மாட்டிக்கிட்டியா?

0
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: April 30, 2017
பார்வையிட்டோர்: 26,128 
 
 

ஒரு நாதஸ்வரக்காரனும், ஒரு பெட்ரோமாக்ஸ்காரனும் நண்பர்களாக இருந்தனர். இருவரும் சில விழாக்களில் சேர்ந்து போவர்; சேர்ந்து வருவர். பெட்ரோமாக்ஸ் விளக்கால் இரவைப் பகலாக்குவான் ஒருவன். மற்றொருவன் நாதஸ்வரத்தால் விழாவை நாதவெள்ளத்தில் மிதக்க வைப்பான்.

ஒருநாள் இருவருக்கும் சண்டை வந்தது; ஒருவரை ஒருவர் திட்டித் தீர்த்துக் கொண்டனர். எனவே, எந்தவொரு விழாவுக்கும் இருவரும் சேர்ந்து இணைந்து செல்வதில்லை. ஒருவன் முன்னாலும், மற்றவன் பின்னாலும் செல்வர்.

மாட்டிக்கிட்டியாஒரு விழாவில் பெட்ரோமாக்ஸ் காரன் முந்திக் கொண்டான். விழாக்குழுவினர், “”நாதஸ்வரக்காரன் எங்கே?” என்று கேட்டனர்.

அவர்களிடம், “”அதை ஏன் கேட்கிறீங்க? அவன் ஒரு விழாவுக்கு ஊதி விட்டு வெத்துக் குழலோடு வருவான். வேணுமுன்னா குழலை வாங்கிப் பாருங்க தெரியும்!” என்று தூண்டிவிட்டான்.

விழாக் கமிட்டியார் சோணங்கிகள்; விவரம் இல்லாதவர்கள். நேரம் ஆகிக் கொண்டேபோனது. அவர்களுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. நாதஸ்வரக்காரன் வரட்டும் என்று காத்திருந்தனர். கடைசியில் நாதஸ்வரக்காரன் வந்தான். அவனிடம் அவர்கள் ஊதுகுழலை வாங்கிப் பார்த்தனர்.

உள்ளே ஒன்றும் இல்லாமல் இருந்தது. விரலை விட்டு நன்றாகத் தடவிப் பார்த்தனர். உள்ளே ஒன்றும் இல்லை. அவர்களின் கோபம் அதிகரித்தது. நாதஸ்வரக்காரனை நன்றாக உதைத்துவிட்டனர். எல்லாரும் சேர்ந்து செம்மையாக மொத்து மொத்து என்று மொத்தினர்.

பாவம் நாதஸ்வரக்காரன். “என்ன ஏதென்று எதுவும் கேட்காமல் இப்படிப்போட்டு உதைக்கிறார்களே…’ என்று அழுதான். இறுதியில் புரியவைத்தான் ஒருவன்.

“”ஏண்டா! எங்கேயோ போய் ஊதிட்டு இங்க வெத்துக் குழலைக் கொண்டு வாற!” என்ற ஏசினான்.

பெட்ரோமாக்ஸ்காரன் இவனைப்பார்த்துக் கள்ளமாகச் சிரித்தான். நாதஸ்வரக்காரனுக்கு பிறகுதான் புரிந்தது. இது பெட்ரோமாக்ஸ்காரன் வேலையென்று. மனசுக்குள் கறுவிக் கொண்டான், “இரு இரு உன்னை ஒருநாள் பழிவாங்கி விடுகிறேன்…’ என்று.

ஒருநாள் பழிவாங்கும் சந்தர்ப்பம் வந்தது. ஒரு விழாவில் இருவரும் ஏற்பாடாகி இருந்தனர். அந்த விழாவிற்கு பெட்ரோமாக்ஸ்காரன் பிந்தி வந்தான். ஊது குழல்காரன் முந்திக் கொண்டான். அவ்விழாக் கமிட்டியர் பெட்ரோமாக்ஸ்காரனைப் பற்றி விமர்சித்தனர். நாதஸ்வரக்காரனுக்கு மகிழ்ச்சி.

பழிவாங்கும் ஆசையால், “”அதுவா அது ஏங்கேக்கிறீங்க? அவன் ஒரு ஏமாத்துக்காரன். அவன் பக்கத்தூரு விழாவுக்கு எல்லாத்தையும் எரிச்சுட்டு, வெத்து விளக்கை கொண்டு வருவான். வேணுமானா வந்ததும் பத்த வைக்கச் சொல்லுங்க அது புஸ்புஸ்ங்கும்!” என்றான்.

சிறிதுநேரஞ் சென்று பெட்ரோமாக்ஸ்காரன் வந்தான். விளக்கை பற்ற வைத்தான். புஸ்புஸ் என்றது. விழாக்கமிட்டியாருக்கு அவன் பிந்தி வந்ததால் வேறு கோபம் வந்தது. விளக்குக்காரனைப் பிடித்து நன்றாக உதைத்தனர். இவன் விஷயம் புரியாமல் விழித்தான். அடி பொறுக்காமல் அழுதான்.

“”எங்கேயோ கொண்டு போயி விளக்க எரிச்சுட்டு வெத்து விளக்கையா கொண்டு வார… ஏண்டா புஸ் புஸ்ங்குது?” என்று மீண்டும் உதைத்தனர். நாதஸ்வரக்காரனின் நமட்டுச் சிரிப்பைக் கண்டதும்
பெட்ரோமாக்ஸ்காரனுக்கு விஷயம் புரிந்தது. தலையைக் குனிந்து கொண்டான்.

– மே 2011

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *