வைத்தியம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 5, 2024
பார்வையிட்டோர்: 1,430 
 
 

(2009ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இந்தக் கதையை எனக்குச் சொன்னவர் ஒரு டாக்டர் நண்பர். 

எவ்வளவுதான் நெருக்கமான நண்பர் களாக இருந்தாலும் உறவினர்களாக இருந்தாலும் முஓ தம்மிடம் மருத்துவத்துக்காக வரும் யாருடைய இரகசியங்களையும் டாக்டர்கள் நமக்குச் சொல் லவே மாட்டார்கள். இந்தக் கதையில் வரும் நபர் வித்தியாசமான ஒருவர். ஆனால் அதற்காகவே இந்தக் கதையை நண்பர் எனக்குச் சொல்ல வில்லை. 

நண்பர்களில் சிலர் நமக்கு அன்புத் தொல்லையாகவும் அரிகண்டத் தொல்லையாக வும் இருப்பதுண்டு. நமது அவசரம் புரிந்தும் கூட அதை இரண்டாம் பட்சமாகக் கருதியே நடந்து கொள்வார்கள். உப்புச் சப்பில்லாத விடயத்தைச் சொல்லி நம்மை அறுத்துக் கொல்லும் சந்தர்ப் பங்கள் எனக்குப் பல முறை ஏற்பட்டிருக்கிறது. உங்களுக்கும் ஏற்பட்டிருக்கும். நம்மிடம் ஐந்து ரூபாய்க்கு வழியில்லாமல் இருக்குந் தருணத்தில் ஐயாயிரம் ரூபாய் கேட்டு ஒற்றைக் காலில் நிற்கும் நபர்களும் இருக்கிறார்கள். அந்தத் தொகையை நம் பெண்டாட்டியின் தாலியை அடகு வைத்தாவது நாம் அவருக்குக் கொடுக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்ப்பார். கொடுக்கவில்லையென்றால் நம்மைப் போன்ற ஒரு கெட்ட மனிதனை அவர் தனது வாழ்நாளிலேயே சந்தித்திருக்க மாட்டார். அவ்வாறான சிக்கல் பேர்வழிகள் உங்களுக்கு இப்போது ஞாபகத்துக்கு வந்திருப்பார்கள். அவர்களை விட்டு விட்டுக் கதைக்கு வாருங்கள். 

இவ்வாறுதான் நானும் டாக்டர் நண்பரும் மிக அவசரமாக ஒரு பொடி நடைப் பயணம் மேற்கொண்டிருந்த போது அந்த நபர் எதிர்ப் பட்டார். நான் மேற்சொன்ன வகைக்குள் அச்சொட்டாகப் பொருந்திப் போகும் நபர் அவர். சற்றுத் தூரத்தில் அவரைக் கண்டிருந்தாலாவது இருவரும் வேறு திசை நோக்கி நடந்திருப்போம். இருவரும் என்று நான் சொல்வதைக் கொண்டே ஆசாமி எத்தகையவர் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் நடந்து கொண்டிருந்த பாதையில் உள்ள ஒரு கடையிலிருந்து சட்டென அவர் கீழிறங்கியதும் எங்களிருவரையும் தான் எதிர் கொண்டார். நாங்கள் இருவரும் பேயறைந்தது போல் விக்கித்து விட்டோம். இருவரும் ஆளுக்காள் முகங்களைக் கூடப் பார்த்துக் கொள்ளும் அவகாசம் கூடக் கிடைக்காமல் ஸ்மரணையற்றுப் போனோம். 

எங்கள் இருவருக்கும் பேச்சு எழவில்லை. அநேகமாகவும் நாக்கில் நீர் வற்றி வரண்டு போயிற்று. “ஆஹா..” என்று ஆரம்பித்தார் மனிதர். கதைக்க ஆரம்பித்தால் அவர் மட்டுமே கதைக்க வேண்டும்: மற்றவர்கள் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைக்கும் நபர் அவர். அவர் கதைக்கும் போது நேர் எதிரே நின்றால் எச்சில் தெறித்து நமது முகத்தைக் குளிப்பாட்டி விடும். இலக்கியம், சினிமா, அரசியல், உலக அரங்கு என்று அவருக்கு எல்லாமே அத்துப்படி எனுந் தோரணை யில் விளாசித் தள்ளுவார். ஒன்றுக் கொன்று முரண்பாடான கருத்துக்களை ஒரு நிமிடத்துக்குள்ளேயே சொல்லிக் கொண்டிருப்பார். 

நாங்கள் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித் தோம். இடைக்கிடையே எங்களது கைக்கடிகாரத்தைப் பார்த்து எங்களது அவசரத்தை அவருக்கு உணர்த்த முயன்றோம். அதை அவர் கண்டு கொண்டது மாதிரியே தெரியவில்லை. கண்டு கொண்டாலும் காணாத மாதிரிப் பாவ்லா பண்ணும் மனிதர். தனது வல்லபங்களை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கிக் கொண்டே சென்றார். கால் மணி நேரங் கடந்த பிறகு நாங்கள் அவசரமாகச் செல்வதாகச் சொன்னதும் “முடிச்சுக்கிறேன்..” என்றவர் மீண்டும் தொடர ஆரம்பித்தார். நான் நகர ஆரம்பித்தேன். அதன் பிறகும் இரண்டு நிமிடம் டாக்டரை அறுத்து விட்டுக் கைவிட்டுச் சென்றார். 

இப்படியாக ஒருவாறாக அவரைத் தாண்டி நடந்த போதுதான் டாக்டர் நண்பர் எனக்கு இந்தக் கதையைச் சொன்னார். 

நாங்கள் இப்போது எந்த அவசரத்தில் சென்று கொண்டிருந் தோமோ அவ்வாறான ஓர் அவசரத்துடன் டாக்டர் ஒரு நாள் நடந்து நபர் டாக்டரைக் கண்டு போய்க் கொண்டிருந்தார். எதிரே வந்த ரு சிரித்தார். டாக்டரும் பதிலுக்குப் புன்னகைத்தார். அதற்குப் பிறகுதான் டாக்டருக்குக் கஷ்டகாலம் ஆரம்பித்தது. அந்த நபருக்கு டாக்டரைத் தெரியும். டாக்டருக்கு அவரைத் தெரியாது. 

“தொ… நல்லாயிருக்கிறீங்களா..?” 

“ஓ… நல்லாயிருக்கிறன்!” 

“தொர.. தூரப் பயணம் போறீங்களா…?” 

இந்தக் கேள்வி அவருக்கு அநாவசியமானது என்று பட்டது டாக்டருக்கு. ஆனால் அவர் காட்டிக் கொள்ளவில்லை. காட்டிக் கொள்ள வும் மாட்டார். 

இந்த இடத்தில் எனது டாக்டர் நண்பரைப் பற்றி உங்களுக்கு அறிமுகப்படுத்தியாக வேண்டியவனாக இருக்கிறேன். அறிமுகப்படுத்த வில்லை என்றால் கதைக்குச் சரியாக இருக்காது. அதற்காகக் கதையை நீட்டுகிறேன் என்று நீங்கள் நினைத்துக் கொள்ளக் கூடாது. 

நானும் எனது டாக்டர் நண்பரும் எமது மற்றொரு நண்பரின் மகளின் பிறந்த நாள் விழாவுக்குப் போயிருந்தோம். பிறந்த நாள் கொண்டா டும் சிறுமியின் நர்ஸரிப் பள்ளி மாணவிகள் தமது பெற்றோருடன் வந்திருந் தார்கள். நாங்கள் இருவரும் ஓரிடத்தில் அமர்ந்து கதைத்துக் கொண்டிருந் தோம். சிற்றுண்டிகள் பரிமாறப்பட்டன. உண்டு மகிழ்ந்தோம். கொண்டு போயிருந்த அன்பளிப்பைச் சிறுமிக்கு வழங்கிக் களித்தோம். அங்கு நிலவிய மகிழ்ச்சியை மேலும் அதிகரிப்பதற்காக அச் சிறுமியின் தந்தையான எமது நண்பர் விரும்பினார். வந்திருந்த சிறுவர் சிறுமியருக்கிடையில் பல்வேறு விதமான வினோதப் போட்டிகள் நடத்தப்பட்டன. உடனடிப் ஒரு பரிசுப் பொதிகளும் வழங்கப்பட்டன. கடைசியாக அங்கு வந்திருக்கும் வளர்ந்தோருக்கிடையிலான சங்கீதக் கதிரைப் போட்டியொன்றை நடத்த ஏற்பாடு செய்தார்கள். 

எவ்வளவோ மறுத்தும் எங்கள் இருவரையும் நண்பர் அதில் கலந்து கொள்ளச் செய்து விட்டார். நாங்கள் இருவருமே சங்கோஜப் பேர்வளிகள். வேறு வழி தெரியவில்லை. இருவரும் ஒப்புக்குக் கதிரை களில் உட்கார்ந்து கொண்டோம். இசையை இயக்கியவர் வீட்டு அறைக்குள் இருந்தார். அது என்ன மாயமோ தெரியவில்லை, நாங்கள் இருவரும் அமரக் கதிரை கிடைக்கும் வகையில் இசை நிறுத்தப்பட்டது. நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ, எஞ்சியது நானும் டாக்டர் நண்பரும் தான். 

இப்போது ஒரு கதிரை, இரண்டு போட்டியாளர்கள். எனக்குள் இருந்த சாத்தான் சட்டென விழித்தெழுந்தான். நண்பரை எந்த வழியிலா வது தோற்கடித்து விடுவது என்று முடிவு கட்டிக் கொண்டேன். இசை ஆரம்பமாயிற்… நாங்கள் கதிரையை வலம் வந்தோம். நண்பரின் பின்னா லேயே நான் வந்து கொண்டிருந்தேன். இசை நிறுத்தப்பட்ட போது நண்பர் அமருவதற்கு வாய்ப்பாக இருந்தது. நான் எனது பின்புறத்தால் அவரது பின்புறத்தை முட்டி விட்டு அவர் சுதாகரிப்பதற்குள் கதிரையில் அமர்ந்து கொண்டேன். அவ்வளவுதான்! நண்பர் ஒரு சிரிப்போடு ஒரே ஓட்டமாக ஓடிவிட்டார். நான் வெற்றியாளனாக அறிவிக்கப்பட்டேன். 

உறுத்திய எனது மனச்சாட்சியிடம் விளையாட்டு என்றால் மதியூகத்தையும் பயன்படுத்த வேண்டும் என்று சமாதானம் சொல்லிக் கொண்டேன். அதே வேளை அவ்விடத்தில் நியாயம் பேச நினைக்காத நண்பரின் பெருந்தன்மையைப் போற்றினேன். 

இதில் என்ன நியாயங் கேட்பது என்பது நண்பரின் கருத்தாக இருந்திருக்கும். அவர் அப்படித்தான்! ஒரு முக்கிய விடயமாக இருந்தா லும் கூடத் தன் பக்க நியாயங்களைச் சொல்லிப் பார்ப்பார். சபையேற வில்லையென்றால் விட்டுவிட்டுத் தன்பாட்டில் போய் விடுவார். 

இனி அவர் சொன்ன கதைக்கு வருவோம்.

தனது பயணத் தூரம் பற்றிக் கேட்டவருக்கு உரிய பதிலைச் சொல்லாமல் கேட்டார்:- 

“என்ன விஷயம்?” 

“ஒண்ணுமில்ல தொ… ஒரு விசயமா ஒங்களோட கதைக்கணும்…” 

“பரவாயில்ல… சொல்லுங்க…” 

“இல்ல தொர… தனியத்தான் கதைக்கணும்… அதான்….” 

“இப்ப நாம ரெண்டு பேர்தானே இருக்கம்… சொல்லுங்கள…”

“இப்… எப்பிடி..” என்று இழுத்தார். டாக்டர் சொன்னார்:- 

“அப்ப.. பின்னேரம் நாலு மணிக்கு டிஸ்பென்ஸரி தொறப்பேன்.. அப்ப வாங்க..” 

“அந்த நேரம் சனக் கூட்டமா இருக்குமே தொர…?” 

கோபம் வராத டாக்டருக்கு இப்போது சூடேற ஆரம்பித்தது. ஆனால் அவர் டாக்டர். அப்படிக் கோபம் வந்தாலும் அடக்கிக் கொள்ள வேண்டும். வித்தியாசமான நோயாளிகளையும் அவர்களில் பலரது அறியாமைகளையும் கண்டு பொறுத்துத் தாங்கிப் பழகியவர். வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு சொன்னார்:- 

“அப்ப.. நீங்க இரவு எட்டரை மணிபோல வாங்க ஆறுதலாக் கதைக்கலாம்.” 

டாக்டர் சொன்னதும் அந்த நபர் டாக்டரைச் சற்று நெருங்கினார். ஏதோ ஒன்றைச் சொல்லவும் வேண்டும். சொல்லவும் முடியாது என்ற நிலையில் அந்த நபர் தத்தளிப்பதை டாக்டர் உணர்ந்தார். 

“அது என்னண்டா.டாக்டர்…” என்றவர் சற்று நெளிந்தார். 

“பரவாயில்ல.. சொல்லுங்க..” 

“என்ட விரையில ஒண்டு கொஞ்சம் வீங்கி…” என்றதுடன் பேச்சை நிறுத்தினார். சில வேளை டாக்டர் சிரிப்பார் என்று அவர் தனது அறியாடையாலும் சங்கோஜத்தாலும் எண்ணியிருக்கக் கூடும். பண்பற்ற நண்பர்களுக்கு வேண்டுமானால் அது சிரிப்புக்குரிய விடயமாக இருக்கலாம். ஆனால் ஆயிரம் உடல் உபாதைகளுடன் வருவோருக்கு ஆறுதலும் மருந்தும் தரும் வைத்தியர்களுக்குச் சிரிப்பு வருமா என்ன? 

“அதுதானா….” என்று வெகு சாதாரணமாகச் சொன்ன டாக்டர், 

“நீங்க டிஸ்பென்சரிக்கு வாங்க” என்றார். 

“அங்க வந்து…” என்று மீண்டும் இழுத்தார் அந்த நபர். 

டாக்டருக்குப் பெரும் சிக்கலாகிப் போய் விட்டது. நோய்க்கு மருந்து பெற உரிய முறையில் வருவதாகவும் இல்லை. அவரைப் போக விடுவதாகவும் இல்லை. நேரம் கடந்து கொண்டிருந்தது. டாக்டர் சொன்னார்:- 

“என்னெண்டு பார்க்காம மருந்து தரமுடியாது.. நீங்க டிஸ்பென்சரிக்கு வாங்க!” 

அந்த நபர் பதில் எதுவும் சொல்லாமல் டாக்டரின் முகத்தை ஒரு வித அங்கலாய்ப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார். டாக்டர் பார்க்காமல் அந்த இடத்திலேயே மருந்து எழுதித் தரச் சொல்லும் பார்வை… 

டாக்டர் மீண்டும் உறுதிபடச் சொன்னார்:- 

“டிஸ்பென்ஸரிக்கு வாங்க… பார்க்காம மருந்து தர ஏலா!” 

ஆனால் அந்த நபர் டாக்டரின் முகத்தை அப்பாவித் தனமாகப் பார்த்துக் கொண்டு சும்மா நின்றார். நேரம் வீணே கழிய டாக்டரின் பொறுமை எல்லை கடந்தது. வேறு வழியில்லாமல் சொன்னார்:- 

“அப்போ… சாரனைத் தூக்குங்க பார்ப்போம்…” 

தெருவோரத்தில் நின்றபடி சாரனை உயர்த்தச் சொன்னதும் சட்டென வியர்த்துப் போன அந்த நபர் மின்சாரம் தாக்கியவனைப் போல விருட்டெனத் திரும்பி விறு விறுவென வேகமாக நடந்து போனார். 

– 10.08.2009 

– விரல்களற்றவனின் பிரார்த்தனை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜனவரி 2013, யாத்ரா வெளியீட்டகம், வத்தளை.

அஷ்ரஃப் சிஹாப்தீன் நூலாசிரியரின் பிற நூல்கள் கவிதை காணாமல் போனவர்கள் - 1999 உன்னை வாசிக்கும் எழுத்து - 2007 (மொழிபெயர்ப்பு) என்னைத் தீயில் எறிந்தவள் - 2008 (அரச சாஹித்திய தேசிய விருது பெற்றது) சிறுவர் இலக்கியம் புள்ளி - 2007 கறுக்கு மொறுக்கு - முறுக்கு - 2009 புல்லுக்கு அலைந்த மில்லா - 2009 ஏனையவை தீர்க்க வர்ணம் - 2009 (பல்சுவைப் பத்திகளின் தொகுப்பு ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *