ஸைக்கிள் தூது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 1, 2025
பார்வையிட்டோர்: 1,248 
 
 

(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மூலைவீட்டு முருகேசம்பிள்ளையவர்களைவிட, என் மனத்தில் அதிகமாக ஆழப்பதிந்த மனித சொரூபம் இந்த உலகில் வேறொன்றும் இல்லை. அதன் காரணம் அவருடைய புராதனமான – அவரது அபிப்பிராயப் படி-மகா உறுதியான ஸைக்கிள் அல்லது துவிச்சக்கர வண்டிதான். 

அந்தக் காலத்தில் முருகேசம்பிள்ளை ஸதா காலமும் ஸைக்கிளிலேயே போவார்; நான் ஸ்தா காலமும் என் வாசகப் புத்தகத்தில் துவிச்சக்கர வண்டிப் பாடத்தையே படிப்பேன். அந்தப் பாடத்தால் முருகேசம்பிள்ளையும் முருகேசம்பிள்ளை யால் அந்தப் பாடமும் பரஸ்பரம் முட்டுக்கொடுத்துக் கொண்டு என் உள்ளத்திலே கால் ஊன்றிவிட்டார்கள். நீங்கள் எப்போதாவது குழந்தையாக இருந்திருந்தால். நான் சொல்லுவதன் உண்மை உங்களுக்குப் புரியும். உங்கள் விஷயம் எனக்குத் தெரியாது; என் சம்பந்தப்பட்ட மட்டில், நான் ஒரு காலத்தில் குழந்தையாக இருந்திருக்கிறேன். 

அந்தச் சிறு பிராயத்தில், ஸைக்கிள் என்றால் எனக்குப் பேராச்சரியம்; பெரியவன் ஆனவுடனே முதல் முதலிலே செய்யவேண்டிய காரியம் ஒரு ஸைக்கிள் வாங்குவதே என்று நான் திட்டம் போட்டிருந்தேன். 

ஆனால், அப்படி ஸைக்கிள் வாங்க வேண்டிய கெடு வந்ததும், ஒரு சிக்கலான பிரச்னை எழுந்து விட்டது. ஏனென்றால், இடையில் போனகிராப் என்ற மற்றொரு வஸ்துவும் என் உள்ளத்தைக் கொள்ளைகொண் டிருந்தது. ஸைக்கிளில் இரண்டு சக்கரங்கள் சுற்றி ஓர் ஆளையே தூக்கிக்கொண்டு போகின்றன; போனகிராப்பில் ஒரு சக்கரம் சுற்றிப் பாட்டெல்லாம் பாடுகிறது, பேச்செல்லாம் பேசுகிறது. ஸைக்கிளா, போனகிராப்பா எதை முதலில் வாங்குவது என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. ஸைக்கிள் என்பது வேலையின் சின்னம்; போன கிராப்போ போகத்தின் சின்னம். வேலைக்குப் பிறகு தான் போகம். ஆகையால், ஸைக்கிளையே முதலில் வாங்கத் தீர்மானித்தேன்; வாங்கவும் வாங்கி விட்டேன். 

ஆமாம்; வாங்கியாகி விட்டது. ஆனால் அதில் எப்படிச் சவாரி செய்வது? இந்த விஷயத்தைப் பற்றி ‘ முன்னே அவ்வளவாக நான் யோசிக்கவில்லை. அது மிகவும் சுளுவாக இருக்கும் என்றே நினைத்திருந்தேன். நினைத்தபடி அவ்வளவு சுளுவில்லை. பழக்கித்தர ஓர் ஆள் பிடித்தேன். அவன் ஒரு சின்னப்பயல்; மகா விஷமக் காரன்; துறுதுறுத்த வால். மூன்றே நாளில் எனக்கு அவன் ஸைக்கிள் பழக்கி வைத்துவிட்டான். ஆனால் ஸைக்கிளிலே இருபத்தெட்டு பஞ்சர்; என் உடம்பிலே நூறு ஊமைக்காயம்; தெருக்கோடியிலிருந்த ஒரு குட்டிச்சுவரும் விழுந்து விட்டது. குட்டிச்சுவர் விழுந்தது பெரிதல்ல; அப்போது அதற்குப்பின்னால் நின்ற ஒரு கழுதை பிரமாதமாக சங்கீதம் பாட ஆரம்பித்ததுதான் எனக்குச் சகிக்க முடியவில்லை. 

நான்காவது நாள் எனக்கு ஸைக்கிள்விட நன்றாகத் தெரிந்துவிட்டது. அந்தப் பெருமையைத் தெருவில் உள்ளவர்களுக்கெல்லாம் காட்ட வேண்டாமா? தெரு வுக்குள்ளே விட்டுக் கொண்டு போனேன். “வேண்டா மடா, வேண்டாமடா” என்று நான் எவ்வளவோ கத்தியும், அந்தப் பயல் அதைக் கேட்காமல் பின் சக்க ரத்தில் உள்ள ‘புட்பார்’ மீது தாவி ஏறித் தானும் நின்றுகொண்டான். அவன் ஏறியவுடனே, பூகம்பம் அ வந்த மாதிரி ஸைக்கிள் ஆடத்தொடங்கியது; எனக்கு நடுக்கமாக இருந்தது. அப்படியே இறங்கிவிட எண்ணினேன். ஆனால் அவன் இறங்கினால் தானே நான் இறங்க முடியும்? அவனோ, “சும்மா விடு, அண்ணா! என்ன இப்படிப் பயப்படறே!’ என்று என்னை உற்சாகப் படுத்தினானே ஒழிய, தான் இறங்குகிற வழியாக இல்லை. சிந்துபாத்தின் கழுத்திலே ஏறிக் காண்டானே ஒரு கிழவன் அந்தக் கதியாகி விட்டது! பையன் இறங்குகிற வரையில், நான் ஸைக்கிளைநி தாமல் விட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதான். அப்போது எனக்கு வந்த எரிச்சலில். அப்படியே ஸைக்கிளை பிள்ளையார் கோயில் குளத்தில் கொண்டு போய்த் தள்ளிப் பயலை நடுத்தண்ணீரில் அமுக்கி விடலாமா என்று தோன்றிற்று. நானும் கூட அமுங்குவதைப்பற்றி அக்கறையில்லை. ஆனால், புதிய ஸைக்கிளாயிற்றே. அதைக் கெடுக்கக்கூடாது என்ற ஒரே எண்ணத்தினால்தான், அந்த யோசனையைக் கைவிட்டேன். 

எங்கள் தெரு, மேடும் பள்ளமும் நிறைந்தது. நடுத் தெருவில், இந்தக் கோடியிலிருந்து அந்தக் 2 கோடி வரையில், குப்பை, முள், கல் எல்லாம் கிடக்கும்; குழந்தைகள் குறுக்கும் நெடுக்குமாக ஓடும்; இரண்டொரு மாடு கன்றுகள் மெல்ல அசைபோட்டுக் கொண்டு திரியும். மற்றப்படி, சந்தடியற்று வெறிச் சென்றுதான் இருக்கும். சென்னைமா நகரம் போன்ற பட்டணங்களில் கேட்கும் சப்த ஜாலங்களை அங்கே கேட்க முடியாது. என் சைக்கிள் சவாரியின் வெள்ளோட்டம் இந்தத் தெருவிலேதான் நடந்தது. 

மாலை நேரம்; ‘மஞ்சள் வெய்யில் எறிக்குதே! மயிலைக்காளை பாயுதே!’ என்று பாடிக்கொண்டு சில குழந்தைகள் ஓடின. சுப்பண்ணா இதுதான் என் சைக்கிள் குருநாதனின் திருநாமம் – அவன் என்ன செய்தான் என்றால், ஸைக்கிளில் நின்றபடியே, சொடேர் என்று அந்தச் சிறுவர்களில் ஒருவனை அறைந்து, “இனிமேல் இப்படி குறுக்கே வந்தாயோ கன்னந்தாடை பன்னிரண்டு’ என்று உறுமினான். அடிபட்ட, சிறுவன்,”அக்கா! அக்கா!” என்று கத்திய வண்ணம் கண்ணைப் பிசைந்துகொண்டு ஒரு புறம் ஸைக்கிளின் பக்கமாகவே ஓடினான். பெண் சப்தம் என்றால், எந்தப் புருஷனுக்கும் அது யார் என்று கவனிக்கத் தோன்றுவது சகஜந்தானே? நான் கண் ணைக் கொஞ்சம் திருப்பினேன் அந்த ‘அக்கா’ளைப் பார்க்க. அது, அதூ, அந்த….. 

“டே டே டே!……” 

நான் கீழே; ஸைக்கிள் என் மேலே. பக்கத்திலே வாயெல்லாம் பல்லாக நிற்கும் சுப்பண்ணா; வீச் என்று ஒரு குழந்தையின் கதறல். அந்தப் பெண்ணின் காலிலே ‘பிரேக்’ கம்பி குத்திய காயம். இத்தனையும் கண் மூடிக் கண் திறப்பதற்குமுன் நடந்துவிட்டது. 

சுப்பண்ணா இன்னும் இளித்தபடியேதான் நின்று கொண்டிருந்தான். தான் முன்னாடியே பத்திரமாகக் கீழே குதித்துவிட்ட சந்தோஷத்திலே, ஸைக்கிளைத் தூக்கி எனக்கு உதவி செய்யக்கூட அவனுக்குத் தோன்றவில்லை. எதிரே நின்ற அந்தப் பெண், தன் கால் வலியையும் கவனியாமல். ‘தொத்,தொத்.தொத் என்று அங்கலாய்த்துக் கொண்டே ஸைக்கிளைச் சற்றுப் பிடித்து நிமிர்த்தினாள். நான் எழுந்தேன். எனக்கு வலி துளியும் தெரியவில்லை. என் மனம் அப் போதிருந்த நிலையை என்னால் வர்ணிக்க முடியாது. அது ஒரு கவிதை உணர்ச்சி: 

காதில் ஊசல் ஆடும் அந்தக் 
கர்ணகுழை ஆகேனோ 
கோதிவிட்ட குழலும் ஆகிக் கன்னந் 
தொட்டுக் களியேனோ 

என்ற மாதிரிப் பாட்டெல்லாம் மிகவும் உண்மை. 

அவளை நான் எத்தனையோ தடவை பார்த்திருக் கிறேன். குளத்திலே, கோயிலிலே, ஈரத் துணியோடு, ஆபரண பூஷிதையாக – பல விதத்திலுந்தான். ஏற் கனவே, என் கவனத்தைக் கொஞ்சம் இழுத்தவள் தான் அவள். ஆனாலும் அன்று எனக்கு ஏற்பட்ட மனக்குழைவும் பரபரப்பும் வேறு என்றும் எனக்கு உண்டானதில்லை. அவள் உருவத்திலே ரதி அல்ல: குரலிலே கொஞ்சும் கிளி அல்ல; நடையிலே அன்னம் அல்ல; அறிவிலே வாணி அல்ல. ஆனால், இந்த அத்தனை இயல்பும் சேர்ந்தாலும், அந்த நிமிஷத்திலே அவள் என்னைப் பார்த்து அன்புடன் பூத்த ஒரு புன் முறுவலுக்குச் சிறிதும் ஈடாகாது. 

குனிந்து அவளுடைய காலைப் பார்த்தவண்ணம், “ரொம்பக் காயம் பட்டுவிட்டதோ? வலிக்கிறதோ?” என்று நான் கேட்டேன். 

“ஒன்றும் இல்லை” என்று சொல்லிய அவள், அழும் குழந்தையை ஒரு கையிலே பிடித்துக்கொண்டு, எதிர் வீட்டிலே புகுந்தாள். அதன் மண்டையிலும் ஓர் ஊமைக் காயம். அது பும் என்று கொட்டைப் பாக்கு மாதிரி வீங்கியிருந்தது. குழந்தை அலறிக் கொண்டே உள்ளே போயிற்று. 

ஐயோ பாவம்! உள்ளே சென்று, வீட்டாருக்குச் சமாதானம் சொல்லி வர, நான் விரும்பினேன். 

“சுப்பு! இந்த ஸைக்கிளைப் பார்த்துக்கொள். இதோ வருகிறேன்” என்று திரும்பினேன். 

“ஆமாம், அதிருக்கட்டும். ஒரு சந்தேகம், அண்ணா!-நீ விழுந்ததுதான் விழுந்தே. அதெப்படிக் கணக்காய் அவளுக்கு நமஸ்காரமாய் விழுந்தே?’ என்றான் சுப்பு. 

“சீ! காலிப்பயலே!” 

“இல்லேண்ணா! நீ கையை நீட்டினது நல்ல யோசனை. கால் ரெண்டையும் கெட்டியாப் பிடிச்சுக் காமே விட்டூட்டையே; அதுதான் சுகப்படவில்லை” என்று மறுபடியும் அவன் கிண்டல் செய்தான். 

களுக்கென்று எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. பதில் பேசாமல் வீட்டில் நுழைந்தேன். 

கூடத்தில் ரகளைப்பட்டுக்கொண் டிருந்தது; என் பேரும் அடிபட்டுக்கொண் டிருந்தது. ‘குஞ்சா வாத்துச் சுந்தரேசனா? அவன் காலாடின்னு எனக்கு ரொம்ப நாளாத் தெரியுமே!” என்றது ஒரு புருஷக் குரல். 

“அதென்ன படுவெட்டிலே போறது! கொழந்தை மேலே பைசிக்கிளை ஏத்தவாவது! காலையும் கையையும் ஒடிச்சுப்போட வாண்டாமா?” என்றது ஒரு கிழக் கோட்டானின் குரல். 

“பாட்டி! நான் நேரே பாத்துண்டிருந்தேன். அந்தப் பிள்ளை வேணுமின்னு செய்யலே. அதுவுந் தான் விழுந்துடுத்து. என்னவோ போராத’ காலம். வெய்யாதே. கொழந்தைக்கி ஏதாவது ஒத்தடம் போடேன்” என்றாள் சொர்ணாம்பாள். இவள் தான் அந்தப் பெண். 

இந்த நிலைமையில் நான் உள்ளே தலையை நீட்டினேன். 

“வாடாப்பா,மகாராஜா! வா! குழந்தை இன்னும் உயிரோடே இருக்கான்னு பார்க்க வந்தையோ?’ என்றாள் பாட்டி. 

“ஏதோ தவறிப்போச்சு….” என்று நான் ஆரம்பித்தேன். 

“தவறுமோ! அவ்வளவு துப்பில்லேன்னா ஸைக்கிள் என்ன வேண்டியிருக்கு, பவிஷ!” என்றார் புருஷ சிகாமணி. 

பாட்டியும் மேலே ‘படபட’ என்று பொரிந்தாள்.

இந்தக் கர்ஜனைகளுக்குச் சுருதி போடுவதுபோல், ‘ஓ ஓ ஓ ஓ ஓ…ஓ ‘ என்று அலறியது குழந்தை. 

எல்லாம் ஒரே ‘பாபேல் கோபுர’மாக இருந்தது. 

சித்திரம்போல் நின்ற சொர்ணம் மாத்திரம் பரி தாபத்தோடு என்னைக் கடைக்கண்ணால் பார்த்தாள். ‘இந்த மிருகக்காட்சிச் சாலைக்குள் நீ ஏன் வந்து அகப் பட்டுக் கொண்டாய்?’ என்று கேட்பதுபோல் இருந்தது அந்தப் பார்வை. 

நான் வெளியே வந்துவிட்டேன். 

இதிலிருந்து எங்கள் வீட்டுக்கும் அந்த வீட்டுக் கும் மனஸ்தாபம் ஏற்பட்டு, அது தீராத விரோதமாக முற்றிவிட்டது. ஆனால் சொர்ணத்தினிடம் எனக்குச் சற்றும் குரோதம் உண்டாகவில்லை. ரோமியோ ஜூலியத் நாடகம் உங்களுக்கெல்லாம் தெரியாதா? புகை நடுவிலே தீ இருப்பதைப் பூமியில் கண் டோமே – நன்னெஞ்சே! பூமியில் கண்டோமே’ என்று நீங்களெல்லாம் பாடியிருக்கக்கூடும். ஆனால், உண்மையில் அதை நான் கண்டேன்; அது அந்தச் சொர்ணந்தான். 

அதற்கு முன்னே என்னைப்போல் புத்தகம் படிப்பவன் இல்லை; வேலை செய்பவன் இல்லை; விளையாடுபவனும் இல்லை. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, எல்லாம் தட்டுக்கெட்டுவிட்டது. ஐம்பது கஜ தூரத்துக்கு அப்பால் இருந்துகொண்டு சொர்ணத் தைக் கடைக்கண் ணால் பார்ப்பதற்காகச் சகல தியாகமும் செய்துவந்தேன். 

அவளோடு பேசத் தைரியம் உண்டா? இல்லை. ஒரு கடிதம் எழுத? ஊஹூம்; மகா நடுக்கம்; பார்வை யோடு சரி. அதுவும் எப்படி? காக்கைப் பார்வை! இப்படியாகப் பல நாட்கள் கழிந்தன. 

அந்த விஷமக்காரச் சுப்பண்ணா,என் ஸைக்கிள் பயிற்சியை அபிவிருத்தி செய்துகொள்ள என்னைப் பல தடவை அழைத்தான். ‘இனி ஸைக்கிளே ஏறுவ தில்லை’ என்று நான் ஒவ்வொரு முறையும் சொல்லி வந்தேன். வெறிநாயைக் கட்டிப் போடுவதுபோல், ஸைக்கிளை ஒரு தூணில் சங்கிலியால் பிணைத்துப் பூட்டி வைத்திருந்தேன். அப்படியும் சுப்பண்ணா விடுவதாக இல்லை. ஊர்ப் பயல்களை யெல்லாம் அழைத்து வந்து நான் இல்லாத சமயம் பார்த்து, ஸைக்கிளின் ஆசனத்தில் உட்காரவைத்துப் பெடல் செய்யப் பழக்கிவிடுவான். இதனால் ஸைக்கிளின் பிடி, பிரேக்கு, ஹப் ஆகிய எல்லாம் கலகலத்துக்கொண்டே வந்தன. அதைப்பற்றியெல்லாம் நான் கவனிக்கவே இல்லை. 

இந்த நிலைமையில் சொர்ணத்துக்குக் கல்யாணம் நிச்சயமாகிவிட்டது. என்மனம் பட்ட பாட்டை யாரிடம் சொல்வேன்? சென்னப்பட்டணம் காலேஜில் படிக்கும் யாரோ பையனாம். சொர்ணத்தின் தமையனும் பட்டணத்திலிருந்து வந்து கல்யாண காரியங்களில் ஈடுபட்டான். அவன் என்னுடைய பழைய சிநேகிதன். அவனுடன் பேச முயன்றேன். அவன் துளியாவது முகங்கொடுத்தால்தானே? என் துயரத்தை எப்படியாவது சொர்ணம் அறிந்தால் போதும் என்ற ஆவல். அறியச்செய்வது எப்படி? அதுதான் தெரியவில்லை. 

இதோ கல்யாணப் பந்தலெல்லாம் போடத் தொடங்கிவிட்டார்கள்.எங்கள் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து, அந்தத் தென்னங்கீற்றுக்கள்,மூங்கில் கால்கள் சகலத்தையும் சபித்துக்கொண் டிருந்தேன். மனிதர்கள் மட்டும் அல்ல; அந்த ஐ!… வஸ்துக்களும் எனக்கு விரோதமாகச் சூழ்ச்சி செய்வதுபோல் அப்போது எனக்குத் தோன்றியது. 

இந்தச் சமயத்தில், வேர்க்க விறுவிறுக்கச் சுப்பு என்னிடம் ஓடி வந்தான். ”அவசரம்; ஒரே வார்த் தையில் பதில் வேண்டும். 

வேண்டும். என்ன? ஸைக்கிளோ உனக்குப் பிரயோசனம் இல்லை. விற்கிறாயா?” என்றான். 

விஷயம் இதுதான். சொர்ணத்தின் சகோதர னுக்குக் கல்யாண காரியங்களை அவசரமாகக் கவனிக்க ஒரு சைக்கிள் வேண்டும். இதற்காக இந்தப் பயல் தூது வந்திருக்கிறான். 

அந்தக் கல்யாணம் எனக்குப் பிடிக்கவில்லை. இருந் தாலும் அவள் சம்பந்தப்பட்ட ஒரு காரியத்துக்கு, ஸைக்கிளை மறுக்க உள்ளம் துணியவில்லை. என்னவோ குழப்பத்துடன் அதைத் தரக் கடைசியில் இசைந் தேன். ஆனால் இரவலாகத்தான்; விலைக்கு அல்ல. 

அந்தச் சமயம் மின்னல்போல் எனக்கு ஒரு யுக்தி தோன்றிற்று. இந்த ஸைக்கிளையே நமக்குத் தூதாகச் செய்தால் என்ன என்று ஓர் எண்ணம் உண்டாயிற்று. ஒரு கடிதத்தை எழுதி,ஸைக்கிளின் கைப்பிடிக் குழாய்க்குள் திணிப்பது என்று முடிவு செய்தேன். 

சரி; ஆனால் கடிதத்தை யாருக்கு எழுதுவது? சொர்ணத்துக்கா, அவளுடைய சகோதரனுக்கா? யார் கையில் அது அகப்படுமோ? அல்லது அகப்படாமலே போய் விடுமோ? எப்படியானாலும் சரி; சொர்ணத் துக்கே எழுதுவது என்று தீர்மானித்தேன். கடிதத்தை எழுதினேன். ‘மானே! தேனே!’ என்றெல்லாம் எழுத வில்லை.’கண்ணே! மூக்கே!’ என்றுகூட ஆரம்பிக்க வில்லை. அப்படி யெல்லாம் யோசித்து வர்ணனையாக எழுத எனக்கு நேரமும் இல்லை. ‘பிஸினெஸ் லைக்’காக. இப்படி எழுதினேன்: 

”சொர்ணம்! என்மனசு உனக்குத் தெரியும். இந்தக் கல்யாணம் நடந்துதான் தீரவேண்டுமா? என் ஆயுள் முழுவதும் நான் பிரம்மசாரியாகத்தான். இருக்க வேண்டுமா?
-சுந்தரேசன்.” 

என்னுடைய இந்தக் கடிதத்தைத் தாங்கிக் கொண்டு, அந்தக் கல்யாணப் பந்தலின் ஒரு காலண்டை போய் ஒண்டி நின்றது என் ஸைக்கிள். வெகு நேரம் வரையில் அதையே நான் பார்த்துக் கொண்டிருந்தேன். 

நான் ஆசைப்பட்ட வண்ணமே சொர்ணம் ஸைக்கிளைப் பார்த்தாள். அது என் ஸைக்கிள் என்று உடனே அறிந்துகொண்டாள். பிறகு என்னை நோக் கிப் புன்சிரிப்புச் சிரித்தவண்ணம், செல்லமான ஒரு கன்றுக்குட்டியின் கொம்புகளைத் தடவிக் கொடுப்பது போல், என் ஸைக்கிளின் கைகளை அவள் தடவிக் கொடுத்தாள்.பின்பு சரேல் என்று உள்ளே போய் விட்டாள். என் கடிதம் அவள் கையில் அகப்படும் என்று எண்ணிய என் எண்ணம் அவலமாகப் போய் விட்டது. என்ன என்னவோ நினைப்புடன் அப்படியே மனங்குன்றி நான் உட்கார்ந்திருந்தபோது, ஐந்து நிமிஷத்துக்கெல்லாம் அவள் திரும்பவும் வந்தாள். அவள் கையிலே ஒரு சிறு கடிதம் இருந்தது.சுற்று முற்றும் பார்த்து யாரும் அருகில் இல்லையென்று நிச்சயம் செய்துகொண்டு பிறகு என்னை நோக்கிய வண்ணம் அந்த் நறுக்கை ஸைக்கிளின் மற்றொரு கைப்பிடிக் குழாய்க்குள் செருகி மூடினாள். இன்னொரு முறை என்னைப் பார்க்க முயன்றாள். ஆனால் வெட்கத்தால் முகம் சிவந்தளாக, நாணிக் கவிழ்ந்த தலையுடன் உள்ளே ஓடிவிட்டாள். 

அதென்ன கடிதம்? என் இருதயம் படப வென்று அடித்துக்கொண்டது. ஓடிப்போய் அதை எடுத்துப்பார்க்க வேண்டும் என்று மனம் துடித்தது. ஆனால், அந்தக் கிழக் கோட்டான் வாசலில் வந்து, சரியாக அந்த ஸைக்கிளின் பக்கத்திலே நின்று கொண்டு, “ஏண்டா முத்து, இன்னும் நாயனக் காரனுக்குச் சொல்லலையா? எப்பச் சொல்றது? விடிஞ்சா முகூர்த்தம். கிடுகிடுன்னு கீத்தைப் போடுங்கோடா; விளையாடறகளே!” என்று ஆட்களைக் கூப்பிட்டுக் ‘கார்வார்’ செய்யத் தொடங் கினாள். அதனால் நான் கிட்ட அண்ட முடியவில்லை. 

நடுப்பகல் ஒரு மணி இருக்கும். சொர்ணத்தின் சகோதரன், கல்யாண காரியமாக எங்கேயோ கிளம்பி விட்டான். மாலையில்தான் ஸைக்கிள் திரும்பி வந்தது. தாயில்லாப் பிள்ளை மாதிரி, பழைய பந்தல் காலடி யிலேயே மறுபடியும் நின்றது என் ஸைக்கிள்! 

ஒருவரும் இல்லா த சமயமாகப் பார்த்து, ஸைக்கிளிடம் சென்றேன். அந்த நேரத்தில் வெகு சுகமாக நிலவு காய்ந்துகொண் டிருந்தது. அக்கம் பக்கம் ஒரு ரு கண்ணோட்டம் வீட்டு விட்டு, சொர்ணத்தின் மலர்க் கை பட்ட அந்த ஸைக்கிள் பிடியை அன்புடன் நானும் ஒரு முறை தடவிக் கொடுத்தேன். இந்தச் சமயத்தில் ஏதோ ஆள் அரவம் கேட்கவே, அந்தக் கிழக் கோட்டானோ என் பயத்தால் திடுக்கிட்டுத் திரும்பினேன். இல்லை; சொர்ணந்தான் தன் மோகனப் புன்னகையுடன் கலீர் என்று சிலம்பொலிக்க உள்ளே பாய்ந்தோடினாள். அவளைக் கூப்பிட வாயெடுத்தேன். ஆனால், நாவு கல்லாகிவிட்டது. பிறகு, ஸைக்கிள் பிடியின் மூடி களைத் திறந்தேன். இரண்டும் காலி; இரண்டு கடிதங்களையும் காணவில்லை! திகைத்து விட்டேன். அவை யார் கையில் சிக்கினவோ? என்ன விபரீதம் நேரிடுமோ? இந்தக் கிலியுடன் கால்கள் தள்ளாடப் பழையபடி என் வீட்டுத் திண்ணைக்குத் போய்ச் சேர்ந்தேன். 

சற்று நேரத்துக்கெல்லாம் என்னைப்போலவே, சொர்ணமும் வந்து, அந்தப் பிடிகளைச் சோதனை போட்டாள். தன் கடிதத்துக்கு என் பதிலை எதிர் பார்த்தாளோ என்னவோ? ஒன்றும் அகப்படாமல் போகவே, முகம் சுண்டி, உள்ளே சென்றுவிட்டாள். அந்தச் சனியன் பிடித்த ஸைக்கிளுக்குத் பேசத்தான் தெரிந்ததா! 

மறுநாள் பெண் வீட்டில் ஒரே கலவரமாக இருந்தது. என் சம்பந்தமாகத்தானோ என்று நான்- நடுங்கிப்போனேன். திண்ணையில் சொர்ணத்தின் சகோதரன் சந்திரன் மட்டும் கவலையற்று உட்கார்ந்து கொண்டிருந்தான். அரை மணி நேரம் கழித்து,. அவனை உள்ளே அழைத்தார்கள். ஒரு மணி நேரம் ஆயிற்று.பிறகு எல்லோருமாக வெளியே வந்தார்கள். 

இதற்குப் பின்பு, ஒரு பேராச்சரியம் நிகழ்ந்தது. சந்திரனின் தகப்பனார் விரு விரு என்று என்னிடம் நேரே வந்தார். என் மனம் விதுக்கு விதுக்கு என்று அடித்துக்கொண்டது. எழுந்து ஓடிப்போய் விடலாமா என்றுகூட நினைத்தேன். அவர் சமீபித்து விட்டார். நான் பயந்ததற்கு நேர்மாறாக. ”என்னவோ; என்ன இருந்தாலும் நாம் உள்ளூர்க்காராள் அல்லவா? ஸௌஜன்யமாகப் போய்விட வேண்டும். எங்க பேர்லே ஏதாவது தப்பிருந்தா மன்னிச்சுக்கணும்” என்று சொல்லி, என் பதிலை எதிர்பாராமலே எங்கள் வீட்டுக்குள்ளே நுழைந்தார். மாப்பிளே,ரொம்பக் “மாப்பிளே, ரொம்பக் கோவிச்சுண்டூடாதேயுங்கோ. இதோ வந்துட்டேன்” என்று சிரித்துக்கொண்டே கூறிய சந்திரனும் அவர் பின்னால் நுழைந்து விட்டான். 

எல்லாம் எனக்கு ஏதோ கண்கட்டுவித்தை மாதிரி இருந்தது. என் கட்டைவிரலைக் கடித்துக் கொள்ள வேண்டும்போல் தோன்றியது; கனவா, நனவா என்று நிச்சயிப்பதற்காக அல்ல; ஒன்றும் புரியாத குழப்பத்தால்தான். அப்படியே கடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். சற்று நேரம் கழித்து, சந்தோஷ முகத்துடன் தகப்பனும் பிள்ளையும் வெளியே வந்து, ”போய் வரோம்” என்று என்னிடம் விடைப்பெற்றுச் சென்றார்கள். 

என்னை என் தகப்பனார் உள்ளே அழைத்தார். “அந்தக் குட்டி சொர்ணத்தைக் கலியாணம் பண்ணிக்க உனக்கு இஷ்டமாடா?” என்று திடுதிப் பென்று என்னைக் கேட்டார். 

கூச்சத்தோடு தலையை அசைத்து என் சம்மதத் தைத் தெரிவித்தேன். 

நடந்த விவரங்களைப் பிறகு என் தகப்பனார் சொன்னார். சொர்ணத்துக்கு நிச்சயித்திருந்த பிள்ளை வீட்டாரிடமிருந்து திடீர் என்று ஒரு தந்தி வந்ததாம். “பிள்ளைக்குச் சம்மதமில்லை. உங்கள் அட்வான்ஸ் ரூபாய் ஐந்நூறையும் அனுப்பிவிட்டோம். நாங்கள் வரவில்லை; மன்னியுங்கள்” என்று தந்தி. முகூர்த்தத்தை நிறுத்த இவர்களுக்கு இஷ்டமில்லை. உள்ளூரிலே எங்கள் வீட்டுச் சம்பந்தமே நல்லது என்று எண்ணிவிட்டார்கள். என் சம்மத முண்டானால், தமக்கு ஆட்சேபம் இல்லை என்று என் தகப்பனார் தெரிவித்துவிட்டார். 

அப்புறம் என்ன? கல்யாணத்தை வர்ணிக்க வேண்டுமா? அது மிகவும் விமரிசையாகவே நடை பெற்றது. ஆனால், முன்னே என்னவோ ரோமியோ ஜூலியத் மாதிரி சொர்ணமும் நானும் பரஸ்பரம் நயன மின்னல்களை வீசினோமே! கல்யாண காலத்திலே நானாவது தேவலை; சொர்ணம் ஏதோ காட்டிலே இருந்து பிடித்து வந்த மான்குட்டி மாதிரி, நாணிக் குனிந்துவிட்டாள். 

மாங்கல்யதாரணம் முடிந்து, பெரியவர்களை நமஸ்கரிக்கச் சென்றோம். முதல் முதலிலே பாட்டி ஆனந்தக் கண்ணீர் சொரிந்தபடி, “மகாராஜனாய். ஆயிரங்காலத்துப் பச்சையாய் வாழணும், அப்பா! என்னவோ இந்தக் கிழம் என்னிக்கோ உளறித் தேன்னு மனசிலே வெச்சுக்காதே. கிழங்களுக்குப் புத்தி ஏதுடாப்பா!” என்றாள். 

எனக்கும் கண்ணீர் வந்துவிட்டது. “govia. பாட்டி! என்மேலே தப்பு. நீங்க என்ன பண்ணுவ? நீங்கதான் என்னை மன்னிக்கணும்’ என்று உபசாரம் சொன்னேன். 

நாலு நாள் கல்யாணமும் நடந்து சேஷ ஹோமமும் பூர்த்தியாயிற்று. 

அன்றிரவு தாவல்யமான நிலவு காய்ந்துகொண்டிருந்தது. 

என்னைச் சந்திரன் அழைப்பதாக, சுப்பு வந்து கூப்பிட்டான். இந்தத் துறுதுறுத்த வாலை நம்ப எனக்கு இஷ்டமில்லை. என்றாலும் நிஜமாக இருந்து, சந்திரனுக்கு வருத்தம் வரக்கூடாதே என்பதற்காக, எழுந்து சென்றேன். 

கோயில் நந்தவனத்திலே சந்திரன் உட்கார்ந் திருந்தான். பக்கத்திலே அவன் தங்கை சொர்ணம். 

என்னைக் கண்டதும், விறுக்கென்று எழுந்து அவள் முயன்றாள். அவளை ஓடவிடாமல் பிடித்துக் கொண்ட சந்திரன், ‘வாருங்கள். மாப்பிள்ளை! இப்பாது நான் ஒரு கதை சொல்லப்போகிறேன்” என்றான். 

”சந்திரா! என்ன தமாஷ் இது?” என்று கேட்டுக் கொண்டே, அவன் பக்கத்தில் உட்கார்ந்தேன். 

“தமாஷா, தமாஷ்! ஒரு சந்திரன் இல்லா விட்டால், இன்று நிலைமை எப்படிப் போயிருக்கும் என்று 

யாருக்குத் தெரியும்?” என்று சொல்லி, இரண்டு காகிதத் துண்டுகளை ஜேபியிலிருந்து எடுத்து, பீதாம்பரையரைப்போல், லாகவமாக வெளியே போட்டான். 

ஒன்று நான் எழுதி ஸைக்கிள் பிடியில் வைத்தது. மற்றது, சொர்ணத்தின் கையெழுத்து; அதைப் படித்தேன்: 

“சுந்தரம்! என் மனசு உங்களுக்குத் தெரியும். இந்தக் கல்யாணம் நடந்துதான் தீர வேண்டுமா? என் ஆயுள் முழுவதும் நான் கன்னியாகத்தான் இருக்க வேண்டுமா? -சொர்ணம்.” 

என்னைத் தூக்கிவாரிப் போட்டது. 

இந்த இரண்டு கடிதங்களும் சந்திரன் கையில் சிக்கவே, மாப்பிள்ளைப் பையனை என்னவோ மிரட்டி, ஏதோ 

தந்தியடித்துக் கலைத்துவிட்டான். பிறகு ஏற்பட்ட குழப்பத்தில், தான் தலையிட்டு, இந்தக் கல்யாணத்தை முடித்து விட்டான்; இதுதான் ரகசியம். 

“இதெல்லாம் சரி; எனக்கு ஒரே ஒரு சந்தேகம். உங்கள் இரண்டு பேர் கடிதங்களின் வாசகமும் ஒரே விதமாக இருக்கிறதே, இதெப்படி? ஒருவர்க் கொருவர் பேசிக்கொண்டோ எழுதினீர்கள்?” என்று கேட்டான் சந்திரன். 

“மனசுதான் காரணம்” என்று நான் சுலபமாகப் பதில் சொன்னேன். 

ஆனால், சொர்ணம் சிறிது நகைப்புடன், “அவர் கடைசியாகப் படித்த நாவல் என்ன? அதைக் கேளு, அண்ணா” என்றாள். 

‘என்ன நாவல்’ என்று அவளைப் பார்த்துக் கொண்டே பதில் அளித்தேன். 

“அதில்தான் சூட்சுமம் இருக்கிறது. அந்த நாவலிலே வரும் கதாநாயகியின் கடித வாசகம் இது தான்” என்று சொல்லி மீண்டும் நகைத்தாள் சொர்ணம். 

“சொர்ணம், இனிமேல் நாவல் படிக்காதே; நானும் படிக்கவில்லை. சண்டைக் கடிதம் ஏதாவது அந்த நாவலிலே அகப்பட்டால் விபத்தாகிவிடுமே!” என்று நான் சொன்னதும் எல்லோரும் ‘கொல்’ என்று சிரித்தோம். 

– நொண்டிக் கிளி, முதற் பதிப்பு: ஸெப்டம்பர் 1949, கலைமகள் காரியாலயம், சென்னை.

தி.ஜ.ரங்கநாதன் தி.ஜ.ர எனப் பரவலாக அறியப்படும் திங்களூர் ஜகத்ரட்சக ரங்கநாதன் (1901-1974) ஒரு தமிழ் எழுத்தாளர், இதழாளர். தமிழ்க் குழந்தை இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர். இவர் 1901 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருவையாற்றுக்கு அருகிலுள்ள திங்களூரில் பிறந்தார். நான்காம் வகுப்பு வரைதான் படித்தார். அறிவியலிலும் கணிதத்திலும் ஆர்வம் கொண்டு அவற்றைப் புரிந்துகொள்வதற்காகவே ஆங்கிலம் படித்தார். கர்ணமாக வேலை பார்த்த தன் தந்தையுடன் பல ஊர்களுக்குச் சென்றார். நில அளவையில் பயிற்சி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *