ஸார்! என்னைத் தெரியுதா?
கதையாசிரியர்: என்.சந்திரசேகரன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: September 17, 2025
பார்வையிட்டோர்: 7,234

சுரேந்திரா அனுப்பிய வாட்ஸ் அப் செய்தி கண்டு மனசு ரொம்ப சந்தோஷப்பட்டது. நாம் நம்முடன் படித்து, வாழ்ந்து மகிழ்ந்த பழைய நண்பர்களை நேரில் பல பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் சந்திக்கப் போகிறோம்.
நாம் படித்த சூழ் நிலையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு சிச்சுவேஷன். எப்படி இருப்பார்கள்- கோபால், கார்த்திக், மயில்சாமி, அம்பலவாணன், ரமேஷ், அசோக் சென்குப்தா, ரங்கராஜ், ரமணன், மதிவாணன், ரீத்தா, மைதிலி, வ்ருந்தா, நோரா……… பட்டியலும் உருவ ரீவைண்டும் ஊடகத்தை விட வேகமாக மனச்செயலியில் பார்க்க இறங்கியது.
கிட்டத்தட்ட 40 வருடங்கள் கடந்து விட்டன-மேற்பட்டப் படிப்பு முடித்து. அதுவும் அந்தக் காலத்து MCC யில். எங்கள் வகுப்பில் 30 பேர் என்று நினைவு! சுரேந்திரா எல்லாரையும் ஒருங்கிணைக்க அழைத்துக் கொண்டிருந்தான். எனக்கு அவனும் இன்னும் ஓரிரண்டு கிளாஸ்மேட்ஸ் மட்டும்தான் நிரந்தர தொடர்பில். மற்ற எல்லோரும் தொடர்பு எல்லைக்கு வெளியேதான்! நானும் பணி நிமித்தம் வட இந்தியா போஸ்டிங்க்கில் சென்று வருடம் 15 ஆச்சு. இப்போதான் மீண்டும் சென்னை! பதவி ஓய்விற்குப் பின் கூட்டைத் தேடி வரும் பறவைகள் மாதிரி திரும்ப வருவது ஆனந்தமான அநுபவம்.
அது சரி! இப்போ அவர்களைப் பார்த்தால் என்ன ஆகும்? அவர்கள் எப்படி பிரதிபலிப்பார்கள். எனக்குத் தோன்றும் அதே மகிழ்ச்சி அவர்களுக்கும் இருக்குமோ!
அடையாளங்கள் எப்படிக் கண்டு பிடிப்பது? பழைய நினைவுகளைக் கிளறி, சம்பவங்கள் ஏதாவது பிரித்து எடுத்து பில்ட் அப் கொடுக்கணும். அந்த நினைவுகளின் நூல் பிடித்தே மீண்டும் நட்பின் சிகரத்தைத் தொட முயலவேண்டுமோ?
அது சரி! என் சார்பில் நான் என்ன செய்ய வேண்டும்? பல கேள்விகளுக்கு விடைகள் அளிக்கத் தயாராக இருக்க வேண்டும்.
முதலில் நாங்கள் செய்த வாக்குறுதிகள்! கல்லூரி முடிந்த கையோடு, தேர்தல் வாக்குறுதிகளை விடவும் ஆழமான சில கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டோம். காற்றோடு கலந்து சென்ற பல வாக்குறுதிகள் நினைவில் டாலடித்தன! முதலாவது விஷயம்- திருமண அழைப்பிதழில் தொடங்கி, இதுவரை என் சைடில் ஏற்பட்ட குடும்ப விஷயங்கள், தனிப்பட்ட விஷயங்கள், பதவி விவரங்கள், அந்தஸ்து, சொத்து, இத்யாதி இத்யாதி!
முக்கியமான ஒரு கேள்விக்கு நிஜமான பதிலை இன்னும் தேடவேண்டியிருக்கிறது: “இத்தனை நாள் எங்கே , ஏன் , காணாமல் போய் விட்டாய்? ஏன் தொடர்பு கொள்ளாமலே யே இருந்து விட்டாய்?”
என்னைப் பொறுத்த வரையில், காதல் திருமணமானதால் லிமிடெட் எடிஷன் போல பத்திரிக்கை விநியோகம் கம்மிதான்! திருமணம் குருவாயூர் கோவிலில் நடந்த படியால் வந்தவர்களும் மிகக் குறைவு! சென்னையில் ஒரு உட்லாண்ட்ஸ் டின்னர்! அதற்கும் அழைப்பிதழ் குறைவு!
‘நட்பு தொடரவில்லையா? அல்லது நட்பு விட்டுபோனதா?’ என்னால் இந்தக் கேள்விக்கும் சரியான பதில் அளிக்க முடியவில்லை.
வாடா! போடா! ஏய்! என்று அழைக்கப் பட்டவர்களுக்கு நாம் இப்போது எப்படி கூப்பிட வேண்டும்?
கல்லூரிக்குப் பின் பிறந்து தற்போது வேர் விட்டுக் கொண்டிருக்கும் பல நட்புக்கள் இப்போது என்ன நிலையைச் சந்திக்கும்? பழைய நட்புக்கள் உதாசீனப் படுத்தப் படுமா?
“ஓகே! இப்ப நட்பு தொடருமா? துளிர்க்குமா, சிறக்குமா?”
‘அதுக்குத்தாண்டா இந்த ஏற்பாடு? வெயிட் அண்ட் ஸீ!’ என்று சுரேந்தர் முழுமை செய்தான்.
அன்றைய தினம்!
எல்லார் மனங்களிலும் ஒரு எடைக் கல்லும் பல எதிர்பார்ப்புக்களும் இருந்தது வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தது.
தோளில் கை போட்டாலும், அந்த உரிமையோ, துணிவோ கைப் பிடிப்பிலும் முக லட்சணத்திலும் துளியும் தெரியவில்லை.
“டேய் என்று தொடங்கி, முகபாவக் குறிப்புடன், “இப்போ சார்! மேடம்! அப்படீன்னே கூப்பிட்டுக்கலாம்!” என்ற நமட்டுச் சிரிப்புடன் முடிவடைந்தது.
“அப்போ! சம்பத் ஐஏஎஸ் லிருந்து ரிடைர் ஆயிட்டியா? ஸாரி! ஆயிட்டீங்களா?”
“ஓ மை காட்! எப்படி அந்த ஸியாச்சின்ல மானேஜ் பண்ணிட்டு, பிரிகேடியரா ரிடைர் ஆனீங்களோ! வெரி வெரி ஸ்ட்ராங்க் பெர்ஸன் டேவிட்.”
“குமுதா! நீ…. நீங்கள்… மெட்ராஸ் யூனிவர்சிட்டியிலிருந்து HOD ஆக ரிடைர் ஆனீங்களா?”
பெரும்பாலும் எல்லா மனங்களிலும் யார் யார் எந்த அந்தஸ்து நிலை விளிம்புகளை எட்டிப்பார்த்துத் திரும்பி உள்ளனர் என்பதில் மிகக் குறியாக இருந்ததாகத் தோன்றியது.
இன்னொரு விஷயம், அக் காலத்தில் பொருளாதார விளிம்பிற்குக் கீழ் இருந்த வகுப்பு நண்பர்கள், இன்று எப்படி உயர முடிந்தது என்பதை சாங்கோபாங்கமாகக் கேட்டுத் தெரிந்து கொள்ள விழைந்தனர்.
போன மாசம்தான் நம்ப ப்ரின்ஸி கேட்டார்னுட்டு ஒரு 2000 டாலர் டொனேஷன் அனுப்பி வச்சேன். என்றான் குப்புசாமி- கனடாவில் செட்டில் ஆகிவிட்டான். இன்று வந்திருக்கிறான்.
பெண் நண்பர்கள் பார்வையில், முக்கியமாக ஆண் ஹீரோக்கள் இன்று எப்படி? என்பதையும், அதே சமயத்தில், பழைய ஹிரோயின்கள் இன்று தோற்றத்திலும் நட்பிலும் வாழ்க்கையிலும் எப்படி என்பதை ஆண் நண்பர்கள் மொய்த்து ஆராய்ந்ததிலும் பொழுது மிக வேகமாகவே நகர்ந்தது.
அந்தக் குவியலில் சில ஜோடிகள், திருமணம் வரை செல்வார்கள் என்று கல்லூரிக் காலத்திலேயே கன்ஃபர்ம் பண்ணின சிலரும் இன்று எதிரும் புதிருமாக, மற்றவர்களுக்காக, புதிரை அவிழ்க்க முயன்று கொண்டிருந்தனர். இயல்பாகவே பேசிக் கொண்டிருந்தனர்.
சிலர் ஜாடையாக, அன்றே நான் சொன்னேன் ‘உங்க திருமணம் நடக்காது என்று’ மீண்டும் சூளுரைத்தனர்.
இரண்டு பழைய ஜோடிகள், இன்றுதான் முதலில் சந்தித்த மாதிரி, பழைய விஷயங்களைப் பேசாமல், இன்றைய மற்றும் நாளைய நிலவரத்தை மட்டும் பேசி மனம் விட்டு சிரித்தனர்.
“டேய்! அன்னிக்கே நான் சொன்னேன். இவர்கள் காதலர்கள் அல்ல; நண்பர்கள் என்று; நட்பு வேறு! காதல் வேறு! உனக்குப் புரிந்தால் சரி!” இன்னொரு நண்பரின் வியாக்கியானம்.
டின்னர் தொடங்கியது- புஃப்ஃபே மாடல்!
அட! நீ கறி சாப்பிட ஆரம்பிச்சிட்டியா? எனக்கு டாக்டர் அட்வைஸ் : கறி சேத்தக் கூடாதுன்னு! கொலஸ்ட்ரால் அதிகம்! இருந்தாலும் தினமும் ரெண்டு பெக் வேணும். அதை நிறுத்த முடியாதுடா சாமி! சிவஞானம் பொருமினான்; இருமினான்.
“ஒருத்தனுக்கும் அறிவு கிடையாது! அட்லீஸ்ட் இன்னிக்கு ஒரு பார் கௌன்டர் போட்டிருக்கலாம்- இந்த ஓட்டல்ல பர்மிட் உண்டே?” நாயக் புலம்பினான். நாயரும் “பறஞ்சா இவன் மாருக்கு மனசுல ஆவில்யா” என்று உச்’ கொட்டினான்.
“சேகர்! ஷிக்கா கலியாணம் பண்ணிக்கல! IFS போயிட்டா. இன்னிக்கு அவ வரல. அவ பின்னால சுத்திட்டு இருந்த ஞானாகரன் பாதிரியாரா சேர்ந்துட்டான். அங்கே நிக்கிறான் பார்.” பிலிப் வர்கீஸ் சொன்னான்.
நம்ம மளிகைக் கடை ஆனந்தன் போன வருஷம் இறந்து போயிட்டானாம். நுரையீரல் கேன்ஸராம்.
டின்னருக்கு அடுத்தது போட்டோ ஷூட்! யார் பக்கத்தில் யார் நிற்பது என்பதிலும் கேள்விக் குறிதான். போட்டோ முடிந்தவுடனே சிலர் நழுவிப் போனார்கள்.
சிலர் கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தில் நிஜம்மா நட்பைப் புதுப்பிக்க முயன்று கொண்டு போனில் மிஸ்டு கால் பண்ணச் சொல்லி நம்பர் வாங்கினார்கள்.
ஒரு குரல் கேட்டது: “கால் பண்ணா என் செகரட்ரிதான் எடுப்பாள். நீங்க வாய்ஸ் மெஸேஜ் போட்டுடுங்க! நானும் அப்படியே பதில் அனுப்புவேன். எடுத்துப் பேச நேரம் கிடைக்காது. எப்பவாவது மீண்டும் நாம குடும்பத்தோட சந்திக்கலாம்.” என்றான் பாஸ்கர்- ஆயிரம் விளக்கு, எம்.எல்.ஏ வாக இருக்கிறான்.
“நான் அடுத்த வாரம் பிலடெல்பியா போயிடுவேன். ஆறு மாசம் கழிச்சு வரும்போது பார்போம். ஒரு சின்ன கெட் டு கெதர் வைக்கலாமே கேதரின்? நீ வருவியா?” என்றான் வைத்தியநாதன்.
“இந்த சீசன்ல கச்சேரி அதிகமாயிடுச்சு! டைம் கிடைக்கவே மாட்டேங்குது! இடையில என் பையன் போஸ்டிங்க்ல, CRPF ஐ.ஜி யா அஸாம் போறான். என்று ஆயாசப் பட்டார் ஸ்ரீனிவாசராகவன். இன்னும் சிகையை விடவில்லை.
எல்லாரும் மூட்டை கட்டும் தருணம்! அவசர அவசரமாக ஒருத்தர் ஆட்டோவில் வந்து இறங்கினார். இரவு பத்து மணி ஆகி விட்டது.
சார்! பாஸ்கர் எம்.எல்.ஏ சார் என்னையும் இந்த டின்னரில் கலந்து கொள்ள அழைத்தார். ரொம்ப லேட் ஆகி விட்டது. ஸாரி!
வந்தவர் நம்மை விட மிகவும் சீனியர். படபடப்புடன் இருந்தார். இருந்தாலும் அவரை எங்கோ நாம் பார்த்த ஞாபகம் இருந்தது.
திடீரென நம்மில் ஒருவன் ஓடி வந்தான். வந்தவரைப் பார்த்து, “ஸார்! என்னைத் தெரியுதா? நான் தான் நம்பிராஜன் உங்க லாஜிக் ஸ்டூடன்ட்.
வந்தவரின் வயசு சுமார்80 இருக்கும். கூட ஒரு பையன் வந்திருந்தான். “ஸார்! அவருக்கு பார்வையும், ஹியரிங்கும் ரொம்ப வீக்!” என்றான்.
அதற்குள், அந்த ஹாலின் ஜனத்தொகை மொத்தம் நான்கு அல்லது ஐந்து பேர்தான். வந்திருந்தவர் நம்முடைய ஆசிரியராகப் பணியாற்றியவர் என்று தெரிந்தும் அதில் சிலர் “ஓகே! குட் நைட் சார்!” என்று கிளம்பிவிட்டனர்.
எங்களுடைய பிரியமான ஆசிரியர் இவர்- மாணிக்கரத்தினம் சார்- அந்த நாட்களில்!
“ஸார்! இவிங்க கடையை மூடப் போறாங்க! நான் ஏதாவது பார்ஸல் பண்ணித் தரச் சொல்லவா?”
அவர் “வேண்டாம்” என்று மறுத்தார்.
“தண்ணீர் விட்டோ வளர்த்தோம்……சர்வேஸா இப்பயிரை………” என்று திரும்பிச் சென்று கொண்டிருந்த அவர் உதடுகள் முணுமுணுத்திருக்கும்.
என்னைப் பொறுத்த அளவில், இந்த ரீ வைண்டு நட்பு இனிமேல் பழசு போல எடுபடாது என்று திட்டவட்டமாகத் தோன்றியது. கையிருப்பு நட்புக்களுக்கு இதனால் அபாயமில்லை என்று.
![]() |
சந்திரசேகரன் (நரசிம்மன்) அவர்கள் புகழ்பெற்ற தென்னிந்திய இந்து பிராமண வழக்கறிஞர்கள் குடும்பத்தில் அரியலூரில் பிறந்தார். மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம்(1976) பெற்று சமூக விஞ்ஞானி ஆவதற்குத் தொடர்ந்தார். கல்லூரியின் சிறந்த ஆல்ரவுண்ட் மாணவருக்கான டாக்டர்.எம்.நஞ்சுண்டராவ் தங்கப் பதக்கம் வென்றார். பார்வை: நான் என்னை ஒரு தலைவர், வழிகாட்டி, ஆலோசகர், வழி கண்டுபிடிப்பாளர், பிரச்சனை தீர்வு காண்பவர், பேச்சுவார்த்தை நடத்துபவர், ஆராய்ச்சியாளர், பொருளாதார…மேலும் படிக்க... |
