கரிப்பு மணிகள்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 24, 2024
பார்வையிட்டோர்: 2,291 
 
 

(1979ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

(இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற சமூக நாவல்)

அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12

அத்தியாயம்-7

அன்று நாச்சப்பன் பொன்னாச்சியையும் அன்னக்கிளியையும் கசடு கலந்து கிடக்கும் உப்பை, ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்குக் கொண்டு போடப் பணிக்கிறான். அவை யாரேனும் கருவாடு போடவோ, தோல் பதனிடவோ வாங்கிப் போவார்களாக இருக்கும்.

அன்னக்கிளியைப் பார்க்கையில் பொன்னாச்சிக்கு அச்சமாக இருக்கிறது. அவளுடைய கன்னத்து எலும்புகள் முட்ட, கண் விழிகள் சதையில் ஒட்டாமல் தெரிய, வயிறு குவிந்து இருக்க, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அவள் குனிந்து ‘மாங்கு’ எனப்படும் அந்தக் கசடை வாளியில் வாரிப் பெட்டியில் போடுகிறாள்.

குனிந்து நிமிர்ந்து அதை அவளால் செய்ய இயலவில்லை.

“நானே பெட்டியில எடுத்துப்போடுறேன் அக்கா…” என்று பொன்னாச்சி அவள் வேலையை இலகுவாக்க முற்படுகிறாள். 

அன்னக்கிளி தலையில் பெட்டியைச் சுமந்து கொண்டு ஒரு நடை கொண்டு போய் கொட்டுமுன் பொன்னாச்சி இரண்டு முறைகள் பெட்டியை நிரப்பிக் காலி செய்து விடுகிறாள். 

வெயில் உச்சிக்கு ஏறிக் காய்கிறது. அன்னக்கிளிக்கு மூச்சு வாங்குகிறது. நஞ்சோடையின் அருகே கூடையுடன் கீழே உட்கார்ந்து விடுகிறாள். 

”ஏனக்கா?…உடம்புக்கு என்னேனுமா?…” 

“இல்லே… எனக்கு தாவமாயிருக்கு. தண்ணி … தண்ணி வேணும்…” என்று மூச்சிரைக்க அவள் சாடை காட்டு கிறாள். பொன்னாச்சிக்கு அவளைக் காணவே நடுக்கமாக இருக்கிறது. 

தனது பெட்டியை வைத்துவிட்டுத் தொலைவில் இருக் கும் கொட்டடிக்கு ஓடுகிறாள். கொட்டடியில் இப்போது குழாயில் தண்ணீர் விடுவார்களா? அவள் ஓடி வரு வதை நாச்சப்பன் பார்த்து விடுகிறான். 

செறுக்கிவுள்ள ஏண்டி ஓடியார? வேலயப்போட் டுட்டு…” என்று நாக்கூசும் சொற்களால் வசைபாடுகிறான். 

“தண்ணி வேணும்…தாவத்துக்குத் தண்ணி. அன்னக்கிளி அக்கா தண்ணி கேக்கா.” 

“அதுக்கு, அவ என்ன ராணிமவ ராணியா? ஒன்ன அனுப்பிச்சி வய்க்கா?…கண்ட களுத்தங்களுக்கும் படுக்க விரிச் சிட்டு வயித்தச் சாச்சிட்டுவாரா! ஒருநாக்கூட ஒளுங்கா வேல செய்றதில்ல!…”

வசைகள் உதிருகின்றன. ஆனால் ‘ஐட்ரா’ ராமசாமி அங்கு சுறுப்புக் கண்ணாடி மாட்டிக் கொண்டு உப்பு வாரு கிறான். அவன் அவள் நீர் வேண்டி வந்தறிந்து வாரு பலகையைப் போட்டுவிட்டு எங்கிருந்தோ தண்ணீர் கொண்டு வருகிறான். 

“ஆருக்குத் தண்ணி வேணும்?”

“குடுங்க. பிள்ளத்தாச்சி…அன்னக்கிளியக்கா. மயக்கமா உக்காந்திட்டா…” 

வாளியும் குவளையுமாக அவனும் அவளுடன் செல்கிறான். 

அன்னக்கிளி கவிழ்ந்தாற்போல் உட்கார்ந்தபடியே முதுகு சரியக் கிடக்கிறாள். முட்டியை ஊன்றினாற்போல் மடித்துக்கொண்டு குப்புற வீழ்ந்து கிடக்கிறாள். 

“முருகா… முருகா…!” என்று அவள் மனசுக்குள் கூவிக் கொள்கிறாள். 

கீழே அமர்ந்து அவள் முகத்தை மெல்லத் தூக்கி, “இத தண்ணி, அன்னக்கிளியக்கா?… தண்ணி கேட்டியே?'” என்ற அவள் தலையைத் தூக்குகிறாள். முகத்தில் வியர்வை பெருகுகிறது. கைகள் இரண்டையும் வயிற்றில் கோத்தாற்போல் வைத்துக் கொண்டிருக்கிறாள். சற்றே நகருகையில், கீழே உப்பு மிதிலாடும். மண்ணில் அவளது நிணநீர்.. கறுப்புச் சீலைத் துண்டை நனைத்துக் கொண்டு… 

. அவளுக்கு நெஞ்சு ஒட்டிக் கொள்கிறது. 

பேரியாச்சி இருக்குமிடம் தேடி ஓடிப்போகிறாள். 

“ஆச்சி…! ஆச்சி? அங்க வந்து பாரும்… அன்னக்கிளி அக்கா… உதரமாச் சரியிது…” 

கிழவி கொத்து பலகையைப் போட்டுவிட்டு விறைகி றாள். இன்னும் வேறு சில பெண்களும் ஆண்களும் திரும்பிப் பார்த்து வருகின்றனர். 

“இவளுவ வெக்கங்கெட்ட வேசிக. வகுத்துப்புள்ள கீளவுளற வரயிலும் ஏன் சோலிக்கு வரணம்?” 

“மாசமாவலன்னான்னாலும் மானக்கேடில்ல? வூட்ட கெடந்தா என்ன?” 

“நாலு புள்ளிய, இவ என்னேய்வா? இருந்தாலும் தயிரியம், அளத்துல வந்து வுளுந்து கெடக்கலாமா?” 

ராமசாமி சற்று எரிச்சலுடன், “ஏன் தலைக்கித்தலை பேசுறிய? பலவை எதானும் கொண்டிட்டு வந்து கொட்ட டிக்குத் தூக்கிட்டுப் போகலாம் வாங்க!” என்று அங்கு வேடிக்கை பார்க்க நிற்கும் வார்முதல் கங்காணி செல்வராசை அழைக்கிறான். 

“ஏலே, நீ புள்ளப் பேறு பார்க்க வாரே! போலே! பொண்டுவ இளுத் தெரிவாளுவ. இந்தச் சிறுக்கியளுக்கு நெஞ்சுத்தகிரியம். மொதலாளி காருல ஆசுபத்திரிக்கிக் கூட்டிப் போவார்னு கூட வுழுவாளுவ”

ராமசாமி அந்த செல்வராசை ஒரு மோது மோதித் தள்ளுகிறான். 

“ஒரு ஆத்தா வயித்துல பெறக்கல நீ? அக்கா தங்கச்சி தெரியாது ஒனக்கு? உசுருக்கு அவ மன்னாடுதா…இவெ பேசுதா!” 

அவன் சந்தனசாமியைக் கூட்டிச் சென்று அலுவலகக் கொட்டடியில் கிடக்கும் ஒரு பெஞ்சியை எடுத்து வருகிறான். தலையில் சுற்றிய துண்டை எடுத்துப் போடுகிறான். இன்னும் அதைப் பின்பற்றிப் பல தலை துணிகள் விழு கின்றன. 

கொட்டிடியில் பேரியாச்சியும் அழகுவும் வடிவாம்பா வும் அவளைச் சுற்றி இருக்கின்றனர். 

நாச்சப்பன் எல்லா வசைகளையும் பொல பொலத்துத் தீர்த்துவிட்டான். அன்று திட்டப்படி வேலை நடக்கவில்லை. 

பகலுணவுக்கு அவர்கள் திரும்பும் நேரத்தில் கொட்டடி யிலிருந்து பச்சைச் சிசுவின் குரல் கேட்கிறது. அந்தக் கரிப்பு வெளியில் உயிர்த்துவத்தை எதிரொலித்துக் கொண்டு அதன் முதல் அழுகையின் ஒலி கேட்கிறது. “பொட்டவுள்ள!” என்று அழகுதான் முதலில் அறிவிக்கிறாள். பொன்னாச்சி கொட்டகை ஓரத்தில் எட்டித்தான் நின்று அதைக் கேட்கிறாள். 

“பொட்டவுள்ள…பொட்டவுள்ள…” 

“யாரோ அறைந்து அறைந்து கூறுவதுபோல் பொன் னாச்சியின் நெஞ்சில் அந்த ஒலி மோதி எதிரொலிக்கிறது. 

“பொட்டவுள்ளயா?…” என்று, ஏதோ உச்சக் கட்டத்தை எதிர்ப்பார்த்திருந்தாற் போல் நின்றவர் சப் பிட்டவராகச் சாப்பாட்டுத் தூக்குடன் செல்கின்றனர். 

ராமசாமி தான் சைக்கிளை எடுத்துக் கொண்டு எங்கோ வெளியே சென்று, தேநீரோ காப்பியோ வாங்கி வருகிறான். பிறகு உப்பு எடுத்துச் செல்ல வந்த லாரி யிலோ, எதிலோ பிள்ளை பெற்றவளைத் தூக்கிவிட்டு, ஆசுபத்திரிக்குக் கொண்டு செல்ல ஏற்பாடு செய்கிறான். கங்காணி செல்வராசுவுக்கு ஒரே ஆத்திரம். 

செல்வராசுவும் படிக்கத் தெரிந்தவன். டிகிரி பார்க்கும்: வேலைக்காரனுக்கு மாசம் சம்பளம். டிகிரி பார்த்து தொழி திறந்து மூடி வேலை செய்வது, உப்பு வாருவதை. விடக் கொஞ்சம் ‘கௌரவ வேலை என்று நினைப்பு. சட்டை போட்டுக்கொண்டு ‘ஐட்ரா மீட்டரும்’ அளவைக் குழாயுமாகத்தான் வளைய வரவேண்டும் என்று அந்தப் பணிக்காகக் கணக்கப்பிள்ளை தங்கராசுவை எப்படி நைச்சியம் செய்யப் பார்த்தான்! ஒவ்வொரு வாரமும் சம்பளத்தில் பத்து ரூபாய் பிடித்துக்கொள்ளச் சம்மதித் தான். பஸ்தர் மிட்டாயும், ஆரஞ்சியும் வாங்கிக் கொண்டு சென்று வீட்டில் வைத்தான். கடைசியில் ‘ஐட்ரா’ வேலை அந்தப் பயலுக்கு ஆகிவிட்டது. அந்தப் பயல், அறைவைக் கொட்டடியில் உப்புப் பொடி சுமக்க வேலைக்கு வந்து சேர்ந்தவன் தான். அரசியல் கட்சிக்காரர்களுடன் சேர்ந்து ஆட்டம் போடுகிறான். 

“கணக்கவுள்ள, எனன இப்படி ஏமாத்திட்டீரே…” என்றான் மனத்தாங்கலுடன். 

“அந்தாளு பெரிய இடத்து சிவாரிசு. நா பொறவு என் சேய?” என்றான் கணக்கப்பிள்னை.” 

இதற்குப் பிறகு அட்டி கிடையாது. 

செல்வராசு இப்போது ஆத்திரத்துடன் பொன்னாச்சியின் செவிகளில் விழும்படி, “இவனுக்கு அந்தப் பொம்பிள வாய்ப்பு…” என்று கூறித் தனது அவமானத்துக்கு ஆறுதல் தேடிக் கொள்கிறான். அன்று நாச்சப்பன் ‘அத்தனை மாங்கையும் வழித்துப் போட்ட பின்னரே அவர்கள் வேலை முடிந்து போகலாம் என்று கட்டளை இடுகிறான். அவர்கள் வேலை முடிக்கும்போது மணி ஏழாகி விடுகிறது. 

தம்பி, பாவம் அவனுக்குப் பசி எடுக்கும்; தூக்கம் வந்து விடும். 

அவன் அக்காளுக்காகக் காத்திருக்கையில் ராமசாமி அவனிடம், 

“நீங்க எங்கேந்து வாரிய?” என்று விசாரிக்கிறான்.

“தூத்தூடி…ஆரோக்கியமாதா கோயில்ல அதுக்குப் பின்னால போவணும்…” 

“ஒங்ககூட ஆரும வாரதில்ல?” “இல்ல….” 

“அப்பச்சி, அம்மா இருக்காவ?” 

“அப்பச்சிக்குக் கண் தெரியாது. அம்மா செத்தும் போச்சு. சின்னாச்சி அளந்து சோலி பாக்குது…” என்று பச்சை விவரங்கள் தெரிவிக்கிறான். 

பொன்னாச்சி வந்த பிறகு அவனும் அவர்களுடன் பாலம் வரையிலும் சைக்கிளுடன் நடந்து வருகிறான். ‘செவந்தியா புரத்தில்தான் இருப்பதாகவும், தெரிக்காட்டைத் தாண்டும். வரையிலும் உடன் வருவதாகவும் கூறி வருகிறான். அங்கு ஒரு கடையில் அவர்களுக்குத் தேநீர் வாங்கித் தருகிறான். பொன்னாச்சிக்கு முதலில் தயக்கமாக இருக்கிறது. யாரும் எதுவும் பேசுவார்களோ என்று அஞ்சுகிறாள். அவளையும் இணைத்துச் செல்வராசு பேசிய சொற்கள் மென்சதையில் உப்பாய் வருடுகின்றன. 

“வாங்கிக்கம்மா,ஏ,பயமாயிருக்கா? தம்பி, நீ சொல்லு இன் அக்காளுக்கு! நா ஒண்ணுஞ் செஞ்சிர மாட்டே….”

அவள் பிறகு தேநீரை வாங்கி அருந்துகிறாள், தன ஆயுளில் அத்தகைய இனிமையை அநுபவித்ததில்லை என்று தோன்றுகிறது. 

அவர் வீட்டுப்படி ஏறியதும் மாமன் வந்திருக்கும் குரல் கேட்கிறது. 

“இப்பதா வாரீங்களா? இந்நேரமா ஆவுது? எட்டடிக்கப் போவுது?” 

“இன்னுக்கு அளத்துள ஒரு பொம்பிள, புள்ள பெத்திட்டா” என்று செய்தியவிழ்க்கிறான் பச்சை. 

“அப்புறம்?…” என்று மாமா வியந்து பார்க்கிறார்.

“எல்லாரும் வேலையவுட்டுப் போட்டு வேடிக்கை பாத்திட்டு நின்னிட்டா கண்டிராக்ட் வரப்பு உப்பு தட்டு என் கூறும் மேட்டுக்குப் போவாமவுட மாட்டேனிட்டா பொன்ரைச்சிக்கு சட்டென்று நினைவு வருபவளாக, நீங்க எப்ப வந்திய மாமா, மாமி, பிள்ளையள்ளாம் சொவமா? ஞானத்தைதன்னாலும் கூட்டி வரப்படாதா?” என்று வினவுகிறாள். 

அவள் பரபரப்பாகப் பேசியே கேட்டிராத மாமாவுக்கு அவள் முற்றிலும் மாறிப் போயிருப்பதாகத் தோன்றுகிறது. 

“நானிங்க சாயங்காலம் அஞ்சு மணிக்கு வந்தேன். யாரும் இல்ல. பெறகு வீட்டுக்கார ஆச்சி சொன்னாவ. நீங்க வர ஆறு மணியாவுன்னு. ஒங்க மாமி சொன்னா, அவப்பச்சிக்கு ஒடம்பு சரியில்லன்னு கூட்டிப் போனான்னா சரி. ஒடம்பு நல்லானதும் வந்திடுவீங்கன்னு இருந்தேன். பிறகு இன்னிக்கு இங்க வர சோலி இருந்தது. சுசய்ட்டி விசயமா வந்தா நீங்க வேலய்க்கிப் போயிருக்கிய…” பொஸ்னாச்சிக்குத் தான் குற்றவாளியாக நிற்பதாகத் தோன்றுகிறது. 

“நீங்க தப்பா நினைச்சுக்க வேண்டாம் மாமா. இங்க சின்னம்மாக்கும் ரொம்ப கஷ்டமாக இருந்தது. எத்தினி காலந்தா ஒத்தருக்குப் பாரமா இருக்க? பொறவு இந்த வீட்டுக்கார ஆச்சிதா பனஞ்சோல அளத்துல அட்வான்க போனசு எல்லாம் கெடய்க்கும்னு வேலைக்கு சேத்து விட்டா…” 

“அட… பொன்னாச்சியா இம்புட்டுப் பேச்சுப் பேசுறா?” என்று அவர் கேட்பது உண்மையில் பாராட்டா, அல்லது இடக்கா என்று புரியவில்லை. 

“இப்படியேதான் ஆள ஏமாத்தறானுவ, ஏத்தா ஆடு நயிதுண்ணு ஓநாய் அழுமா? அட்வான்சாம், அட்வான்ஸ்? படிக்கிற பருவத்துப் பிள்ளைய எல்லாம் ஆசைக்காட்டி மடக்கிப் போட்டு உப்புச் செமக்க வைக்கிறானுவ. காது குத்து, கண்ணாலம். காச்சி, மொதலாளி பணம் கொடுப் பான்னு கங்காணிய குழையடிப்பானுவ, இந்தத் தொழிலாவி யாரானும் முன்னுக்கு வந்த கதை எங்கயானும் உண்டா? செந்திலாண்டவ அளத்து முதலாளி, நாங்க கூட்டுறவு உற்பத்தி விற்பனைத் தொழிலாளர் சங்கம்னு நூத்தம்பது ஏசிகருக்குப் பட்டா வாங்கையிலே அவனும் கட்டுக்குத்தவை நூறு ஏக்கர் வாங்கினா, அப்பமே தெரியல எங்களுக்கு. அவன் வாக்கா, ஓடைக்கு அப்பால வாங்கினா. இப்ப, அவன் ஆயிரம் ஏக்கருக்கு மேல சேத்துட்டான்; வார்முதல் தொழில் பண்றா. குத்தாலத்துல பங்களா, கொடைக்கானல்ல பங்களா, செந்தியாண்டவனுக்கு சேவை பண்ணப் போனா அங்க ஒரு பங்களா… பொண்ணு பிள்ளயெல்லாம் அமெரிக்கா வுக்கும் ஜர்மனிக்கும் போறா, ஊரில் இருக்கிவ தொழிலை யெல்லாம் வளச்சிப் போட்டுக்கிறான். இப்ப உப்புத் தொழிலாளி நீரு-நீருன்னுதா வெச்சக்குவமே. ஒரு பான சோத்துக்கு ஒரு சோறுதான் பதம்? கண்ணு வெள்ளப்பட வழிஞ்சி ஒண்ணில்லாம உக்காந்திருக்கீரு…” 

மாமாவுக்கு ஆவேசம் வந்துவிட்டதென்று பொன்னாச்சி நினைக்கிறாள். அவள் பேசத் தொடங்கினால் இப்படித் தான் பேசிக்கொண்டு போவார். ஆனால் வீட்டில் மட்டும். அவர் பேச்சு எடுபடாது. 

“சொம்மா கெடந்து சலம்பாதீம், மொதலாளி தொழி லாளிண்டு. அவிய மொதலாளியா. இருந்து இத்தினி பேருக்கும் கூலி கொடுத்துத்தா காக்கஞ்சிக்கின்னாலும் அடுப்பு புகையிது. ஒங்களுக்குள்ள ஒத்துமயில்லாதப்ப அதப் பேசி என்ன பிரேசனம்? சங்கக்கார அத்தினி பேரும். அளத்துல பாடுபட்டு ஒத்துமையா நிக்கிறியளா? மூடமுக்கா ரூவாயிண்டு இங்க வாங்கி இவனுவளே மத்தவனுக்கு விக்க துரோகம் செய்யிறா” என்று மடக்கி விடுவாள். அவரால் மறுபேச்சுப் பேசமுடியாது. 

மருதாம்பா கருப்பட்டிக் காப்பியை இறுத்து, வட்டக் கொப்பில் ஊற்றி மாமனுக்குக் கொண்டு வந்து வைக்கிறாள். அந்தப் பளபளக்கும் ‘வட்டக் கொப்பி’ வகையறா பெரியாச்சி யிடமிருந்து பாஞ்சாலி கேட்டு வாங்கி வந்ததென்று பிறகு தான் பொன்னாச்சி புரிந்து கொள்கிறாள். உறைக்கிணற்றி லிருந்து நீர் கொண்டு வந்து மேல் கழுவிக் கொண்டு மசாலை அரைத்துக் கொடுக்கிறாள் பொன்னாச்சி. 

மாமா இன்னும் பேசிக்கொண்டே இருக்கிறார். காபி குடித்தாகிவிட்டது. 

“அளத்துல ஒருத்தி பிள்ள பெறுறவரய்க்கும் ஏன் வேல செய்யிதா? கொஞ்சம் மனுசாபிமானத்தோட பேறு காலத்துக்கு அலவன்சு மாதிரி ஏதாவது கொடுக்கிறா வளா? இவங்களுக்கு அதனாலே கொறஞ்சிடுமா? உப்பு நட்டம் வந்தா மீனுல லாபம் வரும். மிசின் போட்டு வாங்கிவிட்டிருக்கா. மீனுல நட்டம் வந்தா காடுகரை வச்சிருக்கா. காபித் தோட்டம் வாங்கறா பணம் பணத் தோட சேரச் சேர சுயநலம் அதிகமாகி மனிசாபிமானம் போயிடும் போல இருக்கு. ஒரு கூலின்னு நிர்ணயம் செஞ்சா, எல்லா அளக்காரனும் அதெக் குடுக்கிறாவளா?  எடயில் கண்ட்ராக்டுன்றா. ஆடுமாடுங்கள சப்ள பண் றாப்பல தொலாளிங்களை வளிச்சிட்டுப் பணம் பண்றா. மொதலாளிக்கும் தொழிலாளிக்கும் நடுவ இவெ கமிசன்• இதுக்குச் சட்டம் கெடயாது. சரிதானேம்மா?” சின்னம்மா வட்டக் கொப்பியைக் கையில் எடுத்துக் கொண்டு “அதுக்கு என்னேயலாம்? கூலி ரேட்படி குடுக்கிறவங்ககிட்ட மேகி ‘கொண்டு முக்காத்துட்டுக் கிடையாது. மழக்காலம், தீவாளி, பண்டியல் போனசு, சீலன்னு ஒண்ணு கெடயாது. மே நாளு சுதந்தர நாளு லீவுகூடக் கெடயாது. அதுக்கு இது தாவில் யில்ல?” என்று கேட்கிறாள். 

“நீங்க எந்த அளம்?” 

“கருவேலக் காட்டு அளம். திருச்செந்தூர் ரோடில யக்கந்தா. பாலெந்திரும்பினா வந்துடும்; இங்கதா அஞ்சு வருசமா வேல. இவியளும் செய்நத்துக்கு வந்தா இப்பவும் லேசா *தொழி வார கொள்ள ரெண்டில ஒண்ணில குடுப்பா. வாருபலவை போட்டிட்டு தானிருந்தாவ. கங்காணி ஒருத்தர்னு இல்லாம மாறிட்டே இருப்பம். கால் கொப்புளம் வந்து ஒரு நா, ரெண்டு நான்னா போகாம இருந்தா ஒண்ணில்ல. போன வருசம் இந்தப் புள்ளக்கி பேதி காய்ச்சல் வந்து பத்து நா சோலிக்குப் போகல. கங்காணி வேற ஆள் எடுத்திட்டா. பொறவு. வேற கங்காணி ஒரு ரூவாக் கூலிக் குறச்சிட்டுக் குடுத்தா ஒரு நாளக்கி… என்ன சொல்றியே?” 

”என்னத்த சொல்றது? முதலாளியளுக்கு தொழிலாளிய ஒத்துமையில்லாம இருக்கிறதேதா லாபம்.  யூனியன் தலைவர்னு யாராலும் செல்வாக்கா தலையெடுத்திட்டா, அவனை ஓடனே வாய்க்கரிசி போட்டு, அவம் பக்கம் இழுத்திடறா. சொல்லி பிரேசனமில்ல?” 

சாப்பாடு ஆனதும் மாமா கிளம்பிவிடுகிறார். 

“ரா இருந்துட்டுக் காலமே போவலாமே?” என்று அப்பச்சி மரியாதையாகக் கூறுகிறார். 

“இல்ல ஒரு ஆளப் பாக்கணம், ஒம்பது மணிக்குதான் வீட்டுக்கு வருவான்னா. நா வாரே… பொன்னாச்சி?… பதனமா இருந்துக்க எல்லா இருக்காவ, இருக்கிறம்ன்னாலும் அவவ தன்னத்தானே பேணிக்கணும். தயிரியமாயிருந்துக்க. பிறகு முருகன் இருக்கிறான்!” என்று அறிவுரை கூறிக் கொண்டு நடக்கிறார். 

பச்சை அதற்குள் படுத்துவிட்டான். அவனை எழுப்பி வருகிறாள் பொன்னாச்சி. 

“லே தம்பி. ஒளுங்கா பெரியவங்க சொன்ன பேச்சைக் கேட்டு நடந்துக்க; வேண்டாத சகவாசத்துக்குப் போகாத, வாரன் மாப்பிள! வரேம்மா…!” 

அவர் படியிறங்கிச் செல்லும் வரையிலும் பொன்னாச்சி உடன் வந்து திரும்புகிறாள். 

அத்தியாயம்-8

ராமசாமி வேலை முடிந்ததும் நேராகக் குடிசைக்குத் திரும்பமாட்டான். தலைத்துணியை அவிழ்த்துப் போட்டுக் கொண்டு படிப்பகத்துக்குச் செல்வான். கந்தசாமியின் தநீர்க்கடையில் தொழிலாளரைச் சந்தித்து நிலவரம் பேசுவான். ஒரு சராசரி உப்பளத் தொழிலாளியில் இருந்து அவன் மாறுபட்டவன். 

அவன் துவக்கப்பள்ளிக் கல்வி முடித்து ஆறாவதில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் அவன் தந்தையின் ஆதரவு குடும்பத்துக்கு இல்லாததாயிற்று. அவனுடை தந்தை சாத்தப்பனுக்கு அவனுடைய அம்மாளுக்கே படிப்பு சொல்லிக் கொடுக்க வேண்டுமென்ற ஆசை இருந்தது. அளத்தில் வார்முதல் தொழிலாளியாக இருந்த அவர் தொழி லாளிகளைக் கூட்டிச் சங்கம் சேர்த்து, உரிமை கோரும் முயற்சிகளில் ஈடுபட்டு முன்னின்று உழைத்தவர். அந்நாளில் தொழிலாளர் தலைவராக இருந்த அங்கமுத்துவை அவர்களுடைய குடிசையில் அடிக்கடி பார்க்கலாம். சிவப்பு வண்ணத்தில் அச்சிட்ட துண்டு நோட்டீசுகளைச் சிதற விட்டுக் கொண்டு அவன் தந்தை சைக்கிளில் செல்வதை அவன் பார்த்திருக்கிறான். எழுத்துக் கூட்டி அதைப் படிக்க முனைந்திருக்கிறான். 

“தொழிலாளத் தோழர்களே, எழுச்சி பெறுங்கள்” என்ற வாசகங்கள் அன்றே அவனுக்குப் பாடமானவை. பிறகு தந்தையை ஒரு நாள் போலீசு பிடித்துச் சென்றதும் தங்கச்சியையும் அவனையும் அல் அயலில் விட்டு விட்டு அவன் அம்மா கருப்பிணியாக இருந்த அம்மா, தூத்துக்குடிக்கும் வக்கீல் வீட்டுக்கும் அலைந்ததும் அவனுக்கு இன்னமும் மறக்க வில்லை. தங்கச்சி காய்ச்சல் வந்து இறந்து போயிற்று. அம்மா பிள்ளை பெற்று வெகுநாட்கள் படுக்கையிலிருந்தாள். பிறந்த குழந்தையும் இறந்து போயிற்று. சண்முகம் கங்காணி, அவனை அறைவைக் கொட்டடியில் ஒன்றே கால் ரூபாய் கூலிக்கு உப்புப்பொடி சுமக்கக் கொண்டுவிட்டார். அந்தக் காலத்தில் அவர்கள் வீட்டுக்கு அவரைத் தவிர வேறு யாரும் வரமாட்டார்கள். பிறகு மூன்று வருடங்கள் சென்ற பிறகு ஒருநாள் ராமசாமி தலைக்கொட்டையும் தானுமாகக் காலையில் வேலைக்குக் கிளம்புகையில் தாடி மீசையுடன் ஒரு ஆள் அவர்கள் வீடு தேடி வந்ததைக் கண்டான். அவர் அவனைச் சிறிது உற்றுப் பார்த்து விட்டுக் கட்டி அணைத்துக் கொண்டு கண்ணீர் உகுத்தார். 

அவனது நினைவில் இப்போதும் அவருடைய காய்த்துச் செதில் செதிலாகப் போயிருந்த உள்ளங்கை உறுத்திக் கொண்டிருக்கிறது. 

அவரை அப்பா என்றே அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. 

அங்கமுத்துவுடன் வீட்டுக்குள் அப்பா எவ்வளவோ பேசி அவன் கேட்டிருக்கிறான். ஞாயிற்றுக் கிழமையானால் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு ஒவ்வொரு தொழிலாளியாகத் தேடித் செல்வார்கள். அவர் ஓய்ந்திருந்தே அவன் அதற்கு முன் கண்டிருக்கவில்லை. ஆனால், சிறையில் இருந்து வந்த பின் அவர் பேசியதாகவே அவனுக்கு நினைவில்லை. முழங் காலைக் கட்டிக் கொண்டு குடிசைக்குள் உட்கார்ந்திருந்தார். 

மூன்று நாட்களுக்குப் பிறகு, காலையில் அவர் படுத்த இடம் காலியாக இருந்தது. அக்கம் பக்கமெல்லாம் தேடினார்கள். 

சண்முகக் கங்காணிதான் அவர்களுக்கு அப்போதெல்லாம் ஆதரவாக இருந்த ஒரே மனிதர். தானுண்டு, தன் தொழி லுண்டு என்று இருப்பவர். அவன் தாயிடம், “தங்கச்சி, ஊர்க்குருவி பருந்தாவ ஏலுமா? நாம் ஊர்க் குருவியாலப் பெறந்திருக்கம். இப்படிக் குழந்தைகளையும் குடும்பத்தையும் வச்சிட்டு அவன் இந்த வம்புக்கெல்லாம் போலாமா?” என்பார். அப்பன் அந்த நல்ல நாட்களில் அவரைக் கண்டாலே ஏசுவாராம். 

“தொட நடுங்கிய. ஒங்களாலதா ஒத்துமையும் விழிப்புணர்ச்சியும் இல்லாத போகுது” என்பாராம். ஆனால் சண்முகக் கங்காணி அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. அவர்தாம் தேடினார். 

அம்மா திருச்செந்தூர்ப் பக்கம் சோசியரிடம் போய்க் குறி கேட்டு வந்தாள். அவனையும் உடன் அழைத்துச் சென்றாள். 

கறுத்த முடித் தலையில் எண்ணெய் பளபளக்க குங்குமப் பொட்டும் கழுத்தில் பல வகை மணி மாலைகளுமாக அமர்ந்திருந்து சோதிடர், சோழிகளை வைத்துப் பார்த்து அப்பன் இன்னும் மூன்றே நாட்களில் திரும்பி விடுவார் என்றார். ‘ஒரு பெண் பிள்ளை மயக்கு; அவள் சூதுதான், வடக்கே போயிருக்கிறார் வந்தாக வேண்டும்’ என்று புருவங் களை நெறித்து, உதடுகளைக் குவித்து விவரங்கள் மொழிந்தார். 

அம்மா யாரோ பெண் பிள்ளையை நினைத்துக் கைகளை நெறித்துச் சாபமிட்டாள். திரும்பி வரும் போது… பச்சையம்மன் கோயில் நவராத்திரிச்சீர் பொங்கல் வைக்கப் பெண்களெல்லாரும் கூடியிருந்தார்கள். பாட்டுப் போட்டிருந் தார்கள். ராமசாமிக்கு அப்போதெல்லாம் சினிமாப் பாட் டென்றால் உயிர். அம்மா, கர்ப்பூரம் வாங்கிக் கொளுத்தி வைத்தாள். விழுந்து விழுந்து கும்பிட்டாள். நம்பிக்கை யுடன் வீடு திரும்பினார்கள். 

காலையில் அவன் ஏழுமணிக்கு வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருக்கையில் சண்முகக் கங்காணியும் கணக்கப் பிள்ளையும் அவர்கள் குடிசைக்கு வரக் கண்டான். அம்மா பரபரத்துக் குடிசைக்குள்ளிருந்து வெளிவந்து பார்த்தாள். 

“மக்கா…” என்ற கங்காணி கண்களைத் துடைத்துக் கொண்டார். 

கடற்கரையில் அப்பச்சியின் உடல் ஒதுக்கப்பட்டிருந்தது. மீன்கள் கண்களைக் கொத்தியிருந்தன. 

அவர் இறந்தபோது அவர்களுடன் இருந்து உண்மை யாகக் கண்ணீர் வடித்தவர் சண்முகக்கங்காணி தாம். 

அப்பா திரும்பி வந்தபின் நன்றாக உடல் தேறிப் பழைய வலிமையைப் பெற்றிராத போனாலும், அன்பும் அரவணைப் யுமாகச் சில நாட்களேனும் அவர் இருந்திருந்தால் அவருடைய இழப்பை ராமசாமியும் தாயும் அதிகமாக உணர்ந்திருப் பார்கள். ஆனால், அப்படி எதுவும் இல்லாமல் அவர் திரும்பியதும், இறந்து போனதும் கனவில் நிகழ்ந்த சம்பவங் களாக நினைவில் ஆழமாகப் பதியாமல் போய்விட்டது. ராமசாமியின் வாழ்க்கையை அந்த நிகழ்ச்சி அப்போது பாதிக்கவில்லை. 

சண்முகக் கங்காணிக்கு நீர்க்கோவை, வாதம் வந்து அவரைப் படுக்கையில் தள்ளிவிட்டது. அவருடைய தம்பி மகன் ஒருவன் தூத்துக்குடிச் சந்தையில் கடை வைத்திருக்கிறான். அவனிடம் சென்று தங்கி வைத்தியம் செய்து கொள்ளப் போய்விட்டார். சண்முகக் கங்காணிக்கு மனைவி இல்லை. இரண்டே புதல்வியர்; அவரிகளைக் கட்டிக் கொடுத்து அவர்கள் பாறை உடைத்து சல்லி எடுக்கும் குத்தகை வேலை செய்யும் கணவர்களுடன் வடக்கே சென்று விட்டனர். ஆனால், கங்காணி அளத்தை விட்டுச் செல்லு முன் அவனை உப்பு அறவைக் கொட்டடியிலிருந்து வெளியே உப்பு வாரும் பணிக்கு அமர்த்திச் சென்றார். 

“ஏலே, நீயுண்டு ஒஞ்சோலியுண்டுண்ணு நடந்துக்க. வேற எந்த சாரிப்பும் வேண்டா, ஒன்னப்ப வம்புதும்பு செய்யப் போயித்தா இந்த மட்டும் வந்ததெல்லா…” என்று அறிவுரை செய்து விட்டுப் போனார். அப்போது அவனுடைய இளம் மனதில், வாலிபம் கிளர்ந்த முரட்டுத்தனம் முத்திரை பதிக்கவில்லை. வெளியாரின் பேச்சும் நடப்பும், தந்தை ஏதோ பயங்கரமான குற்றத்தைச் செய்ததால் சிறைக்குச் செல்ல வேண்டி வந்ததென்றும், அவரே தாம் தவறுக்கு. வருந்தி, தனது ஆயுளை முடித்துக் கொண்டார் என்றும் அவன் கருதுமளவுக்கு அநுதாப ஈரமில்லாமலிருந்தன. தந்தை செய்த பயங்கரக் குற்றம் என்னவென்பதை அவன் வாலிபனாக வளர்ந்து வர, உப்பளத்தில் பெறும் அநுபவங்கள், வேலைச்சூழல் இவற்றின் வாயிலாகவே உணர்ந்து கொண்டிருக்கிறான். 

ஐந்தாண்டுகளுக்கு முன் ஒருநாள் அவன் அளத்தில் பணியெடுத்தபின் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒரு ஆள் அவனைப் பார்த்துவிட்டுச் சட்டென்று இறங்கினார். 

“நீ…யாருலே, பாத்தாப்பல இருக்கு?” 

அவன் கூச்சத்துடன் அவரைப் பார்த்தான். கையில் தங்கப்பட்டை வடிகாரம் கட்டி இருந்தார் வெள்ளைச் சட்டை போட்டுக்கொண்டு, நடுத்தர வயசுக்காரராக இருந்தார். 

“…நீங்க யாரு…?” 

“எம்பேரு தெரியுதா? தனபாண்டியன்னு…” 

அவன் கேட்டிருக்கிறான். தொழிலாளர் சங்கத்தின் ஒரு தலைவராக அவருடைய பெயர் பிரபலமாகிக் கொண் டிருந்தது. ஒருவேளை அப்பச்சியைத் தெரிந்திருக்குமோ?…. 

“நான் சாத்தப்பன் மகன்…” 

“அதா, ஒங்கப்பா முகம் அப்படியே இருக்கு. வீட்டில அம்மா சுகமா? தங்கச்சியக் கட்டிக் குடுத்தாச்சா…” 

அவனுக்குக் குழப்பமாக இருந்தது. “தங்கச்சி இல்ல… எறந்து போச்சு….” 

“அடாடா…” என்றவர், அவன் தகப்பனார் தொழி லாளர் சங்கம் தழைக்க எப்படியெல்லாம் பாடுபட்டார் என்று சொல்லிக் கொண்டே அவனுடன் நடந்தார். உண்மையில் செல்வாக்குடன் அவர் தொழிலாளரை ஒன்று சேர்த்ததே முதலாளிக்குப் பிடிக்காமல், அவர் மீது சதிக்குற்றம் சுமத்திச் சிறையில் தள்ளினார்கள். இப்போது, உப்பளத் தொழி லாளரை மீண்டும் ஒன்று சேர்த்து, அவர்களுக்கு ஒரு நல்ல. சங்கத்தை அமைக்க முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன என்றெல்லாம் எடுத்துரைத்தார். 

வாயிலில் சைக்கிளை வைத்துவிட்டுக் குனிந்து அவரும். குடிசைக்குள் வந்தார். 

“அம்மா! ஒங்களப் பாக்க ஒராள் வந்திருக்கு!”

அம்மா சிறு சிம்னி விளக்கைப் பொருத்தினாள்.

“அண்ணி, எப்படிப் போயிட்டிய? என்ன காபகம் இருக்கா?…” என்று நெகிழ்ந்த குரலில் வினவினார். 

அம்மா சங்கடத்துடன், ” இல்லாம என்ன..” என்று  திடீர்த் துக்கத்தை வரவழைத்துக் கொண்டு கண்களை முன்றானையால் துடைத்துக் கொண்டாள். 

“தனபாண்டியம்மா, அவரு பெரிய தலைவர், எவ்வளவு பாடுபட்டார்? இந்தத் தொழிலாளிகள் ஒண்ணு சேரணும், அவர்களை அழுத்தும் முதலாளித்துவத்தைத் தட்டிக் கேட்க ஒரு நாக்கு வேணும்னு அவர் பாடுபட்டு உயிரையே பணயம் வச்சிட்டா. அண்ணி,நா இன்னிக்கு உயிரோட உங்கமுன்ன வந்து நின்னு பேசுறேன்னா, அது அன்னிக்கு நீங்ககாட்டின கருணையாலதான். போலீசு என்னைக் சுண்ணிவச்சுத் தேடினப்ப, அடுப்புவச்ச எடத்துல பலகைபோட்டு துணியப் போட்டு என்னப் படுக்கச் சொல்லி அண்ணனும் நீங்களும் எடங்கொடுத்தீங்க, ஒங்க சோறும் உப்பும் தின்னு மூணுநாள் இருந்தேன்.அதெல்லாம் எப்படி மறக்கும்?” என்று கண்ணீர் வடித்தார். 

அம்மா எங்கோ முகட்டைப் பார்த்தாள். “எனக்கு ரொம்ப விசனமான விசயம், சாத்தப்பன் தற்கொலை செஞ்சிட்டான், புத்திசாதினமில்லைன்னு சொல்லிக்கிறாங் களே, இதுதான் புரியல. இதில ஏதோ மருமம் இருக்குன்னு படுது. நீங்க அன்னிக்கு என்ன நடந்ததுன்னு வெவரமாச் சொல்லணும். சும்மா விடக்கூடாது இதை. என்றார் தடுபாண்டியன். 

நடந்து ஐந்து வருஷங்களுக்குப் பிறகு. இப்போது இதை இவர் ஆராய் வந்திருப்பதன் நோக்கம் என்ன என்று ராமசாமி முதலில் திகைத்தான். 

“தொழிற்சங்கத்தை இப்ப பலப்படுத்தணும். இப்ப உப்பளத்தொழில் மின்னவிடவும் கஷ்டம். இந்தப் பனஞ் சோலை அளம் எவ்வளவு பெரிசாப் போச்சு? முன்ன அந்தக் காலத்துல துலாவச்சு அடிச்சா. அஞ்சு பாத்தி ஆறு பாத்தி ஒரு மனுஷன் வாருவான். இப்ப, மிசின் தண்ணியை எரச்சுக் கொடுத்து. அதே ஒரு ஆள் முப்பத்தஞ்சி பாத்தி வாருறான். கூலி அந்த அளவுக்கு உசந்திருக்கா?” என்று கெட்டித்துப் போன உப்பை உதைத்து உலுக்குவதுபோல் கேட்டார். 

கலகலவென்று அது குறைபாடுகளாக அப்போதுதான் ராமசாமிக்கு உறைத்தது. 

அம்மா எதுவும் பேசாமலே நின்றிருந்தாள். பிறகு நாத்தழுதழுக்க, “ஒங்கள நான் ரொம்பவும் கேட்டுக்கறேன். பையன் ஏதோ வேலய்க்கிப் போயிட்டிருக்கா. அவனுக்கு ஒரு கல்யாணம் கட்டி குழந்தை குட்டி பிறந்து விளங்கணும். மொதலாளிமாரெல்லாம் முன்னப்போல இல்ல. இப்பல்லாம் அவிய காரில் வருவா; போவா. தொழில்காரங்க ஆம்பளயா, பொம்பளயான்னுகூடப் பாக்கிறவங்க இல்ல. போன வருசம் முச்சூடும் மழ இல்ல. உப்புக்கும் வெல இல்லதா. ஆனா இங்க தட்டில்லாம கூலி கொடுத்தாவ; வூடு மோடு போடணுன்னாலும் ஏதொ கல்யாணச் செலவுன்னாலும் பணம் குடுப்பா.ஒங்க கிட்டச் சொல்ற, ராமசாமிக்கு மாசச் சம்பளமாவே ஆக்கி வச்சிடறேன்னு கங்காணியாரே அப்பவே சொல்லிருக்கா…” என்றான். 

அவர் சிறிது நேரம் வாயடைத்துப் போனாற்போல நின்றார். 

“நீங்க ரொம்பப் பயப்படுறிய. இதெல்லாம் சூழ்ச்சி. நியாயத்தை ஒருத்தன் கேட்கத் தலையெடுத்தால் அவனை மடக்கிவிடுவார்கள். சாத்தப்பன் தற்கொலை செய்து கொண்டார் என்பது வெறும் கதை. அவரை அறிந்தவர் யாரும் நம்பமுடியாது. அவர் இறந்த பிறகு அந்தப் பொம்புள் வந்தாளா?” 

அம்மா தலையை வேகமாக ஆட்டினாள். “அவ வெவரமே பொறவு எவரும் பேசியதில்ல. ஆருக்கும் ஏதும் தெரியாது. அதுக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமுமில்ல. ஏதோ கேட்பார் பேச்சக்கேட்டு முதலாளிக்குத் துரோவம் செய்திட்டமேன்னு ஏக்கம் புடிச்சே பிரும்மமாப் போயி தன்னையே முடிச்சிட்டாவ. இதுக்கு ஆரை நோவ? .. நீங்க எதுவும் பேசி இப்ப இந்தப் பையனுக்குத் தீம்பா எதுவும் வரவச்சிடாதீக…ஒங்களக் கும்புட்டுக்கிறேன்…” 

அம்மா அன்று இவர் காலில் வீழ்ந்துதான் கும்பிடவில்லை. 

தனபாண்டியன் அன்று அதற்குமேல் பேசவில்லை. 

ஆனால் அவர் சென்றபின் அம்மா அவனிடம், “மக்கா; தெளிஞ்சுகெடக்கிற மனசை அவெ குட்டத் தண்ணியாக் கிடுவா. இப்பிடித்தே காயிதமும் அதும் இதும் கொண்டுப் போவாக, ராவோட ராவா மீட்டங்கி பேசும்பாவ. அங்கமுத்துன்ற அந்தாளு கூடதா இவ வருவா. இவயெல்லாம் வாரதுக்குமுன்ன, உங்கய்யா, அவர் சோலியுண்டு அவருண்டுண்ணுதா இருந்தா. இவல்லாம் விடமாட்டா. சொதந்தரம் வந்து ஆருக்கென்ன? முதலாளியளுக்குத்தா சொதந்தரம்பா…கடோசில என்ன ஆச்சி? இவியளத் தூண்டிட்டு உள்ள போக வச்சிட்டு, அவனுவ தப்பிட்டாக மக்கா. நீ இவியக் கூடச் சிநேகம் ஒண்ணும் வச்சுக்காத,  வேண்டாம்.* 

எலும்புகள் முட்ட, எண்ணெய்ப் பசைகன்றிச் சுக்காயி வறண்ட தோலில் கீறல்களுடன் அம்மா கெஞ்சிய போது ராமசாமி குழைந்து போனான். கடலலை மோத வருவது போலும், அவன் விவரமறியாக் குழந்தையாக எதிரிட நிற்பது போலும் அவள் அஞ்சி அவனைப் பற்றிக் கொள்ளப் பார்த்தாள். 

ராமசாமி அப்போது கேட்டான். 

“அந்தப் பொம்பிளன்னாரே அவரு. அது ஆரு அம்மா?’ அம்மா அவனைத் திரும்பிப் பாராமலே பதிலளித்தாள்• “அவ ஆரோ. நமக்கும் அவளுக்கும் ஒரு தொடிசுமில்ல நீயாரும் பேசுறதக் கேக்கண்டா. நமக்கு உள்ளது போதும் நல்ல பெண்ணா ஒனக்குக் கட்டி வய்க்கணும்…”

அம்மா அப்படித் தீர்த்துவிட்டாலும் அவனால் ஒதுங்கி விடுபட்டுவிட முடியவில்லை. உப்பைக் கக்கி விட்டு வரும் நஞ் சோடை நீரும் கரிப்பாகத் தானே இருக்கிறது? 

ராமசாமியிடம் சாடைமாடையாக அக்கமும் பக்கமும், தொழில் செய்யும் இடங்களிலும் ‘அந்தப் பொம்பிளை’யைப் பற்றிச் செவிகளில் போடத்தான் செய்தார்கள். “அந்தப் பொம்பிளை”, அவனுடைய தந்தையின் கையைப்பற்றி மனைவியாக வந்தவள். மிக அழகா இருப்பாள். 

அப்போது பெரியமுதலாளி சிறுவயசுக்காரர்… அவ்வளவு தான். அப்பாவின் முகத்தில் பிறகு அவள் விழிக்க வில்லை… 

ராமசாமி படிப்பகத்தில் வந்து பத்திரிகைத்தாளைப் புரட்டிக் கொண்டே இருக்கிறான். படித்தது எதுவுமே மண்டையில் ஏறவில்லை. 

பொன்னாச்சியின் முகமே வந்து கவிகிறது. அன்று தம்பி உடம்பு சரியில்லை என்று வேலைக்கு வரவில்லை. அவள் மட்டும் காத்திருந்தாள். 

அவளைத் தனியே கண்டதும் விழிகள் கலங்கித் துளிகள் உதிர்ந்தன.அவன் பதைத்துப் போனான். 

“ஏவுள்ள? என்ன?” 

அவள் முந்தானையால் துடைத்துக்கொண்டு விம்மினாள். 

“அந்தக் கண்ட்ராக்டுச் சவம். என்னியக் கெருவச் சிட்டே இருக்கா எனக்கு பயமாயிருக்கு… இன்னிக்கி…” 

“இன்னிக்கு…?” 

அவனுக்கு நெஞ்சு துடிக்க மறந்து போயிற்று. 

“அவனைக் காலத்தூக்கி ஒதுச்சிட்ட, ‘விரிசாப் போடி’ன்னு தொட்டுத் தொட்டுக் கிள்ளினா; பொக்குனு ஆத்திரத்தோட ஒதச்சிட்ட. ஆரும் பாக்கல. ஆனா என்னேய்வானோன்னு பயமாயிருக்கு…” 

அவன் விழிகளைக் கொட்ட மறந்து போய் நின்றான்.

“ஏத்தா? ஒம்பேரென்னன்னு சொன்ன?” 

அவளை வெட்கம் கவிந்து கொள்கிறது. 

“என்ன சேஞ்ச?…. சொல்லே…” 

அவள் கதகதத்த பட்டுத்துண்டுக்குள் புதைந்தாற்போல் நிலத்தைப் பார்க்கிறாள். 

”ஒம் வாயால சொல்லுவுள்ள, காலத்தூக்கி அவன ஒதச்சே… சரிதானா? கால்ல ஓலச்செருப்புப் போட்டிருந்தல்ல?”  

“ம்….” என்று தலையை ஆட்டுகிறாள் பொன்னாச்சி. “அது நா ஒதச்சப்ப அவமேல பட்டு கீளவுழுந்திற்று… 

“எங்காது குளுந்திருக்கு எப்பிடி ஒதச்சன்னு காட்டுவியா பொன்னாச்சி…?” 

அழுகை போய்ச் சிரிப்பு வருகிறது. 

அது மலர்ப்பாதம். எலும்பு முண்டி நரம்பெடுத்து முழித்துப் பார்க்காத பாதம். உப்பு அவள் பாதங்களில் படிந்து மென்மையைக் குத்திக் கிளறினாலும், அவள் உயிர்த்துவமுள்ள மனிதப் பெண். உப்பு அவளைப் புழுவாக்க, முதுகெலும்பைத் தின்றுவிடவில்லை. அவள் வீறு கொண்டு ஒரு அசுரனை உதைத்தாள்! 

அந்தக் காலைப் பற்றி முத்தமிட வேண்டும் போலிருந்தது, ராமசாமிக்கு. 

“அவெ கருவச்சிருக்க மாட்டா? அவெ அக்குரமத்துக்கு நா எடங்குடுக்கலன்னுதா ரொம்ப வருமங்காட்டறா..” 

“அது சரி, நீ ஒதச்சபெறவு அவ என்ன சேஞ்சா? மீசல் மண்ணத் தட்டிட்டுப் போனானா?” என்று அவன் சிரித்தான். 

“நீங்க சிரிக்கிறிய, இவெ, இப்படியிருக்காண்ணு மொதலாளிக்குத் தெரியுமா! அவியக்கிட்ட சொன்னா என்ன? 

“பொன்னாச்சி,இப்பிடி அக்குருமமுன்னு மொதல்ல. கொரல் குடுக்கறதே நீதான்? எல்லாரும் இவனுவ என்ன சேஞ்சாலும் எதுக்கத் தெரியாம அடங்கிப் போவா. பவருள்ளவ சேட்டசேஞ்சா அது லாவம்னு அடங்கிப் போற பொண்டுவளத்தா இதுவரய்க்கும் நா கேள்விட் பட்டிருக்கே, பாத்துமிருக்கே. நீ…நீதா தயிரியமா எடுத்து சொல்ற. ஏ அழுற? சிரிக்கனும், நா ரொம்ப சந்தோசப் படுற, ஒனக்கு ஒண்ணும் வராது… நமக்கெல்லா நல்ல காலம் வரப்போவுது. அதுக்கித்தான் ஒனக்கு அந்தத் தைரியம் வந்திருக்கு…” 

“அப்ப நா பயப்படாண்டாம்…?” 

“நிச்சயமா. நா இருக்க, வுள்ள, ஒங்கிட்டச் சொல்ற, எனக்கு வீட்டுக்குப் போனாக்கூட ஒன் ஞாபகமாகவே இருக்கு இத்தே பெரிய அளத்துல, நீ இருக்கிற பக்கமே நா சுத்திவரான்னுகூட அவங்கண்டிட்ருப்பா. நீ பயப்படாத நானிருக்க…எப்பவும்…”

ராமசாமி இந்த உரையாடலை நூறுமுறைகள் உயிர்ப்பித்துப் பார்த்து மகிழ்ந்திருப்பான். இன்னும் அலுக்க வில்லை. சினிமாக் காட்சிகளுக்கு அவன் எப்போதேனும் செல்வதுண்டு. கதாநாயகியை வில்லன் துரத்தி இம்சை செய்வான். சரேலென்று கதாநாயகன் குதிரை மீதேறித் தாவி வந்து அவன்முன் குதிப்பான்; உறைவாளை உருவி, அந்தக் கொடியவனுடன் கத்திச் சண்டை செய்வான். அவன் தலை உருளும். கதாநாயகி ஆனந்த மிகுதியால் கதாநாயகனின் அருகில் வந்து மலர்ச் செண்டென அவன் மார்பில் முகம் பதிப்பாள்… ராமசாமி தானே அந்தக் தாநாயகனாக மாறிப் போகிறான். நாச்சப்பனின் தலை உருண்டு கிடக்கிறது. பொன்னாச்சி… பொன்னாச்சி… 

யாரோ அவன் கையிலிருக்கும் பத்திரிகையை உருவவே அவன் திடுக்கிட்டு நிமிருகிறான். 

தனக்குள்ளே நானியவனாக, பிறகு சமாளித்துக் கொள்கிறான்.

அத்தியாயம்-9

அன்று சனிக்கிழமை, கூலிநாள். கிழிந்து பிளந்து விட்ட பனஓலை மிதியடியைத் தூக்கி எறிந்துவிட்டு நஞ்சோடை நீரில் கால்களைக் கழுவிக் கொண்டு ரப்பர் செருப்பை மாட்டிக்கொண்டு பொன்னாச்சி கூலிக்கு நிற்கிறாள். அன்று தம்பி பச்சை வேலைக்கு வரவில்லை. அவனுக்கு காலில், கையில் வாயில் புண், காச்சல் வேறு கதகதப்பாக இருந்தது. அழகு, வடிவாம்பா, மாரியம்மா, எல்லோரும் நிற்கின்றனர். ராமசாமியை அன்று சாப்பாட்டு நேரத்துக்குமேல் காணவில்லை.’ தம்பிக்குக் காய்ச்சல், வாயில் புண் என்று சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த் திருந்தாள். கூலி கொடுக்க நேரமாகிவிட்டால் தேரிகடந்து தனியாகப் போகவேண்டி வருமோ என்றஞ்சியே அவனை எதிர்நோக்கியிருந்தாள். சாப்பாட்டு நேரத்தில் அவன் நல்ல தண்ணியில் கால் கழுவிவிட்டு, மருதமுத்துக்கங்காணியுடன் பேசிக்கொண்டே போனான். அவளைப் பார்க்கவில்லை. இப்போதும் அவள் ‘கண்ட்ராக்ட்’ நாச்சப்பன் கூலி கொண்டு வருவதை மட்டுமின்றி ராமசாமியும் எந்தப் பக்கமிருந்தேனும் வருகிறானா என்று பார்த்துக் கொண்டிருக்கிறாள். நாச்சி யப்பன் கூலியைக் கொண்டு வருகிறான், இருபத்து நான்கு ரூபாய் அவளுக்கு வரவேண்டும், இரண்டு நாட்கள் அதிகப் படியே வேலை செய்திருக்கிறாள். ஆனால் ஆறு ரூபாயைப் பிடித்துக்கொண்டு பதினெட்டு ரூபாய் கொடுக்கிறான். எண்ணி எண்ணிப் பார்க்கிறாள். மாரியம்மாளுக்கு, அழ காம்பாளுக்கு, முனுசாமிக்கு, மாயாண்டிக்கு, யாருக்கும் குறைக்கவில்லை. அவளைப் போல்தான் அவர்களும் வேலை செய்தார்கள். 

நாச்சப்பன் கூலியை அவளிடம் கொடுத்துவிட்டுப் போய்விட்டான். 

”அண்ணாச்சி? எங்கூலியை ஏன் கொறச்சிட்டாங்க?” 

“ஏங்கொறச்சிட்டா?…” அவன் சிரித்துவிட்டுச் செல்கிறான். 

“மாரியக்கா? கண்ட்ராக்ட்டு எங்கூலிய ஏங்கொறச்சிட்டா?” 

அவளுக்கு அழுகையே வந்துவிடும் போலிருக்கிறது.

“ஆறு ரூவாய ஏங்கொறச்சிட்டா?…” 

“நீ கண்ட்ராக்கிட்ட அகராதியாய்ப் பேசியிருப்பே. அதனாத்தா, வாயத்துறக்கக் கூடாது…” என்று பரிதாபக் குரலில் கூறிவிட்டு அழகாம்பா விரைந்து செல்கிறாள். 

பொன்னாச்சிக்கு உலகம் கண்முன் இருண்டு வருகிறது. 

“அது அவனுவ வழக்கம் புள்ள. இதுன்னாலும் குடுத்தானில்ல, போ….” என்று சந்தன நாடான் கிழவன் கண்களைச் சரித்துக் கொண்டு பெட்டி சீர்செய்த கூலியை எண்ணிக் கொண்டு செல்கிறான். 

ஒவ்வொருவராக எல்லோரும் பெரிய வாயிலைத் தாண்டிச் செல்கின்றனர். 

அவள்சுற்று முற்றும் பார்க்கிறாள். முகம் தெரியாத இருள் சூழ்கிறது, அம்பாரமான உப்புக் குவைகள் – விறிச் சிட்டு விட்ட பாத்திக் காடுகள். மயான அமைதி நிலவும் அச்சம் நெஞ்சைப் பற்றிக் கொள்கிறது. 

ராமசாமி… அவன் … அவன் எங்கே போய்விட்டான்? 

நீ பயப்படாதே, எப்போதும் காவலாக இருப்பேன் என்று சொன்னானே? கருமை, உலகைத் தன் துகிலால் 
இழுத்து மூட விரைந்து வந்துவிட்டது. அப்பனிடம் சொல்லித்தான் கேட்கச் சொல்ல வேண்டும் நாளை… 

அப்பச்சியை வரச்சொல்ல வேண்டும். 

அவள் சாலையில் விரைந்து செல்கிறாள். யார் யாரோ உருவங்கள் செல்வதை அவள் பார்க்கிறாள். நடுச்சாலை யில் விளக்கொளியைப் பாய்ச்சிக் கொண்டு பஸ் ஒன்று செல்கிறது. 

முன்னே யார் யாரோ அளத்துக்காரர் செல்கின்றனர்.

பயமில்லை. ஒட்டமும் நடையுமாக அவள் விரைகை யில் முன்னே செல்லும் உருவங்களில் யாரோனும் ராமசாமி யாக இருக்கலாகாதா என்ற ஆசை அடித்துக் கொள்கிறது. 

சாலையில் சைக்கிள்கள் போகும்போது சட்டென்று அதிலிருந்து அவன் இறங்கி அவளைக் கண்டு கொண்டு வர மாட்டானா என்று பார்க்கிறாள். 

யாருமில்லை. ராமசாமி வரவில்லை, பாலம்… பாலம் வந்ததும் அவள் குறுக்கே தேரிக்குள் திரும்ப வேண்டும். அங்கும் யார் யாரோ மக்கள் செல்கின்றனர். ‘முருகா…. முருகா…” என்று மனதுக்குள் முணுமுணுத்துக் கொண்டு பொன்னாச்சி தேரிக்குள் நடக்கிறாள். 

பேச்சுக் குரல்கள் தேய்ந்தாற்போல் விழுகின்றன.

அவளுடன் வேலை செய்யும் பெண்கள் பத்துப் பதினைந்து பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருத்திகூடக் கூலிக் குறைப்பைக் கருதி அனுதாபமாக அந்த கண்ட்ராக் டிடம் கேட்கலாம் என்று வரவில்லையே? 

“நீ தணிச்சு ஒரு வழி போகணுமே” என்றும் ஒருத்தியும் வாய்ச் சொல்லுக்கும் கூட கூறவில்லையே? இந்த உப்பு சூட்டில் முள்ளுச் செடிகள் கூடக் கரிந்து விடுகின்றன. மாமி ஏசுவாள் என்றாலும் அடிக்கொருமுறை பொன்னாச்சியை யாரேனும் கூப்பிடுவார்கள். மனித நேயங் களனைத்தும் உப்புச் சூட்டில் வறண்டு போய் விடுமோ? 

ராமசாமி சங்கம் கூட வேண்டும், எல்லோரும் ஒற்றுமை யாக நிற்க வேண்டும் என்று ஒரு நாள் சொன்னான் இப்போது அவனே அவளுக்கு உதவ வேண்டிய சமயத்தில் போய்விட்டான். 

செம்மணல் பரந்த மேடாகத் தெரியும் தேரி இப்போதும் இனம் புரியாமலிருக்கிறது. குடல் குலுங்க அவள் இருட்டில் ஓடுகிறாள். யார் யாரோ ஆண் குரல்கள் கேட்கின்றன. 

‘தேரியில் வைத்துக் கொலை செய்து விட்டார்கள். என்ற சொற்றொடர் உட் திரையில் மின்ன முருகா, முருகா என்று நா உச்சரிக்க அவள் ஓடுகிறாள். அப்போது அவளைத் தொடர்ந்து இன்னும் யாரோ ஓடிவரும் அடிச் சத்தம் கேட்கிறது… ஒரு வேளை ராமசாமியோ 

“ஏவுள்ள ஓடாத… ஓடாதவுள்ள?”

ராமசாமியின் குரல்தானோ? 

அவள் மூச்சிறைக்க நிற்கிறாள். அவள் நின்றதும் விரைந்து வந்தவன் அலைபோல் பாய்ந்து அவளை நெருக்கி அணைக்கிறான். முத்தமிடுகிறான். புளித்த கள்ளின் வாடை… 

“ஐயோ…ஐயோ, விடுரா, சவமே…” 

அவள் திமிருகிறாள். அவனிடமிருந்து விடுவித்துக் கொள்ளக் கைகளைக் கால்களை உதைத்துக் கொள்கிறாள், அவனைப் பிறாண்டுகிறாள். 

ஆனால் அவன் வெறி கொண்ட பேயாக இருக்கிறான். தேரி… தேரிக்காடு… நெஞ்சு உலர்ந்து போகிறது. 

பூதமாகத் தலைவிரிச்சிப் பனமரங்கள்… இருள் இரத்தச் சுவடுகளையும் துல்லியமாகத் துடைக்கத் துணை செய் கின்றது. போதாதற்கு அப்படி ஒன்றும் இங்கு நடக்கவில்லை என்று கோடானு கோடித் தாரகைகள் கண் சிமிட்டுகின்றன. 

அவள் தேரியின் மண்ணில் கிடக்கிறாள். அந்த அலுமினியம் தூக்குப் பாத்திரத்தின் நினைவு சட்டென்று வருகிறது. அதற்குள் கூலிப்பணம் இருக்குமே! 

“இத இருக்குவுள்ள…!” என்று அவன் அதை எடுத்துக் கொடுக்கிறான். இருட்டில் முகம் தெரியவில்லை. 

கொலைகள் நடந்த இடத்தில் ஆவிகள் உலவும் இவன் ஆவியோ, ‘பொட்டவுள்ள… பொட்டவுள்ள…’ என்ற குரல் பயங்கரமான பொருளை உணர்த்தச் செவிகளில் டங்டங் கென்று அதிரடிபோல் ஒலிக்கிறது. அவளுக்குக் குபீரென்று அழுகை வருகிறது. உட்கார்ந்து இதயம் வெடிக்க அழுகிறாள். 

அவன் போகவில்லை. 

“ஏவுள்ள அழுவுற? கூலி கொறச்சிட்டான்னு சொன்னேயில்ல? நா அஞ்சு ரூவா தாரன் ஒனக்கு!” 

“சீமிருவமே! என்னக் கொன்னு போட்டுறதுதானே? மீண்டும் அவள் அழுகையொலி அங்கு எதிரொலிக்கிறது. “இப்படிப் பண்ணிப்போட்டியே? நா எப்பிடி எல்லார் மூஞ்சிலியும் முழிப்பே?” 

“த, இப்ப என்ன வந்திற்று? நா ஒன்னக் கல்யாணங் கட்டுற, சீல, தாலி வாங்கித்தார? இந்த மொத்த ஊரிலும் தண்ணிக்குள்ள கெடந்து மிசின் மாட்டுற தொளில் ஆருக்கும் வராது. மொதலாளி பெசலா எனக்குண்டு குடிய்க்க நெகும் ரெண்டு ரூவா தருவா…அழுவா..?” 

இதுதான் விதியா? இந்தக் குடிகாரனை அவள் கல்யாணம் கட்டுவாளா? மாமி, சின்னாச்சி, அப்பன். பச்சை…”ஐயோ, அவுரு…எப்பேர்க் கொத்த மனிசரு?” 

பொங்கிப் பொங்கி அழுகை வருகிறது. 

“தே அழுவாதவுள்ள…” 

அவன் குரலில் ஆணவமோ, ஆத்திரமோ இல்லை. தாய்க்குத் தெரியாமல் கள் குடித்து விட்டு வரும் பிள்ளை, “தெரியாம செஞ்சிட்டேன்” என்று தண்டனையை ஏற்க நிற்பவன் போல் கெஞ்சுகிறான். 

“அநியாயமா இப்பிடிச் செஞ்சிட்டியே, பாவி, நா ஒன்னயா கலியாணம் கெட்டிக்கணும்? தூ!…” 

“பின்ன வாணாமுன்னா வாணா…” 

உடலும் மனமும் பற்றி எரிகிறது. அவனை என்ன செய்யலாம்? அப்போது அடித்துக் கால் கையை வெட்டிம் போடலாமா? அப்போது அவள் எரிச்சல்ஆறுமா?…. ஐயோ…! என்று அவள் துடிதுடிக்கிறாள். 

“என்னியக் கொன்னு போட்டுட்டுப் போ. சவமே ஏன் நிக்கே?”

“ஐயோ…. கொல எல்லாம் செய்யமாட்டே. இப்ப என்ன வந்திற்று? எல்லாப் பொம்பிளக்கும் எல்லா ஆம்பிளய்க்கும் உள்ளதுதே. எந்திரிச்சி,சிலயல போட்டுக்க. கண்ணத் தொடச்சிட்டுவா. கிளப்பில தோசையும் குருமாவும் வாங்கித் தாரன்; சாப்பிட்டுக்க. அளத்துல லாரி வந்திச்சி, நேரமாச் சுன்னு சொன்னா ஆருங்கேக்க மாட்டா. ஒங்க வீட்டில நா கொண்டுவுடுறே…” 

அவன் அவள் சிலையை எடுத்து மேலே போடுகிறான்* கைபிடித்து எழுப்புகிறான். 

“ந்தா நாச்சியப்ப கண்ட்ராக்ட், கங்காணி ஆறுமுகம் கணக்கவுள்ள பிச்ச… அல்லாரும் பொறத்தியான் பெஞ்சாதி யளைக் கை தொடும் கழுவேறியா நா அப்படிப் பாவம் செய்ய மாட்ட சாமி அப்பேர்க் கொத்தவங் கண்ண அவிச்சிப் போடும். நான் கண்ணாலங்கெட்டாத பொண்ணாத்தாத் தொடுவ…” 

அவனுடைய சீலநெறியைச் செவியேற்கையில் அந்த நிலையிலும் அவளுக்கு சிரிப்பு வரும் போலிருக்கிறது. 

“நீ கலியாணம் கெட்டலியா?” 

“அக்கா மவளக் கெட்டின, அதுவுள்ள பெத்த ஆசிபத் திரில் செத்துப் போச்சி. இப்ப ஒன்னக் கட்டிக்கற என்னக் கட்டிக்கிறியா பொன்னாச்சி?” 

“நீ என்னக் கட்டிக்கிறேன்னு கவுறு போட்டா, நான் கடல்லவுழுந்து முடிஞ்சி போவ…” 

“ஐயோ அப்ப வாணா, நீ என்னக் கட்டிக் காட்டி வாணா! நீ ராமசாமியக் கட்டிக்க…” 

அந்தப் பெயரைக் கேட்கையிலே மீண்டும் துயரம் வெடித்து வருகிறது. இது தெரிந்தால் அவர் என்ன சொல் வார்? காவலிருக்கேன்னு சொல்லிக் கைவிட்டு விட்டீரே! 

“நீ அழுவாத பொன்னாச்சி. நா தெரியாம செஞ் சிட்டா. வா. ஒனக்கு அஞ்சு ரூவா இல்லாட்டி பத்து ரூவா தாரவா…” 

அவன் கையை உதறிக் கொண்டு அவள் எழுந்து சீலையை இறுக்கிக் கொள்கிறாள். அலுமினியம் தூக்கை வாங்கிக்கொண்டு அவள் நடக்கிறாள், தொய்யும் கால்களை உறுதியாகப் பதித்து நடக்கிறாள். கரிப்புத் தண்ணீர் உதடு களை நனைக்க அவள் நடக்கிறாள். 

தேரி கடந்த பின் தெருவோரம் ஒரு நைட் கிளப்பில் எண்ணெயில் வட்ட வட்டமாக பூரி காய்கிறது. ஆட்கள் அங்கே உட்கார்ந்து தீனி தின்கின்றனர்; நின்று காபியோ தேநீரோ பருகுகின்றனர். 

“பூரி தின்னுக்கறியா? நெல்லாருக்கும்…” 

“சீ” என்று காரித் துப்புகிறாள், விளக்கொளியில் அவன் முகத்தைக் கண்டதும். 

“ந்தாப்பா, ஒரு பாவசம் குடு…” பளிச்சென்ற ஒளியில் அவள் நிமிர்ந்து பார்க்கக் கூசி நிற்கிறாள். ஒரு பையன் கிளாசில் ‘பாவசம்’ கொண்டுவந்து தருகிறான். 

“குடு….வாங்கிக்க… பாசிப் பருப்பும் வெல்லமும் சேர்ந்த, ‘பாயசம்’. அவள் கடையின் பின்பக்கம் இருளில் திரும்பி அந்தப் பாயசத்தை அருந்துகிறாள். பிறகு கொஞ்சம் நீர் குவளையில் வாங்கி முகத்தைக் கழுவிக் கொள்கிறாள். எரியும் தீயை அந்தப் பாயசம் இதமாய் அணைத்தாற்போல் தோன்றுகிறது. 

“நீ வீட்டுப் பக்கம் வராண்டா. போயிடு. நாளக்கி எங்கனாலும் ஆரானும் பொம்பிள கடல்ல, கெணத்துல விழுந்திட்டான்னு செவில வுழுந்தா போயிப்பாரு.'”

அவள் ஆத்திரத்துடன் நடக்கிறாள். 

அவன் கோயில் வரையிலும் அவள் சொல்வதைக் கேளாமலே தொடர்ந்து வருகிறான். பிறகு அவள் வெருட்டி யதால் செல்கிறான். சின்னம்மா, குழந்தைகள் எல்லோரும் வாயிலில் நிற்கின்றனர். 

“ஏட்டி” என்று சின்னம்மா கேட்கும் வரையிலும் அவள் காத்திருக்கவில்லை. தூக்குப் பாத்திரத்தை அவள் கையில் கொடுத்து விட்டு உள்ளே சென்று வாளியும் கயிறுமாகக் கிணற்றடிக்கு விரைகிறாள். கிணற்று நீரைச் சுறண்டி இழுத்துக் கொட்டிக் கொள்கிறாள். கோடைக்கால கிணறு மணலும் சேர்ந்து வருகிறது. 

தனது கருமையை அந்த மணலோடு சேர்த்துத் தேய்த்துக் கழுவுவதுபோல் தண்ணீரை இரைத்து ஊற்றிக் கொண்டு, சேலையைப் பிழிந்து கொண்டு வருகிறாள். தலை சொட்டச் சொட்ட, முடியை விரித்துப் போட்டுக் கொண்டு அவள் வருவதைக் கண்ட சின்னம்மா, 

“ஏட்டி, கூலிக்கு நேராச்சின்னா நாளக்கிப் போயிக் காலயில வாங்கிவாரம், செவந்தனியப் போச்சொல்லுற. நீ இருட்டி இந்நேரங்களிச்சி தேரிகடந்து வார். ஒங்கமாம மாமியெல்லா, பெரியதனக்காரா. நீ லச்சயில்லாம நடக்கே. ஒரு சூடு விழுந்தா சின்னாச்சி மண்டய உருட்டுவா…” 

சேலையைப் பிழிந்து கட்டிவிட்டு விரிந்த கூந்தலுடன் அவள் ஆணி அடித்த நிலையில் நிற்கிறாள். சின்னம்மாவின் சொற்கள் ஒவ்வொன்றும் ஒரு பாம்பாசி உருப்பெற்று அவள் மீது ஊர்வதாகப் படுகிறது. 

“அம்மா, பசிக்கி…. சோறு போடம்மா… சோறு…” பிள்ளைகள் தட்டை வைத்துக் கொண்டு ஓசை செய்கின்ற னர். சின்னம்மா பொங்கும் குழம்பைக் கரண்டியால் கிளறி விட்டு அடுப்பைத் தணிக்கிறாள். 

“வந்திட்டாளா அவ?” என்று அப்பனின் குரல் கேட்கிறது.  

“…கூலி போடுற அன்னிக்கு நேரமாவும். நீ பொழு தோட வூடுவர வேண்டியதுதான? எம்பிட்டுக் கூலி குடுத்தா…?” 

“இருவத்து நாலுக்கு இருவத்து மூணு இருக்கு. ஒரு ரூவாக்கு வாங்கித் தின்னட்டும், புள்ளியளுக்கு ஒரு காரூவாப் பட்டாணிக் கடல வாங்கிச்சி வராண்டா?…” 

பொன்னாச்சிக்கு வடிக்கக் கண்ணீரில்லை. 

“ஏட்டி, மொவத்துல கைய வச்சிட்டிருக்கே… அல்லாரையும் கூட்டிச் சோறு வையி…” 

அவள் பேசவில்லை. சோறென்றதும் எல்லோரும் வந்து உட்கார வேண்டும். ஒரு நாட்பொழுதின் மகத்தான நேரம் அது. பொழுது விடிவதும் பொழுது போவதும் இந்த “மகத்தான’ நேரத்துக்குத்தான். சோறு ; அரிசிச் சோறு. மீன் கண்டமிட்ட குழம்பு. நல்லகண்ணு முக்கை உறிஞ்சி நெட்டை விட்டுக் கொண்டு உண்ணுகிறான். தம்பி… தம்பீ எங்கே? 

சின்னம்மா காலுக்கு மஞ்சள் தூளையும் விளக்கெண் ணெயும் குழைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறாள்.”அந்தப் பய மத்தியானங் கூட இப்பிடித்தா படுத்திருந்தா. எளுப்பி காப்பித்தண்ணி வச்சிக் குடுக்கச் சொன்னே பாஞ்சாலிய….” என்று அப்பன் கூறுகிறார். 

அவள் துணுக்குற்ற நெஞ்சுடன் வாயில் திண்ணைக்கு வந்து அவனை எழுப்புகிறாள். சுருண்டு கிடக்கிறான். 

“தம்பி… தம்பி… லே பச்ச, சோறு தின்ன வால..?” மூச்சு வேகமாக வருவது போலிருக்கிறது. “சோறு … வாணா சோறு வாணா… என்று முணகிவிட்டுத் திரும்பிப் படுக்கிறான். 

“விறிஞ்சோறில்லே. மீன் கொளம்பு வச்சிருக்கு. ஒருவாத். தின்னிட்டுப் படுத்துக்க…” 

சோறு வேண்டாம் என்று அவன் எந்த நேரத்திலும் கூற மாட்டானே? 

அவள் அவன் உடம்பில் கை வைத்துப் பார்க்கிறாள். சூடு காய்கிறது. மீன் குழம்பு வைத்து அரிசிச் சோறு பொங்கிய நாளில் உடம்பு காய்வது எத்தனை துரதிஷ்டம்? 

“ஒடம்பு சுடுது, சின்னம்மா அவனுக்கு!” 

”சூடு…உப்புச் சூடுதே. கண் பொங்கியிருக்கு, நாயித்துக் கௌமயில எண்ணெ வச்சிக் குளிலேன்னே, அப்பச்சியோட சந்தக்கிப் போறன்னு ஆடிட்டிருந்தா. சொன்ன பேச்சிக் கேக்கணும்….” என்று சின்னம்மா குற்றம் சாட்டுகிறாள். 

அவனை மெள்ள எழுப்பி பொன்னாச்சி தட்டின் முன் கொண்டு வந்து உட்கார்த்துகிறாள். இரண்டு வாய் கொறித்து விட்டு மீண்டும் திண்ணைப்பாயில் முடங்கிக் கொள்கிறான். 

காலையில் சின்னம்மாவின் கண்களில் முதலில் பொன்” னாச்சி வரிகம்பில் உலர்த்தியிருக்கும் ரவிக்கைதான் படுகிறது. கைப்புறமும் முதுகுப்புறமும் தாறுமாறாகக் குத்தினாற்போல் கிழிந்திருக்கிறது. 

“ஏட்டி ஜாக்கெட் கிளிஞ்சிரிச்சா? கொம்பு மாட்டிச்சா? எங்க கிளிச்சிட்ட? பதனமா அவுத்துக் கசக்குறதில்ல?” 

“அது கிளியல… கிளிஞ்சிபோச்சி…” என்று ஏதேதோ சொற்கள் மோதியடித்துக் கொண்டுவர உதடுகள் துடிக்கின்றன. கண்களில் முட்டிக் குளம் வெட்டுகிறது.

தூக்கிவாரிப் போட்டாற் போல் மருதாம்பா நிற்கிறாள். எழும்பும் நா அடங்கிப் போகிறது. கண்கள் அவள் மீது பொருளார்ந்து நிலைக்கின்றன. 

– தொடரும்…

– கரிப்பு மணிகள் (சமூக நாவல்), முதற்பதிப்பு: ஏப்ரல் 1979, தாகம், சென்னை.

ராஜம் கிருஷ்ணன் ஆசிரியை திருமதி.ராஜம் கிருஷ்ணன் 1952-ல் நடந்த அகில உலகச் சிறுகதைப் போட்டியில் இவரது 'ஊசியும் உணர்வும்' என்ற சிறுகதை தமிழ்ச் சிறுகதைக்குரிய பரிசைப் பெற்று 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' வெளியீடாக வந்த உலகச் சிறுகதைத் தொகுப் பில் அதன் ஆங்கில வடிவம் இடம் பெற்றது.  1953, கலைமகள் நாராயணசாமி ஐயர் நாவல் பரிசைப் பெற்றது இவரது 'பெண்குரல்' நாவல். 1958-ல் ஆனந்தவிகடன் நடத்திய நாவல் போட்டியில் இவரது 'மலர்கள்' நாவல் முதல் பரிசைப் பெற்றது. …மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *