வேர்கள்




வானத்தில் மின்னல் வெட்டு வரும்போதெல்லாம் வீட்டில் மின்வெட்டு வந்துவிடுகிறது. தூசுபடிந்த என் அறையில் அலைபேசி விளக்கை ஏற்றி வைத்தேன். தனிமை. தனிமையில் பேசிக் கொண்டிருக்கிறேன்.
பத்து வருடங்களுக்கு முன் கல்யாண நாளில் அன்னதானம் செய்ய என் அனாதை ஆசிரமத்திற்கு வந்திருந்தார்கள், சாரும் மேடமும். படுசுட்டியாகவும் படிப்பில் மந்தமாகவும் இருந்த என்னை அழைத்து வந்தார்கள். என் தாயும் தந்தையும் நல்ல அழகும் ஆரோக்கியமானவர்களாகவும் இருந்திருக்க வேண்டும் நானும் அப்படியே இருந்தேன். இன்னும் கூட பெரிய வீட்டில் அன்புக்கு குறைவில்லை.அவர்களின் ஒரே மகன் சூர்யாவும் நானும் ஒரே வயதுதான். எனினும் ஏகத்தில் பேசிக் கொள்வதை பெரியவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். மனப்பாக்கத்தில் ரிவர்வியுவில் உள் நுழைந்தால் பேரமைதியாக இருக்கும். பெரிய பெரிய வீடுகள். வீட்டிற்குள் எழும் அழுகை ஒலி வெளியே கேட்காது.

நித்தம் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து நடை பயணம் செல்வார் சார். அடித்து எழுப்பினாலும் ஆறு மணிக்குத்தான் மேடம் கண்விழித்து பார்ப்பாள்.ஐந்தரை மணிக்கெல்லாம் எழுந்து வாசல் பெருக்கி,நீர்தெளித்து கோலமிடுவேன்.ஆறு மணிக்கு தேநீர் தயாரித்து பிளாஸ்கில் ஊற்றி டேபிளில் வைப்பேன். கூடவே தேநீர் குவளைகளையும் கழுவி மேசையில் அடுக்குவேன். நிதானமாக ஒரு குவளை தேநீர் பருகியபின் தினசரி இதழ்களை எடுத்து வந்து டீபாய்ல் வைப்பேன்.மீண்டும் சமையலறை சென்று பாத்திரங்களை துலக்கி அடுக்குவேன். இந்த பணிகள் முடியும் போது சார் தினசரிகளில் மூழ்கி இருப்பார். மேடம் சமையலறைக்குள் வந்து காலை உணவுகளை தயாரிக்கும் பணிகளில் இருப்பார்.காய்கறிகளை நறுக்கி டேபிளில் வைத்துவிட்டு, அன்றைய பழைய துணிகளை கூடையிலிருந்து எடுத்து தண்ணீரில் சோப்பு போட்டு ஊறவைப்பேன். பின்பு வீட்டை துடைப்பதற்கான கருவிகளுடனும் சோப்பு நீருடனும் களம் இறங்கினால் பதினோரு மணியாகிவிடும். குளித்து காலை உணவு எடுத்துக் கொண்டு மீண்டும் ஊறவைத்த துணிகளை துவைத்து மாடியில் காயப் போடுவேன். மதிய உணவிற்கான காய்கறிகளை நறுக்கி டேபிளில் வைத்துவிட்டு எனது சிறிய அறையில் வந்து ஓய்வெடுத்துக் கொள்வேன். மதிய உணவிற்காக சார் வந்து சென்றவுடன், நானும் சாப்பிட்டுவிட்டு பாத்திரங்களை எல்லாம் கழுவி அடுக்குவேன். பின்பு கதவுகளையும் சன்னல்களையும் அதன் கண்ணாடிகளையும் துடைத்துவிட்டு,மாலைக்கான தேநீர் தயாரித்து பிளாஸ்கில் ஊற்றிவிட்டு மீண்டும் நீரடித்து வாசல் பெருக்கி புதுக்கோலமிட வேண்டும்.தோட்டத்து செடிகளுக்கு நீர்பாய்ச்சி களைகளை பிடுங்கி ஒழுங்கு செய்த பின் இரவு உணவிற்கு தேவையான காய்கறிகளை நறுக்கி டேபிளில் வைத்துவிட்டு,மாடிக்கு சென்று காய்ந்த துணிகளை எடுத்து வந்து மடித்து டேபிளில் வைத்துவிட்டு எனது சிறுஅறையில் ஓய்வெடுத்துக் கொள்வேன்.
இரவு சார் வருகைக்குப்பின் இரவு உணவு முடிந்த பின் எனது உணவையும் முடித்துக் கொண்டு பாத்திரங்களை கழுவி அடுக்குவேன்.
எனது அறைக்கு வந்து ஆசிரமத்தில் சொல்லிக் கொடுத்த கீதை சுலோகங்களை உச்சாடனம் செய்து படுக்கையில் விழும் போது ஒரு பேயைப் போல் உறக்கம் வந்து என் மீது கவிந்துவிடும்.
சாரின் அலுவலக நிகழ்ச்சியாக இருந்தாலும் பொது நிகழ்ச்சியாக இருந்தாலும் ஒரு குடும்ப அங்கத்தினளாகவே உடன் செல்வேன்.
மாதத்தின் முதல் வெள்ளிக் கிழமையில் திருவேற்காடு,மாங்காடு மாரியம்மன் கோவில்களில் வி.ஐ.பி தரிசனம் அதிகாலையில் நடக்கும்.சாரும் மேடமும் போகும் போதெல்லாம் நானும் போய்விடுவேன்.
மாதத்தின் விலக்கு நாட்களில் மேடம் தன் அறையைவிட்டு வெளியில் வரவே மாட்டாள்.அந்த நாட்களில் எனக்கு பணிச்சுமை அதிகமாகவே இருக்கும்.
அது போல் எனது விலக்குகளில் ஓய்வெடுத்துக் கொள்ள அனுமதிக்கவே மாட்டாள்.
இதற்கெல்லாம் எனக்கு மாதச் சம்பளம் உண்டு. எனது வங்கி கணக்கில் ஏறிவிடும்.இன்னும் அதில் கணிசமான தொகை உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த விசயம்தான்.
ஊரடங்கு நாட்களில் சாரும் சூர்யாவும் வெளியே செல்வதில்லை.மேடம் பல முறை தும்மினாள்.அப்போதெல்லாம் கவனிக்கப்படாத விசயம் ஒரு நாள் தும்மிவிட்டேன் என்பதற்காக மருத்துவரை அழைத்து வந்து என் உடல் பரிசோதனை செய்தார்கள். அதில் சொல்லும்படி முடிவுகள் இல்லையென்றாலும் என்னை தனிமைப்படுத்த முடிவு செய்தார்கள். வீட்டுதோட்டத்தின் பழைய சாமான்கள் போட்டு வைக்கும் தூசுபடிந்த அறைதான் அது.இரவு நேரத்தில் அச்சம் தருபவையாக இருக்கிறது இந்த தனிமை. பதினான்கு நாட்கள் வனவாசம் இருக்க வேண்டும்.சார் எந்த முடிவு எடுத்தாலும் அதில் ஓர் நன்மை இருக்கும் என்று மேடம் அடிக்கடி சொல்லுவாள்.
சார் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து நடை பயணமாக என் அறை வந்து மெல்ல கதவை தட்டினார்.திறந்து பார்த்த போது அசடுவழிய நின்று கொண்டிருந்தார்.உள்ளே வர உத்தரவு கேட்டவுடன் நான் மறுத்து ‘ஓ’வென அழுது கொண்டிருந்தேன். பெண்களுக்கு அழுகைதான் சில நேரங்களில் சிறந்த ஆயுதமாக இருக்கிறது. நீலாங்கரை பங்களாவை நீ ஆளலாம். சம்மதமா, இல்லையா.கேட்டு,நின்று பார்த்துவிட்டு போய்விட்டார்.
இப்போது என் வனவாசம் முடிந்து எப்போதும் போல் வீட்டு வேலைகளை கவனித்துக் கொண்டிருக்கிறேன். எனது மாதச்சம்பளத்தில் பதினான்கு நாட்கள் சம்பளம் வெட்டப்பட்டு இருந்தது, என் அலைபேசி குறுஞ்செய்தியில் அறிந்து கொண்டேன்.
உண்மையில் ஊதியப்பிடித்தம் ஒரு பொருட்டல்ல. ஆனால், வாழிடத்தின் நம்பிக்கை வேர்கள் வெட்டப்பட்டது முதல் அனாதையாக உணர்கிறேன்!
– ஜுலை 2020, கல்வெட்டு பேசுகிறது இதழில் பிரசுரமானது.