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 14, 2024
பார்வையிட்டோர்: 1,109 
 
 

(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

உலகில் ஒவ்வொரு மகனும் தன் பிழைப்பிற்கும் உயர்வுக்கும் பிறர் சார்பின்றித் தற்சார்புகொண்டு தானே மூலகாரணமாகின்றானென்பது படைப்புக் கடவுளின் நோக்கமெனத் தெரியவருகின்றது. ஒருவன் தனக்கு வேண்டிய ஊண் உடைகளுக்கும் ஏனையவற்றிற்கும் பிறர் உதவி கொண்டிருக்கவேண்டுமென்பது அவர் நோக்க மன்று. ஒருவன் அவைகளைத் தனக்குத்தானே ஆக்கிக் கொள்ளவேண்டுமென்பதே அவர் தம் கட்டளையாகும். இவ்வகை தவிர வேறெவ்வகையும் ஒருவனுக்கு உறுதியான துணையும் நலனும் ஆகவே ஆகாது. 

ஆகையினாலே, இளைஞர்கள் தங்கள் தேவைகளுக்காகப் பிறரை எதிர்பாராதிருக்க முயலவேண்டியது முதன்மை யானது. அவரவர்கள் தங்கள் உடைகளைத் தாமே உழைத்துப்பெற்று, அவைகளைத் தாமே துப்புரவு செய்துகொள்ளவும் வேண்டும்! உணவு கொள்வதிலும் பெரும்பாலான வேலைகளைத் தாமே ஏற்றுக்கொள்ளவேண்டும். அவர்கள் இளமையிலேயே எழுதப்படிக்கக் கற்றுக்கொண்டு தம் கணக்கைத் தாமே பார்த்துக்கொள்ளவும் திறமைகொள்ள வேண்டும். விரைவில் உலக வாழ்க்கையில் நுழைந்து எல்லாவகையிலும் தற்சார்புகொண்டே அதனை நடத்து தற்கேற்ற அறிவும் ஆற்றலும் இளமையிலேயே பெற்றுக் கொள்ளவேண்டும். 

மக்கள் உலக வாழ்க்கையைச் செவ்வனே நடத்துவ தற்குப் பற்றுக்கோடாக, அவர்கள் இளமையிலேயே கைத்தொழில் வேலையோ, வாணிபம் நடத்தவோ வேறு அலுவல்கள் பார்க்கவோ கற்றுப் பழக்கம் கொண்டிருக்க வேண்டும். எவனொருவன் தனக்கு ஊழியம் தானே செய்துகொண்டு தற்சார்பு கொண்டே உழைத்துப் பிழைத்து வருகின்றானோ, அவன் பிறர் விருப்பத்துக்கும் நன்மதிப்புக்கும் தகுதியுள்ளவனாகின்றான். 

சிந்திப்பதற்கு மனமும் தொழில் செய்வதற்குக் கை கால்களும் கொண்ட ஒருவன், உழைத்து ஈட்டின பிற னொருவன் பொருளால் நன்மைபெற விரும்புதல் மானக் கேடன்றோ? இச்சோம்பேறி அந்கலங்களை த் தானே உழைத்து அடைவானாபின், பின், அஃது அவனுக்கு மன நிறைவு கொடுப்பதுந் தவிர அவ்வகை மானக்கேட்டுக்கும் ஆளாக மாட்டானல்லவா? 

நாம் நேரில் செய்யவேண்டிய ஒரு வேலைக்குப் பிறரை ஏவிச் செய்தல் அறு குறைப்பாடே யாகும். மேலும் அது கெட்டுப்போனாலும் போகும். நாம் செய்யக்கூடிய வேலை களைப் பிறரிடம் விடவே கூடாது. 

1. வல்லாளதேவனும் வண்டிக்காரனும் 

நாட்டுப்புறத்தான் ஒருவன் ஒரு பாட்டைவழியே ஒரு சுமை வண்டியை ஓட்டிக்கொண்டு போனான். பாட்டையிலிருந்த ஓர் உளையில் வண்டிச் சக்கரம் ஒன்று சேற்றில் நன்றாகப் புதைந்து போயிற்று. அவன் எவ்வளவு அதட்டி அடித்து மாடுகளை ஓட்டியும் அச்சக்கரம் மேலும்மேலும் புதைந்துபோயினதே தவிர மேலெ ழும்பவில்லை. வண்டிக்காரன் அலுத்துப்போய் மனம் மிகவருந்தி “வல்லாளதேவா! வந்துதவிசெய்வாயே,”  என்று மன்றாடித் துதித்துக் கேட்டுக்கொண்டான். வல்லாளதேவர் அவனுக் கெதிரில் வந்து நின்றுகொண்டு, ‘முட்டாளே! வீணுக்கேன் மாட்டைக் கொல்லுகிறாய்? நீயே உன் உடையை இழுத்து இடுப்பிற் கட்டிக்கொண்டு அச்சக்கரத்தைத் தோள்கொடுத்துத் தூக்கு, அச்சக்கரம் மேலெழும்ப மாடுகள் வண்டியை எளிதில் இழுத்துக்கொண்டு போய்விடும்; இதுவே யான் உனக்குச் செய்யும் உதவி,” என்று சொல்லி மறைந்தார். 

2. வயலும் வானம்பாடியும் 

கதிர் முற்றிய ஒரு வயலில் ஒரு வானம்பாடி குஞ்சு பொரித் துப் பாதுகாத்துக்கொண்டிருந்தது. அது வெளியே இரைதேடப் போகும்போதெல்லாம் வயலண்டை நடக்கும் செய்திகளைப் பற்றித் தனக்குத் தெரிவிக்கும்படி தன் குஞ்சுகளுக்குக் கட்டளை யிட்டுப் போகும். ஒருநாள் அக்குஞ்சுகள் தாயைப் பார்த்து, ‘அம்மா! வயற்காரனும் அவன் மகனும் இங்கே வந்து வயலை விரைவில் அறுத்து விடவேண்டுமென்றும் அதற்காகத் தம் அக்கம்பக்கத்தாரை உதவிக்கு அழைத்துக்கொள்ள வேண்டுமென்றும் பேசிக்கொண்டு போனார்கள்,’ என்றன. அதற்குத் தாய்ப்பறவை, “அப்படியானால் நமக்கு அச்சமில்லை, நாம் இரண் டொருநாள் இங்கேயே தங்கியிருக்கலாம்,” என்று சொல்லி மறு நாளும் அதுபோலவே குஞ்சுகளுக்குக் கட்டளையிட்டுவிட்டு வெளியேறியது. 

மறுநாள் மாலையிலும் தாய் வந்தபோது அவைகள், “தாயே, நேற்று வந்த வயற்காரர்கள் இன்றும் வந்தார்கள். அக்கம் பக்கத் தார் வரவில்லையே என்றும், தங்கள் நண்பர்களை உதவிக்குக் கேட்கலாமென்றும் பேசிக்கொண்டு போய்விட்டார்கள்,” என்றன. தாய்ப்பறவை அவைகளைப் பார்த்துக் “கண்மணிகளே! இப்போதும் நமக்கு அச்சமில்லை, நாம் இன்னும் இரண்டொரு நாள் இங்கேயே இருக்கலாம்,” என்று சொல்லிற்று. அதற்கு மறு நாளும் அது முன்போலவே கட்டளையிட்டு வெளியேறிப்போய் மாலையில் வந்து சேர்ந்தது. அப்போது அக்குஞ்சுகள் தாயை -நோக்கி, ”அன்னையே! வயற்காரர் இன்றும் வந்து பேசிக் கொண்டிருக்கும்போது அவர்கள் எவரையும் உதவிக்கு நம்புதற் கில்லையென்றும், நாளையன்று தாமே வந்து அறுவடை செய்து விடவேண்டும் என்றும் சொல்லிப் போய்விட்டார்கள்,” என்றன. அப்போது தாய்ப்பறவை, ‘குழந்தைகளே! நாம் பொழுது விடியு முன் இவ்வயலைவிட்டு வேறிடம் போய்விடவேண்டும், வயற்காரர் கள் தம் வேலையைத் தாங்களே செய்யத் தீர்மானித்து விட்டார் களல்லவா,” என்றது. 

3. பொருளற்ற பெருமகன் பொருள் பெற்றது 

ஒரு சீமான் வயிற்றிற் பெருமகன் ஒருவன் பிறந்தான். சீமா னுடைய சொத்துக்களெல்லாம் போய் இப்பெருமகன் உதவி யற்றவனாக நின்றான். பிழைப்புக்குவழியில்லை; என்ன செய்வான்? ஏதேனும் ஒரு தொழில் செய்யவும், அலுவல் ஒன்றைப் பார்க்கவும் அவன் கற்றுக்கொள்ளவில்லை. சீமான் வயிற்றுக் கோமான் அல் லவா இவன்? ஆனாலும், அவனிடம் ஒரு சிறந்த குணம் இருந்தது; “போனகம் என்பது தானுழந்துண்டல்’ என்னும் முதுமொழியைக் கடைப்பிடிக்கும் தன்மை. இதற்காகவென்று இவன் பல தொழில் துறைகளையும் எண்ணிப்பார்த்தான். வேறொன்றும் தோன்றாமல் பட்டாளத்திற் சேர்ந்துவிடத் துணிந்து அதிற்சேர்ந்தான். 

முதன்முதல் இவன் பட்டாளக் காவற்காரனாக வைக்கப்பட் டான்; இவனைத் தெரிந்த ஒரு பெரிய மனிதர் இவனிடம் வந்து தான் சேனைத்தலைவரைப் பார்க்கவேண்டுமென்றார். பிறகு அவர் இவனிடமே சிலநேரம் பேசிக்கொண்டிருந்து விட்டுச் சேனைத்தலைவரைக் கண்டார். அவர் தலைவரைக்கண்டு பேசிக்கொண்டிருக்கும். போது அவரிடம், “இனிஸ் என்னும் சீமானின் பிள்ளை உம்மிடம் காவற்காரனாக அமைந்திருக்க நீர் பெற்றபேறு என்னவோ!” என்று சொல்லிப் போய்விட்டார். தலைவர் பெருவியப்புக்கொண்டு உடனே காவல் வேலைக்கு வேறொரு சேவகனை அனுப்பிவைத்து விட்டு இனிஸ் மகனாகிய காவலாளியைத் தம்மிடம் வரவழைத்து அவனைப் பார்த்து, ‘ஐயா! நீர் இனிஸ் கோமானின் மைந்தரோ?’- என்ன, அதற்கு அவன் ‘ஆம்,” என்றான். பிறகு தலைவர், “அப்படியானால் நீர் பட்டாளத்திற் சேர்ந்துகொள்ள வேண்டியது ஏன்?” என்று கேட்டார். அதற்கு அவன், “ஐயா! யான் பட்டம் ஒன்றையே பரம்பரைப் பொருளாகப் பெற்றேனே ஒழிய அதற் குண்டான சொத்துக்கள் ஒன்றும் பெற்றேனில்லை. எவருக்கும் சுமையாக இருக்க எனக்கு மனமில்லை ; எனக்குரிய உணவையும் உடையையும் யானே உழைத்துப் பெறவேண்டுமென்பது எனது கோட்பாடு. எந்தத் தொழிலும் எனக்குப் பழக்கம் இல்லை.. ஆகையினாலே என் மனப்போக்கின் வழியே யான் வ்வேலைக்கு வந்தேன்,” என் று சொன்னான். அவனுடைய இச்சொற்களைக் கேட்கு முன் மிகு வியப்படைந்தவர் அப்போது பெருமகிழ்ச்சி கொண்டார். 

பிறகு சேனைத்தலைவர் இனிஸ் மகனைத் தம் வீட்டுக்கு வர வழைத்து விருந்திட்டுப் பெருமைப்படுத்தினார். உடனே பட்டா ளத்தில் அத்தலைவர் இனிஸ் பெருமகனை ஓர் உயர்ந்த அலுவலில் வைத்து, அவனுக்கு ஊதியத்தையும் வரவர உயர்த்திச் சேனைக் ள் அவனைத் தலைவனாக்கினார். சில நாட்களில் சேனைத்தலைவரின் பெண்ணுக்கும் இனிஸ் மகனுக்கும் அன்பு பெருகிக் காதலும் உண்டாக உடனே இருவருக்கும் எல்லாச் சிறப்புடனும் மணம். நிகழ்ந்தது. இப்போது இனிஸ் பிரபு தன் மனைவியுடன் இல்ல. றத்தை நல்லறமாக நடத்திவந்தனர். தன்னூதியத்துடன் மனைவி யின் உரிமைச் சொத்தும் சேர, இல்வாழ்க்கை யாதொரு குறை பாடும் இல்லாமல் நடந்தேறிவந்தது. தன்னுழைப்பு, தன்னூ தியம், தற்சார்பு ஆகிய இந்நலங்களின் நற்பயனைக் கண்டு களியுங்கள். 

4. ‘போ’ என்பதற்கும் ‘வா’ என்பதற்கும் வேறுபாடு

ஒரு காலத்தில் ஆங்கில நாட்டில் ஒரு பெரியமனிதர் ஆண் டொன்றுக்கு ஏறக்குறையப் பன்னீராயிரம் ரூபாய் வருமானம் கொடுக்கத்தக்க நிலங்களையுடையவராக இருந்தார். அவைகளை யெல்லாம் ஆட்களை வைத்துத் தாமே பயிர் செய்துவந்தார். ஆனால், சிலகாலத்தில் அவருக்குக் கடன் தொல்லை மேலிட்டுவிட்டது. அவர் அக்கடனைத் தீர்ப்பதற்காகப் பேர்பாதி நிலங்களை விற்றுவிட்டார் மிகுந்த நிலங்களை ஒரு குடியானவனிடம் இருபதாண்டுத் தவணைக் குக் குத்தகையாக விட்டுவிட்டார். அத்தவணை முடியுமுன்னரே அவன் அவ்வாண்டுக் குத்தகைத் தொகையை எடுத்துக்கொண்டு போய் அவரிடம் கொடுத்துவிட்டு அவரைப் பார்த்து, “ஐயா! உம்முடைய நிலங்களை விலைக்குக் கொடுப்பீரா?” என்று கேட்டான். பெரிய மனிதர் வியப்படைந்து, “அப்படியா! உம்மால் அவைகளை விலை கொடுத்து வாங்கிக்கொள்ள முடியுமா?” என்றார். 

“ஐயா, அஃது உங்களுக்கு உடன்பாடானால், யான் அவ்வாறே செய்கின்றேன்,” என்றான். அப்போது பெரியமனிதர் குடியான வனைப்பார்த்து, “அப்பா!யான் உன்னிடத்திலிருக்கும்நிலங்களுக்கு இரண்டத்தனை வைத்துக்கொண்டு பயிரிட்டேன்; உன்னைப்போல் குத்தகைக்குக் கொடுக்க வேண்டியவேலை எனக்கில்லை. அப்படியிருந் தாலும் யான் அதனை வைத்துப் பயிரிட்டுக்கொண்டுவந்தும் கட னாளியாய்விட்டேனே! நீ அதற்குக் குத்தகையுங் கொடுத்து, உன் குடும்பத்தையும் நடத்திக்கொண்டு என்னிடத்திலிருக்கும் பா நிலங்களையெல்லாம்விலைகொடுத்துவாங்கவல்லவனானது எவ்வாறு? எனக்கு ஒன்றும் புரியவில்லையே!’ என்றார். அதனைக் கேட்ட குடி யானவன் புன்சிரிப்போடு பெரியமனிதரைப் பார்த்து, “ஐயா, உமக் கும் எனக்கும் வேறுபாடு இரண்டே மொழிகளில் அடங்கியிருக் கின்றன; நீர் ‘போ என்று சொன்னீர், யான் ‘வா’ என்று சொன் னேன்; வேறுபாடு இவ்வளவேதான்,” என்றான். உடனே அவர் குடியானவனைப் பார்த்து, ‘ஐயா, நீ சொல்வது எனக்கு ஒன்றும் புரியவில்லையே,” என்றார். அப்போது குடியானவன் சொன்னதா வது, “நீர் விடியற்காலையில் படுக்கையிவிருந்து கொண்டே உம்மு டைய வேலையாட்களை வயலுக்குப்போய் வேலைசெய்யும்படி ஏவி விட்டு, நீர் வீட்டில் இருந்துகொண்டு வேடிக்கையாகக் காலங்கழித் துக்கொண்டுவந்தீர்; யானோ பொழுது விடியுமுன் படுக்கையை விட்டு எழுந்து வயலில் செய்யவேண்டிய வேலைகள் இன்னவை யென்று முன்ன மேயேஎண்ணிவைத்துக்கொண்டு, வேலையாட்கள் வந்தவுடனே அவர்களுடன் யானும் வயலுக்குச்சென்று செய்ய வேண்டிய வேலைகளை உடனிருந்து செய்துமுடித்து அவர்களை வீட்டுக்குப் போகும்படி அனுப்பிவிட்டு, யான் வயலில் பார்க்க வேண்டியவைகளைப் பார்த்துவிட்டுத்தான் மாலையில் எந்நேர மானாலும் வீடுவந்து சேர்வேன்,” என்பதாம். 

மனிதன் தனக்கு நண்பன் தானே என்கிற முறையிலேயே படைக்கப்பட்டிருக்கின்றான்; அவன் தன் வல்லமைக்குத் தக்கபடி மேன்மேலுயர விருப்பங்கொண் டிருக்கவேண்டும். இத்தகையான் இன்ன பேறும் மேன்மை யும் அடையக்கூடுமென்று கடவுள் மனத்தில் வைத்துக் கொண்டிருக்கின்றார். இவைகளை அவன் நேர்மையான சிறந்தவழியிற் பெற்றுக்கொள்ள முயலவேண்டும். -மாசிஞ்சர். 

உனக்கு நீயே உதவி செய்துகொள், கடவுள் உனக்கு உதவி செய்வார். 

தலைவனின் பார்வையே எவ்வளவோ செய்யும். 

-பழமொழிகள். 

– நல்லொழுக்கப் பாடம், முதற் பதிப்பு: ஏப்ரல் 1951, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிட், திருநெல்வேலி.

சேலை_சகதேவ_முதலியார் சேலை சகதேவ முதலியார் (1874 - ஜூலை 28, 1953) தமிழ்ப் பாடநூல்களை எழுதிய முன்னோடிகளில் ஒருவராக அறியப்படுகிறார். திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் பதிப்பாசிரியராகவும், செந்தமிழ்ச்செல்வி இதழின் ஆசிரியராகவும் இருந்த மணி திருநாவுக்கரசு கோரியதற்கு இணங்க பள்ளி மாணவர்களுக்கு எளிதாக புரியும் வண்ணம் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வெளியீடுகளான கழகத் தமிழ்ப்பாட வரிசையில் ஆறு நூல்களை சேலை சகதேவ முதலியார் செம்மை படுத்திக் கொடுத்தார். அந்நிறுவனம் வெளியிட்ட…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *