சுரப்பு
கதையாசிரியர்: நாஞ்சில்நாடன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: October 4, 2026
பார்வையிட்டோர்: 66
(1983ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பெற்றோர்கள் பட்டினியும் பசியும் கிடந்து என்னைப் படிக்க வைத்தார்கள். நானும் அந்தப் பொறுப்பை உணர்ந்து விடுமுறை நாட்களில் மண் சுமந்து, செங்கல் சுமந்து, உர மூட்டைகள் சுமந்து படித்தேன். இன்று நல்ல நிலைமையில் இருக்கிறேன். அந்த அனுபவங்களை நினைத்து எனக்கு வருத்தமில்லை. சந்தோஷமாகத்தான் இருக்கிறேன். அவையெல்லாம் சேர்ந்துதான் என்னை ஒரு படைப்பாளியாக்கி இருக்கின்றன…நாஞ்சில்நாடன்
மாடுகளின் மீது மரியதாசுக்கு தனியானதோர் அன்பு ஏற்பட்டு விட்டது. தினமும் காலையில் மாட்டுத் தொழுவத்தில் சாணி வழிப்பது அவனுக்கு பிரித்துத் தரப்பட்டிருந்த வேலைகளில் ஒன்று. உறங்கி எழுந்து முகம் கூடக் கழுவாமல் அவன் மாட்டுத் தொழுவில் போய் நிற்பான். ஆரம்பத்தில் எல்லாம் மிகவும் துன்புறுத்துவதான வேலையாக இருந்தது. இன்னும் கொஞ்சம் நேரம் கூட கிழிந்து தைத்த வேட்டியின் அழுக்கு மணம் பொதிய படுத்துக் கிடப்பதின் ஆனந்தம் இழப்பு. விடிந்ததும் விடியாததுமாய் இந்த மூதேவிகளின் முகத்தில் – உண்மையில் முகத்தில் கூட இல்லை, குண்டியில் விழிக்க எரிச்சலாக இருந்தது.
ஒன்று எழுந்திருக்காது, ஒன்று எழுந்து மூத்திரம் பீய்ச்சும்,ஒன்று சாணி மூத்திரக் குழம்பில் தோய்ந்த வால்சடையை முகத்தில் உதறும். காரமான அந்த நெடியும் சிலபோது உதட்டிலோ உள்வாயிலோ தெறிக் கும் துளியின் உப்புக்கரிப்பும் கோபத்தை உண்டாக்கும். கம்பால் அடிப் பதை அப்பாவோ அம்மாவோ பார்த்தால் தனக்கும் இரண்டு சாத்துக் கிடைக்கும் என்பதால் கையால் புட்டியில் ஓங்கி வைப்பான். எருமைத் தோலைவிட மரியதாசின் தோல் தடிப்பாக இல்லாத காரணத்தால் உள்ளங்கைகளிலும் விரல் நுனிகளிலும் தீயைத் தொட்டது போல் கொத்தாக எரியும். மூன்று சனியன்களையும் ஒவ்வொன்றாக எழுப்பி, விலக்கி, முன்பக்கமும் கால்களுக்கிடையிலும் புகுந்து சாணிக்குப்பங் களை, சாண மூத்திரக் குழம்பில் சொதசொதத்து நனைந்து கிடக்கும் வைக்கோற் கூளங்களை, சேர்த்துக் கூட்டி தொழுவின் பின் பக்கம் குவிக்க வேண்டும். கற்கள் பரவி குண்டும் குழியுமாகப் பறிந்துவிட்ட தொழுவம். ஒரு நிரப்புக் கிடையாது. இந்த எருமை மாட்டுச்சவங்களுக்கே சுத்தமாக இருக்கவும் தெரியாது. பசுமாடுகளானால் சுத்தமாக, கட்டியாக, சாணம் போடும். அழியில் இருக்கும் வைக்கோலைத் தேவைக்கே இழுத்து எடுத்துத் தின்னும். சுத்தமாகப் படுத்து உறங்கும். இவையோவெனில் மூத்திரம் பெய்து அதன் மீதே உறங்கும். சாணச்சேற்றில் அங்கும் இங்கும் புரளும். வாலை நனைத்து புட்டி, சட்டம், முதுகு எனப் பூசிக்கொள்ளும். இரண்டு கிடாக்களுக்கும் இது வளமை என்றால் எருமை சொகுசுக்காரி. அழியின் வைக்கோலை வஞ்சகமில்லாமல் இழுத்து தொழுவின் தரைமீது பரப்பிக்கொண்டு அதன்மீதே புரளும்.
சாணி வார ஆரம்பித்த இந்தக் கொஞ்ச நாட்களாக மரியதாசுக்கு இவற்றின் புத்திபோகும் விதங்கள் புரிந்திருந்தது. எருமையின் மூத்திரம் குடிப்பதென்றால் அதன் அடுத்துக் கிடக்கும் கோணக் கொம்பு கிடாவுக்கு பானகம் குடிப்பது போல. பகலெல்லாம் மேய்ச்சலின் போது குடிப்பது தீராதென்று இரவிலும் குடிக்க மிகவும் பிரயத்தனப்படும். கோணக் கொம்புக்கு அதில் என்னவோ ஒருவகை சுகம் உண்டென்று கொண்டா லும், இந்த எருமை மூதிக்கு அதில் என்ன சுகம்? மூன்றையும் அழியில் கண்ணியால் பிணைத்த பிறகு மூத்திரம் வரும்போது குண்டியைத் திருப்பி கோணக் கொம்பின் முகத்துப் பக்கம் காட்டும். பாழாய்ப் போவது பாவி வயிற்றில் போவதில் மரியதாசுக்கு நஷ்டம் ஒன்றும் கிடையாததுதான். ஆனாலும் எருமையின் கோணங்கள் சற்று கூடிப் போனால் பாதி மூத்திரம் கிடாவின் வயிற்றிலும் மீதி மூத்திரம் அழியில் இருக்கும் நல்ல வைக்கோலிலும் விழும். அதோடு மூத்திரம் பெய்தபின் போடும் சாணியும் அழிக்குள்ளோ, அழிச்சட்டங்கள் மீதோ, கோணக் கொம்பின் உச்சியில் பூக்குஞ்சம் வைத்தது போலோ விழும். மூத்திரமோ சாணியோ நாறும் வைக்கோலை எந்த மாடும் தின்பதுமில்லை. எனவே அதைத் தினமும் தேடித் தப்பரவி பிரித்து எடுக்க வேண்டும். சில நாட்கள் மறந்து போனாலோ, கண்ணைத் தப்பிவிட்டாலோ, அன்று மாலை வைக் கோல் வைக்கும்போது அப்பாகவனித்து பேச்சுக் கிடைக்கும்.
மூன்று மாட்டையும் தட்டி எழுப்பி சாணத்தைப் பின்புறம் ஒன்றாகக் கூட்டிய பிறகு பனையோலைக் கடவத்தை அல்லது பிரம்புக் கூடையை எடுத்து வருவான் மரியதாஸ். தொழுவில் இருந்து உரக் குண்டுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். பனையோலைக் கடவமானால் மண்டை அவ்வளவாக உறுத்தாது. சாணச் சொட்டும் கொஞ்சமாகத்தான் மேல் விழும். அது கிழிந்து கிடந்ததால் பிரம்புக் குட்டையில் தான் சாணி வாருவது. பிரம்புக் குட்டையை அப்படியே தூக்கி வெட்டி உயர்த்தித் தலையில் வைத்துவிட முடியாது. தலைமீது நன்காக மடித்த குட்டி சாக்கை முதலில் வைத்துக்கொள்ள வேண்டும். குட்டையைத் தூக்கிவிட அண்ணனையோ அம்மாவையோ கூப்பிடவேண்டும். அண்ணன் இந்த வருடம் காலேஜில் சேர்ந்திருப்பதால் பவுறும் கார்வாரும் கூடுதல். அப்படி கூப்பிட்டாலும் உடனே வந்துவிடமாட்டான். கூப்பிட்ட உட னேயே ஒரு ஏச்சு. தூக்கி விடும்போது குட்டை தட்டியோ, தலை சாய்ந்தோ சாக்கு மறுபடியும் தரையில் விழுந்துவிட்டால் அதற்கு இன்னொரு ஏச்சு. அம்மா வந்தால் இந்த வம்பு எல்லாம் கிடையாது. ஆனால் அண்ணனுக்கு சோறு கட்டிக்கொண்டோ துவையல் அரைத்துக் கொண்டோ இருந்தால் அந்தக் கையோடு அவளால் வரமுடியாது. அகவேதான் பெரிய துரையைக் கெஞ்ச வேண்டியதிருக்கும்.
குட்டையைத் தலைமீது தூக்கி ஐம்பது அடி நடப்பது வரைக்கும் சாணிக்கும் இருக்கும் கௌரவம் பிறகு சரிந்து விடும். சொட்டுச் சொட்டாக குழம்பு முதுகில், தோள்பட்டையில் வடிய ஆரம்பிக்கும். குட்டையை உரக்குண்டில் கவிழ்த்துவிட்டு வெறுங்குட்டையும் சாக்கு மடிப்புச் சும்மாடுமாக மரியதாஸ் திரும்பும்போது களபம் அபிஷேகம் செய்தது போல் இருக்கும். உடனே துடைத்தும் பயனில்லை. திரும்பவும் இதே கதைதான். மூன்று நடையும் சுமந்துவிட்டு, குட்டையைத் தொழு வின்மூலையில் எறிந்துவிட்டு உமிக்கரிப் பட்டையில் கைவிட்டு இடது கை நிறைய அள்ளிக்கொண்டு ஆற்றுக்குக் குளிக்கப் போனால் மற்றவர் கள் இவன் கிட்டே வரமாட்டார்கள். பல்லைத் தேய்த்து, ஆற்றில் விழுந்து சாணிப்பாலை அலசி, அம்மணக்குண்டியாகவே நின்று உடுத்தி ருந்த துண்டை கல்லில் குத்திப் பிழிந்து தலை துவட்டிய பின்னும் மரிய தாசுக்கு இன்னும் தன்மீது சாணி மூத்திர நாற்றம் வீசிக்கொண்டிருப்ப தாகவே தோன்றும்.
வீட்டில் வந்து எண்ணெய் கொஞ்சம் தாராளமாகவே புரட்டி, தலை நேர் வகுப்பு எடுத்துச் சீவி, கர்லிங் வைத்த பிறகுதான் மரியதாஸ் தனது எட்டாம் வகுப்புப் பாடப்புத்தகத்தை பிரித்துப் பார்ப்பது.
கொஞ்ச நாட்கள் முரண்டிப் பார்த்தான். அழுது பார்த்தான். வயிறு வலிக்கிறது,உச்சி நோகிறது என்று பாசாங்கு செய்து பார்த்தான். ஒன்றும் பலிக்கவில்லை. எப்படியும் சாணியை அவன்தான் வார வேண்டிய திருந்தது. சில நாள் எப்படியாவது தவறிவிட்டால் கூட அம்மாகூட்டிப் போட்டிருப்பதையும் சேர்த்து அடுத்த நாள் வாரவேண்டியதிருந்தது. அப்போதும் கூட கூட்டிப் போட்டிருக்கும் சாணியால் மாட்டுக்கு ஈ கடிக்கிறது, கொசு ஆய்கிறது என்று அப்பாவின் புறுபுறுப்புக் கேட்கும். எனவே விரும்பியோ விரும்பாமலோ இது மரியதாஸ் மீது சுமத்தப்பட்டு விட்டபோது நாளடைவில் அவனுக்கு இதன் கசப்பு குறையலாயிற்று.
சாணி ஒதுக்கும்போது கடாக்களோடும் எருமையோடும் ஏச்சாக இருந்தது மாறி ஒரு உரைநடை பழக்கமாயிற்று. வாலைத் தூக்கி நிற்கும் கிடாவைச் செல்லமாகக் கோபித்துக் கொள்வான். வசமில்லாமல் நிற்கும் எருமையைத் தட்டி, சரியாக விலக்கிச் சாணி அள்ளுவான்.
சாயங்காலம் சில நாள் அப்பா திரும்ப நேரமாகிவிட்டால் மாடுகளுக்கு அழியில் வைக்கோல் இல்லாவிட்டால் மரியதாசுக்குப் பொறுக்கவில்லை. களத்துக்குப் போய் வைக்கோல் படப்பில் இருந்து ஒரு சுற்று சுமந்துகொண்டு வந்து போட்டால்தான் சமாதானமாயிற்று. பள்ளிவிட்டு வந்த பிறகு, நேரம் இருக்கும்போது யாரும் இறங்கி அறுக்கத் துணியாத கரைகளின் சரிவில் மலையாடுபோல் நின்று நொறிஞ்சான் குழை, சுடக்கு வேலிப்புல் என்று சேர்த்து அறுத்து பிடிப் பிடியாகக் கட்டி கரையின்மேல் எறிந்து சேர்த்துக் கொண்டுவந்து போடுவான். ‘கறிச், கறிச்’ என்று புல்லைக் கடித்து எருமையும் கடாக்களும் தின்பதை பார்க்க வாயூறி நிற்பான்.
கோணக் கொம்பு கிடாவுக்கு உச்சி மண்டையில் சொறிந்து கொடுத்தால் இன்பமாக இருக்கும். அசை போடுவதை நிறுத்திவிட்டு கண்களை ஒரு போதையில் செருகிக்கொண்டு சுகிக்கும். சொறிவதை நிறுத்தினால் கண்களை விழித்து ஆசையுடன் ஏறிட்டுப் பார்க்கும். மண்டையை முன்னோக்கி நீட்டும்.
சிலசமயம் விளையாட்டுக்காக சுகமாகக் கொஞ்சம் சொறிந்து விட்டு இரண்டடி எட்டி நின்று கொள்வான். கண்ணி அற்றுப் போகும் படியாக கழுத்தை இழுத்து மண்டையை அவனிடம் காட்டும்.
கிடாக்கள் இரண்டையும் ஒன்றாக அவிழ்த்துதான் தண்ணீர் தொட்டிக்கு அடிப்பது. பெரிய கல்தொட்டி. இரண்டும் கண்மாத்திரம் வெளியே தெரியும்படி மீதி முகத்தையெல்லாம் தொட்டி நீருக்குள் புதைத்து வண்டலாகத் தொட்டியில் படிந்திருக்கும் சோற்றுப் பருக்கை, புண்ணாக்கு, பருத்திக்கொட்டைக் கலவையை நாக்கால் தேடும். இந்த அவசர கோலத் தேட்டத்தில் ஒன்றுக்கொன்று சண்டை வந்துவிடுவதும் உண்டு. முகத்தை வெளியே எடுத்து கொம்பால் ‘கடார்’ என்று அடுத்ததை இடிக்கும். இப்படி சண்டை நேரும் சமயங்களில் கோணக் கொம்புக்கு சில அசௌகரியங்கள் உண்டு. நினைத்த ரீதியில் கொம்பால் தட்டிவிட முடியாது.வசக்கேடாய் எதிராளியின் கொம்பில் இதன் கோணக் கொம்பு சிக்கிவிட்டால் எடுப்பது பெரிய பாடு. எனவே தண்ணீர் காட்டுகையில் தொட்டி மட்டையால் தொட்டியைக் கலக்கிவிட என்று ஒருவர் பக்கத் தில் நிற்க வேண்டும். சண்டை மூளும் சமங்களில் எல்லாம் தொட்டி மட்டையால் இரண்டிரண்டு சாத்தவும் வேண்டும்.
அடி மண்டி வரை இரண்டும் தண்ணீரை உறிஞ்சிய பிறகு தூர அடித்து ஓட்டிவிட்டு பிறகு தனியாகக் கலக்கித்தான் எருமை மாட்டுக்குத் தண்ணீர் காட்டவேண்டும். எருமை என்றாலோ மூச்சுக் காட்டாமல் குடித்தோம் போனோம் என்று கிடையாது. போட்டிக்கு என்று யாரும் கிடையாது. ஆகையால் இரண்டு வாய் குடிப்பதும் கண்ணுக்குக் கீழே வளையமாய் படிந்திருக்கும் தவிட்டுரேகையோடு பல்லை இளித்து ‘ரீங்” என்று குரல் கொடுத்து கிடாக்களுக்கு ‘வலிச்சம்’ காட்டுவதுமாய் இருக்கும். வட்டக் கொம்புக்கிடா இது போன்ற சந்தர்ப்பங்களுக்காய் காத்துக் கொண்டிருக்கும். ஓடியே வந்து தொட்டிக்குள் முகம் புதைத்துக் கொள்ளும். புதைத்துவிட்டால் என்ன அடி அடித்தாலும் முகத்தை எடுக்காது. அரைக் குடம் தண்ணீராவது உறிஞ்சிய பிறகுதான் அசையும். கோணக் கொம்புக் கிடா எருமைக்கு ஆசைக் காதலன் போல. எருமை யின் கர்ப்பம் அதனால் ஏற்படுவதில்லை என்றாலும் கூட. எனவே ஓடிப்போய் வட்டக் கொம்பின் குண்டியில் மண்டையால் ஒரு மோது மோதித் தள்ளும். தன் உரிமைகளைக் காக்க ஓர் ஆபத்துதவி உண்டு என்ற தோரணையில் நடந்து போய் எருமை தண்ணீர் குடிக்கும்.
பெண்உறுப்பில் மூக்குச்சளி போல் தொங்கிய மாசியை வாலிலும் சட்டத்திலும் புரட்டிக்கொண்டு எருமை ஒரு பரபரப்பில் இருந்தபோது தான் அப்பாவும் மரியதாசும் எருமையைக் காலையில் கங்காதரம் பிள்ளை வீட்டுக்குப் பத்திக்கொண்டு போனார்கள். அங்கு ‘முர்ரா’ கிடாக் கன்று ஒன்று இரட்டை மொந்தன் வாழைக்காய் போன்ற விதைக் கொட்டைகளுடன் கிடந்தது. அது தெருவில் போனால் மற்ற எருமைகள் முகத்தை நிமிர்த்தி மூக்கை விரித்துப் பார்க்கும் அளவுக்கு அதனிடம் ஓர் ஆண் வாடை இருந்தது.
கங்காதரம் பிள்ளை வீட்டில் நாலைந்து எருமைகள் உண்டு என்பதால் இதைக் காயடிக்காமல் விட்டிருந்தார்கள். மாத்திரமின்றி இந்த முர்ரா கிடாக்கள் நாட்டு கடாக்களைப் போல கலப்பையில் அவ்வளவு துரிசம் கிடையாது. மெத்தனம் மிகுந்த ஜாதி. சாலடித்து மடக்குமுன்தேர் நிலைக்கு நின்றுவிடும்.
ஊரில் கால்நடை அபிவிருத்தி நிலையம் ஒன்று உண்டு. கக்கன் மந்திரியாக இருந்தபோது ஏற்பட்டது. காலையில் ஏழரை மணி முதல் பன்னிரெண்டு மணி வரை ஸ்டாக்மேன் ஒருவர் இருப்பார். கோழி களுக்கு தடுப்பூசி, மாடுகளுக்கு சங்கடைப்பானுக்கு தடுப்பூசி, காய்ச்சல், பீய்ச்சல்களுக்கு மருந்து என…
தடுப்பூசி போடுவதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும். கண்ணாடிக் குழாயிலிருந்து ஊசி முனையை மட்டும் தனியாக எடுத்துக் கொண்டு கத்தி எறிவது போல் மாட்டின் கழுத்தில் எறிவார். ஊசி தைத்து அதிர்கையில் மாடு கழுத்தில் மட்டும் சிலிர்க்கும். பின் பதமாகப் பக்கத்தில் போய் மெல்லத் தட்டிக் கொடுத்து, ஊசியில் குழாயைச் செருகி மருந்தை நைசாகச் செலுத்துவார்.
தினமும் மாடு சேர்க்கவும் இங்கு மருந்து வரும். மாவட்ட கால் நடை மருத்துவமனையில் இருந்து இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சைக்கிளில் இரண்டு ஐஸ் டப்பாக்களில் வரும். ஒன்று எருமைக்கு. ஒன்று பசுவுக்கு. மருந்து மாறிப்போனால் என்ன ஆகும் என்ற சந்தேகம் மரிய தாசுக்கு கொஞ்ச நாட்களாக உண்டு.
மாடு சேர்ப்பதை மரியதாஸ் பார்த்திருக்கிறான். கூண்டு போல் இருக்கும் கம்பி அழிக்குள் மாட்டைச் செலுத்துவார்கள். பின்புறம் இரண்டு தடுப்புக் கம்பிகளையும் தலையைத் தாழ்த்தி கொம்புக்குக் கீழ் இன்னொரு கம்பியையும் போட்ட பிறகு, மாட்டுக்காரர் முன்புறம் மாட்டைத் தடவிக் கொடுத்துக்கொண்டு நிற்பார்.
முன்பக்கம் சப்பிய கூம்பு போல் இருக்கும் கருவி ஒன்றை மாட்டின் பெண் உறுப்பில் நுழைத்து கைப்பிடியை இடது கையால் பிடித்து அழுத்தி வலது கையிலிருக்கும் மெல்லிய கண்ணாடிக் குழாயில் பேனாவுக்கு மை ஊற்றும் பில்லர் போல் மருந்தை எடுத்துக்கொண்டு கண்ணாடிக் குழாயைக் கருவியில் நுழைத்து பெண்ணுறுப்பினுள்ளே மருந்தைப் பீச்சுவார். மாடு குன்றிப் போவது தெரியும்.
ஆனால் மரியதாசின் அப்பாவுக்கு இதில் விருப்பம் கிடையாது. கங்காதரன் பிள்ளை வீட்டுக் களத்துக்கு மாட்டைக் கொண்டுபோனதும் மடியில் இருந்து மூன்று ரூபாய் அவிழ்த்துக் கொடுத்த பின்தான் தொழு விலிருந்து கடாவை அவிழ்த்து வந்தார்கள். மண்டையில் வட்டமாகக் கொம்பு முளைத்த சிற்றானைக் குட்டி அது. விரியாத சேம்புப் பூப் போன்று அதன் ஆண்குறி எட்டி எட்டிப் பார்த்தது.
எருமையின் சினை நிச்சயமான பின்பு அதை மற்ற மாடுகளுடன் மேய்ச்சலுக்குப் பத்துவது கிடையாது. தனியாகக் கொஞ்சம் காலாற நடத்துவார்கள்.மற்ற மாடுகளுடன் சேர்த்துப் பத்தினாலும்கூட, ரொம்ப கவனமாகவே சினை மாட்டைக் கவனித்துக் கொள்வார்கள். அடங்கிய எருமையைக் கிடாக்கள் புணருவது கிடையாது. ஆசைக்காகக் கொஞ்சம் முகர்ந்து பார்த்துவிட்டு ஒதுங்கிக் கொள்ளும். அதிலும் கூட போட்டி ஏற்பட்டு கிடாக்கள் மூர்க்கமாய் மோதிக் கொள்ளும். உக்கிரமாய் விழும் சண்டையில் ஒன்றையொன்று முட்டி நெருக்கிக் தள்ளுகையில் இசை கேடாய் எருமையின் மீதும் மோதுவது உண்டு. உயர்ந்த கரைகளின் விளிம்பில் மேயும் எருமை கால் தடுமாறிச் சாய்ந்துவிடவும் ஏதுவுண்டு. இந்த அல்லல் எதுக்கென்றுதான் மரியதாசின் அப்பா எருமையைக் கட்டிலேயே வைத்துவிட்டார்.
காலையில் ஒருமுறை காலாற நடத்திக் கொண்டுபோய் ஆற்றில் படி போட்டு சாணிப் பொருக்கெல்லாம் ஊறிய பின் வைக்கோல் கத்தையால் அடிவயிற்றை, தொடை இடுக்கை, காது மடல்களின் உட்குகையை யெல்லாம் தேய்த்துக் கழுவிக்கொண்டு வருவார். அப்படியும் சூட்டி னால் எருமையின் கண் விளிம்புகளில் வெண் மஞ்சளாய் குன்றிமணி யளவுக்கு பீழை சேரும்.
எருமை பெருஞ்சினையாகி விட்டது. நடக்கும்போது கால்களில் பாரம் தெரிந்தது. சட்டம் ஒடுங்கி பெண்ணுறுப்பு தாழ்ந்துவிட்டது.நீர் நிறைந்த தோற்குடம் போல் வயிறு வாய்த்திருந்தது. வயிற்றினுள்கன்றின் முண்டல் திடீர் திடீர் என வல இடப்புறங்களில் பிதுங்கியது. மடு நன்றாகத் தாழ்ந்துவிட்டது.
நான்கு காம்புகளும் பலாப் பிஞ்சுகள் போல் தெறித்திருந்தன. ஒரு வகைக் கிளர்ச்சியில் மரியதாஸ் எருமையின் மடியைத் தடவிக் கொடுத்து, காம்பைப் பிடித்து மிருதுவாய் இழுக்கும்போது பிசின் போல் சீம்பால் கைகளில் சுரந்தது. முகர்ந்து பார்த்துவிட்டு மாட்டின் முதுகில் தடவி னான். அமாவாசை அன்று பெரும்பாலும் எருமை ஈனும் என்று அம்மா அடிக்கடி சொல்லிக்கொண்டாள்.
எருமை ஈனும் முன் தொழுவை சுத்தப்படுத்தி வைக்கலாம் என்று மரியதாசுக்குத் தோன்றியது. ஞாயிறில், அப்பா மாடுகளை மேய்க்கக் கொண்டு போன பின்பு, தென்னை ஈர்க்கு வாரியலால் தொழுவை நன்றாகத் தூத்து வாரினான். கைகள் கவனியாமல் விட்ட இடங்களில் பொருக்காடிக்கிடந்த சாணியைப் பெயர்த்துக் கூட்டினான். அழியில் இருந்த வைக்கோற் கூளங்களை ஒதுக்கியபோது இரண்டு சுவர் கூடும் மூலை ஒன்றில் ஏழு கோழி முட்டைகள் பதமாய் குவிந்திருந்ததைப் பார்த் தான். மரியதாஸ், பதமாய் இரண்டு கைகளிலும் எடுத்து அம்மாவிடம் காட்டியபோது அவளுக்கும் சந்தோஷம். பக்கத்து வீட்டுப் பெட்டைக் கோழி இரண்டு மூன்று நாட்களாய் தொழுவைச் சுற்றிக் கேறிக்கொண்டு திரிந்ததாகவும், கூட்டில் முட்டைக்கு அடையாமல் தொழுவில் இட்டி ருக்கிறது என்றும் அம்மா சொன்னாள்.
அன்று மத்தியானம் வீட்டில் முட்டைக்கறி இருந்தது. ஏழு முட்டைக்கு பதினான்கு துண்டுகள். அப்பாவுக்கு இரண்டு. கொஞ்ச நாட்களாய் அண்ணனின் பங்குகளும் பருத்திருந்தன. அவனுக்கும் இரண்டு.அம்மாவிற்கும், மீதிப்பிள்ளைகளுக்கும் ஆறு. மீதமிருக்கும் நான்கு துண்டில், தானே முட்டையை எடுத்தவன் என்பதால், வழக்காடி இன்னுமோர் துண்டு கேட்டான் மரியதாஸ். சாப்பிட்டு முடிந்த பிறகு மரியதாசுக்கு வேறோர் சந்தேகம் வந்தது. ஏழு முட்டைகளையும் அம்மா கறி வைத்தாளா? அல்லது இரண்டை அண்ணனுக்கு சோறு கட்டும் போது ஆம்லேட் போட்டுக் கொடுக்க ஆகுமென்று கடைக்கே வைத்துவிட்டு ஐந்தைத்தான் கணக்காக்கி கறி வைத்தாளா? ஐந்துதான் கறி வைத்தாள் என்றால், இரண்டாவதாகத் தான் தின்ற துண்டு அம்மாவின் பங்காக இருக்குமே என்று எண்ணியபோது மரியதாசுக்கு வெறும் உச்சி மண்டையில் சாணிக் குட்டை அழுத்தியதுபோல் உறைத்தது.
– கேரளத்தமிழ், நான்காவது ஆண்டுமலர் 1983.
நன்றி: https://nanjilnadan.wpcomstaging.com/
![]() |
நாஞ்சில்நாடன் வாழ்க்கைக் குறிப்பு: பெயர் : G. சுப்ரமணியம் (எ) நாஞ்சில் நாடன்எழுதும் துறை : நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரைபிறந்த நாள் : 31 டிசம்பர் 1947பிறந்த இடம் : வீரநாராயணமங்கலம்தாழக்குடி அஞ்சல், தோவாளை வட்டம்,கன்னியாகுமரி மாவட்டம்.தமிழ் நாடு – 629 901.முகவரி : G. Subramaniyam (NanjilNadan)Plot No 26, First Street, VOC Nager, Near Euro Kids, KovaipudurCoimbatore – 641 042, Tamilnadu.Phone:…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
இரண்டு கடவுள் வாழும் வீடு
செ.தமிழ்ராஜ்
October 12, 2026
மதுரை விடியல்
புஷ்பராஜ் கந்தசாமி
October 12, 2026
சரசுவின் சௌந்தர்ய லஹரி
கவிஞர் கண்ணதாசன்
October 12, 2026
