கதையாசிரியர்:
தின/வார இதழ்: மணிக்கொடி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 22, 2024
பார்வையிட்டோர்: 5,586 
 
 

(1936ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பங்குனி உத்தரம்; பௌர்ணமி; வெண்பஞ்சுபோல மேகங்கள் வானத்தில் ஒட்டிக் கிடந்தன. 

அந்த வெள்ளை மேகங்களைத் தத்திப் பாயும் சந்திரனும் வீணை நரம்புகளை நெருடி விரையும் விரல்களும் போட்டியிட்டுக் கொண்டிருந்தன. 

சுலோசனாவின் ஹிருதய ரஸமும் அவளது வீணை நாதமும் மணிக்கொடி லயித்துப்போய்க் கிருஷ்ணசாமியின் மனத்தை மயக்கின. ஒரு மெழுகுப் பொம்மை யென்று சொல்லும்படி அவன் உடல் ஒரு சாய்வு நாற்காலியில் நெகிழ்ந்து கொண்டிருந்தது. 

நேரம் நிற்கிறதோ போகிறதோ என்று சொல்ல முடியாத அமைதி. அவனது மந்த மயக்கமும், உலக மோனமும் தழுவிய நிலையில் அவளது இனிய சங்கீதம் சடக்கென நின்றது. 

“நன்னு பாலிம்ப” என்ற மோஹன ராகக் கீர்த்தனத்தின் அனுபல்லவியாகிய, “வனஜ நயன” என்ற அடியை உருக்கமாகப் பாடி, மேலே போகாமல், அவள் நிறுத்திவிட்டதும், கிருஷ்ணசாமி திடுக்கிட்டு விழித்தான். 

“சுலோசனா! என்ன இது? உனது சங்கீத விமானத்தின் மூலம் சந்திர லோகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த என்னை ஒரே அடி யாகப் பாதாளத்தில் தள்ளி விட்டாயே!” என்று காதலில் தோன்றும் கற்பனையுடன் கூறினான். 

நிலவு வெளிச்சத்தில் சுலோசனாவின் தங்க முகம் சில கெம்பு களை வாரி இறைத்ததுபோல் மாறியது. அவளுடைய நீண்ட விழிகள் ஒரு முறை சுழன்று நின்றன. 

“தூங்கி விட்டீர்களோ என்னவோ என்று நிறுத்தினேன்!என்றாள். 

“இல்லை இல்லை. அரைகுறையாய் விடாதே. அந்தப் பாட்டை முடித்துவிடு!” என்று சொல்லிக் கிருஷ்ணசாமி அவளது கையைப் பற்றினான். 

சுலோசனா மறுபடியும் வீணையை மீட்டிக் கொண்டு, ஆரம் பித்த கீர்த்தனையைப் பாடி முடித்தாள். 

கிருஷ்ணசாமியின் மகிழ்ச்சி பொங்கி மமதையாய் வழிந்தது. தன் மனைவியின் சங்கீத பாண்டித்தியமும், அவள் கல்வியிடம் காட்டிய அடக்க முடியாத தாகமும், அவனது நவீன காலக் கொள்கைகளைப் பலப்படுத்தின. 

“லோசனா, உன் பாட்டும் படிப்பும் எனக்கு நிரம்பப் பெருமையை அளிக்கின்றன. ‘பிரபஞ்சலதா’வில் நீ எழுதிய கதையைப் படித்த பிறகு எப்படி உன்னைப் பற்றிக் கர்வப்படாமல் இருக்க முடியும்? அந்தக் கதை எத்தனை பெண்களுக்குத் தூண்டுகோலாயிருக்கும்!” என்றான். 

சுலோசனாவின் முகம் புன்னகையால் மலர்ந்தது. கூச்சத்தின் மிகுதியால் அவள் கண்கள் குவிந்து கிருஷ்ண சாமியின் மீது பாய்ந்தன. 

“நான் ஊருக்குப் போய்விட்டால்கூட நீ இதை மாத்திரம் விட்டுவிடக் கூடாது. பத்திரிகைகளுக்கும் எழுது. பாட்டிலும் நன்றாக அப்பியாசம் செய். நமது சமூகத்தின் பழைய வழக்கங் களும் பெண்களின் கேவலமான அடிமைத்தனமும் எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை!” என்று பிரசங்கம் செய்தபோது, சுலோசனாவுக்கு அவன் வார்த்தை அவனது அடிவயிற்றிலிருந்து கிளம்பியதென்பது பளிச்சென்று புலப்பட்டது. 

“நீங்கள் இந்தத் தடவை ஊருக்குப் போகும்போது என்னையும் அழைத்துக் கொண்டு போக முடியுமா?” என்று தயங்கிக் கேட்டாள். 

கிருஷ்ணசாமி சிறிது நேரம் சும்மா இருந்தான். அவனுடைய மனவெழுச்சிகளை யெல்லாம் அப்படியே படமெடுத்துக் கொள் பவைபோல் சுலோசனாவின் விழிகள் நிலைத்திருந்தன. 

“ஏதாவது வேலை கிடைத்த பின்தான் உன்னை அழைத்துக் கொள்ள வேண்டுமென்று அம்மா சொல்லுகிறாள்,” என்று நலிந்த குரலில் பேசி முடித்தான். 

அதற்கு மேல் அவள் ஒன்றும் சொல்லவில்லை. 

ஒரு வருஷம் கழிந்தது. சுலோசனாவின் கலா ரசனையும், சங்கீத முயற்சியும் மேன்மேலும் விகஸித்து விளங்கின. அவளுக்குக் கல்வியிலுள்ள அபிலாஷை அவள் ஆபரணங்களைக்கூட விற்று அருமையான புஸ்தகங்களைச் சேகரிக்கும்படி செய்தது. அந்த ஆவலைப் பின்னும் ஊக்கியது, கிருஷ்ணசாமியின் கணக்கற்ற கடிதங்கள். 

முக்கியமாக ஒரு சுமங்கலி ஸ்திரீக்கு வேண்டிய சொற்ப நகைகளையே அவள் அணிந்திருந்தாள். ஒரு காலத்தில் அவள் மேனியை அலங்கரித்த நகைகள், இப்பொழுது அவளது மூளை வட்டத்திலிருந்து கலைக் கிரணங்களாக ஒளிவீசின. 

இவ்வளவுக்கும் உதவியா யிருந்தவர் அவள் ஏழைத் தந்தை ராமையங்கார்; தம் மனைவியைத் துறந்த பின் மகளே உலகமென் றெண்ணிப் போற்றிவந்த பிதா. 

ஒருநாள் மாப்பிள்ளையிடமிருந்து அவருக்குக் கடிதம் வந்தது. மணிக்கொடி தனக்கு ஏதோ வேலை கிடைத்திருப்பதாயும், சுலோசனாவைக் இதழ்தொகுப்பு கொண்டு வந்து விட்டால் சௌகரியமா யிருக்குமென்றும் கிருஷ்ண சாமி எழுதி யிருந்தான். 

ராமையங்கார் களிப்புடன் பெண்ணைக் கொண்டு போய்ப் புக்ககத்தில் விட்டு விட்டு வந்தார். 

சில நாட்கள் சென்றன. 

கூடத்து அறையில் உட்கார்ந்து சுலோசனா ஏதோ எழுதிக் கொண்டிருந்தாள். தாழ்வாரத்தில் வம்பர் மஹா நாடு கூடியிருந்தது. “நாட்டுப்பெண் வந்தாளே! என்ன கொண்டு வந்தாள்?” என்றாள் அம்புஜம். 

”உம், என்ன கொண்டு வந்தாள்? ஒண்ணையும் காணோம்!என்றாள் கிருஷ்ணசாமியின் தாய் ஆண்டாளம்மாள். 

“அதென்ன அப்படிச் சொல்றேள்?” என்றாள் கோமு. 

“என்ன இருக்கு, கொண்டு வர?” என்று குறைப்பட்டாள் ஆண்டாளம்மாள். 

“ஏன்? வீட்டுக்கேத்த வாசப்படி. பொன்னாலே செய்யாமெப் போனாலும் பூவாலேயாவது சேஞ்சுதான் அனுப்புவா. அவாள வாளுக்கு ஆசை இல்லையா?” என்றாள் குப்பு. 

“கொண்டு வந்திருந்தால் சொல்லிக் கொள்ள வேண்டியது தான்,” என்று இழுத்தாள் மாமியார். 

“இந்தக் காலத்திலே சீர் செனத்தி யில்லாமே எந்த நாட்டுப் பெண் தான் வரா? எந்த மாமியார்தான் கூட்டிக்கறா?” என்றாள் கனகம்மாள். 

இதற்கு மேல் ஆண்டாளம்மாளுக்குப் பொறுக்க முடிய வில்லை. கூட, கனகம்மாள் நாட்டுப்பெண் பணக்காரவீட்டுப் பெண்; ‘ரெட்டைச் சீர் எடுத்தவளாம்’ என்று அந்தச் சபையில் புகழ்ச்சியாய்க் குறிப்பிடப்பட்டவள். ஆகவே தன் நாட்டுப் பெண்ணை, அவள் நாட்டுப் பெண்ணுடன் ஒப்பிட்டுப் பார்க்க, ஆண்டாளம்மாளுக்குப் பொறாமைக் கனல் மூண்டது. 

“காலத்துக் கேத்தாப்போல மனுஷியா நான்? அதோ பாருங்கோ. ஓர் அலமாரி புஸ்தகம், ஒரு கட்டுக் காயிதம், ஒரு பத்திரிகைக் கூளம், பேனா மைக்கூடு இதெல்லாந்தான் அவள் பொறந்தாத்துச் சீதனம். தாயாரில்லாத தகப்பன் செல்லம். கண்டிக்கிறவா யாரு அவளை? இல்லாமற் போனால் மாமியார் எதிரே அந்தப் பெண் அப்படிப் பேனாவும் கையுமா அவ்வளவு தைரியத்தோடே உட்கார்ந்திருக்குமா?” என்று ஆத்திரத்துடன் கர்ஜனை செய்தாள். 

சுலோசனாவுக்குத் தூக்கி வாரிப் போட்டது. குடும்ப வாழ்க் கையில் அதுவே அவளது முதல் அத்தியாயம். பேனாவையும் காகிதத்தையும் அப்படியே வைத்துவிட்டு எழுந்து சமையலறைப் பக்கம் போனாள். 

“அடுப்பங்கரையிலே கலப்பத்து நாறிக் கிடக்கறது. இங்கே பத்திரிகையாம் பத்திரிகை! அதுக்கு எழுத்து பலக்கறது.” 

மேலே கூறியது ஒரு நாள் கூட்டத்தில் நடந்தேறிய வம்பின் சிறு பகுதி. இந்த மாதிரியே பல நாட்கள். 

அன்றியும் வருகிறவர்கள் தங்கள் பெண்களைப் பற்றியும், தங்கள் நாட்டுப் பெண்களின் குடும்ப நிர்வாகத் திறமையயைப் பற்றியும் புகழ்வதோடு நில்லாமல், சுலோசனாவை மறைமுகமாகப் பரிகாசம் செய்யவும் ஆரம்பித்தனர். 

இதெல்லாம் ஒன்று கூடி ஆண்டாளம்மாளை முற்றும் ஒரு புது மனுஷியாக மாற்றி விட்டது. ஏற்கெனவே பெண்கள் படிப்பிலும், முன்னேற்றத்திலும் அவளுக்குக் கொஞ்சங்கூட நம்பிக்கை இல்லை. கூட, நாட்டுப் பெண்ணே தன் கொள்கைக்கு முற்றும் மாறுபட்டவளாக அமைந்தது, தனது மதிப்புக்கே ஏதோ பங்கம் வந்து விட்டதென்று நினைக்கும்படி யிருந்தது அவளுக்கு. 

கொஞ்சங் கொஞ்சமாகக் குடும்பத்தில் ‘கசமுசல்’ ஆரம்ப மாயிற்று. 

சுலோசனா இதையெல்லாம் பாராட்டவில்லை. கிருஷ்ண சாமி தன் தாய் எதிரில் மனைவிக்குச் சலுகை காட்டாத போதிலும், தனிமையில் அவளது கலா ஞானத்தைப் புகழ்ந்து பேசித் தட்டிக் கொடுத்து வந்தான். 

தினந்தோறும் குடும்ப வேலைகளின் இடைக்காலங்களில் அவகாசம் ஏற்படும் போதெல்லாம், சுலோசனா தன் முழுக் கவனத் தையும் எழுத்திலோ படிப்பிலோ செலுத்தி வந்தாள். ஒரு நாளாவது சாயங்காலத்தில் விளக்கேற்றி வைத்துவிட்டு, லக்ஷ்மி, ஸரஸ்வதி படங்களின் முன்னிலையில் தனது வீணையை வாசித்துப் பாடாமற் போனால் அவளுக்கு அன்றிரவு தூக்கமே பிடிக்காது. 

ஒருநாள் காலை, ஆண்டாளம்மாள் தெருத் திண்ணையில் உட்கார்ந்து கூடைக்காரியிடம் பேரம் பேசிக் கொண்டிருந்தாள். வாசலில் போகும் இரண்டு மனிதரின் சம்பாஷணை அவள் காதில் விழுந்தது. 

“இந்த வீட்டில் ஒரு பெண் இருக்கிறது, தெரியுமா?‘ 

“என்ன ஆச்சரியம்? வீட்டுக்கு வீடு பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.” 

“சே! அதல்லடா. பாட்டென்றால் பாட்டா! அருமையான ஞானம். ரொம்ப இனிமையான குரல்.” 

“அடே! எனக்குத் தெரியாதே. கச்சேரி செய்கிறதா?” 

“அப்படி யெல்லாம் இல்லை. தினமும் சாயந்தரம் வீணை யுடன் பாடுகிறது. கேட்டவர்களுக்குத்தான் தெரியும் அந்த ருசி.” 

ஆண்டாளம்மாள் திடீரென்று தன் கையிலிருந்த காய்கறி களைக் கூடையில் விசிறிப் போட்டுவிட்டுப் பேரம் பிடியாதவள் போல் முணுமுணுத்துக் கொண்டே உள்ளே எழுந்து போய் விட்டாள். 

சுலோசனாவைப் பற்றித் தெருவில் போகிறவர்கள் பேசுவது அவளுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. 

அவளது குயிலிசை போன்ற சங்கீதம், தெருத் திண்ணை மேல் தினமும் குறைந்தது பத்துப் பேராவது கொண்ட ரஸிகக் கூட்டத்தைச் சிருஷ்டி செய்து விட்டது. ஆனால் இந்த விபர மெல்லாம் அவளுக்குத் தெரியாது. அவள் சங்கீத உலகத்தில் சஞ்சரிக்கும்போது, தனது ஆத்மாவை வீணை நரம்புகளிடம் பறிகொடுத்துப் பரவச மடைவாளே தவிர, வெளியுலக விவகாரங் கள் அந்தச் சமயத்தில் அவளுக்கு எட்டுவதில்லை. 

தெருத் திண்ணையில் ‘சபாஷ்’ கொட்டிக் கொண்டிருக்கும் ரஸிகர்களின் குரல் ஆண்டாளம்மாளின் செவிகளில் ஈயத்தைக் காய்ச்சி வார்ப்பது போலப் பாயும். சில சமயங்களில் அவளது கோபம் அவர்கள் மேலும் பாய்ந்து பதறும். 

தவிர, நாள் தவறினாலும் சுலோசனாவுக்குப் பத்திரிகையோ பாராட்டுக் கடிதமோ வருவது தவறுவதில்லை. பல எழுத்தாளர் களும், பிரமுகர்களும் அவள் எழுத்துக்களைச் சிலாகித்து எழுதிய கடிதங்கள் மலையாய்க் குவிந்தன. 

“ஏண்டா? இது நன்னா யிருக்காடா உனக்கு? நான் சொன்னா, தொடச்சுப் போட்டுட்டு லக்ஷ்யமே செய்வதில்லே, உன் பெண் டாட்டி. நீயும் கேள்வி முறைமை யில்லாமே திரியறே! குடும்ப ஸ்திரீக்கு யோக்யதையா படிப்பும் பாட்டும்? ஊர் முழுக்க இவளைப் பத்தியா வார்த்தை?” என்று கூச்சலிட்டாள் ஆண்டாளம்மாள். 

கிருஷ்ணசாமி பேசாதிருந்தான். மௌனமே சிறந்த வழி யென்றிருந்தானோ என்னவோ! 

ஆனால் அவன் தாய், சுலோசனாவை கண்டிக்கும்படி எச்சரிக்கும்போது மௌனம் சாதித்த கிருஷ்ணசாமி, தனிமையில் அவளது வித்தைக்குத் தாராளமாக ஊக்கமளிப்பதை மாத்திரம் நிறுத்தவில்லை. 

எப்பொழுதாவது சுலோசானவே தன் மாமியார் கண்டிப் பதைக் கண்டு, கல்வியை நிறுத்திவிடத் தீர்மானித்தால், அப்படிச் செய்வது புத்தியீனமென்று மாத்திரம் சொல்லுவான். 

ஆனால் தன் தாயிடத்தில் அவளது கல்விச் சிறப்பைப் பற்றியாவது, பெண்கள் முன்னேற்றம், மூடக் கொள்கைகள், அடிமை நிலை, சமூக ஊழல்கள் முதலிய தற்கால ஆராய்ச்சி முறை களைப் பற்றியாவது பேசி ஜயிக்க அவனுக்குப் போதிய தைரியம் இல்லை. 

நாளடைவில் முன்னுக்கு இழுக்கும் எருது ஒன்று, பின்னுக்குத் தள்ளும் எருது ஒன்று பூட்டிய சகடத்தின் கதிக்கு வந்துவிட்டது, அவனது வாழ்க்கை. 

ஆனால் அந்தச் சங்கட வாழ்க்கையும் நிலைக்கவில்லை. 

மூன்று வருஷங்கள் ஓடி மறைந்தன. கிருஷ்ணசாமி சுலோச னாவைப் பிறந்தகத்திற்கு அனுப்பும்போது, கூடிய சீக்கிரத்தில் தன் தாயைச் சரிப்படுத்தி விட்டு, அவளை மறுபடியும் அழைத்துக் கொள்ளுவதாகச் சொல்லித்தான் அனுப்பினான். 

ஆனால் சுமார் ஆறு மாத காலமாக அவனிடமிருந்து அவளுக்குக் கடிதம் வருவதும் நின்று போயிற்று. அவளுக்கு அது வரையில் வரும் கடிதங்களிலெல்லாம் அவளது வித்தையை உற்சாகப் படுத்தும் வாக்கியங்களும் சொற்களும் அபரிமிதமாக மிளிர்ந்தன. ஆகையால் கணவன் அருகில் இல்லாதபோதிலும், அவன் உத்தரவென்று சுலோசனா தனது கலையை மிகவும் இதழ் தொகுப்பு சிரத்தையாகப் போஷித்து வந்தாள். 

சில நாட்களாக அவனிடமிருந்து கடிதம் கிடைக்காதது அவளுக்கு ஏதோ விரஸமாகத் தோன்றியது. ஒருகால் தன்னிடம் கொண்ட அவனது ஆவல் குறைந்து விட்டதோ என்றுகூடக் கலங்கினாள். 

கிருஷ்ணசாமிக்கு அவன் தாயால் வேறு விதத் தொல்லை ஏற்படத் தொடங்கியது. கொஞ்சங் கொஞ்சமாக முயன்று ஆண்டாளம்மாள் கடந்த ஆறு மாதமாக இடைவிடாமல் அவனது மறு விவாகத்தைப் பற்றியே பேசி அவன் மனத்தைக் கலைக்கப் பார்த்தாள். தான் திருப்தியடைந்த ஒரு விவாகத்தில் தனது தாயைத் திருப்தி செய்விக்க முடியாத கிருஷ்ண சாமிக்கு மறு விவாகம் என்பது வேப்பங்காயாய்க் கசந்தது. 

எதிர்த்துப் பேசாதபோதிலும், அவன் மனம் தனது பக்கத்தில் இருக்க வேண்டிய பெண்ணை வீணாகத் தள்ளி வைத்து, அதே ஸ்தானத்திற்கு மற்றொரு பெண்ணைக் கொண்டு வந்து வைத்து வாழ்க்கை நடத்துவதற்கு இடம் கொடுக்க மறுத்து விட்டது. மேலும், வரப்போகும் புதிய வாழ்க்கையின் இனிய நாட்களுடன், வேறொரு பெண்ணினுடைய இன்ப காலத்தையும், அதே சமயத்தில் அதற்கு முதன்மையான பாத்தியதையும் சுதந்திரமும் ஏற்கெனவே பெற்றிருக்கும் ஒரு பெண்ணுடைய துன்ப நிலையையும் ஒப்பிட்டுப் பார்க்க அவனது நெஞ்சில் ஓர் ஆவேசம் கிளம்பியது. அந்த ஆவேசம் முற்றிப் பழுத்து அவனுக்கு அதற்கு முன் இல்லாத புதிய சக்தியையும் அளித்தது. 

சிறிது சிறிதாகத் தன் தாயின் வார்த்தைகளில் குறுக்கிடவும் தலைப்பட்டான். முடிவில் ஒரு நாள் மறு விவாகம் என்பது அசாத்திய மென்றும், இனி அதைப்பற்றி அவள் பேச வேண்டிய தில்லையென்றும் கண்டிப்பாய்க் கூறிவிட்டான். 

ஆண்டாளம்மாள் திடுக்கிட்டுப் போனாள். ஒரு நாளும் தட்டிப் பேசாத புத்திரனது குரலில் தொனித்த தீரம் அவளைத் தத்தளித்துத் தயங்கச் செய்தது. அன்று முதல் அவளிடமும் சில மாறுதல்கள் தென்பட்டன. 

ஆனால் கிருஷ்ணசாமிக்குச் சுலோசனாவைப் பற்றிப் பேச மாத்திரம் இன்னும் தைரியமில்லை. இந்த நிலைமையில் அலை பாயும் அவன் மனம் சுலோசனாவுக்குக் கடிதம் எழுதுவதையும் நிறுத்திவிட்டது. 

இந்த ஆறு மாத காலமாகச் சுலோசனாவின் ஊக்கமும் குறைய ஆரம்பித்தது. அவளது கற்பனா சக்தியும் தடைப்பட்டது. 

ஒரு நாள் மாலை கட்டாயமாகத் தான் எழுதி முடிக்க வேண்டிய ஒரு கட்டுரையைப் பற்றி யோசித்துக் கொண்டே வாசற் பக்கம் ஜன்னலருகே அவள் உட்கார்ந்திருந்தாள். எழுத்தும் யோசனையும் ஓடவில்லை. ஊர்ப் பெண்களில் சிலர் குடங்களை எடுத்துக் கொண்டு தெருவில் பேசிக் கொண்டே சென்றார்கள். அவர்கள் பேச்சு அவளை வசப்படுத்தியது. 

“என்னவோ? யார் கண்டா? தப்பில்லாமற் போனா ஏன் தள்ளி வைக்கணும்?” 

“எத்தனை பேர் எழுதல்லே? படிக்கல்லே? இதுவா ஒரு தப்பு?

“உள் மர்மம் யாருக்குத் தெரியும்? படிப்பாம், பாட்டாம்! யார் யாரோ வராளாம், போராளாம்! அவளைப் பத்தி ரொம்ப சிலாக்கியமாக்கூடப் பேசிக் கொள்கிறாளாம். இந்த மாதிரி நாட்டுப் பெண்ணை வச்சுண்டு எந்த மாமியார்தான் கொட்டுவா?” 

“அவளாம்படையான் தான் ஒண்ணும் சொல்றதில்லையாமே! அவன் கொடுத்த இடந்தானாம் இதெல்லாம்.” 

“அதெல்லாம் மலையேறிப் போச்சு. மூணு வருஷமாச்சே அவளைத் தள்ளி வச்சு. புருஷன்தானே அவன்! வேறு கல்யாணங் கூட நிச்சயமாய்விட்டதாம்.” 

சுலோசனா புழுத் துடிப்பது போல் துடித்தாள். அதற்கு மேல் அந்தச் சம்பாஷணையைக் கேட்க அவள் விரும்பவில்லை. ஓடி மறைந்தாள். 

5 

‘ஏண்டி ஜயா, பள்ளிக்கூடத்திலேருந்து இப்பத்தான் வரையா? கொஞ்சம் இங்கே வந்துட்டுப் போ, என்றாள் வாசற்படியில் நின்ற ஆண்டாளம்மாள். 

ஜயா புஸ்தகமும் கையுமாய் உள்ளே நுழைந்தாள். 

‘ஒரு நாளும் இல்லாமே என் பேருக்கு இன்னிக்கு ஒரு கடுதாசி வந்திருக்கு. எனக்கென்ன படிக்கவா தெரியும்? கொஞ்சம் வாசிச்சுச் சொல்லு. என் பிள்ளை சாயந்தரந்தான் வருவான், ஆபீஸிலிருந்து.’‘ 

“உங்க நாட்டுப் பெண் இருந்தா சௌகரியமாயிருக்கு மோன்னோ?” என்று கிண்டலாகச் சொல்லிச் சிரித்தாள் ஜயா என்னும் சிறுமி. 

ஆண்டாளம்மாள் வார்த்தையை நிறுத்திக் கொண்டு மடியிலிருந்த ஒரு கடித உறையை எடுத்து ஜயாவிடம் கொடுத்தாள். 

மங்கலம்
22-7-35 

அன்புமிக்க மாமியவர்களின் பாத கமலங்களுக்கு நமஸ்காரம். இந்த மூன்று வருஷ காலமாக எனக்கு விமோசனம் ஏற்படுமென்று நம்பி நம்பிக் காலங் கழித்தேன். வாழ்க்கையையும் கல்வியையும் அலசி அலசிப் பார்த்ததில், என் வரையில் கால தேச வர்த்த மானங்களுக் கேற்றபடிதான் கல்வி சோபித மடையும் என்ற உண்மை என் உள்ளத்தில் வேரூன்றிப் பதிந்து விட்டது. 

துணிந்து இதை எழுதுகிறேன். இன்று முதல் நான் ஒரு புதுப் பெண்; அதாவது பழைய காலத்துப் பெண். இந்தக் கடிதத்தின் கடைசியில் போடும் கையெழுத்தே என் கடைசிக் கையெழுத்து. அதற்குப் பிறகு நான் ஒரு கீறல் பேர்வழிதான் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம். 

எனது குடும்ப வாழ்க்கைக்காக என் பாட்டையும் படிப்பையும் முழுத் தியாகம் செய்கிறேன். கருணை கூர்ந்து என்னை அழைத்துக் கொள்ளப் பிரார்த்திக்கிறேன். 

இப்படிக்கு, 

என் வாழ்க்கையின் தெய்வமாக உங்களையே நம்பியிருக்கும் அடியாள்,
சுலோசனா 

உண்மையிலேயே ஆண்டாளம்மாள் மனம் கரைந்து போயிற்று. கிருஷ்ணசாமி வேறு கல்யாணம் செய்து கொள்ள மறுக்கும் பிடிவாதம் வேறு அவளது மனசில் ஊன்றிப் போய் விட்டது. அவனது தனித்த வாழ்க்கையின் பரிதாபம் அவளது தாயுள்ளத்தில் முள்போல் தைத்தது. 

சில நாட்களில் ஜயாவின் கையெழுத்து மூலமாகவே சுலோசனாவுக்கு விமோசனக் கடிதமும் போய்ச் சேர்ந்தது. 

அதிகாலை மணி மூன்று. 

சுலோசனா எழுந்து வெந்நீர் அடுப்பை மூட்டினாள். வெந்நீர் அறையின் ஒரு பக்கமாக ஓர் அலமாரியும் அதனருகில் ஒரு நீண்ட பெட்டியும் இருந்தன. அடுப்புத் தீப்பற்றிக் கொண்டது. 

பெட்டியைத் திறந்தாள். அதிலிருந்த வீணையைக் கையில் எடுத்தாள். உலகமே மௌனமயமாயிருந்தது. அவள் முகத்தில் ஒரு புதிய சோபை தெரிந்தது. கல்வியால் உண்டானதல்ல; வேறு ஒரு ஜொலிப்பு. 

ஒரு நிமிஷம் நின்று கைகூப்பி வணங்கினாள். அவள் முகம் அனாயாசமான உழைப்பின் பிறகு குருவிடம் உத்தரவு பெற்ற சீடனின் அமைதியையும் திருப்தியையும் தோற்றுவித்தது. வீணையை இரண்டாக முறித்தாள். இரண்டு துண்டுகளும் அடுப்பில் விறகுக்குப் பதிலாகப் புகுந்தன. 

அவள் நெஞ்சை இரண்டாகப் பிளந்தது போல் ஒரு வேதனை கண்டது. 

சில நிமிஷங்கள் சென்றன. வீணை மறைந்தது. அலமாரியைத் திறந்தாள். ஒவ்வொரு புஸ்தகமாக எடுத்து நெருப்பில் இடத் தொடங்கினாள். காகிதம் எரியும் வாசனை குபீரென்று கிளம்பியது. ராமையங்கார் கண் விழித்துக். கொண்டார். ஏதோ தீப்பற்றிக் கொண்டதென்று அலறிக்கொண்டு வாசனை வந்த திக்கை நோக்கி ஓடிவந்தார். 

சுலோசனாவின் செயலைக் கண்டு ஸ்தம்பித்து நின்று போனார். சுலோசனா அவரிடம் அப்பொழுது ஒன்றும் பேச வில்லை. ஆனால் மாமியார் எழுதிய கடிதத்தை எடுத்து அவரிடம் சேர்ப்பித்தாள். அதை அவர் படித்து முடித்து விட்டு அவளை உற்று நோக்கினார். அவளது தோற்றம் லோகமாதாவைப் போல் இருந்தது அவருக்கு. மறு வினாடி மௌனமாகவே அந்த இடத்தை விட்டு மெல்ல நீங்கினார். பின்னும் பல நிமிஷங்கள் சென்றன. புஸ்தகங் களும், பத்திரிகைகளும் அக்கினியில் மாய்ந்து மறைந்தன. அந்த ஹோமத் தீயில் ஜலம் நன்றாய்க் காய்ந்து பரிசுத்தமடைந்தது. அழகிய மஞ்சளைப் பூசி, அந்தப் புனித நீரில் அவள் குளித்தாள். அவளது மனத்துக்குள்ளேயே புதிய மகிழ்ச்சி தோன்றியது. 

6

“ஏண்டி சுலோசனா! உன் பேருக்கு ஏதோ ‘செக்’ வந்திருக் காம்; நூறு ரூபாயாம்; மூணு மாசத்துக்கு முன்னே ஏதோ கதைப் போட்டியிலே ஜயிச்சதாமே; அதை வாங்கிக் கொள்ள நீதான் கையெழுத்துப் போடணுமாமே, இந்தா, இந்தப் புஸ்தகத்திலே ஒரு கையெழுத்துப் போடு,” என்றாள் ஆண்டாளம்மாள். 

“எனக்கு எழுதப் படிக்கத் தெரியாதே!” என்றாள் சுலோசனா. ‘ஆனா நான் எழுதின கடுதாசியைப் படிச்சுட்டுத்தானே வந்தே?” 

“இல்லை, பக்கத்து வீட்டுப் பையன் படித்தான்.” 

மாடிப்படிகளில் நின்றிருந்த கிருஷ்ணசாமியின் கண்களில் நீர் ததும்பியது. சூரிய வெளிச்சத்தில் அந்தக் கண்ணீரில் அவனது சீர்திருத்தக் கொள்கையின் பல வர்ணங்கள் பளபளவென்று பிரகாசித்தன. 

“அடி அசடே! போதும் பிடிவாதம். நூறு ரூபாயை வாங்க ஒரு கையெழுத்துப் போட்டால் என்ன? இனிமேல் வேண்டுமானா எழுத வேண்டாம்,” என்றாள் மாமியார். 

“இல்லை, மாமி. அந்தச் சுலோசனா வேறு, நான் வேறு. இது அவளுடைய மறுஜன்மம் என்று வைத்துக் கொள்ளுங்களேன்!” என்று சொல்லிச் சிரித்தாள் சுலோசனா. 

மாமியார் மேலே ஒன்றும் பேசவில்லை. 

ஆனால் கிருஷ்ணசாமியின் கண்களில் தேங்கியிருந்த வர்ண மயமான கண்ணீர் இரண்டு துளிகளாக உதிர்ந்து மறைந்தது. 

– 1936, மணிக்கொடி இதழ் தொகுப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *