வேலைகள்
கதையாசிரியர்: சுப்ரபாரதிமணியன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: November 10, 2025
பார்வையிட்டோர்: 105

தேவனும் வாசுகியும் கதவைத் தாழ்ப்பாள் போட்டுவிட்டு வெளியே வந்த போது உபர் டாக்ஸி நின்று கொண்டிருந்தது. தன் கைபேசியை பார்த்து தேவன் ஓட்டி எண்ணை அந்த டாக்ஸி ஓட்டுனரிடம் சொன்னான்.
“வாசுகி இன்னைக்கு எத்தனை மணிக்கு வருவ“
“வழக்கமா தான். ஏதாவது சுமூகமாகப் பேசி முடிச்ச கேஸ் அகப்பட்டா திருப்தியாக் கிளம்புவேன். நீங்க பிரிச்சுப் போட்டு கிளம்புவீங்களே”
“ஆமா ஏதாவது படத்துக்கு போலாமா”
“ஓட்டிடடியில் வருகிற படங்களை பார்த்தால் போதும் தியேட்டருக்கு போறதுக்கு செலவு. நம்ம சம்பாதிக்கிறதிலெ தியேட்டர் செலவு இன்னும் வரல அப்படித்தானே“
“ஆமா“
டாக்ஸி ஒரு இடத்தில் நின்ற போது வாசுகி இறங்கி கொண்டாள். வாசுகினுடைய அலுவலகம் அந்த பக்கம் இருந்தது, அந்த அலுவலகம் வாடகை இடம்தான்.
இன்னும் பத்து நிமிடம் பயணம் செய்து தேவன் அவனுடைய அலுவலகத்தை அடைவான். அதுவும் வாடகை கட்டடம் தான், இன்னைக்கு உபர் கிடைக்காமல் ரொம்ப சிரமம் தாமதம். சாலையில் வாகன நெரிசல் ரொம்ப சிரமமாக இருந்தது.
“இப்படி சிரமப்படுவதற்கு நாமளே ஒரு கார் வச்சுக்கலாம்“
“ஆமா சம்பாதித்து ஒரு கார் வைக்கணும். இந்த வாடகை ஆபீஸ் விட்டு சொந்தமாக ஆபீஸ் வேணும்.. கவனிக்கணும்”
“ஆமா உங்க ஆபீஸ் ஒரு பக்கம் இருக்கும். என் ஆபிஸ் ஒரு பக்கம் இருக்கும். அது சரியா இருக்கும். ஒரே பில்டிங்கில் ஒரே ஆபீஸ்ல ரெண்டு பேரும் வேலை செய்ய முடியாதல்லவா”
இது வழக்கமான உரையாடலில் ஒன்றாக இருக்கும்.
சீக்கிரத்தில் உபர் டாக்ஸி தொடர்ந்து தன்னை காலியாகி கொண்டு மறைந்து கொண்டிருந்தது.
தேவன் விவாகரத்து சம்பந்தமாக ஆலோசனை சொல்லும் அலுவலக வைத்திருந்தான். விசேசமாக விவாகரத்துதான். விவாகரத்து செய்ய வேண்டும் என்று வருகிற தம்பதிகள் வழக்குகள் அவனிடத்தில் வரும் அவற்றை அவன் சரியாக பார்ப்பான்.
வாசுகி திருமணம் சம்மந்தமான மற்றும் பிரிந்து போனவர்கள் இணைப்பது சம்பந்தமாக ஆலோசனை சொல்வதற்காக என்று தன் வேலையை எடுத்துக் கொண்டாள். ஒரு பக்கம் தேவன் விவாகரத்து தருவதாக இருந்தால் இன்னொரு பக்கம் வாசுகி பிரிந்து இருக்கிற தம்பதிகளை சேர்க்க ஆலோசனை சொல்வதாக இருந்தது.
இப்படித்தான் அவர்களுடைய வேலைகளும் அமைந்திருந்தன.
உங்கள் பிரச்சனை எப்படி போய் கொண்டு இருக்கிறது என்று கேட்டாள் வாசுகி வந்திருந்த இருவரும் தேவகியின் அழுத்தமான முகப்பூச்சைப் பார்த்துக் கொண்டார்கள். அவள் அலுவலகம் வந்த் பின்னர் ஒரு முறை முகத்தைக் கழுவி பவுடர் போட்டுக்கொள்பவள்.
“நான் கொஞ்சமாக மலையாளம் கற்றுக் கொள்ள ஆரம்பித்து இருக்கிறேன்” என்றான் அவன்
“நான் கொஞ்சமாக தமிழ் கற்றுக்கொள்ள ஆரம்பித்து இருக்கிறேன்” என்றாள் அவள்
“அதைத்தான் முதலில் சொன்னேன் இருவரும் ஆங்கிலத்தில் பேசுவதை தவிருங்கள் என்று”:
“அதை ஆரம்பித்து விட்டோம் இப்போது அவள் மலையாளத்தில் பேசுகிறாள் நான் ஓரளவு புரிந்து கொள்கிறேன் நானும் தமிழில் பேசுகிறேன் அதை அவளும் கொஞ்சம் புரிந்து கொள்கிறாள் ஆங்கிலத்தில் பேசுவதை தவிர்த்து விட்டோம். நானும் கொஞ்சம் மலையாளத்தில் சில வார்த்தைகளை பேச ஆரம்பித்திருக்கிறேன்”
“நானும் கொஞ்சம் தமிழ் பேச ஆரம்பித்திருக்கிறேன்” என்றாள் அவள். இருவரும் ஒருனித்துச் சிரித்துக் கொண்டார்கள் புன்னகை சிரிப்பாக வந்துவிட்டது.
இருவருக்கும் தேநீரை ஊற்றி கொடுத்தாள்.
“வாசுகி இதே வகையில் நீங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும் தொடர்ந்து செய்தால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். முதலில் மொழியில் இருந்து ஆரம்பிக்கலாம்” என்றாள். “ஆமாம்” என்றாள்.
அவன் பிறகு நான் உன்னை காதலிக்கிறேன் என்று மனைவியைப் பார்த்து மலையாளத்தில் சொன்னான். அவளும் திரும்ப நான் உன்னை காதலிக்கிறேன் என்பதை அழகாகத் தமிழில் சொன்னாள்
“இரண்டு பேரும் மொழியை அழகாகத்தான் பயன்படுத்துகிறீர்கள், வாழ்க. உங்கள் தாய்மொழி பெற்று வளர்க உங்களுடைய வேற்று மொழி பற்றும் கூட” என்றாள் வாசுகி
தேவன் முன்னாள் உட்கார்ந்து இருந்த அந்த பெண்ணை பார்த்தால் உங்கள் கணவரை இரண்டு மணிக்கு வரச் சொல்லி இருக்கிறேன் நீங்கள் சொல்லுகிற விஷயங்களை வைத்துக் கொண்டுதான் நாம் பேச வேண்டும் என்றான்.
“பேச என்ன இருக்கிறது விவாகரத்து தான் முடித்துவிடலாம்” என்றாள் அவள்.
“ஆனாலும் கொஞ்சம் பேசிப் பார்க்கலாமே”.
“நீங்கள் விவாகரத்து வாங்கித் தந்தால் உங்களுக்கு சன்மானம் கிடைக்கும் கூலி கிடைக்கும் அதை விட்டு ஏன் இந்த சமரசம்”
“கொஞ்சம் பேசிப் பார்ப்பது பிரிப்பதை விட சேர்ப்பது கூட நல்ல தானே”.
“அதற்கும் சில பேர் இருக்கிறார்கள். நான் அவர்களிடம் செல்லாமல் உங்களிடம் வந்து இருப்பதற்கு காரணம் நீங்கள் சீக்கிரம் விவகாரத்து வாங்கி தந்து விடுவீர்கள் என்று பரவலாக பேசப்படுவதால்.. இந்த விஷயத்தில் நீங்கள் வெற்றிகரமானவராக இருக்கிறீர்கள் என்றும் கேள்விப்பட்டு தான் வந்தேன்”
“சரிதான் என் வருமானத்தை நான் இழக்க விரும்பவில்லை. உங்கள் விவாகரத்தில் நான் அக்கறை கொள்வேன். சீக்கிரம் வாங்கிக் கொள்வேன் என் கூலியை”
“கணவர் வந்தால் இதையே சொல்ல வேண்டும்”
“கண்டிப்பாக சொல்வேன்”
“கணவருக்கு எப்போது நேரம் ஒதுக்கி இருக்கிறீர்கள்”
“இரண்டு மணிக்கு”
“அந்த நேரத்தில் அந்த மனிதர் சாப்பிட்டு விட்டு தூங்கும் நேரம். தூங்கும் நேரத்தில் அவருடைய காதுகளில் நீங்கள் சொல்வதெல்லாம் பட வேண்டும்”
“காதுக்கு நிச்சயமாக படும். கேட்கும். கொஞ்சம் பொறுத்து இருங்கள் நீங்கள் எப்படி போகப் போகிறீர்கள்”
“வழக்கமான என்னுடைய ஸ்கூட்டி வண்டியில் தான்”
“நீங்கள் ஸ்கூட்டி விட மாட்டீர்கள். எப்போதும் துணை”
“ஆமாம் அந்த ஸ்கூட்டியில் அவரை அழைத்துச் செல்லும் போதெல்லாம் பிரச்சனையாக இருக்கும். அவருக்கு ஸ்கூட்டி பிடிக்காது. இதெல்லாம் ஒரு வண்டியா. இதெல்லாம் ஒரு பயணமா என்று கேட்பார். அப்படித்தான் அவர் வைத்திருக்கிற எல் எம் எல் வெஸ்பா. அதில் உட்கார எனக்கு பிடிக்காது. அதை ஏதோ ஒரு மிருகத்தை கையாளுவது போல கையாள்வார். அதன் கனத்த என்ஜின் ஒரு பக்கம் சாய்ந்து கொண்டு அவரை எப்போதும் விழ வைத்து விடும். அவர் விழுவதைப் பார்த்து நான் சிரிப்பேன். அதெல்லாம் அவருக்கு எரிச்சலா இருக்கும். இருவரும் பொதுவாக ஒரு வாகனத்தை வைத்துக் கொள்ளலாம். யோசனை எடுபட்டதில்லை”
“இருவரும் வேலை செய்வது வேறு வேறு இடங்களில் அல்லவா”
”ஆனாலும் பொதுவான வாகனம் என்பது நல்லது தான்” என்றான் தேவன்
இப்படித்தான் இருவர் சார்ந்த வழக்குகளும் போய்க் கொண்டிருந்தன.
மாலையில் உபர் சீக்கிரம் கிடைத்துவிட்டது
“இன்று எப்படி இருந்தது“ என்றான் தேவன்
“வழக்கம் போல் தான் கெஞ்சி கெஞ்சி சேர்க்க முயல்கிறேன் உங்களுக்கு வழக்கம் போல் தான் வெட்டு ஒன்று தொண்டு ரெண்டு என்றுதான் எல்லாரும் கேட்பார்கள். எனக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. இப்படி விவாகரத்து வாங்கி தருவது, ஒட்டச் சொல்வது இதெல்லாம் பிடிக்கவில்லை இதெல்லாம் விட்டு ஓடிவிட வேண்டும் போல் இருக்கிறது.”
“எனக்கும் தான் கெஞ்சி கெஞ்சி அவர்களை சேர்க்க வேண்டி இருக்கிறது. என்ன பிழைப்பு. எதற்காக இப்படி மன்றாடுவது எதற்காக இப்படி பிச்சை எடுப்பது என்று இருக்கிறது.”
“நாம் பிச்சை எடுப்பதை தவிர்க்க கொஞ்சம் பணம் சம்பாதித்தால் போதும் பிச்சை எடுப்பது நிறுத்தி விடலாம் பொதுவான இன்னொரு வேலையை தேடிக் கொள்ளலாம்”
“அந்த வேலை என்னவாக இருக்கும்”
“திருமணம் என்று வைத்துக் கொள்ளலாமே அல்லது முதல் இரவு ஏற்பாடுகள் செய்யும் ஏஜென்சி என்று எடுத்துக் கொள்ளலாமா? அல்லது திருமணம் ஏ டு இசட்”
“நன்றாகத்தான் இருக்கிறது” என்றாள் அவள்.
உபர் டாக்ஸி அவருடைய பேச்சில் கலந்து கொண்டு நிதானமாக ஓடிக்கொண்டே இருந்தது.
விரைவில் வேலையை மாற்றிக்கொண்டு விடுவார்கள் என்பது போல் அவர்களின் பேச்சு இருந்தது.
இப்படி பலமுறை, பல நாட்கள் பேசியிருக்கிறார்கள்.
அன்றைக்கும் பேசினார்கள்.
அதற்குள் வாடகை வீடு வந்தால் பேச்சு முற்றுப்புள்ளி பெற்று விடும். சொந்த வீடு, சொந்த கார் கனவோடு உபர் டாக்சியை விட்டு இறங்கிப் போவார்கள். அன்றும் அப்படித்தான் இறங்கினார்கள். கனவுகளோடு வாடகை வீட்டுக்குள் நுழைந்தார்கள்.
![]() |
சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். தமிழ் இலக்கிய உலகில் தனக்கென ஓர் இடம் பெற்றவர். சிறுகதை , நாவல் , கட்டுரைகள், கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த பதினைந்து வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி.பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். நவீன வாழ்க்கையின் பிரச்சனைகளையும், சிதைவுகளையும் பற்றிய நுட்பமான பார்வை இவருக்கு உண்டு. அது இவரது எழுத்துக்களில் விரவி இருக்கும்.156 கதைகளைக் கொண்ட என் தொகுப்பு…மேலும் படிக்க... |
