டிங்டாங்
கதையாசிரியர்: நாஞ்சில்நாடன்
தின/வார இதழ்: தீபம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: October 4, 2026
பார்வையிட்டோர்: 94
(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்த மண்ணின் குணங்கள் சமநிலை கெடாமல் அப்படியே இருந்தன. வயது வந்தவர்களின் மக்கள் தொகையை இரண்டாக பிரித்தால்- ஐந்தாவது தோற்ற அந்த காலத்து முரட்டு மூடர்கள் என்றும், எஸ்.எஸ்.எல்.சி அல்லது பி.யூ.சி தோற்ற இளைய பாரத முரட்டு மூடர்கள் என்றும் இரண்டாக பிரியும். வயது அங்கே யாது மாற்றத்தையும் ஏற்ப்படுத்தியதில்லை. இந்த சீரில் மாதவம் செய்த மங்கையர் பிரிவைப்பற்றிப் பேச்சே இருக்க முடியாது……..நாஞ்சில் நாடன்
கொடுக்காமுடியை அந்த மாவட்டத்தில் அறியாதவர்கள் இல்லை. காரணம் அந்த ஊரில் பிறந்த கொடுக்காமுடிப் பலராமன், எம். எல்.ஏ. ஆகி செயற்கரிய காரியங்கள் (தனக்கு) சாதித்தவர். எல்லாக் கட்சிகளிலும் 1951 முதல் 1975 வரையிலும் இருந்திருக்கிறார். எனவே அந்த ஊர் பெயரளவில் பெரிய பேர் பெற்றுவிட்டது.
அது தவிரவும் அந்த ஊருக்கு ஒரு பெருமை உண்டு. அதற்குக் கார ணம் தடித்தனம். புறம்போக்கு மண்ணில் வளரும் கற்றாழை, தொட்டா வாடி, ஆனைநெருஞ்சி, நாயுருவி போலக் கணக்கற்று அந்த மண்ணில் தடித்தனமும் விளைந்தது. அந்த ஊர்க்காரர்களில் நான்கு பேர் சேர்ந்து எங்காவது வெளியே சென்றால் ஒரு அடிதடி நிகழ்த்தாமல் வரமாட்டார்கள்.
கொடுக்காமுடிப் பிடாகை என்றாலே மற்றப் பதினோரு பிடாகை யைச் சேர்ந்தவர்கள் அஞ்சி நடுங்கிய காலங்கள் உண்டு. சுசீந்திரம், பூதப் பாண்டி தேரோட்டங்களில் மற்ற பிடாகையைச் சார்ந்தவர்கள் எல் லோரும் வந்து தேர்வடம் பிடிக்கத் தயாராக இருந்தாலும் கொடுக்கா முடிக்காரர்கள் வந்தாகவில்லை என்றால் கொஞ்சம் யோசிக்கத்தான் செய்வார்கள். கனபரிமாணங்களில் அந்த ஊர் மக்கள் வஞ்சகமில்லாமல் வளர்ந்திருந்த காரணமோ, இல்லை மலை காடு என்று அச்சமின்றி ஏறி இறங்கி வேலை செய்த உரமோ – அவர்களைக் கண்டாலேயே நோஞ் சலும் கச்சலுமாகத் தோன்றும் மற்றவர்களுக்கு முதுகுத்தண்டில் சில் லிக்கும்.
பழைய திருவிதாங்கூர் சமஸ்தான தர்பார் காலங்களில் ஊட்டுப் புரைகள் எல்லாம் உயிரோடு கலகலத்துக் கொண்டிருந்த நேரங்களில் கொடுக்காமுடிக்காரர்கள் வருகிறார்கள் என்றால் இராமனுக்குப் பிளந்த கடல்போல மக்கள் பிளந்து வழிவிடுவார்கள். சண்டையிலும் கோபத் திலும் ஒரு ஆளைப் பிடித்துப் பாயச அண்டாவில் எறிந்ததும் பிறகு அவர் தன்னாள் என்று தெரிந்து மோர் அண்டாவில் போட்டதும் தேசிங்குராஜன் கதைகளைப் போல இன்னும் அங்கே பேசப்படுபவை.
எங்கும் மரியாதை படிக்காத சட்டம்பிகளான பஸ் கண்டக்டர்கள் கூட கொடுக்காமுடிக்கு இரண்டு டிரிப் போய்வந்தால் ஒழுக்கசீலர்களாகி விடுவார்கள். கன்னியாகுமரி மாவட்டமேப்பில், நாகர்கோயிலைத் தாண்டி வடக்கே ஓடும் பாலமோர் ரோட்டின் ஒன்பதாவது கிலோ மீட்டரில் ஒரு மருதமரச் சந்தி வரும். அதில் பிரிந்து அறுபது டிகிரி கோணத்தில் மேற்கே சரியும் தார் ரோட்டில் முதல் கிலோமீட்டரில் இருக்கும் ஒரே ஊர் கொடுக்காமுடி. முன்னும் பின்னும் வேறு ஊர்கள் இல்லை. எனவே மருதமரச்சந்தியில் திரும்பி கொடுக்காமுடி ரோட்டில் பஸ் ஓடத் தொடங்கியதும் சடசடவென்று எந்தத் திக்கிலிருந்தாவது கண்டக்டருக்கு அடிகள் விழுந்தால் டிரைவரைத் தவிர சாட்சி சொல்ல ஆளிருக்காது. ஆளும் அகப்படமாட்டான். எனவே வெறும் மசணை களாக, உளுந்து அரைத்த அம்மிகளாகப் பார்த்துப் பொறுக்கிய கண்டக் டர்களைத்தான் போக்குவரத்து நிர்வாகம் அந்த ரூட்டில் அனுப்பும்.
மலைப்பாறைகள், பள்ள மேடுகள், இடையிடையே துண்டு துண்டான நிலப்பரப்புக்கள், தோப்புக்கள், ஒன்றிரண்டு காட்டு ஓடைகள், நீர் வாவிகள், புங்கு வாகை மரங்கள், நொச்சி நாணல் சீமை உடைப் புதர்கள், ஆவாரை, எருக்கலை மூடுகள், காக்கை, மைனா, செண்பகம், நாரை, சுடலைமாடன், இசக்கியம்மன் கோயில்கள்- இவைதான் இலக்கணம் கூறும் கரு உரிப் பொருள்கள். அவற்றில் கண்ட படி குளறுபடி வந்ததற்கு அந்த ஊர் மக்கள் எந்தவிதத்திலும் பொறுப் பல்ல. இடம் என்னவோ மலையும் மலைசார்ந்த இடம் என்றாலும் மக்களின் தொழில் குறிஞ்சிக்கானதல்ல.
முரட்டுத்தனத்தின் உடன்பிறப்பான மடமையும் அந்த மண்ணில் உபபொருளாக விளைந்தது. நியாயங்கள் எல்லாம் கரிக்குருவி நியாயந் தான். எதையும் பகுத்துப் பார்ப்பது என்பதோ, புரிந்து கொள்ளுதல் என்பதோ அந்தச் சீமையில் நினைத்துப் பார்க்க முடியாதது. நம்பிரான் தோப்புக் கள்ளுப்பதநீர்,கடுக்காங்குளத்துக் கீழச் சரிவில் ஒதுங்கும் நடமாடும் விபச்சார விடுதிகள், சம்பா அரிசிச் சோறு, சாளை மீன்குழம்பு இவற்றை மீறியும் சில இளைஞருக்கு அறிவு துளிர்த்ததுண்டு. துளிர்த் தவர்களில் சிலர் இந்த மடமை, முரட்டுத்தனத்தோடு போரிட்டுத் தோற்று ‘இரண்யாய நம’ என்று அவர்களிலேயே அரை வேக்காடு அறிஞர்களா னார்கள். சிலர், பக்கத்துக் களத்தில் வேரோடி அதிலிருந்து முளைவிடும் கறிவேப்பிலைக்கன்றுகள் போல இடம் பெயர்ந்தார்கள்.
எனவே அந்த மண்ணின் குணங்கள் சமநிலை கெடாமல் அப்படியே இருந்தன. வயது வந்தவர்களின் மக்கள் தொகையை இரண்டாகப் பிரித்தால்-ஐந்தாவது தோற்ற அந்தக் காலத்து முரட்டு மூடர்கள் என்றும் எஸ்.எஸ்.எல்.சி அல்லது பி.யூ.சி. தோற்ற இளைய பாரத முரட்டு மூடர்கள் என்றும் இரண்டாகப் பிரியும். வயது அங்கே யாது மாற்றத் தையும் ஏற்படுத்தியதில்லை. இந்தச் சீரில் மாதவம் செய்த மங்கையர் பிரிவைப் பற்றிப் பேச்சே இருக்க முடியாது.
எல்லோரும் அங்கு ஓரளவு வசதியுள்ளவர்கள். இரண்டு கோட்டை விதைப்பாடு, சுக்குநாறிப் புல்லைத் தவிர வேறேதும் விளையாத கொஞ்சம் புஞ்சை. கல்யாணங்களுக்கு வெளியூர்களில் ஆஜர்கொடுக்கும் போது இந்தப்புஞ்சையை எஸ்டேட் என்று வெகு கௌரவமாகச் சொல்லிக் கொள்வதுண்டு. ஒன்றிரண்டு பசுமாடுகள், ஈரணை ஏர் மாடு- ஒரு அளவான குடும்பத்துக்கு இது போதும். ஆதலாலும் சோம்பலில் சுகங்கண்டுவிட்டதாலும் அவர்கள் எப்போதும் சொர்க்கத்திலேயே இருந் தார்கள். சாதாரணமாக வாரத்தில் ஒருநாள் வடசேரி கனகமூலம் சந்தைக் கும் தேவை ஏற்பட்டால் இழவு கல்யாண வீடுகளுக்கும் அறுவடைக்குப் பிறகு சீலைத் துணி எடுக்கவும் அவர்கள் வெளியூர் போவார்கள். விடலைப் பையன்கள் மணத்திட்டை டூரிங் சினிமாக் கொட்டகையில் எம்.ஜி.ஆர்.சினிமாவோ, தெலுங்கு டப்பிங் படமோ பார்க்க வரு வார்கள். பெண்கள் ஆவணி மாதத்து ஞாயிறுகளில் நாகரம்மன் கோயில், ஒடுக்கத்திய வெள்ளிகளில் குமாரகோயில் அல்லது மருங்கூர் முருகன் கோயில், மாசி மாதத்தில் மண்டைக்காடு அம்மன்கோயில் என்ற சாக்கில் வெளியே வருவார்கள். இதுதவிர ஏதாவது ஒரு சித்தப்பாமகள் குழந்தை பெற்றால் ஒரு பீயர்ஸ் சோப் போடும் மதனி மகள் பூப்படைந்தால் உளுந்துக் களியோடும் தம்பி பெண்டாட்டி குழந்தை உண்டாகி இருந் தால் முந்திரிக்கொத்தோடும் வெளிக் கிளம்புவார்கள்.
இந்தக் கொடுக்காமுடி என்னும் வீரம் விளையும் மண்ணிலிருந்து தெற்கே சூலமில்லாத கிழமையில், ராகு காலம் தாண்டியதும் செத்தாடு தூக்கி சிவன் பிள்ளை என்பவர் வலது காலை எடுத்து வைத்து வில் வண்டியில் ஏறினார்.
சவுரி மெத்தையின் மேல் சமுக்காளம் விரித்து, சாட்டின் உறை யோடாகிய தலையணைகள் வைத்து, சலங்கை மணி வைத்துக் கட்டிய முன்பின் திரைச்சீலைகளோடான அந்த வில்வண்டியும் வெண்கலக் குப்பிகளைக் கொம்பில் வைத்த ஒட்டன் மாடுகளும் சிவகுருநாத பிள்ளையின் கரிய பெரிய உடம்பும் குடவண்டி வயிறும் அவரை ஒரு மூத்த பிள்ளை எனச் சொல்லும்.
படுதாக்களை ஒதுக்கிப் போட்டு வண்டியில் ஏறி உட்கார்ந்து, ‘அடிடா சற்குணம்” என்று வண்டிக்காரனைச் சத்தங்காட்டி விட்டுச் சிவகுருநாத பிள்ளை யாத்திரையைத் தொடங்கினார்.
வழியில் எதிர்ப்பட்டு, இவரை அடையாளங் கண்டுகொண்டு ”என்னா, அண்ணாச்சி! தூரமா?” என்று கேட்கும் தெரிந்தவர்களிடம் ‘சும்மா இப்பிடி தெக்கே போயிட்டு வரணும்” என்று பதில் சொன்னார்.
அது என்னவோ தெரியவில்லை! அந்தப் பகுதி மக்கள் யாவரும் ‘தெக்கே’ என்று சொன்னால் அதற்கு நாகர்கோயில் என்று பொருள் கொள் கிறார்கள். மேற்கே என்றால் தக்கலைக்கு மேற்கே… தொடுவட்டி, களியக்காவிளை, திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழை… கிழக்கே என்றால் திருநெல்வேலி, தொடங்கி மதுரை, திருச்சி, கோவை, சென்னை, பம்பாய், கல்கத்தா, டெல்லி எல்லாம் கிழக்கே தான் (யாரு? அவனா? அவன் கிழக்கே பம்பாயிலேயோ எங்கேயோல்லா இருக் கானாம்!) வடக்கே கண்முன் நிற்பது மலை ஒன்றே! ஆகையால் திசை சொல்வதில்லை. எனவே, தெற்கே, புறப்பட்ட சிவகுருநாத பிள்ளை முற்பகல் சுமார் பத்துமணிக்கு நாகர்கோயில் மணிக்கூண்டு சந்திப்பை அடைந்தார். இந்த திக்விஜயத்தின் நோக்கம் பெரிதாக ‘டிங் டாங்’ என்று மணியடிக்கும் வால் கிளாக் வாங்குவது. ஆகையால் ‘செறுக்கி விள்ளை களுக்குத் தெரிஞ்சா கொட்டியான் போட்டிரும்… வாங்கிட்டு வாறது வரை மூச்சுக் காட்டப்படாது.’சந்திப்பை அடுத்த முடுக்கு ஒன்றில் வண்டியை அவிழ்த்துத் தாவளம் போட்டார்.
தன்னுடைய அத்தான்- அதான் குலசேகரன்புதூர்க்காரரு… அட நம்ம வைரமுத்துப்பிள்ளை அம்மாச்சனுக்க ரெண்டாவது மகன்… அதான்பா சோழபுரத்திலே பொண்ணு கெட்டீருக்காரே… ஒத்தைக் காலைக் கிந்திக்கிந்தி நடப்பாரே – அவரு சொன்ன அடையாளத்தின்படி கடிகாரங்கள் விற்கும் கடையைத் தேடினார்.
மணிக்கூண்டு ஜங்ஷனில், கலைவாணர் என். எஸ்.கிருஷ்ணனின் சிலை பார்க்கின்ற திசையில் ஏறும் காலேஜ் ரோட்டில் வலதுபுறம் ஐந்தாவது கடை என்பது அவருக்கு மனப்பாடமாகிப்போன அடை யாளம். எனவே அந்த லெக்கில் போய் நின்றர். வண்டிக்காரன் சற்குணம் பின்னால் துண்டைத் தோளில் கண்டமாலையாகப் போட்டுக் கொண்டு கம்பைக் கட்கத்தில் இடுக்கிக்கொண்டு, மேற்படி சிவகுருநாத பிள்ளை யின் தனித்த படை பண்டார சேனையாக நின்றன்.
அவர் பார்த்த திசையில் பெரிய பெரிய கடிகாரங்கள் பத்தில், எட்டே காலில், பதினொன்றில், மூன்றரையில், பன்னிரண்டில்… சதுரத்தில், முக் கோணத்தில், வட்டத்தில், நீள் சதுரத்தில், தனித்தனிக் குணச்சித்திரங் களாக ஆடாது, அசையாது நின்றன.
‘லெக்காளி சொன்ன கடை இதான் டேய் – !’என்று மனதுக்குள் கூப்பாடு போட்டுவிட்டு ஒரு’ பேஷ்கார் அங்ஙத்தை’யைப் போல அவர் கடைக்குள் நுழைந்தார். வால் போலச் சற்குணமும் நுழைந்தான்.
ஒன்றுக்கு முன்று தரம், மண்பானையைத் தட்டிப் பார்ப்பது போல் பத்திருபது சுவர்க்கடிகாரங்களைப் பரிசீலித்து, தான் விரும்பியதுபோல ‘டிங்டாங் கடிகாரம் ஒன்றைத் தெரிந்து எடுத்தார். அவருக்கு ஏகமகிழ்ச்சி! “என்னலே சற்குணம்! மணி எப்படி?”
”ஆமா பண்ணையாரே! நல்ல அளகா இருக்கு. மங்களாவிலே மாட்டினா அமைப்பா இருக்கும்.’
சிவகுருநாத பிள்ளைக்கு ஒரே கொண்டாட்டம். கடிகாரத்தைக் கொண்ட அட்டைப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு மணிமேடை ஜங்ஷனில் வந்ததும் கேட்டார், ‘என்னா சற்குணம்? தண்ணி கிண்ணி குடிக்காண்டாமாடே! ஆமாம் என்றாலும் சரியில்லை, வேண்டாம் என்றாலும் போயிற்று! எனவே சற்குணம் மௌனியானான்.
‘தண்ணி கிண்ணி’ குடிப்பது என்றால் அந்த நாட்டு மொழியில் இரண்டு தோசை, ரசவடை, இரண்டு மூன்று அகப்பைகள் சட்டினி சாம்பார் என்று பொருள். காலையானாலும் மதியமானாலும் சாயங்கால மானாலும் வயிறு பசித்தாலும் பசிக்காவிட்டாலும் இந்தத் தண்ணி கிண்ணி குடிப்பது என்பது ஒரு சடங்காகையால் அதையும் நிறைவேற்றி, திரும்பவும் கொடுக்காமுடியை அடையும்போது மணி பன்னிரண்டு தாண்டிவிட்டது. காளைகளைத் தண்ணீர்காட்டிக்கட்ட சற்குணத்தை ஏவி விட்டு கடிகாரம் இருந்த அட்டைப் பெட்டியோடு சிவகுருநாத பிள்ளை வீட்டில் நுழைந்தார்.
நுழைந்ததும்… சட்டைபோடும் வழக்கமில்லையாகையால் கழற்றத் தேவையுமில்லாமல், உயரமானதொரு முக்காலியை எடுத்து வாசலுக்கு எதிர்ப்புறமான அந்தச் சுவரோரம் போட்டார். அட்டைப் பெட்டியைப் பிரித்தார். முதலிரவில் முதன் முதலில் மனைவியைத் தொடும் கணவன் போலக் கடிகாரத்தைத் தொட்டார். அதன் தன்மையில், மென்மையில் சில நொடிகள் மெய்மறந்தார்.
பிறகு முக்காலி மீதேறி மத்தியில் இருந்த மகாத்மாகாந்தி படத்தை இறக்கி, கடிகாரத்தை மாட்டினார். கடைக்காரர் சொன்னது போல் பெண்டுலத்தைத் தொங்கவிட்டார். மணி என்ன என்று சரியாகத் தெரிய வில்லை. மாலை ஐந்து மணி ‘ஊத்து’ப் போடுவது வரைகாத்திருக்கவும் பொறுமை இல்லை. எனவே காளைகளைக் கட்டிவிட்டு வந்த சற் குணத்தை உள்ளூர் ஆரம்பப் பாடசாலைக்கு மணி பார்க்க விரட்டினார். வேட்டை நாய்போல ‘ஒற்ற ஓட்டத்தில்’ ஓடித் திரும்பிவந்த சற்குணம் சொன்னபடி, பன்னிரண்டில் செயலற்று நின்ற கடிகார முட்களைப் பன்னிரண்டு பதினைந்துக்குத் திருப்பினார். கீ கொடுத்தார். பெண்டு லத்தை ஆட்டிவிட்டார். கீழே இறங்கினார்.
‘டிக்டிக், டிக்டிக், டிக்டிக்’ என்ற ஓசை அவருக்குப் புளகாங்கிதத்தை ஏற்படுத்தியது. அதன் மணியோசை கேட்டல்லாமல் அடுக்களைக்குப் போவதில்லை என்று முடிவு கட்டியவளாய் வாசற்படியருகில் நின்று மணியைப் பார்த்தவாறிருந்த மனைவியிடம் கேட்டார்.
“எப்படி விள்ளா இருக்கு?”
“… கொள்ளாம்… நல்ல அம்சமா இருக்கு…”
ஆடாமல் அசையாமல், விலகாமல் அகலாமல் நல்ல கவனத்தோடு பார்த்துக் கொண்டிருந்தபோது ‘டிங்டாங்’ என்று ஒலி எழுப்பியது.
அந்த இனிய சுநாதம்’ கேட்டுச் சிவகுருநாத பிள்ளை தம்பதிகளும் சற்குணமும் பரவசப்பட்டனர். அந்தப் பரவசத்துக்குதன்முகத்துச் சுட்டித் தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய் பொன்முகக் கிண்கிணி ஆர்ப்பப் புழுதி அளையும், கண்ணனைக் கண்டபெரியாழ்வாரின் பரவசம் பக்கத்தில் வரமுடியாது.
”சரி…இனி என்னா?மணி வாங்குங்கோ வாங்குங்கோண்ணு உயிரை எடுத்தியே… மணியும் வந்தாச்சு! போய்ச் சோத்துக்குண்டான வழியைப் பாரு…” சிவ குருநாத பிள்ளை மனைவியைச் சீண்டினார்.
நாற்பது வயதுக்குமேலும் அந்த அம்மாளுக்கு நாணம் வந்தது. “ஏன்? அதுக்குள்ளேயும் பசிச்சிட்டாங்கும்… கிளப்பிலே காப்பி குடிக் காமலா வந்திருப்பியோ” என்று செல்லத்தோடு ஆட்சேபித்தாள்.
நொடிகள் டிக் டிக்’கில் செத்துச் செத்து விழுந்தன. வேறு வேலையில் இருந்தாலும் அந்தப்பக்கம் போகும் போதும் வரும்போதும் மணியை ஏறிட்டுப் பார்க்க அவர்கள் தவறவில்லை. பூதப்பாண்டி உயர் நிலைப்பள்ளிக்குப் போயிருக்கும் பிள்ளைகள் சாயங்காலம் வந்து பார்த்தால் ஆனந்தக் கூத்தாடுவார்கள் என்று நினைக்கும்போது இருவருக் கும் நெஞ்சு பூரித்தது.
‘டிங் டாங்’. காலதேவனின் பண்ணைக்கு ஒருவன் போலக் கடிகாரம் அடித்து ஓய்ந்தது.
பக்கத்து அறையில் சாய்வு நாற்காலியில் இளைப்பாறிக் கொண் டிருந்த சிவகுருாத பிள்ளைக்குச் சற்றுத் திகைப்பாக இருந்தது. கொஞ்சம் முன்னால் தானே ஒன்று அடித்தது. மறுபடியும் ஒன்றா? ஒரு சிறிய சந்தேகம். மனைவியை விளித்தார்.
”ஏவுள்ளா… மணி எத்தனை அடிச்சது? நீ கேட்டியா?”
”ஒரு சத்தந்தான் காதில் விழுந்தது ஏன்?”
“இல்லே கொஞ்சம் முன்னாலேதானே ஒண்ணு அடிச்சுதுண்ணு பார்த்தேன் … சரி சரி! நாம வேற எங்கேயாம் கெவனத்திலே இருந்திருப்போம்…”
அப்போது அந்தப் பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைத்தாலும் அடுத்த முறை அடிக்கும்போது சரியாகக் கவனித்துக் கேட்க வேண்டும் என்று சிவகுருநாத பிள்ளையும் அவர் மனைவியும் தனித்தனியாகத் தீர்மானித்துக் கொண்டனர்.
மேலும் பல ‘டிக் டிக்’ ஒலிகள் வாடி உதிர்ந்தன. வேலை முடிந்த தற்கு அடையாளமாக ஈரக்கையைக் கண்டாங்கி முந்தானையில் துடைத்து விட்டு-“இன்னாருங்கோ… சாப்பிட வாறேளா?” என்று அழைத்தாள் அவர்மனைவி.
“செத்தப் பொறு! அடுத்தாப்பிலே என்ன அடிக்குதுண்ணு பார்த்துப் புடுவோம்…” பரீட்சை ரிசல்ட் எதிர்பார்க்கும் மாணவன் போல, பிரசவ அறையின் வெளியே காத்திருக்கும் கணவன் போல, மங்களாவில் பெஞ்சின் மீது வெற்றிலைச் செல்லத்தோடு அவரும் அரங்கு வாசற்படியில் சாய்ந்து உட்கார்ந்து அவளும் ஏகமனதாக எதிர்பார்த்த அந்த நொடி வந்தது. ‘டிங்டாங்.’
சிவகுருநாத பிள்ளையின் மனைவிக்கு அதிர்ச்சி.
சிவகுருநாத பிள்ளைக்கு அதிர்ச்சி முட்டையிட்டுக் குஞ்சும் பொரித்து விட்டது.
எழுந்தார். மணியருகே போனார். உற்றுப்பார்த்தார். அந்தக் கடிகாரத்தின் தகப்பனின் சாதியைக் கண்டுபிடித்துத் திட்டினார். கமா போட்டார். மேலும் திட்டினார். ‘நாறக்… மவன் மணி…எப்பப் பார்த்தாலும் ஒண்ணுல்லா அடிக்கு… இதுக்கா சொளை சொளையா இருநூறு ரூவா அவுத்துக் குடுத்தேன். எலே சற்குணம்… வண்டியைக் கட்டுடா…சவத்தை உடனே தொலைச்சுத் தலை முளுகீரணும். பொறவாட்டுப்போனா அந்தக்கடைக்காரர்கண்டார… வுள்ளே அங்கிறு இங்கிறு என்பான்…”
சற்குணம் காளையை அவிழ்க்கப் போனான்.
– தீபம், ஏப்ரல் 1977.
நன்றி: https://nanjilnadan.wpcomstaging.com/
![]() |
நாஞ்சில்நாடன் வாழ்க்கைக் குறிப்பு: பெயர் : G. சுப்ரமணியம் (எ) நாஞ்சில் நாடன்எழுதும் துறை : நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரைபிறந்த நாள் : 31 டிசம்பர் 1947பிறந்த இடம் : வீரநாராயணமங்கலம்தாழக்குடி அஞ்சல், தோவாளை வட்டம்,கன்னியாகுமரி மாவட்டம்.தமிழ் நாடு – 629 901.முகவரி : G. Subramaniyam (NanjilNadan)Plot No 26, First Street, VOC Nager, Near Euro Kids, KovaipudurCoimbatore – 641 042, Tamilnadu.Phone:…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
இரண்டு கடவுள் வாழும் வீடு
செ.தமிழ்ராஜ்
October 12, 2026
மதுரை விடியல்
புஷ்பராஜ் கந்தசாமி
October 12, 2026
சரசுவின் சௌந்தர்ய லஹரி
கவிஞர் கண்ணதாசன்
October 12, 2026
