மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார்.
மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள் தாக்கத்தை ஏற்படுத்தியது. முதல் சிறுகதை ’பரிசு’, 1972-ல், ‘செம்மலர்’ இதழில் வெளியானது. ஆசிரியராக இருந்த கே.முத்தையா பொன்னுச்சாமியைத் தொடர்ந்து எழுத ஊக்குவித்தார். ‘தீக்கதிர்’, ‘குங்குமம்’, ’குமுதம்’, ‘வாசுகி’, ‘கல்கி’, ’தாமரை’, ’இதயம் பேசுகிறது’ ‘சுபமங்களா’, ’அமுதசுரபி’, ‘இந்தியா டுடே’, ’தமிழரசி’, ’தினமணி கதிர்’, ‘மகுடம்’, ‘ஜனரஞ்சனி’, ‘தேவி’, ‘ராணி’, ‘ஓம்சக்தி’, ’விழிப்பு’, ‘புதிய பார்வை’, ‘தமிழன் எக்ஸ்பிரஸ்’ எனப் பல முன்னணி இதழ்களிலும், இலக்கியச் சிற்றேடுகளிலும் சிறுகதை, தொடர்கள் எழுதினார். ஆனந்த விகடன் இதழின் ஆசிரியர் எஸ். பாலசுப்ரமணியன், மேலாண்மை பொன்னுச்சாமியை ஊக்குவித்தார். சிறுகதை, தொடர்கதை என்று பல படைப்புகளை விகடன் இதழில் வெளியிட்டார்.
மேலாண்மை பொன்னுச்சாமியின் முதல் சிறுகதைத் தொகுப்பு ’மானுடம் வெல்லும்’ 1981-ல் வெளியானது. பதிப்பகங்கள் எதுவும் அத்தொகுப்பை வெளியிட முன் வராததால் தானே தன் வீட்டில் வளர்த்த ஆட்டுக்குட்டிகளை விற்று வந்த தொகையில் அந்த நூலைப் பதிப்பித்தார். தொடர்ந்து பல நூல்கள் வெளிவந்தன.
300-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், பத்துக்கும் மேற்பட்ட நாவல், குறுநாவல்களைத் தந்துள்ளார் மேலாண்மை பொன்னுச்சாமி. இவரது படைப்புகள் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக அளவில் மாணவர்களுக்குப் பாட நூல்களாக வைக்கப்பட்டன. இவரது படைப்புகளை ஆராய்ந்து பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இள முனைவர், முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளனர். இவரது ‘மின்சாரப் பூவே’ என்ற சிறுகதை தொகுப்பிற்கு 2008-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது.
மேலாண்மை பொன்னுச்சாமி, அக்டோபர் 30, 2017 அன்று, தனது 66-ம் வயதில் உடல்நலக்குறைவால் காலமானார்.
தமிழக அரசால் மேலாண்மை பொன்னுச்சாமியின் நூல்கள், அவரது மறைவுக்குப் பின், 2018-ல் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.
சிறுகதைத் தொகுப்புகள்
- மானுடம் வெல்லும்
- சிபிகள்
- பூக்காத மாலை
- மானுடப் பிரவாகம்
- காகிதம்
- கணக்கு
- தழும்பு
- தாய்மதி
- விரல்
- உயிர்க்காற்று
- என்கனா
- ஒரு மாலை பூத்து வரும்
- அன்பூ வாசம்
- மனப் பூ
- பூச் சுமை
- வெண்பூ மனம்
- மானாவாரிப் பூ
- மின்சாரப் பூ
- பூ மனச் சுனை
- ராசாத்தி
நாவல்கள்
- உயிர் நிலம்
- முற்றுகை
- இனி…
- அச்சமே நரகம்
- ஆகாய சிறகுகள்
- ஊர் மண்
- முழுநிலா
குறு நாவல்கள்
- ஈஸ்வர…
- பாசத்தீ
- தழும்பு
- கோடுகள்
- மரம்
நன்றியுரை, சிபிகள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1987
முதற்தொகுப்பு ‘மானுடம் வெல்லும்’ இரண்டாவ தாக வந்தாலும், சிபிகள் தொகுப்பு, தர அடிப்படையில் முதலாவது.
ஜனரஞ்ஜனி இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு வென்ற ‘சுயம்’ – கல்கி இதழ் (1986) சிறுகதைப் போட்டியில் முதற் பரிசையும், விரிந்து பரந்த வாசகர்களின் பாராட்டையும் பெற்ற ‘சிபிகள்’ – இலக்கியச் சிந்தனை பரிசையும், எழுத்தாளர் இந்துமதியின் பாராட்டையும் பெற்ற ‘ஜீவிதத்தின்உள்வட்டம்’ – போக்குவரத்துத் தொழிலாளிகளின் உயர் பண்பை யதார்த்தமாய் கண்டுணர்ந்து சித்தரித்த ‘உள் மனிதன்-‘
இத்தொகுப்பின் மீது எனக்கு இப்போதும் தீராக்காதல். ஒரு வட்டத்திற்குள் மட்டுமே அறியப்பட்ட எழுத்தாளனாக இருந்த என்னை, பரந்த தமிழ் வாசகப் பரப்பிற்குள் அழைத்துச் சென்ற தொகுப்பு இது. பெருமையும் கௌரவமும் பெற்றுத் தந்த இந்தத் தொகுப்பின் மீது… ஒரு தாய்க்கு தலைப்பிள்ளை மீதுள்ள பாசம், எனக்கு.
வாழ்க்கை என்னைப் போதுமான அளவுக்கு வறுத் தெடுத்திருக்கிறது; வாட்டி வதைத்திருக்கிறது. மனிதச் சந்தடியில் அடையாளமற்று புதைத்துவிட தாட்சண்ய மற்று எத்தனித்திருக்கிறது.
வாழ்க்கையோடு நான் நடத்திய முடிவில்லாத மல்லுக் கட்டில் என் அடையாளத்தை கண்டெடுத்து நிரூபணம் செய்து நிலைநாட்டுகிற போராட்டத்தில் – இன்னும் நான் நம்பிக்கையுடன் களத்தில் இருக்கிறேன்.
பலவிதமான பரிசுகளையும், விருதும் பெற்று, ‘கல்கி’, ‘ஆனந்தவிகடன்’ போன்ற கௌரவமிக்க பிரபல இதழ்களில் தொடர்கதைகள் எழுதுகிற அளவுக்கு அடையாளம் பெற்றிருக் கிறேன்.
எனது உண்மையும் சத்தியமுமான இலக்கியக் கொள்கையையோ – அதை நிர்ணயித்த மார்க்ஸீய தத்துவ நோக்கையோ – மக்கள் நலன் சார்ந்த பொதுவுடமை இயக்கத்துடனான நேசமிக்க உறவையோ மூடி மறைத்துக் கொள்ளவுமில்லை; ஒதுக்கிவைக்கவுமில்லை.
இன்றும் நான் நம்புகிறேன்; மோசமாகிப் போன இன்றைய சமூகச் சூழலிலும் உறுதியுடன் நம்புகிறேன்; ‘கலைத்தன்மை குன்றாத மக்கள் விடுதலைக்கான முற்போக்கு இலக்கியப் படைப்புகள், வெற்றி பெறுவது நிச்சயம்; இதுவே சரித்திரத்தின் விதி’ என்று.
மிகவும் பின்தங்கிய கிராமச் சூழலிலுள்ள வாழ்க்கை யில் – மிகக் குறைந்த கல்வி வாசனையில் – ஏழ்மையான குடும்பத்தில் தேங்கி நின்ற எனக்குள்… ஓர் இலக்கியப்படைப் பாளி தோன்றி மலர்வதற்கான எத்தகுதியும் இருந்ததாகத் தோன்றவில்லை.
ஆயினும்,
வாழ்க்கையின் உள்-வெளி மர்மம் நிறைந்த அனுபவங் களையும், கிராமத்துப் பாமர விவசாயிகளின் ஈரவலிமையும், சத்திய பலமுமிக்க மொழி வளத்தையும் நான் கற்றுத் தேர்வதற்கு எனக்குக் கற்றுத் தந்த முற்போக்குச் சிந்தனை தான்… நிகழ்வாழ்வின் கொடூரங்களை எதிர்த்துப் போரிடு வதற்குரிய ஆத்ம பலத்தையும், போர்க் குணத்தையும் வழங்கியது.
இந்தச் சின்னஞ்சிறு விதைக்குள் ஒரு விருட்சம் இருக்கிற நிஜத்தைப் புரிந்துகொண்டு, எனது ஆரம்ப காலப் படைப்பு முயற்சிகளுக்கு நீரூற்றி… சோர்வடைந்து துவள்கிற போதெல்லாம் தைர்யமூட்டி, சுதாரித்து துள்ளுகிற போதெல்லாம் லகான் போட்டு என்னை நெறிப்படுத்தி பாசத்தோடும் தோழமையோடும் என்னை வார்த்தெடுத்த தோழர் எஸ்.ஏ.பெருமாள் அவர்களை என்னுயிருள்ளளவும் மறக்க இயலாது.
எனது சிறுகதைகளை துவக்க நாளிலிருந்து பிரசுரித்து பாதுகாத்துப் போற்றிய ‘செம்மலர்’ ஆசிரியர்’கே. முத்தையா, ஓவியர்தி. வரதராசன், மீராபதிப்பகத்தார், கவிஞர்கந்தர்வன், முத்துநிலவன், கி. ராஜநாராயணன், கவிஞர் பாலா, வணக்கத்துக்குரியவர்கள்.
சிபிகள் நூலைத் தேடிக் கண்டுபிடித்து கொடுத்துதவிய காமராசர் மாவட்ட த.மு.எ.ச. செயலாளர் எழுத்தாளர் ச. வெங்கடாசலத்திற்கு விசேஷ நன்றிகள்.
எனது படைப்புகளையெல்லாம் தோளில் போட்டு நாடெல்லாம் விற்றும் – படித்துவிட்டு உடனுக்குடன் விமர்சனமும், பாராட்டும் வழங்கி – தன் சொந்தப் படைப்பாளனாக என்னை மதிக்கும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க நண்பர்கள் சகலருக்கும் எனது அன்பும் தோழமையுமான வணக்கங்கள்.
நன்றி!
மேலாண் மறைநாடு – 626 127
காமராசர்மாவட்டம்
என்றும் உங்கள்
மேலாண்மை. பொன்னுச்சாமி.
– சிபிகள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1987, கங்கை புத்தக நிலையம், சென்னை.
மலினப்பட்டு விடாத என் எழுத்தின். எளிமையும், உண்மையான வலிமையும் எனக்கு பிடிபட்ட பிறகுதான்… என் எழுத்தின் மீதே எனக்கொரு மரியாதை இருக்கிறது…
முப்பதாண்டுகள் கடந்த பின்பும் தொடர்ந்து என் வலிகளை – ரணங்களை – அனுபவ ரத்த வெதுவெதுப்பை சிறுகதைகளாக வெளிப்படுத்திக் கொண்டேயிருக் கின்றேன். சலிப்பில்லாத தொடர் சமர். இந்தச் சமர், என் ஆத்மாவின் படையெடுப்பு. அதுவே என்வர்க்கத்தின் சமராக என் மக்களின் சமராக என் சமூகத்தின், மொழியின் சமராக இருப்பதால்… அமைப்பு ரீதியான தத்துவ ஒருமையுடன் இயங்கவும் முடிகிறது, என்னால். உயிருள்ளவரை இயங்குவேன், எழுதுவேன். எழுத்து என்பது என் சமர். தொடரும் சுவாசம். சுபாவம்…மேலாண்மை பொன்னுசாமி.
– மேலாண்மை பொன்னுச்சாமி கதைகள் (பாகம்-2), முதற் பதிப்பு: 2002, ராஜராஜன் பதிப்பகம், சென்னை.
முன்னுரை – விரல் (சிறுகதைகள்) – முதற் பதிப்பு: மே 1995
கிராமங்களின் உற்பத்தி முறையும், சாகுபடி விதமும் நவீனமாகியிருக்கிறது. உழைப்பை மட்டுமே சார்ந்து நின்ற உற்பத்தி முறைமை.. இப்போது உழவு, நவீன விதைகள், ரசாயன உரம், ஊடுருவிப் பாய்கிற பூச்சி மருந்துகள் என்று பணச் செலவுகள் செய்து விளைச்சல் காணுகிற புதிய முறைமையாக மாறியிருக்கிறது.
இந்த மாறுதல், விவசாயிகளுக்கும், விவசாயம் சார்ந்த கூலி மக்களுக்குமான உறவுகளையும் நிறமாற்றம் செய்திருக்கிறது. கிராமங்களுக்கேயுரித் தான மனித நேயம் மிகுந்த அந்நியோன்யம், கொடுக்கல்வாங்கல் எல்லாமே நிறமாற்றம் பெற்றிருக்கிறது.
விவசாய வீட்டுப் பிள்ளைகள் விவசாயத்தை நேசிப்பது என்கிற இயல்பான தன்மைகளும் இயல்பு மாறுகின்றன.
இந்த மாறுதல்கள் கலாசாரத்திலும் நிகழ்கிறது. தெம்மாங்குப் பாட்டுகள், தாத்தா பாட்டிக் கதைகள், வியர்வைக் கலையான வீரம் செறிந்த கிராமீயக் கலைகள் யாவும் மங்கி வருகின்றன. தூரம் தூரமாகின்றன.
எங்கள் சின்னஞ்சிறு குக்கிராமத்தில்கூட ஆகாய வழியில் வலை வீசிக்கொண்டு நிற்கின்ற 31 ஆன்டனாக்கள். காதுகுத்து- கல்யாணம்-பூப்புனித நீராட்டு போன்ற குடும்ப விழாக்களில்கூட டெக்- டி.வி. சினிமாக்களின் ஆக்ரமிப்பு, காட்டு வெளியில் மேய்கிற ஆடுகளைப் பார்த்துக் கொண்டு வெயிலில் நிற்கிற ஆட்டுகாரனின் உதடுகளில்கூட சினிமாப் பாட்டின் சிணுங்கல்கள்..
இதெல்லாம்… கிராமங்களின் புதிய பூச்சுகள். புதிய நிறங்கள். புதிய தோற்றங்கள்.
இவையெல்லாம் ஆரோக்கியமான மாற்றங்களா..? முன்னோக்கிய வளர்ச்சியா? அல்லது வளர் சிதைவுகளா? என்பது ஆய்வுக்குரிய விஷயம்.
உறவுகளிலும், கலாசாரத்திலும், மனிதப் பண்பாட்டுச் சாயல்களிலும் ஏற்பட்டிருக்கிற இந்தப் புதிய சலனங்களை என் கதைகள் பதிவு செய்கின்றன.
வாழ்க்கை நிகழ்வுகளால் மனிதப் பண்புகள் மாறுவதும், மானுட ஒற்றுமையான செயல்களால் வாழ்க்கையின் முகமே மாறுவதுமாக… வரலாறு முன்னோக்கி நகர்கிறது.
இந்த நகர்வின் உள் வேதனைகளையும், ரணங்களையும், திசைகளையும் என் கதைகள் உணர்த்துகின்றன.
வானம் பார்த்த பூமியான கரிசல் பகுதி மக்களின் அருமைகளையும், பெருமிதத்துக்குரிய உயர் பண்புகளையும் மட்டுமே என் கதைகள் சொல்வ தில்லை. அதற்கும் ஆழத்தில் அதிர்கிற சிறுமைகளையும், கசப்பூட்டும் துயரங்களையும், சிதைவுகளை யும் சேர்த்தே பதிவு செய்கின்றன.
வாழ்வின் சமகாலப் புதிய முகங்கள் என் கதைகளில் வெளிப்பட்டிருக்கின்றன.
இதெல்லாம்… ஏன் முன்னுரையில் சொல்கிறேன்? காரணம் இருக்கிறது.
முற்போக்காளர்கள் மீது பொதுவாக ஒரு குற்றச்சாட்டு இப்போது சொல்லப்படுகிறது. ‘ரொம்ப அதிநவீன வாதிகளை’ப் போல தம்மைப் பகட்டிக் கொள்கிற சமகால உருவவியல் வாதிகளால் மட்டுமே அந்தக் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. அது என்ன குற்றச்சாட்டு?
“முற்போக்காளர்களின் யதார்த்தம், மொண்ணை யான யதார்த்தம். வாழ்வின் மேலோட்டமான சம்பவங்களை மொண்ணையான யதார்த்த பாணி யில் கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.”
இதுதான் அந்தக் குற்றச்சாட்டு.
இது… கொஞ்சம்கூட உண்மைக் கலப்பற்ற- அப்பட்டமான-அவதூறு.
வாழ்வின் மேலோட்டமான சம்பவங்களையல்ல… புறவாழ்வின் மிகப் புதிய சலனங்களையும்-மனித உறவுகளின், உணர்வுகளின் நிறமாற்றங்களையும் முற்போக்காளர்கள் பதிவு செய்வு செய்து வருகிறார்கள் என்பதே நிஜம்.
அது மட்டுமல்ல… அவற்றையும் கூர்மழுங்கிப் போன ‘மொண்ணையான’ யதார்த்தமாகச் சொல்வ தில்லை. ஆழ்ந்துணர்ந்த மன உலக வெளிப்பாடுகளாக-ஆகவே கலைத் தரமிக்க வகையில்- சொல்கிறார்கள். வாழ்வின் நிகழ்வுகள் மன உலக யதார்த்தமாக உணர்வுலகில் கலந்து சங்கமித்து ததும்பிய வெளிப்பாடுகள்தான்… முற்போக்காளர் களின் படைப்புகள் அதனால்தான்… அவர்கள் படைப்புகள் யதார்த்த வடிவத்திற்கே புதிய பரிமாணம் தந்து கொண்டிருக்கின்றன.
சமூக அக்கறையில் எந்த அளவுக்கு ஆழமும் அழுத்தமும் அசலாகவும் முற்போக்காளர்கள் இருக்கிறார்களோ… அதே அளவுக்கு இலக்கிய அக்கறையும் கொண்டிருப்பார்கள். உள்ளடக்க அக்கறையின் அளவுக்கு வடிவ அக்கறையும் இருக்கும்.
‘இலக்கியம் மக்களுக்காக’ என்பதில் அழுத்தமான வர்கள், முற்போக்காளர்கள். இலக்கிய உள்ளடக்கம் மக்களின் உணர்வுகளாக இடம் மாற்றம் பெற்றாக வேண்டும், அதற்கு வடிவம் மிகமிக முக்கியம் என்பதை அழுத்தமாக உணர்ந்திருப்பவர்கள்.
ஆகவே… ‘மொண்ணை’ யான யதார்த்தத்தை மனசின் ஆழத்திலிருந்து வெறுப்பவர்கள், முற்போக் காளர்கள். யதார்த்த வடிவத்திலேயே புதிய புதிய சோதனைகள் செய்து வெற்றி கண்டு யதார்த்த வடிவத்தையே சிருஷ்டிப்புத் தன்மைமிக்க வளரும் யதார்த்தமாக்கி… அதைப் போற்றி பாதுகாப்பவர்கள்.
இது… பொய்யல்ல… நிஜம்.
இந்த நிஜம்தான்… இலக்கிய உலகில் முற்போக் காளர்கள் மென்மேலும் செல்வாக்கு பெற்று வருகிற உண்மைக்கான காரணம்.
இது… இன்றைய நிஜம் மட்டுமல்ல… எல்லாக் காலத்து உண்மையும் இதுதான்.
வாழும் காலத்திலேயே விரிந்து பரந்த செல்வாக்கு பெற்றிருந்த புதுமைப்பித்தன் ‘காஞ்சனையின் கனவு; கடவுளும் கந்தசாமிபிள்ளையும்,’ ‘கயிற்றரவு’ போன்ற பல கதைகளில் யதார்த்த தளத்தில் ஆழ மாகக் காலூன்றி நின்றுகொண்டே வடிவப் பரி சோதனைகள் செய்து வெற்றி கண்டிருக்கிறார்கள்.
இதில் இடம் பெற்றுள்ள கதைகளில் ‘விரல்’ எனக்கு மிகவும் பிடித்த கதை. உள்ளடக்கத்திலும், வடிவத்திலும் எனக்குப் பிடித்தமான கதை. அதே போல… புஞ்சை, பலிபீடம் கதைகளும் பிடித்தமானவை.
இக் கதைகளை தொகுப்பாக சிறந்த முறையில் அழகான வடிவத்தில் நூலாக வெளியிடுகிற புகழ் மிக்க ‘வானதி பதிப்பக’ உரிமையாளர் திருநாவுக்கரசு அவர்களுக்கு எனது இதய நன்றிகள்.
இதோ… உங்கள் கையில் எனது நூல். எனது படைப்புகள். வாசித்து முடித்தவுடன் மவுனத்தில் ஆழ்ந்துவிடாமல்… ஒரு கடிதம் போடுங்கள். படைப்பு பற்றிய உங்கள் பாராட்டுகள் என் பேனாவுக்கு மையூற்றும்; விமர்சனங்கள் என் பேனாவை இன்னும் தீட்டிக் கூர்மையாக்கும். இரண்டுமே என்னை வளர்க்கும்.
நன்றி!
16.1.1995
மேலாண் மறைநாடு
626127
காமராசர் மாவட்டம்
என்றும் உங்கள்
மேலாண்மை பொன்னுச்சாமி.
– விரல் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: மே 1995, கங்கை புத்தக நிலையம், சென்னை.