மனக்கண்







ஈழத்து முன்னோடிப் படைப்பாளிகளிலொருவரான அறிஞர் அ.ந.கந்தசாமியின் தினகரனில் வெளிவந்த தொடர் நாவல் ‘மனக்கண்’. பின்னர் இலங்கை வானொலியில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பப்பட்டது. ‘பதிவுகளில்’ ஏற்கனவே தொடராக வெளிவந்த நாவலிது. ஒரு பதிவுக்காக தற்போது ஒருங்குறி எழுத்தில் மீள்பிரசுரமாக வெளிவருகின்றது. அ.ந.க. எழுதி வெளிவந்த ஒரேயொரு நாவலிது. இன்னுமொரு நாவலான ‘களனி வெள்ளம்’ , எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்தது, 1983 இலங்கை இனக்கலவரத்தில் எரியுண்டு போனதாக அறிகின்றோம். ‘தோட்டத் தொழிலாளர்களை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவலிதுவென்றும் அறிகின்றோம். – பதிவுகள்.காம்.
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6
முதல் அத்தியாயம் – பணக்கார வீட்டுப் பிள்ளை
ஒருவன் ஏழை வீட்டில் பிள்ளையாகப் பிறந்தால் அதனால் எத்தனையோ துன்பங்களை அனுபவிக்க நேரிடுகிறது. ஆனால் பணக்கார வீட்டில் பிள்ளையாகப் பிறந்தால் அதனாலும் பிரச்சனைகளில்லாமல் இல்லை. ஸ்ரீதரைப் பல காலமாக அலைத்து வந்தப் பிரச்சினை அவன் மிகப் பெரியதொரு பணக்கார வீட்டில் பிள்ளையாய் பிறந்திருந்தான் என்பதுதான். பணக்கார வீட்டுப் பிள்ளைக்கு எவ்வளவு கஷ்டங்கள் என்பது அவனுக்கு சிறு வயதிலிருந்தே தெரியும். அவன் அவற்றைத் தன் சின்ன வயதிலிருந்தே அனுபவித்து வந்திருக்கிறான். உதாரணமாக அவர்களது பெரிய மாளிகைக்குச் சற்றுத் தொலைவில் ஒரு பொக்கு வாய் கிழவி தட்டிக் கடை நடத்தி வந்தாள். அந்தக் கிழவியைப் பார்க்கும் போதெல்லாம் அவனுக்கு அவனது இரண்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் அச்சிடப்பட்டிருந்த ஒளவையாரின் படம் நினைவுக்கு வராதிருப்பதில்லை. “ஒரு வேளை இந்தக் கிழவியும் ஒளவையாரைப் போலக் கவி பாட வல்லவளோ?” என்று கூட ஓரொரு சமயம் அவன் எண்ணியதுண்டு. ஆனால் அதை எப்படிக் கண்டறிவது? அந்தக் கடைக்கு போவதற்குத்தான் வீட்டிலுள்ள யாருமே அவனை அனுமதிப்பதில்லையே! ஆகவே அந்த விஷயம் என்றைக்குமே தீர்க்கப்படாத மர்மமாகவே அவன் உள்ளத்தில் புதையுண்டுவிட்டது.

இன்னும் கிழவியின் தட்டிக் கடையில் இன்னொரு விசேஷமும் இருந்தது. அது வேறொன்றுமல்ல, அங்கிருந்த மிக அகலமான வாயுள்ள ஒரு போத்தலாகும். அப்போத்தலில் சில சமயங்களில் ஏதோ ஒரு வகைப் பணிகாரத்தை அவள் நிரப்பி வைத்திருப்பாள். ஊரிலுள்ள ஏழைச் சிறுவர் சிறுமியர் அவற்றை விலைக்கு வாங்கி மகிழ்ச்சியுடன் உண்டுக்கொண்டு, கிராமத்தின் புழுதி படர்ந்த வீதியில் ஆடிப்பாடிச் சண்டையிட்டுக்கொண்டு செல்வார்கள். ஸ்ரீதர் அவர்களைப் பார்த்துக் கொண்டு நிற்பான். அவனுக்குப் பணிகாரம் சாப்பிட்டுக் கொண்டு போவதற்குப் பேராசை. ஆனால் யார் அவனை அவ்வாறு செய்ய அனுமதிப்பார்கள்.
ஒரு நாள் அவனது அப்பா சிவநேசரிடம் ஸ்ரீதர், “அப்பா அந்த போத்தலில் இருக்கும் பணிகாரத்தை எனக்கு வாங்கித் தா அப்பா” என்று கேட்டான். அதற்குச் சிவநேசர் அளித்த கண்டிப்பான பதில் என்ன தெரியுமா? “சீச்சீ, அதை அதைச் சாப்பிட்டால் நிச்சயம் நோய்கள் உண்டாகும்.” இவ்வாறு கூறிய தந்தை ஸ்ரீதரை விரைவாக வீட்டுக்கு அழைத்துச் சென்று மனைவி பாக்கியத்திடம் “ஸ்ரீதருக்கு நான் நேற்று வாங்கி வந்த சொக்கிலேட்டைச் சாப்பிடக் கொடு” என்றார். பாக்கியமும் அவ்வாறே செய்தாள். ஸ்ரீதரும் சொக்கிலேட்டைச் சாப்பிட்டு முடித்த பிறகு பணிகாரத்தின் நினைவு தான் அவன் மனதில் மேலோங்கியது.
சில சமயங்களில் சோனாவாரியாக மழை கொட்டிக் கொண்டிருக்கும்போது ஸ்ரீதர் வீதியில் தாய் தந்தையருடன் காரில் வந்திருக்கிறான். அப்பொழுது கிராமத்துச் சிறுவர்கள் அம்மணமாகக் கொட்டும் மழையில் கும்மாளமடிப்பதையும், வெள்ளத்தில் துள்ளித் துள்ளி விளையாடுவதையும் பார்த்திருக்கிறான். அப்பொழுதெல்லாம் அவனுக்கும் அவர்களுடன் சேர்ந்து விளையாட வேண்டுமென்று ஆசை தோன்றும். ஆனால் இவை எல்லாமே அவன் பணக்கார வீட்டுப் பிள்ளை என்பதால் நிறைவேறாத நிராசைகளாகவே முடிந்துவிட்டன.
இவை பால்யஸ்ரீதரின் அனுபவங்கள். இன்றோ ஸ்ரீதர் பெரியவனாகிவிட்டான். வயதும் இருபத்துமூன்றாகிவிட்டது. கொழும்பில் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த அவன் பார்ப்பதற்கு வாட்டசாட்டமாக வளர்ந்திருந்தான். செக்கச் செவேலென்ற சருமம்; கன்னங்கரேலேன்ற தலைமயிர்; கருவண்டுகள் போன்ற விழிகள். பொதுவாக எவரையும் கவர்ந்திழுக்கும் கம்பீரம் நிறைந்த தோற்றம். இன்னும், படிப்பிலும் அவன் கெட்டிதான். அத்துடன் கலைகளில் ஈடுபாடுள்ளவன். சித்திரம், சிற்பம், நாடகம் ஆகிய மூன்று துறைகளிலும் தான் தனது ஓய்வு நேரத்தை அதிகமாக செலவிட்டு வந்தான் அவன்.
ஆனால் பணக்கார வீட்டுப் பிள்ளை என்ற பிரச்சினை இன்றும் அவன் வாழ்க்கையைப் பாதிக்கத்தான் செய்த்தது. பணத்தை அடிப்படையாக் கொண்டு உயர்வு தாழ்வு கற்பிக்கப்படும் சமுதாயத்தில் இப்பிரச்சினை என்றுமே தீராது. உண்மையில் ஸ்ரீதர் அன்றிரவு வெகு நேரம் வரை சுரேஷிடம் பேசிக் கொண்டிருந்தது இந்தப் பிரச்சினையைப் பற்றித் தான்.
ஜன்னலூடாக வானத்து மதியைப் பார்த்த வண்ணம் “சுரேஷ்! அப்பா பெயரைச் சொல்லியதும் என்னுடன் நெருங்கிப் பழக எல்லோரும் அஞ்சுகிறார்களே ஏன்?” என்று கேட்டான் ஸ்ரீதர்.
வஞ்சனையற்ற ஸ்ரீதர் தன் பிரச்சினைகளைப் பற்றி எப்பொழுதும் ஒளிவு மறைவின்றிச் சுரேஷிடம் கேள்விகள் கேட்பது வழக்கம். சுரேஷ் ஸ்ரீதரை விட இரண்டு வயது மூத்தவன். வைத்தியக் கல்லூரியில் டாக்டருக்குப் படித்துக் கொண்டிருந்தான். அனுபவத்திலும் அறிவிலும் ஸ்ரீதரை விட மேம்பட்டவன். இன்றும் ஸ்ரீதரைப் போலல்லாமல் உலகம் என்ன என்பது அவனுக்கு ஓரளவு தெரியும். அதற்குக் காரணம் அவன் ஓர் ஏழை மத்தியதரக் குடும்பத்தில் பிறந்து, வாழ்க்கையொடு மல்லடித்துப் பழகியிருந்ததுதான். அவன் தந்தை கிராமத்தில் ஒரு நெல் வியாபாரியாயிருந்து இறந்து போய் விட்டார். தாய் மிகுந்த கஷ்டப் பட்டு கணவன் விட்டுப் போன பதினைந்து பரப்பு நெற்காணியையும், ஐந்து பரப்புத் தோட்டக் காணியையும் மூலத்தனமாக வைத்து எப்படியோ குடும்பச் செலவைச் சமாளித்துக் கொண்டிருந்தாள். பெயருக்கு அவளுக்கு ஓர் அண்ணனும் ஒரு தம்பியும் இருந்தபோதிலும், அவர்களால் எவ்வித உதவியும் இருக்கவில்லை. ஆனால் சுரேஷின் தந்தைக்கு ஒரு தங்கை இருந்தாள். அந்த மாமியால் தான் சுரேஷ¤க்கும் ஓரளவு உதவி இருந்தது. சுரேஷின் மாமா பிரபல புகையிலை வியாபாரி. அவருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருந்தார்கள். மகளுக்கு எப்படியும் சுரேஷை மணம் செய்துவிட வேண்டுமென்பது அவரது திட்டம். அதனால் தான் அவர் சுரேஷின் படிப்புக்கு வேண்டிய பண உதவிகளை அவ்வப்பொழுது மறுக்காது செய்து வந்தார். வைத்தியப் படிப்பில் ஈடுபட்டிருந்த சுரேஷ் பரீட்சையை எடுத்திருந்தான். அநேகமாக இன்னும் சில மாதங்களிலே அவன் டாக்டராகிவிடுவான். டாக்டர் மாப்பிள்ளைக்கு எங்குதான் கிராக்கியில்லை! அந்தக் கிராக்கியின் பலனைச் சுரேஷ் அனுபவித்துக் கொண்டிருந்த போதிலும், ஏழ்மையின் துன்பமும் அன்றாட வாழ்க்கைப் போராட்டத்தின் தன்மைகளும் அவனுக்கு நன்றாகத் தெரிந்துதான் இருந்தன.
ஸ்ரீதரும் சுரேஷூம் எவ்வாறு சந்தித்தார்கள், எவ்வாறு ஒரே வீட்டில் ஒரே அறையில் குடியிருக்க ஆரம்பித்தார்கள் என்பது சுவாரஸ்யமான விஷயம். ஸ்ரீதரின் தந்தைக்குக் கொழும்பில் இருந்த பல வீடுகளில் ஒன்றுதான் அவன் இப்பொழுது வசித்துவந்த “கிஷ்கிந்தா” என்னும் வீடு. தனது மற்ற வீடுகளை எல்லாம் வாடகைக்கு விட்டிருந்த சிவநேசர், இந்த வீட்டை மட்டும் வாடகைக்கு விடவில்லை. இதற்குக் காரணம் அரசாங்க அலுவலகங்களுடனும் கொழும்பிலுள்ள வங்கிகள், தாம் பங்குதாரராயிருந்த கம்பெனிக என்பவற்றுடனும் அவருக்கு அடிக்கடி ஏற்பட்டுக் கொண்டிருந்த வேலைகள் காரணமாக அவர் கொழும்புக்கு வரும் நாட்களில் தங்குவதற்கு வசதியான இடம் ஒன்று வேண்டியிருந்ததுதான். ஸ்ரீதர் மேற்படிப்புக்காகக் கொழும்புக்கு வந்தபொழுது அவனையும் அங்கு குடியேற்றினார்.

“கிஷ்கிந்தா” விசாலமானா தோட்டத்தின் நடுவே அமைந்திருந்த சுமாரான பெரிய வீடு. கீழ் வீட்டில் இரண்டறைகளும் மேல் வீட்டில் மூன்றறைகளும் கொண்ட அவ்வீட்டில் ஆரம்பத்தில் ஸ்ரீதரும் சமையல்காரனும், தோட்டக்காரனும், டிரைவருமே இருந்தார்கள். இரவு வேளைகளில் வேலைக்காரர்கள் கீழே உறங்கிவிட ஸ்ரீதர் மட்டுமே மேல் மாடியில் உறங்குவது வழக்கம். தனியே படுக்க ஸ்ரீதருக்குப் பயம். அதனால் ஒரு நாள் அவன் தந்தையிடம் தன்னால் அவ்வீட்டில் தனியாகக் குடியிருக்க முடியாது என்று கூறிவிட்டான். அதைக் கேட்ட சிவநேசருக்கு ஒரு யோசனை தோன்றியது. பத்திரிகைகளில் தமது வீட்டில் ஒரு அறை காலியாக இருப்பதாகவும் மேல் படிப்பு படிக்கும் மாணவன் ஒருவனுக்கு அது வாடகைக்கு விடப்படும் என்றும் அவர் விளம்பரம் செய்தார். அதன் பயனாக வந்து சேர்ந்த பலரில் ஸ்ரீதரால் பொறுக்கியெடுக்கப்பட்டவனே சுரேஷ். ஆரம்பத்தில் சுரேஷ் வெறுமனே அறையில் வாடகைக்கிருக்கும் “ஆரோ எவரோ” என்ற முறையில் தான் நடத்தப்பட்டான். ஆனால் நாளடைவில் இருவரும் இணை பிரியாத நண்பர்களாகி விட்டார்கள். சிவநேசருக்கும் சுரேஷை நன்கு பிடித்திருந்தது.
ஸ்ரீதரும் சுரேஷூம் இரவு படுக்கைக்குப் போன பின்னர் ‘லைட்’டை அனைத்து விட்டு இருட்டிலே சிறிது நேரமாவது சம்பாஷித்துக் கொண்டிருப்பது வழக்கம். அந்நேரத்தில் தான் நண்பரிருவரும் தங்கள் சொந்தப் பிரச்சினைகள் பற்றியும், அன்று பகல் தங்கள் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள் பற்றியும் பேசிக் கொள்வார்கள். அன்றிரவும் அப்படிப் பேசிக் கொண்டிருந்த போதுதான் ஸ்ரீதர் முன்னர் கூறிய கேள்வியைச் சுரேஷிடம் கேட்டான்.
வானத்தில் முழுமைத் தோற்றத்துடன் பவனி வந்துகொண்டிருந்த வெண்ணில ஜன்னலூடாக ஸ்ரீதரின் அறைக்குள் நிலவுப்பாலை ஊற்றிக்கொண்டிருந்தது. அவ்வெளிச்சத் ‘ தீ ’யில் நண்பர்கள் ஒருவரின் முகத்தை ஒருவர் ஓரளவு பார்க்கக் கூடியதாயிருந்தது.
ஸ்ரீதரின் கேள்விக்குச் சுரேஷ் விவரமாகப் பதிலளித்தான். உண்மையில் ஒரு குட்டிப் பிரசங்கமே செய்துவிட்டான் அவன்.
“ஸ்ரீதர்! உன் அப்பா சாதாரண மனிதரல்லவே!” என்று ஆரம்பித்த அவனை ஸ்ரீதர் இடைமறித்து “ஏன், அவருக்கு மூன்று கால்களோ, கொம்போ முளைத்திருக்கிறதா?” என்று கேட்டான்.
சுரேஷ் அதற்கு “ஸ்ரீதர்! சந்தேகமில்லாமல் அவர் கொம்பு முளைத்த பேர்வழிதான். அதுவும் ஒன்றிரண்டு கொம்புகளல்ல, பல கொம்புகள் அவருக்கிருக்கின்றன!” என்றான்.
ஸ்ரீதர் “அப்படியானால் எங்க அப்பாவை நீ மாடென்று சொல்கிறாய். அப்படித்தானே! வரட்டும். நான் அவரிடம் இதைச் சொல்கிறேன்” என்று சிரித்தான். சுரேஷ¤ம் அவனோடு சேர்ந்து சிரித்துவிட்டு ஸ்ரீதரின் கேள்விக்குப் பதிலளிக்க ஆரம்பித்தான்.
“உனது அப்பா ஜாதியில் உயர்ந்தவர், அந்தஸ்தில் உயர்ந்தவர், பணம் படைத்தவர் படிப்பிலும் உயர்ந்தவர். உண்மையில் இலங்கை பூராவும் எல்லா வகையிலும் புகழ்பெற்ற பிரபு குடும்பத்தைச் சேர்ந்தவர். அப்படிப்பட்டவரின் மகன் நீ. நான் இப்பொழுது சொன்ன பண்புகள் ஒவ்வொன்றும் உண்மையில் ஒவ்வொரு கொம்புக்குச் சமமானது. இவை போதாவென்பதுபோல் நீயும் பார்ப்பதற்கு வாட்டச்சாட்டமாக இராஜகுமாரன் போல் இருக்கிறாய். ஹோர்ட்டன் பிளெனில் பெரிய பங்களாவில் வசிக்கிறாய். டிரைவரோடு கூடிய ‘பிளிமத்’ கார் வேறு. அது மட்டுமல்ல. நீ கல்லூரிக்கு உடுத்திச் செல்லும் உடைகளை என்னைப் போன்றவர்கள் ஒரு கல்யாணத்துக்குக் கூட உடுத்திச் செல்வதில்லை. இந்த நிலையில் உன்னைப் பார்ப்பவர்கள் இயற்கையாகவே ஒரு தாழ்மை உணர்ச்சி தோன்றிவிடுகிறது. அதனால்தான் உன்னோடு தாராளமாகப் பேசவும் பழகவும் அஞ்சுகிறார்கள். இதில் நாம் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது!”
ஸ்ரீதர் பெருமூச்சு விட்டான்: “சுரேஷ்! இதனால் எனக்கு எவ்வளவு சிக்கலான பிரச்சினைகள் ஏற்படுகின்றனவென்று தெரியுமா? சில சமயம் ‘கண்டீனில்’ யாருடனாவது பேசிக்கொண்டிருக்கலாம் என்று போனால் யாருமே என்னுடன் பேசிக்கொண்டிருக்க விரும்புவதில்லை. கேட்ட கேள்விக்கு டக்கென்று ஏதோ பதில் சொல்லிவிட்டுப் போய் விடுகிறார்கள். என்னைப் பார்த்து அவர்களுக்குத் தாழ்மை உணர்ச்சி ஏற்படுகிறது என்று நீ கூறுகிறாய். அதை நான் நம்பவில்லை. எனக்குத்தான், அவர்கள் என்னுடன் பழகுவதற்கு இவ்வளவு கிராக்கி வைக்கிறார்களே என்பதை நினைத்ததும் கடுமையான தாழ்மை உணர்ச்சி ஏற்படுகிறது. “என்னில் என்ன குறைபாடு?” என்று எனது நெஞ்சத்தையே நான் குடைய ஆரம்பித்து விடுகிறேன்… உண்மையில் சுரேஷ்! இதனால் எனக்கேற்படும் தனிமை உணர்ச்சியை உனக்கு எவ்வாறு எடுத்துக் கூறுவது என்று எனக்கு விளங்கவில்லை. உண்மையின் நீயுமில்லாவிட்டால் எனக்குப் பைத்தியமே பிடித்துவிடும். நீ ஒருவன் தான் அம்மாவுக்கு அடுத்தபடி என்னுடன் தாராளமாக பழகும் ஒரே ஒருவன்.”
ஸ்ரீதரின் வார்த்தைகள் சுரேஷின் இதயத்தைத் தொட்டன. அவனுக்கு ஏற்கனவே தெரிந்த விஷயமேயாயினும் இவ்வளவு தூரம் அவன் தன் மீது மனமார அன்பு செலுத்துகிறான் என்பது அவனுக்கு முன்னர் தெரியாது. சொந்த அன்னையோடு தன்னை ஒப்பிடும் அளவுக்கு அவன் தன்னை நேசிக்கிறான் என்பதை யோசித்த போது அவனுக்குப் பெரும் அதிர்ச்சியே ஏற்பட்டு விட்டது. அந்த அதிர்ச்சியில் ஒரு கணம் அவன் மெளனமாக இருந்து விட்டுப் பின் எதையோ நினைத்துக்கொண்டவன் போய், “ஸ்ரீதர்! நீ தீடீரென இந்த விஷயத்தை இவ்வளவு விரிவாகப் பேச வேண்டிய காரணமென்ன! கல்லூரியில் இன்று பகல் நடைபெற்ற சம்பவம் எதுவும் அதற்குக் காரணமா?” என்று கேட்டான்.
ஸ்ரீதர் “அப்படி ஒன்றுமில்லை. ஆனால் ஒரு விஷயத்தை நான் கவனித்தேன். ஆண்களை விடப் பெண்கள்தான் என்னைக் கண்டு அதிகம் அஞ்சுகிறார்கள். வெகு அவசியமான நேரங்களில் கூட அவர்கள் மற்ற மாணவர்களிடம் பேசுவதுபோல என்னிடம் பேச முன் வருவதில்லை. அதற்குக் காரணமென்ன!” என்று தயக்கத்துடன் கேட்டான்.
இந்தக் கேள்விக்குச் சுரேஷ் சாதுரியமாகப் பதிலளித்தான். “உனக்கேற்பட்டிருக்கும் இப்பிரச்சினை மன்னாதி மன்னர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது. மகாமன்னனான துஷ்யந்தன் வேட்டைக்குச் சென்றபோது முதன்முதலாகச் சகுந்தலையைக் காண்கிறான். அவனை ஒரு வண்டு துரத்துகிறது. துஷ்யந்தன் வண்டை விரட்டிச் சகுந்தலையைக் காப்பாற்றுகிறான். அப்பொழுது சகுந்தலையின் தோழி அநசூயை “நீங்கள் யார்?” என்று துஷ்யந்தனை வினவுகிறாள். அதற்கு அவன் அளித்த பதில் என்ன தெரியுமா? மன்னனால் தேவாலயங்களைக் கண்காணிக்கப்படுவதற்காக நியமிக்கப்பட்ட தர்மாதிகாரி தான் என்று பொய் கூறுகிறான் அவன். அவன் மட்டும் அவ்வாறு சொல்லாமல் உண்மையைச் சொல்லியிருந்தால் சாகுந்தலம் நாடகமே காளிதாசனால் எழுதப்பட்டிருக்க முடியாது. தன்னைக் காப்பாற்றியவன் துஷ்யந்த மன்னன் என்று சகுந்தலைக்குத் தெரிந்திருந்தால் அவள் அச்சத்தால் நடுங்கியிருப்பாள். மன்னர் மன்னன் காலில் விழுந்து வணங்கி “மன்னவா! நீ நீடுழி வாழ்க!” என்று கூறிவிட்டுப் போயிருப்பாள். காதல் ஏற்பட்டிருக்காது” என்றான்.
அதற்கு ஸ்ரீதர் “சகுந்தலையின் கதையில் அப்படி ஒரு சம்பவமிருக்கிறதா? அது எனக்கு நினைவில்லை. ஆனால் இது போன்ற அனுபவம் ஒன்று எனக்கும் இவ்வாரம் ஏற்பட்டது. நானும் ஏன் துஷ்யந்தனைப் போல் ஒரு பெண்ணிடம் நான் யார் என்பதைப் பற்றி ஒரு பெரிய பொய் கூறிவிட்டேன். பார்க்கப் போனால் நான் செய்தது தவறில்லை. “துஷ்யந்தன் செய்ததைத் தானே நானும் செய்திருக்கிறேன்!” என்றான்.
சுரேஷ் வேடிக்கையாக “அட சக்கை! அப்படியா காரியம்! இப்பொழுது நான் ஒன்றைத் தெரிந்துகொண்டேன். நீ துஷ்யந்தன். ஆனால் துஷ்யந்தன் மனதைக் கவர்ந்த அந்தச் சகுந்தலை யாரோ? எந்த ஊரோ? என்ன பேரோ?” என்று கேட்டான்.
தொடர் நாவல்: மனக்கண்ஸ்ரீதர் “அந்தப் பெண் எனது வகுப்பு மாணவியல்ல. விஞ்ஞானப் பிரிவில் படிக்கிறான். என்னைப் பற்றி அவளுக்கு முன்பின் தெரியாது. நான் ஒரு நாடக கவிஞன் என்பது மட்டுமே அவளுக்குத் தெரியும். பல்கலைக் கழக நாடக மன்றத்துக்கு அவளும் என்னோடு கூட்டுக் காரியதரிசியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறாள். இவ்வ்ருடம் சொபாக்கிளிஸ் என்ற கிரேக்கப் புலவன் எழுதிய “எடிப்பன் ரெக்ஸ்” என்னும் நாடகத்தை நாங்கள் தமிழில் அரங்கேற்றவிருக்கிறோம். அது பற்றிய வேலைகளுக்காக என்னிடம் இரண்டு மூன்று தடவை பேச வந்த அவன் என்னுடன் சற்றுத் தாராளமாகவே பழக ஆரம்பித்து விட்டாள். அவன் இளைப்பாறிய ஒரு வாத்தியாரின் மகள். கொட்டாஞ்சேனையில் வசிக்கிறான். அவன் என்னிடம் என்னுடைய குடும்பத்தைப் பற்றி விசாரித்தான். நான் எப்படி சிவநேசரின் மகன் என்று கூறுவேன்! அவ்வாறு கூறினால் அவன் மிரண்டு விடுவாள் என்று நினைத்து என் தகப்பனார் பெயர் செல்லையா பிள்ளை என்றும் அவரும் அவளுடைய தந்தையைப் போல இளைப்பாறிய ஒரு வாத்தியாரே என்றும் கூறிவிட்டேன் என்றான். பின் திடீரென்று “சுரேஷ்! நான் பொய் சொல்வதில் தப்பில்லையே!” என்று நண்பனை வினவினான்.
சுரேஷ் “அதில் தப்பொன்றுமில்லை. அதுதான் துஷ்யந்தன் கூட அவ்வாறு பொய் சொல்லியிருக்கிறான் என்று முன்னமே கூறினேனே!” என்றான்.
ஸ்ரீதர் அதைக் கேட்டுவிட்டுச் சிறிது நேரம் ஜன்னல் வழியாக மேகமந்தைகளூடே சஞ்சரித்துக் கொண்டிருந்த சந்திரனைப் பார்த்துக் கொண்டு பேசாமலிருந்தான்.
சற்று நேரம் சென்றதும் சுரேஷ் அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு, “ஸ்ரீதர்! நான் உன்னிலும் பார்க்க வயதிற் கூடியவன். ஆகவே உன்னுடைய சகுந்தலை விஷயமாக நான் உன்னை எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன். காதல் என்பது கதைகளுக்குத்தான் சரி. வாழ்க்கைக்கு ஒத்து வராது. உன் தகப்பனார் அவளை ஒரு பொழுதும் தன் மருமகளாக ஏற்றுக் கொள்ள மாட்டார் என்பதை நீ மறந்துவிடாதே!” என்றான்.
ஸ்ரீதர் “சுரேஷ்! நீ தெரியாமல் பேசுகிறாய். நீ அப்பாவைப் புரிந்து கொள்ளவில்லை. அவர் முற்போக்கான கருத்துகள் கொண்டவர். பத்து வருடங்களின் முன்னர் அவர் தமிழில் எழுதி வெளியிட்ட “நமது சமுதாயப் பிரச்சினைகள்” என்ற நூலை நான் உனக்குக் காட்டியிருக்கிறேனல்லவா! அதில் அவர் காதல் திருமணத்தை ஆதரித்து எழுதியிருக்கிறார். அப்படிப்பட்டவர் எப்படி நான் பத்மாவைத் திருமணம் செய்வதை எதிர்க்க முடியும்! நிச்சயம் அவர் எங்கள் திருமணத்தை ஆதரிப்பார்” என்று கூறினான்.
சுரேஷ் “அதை நாங்கள் பொறுத்திருந்து பார்ப்போம். இப்போது இரவு வெகு நேரமாகிவிட்டது. நாங்கள் நித்திரை கொள்ள வேண்டாமா? காதலைப் பற்றிப் பேசினால் யாருக்கும் ருசிதான். என்றாலும் நாளைக்கு வகுப்புக்கும் போக வேண்டுமல்லவா!” என்றான்.
ஸ்ரீதர் தனது கட்டிலுக்குப் பக்கத்திலுருந்த மின்சார விசையை அழுத்தினான். வெளிச்சம் மின்னிக்கொண்டு அறை முழுவதும் வியாபித்து, ஜன்னலூடாகப் பரவியிருந்த நிழலையும் விழுங்கியது. மேசையிலிருந்து மணிக்கூடு மணி பன்னிரண்டு என்பதைக் காட்டியது.
“ஓ! மணி பன்னிரண்டாகி விட்டது!” என்று கூறிக் கொண்டே ஸ்ரீதர் எழுந்து மேசையிலிருந்த வெந்நீர்ப் போத்தலிலிருந்த தேநீரை இரு கோப்பைகளில் ஊற்றி ஒரு கோப்பையைச் சுரேஷிடம் நீட்டினான். சுரேஷ் அதை ஒரே மடக்காகக் குடித்துவிட்டுக் கட்டிலில் படுத்துக்கொண்டு போர்வையில் தன் உடலை மட்டுமல்ல. முகத்தையும் மூடிக் கொண்டான்.
ஸ்ரீதர் ‘லைட்’டை அணைத்துவிட்டுப் படுக்கைக்குச் சென்றான். ஆனால் நித்திரை வரவில்லை. பத்மாவின் நினைவுமுகம் ஜன்னலூடாகத் தெரிந்த சந்திரனுடன் போட்டியிட்டுக் கொண்டு அவன் மனதை இன்ப நிலவால் நிறைத்தது. அன்று அவன் நித்திரை போன போது அதிகாலை நாலு மணியிருக்கும். அவனது கிராமத்திலென்றால் அப்பொழுது கோழி கூவியிருக்கும்!
2-ம் அத்தியாயம்: அழைப்பு
பல்கலைக் கழக மண்டபத்தில் ‘எடிப்பஸ் ரெக்ஸ்’ நாடகம் தமிழில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கிரேக்க நாடகாசிரியனன சொபாக்கிளிஸ் எழுதிய அந்நாடகம் உலகத்தின் வெற்றி நாடகங்களில் ஒன்று. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் ஏதென்ஸ் நகரில் முதன் முதலாக அரங்கேற்றப்பட்ட அந்நாடகம் உலகின் பல நாடுகளிலும் பல மொழிகளிலும் நடிக்கப்பட்டு இப்போது தமிழ் மொழிக்கும் வந்துவிட்டது. நானே இதற்குப் பொறுப்பாளி என்பதில் நாடகத்தில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த ஸ்ரீதருக்கு மிக்க பெருமை.

“எடிப்பஸ் ரெக்ஸ்” இதுவரை உலகில் பல்லாயிரம் இரவுகள் ஓடியிருக்க வேண்டும்! சில சமயம் இலட்சம் இரவுகள் கூட ஓடியிருக்கலாம். ஆண்டொன்றுக்கு அங்கொரு நாட்டில் இங்கொரு நாட்டிலாக ஐம்பது இரவுகள் ஓடியிருந்தால் கூட ஓர் இலட்சமாகி விடுமல்லவா? இந்த நாடகத்தை முதன் முறையாக நூல் வடிவில் வாசித்த போதே ஸ்ரீதர் நிச்சயம் அதனைத் தமிழில் நடிக்கவேண்டுமென்றும், அதில் எடிப்பஸ் மன்னனின் பாகத்தைத் தானே வகிக்க வேண்டுமென்றும் தீர்மானித்துக்கொண்டான். இளமையில் அந்தக் கனவு இன்று மிகவும் ஆரவாரமாக மேடையில் நிறைவேறிக்கொண்டிருந்தது!
பல்கலைக் கழக நாடகமென்றால் ஒரே கூச்சலும் கும்மாளமுமாயிருக்கும் என்பதை கூறவா வேண்டும்? மாணவர்கள் ஏதேதோ பேசிச் சிரித்தார்கள், கூச்சலிட்டார்கள். சீழ்க்கை அடித்தார்கள். ஆனால் இதெல்லாம் நாடகம் தொடங்க முன்னர்தான். நாடகம் ஆரம்பித்ததும் சுக்கிரீவர் கூட்டம் என்று சாதாரணமாக வர்ணிக்கப்படும் பல்கலைக் கழக மாணவர்களே “கப்சிப்” பென்று ஸ்தம்பித்து, உட்கார்ந்து விட்டார்கள் என்றால், நாடகம் எவ்வளவு தூரம் நெஞ்சைப் பிழிப்பதாக இருந்திருக்க வேண்டும்!
இருளிலே சபையோர் அடுத்த சம்பவம் என்ன என்ற ஆர்வத்தோடு ஒளிமயமான நாடக மேடையைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள். ஸ்ரீதர் மேடையில் கணீரென்ற குரலில் பேசி நடித்துக் கொண்டிருந்தான்.
அன்று காலையிலிருந்தே ஸ்ரீதரின் மனம் நாடக அரங்கேற்றத்தால் மிகவும் பூரித்துப் போயிருந்த தென்றாலும் காளிதாசனின் “கணையாழி சாகுந்தலத்”தில் சூத்திரதாரி “பெரிய பயிற்சியுடையோருக்கும் அறிஞர் மகிழ்ந்து புகழும் வரை சிறிது மனத்தளர்ச்சி இருப்பது இயற்கையே” என்று கூறி இருப்பதற்கு இசைய, நாடகத்தின் வெற்றியில் ஒருவித பயமும் பதற்றமும் இருக்கவே செய்தன. ஆனால் சபையின் அமைதியும் இடையிடையே பட்டாசு வெடித்தது போல் இருளில் வெடித்துப் பரவிய கைதட்டலும் அந்தப் பயத்தை நாடகம் தொடங்கிய முதல் ஐந்து நிமிஷங்களிலேயே எங்கேயோ தூக்கி எறிந்துவிட்டது. எனவே தானே இராஜா என்பதுபோல் சிம்மக் குரலெடுத்து முழங்கிக் கொண்டிருந்தான் ஸ்ரீதர்.
ஆனால், என்னதான் சிறப்பாக நடித்துக் கொண்டிருந்த போதிலும் ஸ்ரீதரின் மனதில் ஒரு பெருங் குறை இல்லாமல் இல்லை. தாய் பாக்கியமும் தந்தை சிவநேசரும் நாடகத்துக்கு வர முடியாது போய் விட்டமையே அது. சிவநேசருக்கு நீரிழிவு வியாதி ஏற்கனவே உண்டு. அதன் விளைவாகக் கடந்த சில நாட்களாகக் காலில் ஒரு கட்டி ஏற்பட்டுப் படுத்த படுக்கையாக இருக்க வேண்டிய நிலைமை அவருக்கு ஏற்பட்டுவிட்டதால், இருவராலும் நாடகத்துக்கு வர முடியவில்லை. இல்லாவிட்டால் மகனின் நடிப்புப் புலமையைப் பார்க்க எங்கிருந்தாலும் அவர் வந்தேயிருப்பார். கூடத் தாய் பாக்கியமும் வந்திருப்பாள்.
ஸ்ரீதர் மனம் இதனால் ஏமாற்றமடைந்திருந்ததாயினும் சபையின் முன்னணி ஆசனங்களில் பத்மாவும் அவளது தந்தையார் வாத்தியார் பரமானந்தரும் உட்கார்ந்திருந்ததைக் கண்டதும் அவனது கவலைகள் மறைந்து போயின.
பத்மாவின் தகப்பனார் வாத்தியார் பரமானந்தரை அவன் இதற்கு முன்னர் ஒரு போதும் கண்டதில்லையாயினும் பத்மாவின் பக்கத்தில் அவர் வீற்றிருந்த தோரனையிலிருந்தும், அவர் வயது, முகச் சாயல் என்பவற்றிலிருந்தும் அவர்தான் பத்மாவின் தந்தை என்பதைத் தெரிந்துக் கொண்டான்.
பரமானந்தர் நாடகத்தை மிக நுணுக்கமாகப் பார்த்து அனுபவித்துக் கொண்டிருந்தார்.
நாடகம், தேபேஸ் நாட்டு மன்னனின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லுவது, எடிப்பஸ் தந்தையைத் தந்தையென்றறியாது தன் கரத்தாலேயே கொன்றுவிடுகிறான். பின் தாயைத் தாயென்று தெரியாது பெண்டாளுகிறான். அவளைத் தனது பட்டத்து மகிஷியாகவும் ஏற்றுக் கொள்ளுகிறான். தாய்க்கும் மகனுக்கும் குழந்தைகளும் பிறந்துவிடுகின்றன! இந்நிலையில் சில சந்தர்ப்ப சூழல்களால் அவனுக்கு உண்மைகள் வெளியாகின்றன. என்ன செய்வான், எடிப்பஸ். தாயைப் பெண்டாண்ட பாதகன் தானென்று தெரிந்ததும் நெருப்பை மிதித்தவன் போல் நெஞ்சடைத்து கதறுகிறான் எடிப்பஸ்!
தந்தையைக் கொன்றவன் நான்!
தாயின் கணவன் நான்!
என் பிள்ளைகள் எனக்குத் தம்பிமாராகிவிட்டார்கள்!
எடிப்பசுக்கு இதை விட வரை வேறென்ன வேண்டும்! வேறென்ன வேண்டும்!
உலகமே அதிரும்படியாக இவ்வசனங்களை முழங்குகிறான் ஸ்ரீதர். இந்தக் கட்டத்தில் அவனது நடிப்பு எல்லோரையும் கவர்ந்துவிட்டது. ஆனால் அடுத்த கட்டமோ மயிர்க் கூச்செரியச் செய்தது.
‘எடிப்பஸ் மன்னன் மேடையின் நடுவே மின் விளக்கின் வட்ட ஒளியில் வந்து நிற்கிறான். ஆவேசங் கொண்டு அலறுகிறான். பின்னணியில் கூட்டு வாத்தியங்களும் அவனோடு சேர்ந்து பயங்கரமாக அலறுகின்றன. இசையின் அலறலுக்குத் தக்கபடி தன் ஈட்டியால் தன் கண்களை மீண்டும் மீண்டும் பல தடவை குத்துகிறான் அவன். கண்களிலிருந்து இரத்தம் பீறிடுகிறது. கன்னங்களில் கொட்டுகிறது செந்நீர்! கண்ணிழந்து கபோதியாய் நிற்கிறான் காவலன்.
இந்தக் கட்டத்தில் ஸ்ரீதர் நடிப்பின் உச்சத்தை அடைந்து விடுகிறான். சபையோர் நடு நடுங்கிப் போய் விட்டார்கள். பட்டாசு போல் கைதட்டல் வெடிக்கிறது!
பத்மா அவன் கண்களைக் குத்தும் கட்டத்தில் “ஐயோ” என்று அலற வந்தவள் எப்படியோ அதை ஒருவாறு அடக்கிக் கொண்டாள். பரமானந்தர், “பத்மா, நடிப்பென்றால் இதுதான் நடிப்பு! நடிகனின் பெயர் என்ன?” என்றார் மகளைப் பார்த்து.
“ஸ்ரீதர். அவர்தான் நாடகத்தைத் தமிழில் எழுதியவரும் கூட. இன்னும் அவர்தான் தயாரிப்பாளரும்!” என்றாள் விரிவாக.
“அப்படியா! அவன் மிகவும் கெட்டிக்காரன் போலிருக்கிறதே. நாடகம் முடிந்தப்பின்னர் அவனை நான் நிச்சயம் பார்த்துப் பாராட்டவேண்டும்” என்றார் பரமானந்தர்.
நாடகம் முடிந்து, சபை கலைந்து கொண்டிருந்தது. யாரோ ஒரு புரளிக்கார மாணவன் கலைந்து கொண்டிருந்த மக்களின் இரைச்சலுக்கு மேலே கேட்கும் படியான உரத்த தொனியின் “தந்தையைக் கொன்றவன் நான்..” என்று கூச்சலிட்டுச் சென்றான். சொபாக்கிளின் அவ்வுணர்ச்சி நிறைந்த கதையில் இரண்டாயிரம் வருடங்களைத் தாண்டி, கொழும்பில் அவ்வாறு ஒலித்ததைக் கேட்ட ஓர் இலக்கியப் பிரியர் இன்னோர் இலக்கியப் பிரியரின் முதுகில் தட்டி “கேட்டீரா, இதுதான் இறவாத இலக்கியம், காலத்தை வென்ற இலக்கியம்!” என்று கூறிவிட்டுச் சென்றார். ஜன சந்தடியில் ஒன்றிரண்டு வாக்குகள் அங்குமிங்கும் புரண்டன. சீக்கிரம் மோட்டார் வண்டிகளின் ‘ஹோர்ண்’ சப்தமும் இயந்திரங்களின் உறுமலும் கேட்டன. நாடகம் முடிந்து ****
ஸ்ரீதர் “அப்பாடா” என்று பெருமூச்சு விட்டுக் கொண்டே வேஷம் கலைக்கும் (அதுதான் வேஷம் போடும் அறையும் கூட) அறைக்குள் வந்து மேக்கப்பைத் துடைக்க ஆரம்பித்தான். சுரேஷ் அவனை அங்கு எதிர்பார்த்துக்கொண்டு நின்றான். “சுரேஷ்! எனக்கு நிறைய வேலையிருக்கிறது. நீ போ. நான் அப்புறம் வருகிறேன். நாடகம் எப்படி!” என்று கேட்டான் உற்சாகத்தோடு “அற்புதம்!” என்று சுருங்கச் சொன்ன சுரேஷ் ஸ்ரீதரின் தோள்களைத் தடவி “நீ இவ்வளவு தூரம் நடிப்பாய் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. வீட்டுக்கு வா. அப்புறம் பேசுவோம்.” என்று கூறுவிட்டு அவனிடம் விடை பெற்றுச் சென்றுவிட்டான். அவன் போன மறுகணம் பத்மாவும் பரமானந்தரும் அங்கு வந்தார்கள். வெயர்த்து விறு விறுத்து, பாதி கலைக்கப்பட்ட மேக்கப்புடன் நின்ற ஸ்ரீதர் அவர்களைக் கைகூப்பி வரவேற்றான். பத்மா பரமானந்தரை ஸ்ரீதருக்கு அறிமுகம் செய்து வைத்தானள்.
“ஸ்ரீதர்! உனது நடிப்பு மிகவும் நன்றாயிருந்தது. இப்படிப்பட்ட நடிப்பைச் சிறந்த ஆங்கிலப் படங்களில் மட்டுமே நான் பார்த்திருக்கிறேன்” என்று மனமாரப் பாராட்டினார் பரமானந்தர்.
ஸ்ரீதருக்குப் பரமானந்தரின் பாராட்டு மிகுந்த ஆனந்தத்தைத் தந்தது. “எடிப்பஸ்” நாடகத்தை நடிக்க வேண்டுமென்பது எனது நீண்ட நாளைய ஆசை. அதை வெற்றியாகவே நிறைவேற்றி விட்டேன் என்று நீங்கள் கூறுவது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது” என்று தாழ்மையுடன் பதிலளித்தான் அவன்.
பரமானந்தர் அவன் தோள்களைத் தட்டி “சரி, நான் வருகிறேன். ஸ்ரீதர் சமயம் இருக்கும் போது நீ வீட்டுக்கு வரலாம். முடியுமானால் நாளையே வா. உன்னுடன் நாடகங்களைப் பற்றி நான் பேச விரும்புகிறேன். உண்மையில் நானும் உன்னைப்போல் ஒரு நாடகக் கலைஞன் தான். வாலிப வயதில் நானும் பல நாடகங்களில் நடித்திருக்கிறேன். அப்பொழுது நான் இது போல் மீசை வைத்திருக்கவில்லை. பெண் பாகங்களில் கூட நடித்திருக்கிறேன்” என்றார் சிரித்துக்கொண்டு.
ஸ்ரீதரும் சிரித்தான். “ஓ! அப்படியா! அப்போது நாங்கள் இருவரும் ஒரே திசையை நோக்கிச் செல்பவர்கள். பத்மாவுக்கு நாடகத் துறையில் இருக்கும் ஆர்வத்துக்கும் இப்போது காரணம் புரிந்துவிட்டது. தந்தைக்கு இருக்கும் கலையார்வத்தில் பாதியாவது மகளுக்கு இருக்காதா? என்னை வீட்டுக்கு வரும்படி கூறினீர்களல்லவா? கட்டாயம் நாளைக்கே வருகிறேன்” என்றான் ஆர்வத்துடன்.
அதன்பின் பரமானந்தரும் பத்மாவும் ஸ்ரீதருக்கு வணக்கம் சொல்லிவிட்டு, மரமடர்ந்த இருள் படர்ந்திருந்த வீதி வழியே கொட்டாஞ்சேனைக்குச் செல்ல, பஸ்தரிப்பை நோக்கி நடந்தார்கள். வழியில் நாடகத்தைப் பற்றித் தந்தையும் மகளும் விரிவான விமர்சனம் செய்து கொண்டார்கள்.
ஸ்ரீதர் அன்றிரவு வீடு வந்து சேர்ந்தபொழுது இரவு பன்னிரண்டு மணிக்கு மேலாகிவிட்டது. சுரேஷ் ஏற்கனவே வீடு வந்து வயிறு முட்டச் சாப்பிட்டு விட்டுப் படுத்துவிட்டான். ஸ்ரீதர் அறைக்கு வந்த பொழுது சுரேஷின் “கார்-புர்” குறட்டை ஒலி தான் அவனை வரவேற்றது. அதைச் சற்று உற்றுக் கேட்ட ஸ்ரீதர் “சுரேஷின் குறட்டை ஒலி பல சங்கீத வித்வான்களின் கச்சேரிகளிலும் பார்க்க இனிமையாக இருக்கிறதே!” என்று தன்னுள் தானே கூறிக் கொண்டான். ஸ்ரீதரின் உள்ளத்தில் அன்று மிக்க மகிழ்ச்சி. அதற்கு இரு காரணங்கள் இருந்தன. ஒன்று நாடகத்தின் வெற்றி. மற்றது பரமானந்தர் அவனைத் தன் வீட்டுக்கு வரும்படி அழைத்தமை. இவ்வழைப்பின் பயனாகப் பத்மாவுக்கும் தனக்கும் ஏற்கனவே ஏற்பட்டிருந்த தொடர்பு மேலும் இறுகி வலியுறும் என்று அழுத்தமான எதிர்ப்பார்ப்பு அவன் மனதிலே ஏற்பட்டது.
ஸ்ரீதரின் அறையில் வெளிச்சம் தெரிந்ததும் வேலைக்கார சுப்பையா மாடிக்கு ஓடி வந்தான்.
“சின்ன ஐயா வீடு வந்ததும் உடனே தனக்கு ஐயா டெலிபோனில் பேசினார்” என்றான் அவன்.
“அப்படியா!” – என்று கொண்டே ஸ்ரீதர் டெலிபோன் இருக்கும் இடத்துக்குப் போய் கிராமத்துக்கு ஒரு “ட்ரங்க் கோலை” “புக்” பண்ணிவிட்டுச் சாப்பாட்டு மேசையிலமர்ந்து, சிறிது சாப்பிட ஆரம்பித்தான். ஆனால் கையும் வாயும்தான் சாப்பாட்டோடு சேர்ந்து நின்றனவல்லாமல், மனமென்னவோ பத்மாவின் பின்னாலே தான் போயிற்று. அவள் தங்க மேனியும் தளிரிடையும் மனத்திரையில் தோன்றின.
“பத்மா மிகவும் கெட்டிக்காரி. எவ்வளவு நாகரிகமாகவும் மரியாதையாகவும் என்னைத் தன் தந்தைக்கு அறிமுகம் செய்து வைத்துவிட்டாள்! பரமானந்தரும் ஒரு நாடகக் கலைஞராக இருப்பது பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலல்லவா? இனி நான் அவர் வீட்டுக்கு அதைச் சாக்காக வைத்துக்கொண்டு எத்தனை தடவையும் போகலாம்” – என்று தன்னோடு தானே பேசிக் கொண்டான் ஸ்ரீதர்.
பின்னர் திடீரென மற்றோர் எண்ணம் உண்டாயிற்று. “இன்று நான் பத்மாவுடன் மாறாட்டமாகத்தானே பழக வேண்டியிருக்கிறது! ஆனால் என்றோ ஒரு நாள் உண்மையைக் கூறித்தானேயாக வேண்டும்! அப்பொழுது அவள் என்னைப் பொய்யன் என்று ஏற்க மறுப்பாளோ! காலையில் சுரேஷிடம் நான் இந்தக் கேள்விக்கு மறுமொழி கேட்க வேண்டும். அவன்தான் இப்படிப்பட்ட சிக்கலான பிரச்சினைகளுக்குத் தெளிவான பதிலளிக்கக் கூடியவன்,” என்று எண்ணிய ஸ்ரீதரின் மனதில் எதற்காக அவன் தந்தையார் நள்ளிரவில் டெலிபோனில் தன்னுடன் பேச முயல வேண்டும் என்ற கவலையும் ஏற்பட்டது. “** செய்தியோ அவச் செய்தியோ? எதுவும் இப்போது தெரிந்துவிடும் தானே” என்று அவன் எண்ணவும் டெலிபோனில் “ட்ரங்கோல்” வரவும் சரியாய் \இருந்தது. சாப்பிட்ட கையைக் கழுவாமலே டெலிபோனுக்கு ஓடினான்.
யாரது, ஸ்ரீதரா?
ஆமப்பா, என்ன விசேஷம்?
நாடகம் எப்படி இருந்தது?
மிகவும் நன்றாயிருந்தது என்று சொன்னார்கள். என் நடிப்பை மிகவும் புகழ்ந்தார்கள் அப்பா.
அப்படியா? எனக்கும் அம்மாவுக்கும்தான் வர முடியவில்லை. இன்னும் எனது கால் புண் ஆறவில்லை. இல்லாவிட்டால் இருவரும் வந்திருப்போம்.
அது சரி, அப்பா. இப்பொழுது கால் புண் எப்படி?
நோவடங்கி விட்டது, என்றாலும் புண் ஆறவில்லை. புண் ஆற இன்னும் இரண்டு வாரங்களாவது பிடிக்குமாம்.
அப்படியா? சரி அப்பா. வேறென்ன விசேஷம்?
ஒன்றுமில்லை.
அப்போது வைக்கட்டுமா? குட் நைட் அப்பா.
குட் நைட். ஆனால் நில்லு. அம்மா பேசவேண்டுமாம்.
ஸ்ரீதர்!
அம்மா!
நாடகம் நன்றாய் இருந்ததா?
ஆம் அம்மா.
அப்படியா… அடுத்தபடி நாடகம் போட்டால் நான் எப்படியும் வருவேன். அப்பாவுக்குக் கால் சுகமில்லாததால் அவரை விட்டுவிட்டு வரமுடியவில்லை.
இப்போது அதற்கென்ன! நான் கோபித்துக் கொள்வேன் என்று பயமா? அப்பாவுக்குச் சுகமில்லாதிருக்கும்போது நான் அப்படிக் கோபிப்பேனோ!
அது சரி ஸ்ரீதர், என்ன சாப்பிட்டாய்?
இப்பொழுது நான் சாப்பிட்டுக்கொண்டிருக்கிற சோறும், மீனும் சுப்பையா நன்றாகச் சமைத்திருக்கிறான்.
காலையில் சுப்பையாவிடம் சொல்லி முட்டைக் கோப்பி குடிக்க மறக்காதே.
சரி அம்மா. சாப்பாட்டுக் கதை போதும். நான் என்ன குழந்தைப் பிள்ளையா.. சரி வைக்கிறேன். வைக்கட்டுமா?
டெலிபோனை வைத்துவிட்டு ஸ்ரீதர் “அப்பாடா” என்று பெருமூச்சு விட்டான். பின்னர், மீண்டும் மேசையில் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டுப் படுக்கை அறையை நோக்கி நடந்தான். “நாடகத்துக்கு வராததற்குக் காரணம் கூறித் திருப்திப் படுத்தவா இவ்வளவு முயற்சியும்!” என்று தன்னுள் தானே கூறிக் கொண்ட அவன் “ஒரு வகையில் அவர்கள் வராததும் நல்லதுதான். இல்லாவிட்டால் பத்மா தனது தந்தையார் பரமானந்தரை எனக்கு அறிமுகம் செய்துவைப்பதில் எவ்வளவோ சிரமம் ஏற்பட்டிருக்கும். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் முன்னர் வருவதற்கு நிச்சயம் பத்மா தயங்கியிருப்பாள். அத்துடன் எனது பொய்யும் அல்லவா வெளிப்பட்டிருக்கும். இன்னும் அப்பா வந்திருந்தால் பேராசிரியர்கள் கூட இருக்கையை விட்டெழுந்து அவரை வரவேற்றிருப்பார்கள். எல்லாம் ஒரே சிக்கலாக முடிந்திருக்கும்! “கடவுள் தான் என்னைக் காப்பாற்றினார். நான் அதிர்ஷ்டசாலி” என்று எண்ணியவாறே படுக்கையில் சாய்ந்தான் அவன். வாலிபப் பருவத்தில் வாலிபர்கள் எண்ணுவது வேறு. ஒருவர் எண்ணத்தை ஒருவர் அறிய முடியாதிருப்பதனால், அவர்கள் சமாதானமாக வாழ முடிகிறது. இல்லாவிட்டால் அவர்களிடையே எத்தனை குழப்பங்கள் ஏற்படும்! நாங்கள் **** ஸ்ரீதருக்கு இவ்வளவு சந்தோஷம் என்பது தெரிந்திருந்தால் அவனது பெற்றோர்களுக்கு எப்படி இருந்திருக்கும்? இவ்வித சிரமங்களிலிருந்து எம்மைக் காப்பாற்றவே போலும். மற்றவர்களுக்குத் தெரியாமலே சிந்திக்கும் அற்புத சக்தியை இயற்கை மனிதர்களுக்கு அளித்திருக்கிறது!
காலையில் ஸ்ரீதர் கண் விழித்தபோது சுரேஷ் “ஷேவ்” எடுத்து முகம் கழுவிப் பவுடர் போட்டுக்கொண்டிருந்தான். தலையைக் ‘கிறீம்’ போட்டு வாரிக் கண்ணாடி மேசை முன்னால் வெறும் மேலுடன் அவன் தன்னை அழகு பார்த்துக்கொண்டிருந்ததை சிறிது நேரம் சுவாரஸ்யமாகப் பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீதர் “சுரேஷ்! என்ன அதிகாலையில் இவ்வளவு அலங்காரம்? பெண் பார்க்கப் போகிறயா?” என்று கேட்டான்.
சுரேஷ் “நான் பெண் பார்ப்பது இருக்கட்டும். முதலில் முட்டைக் கோப்பியைக் குடி. இதோ சுப்பையா கொண்டு வந்து வைத்திருக்கிறான். நேற்று நாடகத்தில் நடித்த களைப்பிற்காக இரண்டு முட்டை போட்டு விசேஷமாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது. உனது அம்மா நேற்று உத்தரவிட்டாளாம்” என்றான்.
ஸ்ரீதர் “என்ன அம்மாவின் உத்தரவா? சுப்பையா கனவு கண்டானா?” என்றான் ஆச்சரியத்துடன்.
“கனவில்லை. எல்லாம் உண்மையில் நடந்ததுதான். உன் அம்மா டெலிபோனில் போட்ட உத்தரவு” என்றான் சுரேஷ்.
“ஓ! டெலிபோனிலா. சரிதான். ‘டெலிகிராம்’ அடிக்காமல் விட்டாளே, அது போதும். இல்லாவிட்டால் தந்தி ஆபிஸ் கிளார்க் அதைப் பார்த்துச் சிரிக்கும்படி ஏற்பட்டிருக்குமல்லவா? “ஸ்ரீதருக்கு நாளைக் காலை இரண்டு முட்டை போட்டுக் காப்பி கொடு” என்று தந்தி வந்தால் யாருக்குத்தான் சிரிப்பு வராது? சில சமயம் தினசரிப் பத்திரிகைகளில் கூட அந்த பெண்களுக்குப் புத்தியேயில்லை. நான் என்ன குழந்தைப் பிள்ளையா? இப்படி நடத்தப்படுவதற்கு? எனக்கு இவை சந்தோஷத்தைக் கொடுப்பதில்லை. சலிப்பைத்தான் கொடுக்கிறது. உடனே ஒரு ‘ட்ரங்கோல்’ எடுத்து அம்மாவைக் கண்டிக்க வேண்டும் போலிருக்கிறது. நான் என்ன சொன்னாலும் அம்மா கேட்பதில்லை. மீண்டும் மீண்டும் இப்படியே நடந்துக் கொள்கிறாள். ஏற்கனவே நான் நூற்றைம்பது இறாத்தல் குண்டோதரன் போல் இருக்கிறேன். அம்மா சொல்லுவதெல்லாவற்றையும் சாப்பிட்டால் வயிறு வெடித்துச் செத்துவிட மாட்டேனா?” என்றான் ஸ்ரீதர்.
சுரேஷ், “நீ என்னவோ அப்படிச் சொல்கிறாய்? எனக்கோ எனது தாயார் அப்படித் தொல்லை கொடுக்கவில்லையே என்ற கவலை. ஆனால் அவளும் உன் அம்மாவைப் போல பணக்காரியாக இருந்தால் நிச்சயம் ‘ட்ரங்கோல்’ போட்டுப் பேசத்தான் செய்வாள்” என்றான்.
“ஏன் உனக்கு இரண்டு முட்டை போட்ட கோப்பி குடிக்க ஆசையா? அப்படியானால் சுப்பையாவிடம் சொன்னால் உடனே கொண்டு வந்துவிடுகிறான். சென்ற வாரம் தானே அம்மா நூறு முட்டைகள் அனுப்பினாள். அதில் பத்து முட்டை கூழ் முட்டையானாலும் தொண்ணூறு முட்டைகள் தேறுமல்லவா?”
“முட்டை ஆசையில் நான் பேசவில்லை. நான் ஏற்கனவே ஒரு முட்டை போட்ட கோப்பி குடித்துவிட்டேன். சுப்பையா கொண்டு வந்தான். நீ முதலில் படுக்கையை விட்டெழும்பி உன் கோப்பியைக் குடி. குடித்துக்கொண்டே பேசலாம்” என்றான் சுரேஷ்.
ஸ்ரீதர் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து பக்கத்திலிருந்த மேசையிலிருந்த கோப்பியை எடுத்துக் குடித்துக்கொண்டே “அப்படியானால் நீ சொன்னதின் அர்த்தமென்ன?” என்று கேட்டான்.
“உன் அம்மா இரண்டு முட்டை போட்டுக் கோப்பி கொடுக்கும்படி இருநூற்றைம்பது மைலுக்கு அப்பாலிருந்து டெலிபோனில் உன் வேலைக்காரனுக்கு உத்தரவிட்டது உன் மீதுள்ள அன்பினால்லவா? உன் உள்ளத்துக்கு ஒருவித இதத்தைக் கொடுக்கவில்லையா? இருநூற்றைம்பது மைலுக்கப்பாலிருந்தாலும் அவள் உள்ளமும் உன் உள்ளமும் ஒட்டிக் கொண்டது போன்ற ஓர் உணர்வு ஏற்படவில்லையா? எனக்கு அப்படிப்பட்ட இதத்தை அனுபவிப்பதில் ஆசை. அதனால் தான் நான் அவ்வாறு சொன்னேன்” என்றான் சுரேஷ்.
“எனக்கென்னவோ ஒரு மனிதனைப் பிடித்துத் தன்னோடு சேர்ந்து அமுக்கி வைத்துக் கொள்ள முயலும் இவ்வித அன்பு இன்பத்தைத் தருவதற்குப் பதிலாகப் பெரும் தொல்லையாகத் தான் படுகிறது. உனக்கும் அப்படித்தானிருக்கும் அனுபவித்துப் பார்த்தால்! ஆனால் நான் இப்படிப் பேசுவதானால் எனக்கு அம்மாவைப் பிடிக்காது என்று எண்ணி விடாதே. உண்மையில் அப்பாவை விட அம்மாமீது தான் எனக்குப் பிரியம். அப்பாவைக் கண்டால் ஒருவித மரியாதை உணர்ச்சி ஏற்பட்டுவிடுகிறது. மரியாதைக்கும் பயத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு. பயமும் அன்பும் எவ்வாறு ஒரே இடத்தில் குடிகொள்ள முடியும்?” என்று கூறிய ஸ்ரீதர் அந்த விஷயத்தை அவ்வாறு நிறுத்திவிட்டு “சுரேஷ்! நீ நாடகத்தைப் பற்றி என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டான் ஆர்வத்துடன்.
“அதுதான் நேற்றிரவே சொல்லிவிட்டேனே! அற்புதம்! இதோ காலைப் பத்திரிகை என்ன சொல்கிறது பார்” என்று கொண்டே மேசையிலிருந்த பத்திரிகையைக் கையில் எடுத்துக்கொண்டு ஸ்ரீதரின் கட்டிலில் அமர்ந்தான் சுரேஷ்.
எடிப்பஸ் பல்கலைக்கழக மாணவர்களின் வெற்றி நாடகம் என்ற ஐந்து ‘கலம்’ தலைப்புடன் விரிவான விமர்சனம் வெளியாகிருந்தது பத்திரிகையில். எடிப்பஸாக நடித்த ஸ்ரீதரின் படமும் ** ராணியாக நடித்த நடிகையின் படமும் விமர்சனத்தோடு வெளியிடப்பட்டிருந்தன. ஸ்ரீதருக்குத் தலைகால் தெரியாத இன்பம், விறுவிறுவென்று வாசிக்க ஆரம்பித்தான்.
விமர்சனத்தில் ஸ்ரீதருக்கே முதலிடம் தரப்பட்டிருந்தது. “கண்மணிகளை ஈட்டியால் பல முறை குத்திக் குத்தி அலறி நிற்கும் கட்டத்தில் எடிப்பஸாக நடித்த ஸ்ரீதர் என்ற மாணவர் புகழ்பெற்ற உலகப் பெரும் நடிகர்களுக்குச் சமமாக நடித்தார்” என்று கூறியிருந்தான் விமர்சகன். ஸ்ரீதர் முகம் புன்னகையால் மலர்ந்தது “சுரேஷ்! பார்த்தாயா? என் நடிப்பைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டான்.
“மீண்டும் மீண்டும் உன் முகத்துக்கு முன்னே உன்னைப் புகழ என்னால் முடியாது. ஏன், நான் புகழ்ந்து கூறுவது உனக்கு அவ்வளவு இனிப்பாயிருக்கிறதோ? எத்தனை தடவை அற்புதம், அபாரம் என்று சொல்லிக்கொண்டிருப்பது?” என்றான் சுரேஷ்.
அதைக் கேட்டுவிட்டு மகிழ்ச்சியால் துள்ளும் மனதோடு விமர்சனத்தை மூன்று நான்கு தடவை வாசித்துவிட்டான் ஸ்ரீதர்.
காலைச் சாப்பாட்டு மேசையில் ஸ்ரீதர் சுரேஷிடம் தான் இரவு கேட்கத் தீர்மானித்திருந்த கேள்வியைக் கேட்டான்: “சுரேஷ்! நான் உன்னிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும். நான் யார் என்பது பற்றிப் பத்மாவிடம் பொய் கூறியிருக்கிறேனல்லவா? என்றைக்கோ உண்மை வெளியாகும்போது அவள் என்னைப் பொய்யன் என்பதற்காக வெறுத்தொதுக்கக் கூடுமல்லவா? அதைத் தடுப்பது எப்படி, சுரேஷ்?”
அதற்குச் சுரேஷ் “ஸ்ரீதர்! தனது காதலைப் பெறுவதற்காக ஒரு நல்ல மனிதன் பொய்யனாய் மாறினான் என்பதற்காக எந்தப் பெண்ணும் ஓர் ஆணை வெறுக்க மாட்டான். உண்மையில் அது அவன் மீது அவளுக்குள்ள காதலை அதிகரிக்கவும் செய்யும். ‘என்னை அடைவதற்காகத் தானே அவர் அவ்வாறு பொய் சொன்னார்? அது அவர் என் மீது கொண்ட ஆசையை அல்லவா காட்டுகிறது?” என்று தான் அவள் யோசிப்பாள். இப்படிப் பட்ட விஷயங்களில் சொல்லப்படும் பொய் பொய்யல்ல. அரிச்சந்திரன் கூட இப்படிப்பட்ட பொய்களைப் பேசி இருக்கலாம்” என்றான். பின்னர் ஒரு கேள்வியையும் தூக்கிப் போட்டான் சுரேஷ்: “ஸ்ரீதர் உன் பேச்சிலிருந்து எனக்கொரு விஷயம் தெரிகிறது. பத்மாவுக்கும் உனக்குமுள்ள தொடர்பு மேலும் மேலும் முற்றி வருகிறது என்பதே அது. அது உண்மையல்லவா?”
“ஆம் சுரேஷ். பத்மாவும் அவள் தந்தை பரமானந்தரும் நாடகம் முடிந்ததும் வேஷம் போடும் அறைக்கே வந்துவிட்டார்கள். என்னை இன்று பிற்பகல் தங்கள் வீட்டிற்கு வரும் படியும் அழைத்திருக்கிறார்கள். போகலாமென்றுக்கிறேன். இதில் ஒரு ருசிகரமான விஷயமென்றால் பத்மாவின் தகப்பனாரும் என்னைப்போல் இளமையில் நாடகங்களில் நடித்திருக்கலாம்.”
“ஓ! அப்படியா விஷயம்! இன்று காலையில் விழித்துக் கொண்டதும் என்னைப் பார்த்துப் ‘பெண் பார்க்கப் போகிறாயா?’ என்று நீ கேட்டாயல்லவா? அது தப்பு. இன்று பெண் பார்க்கப் போவது நானல்லவே, நீ அல்லவா?” என்றான் சுரேஷ் கிண்டலாக.
ஸ்ரீதர் குறுநகை புரிந்தான். “சுரேஷ், அதிருக்கட்டும். உனக்கெப்போது கல்யாணம்? நீ எப்போது பெண் பார்க்கப் போகிறாய்?” என்றான்.
அதற்குச் சுரேஷ் “எனக்கு இந்த விஷயத்தில் சுதந்திரமில்லை என்பதுதான் உனக்குத் தெரியுமா! எனது மாமா என்னை எப்போதோ விலைக்கு வாங்கி விட்டார். ஏழ்மையில் பிறந்து வாழ்க்கையில் முன்னேற விரும்பும் என் போன்றவர்களுக்கு வேறு வழி எது? ஆனால் இவற்றைச் சலிப்பின்றிப் பொறுத்துக் கொள்ள என் வகுப்பு இளைஞர்கள் எப்படியோ கற்றுக்கொள்கிறார்கள்ள்” என்றான்.
ஸ்ரீதர் “நீ பணக்கார வகுப்பினருக்கு இது விஷயத்தில் பரிபூரண சுதந்திரம் இருப்பது போலல்லவா பேசுகிறாய்! அது உண்மைக்கு முற்றிலும் புறம்பானது. என் உண்மைப் பெயரைச் சொல்லிக் காதல் புரியதற்கே எனக்கு வாய்ப்பில்லை என்பது உனக்குத் தெரிகிறதல்லவா? பல மத்தியதர வகுப்பினருக்கு இப்படிப்பட்ட பிரச்சினைகள் இருப்பதாகத் தெரியவில்லையே! பல்கலைக்கழகத்திலேயே பல மத்திய வகுப்புக் காதல் ஜோடிகளை நான் பார்த்திருக்கிறேன். அவர்களைப் பார்க்கும்போது எனக்கு எவ்வளவு பொறாமை ஏற்படுகிறது தெரியுமா?” என்றான்.
சுரேஷ், ஸ்ரீதரின் வார்த்தைகளை அங்கீகரிப்பது போல் சிந்தனையுடன் தலையால் சமிக்ஞை செய்து கொண்டே மேசையை விட்டெழுந்தான். “இவை எல்லாம் இன்றைய சமுதாய அமைப்பின் கோளாறு!” என்று கூறிவிட்டு, அவன் போக ஸ்ரீதரின் மனமோ வேறு திசையில் திரும்பியது. பின்னே பத்மா வீட்டுக்குப் போவது பற்றிய பிரச்சினைகளை ஆராய ஆரம்பித்ததுதான் ஸ்ரீதர். எதை உடுத்துவது, பரமானந்தர் முன்னிலையில் எவ்வாறு நடந்து கொள்வது, பத்மாவுக்குச் சொன்ன பொய்யைப் பரமானந்தருக்கும் சொல்லுவதா, பொய்யைச் சொல்லும் போது நாக்குக் கூசுகிறதே, அதை எப்படிச் சமாளிப்பது என்பன போன்ற பல கேள்விகளுக்கு அவன் விடை காண வேண்டியிருந்தது. உண்மையில் சின்ன விஷயங்கள் போல் தோன்றும் இவை மனிதர்களின் மனதை எவ்வளவு தூரம் அலைக்கழித்து விடுகின்றன! பார்க்கப் போனால் சின்ன விஷயங்கள் என்று எதுவுமே உலகில் இல்லை. ஒருவர் மனதைப் பாதிக்கும் எந்த விஷயமும் பெரிய விஷயமே!
3-ம் அத்தியாயம்: களிப்பும் கலக்கமும்
ஸ்ரீதரின் திட்டப்படி அன்று மாலை தான் அவன் பத்மா வீட்டுக்குப் போக வேண்டும். அநேகமாக நாலரை மணிக்குப் பிறகு போனால் போதுமானது என்று அவன் முடிவு செய்திருந்தான். எனினும், காலையிலிருந்தே அதற்குரிய வேலைகளை ஆரம்பித்துவிட்டான். அவன் இது சம்பந்தமாகச் செய்த முதல் வேலை, கொட்டாஞ்சேனை கொலீஜ் ரோட்டில் 48/17ம் இலக்க வீடு எங்கிருக்கிறது என்பதைக் கண்டறிந்ததாகும். உண்மையில் ஸ்ரீதருக்கு அன்று இருப்பே கொள்ளவில்லை. பத்மா வீட்டுக்கு முதன் முதலாகப் போகப் போகிறோம். அவளுக்கும் தனக்குமுள்ள தொடர்புகள் இதன் மூலம் மேலும் வலுவடையும் என்ற எண்ணம், அவனுக்குப் பத்மா வீட்டுக்குச் செல்வதில் அதிக ஆர்வத்தை உண்டு பண்ணியது.

இருந்த போதிலும், அவன் மனதில் ஒரு பயமும் தயக்கமும் ஏற்படவே செய்தன. பரமானந்தர் முன்னால் நான் எப்படி நடந்து கொள்வது, என்ன பேசுவது, அவரது முன்னிலையில் தன்னம்பிக்கையுடன் தன்னால் நடந்து கொள்ள முடியுமா? ஒரு வேளை அவர் முன்னால் திக்கித் தடுமாறிப் பரிகசிக்கத் தக்க முறையில் நான் நடந்து கொள்வேனோ என்பது போன்ற இளமைக்குரிய இயல்பான அச்சங்கள் பலவும் அவனிடத்தே தோன்றின. ஆனால் நாடக தினத்தன்று பரமானந்தர் திரைக்குப் பின்னால் வந்து தன்னுடன் பேசிய தோரணையை நினைவு படுத்திக் கொண்டதும், இந்த அச்சங்களில் பாதி மறைந்தது. சற்றேறக் குறைய அறுபது வயது போல் தோன்றிய பரமானந்தர், உயரம் பருமனில் அவனது தந்தை சிவநேசரை ஓரளவு ஞாபகமூட்டினார். ஆனால் சிவநேசரோ நல்ல சிவப்பு. பரமானந்தரோ பத்மாவைப் போலில்லாமல் சிறிது கறுப்பாக இருந்தார். மேலும், சிவநேசர் எப்பொழுதும் தன்னுடைய அந்தஸ்தில் அக்கறை கொண்டவராக, காற்சட்டையும், “குளோஸ் கோட்டும்” தலைப்பாகையும் அணிந்திருப்பார். அத்துடன் செல்வத்தின் பூரிப்பும் பொலிவும், எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு வித கர்வமும் அவர் முகத்தில் என்றும் கதிர் வீசிக்கொண்டிருக்கும். பரமானந்தரோ சாதாரண வெள்ளை வேட்டியும் சட்டையும் அணிந்து, அதற்கு மேல் ஒரு “டசூர்” கோட்டும் அணிந்திருப்பார். சட்டையை கழுத்து வரை மூடி ஒரு பித்தளைப் பொத்தானை அணிவதும் அவரது வழக்கமாகும். அவரது முகத்தில் ஒருவித அடக்கமும் அமைதியும் குடிகொண்டிருந்தன.
நாடக தினத்தன்று பரமானந்தர் ஸ்ரீதருடன் பேசியது, ஒரு கனவான் தனக்குச் சமமான இன்னொரு கனவானுடன் எப்படிப் பேசுவானோ அப்படித் தான். அது அவரிடம் அவனுக்கு அநாவசியமான பயத்தையோ, அல்லது அவ்வித பயத்துக்குத் தூண்டுகோலாக விளங்கும் அளவுக்கு மீறிய மரியாதை உணர்ச்சியையோ ஏற்படது தடுத்த போதிலும், இன்று “நான் காதலிக்கும் பெண்ணின் அப்பா, எல்லாம் சரியாக நடந்து முன்னேறினால் தன் மாமனாகப் போகிறவர்” என்ற எண்ணம் அவன் சிந்தனை ஒவ்வொன்றுக்கும் பின்னணியில் அவனை அறியாமலே ஒரு திரை போலத் தொங்கிக் கொண்டிருந்ததால், அவர் மீது ஒரு வித பயம் அவனுக்கு ஏற்படவே செய்தது. “பரமானந்தர் நாடகத்தை விரும்பியது உண்மைதான். என்னை மெச்சியதும் உண்மைதான். பத்மாவுடன் நான் ஓரளவு பழகுவதைப் பார்த்தும் பாராதவர் போலிருப்பதும் உண்மைதான். இருந்தாலும் நான் அவளைக் காதலிப்பதை விரும்புவாரா? என்ன நான் கலையார்வமுள்ளவராக இருந்தாலும் ‘காதலித்து மணம் புரிதல்’ என்ற பிரச்சினையில் அவர் முற்றிலும் பழைய கொள்கை பூண்டவராகவிருக்கலாமல்லவா? ஏன்? “நாடகத்திற் காவியத்திற் காதலென்றால் நாட்டினர் தாம் வியப்பெய்தி நன்றாமென்பர். வீடகத்தில் கிணற்றோரத்தே, வயலருகே காதலென்றால், பாடை கட்டி அதை ஒழிக்க வழி செய்கின்றாரே, இவரும் அப்படிப்பட்டவரல்லர் என்பது என்ன நிச்சயம்! கடவுளே, மாரியம்மா, அவர் அவ்வாறில்லாமலிருக்க நீதான் உதவி புரிய வேண்டும்,” என்று பலவாறு சிந்தித்தான் ஸ்ரீதர்.
ஆனால் ஸ்ரீதரின் பதற்றம் அத்துடன் நிற்கவில்லை. தனது உண்மையான அந்தஸ்தை மறைக்க அவன் நடத்திக் கொண்டிருந்த ஆள் மாறாட்ட நாடகமும் அவனுடைய உள்ளத்தை ஈட்டி போல் உறுத்திக் கொண்டே இருந்தது. இருந்த போதிலும் ஓர் இளைஞனது உள்ளத்துக்குக் காதல் என்ற பேருணர்ச்சி கொடுக்கும் தைரியத்தை யாரே அளக்கவல்லார்? ஒரு கன்னிக்காக இவ்வுலகில் காதலர்கள் எதை எதை எல்லாம் செயாத் தயாரவிருக்கிறார்கள்? காதலுக்காக உயிரையே பணயம் வைப்பவர்கள் எத்தனை பேர்? இன்று கூடப் பத்திரிகைகளில், அப்படிப்பட்டவர்களின் செய்தி வரத்தானே செய்கிறது? காதலின் வயப்பட்ட ஸ்ரீதரும் தன் பயங்களை எதிர்த்துப் போராடி ‘எடுத்த காரியத்தை எப்படியும் முடித்தே தீருவேன், பின் நிற்கப் போவதில்லை’ என்ற முடிவுக்கு வந்துவிட்டான்.
ஸ்ரீதர் காலை பத்தரை மணியளவில் தனது காரைத் தானே ஓட்டிக் கொண்டு கொட்டாஞ்சேனை ‘கொலீஜ் ரோட்’டைக் கண்டு பிடிப்பதற்குச் சென்றான். அவன் கொழும்பிலே நீண்ட காலமாக வசித்தபோதிலும் நகரின் இந்தப் பகுதியில் அவன் நடமாடியதேயில்லை. ஓரொரு சமயம் தனது தாயார் கொழும்புக்கு வரும் நேரங்களில் அவளது நச்சரிப்புத் தாங்காமல் அவளுடன் கொட்டாஞ்சேனையிலுள்ள மாரியம்மன் கோவிலுக்கு அவன் போயிருப்பது உண்மைதான். இருந்தாலும் கொட்டாஞ்சேனையில் அந்தக் கோயிலை விட வேறு எதுவுமே அவனுக்குத் தெரியாது. இன்று முதன் முதலாகக் காரை அதிக வேகமின்றி அவன் கொலீஜ் ரோட் வழியாக ஓட்டிச் சென்றபோது, தான் வசித்த ஹோர்ட்டன் பிளேசுக்கும் இந்த வீதிக்கும் இருந்த பெரிய வித்தியாசத்தை அவன் கவனித்தான். அகன்று விரிந்து பச்சைப் பசேலென்ற நிழல் மரங்களுடனும், இருபுறத்திலும் பெரிய மாளிகைகளுடனும் விளங்கிய ஹோர்ட்டன் பிளேஸ் அருகே, ஒடுங்கிய ஒழுங்கை போல் விளங்கிய இந்தச் சிறிய வீதி எங்கே? குப்பையும் கூளமும் சிறிய தட்டிக் கடைகளுமாக விளங்கிய அந்த வீதியில் ஒரு சிறிய வீட்டுப் ‘பேலி’யே 48ம் நம்பர் ‘தோட்டம்’. தோட்டம் என்றதும் பயிர்ச் செய்கை நடக்கும் தோட்டமென்றோ எண்ணிவிட வேண்டாம். சின்னஞ் சிறு வீடுகள் ஒன்றோடென்று சங்கிலித் தொடர் போல் இணைந்திருக்கும் இருப்பிட வரிசைக்கேகொழும்பில் “தோட்டம்” என்று பெயர். 48ம் நம்பர் வீட்டு வரிசையில் ஒரு புறச் சுவரில் கறுப்பு மையினால் ஒரு வட்டமிடப்பட்டு, அதற்கு நடுவில் 48 என்ற இலக்கம் பெரிய எழுத்துகளில் எழுதப்பட்டிருந்தது. “இதில் பன்னிரண்டாவது வீட்டிலே தான் எனது பத்மா வசிக்கிறாள்” என்று தனக்குள் தானே கூறிக் கொண்ட ஸ்ரீதர் தனக்கும் பத்மாவுக்கும் இருந்த பொருளாதார ஏற்றத்தாழ்வைப் பற்றியும் சிந்திக்காமல் இல்லை. மாமன்னனாகிய துஷ்யந்தனுக்கும் ஆசிரமத்துப் பெண் சகுந்தலைக்கும் ஏற்பட்ட காதலும், இலங்கை மன்னன் துட்ட கைமுனுவின் மகன் சாலிய குமாரனுக்கும் பஞ்சம குலப் பெண் அசோக மாலாவுக்கும் ஏற்பட்ட காதலும் அவனுக்கு நினைவு வந்தன. “அவர்களிடையே இருந்த ஏற்றத் தாழ்வுடன் ஒப்பிடும்போது, எனக்கும் பத்மாவுக்குமிடையேயுள்ள ஏற்றத்தாழ்வு எம்மாத்திரம்? அதனைச் சமாளிப்பது அவ்வளவு கடினமாயிருக்க முடியாது. மேலும், நான் அவளை உண்மையாகவே நேசிக்கிறேன். அவளும் என்னை நேசிக்கிறாள். இந்த நிலையில் இந்த ஏற்றத்தாழ்வுகள் எல்லாம் தவிடு பொடியாவது நிச்சயம்,” என்று சிந்தித்தவாறே வீட்டை நோக்கிக் காரை ஒட்டினான் ஸ்ரீதர்.
அன்று மாலை ஸ்ரீதர் பத்மா வீட்டுக்கு வந்தபோது சற்றேறக்குறைய ஐந்து மணியிருக்கும். ஹோர்ட்டன் பிளேசிலிருந்து கொட்டாஞ்சேனைக்குக் காரிலேயே வந்திருந்தபோதிலும், காரை 48ம் இலக்கத் தோட்டத்துக்குச் சற்றேறக் குறையக் கால் மைல் தூரத்திலே வீதியின் ஒதுக்குப் புறமான ஓரிடத்தில் நிறுத்திவிட்டு, பஸ்ஸிலிருந்து இறங்கி வரும் பாவனையிலேயே ஸ்ரீதர் பத்மா வீட்டுக்கு வந்தான். எங்கே பள பளவென்று விளங்கிய தனது பெரிய காரைக் கண்டதும், அவர்கள் தனது அந்தஸ்தை நினைத்து மிரண்டு விடுவார்களோ என்ற அச்சம் அவனுக்கு. அவ்வாறு நிகழ்ந்தால் அவன் தன் அருமைப் பத்மாவை இழக்க நேரிடுமல்லவா? கார் விஷயத்தில் மட்டுமல்ல, உடை விஷயத்தில் கூட அவன் இத்தகைய விபத்து ஏற்படக் கூடாது என்று கருதி, மிகவும் அடக்கமாகவே உடுத்தி வந்தான். ஒரு மத்திய தர வாத்தியார் வீட்டுப் பெண்ணைக் காதலிக்கும் வாலிபன் எவ்வாறு உடுத்தி வருவான் என்பதைத் தனக்குத் தெரிந்த அளவில் யூகித்து அதற்கேற்றவாறு உடுத்தியிருந்தான் அவன். ஆனால் என்ன செய்தாலும் அரசகுமாரன் போன்ற தனது தோற்றப் பொலிவை மட்டும் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
பத்மாவும் பரமானந்தரும் ஸ்ரீதரை நாலு மணியிலிருந்தே எதிர்பார்த்திருந்தார்கள். உண்மையில் ஸ்ரீதரைப் போலவே பத்மாவும் அன்று காலையிலிருந்தே அதிக பரபரப்படைந்திருந்தாள். காதலன் முதன் முறையாகத் தன் வீட்டுக்கு வரும்பொழுது, எந்தப் பெண்ணுக்குத்தான் அவ்வித பரபரப்பேற்படாது! ஸ்ரீதர் வீட்டுக்கு வரும்போது வீடு மிகவும் சுத்தமாயிருக்க வேண்டுமென்பது அவளது எண்ணம். அதற்காக இரண்டு மூன்று தடவைகள் வீட்டைத் தும்புக்கட்டையால் பெருக்கிச் சுத்தம் செய்து விட்டாள் அவள். உண்மையில் ஸ்ரீதர் வருவதற்கு
இரண்டு நிமிஷங்களுக்கு முன்னால் தான் அவள் வீட்டைக் கடைசி முறையாகப் பெருக்கிவிட்டு, வாசலுக்கு வந்து வீதிப்புறத்தில் கண்ணை எறிந்து ஒரு தடவை பார்த்துவிட்டு உள்ளே சென்றான். உள்ளே சென்று மேசையிலிருந்த புத்தகங்களை ஒன்பதாவது தடவையாக அவள் அடுக்குவதற்கும், ஸ்ரீதரின் முகம் வாசலில் தோன்றுவதற்கும் சரியாக இருந்தது.
பரமானந்தர் “ஓ, ஸ்ரீதரா, வா தம்பி. இதோ இந்நாற்காலியில் உட்கார்” என்று வரவேற்றார். ஸ்ரீதரும் முகமலர்ந்து புன்னகை செய்து கொண்டே, நாற்காலியில் உட்கார்ந்தான்.
பரமானந்தர் “ஸ்ரீதர்! உங்கள் வீட்டைக் கண்டு பிடிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டாயா?” என்று கேட்டார். “இல்லையே. கையில் வீட்டின் இலக்கம் இருந்ததால் எவ்வித கஷ்டமுமின்றியே வீட்டைக் கண்டுபிடித்துவிட்டேன்” என்றான் ஸ்ரீதர்.
அதன் பின் அதையும் இதையும் பற்றி இருவரும் உரையாட ஆரம்பித்தார்கள். பரமானந்தர் தனது அலுமாரியைத் திறந்து, பழைய ‘போட்டோ ஆல்பம்’ ஒன்றை எடுத்து வந்தார். அதில் அவர் இளமையில் நடித்த பல நாடகக் காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. அவற்றில் ஒன்று அரிச்சந்திரன் நாடகக் காட்சி. பரமானந்தர் மயானத்தைக் காக்கும் வெட்டியான் வேஷத்தில் கம்பீரமாகக் காட்சியளித்தார்.
இன்னொன்று நல்லதங்காள் நாடகக் காட்சி. அதில் பரமானந்தர் நல்லதங்காளாகப் பெண் வேஷத்தில் காட்சியளித்தார். ஸ்ரீதரும் பரமானந்தரும் நாடகங்களைப் பற்றி உற்சாகமாகப் பேசிக்கொண்டார்கள். அரிச்சந்திர விலாசத்தில் தனக்கு ஞாபகத்திலிருந்த சில தருக்களைப் பாடிக் காட்டினார் பரமானந்தர். ஸ்ரீதர் அவற்றை இரசித்தானோ இல்லையோ, பத்மாவை முன்னிட்டு அவற்றை மிகவும் இரசிப்பது போல் பாவனை காட்ட மட்டும் பின் நிற்கவில்லை. பத்மாவுக்கோ தந்தையின் கர்நாடக மெட்டுகள் சிரிப்பை ஊட்டின.
பத்மா ஒரு கண்ணாடி ‘ட்ரே’யில் ‘ஒரேஞ்பார்லி’ கொண்டு வந்து கொடுத்தான். ஸ்ரீதருக்குச் சாதாரணமாக ‘ஐஸ்’ போடப்பட்ட அல்லது குளிர்ப்பெட்டியில் நன்கு குளிர்ப்படுத்தப்பட்ட குளிர்பானங்களைத் தான் குடித்துப் பழக்கம். எனவே பத்மா கொண்டு வந்து குளிர்ப்படுத்தப்படாத பானத்தை அவனால் குடிக்க முடியவில்லை. இருந்தாலும் அவளைத் திருப்திப்படுத்துவதற்காக, அவன் அதைக் குடிக்கும்படியேயாயிற்று.
பரமானந்தர் பேச்சு இப்போது வேறு திசையில் சென்றது.
“தம்பி! நீர் யாழ்ப்பாணத்தைல் எந்த ஊரைச் சேர்ந்தவர்?” என்று கேட்டார் அவர்.
“உடுவில்” என்றான் ஸ்ரீதர்.
பச்சைப் பொய்!
“உங்கள் அப்பா என்ன தொழில் தம்பி!”
“உபாத்தியாயர். இளைப்பாறியிருக்கிறார்” என்றான் ஸ்ரீதர்.
அதுவும் பொய்!
ஒரு பொய்யைச் சொல்லிவிட்டால், பின்னால் அதற்கு உண்மையின் வலுவை ஏற்படுத்த இன்னும் எத்தனை பொய்களைச் சொல்ல வேண்டியிருக்கிறது!
“அப்படியா? அவரும் என்னைப்போல உபாத்தியாயர் தானா?” என்று சொல்லிவிட்டுச் சிரித்தார் பரமானந்தர். பின்னர் தான் மானிப்பாயைச் சேர்ந்தவர் என்றும், வாலிப வயதில் வேலை கிடைக்காததால் கிறிஸ்தவராக மதம் மாறிக் கொழும்பில் ஒரு பாடசாலையில் உபாத்தியாயராக வேலைக்கமர்ந்ததாகவும், பின்னால் பழையபடி இந்துவாகிவிட்டதாகவும் கூறினார் அவர்.
“தம்பி! நான் கிறிஸ்தவனாக மாறியது உண்மையில் தவறுதான். இன்னும் அது என் மனதை உறுத்துகிறது. ஆனாலும் வேலை கிடைக்காத பலர் உபாத்திமைத் தொழிலுக்காக அன்று அவ்வாறு மதம் மாறினார்கள். ஆனால் இவ்விதம் பொருளாதாரக் காரணத்துக்காக மதம் மாறியவர்கள் ஒரு பொழுதும் உண்மைக் கிறிஸ்தவர்களானதில்லை. சந்தர்ப்பம் கிடைத்ததும் பழையபடி இந்துவாகி விடுகிறார்கள். இதுவே என் விஷயமும்” என்றார் பரமானந்தர்.
பின்னர் மதம் மாறியதனால் தனக்கேற்பட்டால் கஷ்டங்களை எடுத்துக் கூறினார் அவர். கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்ததும் தன்னைத் தனது உறவினர்கள் எல்லோரும் விலக்கி விட்டார்களென்றும் மதிப்புக் குறைவாக நடந்த ஆரம்பித்தனரென்றும் கூறினார் பரமானந்தர் “இதனால் இன்று பெயரளவில்தான் நான் மானிப்பாய்க்காரன். நான் திருமணம் செய்த என் மனைவி- பத்மாவின் தாய் ஒரு கிறிஸ்தவ அனாதை நிலயத்தில் வளர்க்கப்பட்டவள். பத்மாவுக்குப் பதினைந்து வயதாயிருக்கும்போதே அவள் இறந்து விட்டாள்” என்று தன் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாகக் கூறினார் அவர்.
முடிவாக “இன்று எனக்கு வரும் பென்ஷன் மிகக் குறைவானதுதான். இருந்தாலும் சில பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறேன். பென்ஷனும் பிள்ளைகள் கொடுக்கும் சம்பளமும் சேர்ந்து ஒருவாறு வாழிக்கையை ஓட்ட உதவுகின்றன. என்னுடைய நல்ல காலத்துக்கு ஆண்டவன் கிருபையால் இருபத்தைந்து ரூபாவுக்கு இந்த வீடு கிடைத்திருக்கிறது. வசதியான வீடுதான். ஒரு குறைவுமில்லை. பத்மா பீ.ஏ.பாஸ் பண்ணி எங்கேயாவது வாத்தியாராக அமர்ந்துவிட்டால், எல்லாக் கஷ்டங்களும் பறந்துவிடும் என்று மேலும் பேசினார் பரமானந்தர்.
ஸ்ரீதருக்கு அவர் பேச்சு சில சமயங்களில் விநோதமாக இருந்தது. தாம் வாழும் அந்த சின்ன வீட்டை அவர் வசதியான வீடு என்று வர்ணித்த போது அவனுக்குச் சிரிப்பு வந்துவிடும் போலிருந்தது. இருந்தாலும், பண்புள்ளவனாதலால் எவ்வித மெய்ப்பாட்டையும் காட்டாமல் வீட்டை மேலும் கீழும் பார்த்தான் அவன். மின்சார வெளிச்சமில்லை. கூரை சுத்தம் செய்யப்படாது, அங்குமிங்கும் ஒட்டடைகள் தொங்கிக் கொண்டிருந்தன. சுவர் பல இடங்களில் இடித்து காரை போயிருந்தது. அவன் அவற்றைப் பார்த்த விதத்தை நோக்கிய பரமானந்தர் அந்தப் பார்வைக்குத் தனக்குத் தெரிந்த அர்த்தத்தைக் கொடுத்துக் கொண்டு, “ஸ்ரீதர்! என்ன யோசிக்கிறாய்? லைட் இல்லை என்றா? ஆம். உண்மையில் அது எந்த வீட்டுக்கு ஒரு குறைதான். முக்கியமாகப் பத்மாவுக்கு இரவில் படிப்பதற்கு அது ஒரு தடைதான். ஆனால், நான் அக்குறையை நிவர்த்தி செய்துவிட்டேன். ‘பெட்ரோமாக்ஸ் லாம்பொ’ன்று அவளுக்காகவே வாங்கியிருக்கிறேன். அதன் விலை எழுபத்தைந்து ரூபா” என்றார்.
ஸ்ரீதருக்கு அவர் விலை கூறிய விதம் விசித்திரமாயிருந்தது. தனது தந்தை சிவநேசர் பத்தாயிரம் ரூபாய் பொருளைப் பற்றிப் பேசும்போது கூட “பத்தாயிரம் ரூபா தான்” என்று மிகவும் அலட்சியமாகப் பேசுவதை அவன் கேட்டிருக்கிறான். ஆனால் பரமானந்தரோ உலகத்துச் செல்வம் எல்லாவற்றையும் கொடுத்து, அந்த லாம்பை வாங்கியவர் போலல்லவா பேசுகிறார் என்று அவன் ஆச்சரியப்பட்டான்!
பத்மா வீட்டுக்கு ஸ்ரீதர் விஜயம் செய்த முதலாம் நாள் சம்பவங்கள் இவ்வளவுதான். வீட்டைவிட்டுக் கிளம்பு முன் ஸ்ரீதரிடம் பரமானந்தர், “தம்பி! இது உன் வீடு போல. விருப்பமான நேரம் இங்கு வந்து போகலாம்” என்று குறிப்பிட்டார். ஸ்ரீதரும் “சரி வருகிறேன்” என்று கூறிப் பத்மாவை நோக்கிக் கள்ளத்தனமாக ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டுப் புறப்பட்டான்.
ஸ்ரீதரின் அந்தப் புன்னகையைப் பத்மா அன்று பல மணி நேரம் மறக்கவில்லை. இரவு துயிலச் சென்றபோது ஸ்ரீதரின் அப்புன்னகையைப் படுக்கைக்கும் எடுத்துச் சென்றாள் அவள். கண்ணை மூடிக்கொண்டதும் கண்ணுள் தெரிந்தது அப்புன்னகை. அதற்குப் பதில் புன்னகை செய்தவாறே நித்திரை போனாள் அவள்.
அன்றிரவு சுரேஷ் மிகவும் நேரம் கழித்தே வீடு வந்தான். ஸ்ரீதர் அவனுக்காகக் காத்திருந்து காத்திருந்து அலுத்துப் போய் விட்டான். தனது கொட்டாஞ்சேனை விஜயத்தின் வெற்றியைப் பற்றி சுரேசுக்குக் கூறி மகிழ வேண்டுமென்று அவன் விரும்பினான். ஆனால் சுரேஷ் நேரத்துக்கு வந்தால் தானே!
சுரேஷ் வீடு வந்தபொழுது இரவு பதினொரு மணியாகிவிட்டது. அவனது உறவினர் ஒருவர் வெள்ளவத்தையில் ஒரு கடை வைத்திருந்தார். அவரைக் காணப் போனதினாலேயே இத்தாமதம் ஏற்பட்டது. ஸ்ரீதர் சுரேஷைக் கண்டதும் தன் கதை முழுவதும் அவிழ்த்துவிட்டான். அவனும் எல்லாவற்றையும் இரசித்துக் கேட்டான். காதல் கதை கேட்பதற்கு யாருக்குத்தான் ஆசையில்லை!
“ஆனால் நீ பொய்க்குப் பின் பொய்யாக அவிழ்த்துவிடுகிறாயே. ஊரின் பெயர் பொய். அப்பா பெயர் பொய். அவரது தொழில் பற்றிய தகவல் பொய். நாளைக்கு நீ முன் சொன்ன பொய்யை மறந்துவிட்டு அதற்கு முற்றிலும் மாறான தகவலைப் புதிய பொய்யாகச் சொல்லப் போகிறாய். ஜாக்கிரதை!” என்றான் சுரேஷ் கேலியாக.
ஸ்ரீதர், “நான் அவ்வளவு மடையனல்ல – நீ என்ன நினைத்தாய்! பொருத்தமான பொய் கூட எனக்குச் சொல்லத் தெரியாது என்று நினைத்தாயா, என்ன!” என்றான்.
சுரேஷ், “ஸ்ரீதர்! அந்தக் காலத்தில் அரிச்சந்திரன் போன்றவர்கள் தங்களுக்குப் பொய் சொல்லத் தெரியாது என்று சொல்வதில் பெருமையடைந்தார்கள். ஆனல் இன்று நீயோ ‘எனக்கா பொய் சொல்லத் தெரியாது’ என்று பெருமையோடு கேட்கிறாய். அது கிடக்கட்டும். இன்று நீ உன் தகப்பனார் பெயர் சின்னப்பா என்று கூறியிருக்கிறாய். நாளைக்கு அதை மறந்துவிட்டு வேறேதாவது பெயரைச் சொல்லிவிடாதே. உண்மையில் இந்த விவரங்களை ஒரு டயரியில் குறித்து வைத்துப் பாடமாக்கிக்கொள்” என்றான் சுரேஷ்.
“அதைச் செய்வதற்கு உன்னுடைய ஆலோசனை கிடைக்கும் வரை நான் காத்திருக்கவில்லை. இதோ பார், சுரேஷ்” என்று சொல்லிய வண்ணம் தான் மேசையில் எழுதிக் கொண்டிருந்த ஒரு காகிதத்தை எடுத்து சுரேஷிடம் நீட்டினான் ஸ்ரீதர். அதில் பின்வருமாறு எழுதியிருந்தது. தந்தை பெயர்: சின்னப்பபிள்ளை; தாய் பெயர் பார்வதி; ஊர்: ஊடுவில். மேசையில் இருக்கும்போது பொழுதுபோகாவிட்டால் காகிதத் துண்டுகளில் ஏதாவது கிறுக்கிக் கொண்டிருப்பது ஸ்ரீதரின் வழக்கம். அந்த வழக்கத்தின்படி அவன் கிறுக்கியிருந்த வார்த்தைகளே அவை.
சுரேஷ் மேசையில் சாப்பிட உட்கார்ந்தபோது ஸ்ரீதரும் பக்கத்தில் போய் உட்கார்ந்துகொண்டான். வேலைக்காரன் சுப்பையா பால் கொண்டு வந்தான். நன்பர்கல் தூங்குவதற்குத் தயாராகும் நேரமறிந்து சூடான பால் தயாரித்துத் தருவது அவனது வழக்கம். ஸ்ரீதர் பாலைப் பருகியவாறே சுரேஷிடம் கதை கொடுக்க ஆரம்பித்தான்.
வெள்ளவத்தையில் கடை வைத்திருந்த உறவினருக்குத் தனது மாமனார் எழுதியுள்ள ஒரு கடிதத்தைப் பற்றிப் பிரஸ்தாபித்தான் சுரேஷ். “மாமா எனது வாழ்க்கையின் மலர்ச்சிக்காகப் புதியதொரு திட்டம் வகுத்திருக்கிறார், ஸ்ரீதர். ஆனால் பார்க்கப்போனால் அது எனக்காக வகுக்கப்பட்ட திட்டமல்ல. தனது மகள் சிறப்பாக வாழ வேண்டுமென்ற விருப்பத்தில் அவர் செய்திருக்கும் ஏற்பாடு. உண்மையில் தன்மானமுள்ள மனிதன் இப்படிப்பட்ட ஏற்பாடுகளை ஏற்கக் கூடாதுதான். இவற்றின் மூலம் அவருக்கும் எனது அத்தை மகளுக்கும் எனக்குள்ள கடமைப்பாடு மேலும் அதிகரிக்கிறது. கடமைப்பாடு என்றால் என்ன? ஒரு வித அடிமைப்பாடு தானே? இருந்தாலும் என்ன செய்வது? என்னைப் போன்ற போதிய பணமில்லாதவர்களுக்கு வேறு வழி ஏது?” என்று பீடிகையுடன் ஆரம்பித்தான் அவன்.
“சரி. பீடிகை இருக்கட்டும். விஷயத்துக்கு வா. மாமாவின் திட்டமென்ன?” என்றான் ஸ்ரீதர்.
“இம்மாதம் பரீட்சை “ரிஸல்ட்” வந்ததும் நான் இங்கிலாந்துக்கு மேற்படிப்புக்குப் போய் வரவேண்டுமென்று விரும்புகிறார் அவர்.
அப்பொழுது எனக்குள்ள ‘டிமாண்ட்’ அதிகரிக்கும் என்பது அவரது எண்ணம். எனக்கும் அது பிரியம்தான். ஆனால் அவர் கருதும் அந்த டிமாண்டுக்காக அல்ல; என் அறிவு சிறப்படையும், சேவைத் திறனும், சமுதாய உபயோகமும் அதிகரிக்கும் என்ற காரணம்தான் எனக்கு இதில் ஆசையை ஏற்படுத்துகிறது. ஸ்ரீதர், நீ இதில் ஒரு புதுமையைப் பார்த்தாயா? என் ஆசையோ பொதுநலத்தை அடிப்படையாகக் கொண்டது. மாமாவின் ஆசையோ சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் அவருடைய சேர்க்கையில்லாமல் என் பொதுநல எண்னம் எப்படி நிறைவேறும்? சமுதாயத்தில் இந்த விசித்திர நிலைமை நிலவுவதற்கு என்ன காரணம் என்று நீ நினைக்கிறாய்?” என்றான் சுரேஷ்.
“எனக்கு இவைகளைப் பற்றி ஒன்றும் தெரியாது. நீதான் மிகப் பெரிய புஸ்தகங்களை எல்லாம் கொண்டு வந்து வாசிக்கிறாய். என்ன காரணம்? சொல் பார்ப்போம்” என்றான் ஸ்ரீதர்.
“இன்றைய சமுதாய வாழ்க்கை முழுவதுமே பணம் என்ற ஒரே மையத்தைச் சுற்றியே சுழல்கிறது. அதை ஒவ்வொருவனும் எப்படியும் அடைய வேண்டியிருக்கிறது. இந்த நியதியில் நடைபெறும் ஓர் அமைப்பிலே இப்படிப்பட்ட விசித்திரங்கள் நடந்து கொண்டேயிருக்கும்” என்றான் சுரேஷ்.
ஸ்ரீதர் அலுப்புடன் “நீ என்றும் போல் உன்னுடைய சோஷலிஸப் பிரச்சாரத்துக்கு வருகிறாய் போல் தெரிகிறது. சுரேஷ்! உண்மையில் என்னைப் பொறுத்தவரையில் நீ டாக்டர் வேலைக்குப் படிப்பது வீண் என்றே நான் நினைக்கிறேன். அரசியலில் நீ பல விஷயங்கள் தெரிந்து கொண்டிருக்கிறாய். கொலீஜில் கூட அரசியல் சங்கத்துக்கு இவ்வருடமும் நீ தானே தலைவர்! ஏன் நீ அரசியலில் ஈடுபட நினக்கவில்லை” என்றான்.
சுரேஷ் சிரித்துக்கொண்டு, “நல்லாய்ச் சொன்னாய்! நான் அரசியலில் ஈடுபட விரும்புகிறேன். அதுவும் சோஷலிஸ அரசியலில் என்றால் மாமா எனது படிப்புக்குப் பணம் உதவுவார் என்று எண்ணுகிறாயா நீ! உண்மையைச் சொன்னால் ஸ்ரீதர் அரசியலில் ஈடுபடக்கூட இன்றைய சூழ்நிலையில் தன் கையில் பணம் இருக்க வேண்டும். அதற்குக் கூட நான் லாயக்கில்லை. நான் அரசியல் செய்வதென்றால் என் தாயாருக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யாமல் வீட்டை விட்டு ஓடிப் போய்த்தான் அதில் ஈடுபட வேண்டும். ஆனால் உன் நிலைமை வேறு. அளவற்ற சொத்துள்ள உனது நிலையில் நான் இருந்தால் கட்டாயம் நான் அரசியலில் குதித்துத் தான் இருப்பேன்.
இன்றைய நிலையில் நான் சமுதாயத்தின் கைதி. சந்தர்ப்ப சூழ்நிலைகளின் கைதி. குடும்ப நிலைமையால் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறேன். ஆனால் ஸ்ரீதர்! உன்னைப் பொறுத்தவரையில் இன்று கூட நீ அரசியலில் ஈடுபடலாம்” என்றான்.
ஸ்ரீதர், “ஆனால் எனக்கு அரசியலில் சிறிது கூட அக்கறையில்லையே. உண்மையில் நான் எவருடனும் அரசியல் பற்றிப் பேசுவதேயில்லை. ஆனால் நீயோ சாமர்த்தியசாலி. சந்தர்ப்பமறிந்து பொருத்தமாக அரசியல் பேசுகிறாய். அதுவும் அளவறிந்து பேசுவதனால்தான் சில சமயங்களில், நான் உன்னுடன் அதைப் பற்றிப் பேசுகிறேன். மேலும் அரசியல் பற்றி என்னை விட உனக்கு எவ்வளவோ தெரியும். அதனால் உன்னுடன் பேசுவதில் எனக்கு அறிவுத் துறையில் இலாபமும் ஏற்படுகிறது. ஆனால் எனக்கு இன்றுள்ள பிரச்சினை, அரசியல் பிரச்சினயல்ல. காதல் பிரச்சினை. அது ஒன்றுதான் என் மனத்தைத் தொடுகிறது” என்றான்.
சுரேஷ், “எனக்கோ அந்தப் பிரச்சினையில்லை. என் திருமணத்தை என் மாமாவும் அம்மாவும் தீர்மானித்து விட்டார்கள். ஏன், எங்களது தமிழ்ச் சமுதாயம் என்னுடைய இத்திருமணப் பிரச்சினையைப் பல ஆயிரமாண்டுகளுக்கு முன்னரே தீர்மானித்துவிட்டத் என்று கூடச் சொல்லலாம்” என்றான்.
“அது எப்படி?” என்றான் ஸ்ரீதர்.
“மச்சானை மண முடிக்க வேண்டும். அத்தை மகளைக் கட்ட வேண்டும் என்பது என்று நேற்று விதிக்கப்பட்ட சட்டமா என்ன? அச்சட்டத்துக்கு அடங்கி நடக்க வேண்டிய நிலையில் நான் இருக்கிறேன். பார்த்தாயா ஸ்ரீதர் இன்னொரு விசேஷத்தை? எண்ணத்தால் நான் புரட்சிக்காரன். ஆனால் செயலால் உன்னை விட அதிகமாகச் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடக்கும் நல்ல பிரஜை நான்” என்றான் சுரேஷ், சிந்தனை தோய்ந்த புன்னகையுடன்.
ஸ்ரீதர் மனம் இப்பொழுது வேறிடத்தில் சஞ்சரித்தால் அர்த்தமில்லாமல் “ஆம்” என்ற பாவனையில் தலையை அசைத்தான். சுரேஷ் மேல்படிப்புக்காக இங்கிலாந்துக்குப் போய்விட்டால் தான் தனித்துவிட நேரிடுமே என்ற எண்ணம் அவன் உள்ளத்தில் எழுந்து அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான் அவன். தனது ஒரே நண்பன், தன் மனத்திலெழும் எல்லா எண்ணங்களையும் ஒளிவு மறைவின்றிப் பேசக் கூடியதாயிருக்கும் தன் ஒரே ஆத்ம நண்பன், தன்னை விட்டுப் பிரியப் போகிறானே என்ற எண்ணம் அவனுக்குக் கவலையை உண்டாக்கியது. ஆனால் அதை எப்படித் தடுக்க முடியும்? சுரேஷின் எதிர்கால நன்மைக்கு அவன் லண்டன் செல்வதும், அங்கு பட்டம் பெற்றுத் திரும்புவதும் அவசியம். ஆகவே, மனதிலெழுந்த கவலை எண்ணங்களைத் தன்னாலியன்ற அளவு அகற்றிக் கொண்டு சுரேஷ¤க்கு, அவன் திட்டங்களெல்லாம் வெற்றியடைய வேண்டுமென்று வாழ்த்துரை வழங்கினான் ஸ்ரீதர்.
சுரேஷ் பதிலுக்கு “அவை கிடக்கட்டும் ஸ்ரீதர். நான் உன்னிடம் ஒரு வேண்டுகோள் செய்ய விரும்புகிறேன். நான் எங்கிருந்தாலும் உன் திருமண அழைப்பை மட்டும் அனுப்ப மறந்துவிடாதே முடியுமானால் பத்மா – ஸ்ரீதர் திருமணத்தைப் பக்கத்திலிருந்து பார்க்க நான் வந்தே தீருவேன்” என்றான்.
ஸ்ரீதர், “சுரேஷ்! நீ கேட்டா நான் என் திருமண அழைப்பை உனக்கு அனுப்புவது? நீ செவ்வாய்க் கிரகத்துக்குப் போய் அங்கே குடியிருந்தாலும் எனது அஞ்சல் உன்னைக் கட்டாயம் அங்கே தேடி வரும். அது போக, நீ என் பத்மாவை ஒரு தடவையாவது நேரில் பார்த்ததில்லையல்லவா? நிச்சயம் நீ லண்டன் போகு முன் உன்னை நான் அவளுக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும்” என்றான்.
சுரேஷ், “என்ன? நான் பத்மாவைப் பார்க்கவில்லையா? அதை நீ, அவ்வளவு நிச்சயமாக எப்படிச் சொல்ல முடியும்? நான் பத்மாவை நன்றாகப் பார்த்திருக்கிறேன்” என்றான் விஷமச் சிரிப்போடு, சாப்பிட்ட கையை மேசையிலிருந்த கண்ணாடி நீர்க்குவளையுள் கழுவிக் கொண்டே.
“பொய் சொல்லாதே, நீ பத்மாவைப் பார்த்ததேயில்லை” என்றான் ஸ்ரீதர்.
“பார்த்திருக்கிறேன் அவளை வர்ணிக்கட்டுமா?”
“வர்ணி பார்ப்போம்.”
“மிகவும் அழகாயிருப்பாள். ஆனால் ஸ்ரீதர் எனது வர்ணனை உனக்குக் கோப மூட்டக் கூடும். ஆகவே இத்துடன் நிறுத்திக் கொள்ளுகிறேன்..”
“இல்லை. நான் கோபிக்க மாட்டேன், வர்ணி.”
“ஆனால் அவள் உடம்பின் அழகை விடப் பேச்சின் அழகு தான் யாரையும் கவரும். இன்னும் அவள் நடை இருக்கிறதே. அதுதான் அவளின் சிறப்பு வாய்ந்த அம்சம். ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலானவை அவளது உடைகள். தனது தோற்றத்துக்கு ஏற்ற வர்ணங்களைத் தெரிந்தெடுப்பதில் வேறேந்தப் பெண்ணுமே அவளுக்கு நிகராக முடியாது. ஸ்ரீதர், எப்படி என் வர்ணனை? நான் சொல்வது முற்றிலும் சரி தானே?”
“முற்றிலும் சரி. நன்றாக நேரில் பார்த்தவனால் தான் இவ்வளவு சரியாக அவளை வர்ணிக்க முடியும். சுரேஷ், நீ பத்மாவை எங்கே பார்த்தாய், எப்பொழுது பார்த்தாய்?”
சுரேஷ் கல கலவென்று சிரித்துவிட்டு “ஸ்ரீதர் நீ ஓர் அப்பாவி. ஒரு காதலன் கண்ணுக்கு ஒரு பெண் இப்படித் தோன்றாமல் வேறு எப்படித் தோன்றுவாள்? ஆகவே வெறுமனே வாய்ப்பந்தல் போட்டேன். நீயோ ஏமாந்துவிட்டாய்!” என்றான்.
“இல்லை நீ போய் சொல்லுகிறாய். நீ அவளை எங்கோ பார்த்திருக்கிறாய்” என்று அழுத்துமாகச் சொன்னான் ஸ்ரீதர்.
சுரேஷ், “ஸ்ரீதர்! உன் போக்கே விசித்திரமாயிருக்கிறது. சற்று முன் தான் நான் அவளைப் பார்த்ததே இல்லை என்று அடம் பிடித்தாய். இப்பொழுதோ “இல்லை, இல்லை அவளைப் பார்த்துத்தான் இருக்கிறாய்!” என்று பிடிவாதம் செய்கிறாய், நல்ல ஆளப்பா நீ” என்றான்.
ஸ்ரீதர் “அது எப்படி என்றாலும் நீ அவளைப் பார்த்ததும் உன் வர்ணனை கொஞ்சம் கூடத் தவறில்லை என்பதை உணர்ந்து கொள்வாய். இருந்து பார்!” என்றான்.
இவ்வாறு நண்பர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்க, சுவரில் மாட்டியிருந்த அலங்கார மணிக்கூடு இன்னிசையொழுக, ‘டாங் டாங்’ என்று பன்னிரண்டு முறை மணி அடித்தோய்ந்தது.
அது பாதி வழி அடித்துக் கொண்டிருக்கும் போதே சுரேஷ் எழுந்தான். “நேரமாகிவிட்டது. தூங்குவோம்” என்றான் கொட்டாவி விட்டுக்கொண்டே.
இவை நடந்து அடுத்த இரண்டு வாரங்களுக்குள்ளே ஸ்ரீதர் பத்மா வீட்டுக்கு ஐந்து தடவைகள் போய்விட்டான். பரமானந்தர் வாழ்க்கையில் பழுத்த அனுபவசாலியானதால் கிழவனான தன்னுடன் நாடகங்களைப் பற்றிப் பேசுவதற்காக மட்டுமே ஸ்ரீதர் கொட்டாஞ்சேனைக்கு வரவில்லை என்பதைத் தெற்றத் தெளிவாக அறிந்து கொண்டார். நாடகக் கலையை விடப் பல்கலைக் கழக நாடக இணைக் காரியதரிசிபத்மாதான் இளைஞனான ஸ்ரீதரைக் கொட்டாஞ்சேனைக்கு இழுக்கிறாள் என்பது அவருக்கு நன்கு தெரிந்துவிட்டது. இருந்தாலும், ஒன்றும் அறியாதவர் போலவே அவர் நடந்து கொண்டார். உண்மையில், அவருடைய உள்ளத்தில் ஸ்ரீதர் மீது ஓரளவு பிரியமும் மதிப்பும் ஏற்பட்டிருந்ததால், பத்மாவுக்கு அவனை மாப்பிள்ளையாக்குவதில் அவருக்கும் அதிக ஆர்வம் ஏற்படவே செய்தது. “பத்மா வாத்தியார் மகள். அவனும் வாத்தியார் மகள். ஆகவே ஸ்ரீதர் எந்த விதத்திலும் எம்மிலும் அந்தஸ்துக் குறைந்தவனல்லன். ஆளும் அழகாயிருக்கிறான். பத்மா அதிர்ஷ்டசாலி அதனால் தான் அவனுடைய தொடர்பு அவளுக்கு ஏற்பட்டது” என்று கூட அவர் சிந்திக்க ஆரம்பித்தார். இந்த நிலையில் விஷ்யத்தைச் சுற்றி வளைப்பானேன் என்று எண்ணிய அவர் ஒரு நாள் இரவுச் சாப்பாட்டுக்குப் பிறகு பத்மாவிடம் நேரே விஷயத்தைப் பிரஸ்தாபித்து விட்டார்.
“பத்மா! இங்கே வா. உட்கார். உன்னிடம் ஒரு விஷயம் பேச வேண்டும்” என்றார் பரமானந்தர் –
“என்னப்பா?” என்று கொண்டே உட்கார்ந்தாள் பத்மா.
“உனக்கு இப்பொழுது வயதாகிவிட்டது. உன் அம்மா இந்த வயதில் கல்யாணம் செய்து உன்னையும் பெற்றுவிட்டாள். . நீயும் திருமணம் செய்ய வேண்டியவள்தானே? நேற்று எனது பழைய நண்பன் ஒருவன் ஒரு நல்ல இடத்து மாப்பிள்ளையை உனக்குப் பேசி வந்தான். நான் ஒரு மறுமொழியும் கூறவில்லை. நாளை வருவதாகச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறான். நான் அவனிடம் என்ன சொல்லவேண்டும் என்று கேட்பதற்கே உன்னை அழைத்தேன். மாப்பிள்ளையைப் பெண் பார்க்க அழைத்து வரும்படி சொல்லவா?” என்றார் பரமானந்தர் தந்திரமாக.
பத்மாவின் முகம் திருமணம், மாப்பிள்ளை என்ற வார்த்தைகளைக் கேட்டதும், குப்பென்று சிவந்துவிட்டது, என்னதான் படித்த பெண்ணென்றாலும் நாணத்தின் நடுக்கம் அவள் உடலெங்கும் பாவவே செய்த்தது. அப்பாவின் முகத்தைப் பார்ப்பதற்கே கன்கள் கூசின.
நிலத்தைப் பார்த்த வண்ணமிருந்தாள். அவள் நாக்கு அவளது துடிக்கும் செவ்விதழ்களைத் தடவியது. என்ன சொல்வதென்று தெரியாது திக்குமுக்காடிவிட்டாள்.
“என்ன பத்மா, பேசு. சொல்லவேண்டியதைச் சொல்” என்றார் பரமானந்தர்.
பத்மா வெறுமனே தலையை ஆட்டினாள்.
“வெறுமனே தலையை ஆட்டினால் அதன் பொருள்? வெட்கத்துக்காகப் பேச வேண்டியவற்றைப் பேசாது விடலாமா? ஒன்றுக்கும் பயப்படாது மனதிலுள்ளதைச் சொல்லு, பிள்ளை. நான் உனது இஷ்டத்துக்கு விரோதமாக எதுவும் செய்ய மாட்டேன்” என்றார் பரமானந்தர்.
தந்தையின் இந்த வார்த்தைகள் அவளுக்குத் தைரியமூட்டின. பேசுவதற்குத் தீர்மானித்தாள். ஆனால் பேச்சுத்தான் வரவில்லை. ஆனால் பரமானந்தர் மேலும் “பேசு பேசு” என்று வற்புறுத்தவே, வெட்கம் சிறிது சிறிதாக மறைந்தது. மனத்தில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “நான் ஸ்ரீதரைத்தான் கல்யாணம் செய்வேன்” என்றாள் தயக்கத்துடன்.
“என்ன ஸ்ரீதரையா? ஆனால் ஸ்ரீதர் அதற்குச் சம்மதமா?” என்றார் பரமானந்தர்.
“ஆம்” என்றாள் பத்மா.
“அது எப்படி உனக்குத் தெரியும்?”
“சொல்லியிருக்கிறார்.”
“ஓகோ, அப்படியானால் விஷயம் தீர்மானமாகி விட்டது. ஆகவே கல்யாணம் பேசி வந்தவனிடம் பத்மாவுக்குக் கல்யாணம் தீர்மானமாகிவிட்டது – ஸ்ரீதருடன் என்று சொல்லி விடவா, நாளைக்கு?”
“ம்” என்றாள் பத்மா நாணப் புன்னகையுடன்.
“சரி எனக்கு ஆட்சேபனையில்லை. ஸ்ரீதருக்கும் சொல்லிவிடு. சரி, போ படு,” என்றார் பரமானந்தர். சிறையிலிருந்து வெளிப்பட்டவள் போல் துள்ளி” எழுந்தோடினாள் பத்மா.
கட்டிலில் போய்ப் படுத்த அவள் அன்றிரவு முழுவதுமே நித்திரை கொள்ளவில்லை. இரவு முழுவதும் தன் எதிர்க்காலத்தைப் பற்றிப் பகற் கனவுகள் கண்டு கொண்டிருந்தாள் அவள்.
இதற்கு இரண்டு நாள் கழித்து ஸ்ரீதர் சுரேஷிடம் ஒரு கடிதத்தைக் காட்டினான் களிப்போடு. அது பத்மாவின் கடிதம். முத்து முத்தான எழுத்துகளில் மூன்றே மூன்று வசனங்கள் எழுதப்பட்டிருந்தன.
‘அப்பா நான் உங்களை மணமுடிக்க அனுமதி தந்து விட்டார். இதைவிட வேறென்ன இன்பம் வேண்டும் எங்களுக்கு? நாளை நண்பகல் என்னை வழமையான இடத்தில் கட்டாயம் சந்தியுங்கள்! – பத்மா’
ஸ்ரீதரின் உள்ளம் இக் கடிதத்தால் களிப்புற்றதாயினும் ஒரு வித கலக்கமும் அவனைப் பிடிக்கலாயிற்று. அவன் தன் ஆள் மாறாட்ட நாடகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டம் வந்துவிட்டது. ஆனால் இதனைக் கண்ணியமான முறையில் எவ்வாறு செய்து முடிப்பது என்ற பிரச்சினைக்கு அவனால் எவ்விதமான விடையும் காண முடியவில்லை.
– தொடரும்…
– இலங்கை வானொலியில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பப்பட்டது. ‘பதிவுகளில்’ தொடராக வெளிவந்த நாவலிது.
– மனக்கண் (தொடர் நாவல்), தினகரனில் வெளிவந்தது.
![]() |
அ.ந.கந்தசாமி (8 ஆகத்து 1924 – 14 பெப்ரவரி 1968) இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளராவார். ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களின் முன்னோடி எனப் போற்றப்படுகிறார்.சிறுகதை ஆசிரியர், புதின ஆசிரியர், கவிஞர், கட்டுரையாளர், நாடகாசிரியர், இலக்கியத் திறனாய்வாளர், இதழாசிரியர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகங்கள் கொண்டு இயங்கினார். கவீந்திரன், பண்டிதர் திருமலைராயர், கலையரசன், சிப்பி, புரூனே போன்ற புனைபெயர்களிலும் எழுதினார். பதிவுகள்.காம் அறிஞர் அ.ந.கந்தசாமி பல்துறை விற்பன்னராகவிருந்தவர். இலக்கியத்தின் சகல பிரிவுகளிலும்…மேலும் படிக்க... |