இரவுக் காட்சி




ராட்சதக் கண்ணாடியொன்று தரையில் விழுந்து நொறுங்குவது போன்ற சப்தம் கேட்டதும் மின்சாரம் தடைபட்டது. புழுக்கம் தாங்காமல் அறையை விட்டு அவசரமாக வெளியே வந்தேன். மடியிலிருந்த புத்தகம் மல்லார்ந்து கீழே விழுந்தது. அமாவாசைக்குப் பிந்தைய இரவாக இருந்ததால் எங்கும் இருட்டாகக் கிடந்தது. வீடுகளின் முன்புறத்திலிருந்த ஆட்களின் மீது அந்தச் சப்தம் அதிர்ச்சியின் சுவடுகளைப் பதித்துச் சென்றதை அவர்களின் குரல்களிலிருந்து அறிய முடிந்தது. உடனே அறையைப் பூட்டிவிட்டுச் சப்தம் வந்த திசையை நோக்கி விரைந்தேன். படிகளில் அது பற்றிய பேச்சுதான் அடிபட்டுக்கொண்டிருந்தது. ஏதேனுமொரு வாகனம் அந்தத் தெருவைக் கடந்து செல்லாதா என்றிருந்தது, அவ்வளவு இருட்டு. எங்கிருந்தோ வந்த வண்டியொன்று வெளிச்சத்தை வீசிவிட்டுச் சென்றது. கண்கள்கூசத்தெரு ஓரத்திற்கு நகர்ந்து திரும்பிப் பார்த்தேன். அமர்ந்திருந்தவர்களின் நிழலை ஒன்றன் பின் ஒன்றாக அது தெருமுனைவரை இழுத்துச் சென்றது. சில நிமிடங்களுக்குள் அந்த இடத்திற்குப் போய்ச் சேர்ந்தேன். அங்கு அந்தப் பகுதி முழுக்கவிருக்கும் மின் இணைப்புகளைத் தன்வசம் கொண்டிருக்கும் ட்ரான்ஸ்ஃபார்மர் மீது லாரி மோதி முன்பக்கம் நாசமான நிலையில் நின்றுகொண்டிருந்தது. பள்ளத்தில் நின்றிருக்கும் அந்த ட்ரான்ஸ்ஃபார்மரை சாலையில் செல்லும்போது, அதன் இடுப்புக்கு மேலே மட்டும்தான் பார்க்க முடியும். லாரி மோதிய வேகத்தில் அதிலிருந்து கண்ணைப் பிடுங்கும் விதத்தில் தீப்பொறிகள் பறந்தன என நேரில் கண்டவர்கள் வியந்துகொண்டிருந்தார்கள். இப்போதும் சில இணைப்புகள் வெடித்துக்கொண்டிருந்தன. கம்பிகளின் கருகல் வாடையை நாசி உணர்ந்தது. வெடிச் சத்தத்திற்கு மிரண்டுபோய்க் குறுக்காக ஓடிவந்த மாட்டின் மீது மோதாமலிருக்க வண்டியை வளைத்துத் திருப்பியதில் அது கட்டுப்பாட்டை இழந்து மோதிவிட்டதாக அங்கிருந்தவர்கள் சொல்லி அறிந்தேன். மோதுவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு, உள்ளே இருந்தவர்கள் எப்படிக் குதித்து எங்கு ஓடி மறைந்தார்கள் என்பது ஒருவருக்கும் புரியாததாக இருந்தது. பழுதுபார்க்க ஆட்கள் வந்துகொண்டிருப்பதாகவும் அனைத்து இணைப்புகளையும் மீண்டும் பழையபடிக்குக் கொண்டுவர நாளை மதியம்வரை ஆகக்கூடும் எனவும் பலவிதமான யூகங்கள் அங்கு நிலவின.
பகல் வெப்பத்தால் சூடாகிக் கிடந்த அறையில் அந்த இரவைப் போக்குவது குறித்து யோசிக்கத் தொடங்கினேன். திடுமெனப் பெண்களும் ஆண்களும் அவரவர் வீடுகளிலிருந்த பெரிய கூடையை எடுத்துக் கொண்டு வண்டியை நோக்கி ஓடி வந்துகொண்டிருந்தார்கள். உருளைக்கிழங்கை ஏற்றி வந்த சரக்கு வாகனம் அது. ஒரு பக்கமாகச் சாய்ந்து நின்றிருந்த லாரியிலிருந்து கிழங்குகள் சரிந்து வெளியே சிதறிக் கிடந்தன. வந்தவர்கள் தங்கள் பைகளை நிரப்புவதில் குறியாயிருந்தார்கள். நிரப்பியவர்கள் மேலும் பைகளை எடுத்து வராமல்போன துரதிர்ஷ்டத்தை நொந்தபடியே இருந்த பைகளை நன்றாகக் குலுக்கி அவை பிதுங்கும் படி திணித்துக்கொண்டார்கள். மிக மெதுவாகப் பொறுக்கியவர்களின் வீட்டில் வாயுத் தொல்லை இருக்கக்கூடும். நான் கணக்கு வைத்திருக்கும் அந்த மலையாளியின் மெஸ்ஸில் இருக்கும் பொடியன், கிழங்கை அள்ளி அள்ளிப் போட்டபடியிருந்தான். இனி ஒரு வார காலத்திற்குத் தினமும் இலையில் எந்த வடிவத்திலேனும் உருளைக்கிழங்கு தென்படக்கூடும் எனத் தோன்றியது. அதை நினைத்தவாறே கடற்கரையில் அகஸ்மாத்தமாக அறிமுகமாகி இப்போது நெருங்கிய நண்பனாகிவிட்ட முரளியைக் கூட்டிக்கொண்டு திரையரங்கிற்குப் போவதெனத் தீர்மானித்து அறைக்குள் நுழைந்தேன். மாதத்தின் முதல் வாரமாக அது இருந்ததால் போதிய அளவிற்குக் கையிருப்பு இருந்தது.
இரண்டாவது சிகரெட்டும் தீர்ந்துபோன சமயத்தில் அவன் அறைக்கு அருகிலிருக்கும் சாலைக்கு வந்துவிட்டிருந்தேன். தள்ளுவண்டியில் பழம் வாங்கிக் கொண்டிருந்தான். உணவை அவன் முடித்துவிட்டிருக்கக்கூடும். விஷயத்தைச் சொன்னேன். துவைக்கப்படாமல் கிடக்கும் துணிகளால் அறை வியர்வை நாற்றம் எடுக்க ஆரம்பித்துவிட்டது என்றான். போட்டுக்கொள்ள மாற்றுத் துணிகூட இல்லை எனும்படி ஆகிவிட்டது என்றான். அவனை ஒப்புக்கொள்ளச் செய்ய, துவைக்க ஆகும் செலவு என் பொறுப்பு என்றேன். ஆச்சரியப்படும் வகையில் உற்சாகமாகி அறைச் சகாவிடம் சாவியைத் தந்துவிட்டு உடன் நடந்தான். கடைசியாகக் குடித்தது ஊருக்கு ரயிலேறும்போதுதான் என்றபோது அவன் முகம் சாதாரணமாகத்தான் இருந்தது. அது என்னவோ போல் எனக்குப் பட்டது. கூட்டிக்கொண்டு அருகில் இருந்த மதுக் கடைக்குள் நுழைந்தேன். சாக்கனாக் கடையில் தாளித்துக்கொண்டிருந்த மசாலாவின் நெடி நாசியில் ஏறிற்று. அவனுக்குப் பிடித்த சரக்கை வாங்கியிருந்ததால் அதிகமாக அவனே குடித்தான். நான் சுமாராகக் குடித்துவைத்தேன். குடிக்கையில் சிகரெட்டுகளின் எண்ணிக்கை இருவருக்குமே மிதமிஞ்சிப் போய்விடும். எழுந்திருக்கும்போதுதான் அவன் போதையால் நிதானம் தவறியிருப்பது உறைத்தது. பக்கத்து நாற்காலிகளிலிருந்த கரைவேட்டிகளுக்குள் எந்நேரத்திலும் கைகலப்பு உருவாகக்கூடும் எனும்படி பேச்சுகளில் காரம் கூடியபடியேயிருந்தது. அவர்களுள் மீசையைத் திருகியபடியே எழுந்த ஒருவன் கையிலிருந்த பாட்டிலைச் சுவரில் அடித்து நொறுக்கினான். தொடர்ந்து பாட்டில்கள் தாறுமாறாக எறியப்பட்டன. போதை முரளிக்குத் தலைக்கேறியிருந்தது. ஊரிலிருக்கும் ஒரு பெண்ணின் பெயரைச் சொல்லி தேம்பித் தேம்பி அழுதான். அங்கிருந்த தலைகள் அனைத்தும் எங்களை நோக்கித் திரும்பின. அவனைக் கீழே விழாமல் பிடித்துக்கொண்டு வெளியே வருவது பெரும்பாடாய்ப் போயிற்று. கையெட்டும் தூரத்திலிருந்த தியேட்டருக்குள் சென்று அவனை நன்றாக இருக்கையில் சாய்த்துப் படுக்கவைத்த சில நிமிடங்களில் அவனிடமிருந்து குறட்டைச் சத்தம் எழுந்தது. அது ஒரு சீனப் படம் என முன்பே தெரியும். கண்கள் சொருகின. கொசுக் கடியால் இடையில் விழித்துக்கொண்டபோது திரையில் இரண்டுபேர் நீண்ட நெடிய மரத்தில் ஆளுக்கு ஒரு கிளையைப் பிடித்துக்கொண்டு சிறிய இலையில் நின்றபடி கத்தியால் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். மீண்டும் தூங்கிப்போனேன். பக்கத்து இருக்கைக்காரர் உசுப்பியதும் எழுந்துகொண்டேன். அவனை எழவைத்து வெளியே அழைத்து வருவது சுலபமாக இருக்கவில்லை. அப்போதும் தள்ளாட்டம் நின்றபாடில்லை. நாங்கள் வந்த சந்து களிலெல்லாம் இப்போது ஆட்கள் படுத்துக்கிடப்பார்கள் என்பதால் சாலை வழியே அவனைப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தேன். மேம்பாலத்தில் பாதி ஏறி இறங்கத் தொடங்கியதும் மறுமுனையில் காவலர்கள் அந்தப் பக்கமாகச் சென்றவர்களை விசாரித்துக்கொண்டிருப்பதைக் கண்டேன். நகரெங்கும் தீவிரக் கண்காணிப்பு முடுக்கிவிடப்பட்டிருந்தது. அகாலத்தில் சந்தேகப்படும்படியாகச் சுற்றிக்கொண்டிருந்தவர்களை உடனடியாகக் கைது செய்துகொண்டிருந்தார்கள். ஜேபியைத் துழாவினேன். டிக்கெட்டைக் காணோம். அவர்கள் பார்ப்பதற்குள் அவனை மீண்டும் கீழே இறக்கிக் கூட்டிவந்து மேம்பாலத்தின் அடியில் நுழைந்தேன்.
அவன் நடக்கும் நிதானத்திற்கு வராவிட்டாலும் உளறலை நிறுத்திவிட்டிருந்தான். அந்த இருட்டுக்குப் பழகிக்கொள்ளக் கண்களுக்குச் சில நிமிடங்கள் தேவைப்பட்டன. சற்றுத் தூரத்தில் மூன்று நான்கு பேர் இடைவெளிவிட்டு அமர்ந்திருந்த இடத்தில் மேம்பாலத்தின் நியான் விளக்குகளின் பிரகாசம் கொஞ்சமாக விழுந்திருந்தது. அருகில் சென்று பார்த்தோம். பொதிமூட்டையின் அடியிலிருந்து சில்லரைகளையும் ரூபாய்களையும் எடுத்துத் தனித்தனியே பிரித்து நாணயங்களை எண்ணி அங்கிருந்த பாத்திரத்தில் போட்டபடியிருந்தார்கள். முகங்களை எவ்வளவு முயன்றும் பார்க்க முடியவேயில்லை. திட்டுப்போல எங்களுக்குப் பட்ட ஓரிடத்தில் உட்கார்ந்ததும் மேம்பாலத்தின் தூண்களைக் கண்டு வாய்பிளந்தோம். நான்கு பேர் சேர்ந்து விரல்களைக் கோத்துக்கொண்டாலொழிய அதை அணைக்க முடியாது என்று உறுதியாகத் தோன்றியது. சுட்டுவிரலின் கூர்நகம் மூக்கின் நுனியைத் தொடுமாறு உதடுகளின் மத்தியில் வைத்து அதே விரலால் அங்கிருந்த தூணைக் காட்டினான். கால்கள் தடுமாறிக்கொண்டிருந்தன. எழுந்து மெதுவாக அருகில் சென்று தூணோடு ஒட்டிக்கொண்டபடியே நகர்ந்தோம். பழக்கமில்லாதவன் நெடுந்தொலைவு ஓடிவந்ததுபோல மூச்சுக் காற்று சீரற்று மோசமான சப்தத்துடன் அப்பக்கமிருந்து வந்துகொண்டிருந்தது. அவன் பல்லிபோல நகர்ந்து எட்டிப் பார்த்தான். கழிப்பறையில் மலச்சிக்கல்காரனிடமிருந்து எழும் முக்கல்போல ஆணிடமிருந்தும் பிரம்மாண்டமான அருவியின் அடியில் குளிக்கும்போது உண்டாகும் திணறல்போலப் பெண்ணிடமிருந்தும் மூச்சுக் காற்று வெளிப்பட்டது. அவன் என்னைக் கூட்டிக்கொண்டு நடந்தான். இருவரும் நிர்வாணமாக இருந்தார்களா எனக்கேட்டுவிட்டு ஆவலில் மீண்டும் அந்தப் பக்கம் போக எத்தனித்தேன். இன்னும் பெண்ணின் நிர்வாணத்தைக் காணாத எனக்கு அது தரும் கிளர்ச்சியைக் கற்பனை செய்துகொண்டேன். அவன் எப்படித் தலையசைத்தான் எனத் தெரியாது என்றாலும் அவன் பக்கமாகக் கையைப் பலமாகப் பிடித்து இழுத்தான். சிறிது தூரம் நடந்ததும் காலைப் பிடித்து யாரோ இழுப்பதுபோலப் பட்டது. சிரமப்பட்டு விடுவித்துக்கொண்டு நன்றாகக் குனிந்து பார்த்தேன். மொட்டையடிக்கப்பட்ட சிறுவன் அந்த அகாலத்தில் கத்தியைக் காட்டிக் கை நீட்டினான். பாக்கெட்டுக்குள் கையை விட்ட கணத்தில் முரளி சட்டென்று அவனை அறைந்து கீழே தள்ளிவிட்டான். வேகமாக ஓடத் தொடங்கினோம். அவன் ‘ஓ’வெனக் கத்திக்கொண்டே துரத்தி வந்தான். வழிகள் குழம்பிவிட்டிருந்தன. எப்படி ஓடியும் தூண்களே எங்கள் முன் வந்துகொண்டிருந்தன. களைத்து நின்றதும் எங்கும் நிசப்தம் நிலவுவதைக் கண்டோ ம். நின்று மூச்சு வாங்கிப் பின் நடந்தோம்.
வழியில் இருட்டுக்குள்ளிருந்து சலங்கைபோலக் கொலுசுகளின் முத்துகள் குலுங்குவதைக் கேட்டோ ம். நான்கைந்து மல்லிகைப் பூக்கள் மேலே வந்து விழுந்தன. அவ்வளவு பதற்றத்திலும் அவனுக்குச் சபலம் தட்டிற்று. அந்தப் பக்கமாகத் திரும்பினேன். சற்றுமுன் தவறவிட்ட நிர்வாணக் காட்சியில் மனம் கிடந்து புரண்டது. பழக்கமில்லாத ஒன்றுக்குள் சந்தர்ப்பத்தின் வசத்தால் திணித்துக்கொள்ள நேரும்போது உருவாகும் பதற்றம் எங்களையும் தொற்றிக்கொண்டது. மணம் வந்த இடத்தை நோக்கி அவன் சென்றான். அவனிடம் சல்லிக்காசுகூட இருக்கவில்லை. சுருதி வேறு இறங்காமலிருந்தது. வம்புக்குள் சிக்கிவிடக் கூடாது என்றெண்ணியிருந்தேன். அந்தச் சமயத்தில் அவன் என்னைப் பொருட்படுத்தியதாகவே தோன்றவில்லை. இதற்கெல்லாம் எனக்குத் தைரியம் போதாது என்றாலும் மறைந்திருந்து பார்த்து அந்த ஆசையை ஓரளவிற்குத் தணித்துக்கொள்ளலாம் என நினைத்து இருளில் அசையும் அவன் முதுகை உற்றுப் பார்த்தவாறே நின்றிருந்தேன். இருட்டுக்கு மெதுவாகக் கண்கள் பழகிவிட்டிருந்தன. அவள் அவன் சட்டைப் பையில் கையை விட்டாள். அவன் அவள்மீது விழுந்தான். ஆவேசமாக அவள் அவனைக் கீழே தள்ளி எட்டி எட்டி உதைத்தாள். வேகமாக ஓடிச் சென்று அவளைப் பிடித்துத் தள்ளினேன். முடியைக் கொத்தாகப் பற்றிச் சுவரில் அடித்தேன். கையைக் கடித்துவிட்டு ஓடினாள். இடுப்பிலிருந்து அந்த மொட்டைச் சிறுவன் போன்று ஒரு கத்தியை எடுத்தாள். எங்களை நோக்கி நீட்டியவாறே பாலத்தின் ஒரு தூணுக்கு அப்பால் சென்று கத்தினாள். இடைவெளியின்றி அவள் எழுப்பிய சத்தம் அந்தப் பாலத்திற்கே வாய் முளைத்துக் கத்துவதுபோல இருந்தது. நாங்கள் பதறியடித்துக்கொண்டு ஓடத் தொடங்கினோம். இருட்டுக்குள் வழிகளைக் கண்டுபிடிப்பது இயலாததாக இருந்தது. அவனது கையைப் பிடித்து இழுத்துக்கொண்டே ஓடினேன். மனிதச் சதைகள் காலில் மிதிபட்டு எழுந்துகொண்டன. ஆட்களின் எண்ணிக்கை கூடிவிட்டிருக்கும் என எண்ணும்படியாகக் காலடிகளின் ஓசை இடைவெளியின்றி கேட்டுக்கொண்டிருந்தது. மூச்சுத் திணறலைப் பொருட்படுத்தாமல் வேகத்தை அதிகப்படுத்தினேன். திடுமெனச் சில்லரைகள் தெறித்துச் சிதறின. காலில் ஏதோவொன்று சிக்கிக்கொண்டது போலிருந்தது. போர்வைகளை விலக்கி எழுந்த கிழங்களின் வசவுகள் அதுவரை கேட்டறியாத விதத்தில் ஜோடிக்கப்பட்டிருந்தன. ஓடியபடியே அந்தப் பாத்திரத்தைப் பிடுங்கி எறிந்தேன். அதிலிருந்த மீதிச் சில்லரைகளும் வெளியே விழுந்து ஓடின. அப்போதுதான் முரளி கையைவிட்டு நழுவியது உறைத்தது. நின்று தேட நேரமின்றிப் பின்னால் ஆட்கள் விரைந்துகொண்டிருந்தார்கள். எதையும் யோசிக்கும் நிதானத்தை இழந்து ஒரு தூணைக் கடந்து சென்றபோது மின்னல் வெட்டி மறையும் கணத்தில் அந்தப் பக்கமாகப் பார்வையைச் செலுத்தினேன். அங்கு யாரோ ஒருவனைப் பிடித்து இரண்டு மூன்று பேர் அடித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு அவன் ஓட்டமெடுத்தான். அவர்களுக்கருகில் எதையுமே பொருட்படுத்தாமல் ஓர் உருவம் மட்டும் தரையில் தவழ்ந்து தடவியவாறே சிதறிய சில்லரைகளை ஒவ்வொன்றாகப் பொறுக்கித் துணிப்பையில் போட்டபடியிருந்தது. அதற்குள் மற்றொரு தூணுக்கருகில் சென்றுவிட்டதால் காட்சிகள் மறைந்துபோயின. எவரோ ஊளையிட்டுக் கத்தும் ஒலியை அடுத்து, தரையை ஓங்கி ஓங்கி மிதித்தபடி ஓடும் கால்களின் சப்தத்தை மட்டும் கேட்டேன். தூணைத்தான் சுற்றுகிறேன் என நினைத்து ஓடியபோது தார்ச் சாலைக்கு வந்து சேர்ந்திருந்தேன். மூச்சு சீரான நிலைக்கு வரும்வரை சற்றுத் தள்ளி நின்றேன். உடம்பு நடுங்கியபடியிருந்தது. சட்டை நனையும்படியாக வியர்வை ஊற்றுப்போலக் கொட்டியது. முரளியைப் பற்றிய யோசனையுடன் மெதுவாக நடக்கத் தொடங்கினேன். திடுக்கிடும்படி “ஹோ”வென்ற இரைச்சல் கேட்டது. அப்பக்கமாகத் திரும்பினேன். பிரம்மாண்டமான ‘கட்-அவுட்’ ஒன்றை நிறுத்த ஒரு கும்பல் வெகுவாகப் பிரயத்தனப்பட்டுக்கொண்டிருந்தது. அருகில் சென்றேன். தோண்டப்பட்டிருந்த குழிக்குள் மூங்கில்கள் பாந்தமாக அமர்ந்ததும் ஆட்கள் அனைவரும் பத்தடி தூரம் முன்னோக்கி விலகி ஓடி அதனைக் கண்டார்கள். கோமாளித்தனமான உடையிலிருந்த அந்த நாயகனின் தலைப்பகுதி சற்றே சாய்ந்திருப்பதுபோல அவர்களுக்குப் பட்டிருக்க வேண்டும். கூட்டத்திலிருந்து ஒருவன் ஓடிவந்து கிடத்தப்பட்டிருந்த ஏணியைத் தூக்கி நிறுத்தி மேலே ஏற ஆரம்பித்தான். கோணலைச் சரிசெய்து தோளில் கிடந்த மொந்தையான மாலையை அவன் தலைவனுக்குப் போட்டதும்தான் பெற்ற குழந்தையைக் கையிலேந்தும்போது உண்டாகும் பரவசத்தை அவன் முகத்தில் நியான் விளக்குகளின் ஒளியில் கண்டேன். அப்படியே நகர்ந்து நாயகனை வளைத்து நின்றிருந்தவளுக்கு ஒரு முத்தம் தந்தான். கீழே கூட்டத்திலிருந்து கைத்தட்டல்களும் விசில்களும் பறந்தன. களேபரத்தில் ரிக்ஷாவில் படுத்துக் கிடந்தவன் அவர்களின் பிறப்பு பற்றிக் கொச்சையான வசவை உதிர்த்துவிட்டுக் கால்மாற்றிப் போட்டுப் புரண்டு படுத்தான். இவ்வளவு நெருக்கடியிலும் இவையெல்லாம் எப்படி மனத்தில் பதிகின்றன என வியப்பாக இருந்தது. அங்கிருந்து, முரளி பற்றிய கவலையுடனேயே தெரு இருக்கும் பகுதியை அடைந்ததும் எங்கும் மின்சாரமின்றி இருண்டு கிடந்தது. தட்டுத் தடுமாறி அறைக்குச் சென்று படுக்கைகூட விரிக்காமல் அப்படியே விழுந்தேன்.
நான்கைந்து அடிகளை வைத்ததும் தலைமுடியை ஏதோ உரசிப் போயிற்று. கழுத்தை நிமிர்த்தியபோது, மேலாகக் கடந்து சென்ற காகமொன்று அரைவட்ட மடித்துத் திரும்பியது. இளஞ்சூட்டோ டு எச்சம் தோளில் விழுந்தது. சுதாரிப்பதற்குள் மேலுமொன்று அலகால் உச்சந்தலையைக் கொத்திவிட்டுப் பறந்தது. இது விபரீதமான காரியத்திற்கான வெள்ளோட்டம் என உள்ளுணர்வு கூறிற்று. காரணத்தை மனம் தேடிச் சலித்தது. பித்ருக்கள் பழிதீர்க்கத் தங்கள் கூட்டாளிகளோடு புறப்பட்டிருக்கக்கூடும் என்றாலும் அவர்களுக்கும் எனக்கும் எவ்விதமான பிணக்கோ பகையோ இருந்ததில்லை. உறவு இருந்திருந்தால்தானே பகை தோன்றியிருக்க முடியும்? தவழும் பிராயத்திலேயே அவர்களின் படங்களுக்கு முன் கரம் குவித்து, கண்மூடி நிற்கவைக்க அம்மா பெரும் முயற்சி செய்திருக்கிறாள். சில வினாடிகள் நிலவிய அமைதியில் மிக இயல்பாகத் தலை திருப்பிப் பார்த்தேன். அதற்குமுன் அவ்வளவு காகங்கள் சேர்ந்தாற்போல் ஒன்றை மட்டும் இலக்காக வைத்துப் பறந்து வருவதை எங்கேயும் எப்போதும் பார்த்ததேயில்லை. எந்தச் சத்தமுமின்றி, இறகசைப்புகூடக் காட்டிக் கொடுத்துவிடும் என்றெண்ணி கழுகு போல றெக்கைகள் அந்தரத்தில் நிற்க அவை தாழப் பறந்து வந்தன. தலைக்கு மேலாக வட்டமிடத் தொடங்கின. முகத்தை இரு கைகளாலும் பொத்தியபடி ஓட ஆரம்பித்தேன். அவற்றின் கர்ண கடூரமான கத்தல்கள் சாபம்போலத் துரத்தின. கல் தடுக்கிக் குப்புற விழுந்து புரண்டெழுந்தேன். வெளி சலனமற்றிருந்தது. காகங்கள் கிடக்கட்டும், எந்தப் பறவையும் அங்கு தென்படவில்லை. உடம்பை நன்றாகப் பார்த்தேன்.
எங்கும் அவற்றின் அலகுபட்டு ரணமானதற்கான காயங்கள் ஏதுமில்லை. சிறிது தூரத்தில் சடலம் ஒன்று எரிந்துகொண்டிருந்தது. நீண்ட கழியுடன் அருகில் நின்றிருந்த வெட்டியானை நோக்கித் தீயின் சுவாலைகள் காற்றுக்கு அலைந்தன. நா வறண்டு தாகம் மேலிட்டது. ஊருக்குள் நுழைந்து, குடத்துடன் எதிர் வந்த பெண்ணிடம் நீர் கேட்டேன். வீட்டிற்குள் சென்று மறைந்தாள். அவளைவிட இளம்பெண் சொம்பை முகத்திற்கெதிரே நீட்டினாள். எங்கோ பார்த்தது போன்ற நினைவு, சரிதான். முரளியின் பர்ஸிலிருக்கும் புகைப்படத்தில் கண்டதுபோலவே இருந்தாள். “மு…ர…ளி” என்று இழுத்தேன். சொம்பைக் கீழே போட்டுவிட்டு “அண்ணே…” என்று உள்ளே ஓடினாள். உருண்ட நீர் இரைவிழுங்கிய மலைப்பாம்புபோல மெல்ல உடலை அசைத்து நகர்ந்தது.
அம்மாவும் அவளும் ஆங்காரமாகத் தலையிலடித்துக்கொண்டு கதறினார்கள். நெருங்கிப்போய்ப் பார்த்தேன். முரளியின் படத்திற்குப் பொட்டிட்டு, மாலை போடப்பட்டிருந்தது. வாழைப் பழத்தில் சாய்வாகக் குத்திவைக்கப்பட்டிருந்த ஊதுபத்தியிலிருந்து புகை சன்னமாக எழுந்து நெளிந்து மறைந்தது. பதறியடித்துக்கொண்டு எழுந்தேன். இரவு தாழிடப்படாமலேயே தூங்கிப்போனது தெரிந்தது.
முரளியைத் தேடிக்கொண்டு ஏறக்குறைய ஓடினேன். மற்றவர்கள் பார்க்கையில் நடப்பதுபோலவும் யாரும் இல்லாத இடங்களில் வேகத்தைக் கூட்டுவதுமாக இருந்தேன். போகிற போக்கில் அந்தப் பாலத்தைப் பயத்தோடு பார்த்தபோது பீதியில் கற்தூண்போல அப்படியே நின்றுவிட்டேன். உடம்பெல்லாம் உதறல் எடுத்தது. அதற்கு முன் தொடைகள் அப்படி நடுங்கியதில்லை. படபடப்பில் நெஞ்சு வேகமாக அடித்துக்கொள்ளத் தொடங்கியது. அருகே நெருங்க நெருங்க வியர்வையால் கைலி காலோடு ஒட்டிக்கொண்டுவிட்டது. பாலத்தின் அடியில் கூட்டம் கூட்டமாக வாயைப் பொத்தியபடி நின்ற ஆட்களைக் காவலர்கள் அங்கிருந்து நகர்த்திக்கொண்டிருந்தார்கள். தோள்களை விலக்கி எட்டிப் பார்த்தேன். பாதாளச் சாக்கடையில் தவறி விழுந்த உடலை மேலே எடுத்துக் குப்புறப் போட்டிருந்தார்கள். உடல் முழுக்கச் சாக்கடையின் சகதிகள் அப்பிக் கிடந்ததால் அடையாளம் காண முடியவில்லை. அடிவயிற்றில் கூர்மையான ஈட்டியைப் பாய்ச்சியதுபோல உணர்ந்தேன். எவரிடமும் விசாரிக்கத் தெம்பில்லாமல் முரளியின் மேன்ஷனுக்கு ஃபோன் செய்ய ஓடினேன். ஏகதேசமாக அங்கிருந்த அனைத்துக் கடைகளின் முன்னாலும் ஒரு ரூபாய் நாணயத் தொலைபேசி இருந்தும் அனைத்திலும் ஆட்கள் நின்று வினாடிகள் தீரத்தீர நாணயங்களைப் போட்டப்படியேயிருந்தார்கள். மாநிலத்தையே உலுக்கி எடுத்துக்கொண்டிருந்த பாடல், கடைகளின் உள்ளேயிருந்து பண்பலையில் ஒலிபரப்பாகிக்கொண்டிருந்தது. அனாதையாக நின்றிருந்த தொலைபேசிக்கருகில் செல்லும்முன், பெரிய சிரிப்பொலி கேட்டுத் திரும்பினேன். அவள் கையிலிருந்த டபராவிலிருந்து தேநீர் டம்ளருக்கு இறங்கிக்கொண்டிருந்தது. நெற்றியின் இடப்பக்கம் காபிப் பொடி போன்ற ஒன்று வைக்கப்பட்டிருந்தது. ஞாபகத்தில் மூடிக் கிடந்த புகைமூட்டம் மெல்ல விலகியது. இரவு அவளைச் சுவரில் மோதி அடிக்கையில் வெகு சமீபத்தில் கண்டிருந்தேன். அவள் அழைப்பால் வந்த வினைதானே இதுவெல்லாம். அவள் உறுப்புகளைப் பிடுங்கிப் பிய்த்து எறிந்தாலொழிய வெறி அடங்காது எனும்படி கோபம் மூண்டது. ஆவிபறக்கத் தேநீர் வந்தது. நாக்கில் பட்டதும் சுருக்கெனத் தைத்தது. அவளுக்கெதிராகப் போய் நின்றேன். தலை நிமிர்த்திய அதே நொடியில் அவள்மீது தேநீரை எறிந்தேன். “ஐய்யோ… யம்மா… ஐய்யய்யோ” என்று அலறினாள். “எரியுதே… எரியுதே…” எனக் கத்தியபடி மண்ணை எடுத்து முகத்தில் தேய்த்துக் கொண்டாள். ‘நங்’கென்று முதுகில் உதைத்தேன். “எவன்னே தெரியலையே… தேவிடியாப் பய… கொல்றானே…” பிலாக்கணம் ஒப்பாரியில் முடிந்தது.
அடிக்க ஓடி வந்தவர்களில் நடைமேடையிலிருந்து வந்தவர்கள் தவிர, மற்றவர்கள் அவளது இரவுநேர வாடிக்கையாளர்களாக இருக்கக்கூடும். பெரிய கல்லை எடுத்து ஓங்கினேன். பயந்து நின்று, பின் முன்னிலும் வேகமாக வந்தார்கள். கல்லைப் போட்டுவிட்டு ஓடினேன். அஜீரணத் தொல்லை இருந்த இரவுகளில் குறுக்குவழிகளில் நடந்து கண்டுபிடித்திருந்த தெருக்களும் முனைமழுங்கிய சந்துகளும் இப்போது உதவின. வெவ்வேறு இடங்களில் பதுங்கி எழுந்து ஓடினேன். திறந்திருந்த அறைக்குள் மூச்சிறைக்க நுழைந்து, கதவைத் தாழிட்டுவிட்டுக் கட்டிலில் விழுந்தேன். நாற்காலியில் அமர்ந்து சிகரெட் புகைத்துக்கொண்டிருந்த முரளி, அதை ஜன்னலில் வீசிவிட்டு மெதுவாக அருகில் வந்தான். உதடுகளின் விளிம்புகள் விரிய புன்னகைக்க முயன்றான். கண் கொட்டாமல் அவனையே பார்த்தபடி கிடந்தேன். மின்விசிறியின் சுவிட்சை அழுத்தினான். அது வேகமாகச் சுழலத் தொடங்கியது.