வறுமையிற் செம்மை
(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஒருநாள் ஓர் ஊருக்கு ஒரு பெரியவர் வந்தார். அவர் எல்லா ஆற்றல்களும் இனிது அமையப் பெற்றவர். அந்த ஊரிலே அருள் தங்கிய உள்ள முடையவர்கள் எத்தனை பேர் என்று ஆராய்ந்தறிந்து அவர்கட்கெல்லாம் செல்வம் பெருகுமாறு திருவருள் செய்ய எண்ணினார்.
ஊரினர் சிலரைக் கண்டு தமக்குச் சிறிது பொருள் உதவ வேண்டுமென்றும், உணவு உடை முதலியன அளிக்கவேண்டும் என்றும் கேட்டார். ஊரினர் பெரியவரைப் போற்றவில்லை. பெரியவர் ஒரு பொய்க்கோலத் துறவி என்று எண்ணினர். உணவுகூட அளிக்கவில்லை. அனைவருந் தத்தமது இவறன்மைக் குணத்தையே மிகுதியாகக் காட்டினார்கள். இறுதியிற் பெரியவர் ஒரு வறியவனிடஞ் சென்றார். “எனக்கு எதாவது உதவி செய்வாயாக!” என்று கேட்டார்.
அவ் வறியவன் அன்றாடக் கூலி வேலை செய்து பிழைப்பவனாகவிருந்தும் பெரியவரைப் போற்ற விரும்பினான். தன் நண்பன் ஒருவனிடஞ் சென்று வறுமையிற் செம்மை
சிறிது பொருள் கடன் பெற்றான். பெரியவருக்கு உணவிட்டான். நல்ல வேட்டி யொன்று வாங்கிக் கொடுத்தான். “வழிச்செலவுக்கு வைத்துக்கொள்ளுங்கள்” என்று கூறிச் சிறிது பொருளுங் கையில் கொடுத்தான்.
பெரியவர் வறியவனுடைய செயலைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தார். அவர் வறியவனைப் பார்த்து, “உனக்கு எல்லா நலன்களும் இனி துண்டாவதாக” என்று வாழ்த்துரை வழங்கிச் சென்றார். அவ்வாழ்த்துரையின் பலனாக வறியவன் விரைவிற் செல்வனானான்.
செல்வனான பின்னரும் தன்மனந்திரியாதிருந்து அறங்களிலே ஈடுபட்டான். பெரியவரைப் போற்றாத மற்றவர்கள் நாளடைவில் வறுமையை அடைந்து வருந்தினார்கள். “தாங்கள் வறுமையை அடைந்ததற்குக் காரணம், உணவும் உடையும் கேட்ட பெரியவரைப் போற்றாததேயாகும்” என்பதை அவர்கள் விரைவில் உணர்ந்தனர். தங்களின் அறியாமைச் செயலை எண்ணி எண்ணி வருந்தினர். ஆகையால், ஒவ்வொருவரும் நல்வழியிற் பொருளைச் செலவு செய்தல் வேண்டும்.
“தானமது விரும்பு” (இ-ள்.) தானம் – நல்வழியிலே பிறருக்குப் பொருள் கொடுத்தலை, விரும்பு – நீ நாடுவாயாக! அது : பகுதிப் பொருள் விகுதி.
– கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர், ஆத்திசூடி விளக்கக் கதைகள் (இரண்டாம் புத்தகம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1955,
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: May 4, 2022
பார்வையிட்டோர்: 2,728