தயிர்காரக்கா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 28, 2019
பார்வையிட்டோர்: 8,032 
 
 

அம்மாவின் பெயர் வாசலில் ஒலித்த கணம்..ஆவலோடு எட்டி பார்ப்போம்..

தயிர்காரக்கா வந்திருக்காங்கம்மா’ என்று கோரஸ் பாடிவிட்டு மீண்டும் எங்கள் விளையாட்டில் மூழ்குவோம்..!

தயிர்காரக்கா..?!

நடுத்தர உயரம், எடுப்பான தெற்றுப்பற்கள், தேக்கின் நிறம், சுருங்கிய கண்கள், 40ஐ நெருங்கும் தோற்றம்..!

டவுனிலிருந்து சில கிமீ., தள்ளி களக்காட்டூர் என்ற கிராமத்திலிருந்து முதல் பஸ் பிடித்து தயிர்கூடையை சுமந்து டவுன் முழுக்க அலைந்து தயிர் விற்பதே அவரின் அன்றாட பணி..!!

முந்தின நாளே, அன்றைக்கு தேவையான தயிர், வெண்ணெய், நெய் என சுத்தமான பாலில் தயாரித்து அனைத்தையும் தனித்தனி பாத்திரங்களில் வைத்து, கூடைக்கு நடுவே ஒர் அகன்ற பாத்திரத்தில் தயிரும், அதை சுற்றிய பகுதிகளில் மேற்சொன்ன பொருள்களையும் அழகாக அடுக்கி எடுத்து வருவார்..

வெயிலில் அலைந்து இறுதியாக தஞ்சமடையும் மரமாக எங்கள் வீடு இருக்கும்.

அம்மாவிடம் அத்தனை பரிவோடு பேசுவார்..பிள்ளைகளாகிய எங்களிடமும் பாசமாக பழகுவார்..

கவுரமாய் வாழ்ந்துகெட்ட குடும்பம்தான்..

கணவனை இழந்த பிறகு, இதுவே தொழிலாகிபோனது..என்று அம்மாவிடம் தன் மனகஷ்டங்களை இறக்கி வைப்பார்..

இறுதியாக அம்மாவின் கையால் சாப்பிட்டு, ஓய்வெடுத்துவிட்டு வெயில் சாயும்போது புறப்படுவார்..

புறப்படுவதற்கு முன், எங்களை ரகசியமாய் அழைத்து ஒரு பாத்திரம் கொண்டுவர சொல்லி, இருக்கும் கெட்டித்தயிரை சிரட்டையில் வழித்து, பகிர்ந்து கொடுத்துவிட்டுதான் செல்வார்..!

என்றாவது நாங்களும் நெய் உடலுக்கு நல்லது என்று கையில் வாங்கி டேஸ்ட் பார்ப்போம்..

அம்மா எவ்வளவு எடுத்து சொன்னாலும் அதற்காக அவர் காசு வாங்கியதே இல்லை..

அம்மா இல்லா நேரங்களிலும் இந்த வழக்கம் தொடர்ந்தது..

தயிர் என்பது பெரிதாக எங்கள் வீட்டு பயன்பாட்டில் இல்லை என்றாலும்..தன் திருப்திகாக ஒரு டம்ளர் அளவிலாவது கொடுத்துவிட்டு தான் போவார்..

வீக் என்ட், எக்ஸாம் ஹாலிடே, சம்மர் ஹாலிடேஸ் என மாதத்தில் சில நாட்களிலாவது எங்களை பார்த்து விட்டு தான் போவார்..

….

பறந்திடும் சிறகுகளாய் வாழ்க்கை பயணத்தில், அந்த அக்காவுக்கும் எங்களுக்கும் தொடர்பு கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்தது.

என்றாவது தயிர்காரக்கா பற்றி அம்மாவிடம் விசாரிப்போம்..

வீட்டுக்கே வர்றதில்லைனு, அம்மாவும் ஆமோதிப்பார்..

பலரிடம் விசாரித்தும் பார்த்தோம்..

பெரிதாய் அவரை பற்றி அக்கறை கொண்டவர்கள் இல்லைபோலும்..

விடைதெரியா கேள்விகளாய் காலம் அகன்றது..

என்றாவது அந்த டம்ளர் பார்க்கும்போது தயிர்காரக்கா ஞாபகம் வரும்..

மீண்டும் விசாரிப்போம்..அதே விடையில்லா கேள்வியாய் முடியும்..!

மாதங்கள் கடந்தன..பள்ளி இறுதி தேர்வும் முடிந்து..சம்மர் ஹாலிடேஸ்..!!

சில தினங்களுக்கு பிறகு, மாலைபொழுதில் “பட்டம்” செய்துகொண்டிருந்தோம்..

குழப்பமான நிலையில் அம்மா வந்து, அவரிடம் யாரோ சொன்னதாக ஓர் தகவல்..,

தயிர்காரக்கா உடல்நலமின்றி இறந்து 7மாதமாகிவிட்டதாக…

.

.

ஆக்சிஜன் இல்லா உலகமாய் விக்கி நின்றோம்..

.

.

இந்த தகவலை எப்போதோ உணர்ந்துவிட்டதாய் காற்றசைவில் சத்தமிட்டது…

அந்த வெற்று டம்ளர்..!!

காலம் தவறி கிடைத்த விடைகளை எதிர்கொள்வதை விட,

விடை தெரியா கேள்விகளாய் அவை இருந்திருக்கலாம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *