அம்பாரி மீது ஒரு ஆடு

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: செம்மலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 1, 2026
பார்வையிட்டோர்: 114 
வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்

(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முருகானந்தா ஹாலில் முத்தமிழ் சங்கத்தின் நாடக விழா இன்று தொடங்குகிறது என்று சின்னக்கண்ணுவுக்கு ஏற்கனவே தெரியும். எனவே ஆறரை மணிக்குள் சுவாமிநாதன் ஆபீஸில் இருந்து புறப்பட்டு விடுவார் என்று நினைத்தான். அப்படியானால் மலபார் ஹில்ஸ் போய்ச் சாப்பிட்டு உடை மாற்றி மனைவியோடு மாட்டுங்காவில் இருக்கும் முருகானந்தாவை எட்டு மணிக்குள் அவர் அடைய முடியும். எனவே ஆறு மணிக்கெல்லாம் அவன் கார் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டான்.

இன்று எட்டரை மணிக்கெல்லாம் வீட்டுக்குப் போய்விடலாம் என்ற நினைப்பு அவனுள் மகிழ்ச்சியைக் கிளர்த்திற்று. ஒரு கணேஷ் பீடியைப் பற்ற வைத்துக்கொண்டு அக்கம்பக்கத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

சாதாரண நாட்களில் சுவாமிநாதன் எட்டு மணிக்குள் ஆபீசை விட்டுக் கிளம்பியதில்லை. தினமும் ஏதாவது ஒரு காரணம் இருக்கும். அவரையும் காரையும் மலபார் ஹில்ஸில் விட்டுவிட்டு அப்புறம் பஸ் பிடித்து அவன் வீட்டுக்குப் போய்ச் சேர ஒன்பதரை மணியாவது ஆகும். எனவே, இந்த சங்கீத நாடக விழா சீசன்களை, பொருள்வயிற் பிரிந்த கணவன் வரவு பார்க்கும் சங்ககாலப் பெண்ணைப் போல, சின்னக்கண்ணு ஆவலோடு எதிர்பார்ப்பான். ஹால் முன்னால் காரை பார்க் செய்து, பூட்டிச் சாவியைக் கொடுத்துவிட்டு அவன் போய்விடலாம். திரும்புகையில் சுவாமிநாதனே டிரைவ் செய்வார். அவர் மனைவிக்கும் டிரைவிங் தெரியும். ஆனால் இரவு பதினொரு மணிக்குப் பிறகு ஒருவர் பார்வையிலும் படாமல் தான் டிரைவ் செய்வதும் செய்யாமலிருப்பதும் ஒன்றுதான் என்பதால் அந்த அம்மாள் கணவரையே ஓட்டச் செய்வாள்.

தமிழ் கல்ச்சுரல் புரோக்ராம் ஒன்று விடாமல் சுவாமிநாதன் பார்ப்பதற்குக் காரணம் கலை மீது கொண்ட கணக்கற்ற காதலல்ல. கஃப்பரேடின் இருபத்து நாலு மாடிக் கட்டடம் ஒன்றின் பதினெட்டாவது ஃப்ளோரில் ஏர் – கண்டிஷன்ட் ‘ஜில்’லில் உட்கார்ந்து பெர்கின்ஸன் அண்ட் தாகூர் கம்பெனி லிமிடெட்டின் அகில இந்திய மார்க்கெட்டிங் டிவிஷனை ஆட்டிப் படைப்பதுதான் காரணம். வாரத்தில் நான்கு நாள் சென்னை, கல்கத்தா, டெல்லி என்று தாவுகின்ற உச்சித் தட்டுக் குடிமக் களில் அவரும் ஒருவர்.

புள்ளி போட்டுச் சொல்லும் தமிழ் கனவான்களில் அவர் ஒருவர் என்பதால் அவரிடம் விளம்பரம் வாங்காமல் எந்தத் தென்னிந்திய அமைப்பும் சாவனீர் வெளியிட்டதில்லை. தந்த விளம்பரத்திற்கு நன்றிக் காணிக்கையாக அந்தந்த அமைப்புகள் நடத்தும் கலை விழாக்களில் முதல் மூன்று வரிசைகளுள் அவருக்கு இரண்டு காம்ப்ளிமெண்ட்ஸ் கிடைத்துவிடும். சுவாமிநாதனை விட அவர் மனைவிக்கு இது மிக அத்தியாவசியமான விஷயம். ஆகையால் – பிறகு வேறு எதைத்தான் லேடீஸ் கிளப்புகளிலும் கல்யாண வீடுகளிலும் சினிமா தியேட்டர் களிலும் அக்கம் பக்கத்திலும் பேசுவது – எந்தக் காம்ப்ளிமெண்டையும் அவர்கள் வீணடித்ததில்லை.

மெரைன் லைன் ஸ்டேஷன் தாண்டி சௌபாத்தி பீச்சைக் கார் நெருங்கிக் கொண்டிருந்தது. அண்டர்வேர், பனியன்களின் விளம்பரத்துக் கான கலர் விளக்குகள் பச்சை, சிவப்பு, ஊதா என்று கண்சிமிட்டலுற்றன. மாறி மாறி அந்த நிறங்கள் தண்ணீரில் பாய்ந்து – சாண்டில்யன் பாஷையில் – மாயாஜாலமும் இந்திர ஜாலமும் பண்ணியவாறிருந்தன.

சுவாமிநாதன் கடலலைகளைப் பார்த்துக்கொண்டிருப்பது கண்ணாடி மூலம் சின்னக்கண்ணுவுக்குத் தெரிந்தது. சாதாரணமாக அவ னோடு அவர் பேசுவதில்லை. சில சொற்களில் வெறும் கட்டளைகள் மட்டும்தான் உதிரும். எனவே வசதியான மௌனம் சின்னக்கண்ணுவைக் கவியும்.

ஆனால் அவர் மனைவி கார் ஓட்ட, சின்னக் கண்ணு மட்டும் காரின் பின் சீட்டில் நாணி உட்கார்ந்து பயணம் செய்கையில் அந்த அம்மாளின் சளசளப்பைக் கேட்கும்போது, சுவாமிநாதனின் மெளனமே மேலான தாகத் தோன்றும். என்றாலும் பிழைப்புக் கருதி அவள் எதிர்பார்க்கும் மெய்ப்பாடுகளை அவன் காட்டத் தவறியதில்லை.

சிந்தனையைத் தறித்துவிட்டு மலபார்ஹில் ஏற்றத்தில் ஏறுவதற்காக அவன் கியரை மாற்றினான். முக்காரமிட்டுக் கொண்டு கார் எகிறிப் பாய்ந் தது. குன்றின் மேலேறி முன்னாள் மகாராஜா ஒருவருக்குச் சொந்தமான அந்தக் கட்டடத்தின் முன் காரை நிறுத்தினான். இறங்கிக் கதவைத் திறந்து சுவாமிநாதனின் வி.ஐ.பி. பிரீஃப் கேசை வாங்கினான் சின்னக்கண்ணு.

ஒரு கையில் கோட்டும் மறுகையில் ஃபைலுமாகச் சுவாமிநாதன் நடந்தார். கார் கதவுகளைப் பூட்டிக்கொண்டு அவன் பின் தொடர்ந்தான்.


மணி ஏழுதான் ஆகியிருந்தது. எப்படியும் அவர்கள் தயாராகிக் கீழே இறங்கி வர இன்னும் அரைமணி நேரமாவது ஆகும். சின்னக்கண்ணு காம்பவுண்ட் வாசலில் நின்ற கூர்க்காவோடு வம்பளக்க ஆரம்பித்தான்.

“அங்கிள்…” என்ற சிறு குரல் ஒன்று அவன் பேச்சை மறித்தது. திரும்பினான். கிரௌண்ட் ஃப்ளோரில் இருக்கும் சிறுமி, பத்து வயதிருக் கும். என்ன என்று கேட்டுச்சின்னக்கண்ணு சிரித்தான். காலையில் வரும் போது ஒரு பாக்கெட் பாப்பட் வாங்கி வர வேண்டுமாம். இங்கிலீஷ் அக்செண்டுடன் அது பேசிய தமிழ் அவனுக்குச் சிரிப்பைத் தந்தது. பப்படம் வாங்கி வருகிறேன் என்று காசை அவன் வாங்கி்க்கொண்டதும், “தாங்க் யூ அங்கிள்” என்று சொல்லிவிட்டு ஓடியது. இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகள் போனால் இந்த ‘அங்கிள்’ என்ற பதம் மாறி ‘டிரைவர்’ என்ற விளியாக இறுகும் என்று அவன் எண்ணினான்.

“டிரைவர்… டிரைவர்…”

விளியோசை கேட்டுச் சுவாமிநாதன் இருக்கும் முதல் ஃப்ளோரில் பால்கனியை அவன் ஏறிட்டுப் பார்த்தான். அவர் மனைவி. இது போல் அவர்கள் சாப்பிட்டு, நிகழ்ச்சிகளுக்குப் புறப்படும்போது அவன் வயிற் றுக்கும் ஏதாவது ஈயப்படுமாகையால், அதற்காகத்தான் கூப்பிடுகிறார்கள் என்று நினைத்து, அவன் மேலே போனான்.

“இன்னைக்குப் புரோக்ராம் போக முடியாதுப்பா… ஈவினிங் ஃபிளைட்லே மெட்ராஸ்லேருந்து மாப்பிள்ளையும் பொண்ணும் வந்திருக்கா…”

எதிர்க்கட்சித் தலைவர் போல் இடைமறித்து அவர் மனைவி சொன்னாள்.

“டிக்கெட் வேஸ்டாப் போகுமே!”

அந்தக் குரலில் டிக்கெட் வீணாகிப் போகிறதே என்ற வருத்தத்தை விட, நாளை சந்திப்பவர்களிடம் இன்ன காரணத்துக்காக டிக்கெட்டை வேஸ்ட் செய்தோம் என்று சொல்லலாமே என்கிற பெருமை தூக்கலாக ஒலித்தது.

“அப்ப நான் வரட்டுங்களா…?” சின்னக்கண்ணு கேட்டான்.

“கொஞ்சம் இரு… ஏங்க, இன்னைக்கு சின்னக்கண்ணுதான் டிராமா வுக்குப் போகட்டுமே! நாளைக்கு நாம் போகும்போது டிக்கெட்டை வாங்கிட்டாப் போச்சு…”

பாழாகப் போவது பசு வயிற்றில் போகட்டுமே என்று சுவாமிநாதன் நினைத்தாரோ என்னவோ?

“சரி நீ… காரைப் பார்க் செய்து லாக் பண்ணிட்டு சாவியைக் கொண்டு வா…” என்றார்.

பம்பாயில் தமிழன் செய்த சாதனைகளின் சிகரம் போன்று முருகானந்தா கலையரங்கு நிமிர்ந்து நின்றது. (வேதனைகளின் சிகரத்தை இன்னொரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன்.)

எத்தனை நிறங்களில் இதுவரை பட்டுப் புடவைகள் தயாராகி இருக் கிறதோ, அத்தனை நிறங்கள். கனகாம்பர, மல்லிக்கைப் பூக் குலுங்கல் கள். செஞ்சாந்துத் திலகங்கள், குங்குமப் பரத்தல்கள். இடுப்பில் மடிந்த சதைகள்!

டை கட்டிய, ஸ்வெட்டர் போட்ட, மஃப்ளர் சுற்றிய, வேட்டியைத் தூக்கிக் கட்கத்தில் செருகிய, கண்ணாடி போட்ட, கையில் குழந்தையைப் பிடித்த ஆண்கள்.

கலையரங்கின் ஃபோயர் கலகலத்துக் கொண்டிருந்தது. முத்தமிழ் சங்கத்தின் பாட்ஜ் குத்திய பிரமுகர்கள்…

“ஹலோ சார்!”

“ஹௌ ஆர் யூ சார்?”

“வெரி கைன்ட் ஆஃப் யூ சார்…!”

“தாங்க் யூ ஸோ மச் சார்…”

“ஓகே சார்…”

“ஃபைன் சார்…”

“எக்ஸாக்ட்லி எய்ட்டோ கிளாக் சார்…”

“ஸீ யூ சார்…”

என்று சிரித்து, மழுப்பி, கை குலுக்கி, குழைந்து, நெகிழ்ந்து, குனிந்து, ஊற்றெழும் நன்றிப்பெருக்கால் தொந்தி நனைந்து நனைந்து…

வந்தவர்களில் சிலர் பாக்கெட்டிலிருந்து விளம்பரத்துக்கான செக்கை எடுத்து மறைவாகத் தந்தார்கள். சங்கப் பிரமுகர்களின் வாய் லோகல் ட்ரெய்ன் போல் நீண்டு தெரிந்தது.

இவர்களின் ஊடேயும் வெளியேயுமாக விக்டோரியா அரசி கவுனை இரண்டு விரல்களால் இரண்டு புறமும் சில அங்குலங்கள் உயர்த்திப் பிடித்து நடப்பதைப் போல, குமரிகள்… பாப்கார்னைக் கொறித்துக் கொண்டு சிறுமிகள்… நெற்றி முடியைக் குலுக்கிய குமரர்கள். பேதை தொடங்கிப் பேரிளம் பெண் ஈறாக உரசிக்கொண்டு நடந்து ஜென்ம சாபல்யம் பெறும் இளைஞர்கள்…

மணி எட்டு அடித்தது.

குறித்த நேரத்தில் நிகழ்ச்சியைத் தொடங்குவது என்பது முத்தமிழ் சங்கத்தின் சரித்திரத்தில் இல்லாத ஒன்று என்பதைத் தெரியாதவர்கள் பரபரவென்று ஹாலுக்குள் நுழைந்தார்கள். தெரிந்தவர்கள் இன்னும் பேசிக்கொண்டு நின்றார்கள்.

நேரமாகிவிட்டதோ என்ற அச்சத்தில் கேட்டில் நின்றவனிடம் அழைப்பைக் காட்டிவிட்டுச் சின்னக்கண்ணு ஃபோயருக்கு வந்தான்.

இதற்கு முன் அவன் முருகானந்தா கலையரங்கில் ஒன்றிரண்டு முறை நுழைந்திருக்கிறான். அதெல்லாம் அவன் காசு கொடுத்து வாங்கிய டிக்கெட்டுகள். எனவே செகண்ட் பால்கனியில் ‘கே’ அல்லது ‘எல்ல வரிசையில் ஒரு மூலையில் இரண்டு ரூபாய் டிக்கெட்டுகளுக்கான சீட்டில்தான் அவனால் உட்கார முடிந்திருக்கிறது.

இம்முறை கிரௌன்ட் ஃப்ளோரில் ‘பி’ வரிசையில் நாற்பது நாற்பத்தொன்றுக்கான டிக்கெட் கைக்கு வந்தபோது பரமபதம் கிடைத்து விட்டதைப் போன்ற எக்களிப்பு அவனுக்கு.

அதுவும் எஸ்.ஆர்.பிரபாகரின் பாரத் தியேட்டர்ஸ் அளிக்கும் ‘பூடக இரும்பொறையன்’ நாடகம். பாரத் தியேட்டர்ஸ் நாடகம் என்றாலே மாயாஜாலக் காட்சிகள், பிரமாண்டமான அரங்க நிர்மாணங்கள் எல்லாம் புகழ் பெற்றவை. அதிலும் இந்தப் ‘பூடக இரும்பொறையன்’ பலமுறை அரங்கேறிய புகழ் பெற்ற நாடகம்.

எனவே வயிறு பசித்தாலும் இடைவேளையில் பார்த்துக் கொள்ள லாம் என்று ஒரு வகைப் பரபரப்புடன் அரங்கினுள் நுழைந்தான் சின்னக் கண்ணு. அவன் கையிலிருந்த டிக்கெட்டின் மீது டார்ச் அடித்துப் பார்த்து, அதிசயம் போல் அவனை அளந்து, இரண்டாவது வரிசைக்கு வழி காட்டி னான் மஞ்சள் யூனிஃபார்ம் அணிந்த சேவகன்.

தன்னுடைய சீட்டில் உட்கார்ந்து நிதானித்த பிறகு, சுற்று முற்றும் கண்களை ஓட்டினான். அவனுக்குத் திகிலாக இருந்தது. எல்லோரும் தன்னையே பார்ப்பது போன்ற ஒரு குறுகுறுப்பு. வீட்டிற்குப் போய் டிரைவர் யூனிஃபார்மை மாற்றிவிட்டு வந்திருக்கலாமோ என்று அவனுக்குத் தோன்றியது.

மாணிக்கக் கற்களை அலுமினிய மோதிரத்தில் பதித்ததைப் போன்று இந்தச் சுற்றுப்புறப் பளபளப்புக்களின் நடுவே தான் இருப் பதாக உணர்ந்தான். ஒரு வகையான தாழ்வு மனப்பான்மையும் குற்ற உணர்வும் அவனை எரிக்க முற்பட்டன. இவர்களெல்லாம் தன்னைப் பார்த்துக் கேலி செய்து சிரிப்பதைப் போன்று அவனுக்கு அவமானமாக இருந்தது. இருப்புக் கொள்ளாமல் சீட்டில் நெளிந்தான். முப்பத்தெட்டு முப்பத்தொன்பதில் அமர்ந்திருந்த, அம்மாவும் பெண்ணும் போன்ற அந்தப் பெண்களை இலேசாகத் திரும்பிப் பார்த்தான். அவனைச் சங்கட உணர்ச்சி தவிக்கச் செய்தது.

மணி எட்டேகாலும் ஆயிற்று. அநேகமாக ஹால் நிரம்பிவிட்டது. பலர் அவசர அவசரமாக வந்துகொண்டிருந்தனர். இவன் மறு பக்கத்தில் நாற்பத்திரண்டு நாற்பத்து மூன்றில் – முப்பதும் முப்பத்து ஐந்துமான இரண்டு பெண்கள் வந்து உட்கார்ந்தார்கள்.

உட்கார்ந்தவர்களின் முகம் சின்னக்கண்ணுவைப் பார்த்து இலே சாகக் கறுத்தது. திருடுகையில் கவனிக்கப் பட்டதைப் போன்று அந்த ஏர் – கண்டிஷன்ட் ஹாலில் அவனுக்கு வியர்த்தது. எழுந்து போய்விடலாமா என்று அவனுக்குத் தோன்ற ஆரம்பித்தது.

இருந்தாலும் நாடகம் பார்க்கின்ற சபலம். தான் என்ன டிக்கெட் இல்லாமலா வந்திருக்கின்றோம் என்ற துணிச்சல் – அவன் வசதியாக உட்கார்ந்தான்.

‘நுணஙண…’ என்று நாடகத்தில் முதல் மணி அடித்தது. முன் வரிசை யில் சரிகை அங்கவஸ்திரத்தோடு வந்த யாரோ ஒரு பிரமுகரை அமர்த்திக் கொண்டு நிமிர்ந்த சங்கச் செயலாளரைச் சின்னக்கண்ணுவின் பக்கத்தில் இருந்த பெண், விரல் நீட்டி அழைத்தாள். தாசித் தரகன் போலத் குழைந்த அவர் காதில் இவள் கிசுகிசுப்பதைச் சின்னகண்ணு சந்தேகத்தோடு கவனித்தான். ஓரக் கண்ணால் அவன் கவனிப்பதையும் கவனித்துவிட்டு அவர் தலையாட்டி ஏதோ பதில் சொன்னார். நிர்வாகத்தில் வெகுகாலம் இருப்பவர் போலும். எனவே ஒவ்வொரு சொல்லுக்கும் அவர் தலை அசைந்தது.

அவர்களிடம் பேசி முடித்துவிட்டு நிமிர்ந்தவர் அந்தப் பெண் களைக் கடந்து அவனிடம் வந்தார்.

சின்னக் கண்ணுவின் இதயம் தடதடத்தது.

“ஏம்பா, இது உன் சீட்டா?”

“ஆமாங்க…”

“எங்கே, டிக்கெட்டைக் காட்டு, பார்ப்போம்… !”

சட்டைப் பையின் ஃபிளாப் பட்டனைத் திறக்கும்போது அவன் விரல்கள் நடுங்கின. மிஸஸ் & மிஸ்டர் சுவாமிநாதன் என்று பெயரெழு திய அழைப்பிதழை எடுத்துக் காட்டினான்.

“இது உனக்கில்லையேப்பா… சுவாமிநாதனுக்கில்ல கொடுத்திருக்கோம்…”

”அவருதாங்க எனக்குத் தந்தாரு…”

”அவர் தந்தார்ங்கறது சரிதானப்பா… ஆனா நீ அதிலே உட்கார முடியாது… அவருக்குத்தான் இன்விடேஷனே தவிர அவர் வீட்டு டிரைவர் எல்லாம் வர முடியாது…”

“அவருதானேங்க வரச் சொன்னாரு…”

“என்னப்பா திரும்பத் திரும்ப அதையே சொல்லிக்கிட்டு இருக்கே… அவர்தான் தெரியாமத் தந்தார்னா முதல் ரோவிலே நீ வந்து உக்காந்திர்ரதா? புரியாத ஆளா இருக்கியே… எந்திரி எந்திரி…” மனமில்லாமல், வேறு மார்க்கமும் தோன்றாமல் சின்னக்கண்ணு எழுந்தான். சுற்றியிருப்பவர்களின் பார்வைகள் அவனைக் கை கொட்டிச் சிரித்தன. அவன் குன்றிப் போனான்.

“நீ வா… உனக்கு டிராமாதானே பார்க்கணும்… பின்னால் ஒரு சீட்டிலே உக்காத்தி வைக்கிறேன்.”

சரசரவென்று நடந்தார் செயலாளர்.

அவர் பின்னால் நடந்த சின்னக்கண்ணு எட்டே முக்கால் மணிக் கெல்லாம் வீட்டுக்குப் போய்விட்டான்.

– செம்மலர், ஏப்ரல் 1977.

நன்றி: https://nanjilnadan.com

நாஞ்சில்நாடன் நாஞ்சில்நாடன் வாழ்க்கைக் குறிப்பு: பெயர் : G. சுப்ரமணியம் (எ) நாஞ்சில் நாடன்எழுதும் துறை : நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரைபிறந்த நாள் : 31 டிசம்பர் 1947பிறந்த இடம் : வீரநாராயணமங்கலம்தாழக்குடி அஞ்சல், தோவாளை வட்டம்,கன்னியாகுமரி மாவட்டம்.தமிழ் நாடு – 629 901.முகவரி : G. Subramaniyam (NanjilNadan)Plot No 26, First Street, VOC Nager, Near Euro Kids, KovaipudurCoimbatore – 641 042, Tamilnadu.Phone:…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *