மாண்புமிகு கம்சன்
கதையாசிரியர்: வாஷிங்டன் ஶ்ரீதர்
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: October 26, 2024
பார்வையிட்டோர்: 5,849
(1995ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4
அத்தியாயம்-1
நீலா கைக்கடிகாரத்தைப் பார்த்துத் துணுக்குற்றாள். பிற்பகல் மணி நான்கடிக்க இன்னும் எட்டு நிமிடம்தான் இருந்தன. அருகிலிருந்த லிம்கா பாட்டில் காலியாகி விட்டதே என்று ஏக்கப் பெருமூச்சு நீலாவிடமிருந்து வந்தது. எழுதி முடிக்க வேண்டிய கடைசிப் பத்தியில் இன்னும் சில வரிகள். நாலரைக்குள் முடிக்க வேண்டும்; ஆசிரியரின் மேசைமேல் சேர வேண்டும். பள்ளிக்கூட நாள்களுக்கும் செய்திப் பத்திரிகையில் நிருபராக வேலை செய்யும் இந்த நாள்களுக்கும் அதிக வித்தியாசம் நீலாவுக்குத் தெரியவில்லை. அப்போது வகுப்பாசிரியர்- இப்போது செய்திப்பத்திரிகை ஆசிரியர். இருவரும் கெடுபிடியானவர்கள்தான். நினைவலைகளை ஒதுக்கி விட்டு நீலா வேலையில் கவனம் செலுத்தினாள். அவள் எழுதிக்கொண்டிருந்த ஒரு செய்திக் கட்டுரையின் கடைசிச் சொல்லை எழுதி, முற்றுப்புள்ளி வைத்தாள். ‘நிருபர் நீலா’ என்று முடித்தபோது நீலாவின் முகம் மலர்ந்தது.

‘நிருபர் நீலா’ என்ற பட்டம் தானாக அவள் கொடுத்துக் கொண்டதில்லை. கல்லூரியில் பட்டம் பெற்றதும் நிச்சயம் செய்திப் பத்திரிகைத் துறையில் வேலையில் சேர நீலா பட்டபாடு நீலாவுக்குத்தான் தெரியும். வீட்டில் பலத்த எதிர்ப்பு இல்லை யென்றாலும், நீலா ஒரு பாங்கில் வேலைக்கு முயற்சி செய்தால் அவள் எதிர்காலம் வேறு மாதிரியாக அமையும் என்றார்கள். ‘ஜர்னலிசம்’ படிப்புக்கும் பாங்க் வேலைக்கும் என்ன தொடர்பு என்பதை நீலா கேட்டபோது வீட்டில் பேச்சின் வேகம் குறைந்தது. பிறகு படிப்படியாக ஏறி, பேட்டி பேட்டியாகக் கொடுத்து, ‘சென்னை செய்தி’ என்ற செய்திப் பத்திரிக்கையில் வேலை வாங்கினாள். நீலாவின் ஆர்வமும், எழுத்துத் திறமையும், எதையும் கிரகித்துக் கொள்ளும் அறிவுமே ‘சென்னை செய்தி’ ஆசிரியர் செங்கோடனை நீலாவுக்கு ‘நிருபர் நீலா’ என்ற பட்டம் அளிக்கத் தூண்டின. அதுவரை அவள் எழுதிய தலைப்புகள் பல என்றாலும், நீலாவின் விஞ்ஞான செய்திகளும், விஞ்ஞானக் கட்டுரைகளும் மக்களின் வரவேற்புக்கு இலக்காயின. தன்னால் விஞ்ஞானம் பற்றி மக்கள் அறிந்துகொள்ள முடிகிறதே என்பதை உணர்ந்து நீலாவும் அடிக்கடி புதிய ஆராய்ச்சிகளைப் பற்றி எழுதுவாள். செங்கோடனும் நீலாவுக்கு ஏற்ற வேலையைத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பார்.
“நீலா, உன்னை எடிட்டர் கூப்பிடறாரு” ஒருவர் கூவிவிட்டுத் தன் வேலையைப் பார்க்க விரைந்தார்.
அவசரமாகக் கையிலிருந்த தாள்களை சரிசெய்து எடுத்துக்கொண்டு செங்கோடன் இருந்த தனியறைக்குப் போனாள்.
“சார்… நீங்க கேட்டிருந்த சொன்னபடியே நாலரைக்குள் மு என்று நீலா தாள்களை மேசைமேல் வைத்தாள்.
செங்கோடன் பதில் சொல்லவில்லை. அவர் முகத்தில் சிறு புன்னகை. நீலாவின் உமுகத்தை உற்றுப் பார்த்தார். மௌனம் நிலவியது.
“என்ன சார்… அடுத்த அசைன்மென்ட் கொடுக்கத் தயாரா?” என்ற நீலாவின் குரல் உற்சாகத்தை உணர்த்தியது.
“நீலா… அப்படி உட்காரும்மா…”
“பெரிய ‘அசைன்மென்ட் போல் இருக்கே!” என்றவாறு சிரித்துக்கொண்டே உட்கார்ந்தாள்.
“ஆமாம்… ஆனால்…”
“ஆனால் போடாமே நீங்க ஒருநாள்கூட என்கூட பேசமாட்டீங்களோ?” என்று கிண்டலாக நீலா சொன்னபோது செங்கோடனால் சிரிக்காமலிருக்க முடியவில்லை.
“நீலா, நான் சொல்லப்போவது முக்கிய விஷயம். கவனமாகக் கேட்டுக்க… உனக்கு ஆராய்ச்சியாளர் டாக்டர் பிரபு பற்றித் தெரியுமா?”
“டாக்டர் பிரபு” என்று நீலா ஒருமுறை சொல்லிப் பார்த்துக் கொண்டாள். “தெரியுமே…அவர் தமிழ்நாட்டில் பெயர் பெற்ற ஒரு விஞ்ஞானி…அவருடைய உதவியாலேதானே இங்கே விவசாயம் இந்த அளவு முன்னேறி இருக்கு. அவருடைய ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஏராளம்னு கேள்விப்பட்டேன். நான்கூட இரண்டு, மூணு படிச்சிருக்கேன்…” நீலா பேசிக்கொண்டே போயிருப்பாள். செங்கோடனின் கனைப்பைக் கேட்டதும் நிறுத்தினாள்.
“நீலா… உனக்கு டாக்டர் பிரபுவின் ஆராய்ச்சி பற்றித் தெரிந்திருக்கும்னு நான் நினைச்சது சரிதான். அதனாலே தான் உனக்கு ஒரு புது ‘அசைன்மென்ட்’ கொடுக்கப் போறேன்…”
“டாக்டர் பிரபுவின் ஆராய்ச்சியைப் பற்றி மக்களுக்கு எளியமுறையில் எழுதித் தரச் சொல்லப் போறீங்க, இல்லையா?”
“இல்லை, நீலா.”
“பிறகு, வேறு என்ன செய்யணும்?”
“இதுவரை நீ செய்து வந்தது சாதாரணமான நிருபர் வேலைதான்… இனி செய்யப் போறது, இப்ப செய்யப் போறது- பிரபு விஷயத்துலே – கொஞ்சம் துப்புத் துலக்குற வேலை மாதிரி… ‘இன்வெஸ்டிகேடிவ் ரிப்போர்ட்டிங்’னு சொல்வாங்களே… அந்த வகையைச் சேர்ந்தது.”

நீலாவினால் எதுவும் பேச முடியவில்லை. ‘இன்வெஸ்டிகேடிவ் ரிப்போர்ட்டிங்’… புதுவிதமான வேலை தனக்கு… நீலாவின் மனம் படபடத்தது. செங்கோடனை உற்றுப் பார்த்தாள்.
“மேலே சொல்லட்டுமா நீலா” என்று செங்கோடன் தொடர்ந்தார்.
“டாக்டர் பிரபு விவசாயத் துறைக்கு நிறைய ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்துகிறார். தமிழ்நாட்டில் விவசாய விளைச்சல் அதிகரிக்க அவருடைய ஆராய்ச்சி முக்கிய காரணம்- இதெல்லாம் நிறைய பேருக்கு ஏற்கெனவே தெரியும். ஆனால்…” என்று செங்கோடன் நிறுத்தினார். நீலா சிரிக்கவில்லை. ‘ஆனால்’ சொல்லிவிட்டு செங்கோடனே சிரித்தார்.
“என்னன்னு சொல்லுங்க சார்” நீலா துரிதப் படுத்தினாள்.
“டாக்டர் பிரபு தற்போது செய்துவரும் ஆராய்ச்சி பற்றி எனக்கு ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. என்ன தகவல் என்பதை இப்போது உன்னிடம் சொல்லப் போவதில்லை. சொன்னால் உன் வேலை தடைப்படும், தடம் மாறும். நீயாகவே இவருடைய இந்த ஆராய்ச்சி பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ள முயற்சி செய்யணும். கவனமாய் இருக்கணும். எனக்கு விவரங்கள் சொன்னால் மட்டும் போதும். எதையும் கட்டுரை யாகவோ, செய்தியாகவோ எழுத வேண்டாம்… சரியா நீலா?” என்று செங்கோடன் முடித்தார். அவருடைய குரலில் எச்சரிக்கையின் அறிகுறிகள் ஒலித்தன. நீலாவுக்கு ஆர்வம் கட்டுக்கடங்காமல் ஓடியது.
“சார், இதுபோல ‘இன்வெஸ்டிகேடிவ்ரிப்போர்ட்டிங்’ நான் செய்ததில்லையே… எனக்குத் துணைக்கு ஓர் ஆள் இருந்தால் நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்” என்று நீலா கேட்டபோது செங்கோடன் தலையை ‘ஆமாம்’ என்பதுபோல் அசைத்தார்.
“நானும் அதே முடிவுக்கு வந்தேன், நீலா. உனக்குத் துணையாக மூர்த்தி வருவான். சரிதானே?” என்றார் செங்கோடன்.
“மூர்த்தி வருவது இன்னொரு விதத்திலும் நல்லது. போட்டோக்கள் எடுக்க காமிராமேன் வருவதுபோல, இல்லையா?” என்றாள் நீலா. செங்கோடன் முகத்தில் தோன்றிய புன்முறுவலைக் கவனித்த நீலாவுக்கு சட்டென ஒரு விஷயம் புரிந்தது- செங்கோடன் ஏற்கெனவே எல்லாவற்றையும் திட்டமிட்டு செயல்படுகிறார் என்பது தான்.
“சார், நீங்க எடிட்டர் வேலையை எப்படி இவ்வளவு நல்லா செய்யறீங்கன்னு புரிய வைச்சிட்டீங்களே” நீலாவின் குரலில் மரியாதை மிகுந்தது.
“நீலா உன் திறமையிலும் எனக்கு நம்பிக்கை நிறைய உண்டு. ஆனால் இது சாதாரண ‘அசைன்மெண்ட் இல்லை. நீயும் மூர்த்தியும் ரொம்ப கவனமாயிருக்கணும்” என்று மீண்டும் எச்சரித்தார்.
“இதை எப்ப சார் நாங்க ஆரம்பிக்கணும்?” நீலா சொல்லி முடிக்கவும், செங்கோடனின் அறைக்கதவைத் திறந்துகொண்டு காமிரா சாதனங்களுடன் மூர்த்தி உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.
நீலாவுக்கு மீண்டும் வியப்பு ஏற்பட்டு வாயடைத்துப் போனாள்.
“நீலா, மூர்த்தி… நீங்க இரண்டு பேரும் இன்னிக்குச் சாயங்காலம் ஏழு மணிக்கு தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்துக்குப் போகணும். அங்கே டாக்டர் பிரபுவுக்கு ஒரு பாராட்டு விழா நடக்குது. அதை ‘கவர்’ பண்ணிகிட்டு, டாக்டர் பிரபுவிடம் ஒரு பேட்டிக்கு ஏற்பாடு செய்துவிட்டு வாங்க. அதுக்கப்புறம் மற்ற விவரங்கள் பார்க்கலாம்.”
நீலாவின் கைக்கடிகாரம் மணி ஐந்தரை என்றது. அவளுடைய முகம் சற்று வாடியதை செங்கோடன் கவனித்தார்.
“நீலா… உன்னை மயிலாப்பூர்வரை நானே கொண்டு விடுகிறேன். வீட்டுக்குப் போயிட்டு நீ தேனாம்போட்டை போகலாம். இன்னும் நேரம் இருக்கு” என்றார் செங்கோடன்.
“அப்ப நான் நேராக தேனாம்பேட்டை மைதானத்தில் உன்னைப் பார்க்கிறேன் நீலா” என்று மூர்த்தி புறப்பட்டான்.
“நான் வாசலில் உங்களைப் பார்க்கிறேன்” என்று நீலாவும் விரைந்தாள்.
மூர்த்தி, நீலா இருவரும் அறையை விட்டு வெளி யேறியதும், செங்கோடன் டெலிபோனில் எண்களைச் சுழற்றினார்.
“ஹலோ” என்றது ஒரு ஆண்குரல் மறுபக்கம்.
“நீலாவும் மூர்த்தியும் தேனாம்பேட்டை வர்றாங்க. நான் சொன்னது ஞாபகமிருக்கட்டும்” என்று போனை செங்கோடன் வைத்தார்.
தேனாம்பேட்டை மைதானம் நிரம்பி வழிய வில்லை. ஆனாலும் நிறைய பேர் கூடியிருந்தார்கள். டாக்டர் பிரபுவுக்குத் தெரிந்தவர்கள்; அவரைத் தெரிந்தவர்கள் என்று வந்திருந்தனர். நிகழ்ச்சி ஆரம்பிக்க சில நிமிடங்கள் இருந்தன. டாக்டர் பிரபு முன் வரிசையில் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். பிரபுவின் மனைவி சாந்தி அவர்களுடைய ஆறு வயது பையன், நாலு வயதுப் பெண் மூவரும் முன்வரிசையில் உட்கார்ந்திருந்தனர்.
“டாக்டர் பிரபு, உங்களுக்கு எப்போதோ கிடைச் சிருக்க வேண்டிய பாராட்டுப் பட்டம் இது. இத்தனை நாள் இழுத்துட்டாங்க…” நண்பர் உண்மையான எரிச்சலுடன் சொன்னார்.
“இப்போவாவது இது நடக்குதே அதைப் பாருங்க” என்றார் இன்னொருவர்.
“எனக்குப் பாராட்டு விழா அது ‘இது’ன்னு ரொம்பப் பிடிக்காதுன்னு உங்களுக்குத் தெரியாதா… நான் செய்யும் ஆராய்ச்சியை மக்கள் மேலும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தானே நான் இந்த விழாவுக்கு ஒப்புக் கொண்டேன்” என்றார் டாக்டர் பிரபு.
“ஓகோ… இந்த நிகழ்ச்சியைப் பற்றி பத்திரிகைகளில் செய்தி வரும்; கட்டுரைகள் வரலாம். மக்களுக்குப் புரியலாம்- இப்படித்தானே சொல்றீங்க.”
“ஆமாம்” என்று சுருக்கமாகச் சொன்ன பிரபு, தூரத்தில் வந்துகொண்டிருந்த இருவரைப் பார்த்தார்.
“அதோ என்னுடன் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் டாக்டர் பாலுவும் டாக்டர் சாலமனும் வருகிறார்களே” என்று சொன்னபோது பிரபுவின் குரலில் வியப்புக்கான அறிகுறிகள் இருந்தன.
“கொஞ்சம் ஆச்சர்யப்படறீங்க போல இருக்கே” நன்றாகக் கவனித்த நண்பர் சொல்லிவிட்டார்.
“அப்படியில்லையே” என்று பிரபு சொன்னது நம்பக்கூடியதாயில்லை.
எப்படி நம்ப முடியும்? பிரபுவின் ஆராய்ச்சிக் கூடத்தில் டாக்டர் பாலுவும் சாலமனும் வேலைக்குச் சேர்ந்து சுமார் ஆறு ஆண்டுகள் ஆயின. பிரபுவின் திறமையான மேற்பார்யிைல் பாலு, சாலமன் இரு வருக்குமே பல ‘சயின்ஸ் ஜர்னல்’களில் அவர்களின் கண்டுபிடிப்புகள் பற்றி கட்டுரைகள் வந்துள்ளன. பிரபு- பாலு-சாலமன் என்ற வரிசையில் பெயர்கள் எழுதப் பட்டன. இந்த வரிசையை பாலு-சாலமன் என்று மட்டுமே ஆக்க வேண்டுமென இருவருமே விரும்பினார் கள். பிரபுவுக்கு இதுபற்றி எப்போதோ புரிந்துவிட்டது. ஆனால் தன் ஆராய்ச்சியை நிறுத்தவோ அல்லது வேறு இடத்தில் ஆராய்ச்சி வேலைக்குப் போகவோ பிரபு விரும்பவில்லை. பாலு, சாலமன் இருவரும் ஆராய்ச்சியில் பொறுப்புடன் இருந்ததால் அவர்கள் மீது பிரபுவும் எந்த நடவடிக்கையும் எடுக்க இயலவில்லை. பிரபுவுக்கும் அந்த இரு விஞ்ஞானிகளுக்கும் இந்த மௌன மோதல் பின் னணியிலிருக்கவே, அவர்கள் பாராட்டு விழாவுக்கு வந்தால் பிரபுவுக்கு ஆச்சர்யம் ஏற்படாதா?
பாலு, சாலமன் இருவரும் பிரபு இருந்த இடத்துக்கு வந்தார்கள்.
“ஹலோ டாக்டர் பிரபு, கங்கிராஜுலேஷன்ஸ்” என்று பாலு சொன்னதை சாலமனும் மீண்டும் சொன்னான்,
“தேங்க் வெரி மச்… நீங்க இரண்டு பேரும் வந்தது பற்றி நான் பெருமைப்படுகிறேன்” என்று பிரப சொன்னபோது பாலுவும் சாலமனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
“நாங்க வராம இருப்போமா… அமைச்சர் ரங்கதுரை வேறே வர்றாரில்லே, அவரையும் பார்த்த மாதிரி இருக்கும்” என்று பாலு சொல்லவே சாலமன் தலையை ஆட்டினான்.
“வாங்க… உங்க இரண்டு பேரையும் நிச்சயம் நான் மேடையிலிருந்து அறிமுகப்படுத்தி வைக்கிறேன்” என்று அவர்களைக் கூட்டிக்கொண்டு மேடையை நோக்கி பிரபு நடந்தார்.
வழக்கம்போல் அமைச்சர் ரங்கதுரை அரைமணி தாமதமாக வரவே நிகழ்ச்சி ஏழரை மணிக்குப் பிறகுதான் தொடங்கியது. மூர்த்தி முன் வரிசையின் அருகே நின்று காமிராவைத் தட்டிக் கொண்டிருந்தான். நீலா இன்னும் வரவில்லை. அடிக்கடி அவள் வருகிறாளா என்று பார்வையைச் சுழற்றினான்.
அமைச்சர் டாக்டர் பிரபுவுக்கு ரோசா மாலையைப் போட்டு, பிரபுவைப் பாராட்டிப் பேசி, பாராட்டுப் பத்திரிகையைக் கொடுத்தார். பிரபு மலர்ந்த முகத்துடன் மலர் வளையத்தை ஏற்றுக்கொண்டு, கூடியிருந்தோருக்கு வணக்கம் தெரிவித்தார்.
“தமிழகத்தின் நெல் விளைச்சல் மட்டுமில்லாமல் பழ வகைகளையும் அதிகரிக்க டாக்டர் பிரபுவின் ஆராய்ச்சி கள் பயன்பட்டு வருகின்றன என்பதில் எனக்கும் அரசுக்கும் மிக்க திருப்தி, மகிழ்ச்சி…” என்று அமைச்சர் ரங்கதுரை ஆரம்பித்துப் பிறகு பேச்சை முடித்தபோது மணி எட்டரையைத் தாண்டியது.
“இப்போது, டாக்டர் பிரபுவை அவருடைய ஆராய்ச்சியைப் பற்றிப் பேச நான் அழைக்கிறேன்” என்று ரங்கதுரை அறிவித்தபோது பலத்த கைதட்டல்கள் ஒலித்தன.
டாக்டர் பிரபு ஒலிபெருக்கியின் முன் வந்தார். மூர்த்தி ஒரு படத்தை ‘க்ளிக்’ செய்தான். அப்போது வியர்த்துக் கொட்டிக்கொண்டு நீலா அவசர அவசரமாக கையில் பேனா, ஸ்டெனோ நோட்டுடன் வந்து நின்றாள்.
என்ன நீலா ஏழு மணிக்கு வர வேண்டியவள் இப்படி அவசர அவசரமாய் வந்து நிக்கறியே” மூர்த்தி சற்று எரிச்சலுடன் கேட்டான்.
“மூர்த்தி… நீ இப்படி சொல்லுவேன்னு எனக்குத் தெரியும். உனக்கு விவரமாய் அப்புறம் சொல்றேன். இப்பத்தானே டாக்டர் பிரபு பேசப் போறார் எனக்குக் கொஞசம் நோட்ஸ் எடுக்கணும்” என்று மூர்த்தியை சமாதானப்படுத்தினாள் நீலா.
மூர்த்தி பதில் பேசாமல் தன் வேலையில் ஈடுபட்டான்.
டாக்டர் பிரபுவின் குரல் ஒலிக்கத் தொடங்கியது. “அமைச்சர் ரங்கதுரை அவர்களே, அருமை நண்பர்களே… என்று முன்னுரை போட்டு சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டு மேலே தொடர்ந்தார்.
“என்னுடைய பரிசோதனையின் சாதனைகளைப் பாராட்டுகின்ற இந்த நேரத்திலே என்னுடன் உழைக்கும் இரண்டு விஞ்ஞானிகளையும் நான் அறிமுகப்படுத்தக் கடமைப்பட்டுள்ளேன்” என்று பாலு சாலமன் இரு வரையும் டாக்டர் பிரபு அறிமுகப்படுத்தினார். கைதட்டல்கள் தொடர்ந்தன. பாலு, சாலமன் சற்று வெட்கத் துடன் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தார்கள்.
டாக்டர் பிரபு மேலும் பேசினார். தன் மனைவி குழந்தைகளை அறிமுகப்படுத்தினார். இதுவரை எது மாதிரியான ஆராய்ச்சிகள் என்பது பற்றிச் சொல்லி விட்டு இனி என்ன செய்யலாம் என்பதைக் கோடி காட்டினார்.
“தற்போது நாங்கள் செய்துவரும் ஆராய்ச்சியின் மையக் கருத்து பூச்சிக்கொல்லி மருந்துகளை எந்த அளவு பயன்படுத்த வேண்டும்; அதனால் மக்களுக்கு ஏதாவது நோய்கள் உண்டாகுமா என்பதுபற்றி… இதில் ஒரு முக்கிய மருந்து பூச்சி ஒழிப்புக்கு மட்டுமில்லாமல் வேறொரு காரணத்துக்கும் பயன்பட வாய்ப்புண்டு” என்று பிரபு முடித்தபோது கரகோஷமும் கைதட்டலும் மிஞ்சின.
பாலுவும் சாலமனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். மெல்ல கிசுகிசுத்துக் கொண்டனர். அமைச்சர் ரங்கதுரை அவர்களைக் கவனித்துக் கொண்டார். டாக்டர் பிரபுவின் ஆராய்ச்சிக் கூடத்தில் என்ன புது ஆராய்ச்சி நடக்கிறது என்பதை இவர்கள் மூலம் மிகச்சுலபமாக அறிந்துகொள்ள முடியும் என்று ரங்கதுரை புரிந்துகொண்டார். ‘நிகழ்ச்சி முடியட்டும்’ என்று மனத்தில் குறிப்பெடுத்துக் கொண்டார்.
பிரபு பேசியதைக் குறிப்பெடுத்துக் கொண்ட நீலாவுக்கு பிரபு சொன்ன கடைசி பகுதி ஆர்வத்தைத் தூண்டியது. பத்திரிகை ஆசிரியர் செங்கோடன் சொன்னது உண்மைதான். பிரபு ஏதோ முக்கிய ஆராய்ச்சியில் முனைந்திருக்கிறார். அதன் பயன்கள் என்னென்ன என்பதை நீலா கண்டுபிடிக்க வேண்டும். பயன்களா இல்லை பயங்கர விளைவுகளா என்று நீலாவால் நினைக்காமலிருக்க முடியவில்லை.
நிகழ்ச்சி ஒரு வழியாக முடிந்தபோது மணி பத்தை எட்டிக் கொண்டிருந்தது.
டாக்டர் பிரபு, சாந்தி குழந்தைகளுடன் காரை நோக்கி நடந்தபோது நீலாவும் பின்தொடர்ந்தாள். அவளருகில் மூர்த்தியும் நடந்தான்.
“டாக்டர் பிரபு” நீலாவின் குரல் பிரபுவை நிறுத்தியது.
“யெஸ்…”
“டாக்டர் பிரபு… என் பெயர் நீலா. நான் ‘சென்னை செய்தி’யில் நிருபராக இருக்கிறேன். முதலில் உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்” என்றாள் நீலா.
“தேங்க் யூ…” என்று சற்று தயங்கினார் டாக்டர் பிரபு.
“இப்போது உங்களுக்கு நேரமிருக்காது. உங்களுடன் பேச எனக்கு ஒரு வாய்ப்பு வேண்டும். உங்கள் ஆராய்ச்சிக் கூடத்தையும் பார்க்க எனக்கு ஆசை, எப்போது வரலாம் என்று சொல்ல முடியுமா?” நீலா தனக்கே உரிய பாணியில் கச்சிதமாகப் பேசினாள்.
பிரபுவின் தயக்கம் மறைந்தது. தன்னுடைய ஆராய்ச்சியை மக்களுக்கு அறிவிக்க இதைவிட நல்ல தருணம் அமையாது என்று கணக்கிட்டுக் கொண்டார்.
“உங்கள் பத்திரிகைக்குச் செய்தி கொடுக்க நிச்சயம் என்னால் முடியும். அடுத்த வாரம் ஒருநாள் பார்க்க என்ன தேதி, நேரம் என்று தெரிந்து கொள்ளலாம். ஓ என்னுடைய ஆபீசில் கூப்பிட்டுக் கேட்டால் இவர் யார்? உங்கள் பத்திரிகை போட்டோகிராபரா?” என்று மூர்த்தியைப் பார்த்துக் கேட்டார்.
“என் பெயர் மூர்த்தி… போட்டோகிராபர்தான்” என்று சிரித்துக்கொண்டே மூர்த்தி சொன்னான்.
பிரபு புறப்பட்டுச் சென்றபின் மூர்த்தியும் நீலாவும் பேசிக்கொண்டே தேனாம்பேட்டை மைதானத்தைக் கடந்து அண்ணா சாலைக்கு வந்தனர்.
“நான் ஆட்டோவில் போய்விடுவேன் மூர்த்தி. நாளைக்கு ஆபீசில் பார்க்கலாமா?” என்று நீலா விடை பெற முயற்சித்தாள்.
“நீலா… நீ ஏதோ என்னிடம் விவரம் சொல்லப் போறேன்னியே… ஏன் அவ்வளவு தாமதமாய் வந்தே…” மூர்த்தி விடுவதாயில்லை.
“நீ அதை மறந்திருப்பேன்னு நினைச்சேன்.”
“உனக்குச் சொல்ல விருப்பம் இல்லேன்னா சொல்ல வேணாம்” மூர்த்தி சட்டென்று சொல்லிவிட்டான்.
“அப்படியில்லை, மூர்த்தி… இது ‘பெர்சனல் மேட்டர்’ எப்படிச் சொல்றதுன்னு தயக்கமாய் இருக்கு.” இதைச் சொன்ன நீலாவின் கண்கள் மெல்லப் பனிக்க ஆரம்பித்தன.
“ஐம் சாரி நீலா… நான் கொஞ்சம் ஓவரா பேசிட்டேன்” மூர்த்தி தணிவாகப் பேசினான்.
“பரவாயில்லை மூர்த்தி… உன்னை என் உண்மை நண்பன்னுதான் நான் ஏத்துகிட்டேன். உன்கிட்ட சொன்னா மனசுக்கு ஆறுதலா இருக்கும். இந்த விவரம் என் கணவருக்கும் எனக்கும் இடையே இருக்கும் பூசலைப் பத்தினது” நீலாவின் குரலில் எங்கேயோ சோகம் தலைகாட்டியது.
மூர்த்தி பதில் சொல்லவில்லை. நீலாவையே பார்த்தான். நீலாவின் குடும்ப வாழ்க்கையில் அமைதி இல்லை என்பதை மூர்த்தியால் நம்ப முடியவில்லை. அவள் எப்போதும் முகம் கோணாமல், ஆர்வத்துடன் வேலை செய்கிறாள்; எல்லோருடனும் சிரித்துப் பேசி பழகுகிறாள். ஆனால்… அவள் குடும்ப வாழ்க்கையில் ஒரு குறையா?
“நீலா… உன்னுடன் ஆட்டோவில் நான் துணையாக வருகிறேன். பேசிக்கொண்டே போகலாமே” என்றான் மூர்த்தி.
இந்த நேரத்தில் துணை நல்லது என்று நீலா முடிவு செய்தாள்.
இருவரும் ஆட்டோவில் ஏறியதும் ஆட்டோ அண்ணாசாலையில் மயிலாப்பூர் போகும் திசையில் ஓடியது.
நீலா, மூர்த்தி இருவரும் ஏறிய ஆட்டோ பார்வை யிலிருந்து மறைந்ததும் அவர்களைக் கவனித்து வந்த ஓர் ஆள் இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு வந்தான்.
‘நாளைக்குச் செங்கோடன் சாருக்கு சொல்லி விடலாம்’ என்று முணுமுணுத்துக் கொண்டே அவன் நடந்தான்.
அத்தியாயம்-2
“நீல…ஏதோ துணையாக வரும் என்னிடம் நீ பேசணும்னு கட்டாயமில்லை” என்றான் மூர்த்தி.
அவன் எதிர்பார்த்த பதில் வந்தது நீலாவிடமிருந்து. “மூர்த்தி ஐம் ஸாரி… ஏதோ என் குடும்ப நினைவு… இன்னக்கி சாயங்காலம் என்ன நடந்தது தெரியுமா?” என்று தொண்டையைச் சரி செய்துகொண்டாள்.

மூர்த்தி அவளைப் பார்த்தான். ‘சொன்னால்தானே தெரியும்’ என்றது அவன் பார்வை.
“செங்கோடன் சார் என்னை ஆறு மணிக்கு வீட்டில் கொண்டு விட்டார். எனக்கு முன்னாலேயே சேது வீட்டுக்கு வந்திருந்தார். உள்ளே போனதும் மேசைமேல் நிறைய மல்லிகைப் பூ. செய்தித்தாளைப் புரட்டியபடி சேது உட்கார்ந்திருந்தார்.” என்று தொடங்கி நீலா விவரித்தாள்.
“என்ன நீலா இன்னக்கி இவ்வளவு நேரம் மறந்துட்டியா?”
நீலா துணுக்குற்றாள். “அடடே, சேது உண்மையிலேயே எனக்கு நினைவு இல்லை… இருந்திருந்தால்…” என்று அவள் முடிக்கு முன் சேது செய்தித்தாளைக் கீழே போட்டான். எழுந்து நின்றான். சேதுவின் முகம் செந்தூரமாகியது.
“நீலா… நமக்கு என்னக்கி முக்கிய நாளோ அன்னக்கித் தான் உனக்கு வேலை அதிகமாகும். எல்லாம் மறந்து போகும் வேலையைத் தவிர” என்று கோபமாகப் பேசினான். நீலா மௌனமானாள்.
அன்று நீலா – சேதுவின் வாழ்க்கையில் முக்கிய நாள்தான். அவர்களுக்குத் திருமணமாகி நான்காண்டுகள் ஆகியிருந்தன. இரண்டு ஆண்டுகளுக்கு முன் நீலா கருத்தரித்த சில மாதங்களில் கருவை இழந்துவிட்டாள். அந்த நாள் சேதுவின் மனத்தில் பெரிய குறையை ஏற்படுத்தியிருந்தது. நிகழ்ச்சி நடந்த மறு ஆண்டு அதே நாளில் இருவரும் கோயில் பிரார்த்தனைக்குப் போய், ஒவ்வொரு ஆண்டும் அதே நாளில் சிறப்புப் பிரார்த் தனைச் செய்வதாய் உறுதி எடுத்துக்கொண்டார்.
மேசை மேலிருந்த மல்லிகைப்பூ நீலாவைக் கேலி செய்வது போலிருந்தது. நீலா துவண்டு சோபாவில் சரிந்தாள். சேது குறுக்கும் நெடுக்கும் நடக்க ஆரம்பித் தான்; அவன் எதுவும் பேச விருப்பப்படவில்லை என்பதை அவனுடைய நடையின் வேகமே உணர்த்தியது. அவன் வேகத்துக்கு இணையாக கடிகாரமும் ஓடியது. நீலா கண் விழித்தபோது மணி எட்டாகிவிட்டது.
துள்ளியெழுந்த நீலா, “எனக்குப் புது ‘அசைன் மெண்ட்’ இன்னக்கி இருக்கிறதே… நேரமாகிவிட்டதே” என்று சொல்லிக்கொண்டே முகம் கழுவ உள்ளே போனாள்.
அவள் கைப்பையை எடுத்துக்கொண்டு புறப்பட்ட போது, சேது அவளைத் தன் குரலால் தடுத்தான். “நீலா… ஆறு மணிக்கு வந்தே… எட்டு மணிக்கு மறுபடியும் புறப்படறியே… குடும்ப வாழ்க்கைன்னா என்னன்னு தெரியுமா உனக்கு?”
நீலா நின்று சேதுவைப் பார்த்தாள்.
“சேது…என்னைப்பத்தி நீங்க நல்லா புரிஞ்சிக்கிட்டுத் தான் இப்படிப் பேசறீங்களா?”
“உன்னைப் புரியாததால்தானே என் கேள்வி.”
“அப்ப நானே சொல்றேன். எனக்குக் குடும்ப வாழ்க்கை ரொம்பவும் முக்கியம் சேது. இல்லைன்னா நான் கல்யாணமே செய்துகிட்டு இருக்கமாட்டேன். ஆனால் குடும்ப வாழ்க்கைன்ற பேரிலே என் வளர்ச்சியை ஏன் குறைச்சிக்கணும்? ஆண்களுக்கு மட்டுந்தான் வேலை, வேலையால மதிப்பு எல்லாம்னு எந்தச் சட்டத்துலே எழுதியிருக்கு, சேது?” நிறுத்தி நிதானமாக ஜர்னலிஸ தொனியிலே நீலா கேட்டாள்.
“நீ என்னதான் நினைச்சு இப்படிப் பேசறே நீலா? உன்னை வேலைக்குப் போக வேணாம்னு நான் எப்போ சொன்னேன்? நம்முடைய வாழ்க்கையையும் கவனிக்கணும், அதைத்தானே சொல்றேன்?” சேதுவின் குரல் திசைமாறியது.
“சேது, நமக்குக் குழந்தை இல்லேன்றது எனக்கும் வருத்தமாயிருக்கு. என்னைவிட நீங்க இந்த விஷயத்துலே வருத்தமா இருப்பதும் தெரியும். இன்னக்கி கோயிலுக்கு போக வேண்டியதை நான் மறந்துட்டேன். செங்கோடன் சார் எனக்கு விறுவிறுப்பான வேலை ஒண்ணு கொடுத்திருக்கிறார். அந்த உற்சாகத்தில் மற்றதை மறந்தேனே தவிர அக்கறை இல்லாத காரணத்தாலே இல்லை” நீலா முடித்தாள்.
“அப்படி என்ன ‘அசைன்மெண்ட்?”
“டாக்டர் பிரபு என்ற ஆராய்ச்சியாளருக்கு ஒரு பாராட்டு விழா. அதைப்பற்றி நான் எழுதணும். தேனாம்பேட்டை மைதானம் வரை போகணும். வந்து விவரங்கள் சொல்லட்டுமா, சேது?” குழைந்தாள் நீலா.
“சரி, சரி… உன் இஷ்டப்படியே நடக்கட்டும். நானாவது கோயிலுக்குப் போய் வர்றேன்” என்று சேது ஒப்புக் கொண்டான்.
சேதுவிடம் பேசிவிட்டாளே தவிர நீலாவின் மனம் அமைதியை இழந்து தவித்தது. தேனாம்பேட்டை மைதானத்துக்கு ஆட்டோவில் வரும்வரை அவள் சேதுவைப் பற்றியும், சேது கோபித்துக் கொண்டதைப் பற்றியும் நினைத்துக்கொண்டே வந்தாள். ஒருவேளை சேது சொல்வது உண்மைதானோ? தாயாக வேண்டு மென்ற எண்ணமே என்னிடம் இல்லையோ? நான் ஏன் இப்படி இருக்கிறேன். என்னுடன் கல்லூரியில் படித்த பெண்கள் இப்போது கையில் ஒன்று இடுப்பில் ஒன்றுமாக இருக்கிறார்கள். நான்.. நானோ இந்தச் செய்தி, அந்தக் கட்டுரை என்று ஓடியாடி எழுதிக் கொண்டிருக் கிறேன். குடும்பமா? வேலையா? எது பெரிது? குழப்பந் தான் மிஞ்சியது நீலாவுக்கு.
இதைச் சொல்லி முடித்த நீலாவுக்கு மூர்த்தி ஆறுதல் சொன்னான். சேதுவிடம் பொறுமையாக நடந்து கொள்ளும்படி நண்பன் என்ற முறையில் அறிவுரை அளந்தான்.
ஆட்டோ நீலா-சேது வசித்து வந்த ஃப்ளாட் முன்னால் நின்றதும் நீலா இறங்கினாள்.
“சொன்னது நினைவிருக்கட்டும், நீலா. நாளைக்குப் பார்க்கலாம்” என்ற மூர்த்தி ஆட்டோவைத் திருப்பச் சொன்னான்.
உள்ளே நுழைந்த நீலாவுக்கு ஓர் ஆச்சர்யம் காத்திருந்தது.
மணி பதினொன்று அடித்தும் சேது தூங்காமல் ஒரு புத்தகத்தில் மூழ்கியிருந்தான்.
“என்ன நீலா, உன் நிருபர் வேலை எல்லாம் வெற்றிகரமாக முடிந்ததா?”
“முடிந்ததா? இன்னக்கித்தானே இது ஆரம்பித்து இருக்கிறது. டாக்டர் பிரபு பூச்சிக்கொல்லி மருந்து ஆராய்ச்சி செய்து வருகிறவர். நீங்ககூட செய்திகளில் படித்திருப்பீங்களே. அவர் பேசும்போது ஒரு புது மருந்து பூச்சிக்கொல்லியாக மட்டுமில்லாமல் வேறொரு காரணத்துக்கும் பயன்படலாம் என்று சொன்னார். அது என்ன என்று நான் கண்டுபிடிக்கும்வரை என் நிருபர் வேலை முடியாதே” என்று சேதுவின் அருகில் உட்கார்ந்தாள்.
“டாக்டர் பிரபு ஆராய்ச்சி செய்த பூச்சிக்கொல்லி மருந்துகளைத்தானே நாங்கள் விற்கிறோம்.”
“அப்படியா? என்ன மருந்து? எனக்கு விவரம் சொல்ல முடியுமா?” நீலாவின் உற்சாகம் சேதுவுக்கு சிரிப்பூட்டியது.
“விஞ்ஞானம், ஆராய்ச்சி, புது கண்டுபிடிப்பு, செய்தி, கட்டுரை….இப்படியே இரவு முழுக்கப் பேசி கழித்து விட்டால் எப்படி நீலா?”
“அதுவும் சரிதான்… நீங்க சாப்பிட்டாச்சா?”
“இப்பவாவது கேக்கிறயே.”
“சேது… எனக்கு ரொம்ப பசிக்குதே… உங்களுக்கும் பசிக்குமேன்னுதான் கேட்டேன். உள்ளே பிரிட்ஜில் என்ன இருக்குன்னு பாக்கட்டுமா?”
“பாரேன்.”
சமையலறைக்குப் போனவளிடமிருந்து சில நிமிடங்களில் ‘ஹையா’ என்ற மகிழ்ச்சிக் கூவல் வந்தது. “சேது… ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்… நீங்க சாப்பிட்டாச்சா?”
“இல்லை… நீ வந்ததும் சேர்ந்து சாப்பிடலாம்னு இருந்தேன்.”
கோயிலிலிருந்து திரும்பும் வழியில் சேது ஓட்டல் சாப்பாடு வாங்கி வந்திருந்தான். ஜாங்கரி, லட்டு என்று இனிப்பு வகைகள் வேறே. நீலாவுக்கு இரண்டுமே பிடித்தவைதான். சேது தன்மீது வைத்துள்ள அன்பை நினைத்து அவள் உள்ளூர இறைவனுக்கு நன்றி சொன்னாள்.
‘குடும்ப வாழ்க்கை இனிமையானதுதான்’ என்ற எண்ணத்துடன் இருவருமே சாப்பிட ஆரம்பித்தனர். பேச்சு டாக்டர் பிரபுவின் ஆராய்ச்சியைப் பற்றித் தொடர்ந்தது.
பிரபு, சாந்தி, குழந்தைகள் இவர்களுடன் கார் அடையாறு நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. பிரபுதான் காரை ஓட்டிக் கொண்டிருந்தார். குழந்தைகள் பின் சீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
“என்ன சாந்தி எதுவுமே பேசாம வர்றியே!” பிரபு பேச்சைத் தொடங்கினார்.
“உங்களுக்குப் பாராட்டுக் கொடுக்க நிறைய பேர் வந்திருந்தாங்க. அதை நினைச்சு நான் ரொம்ப சந்தோஷமாயிருக்கேன். அமைச்சர் ரங்கதுரையே வந்தது இன்னும் சிறப்பு, இல்லையா?”
“அவர் விவசாயத் துறையையும் கவனிக்கிறார்; அதனாலேதான் அவரை ஏற்பாடு செய்தாங்க போல இருக்கு.”
“ஆமா, யார் இந்த பாராட்டு விழாவை ஏற்பாடு செய்தாங்க?”
“எனக்குத் தெரியாது சாந்தி!”
“என்னங்க இது… பாராட்டு உங்களுக்கு. யார் உங்களுக்கு இதைச் செய்தாங்கன்னு தெரியலையா?”
“எனக்கு ஒரு ‘இன்விடேஷன்’ வந்தது. நிச்சயம் இதை ஏற்றுக் கொள்ளணும்னு அமைச்சர் ரங்கதுரையின் காரியதரிசி சொன்னார்… சரின்னு சொன்னேன்.”
“அப்ப, ரங்கதுரையே இதை ஏற்பாடு செய்திருப் பார்னு நினைக்கிறீங்களா?”
“தெரியலையே..”
பிரபு உண்மையிலேயே அப்பாவிதான். அரசியல் ஆட்டத்தில் ஆராய்ச்சியாளருக்கு இடமேது? தன்னுடைய ஆராய்ச்சியை மக்கள் அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பாகவே அந்தப் பாராட்டு விழாவை எண்ணி அவர் ஒப்புக் கொண்டார். அமைச்சரே இதை ஏற்பாடு செய்திருந்தால் அதன் காரணம் பிரபுவுக்குப் புரியவில்லை தான்.
“எது எப்படியோ போகட்டும், சாந்தி. என் உழைப்புக்கெல்லாம் பக்கபலமாய் இருந்த உனக்கும், நம்ப குழந்தைகளுக்கும் இந்தப் பாராட்டு என்று நினைச்சேன்” என்று பிரபு சொன்னபோது சாந்தி அவருடைய இடது தோளை மெல்லத் தொட்டாள்.
“நீங்க பேரும் புகழும் பெற்றால் அதில் எங்களுக்கும் பெருமை இல்லீங்களா ? நீங்க இளம் விஞ்ஞானிகளுக்கு ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தைக் காட்டறீங்க. அதனாலே மேலும் நம்ம நாட்டிலே விஞ்ஞான அறிவு பெருகும்; நாட்டுக்கும் நல்லதுதானே.”
“சாந்தி… உன்னுடைய பெருந்தன்மையும் முன்னேற்றப் போக்கும் எனக்கு ரொம்பப் பிடித்திருக்கு” என்று சாந்தியின் வலது கையை ஒருமுறை மெல்லப் பிடித்து விட்டார்.
“என்னைப் பத்தி இருக்கட்டும். நீங்க பேசும்போது புது மருந்து பூச்சி ஒழிப்புக்கு மட்டுமில்லாமல் வேறு ஒரு காரணத்துக்கும் பயன்படும்னு சொன்னீங்களே… அது என்னங்க.?”
“சாந்தி… நான் பூச்சிக்கொல்லி ஒன்றின் தன்மைகளை விவரமாக ஆராய்ச்சி செய்து வருகிறேன். பூச்சிக் கொல்லியை நெல், சோளம் போன்றவைகளுக்கு மட்டு மில்லாமல் பழச்சோலைகளிலும் பயன்படுத்துகிறோம்… சில நேரங்களில் இம்மருந்துகள் பழங்களில் மிகச்சிறிய அளவில் தங்கிவிடலாம். பழங்களைச் சாப்பிடுவோருக்கு மருந்துகள் சில நோய்களை உண்டு செய்யலாம் இல்லையா?”
“பூச்சிக்கொல்லி மனிதர்களையும் கொன்றுவிடுமா?”
“அந்த அளவு இல்லை, சாந்தி. ஆனால் சில பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். என்ன மருந்து எந்தவித பிரச்சினையை உண்டாக்கும் என்பது பற்றி மேல்நாடு களில் நிறைய ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். அவை களைப் படித்தபோது நான் ஆராய்ச்சி செய்துவரும் மருந்து ஒன்றைப் பற்றி கொஞ்சம் தெரிய வந்தது. அதைப் பற்றி மேலும் சில தன்மைகளைத்தான் நான் மும்முரமாக பரிசோதனை செய்து வருகிறேன்.”
“இந்த மருந்து வேறு எந்த காரணத்துக்காகப் பயன்படும்?”
“சாந்தி… நான் ஒரு விஞ்ஞானி என்பதை மறந்து விட்டாயா?” என்று சொல்லி சிரித்தார் பிரபு.
“மறக்கவில்லையே.”
“பரிசோதனைகள் முடியு முன்னாலேயே முடிவு களைச் சொல்வது விஞ்ஞானத்துக்கு சிறப்பில்லை; அது போன்றவர்கள் என்றுமே விஞ்ஞானிகளாக முடியாது.”
“நான் சாதாரணமாகத்தானே கேட்டேன்” சாந்தி சாதாரணமாகச் சொன்னாள்.
“அது எனக்குத் தெரியுது சாந்தி. ஆனால் நீ கேட்டதுக்கு பதில் சொல்ல இன்னும் பல மாதங்கள் ஆகும்… என் பரிசோதனைகள் முடியவில்லையே.”
“உங்களுடன் ஆராய்ச்சிக்கு உதவும் டாக்டர் பாலுவும் டாக்டர் சாலமனும் இதில் பங்கு எடுத்துக் கொள்கிறார்களா?”
“பாலு, சாலமன் இரண்டு பேரும் கடுமையான உழைப்பாளிகள்தான். நான் சொல்லும் எந்த பரி சோதனையையும் முறைப்படி நேரத்தில் முடித்துத் தருகிறார்கள். அதனால்தானே என்னால் ஒரே சமயத்தில் நாலு, ஐந்து என்று பிராஜக்ட்டுகளை ஏற்றுச் செய்ய முடிகிறது.”
“நீங்க சொன்ன அந்த மருந்தின் பரிசோதனைகளில் அவர்களுக்கும் பங்கு உண்டா?”
“உண்டு… ஏன் கேட்கிறாய்?”
“சும்மாத்தான் கேட்டேன்” சாந்தி சமாதானம் சொன்னாள். அவள் மனசில் ஒரு உளைச்சல். ‘பாலுவும் சாலமனும் இவரை எப்படியும் பின்னுக்குத் தள்ளணும்னு நினைக்கறாங்கன்னு இவரே சொல்லியிருக்கிறாரே. ஒருவேளை இவருடைய புது கண்டுபிடிப்புகளை இவரிட மிருந்து பாலுவும் சாலமனும் எடுத்துத் தங்களுடையதுன்னு சொல்லிட்டா…’ என்று அவளால் எண்ணா மலிருக்க முடியவில்லை.
கார் வீட்டு முன்புறத்தில் வந்து நின்றது. சாந்தி பெண்ணைத் தூக்கிக் கொண்டாள். ஒரு வழியாகக் கதவைத் திறந்து உள்ளே குழந்தைகளை படுக்கையில் விட்டுவிட்டு இருவரும் கீழ்த்தளத்துக்கு வந்தார்கள்.
“என்னங்க, உங்களுக்குத் தூக்கம் வரலையா?”
“சாந்தி எனக்கு ஒரு கப் டீ போட்டுக் கொடு. நான் கொஞ்சம் ஆராய்ச்சிக் குறிப்புகளைப் படிக்கணும். நாளைக்குப் புது பரிசோதனைகள் ஆரம்பம்.”
பிரபு அன்று வந்த தபால்களைப் புரட்டினார். எதுவும் முக்கியமாகத் தெரியவில்லை. வழக்கமானவை தான்.
சாந்தி கையில் டீ கப்புடன் வந்தாள்.
“உங்ககிட்ட ஒரு முக்கிய விஷயம் சொல்லணுமே.”
“என்ன?”
“இன்னக்கி பகல் மூணு மணி அளவிலே மாலதின்னு ஒரு பெண் இங்கே வந்தாள். உங்களைப் பார்க்கணும்னு சொன்னாள்.”
“மாலதியா?” பிரபு சாந்தியைப் பார்த்துக்கொண்டே பேசினார்.
“மாலதிதான்… என்னைவிட ஒரு பிடி உயரம். கொஞ்சம் கலர்கூட… சுமார் முப்பத்திரண்டு வயசு இருக்கும்.”
“நல்லா கவனிச்சிருக்கே போல இருக்கே?”
“கவனிக்காம இருக்க முடியுமா? உள்ளே வந்து என்கூட அரைமணி நேரம் பேசிகிட்டு இருந்தாளே.”
“எதுக்காக வந்தாளாம்?” ஒரு ஜர்னலைப் புரட்டிக் கொண்டே பிரபு கேட்டார்.
“உங்கள் ஆராய்ச்சிக் கூடத்தில் ஏதாவது வேலை இருக்கான்னு கேட்க வந்தாளாம்.”
“அதுக்கு அங்கேதானே வரணும். வீட்டுக்கு எதுக்கு வரணுமாம்?” என்று சாந்தியைப் பார்த்தார் பிரபு.
“நானும் அதையேதான் அவகிட்ட கேட்டேன். அதுக்கு அவ என்ன சொன்னாள் தெரியுமா?”
“என்ன சொன்னாள்?”
“நீங்கதான் அவளை வீட்டுக்கு வரச் சொல்லி இருந்தீங்களாம். இந்த ‘பயோ-டேடா’வை உங்ககிட்ட கொடுக்கச் சொன்னாள்.”
அதை பிரபு வாங்கிப் பிரித்தார். படித்தார்.
மாலதி எம்.எஸ்.ஸி – ஒரு கல்லூரியின் பெயர் போட்டிருந்தது. மாலதி… மாலதி… யார் அந்த மாலதியா? அடக்கடவுளே! பிரபுவுக்கு வியர்த்துக் கொட்டியது.
– தொடரும்…
– கல்கி வார இதழ் 14.5.1995 ல் தொடங்கி 30.7.1995 வரை பன்னிரண்டு இதழ்களில் தொடராக வந்தது.
– மாண்புமிகு கம்சன் (விஞ்ஞான நாவல்), முதற்பதிப்பு: 2014, வானதி பதிப்பகம், சென்னை. வாசன் என்ற புனைபெயரில் வெளிவந்தது.
![]() |
பிறப்பு: உத்திரன்மேரூர், தமிழ்நாடு வசிப்பு: வாஷிங்டன் டி.சி. அருகில் விழுப்புரத்தில் உயர்நிலைப்பள்ளி முடித்துவிட்டு, சென்னை விவேகானந்தா கல்லூரியில் இளங்கலை, முதுகலை பட்டங்கள் பெற்றபின், அமெரிக்கா சென்று கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் வேதியிலில்முனைவர் பட்டம் பெற்றார். ஐந்து ஆண்டுகள் வேதியியலில் ஆராய்ச்சி முடிந்தபின், பால்டிமோர் வட்டாரத்தில்கல்லூரியிலும் பல்கலைக் கழகத்திலும் வேதியியல் பேராசிரியராக பணிபுரிந்து சில ஆண்டுகளுக்கு முன்வேலை ஓய்வு பெற்றார். வாஷிங்டன் - பால்டிமோர் வட்டாரத் தமிழச்சங்கத்தின் பொறுப்புகள் ஏற்று, பிறகு…மேலும் படிக்க... |
