வேதாளம் பிடிக்கப் போன கதை
கதையாசிரியர்: அரு.ராமநாதன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 15, 2025
பார்வையிட்டோர்: 310
(1958ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இரண்டாம் பகுதி: 32 பதுமைகள் சொல்லிய கதைகள்
1-வது வினோரஞ்சிதப் பதுமை சொல்லிய விக்கிரமாதித்தன் பூர்வீகக் கதைகள் | 2-வது மதனாபிஷேகவல்லிப் பதுமை சொல்லிய வேதாளக் கதைகள்
இரண்டாம் நாள். சூரியோதயமானவுடன் போஜராஜன் சுபவேளை பார்த்து. தன் பரிவாரங்களோடு கொலுக் கூடத்திற்கு வந்து, அதிசய நவரத்தின சிம்மாசனத்திற்குத் தூபதீபம் காட்டி அதில் ஏறி அமர்வதற்காக முதற்படியைக் கடந்து இரண்டாம் படியில் வலது காலை எடுத்து வைத்தான்.
அப்போது அந்தப் பொற்படிக்குக் காவலாக இருந்த மதனாபிஷேகவல்லி என்னும் சிம்மாசனப் பதுமை கை கொட்டிச் சிரித்து, “ஹே, போஜராஜரே! நில்லும், நானறிந்த விக்கிரமாதித்த பூபதியைப் போன்ற வீரப்பிரதாபமும், வல்லமையும். உமக்கிருந்தாலன்றோ இந்த வினோதமான சிங்காசனத்தில் நீர் ஏறி அமர முடியும்?” என்றது.
அதைக் கேட்ட போஜராஜன் “பதுமையே! விக்கிரமாதித்த பூபதியிடம் நீ கண்ட அப்படிப்பட்ட அதிசயமான வல்லமை என்ன? அந்தக் கதையைச் சொல்!” என்றான்.
“கேளும் பூமானே!” என்று மதனாபிஷேகவல்லிப் பதுமை பின்வரும் வினோதக் கதைகளைச் சொல்லத் தொடங்கியது.
வேதாளம் பிடிக்கப் போன கதை | வேதாளம் சொல்லிய புதிர் கதைகள்
வீரப்பிரதாப விக்கிரமாதித்த மகாராஜன் மந்திரி பட்டியுடன் விரதப்படி நாடாறு மாத தவணையிலிருந்து அரசாட்சி நடத்திவரும் காலத்தில். உஜ்ஜயினிமாகாளி பட்டினத்திற்கு இரு காத வழி தூரத்தில் ஆரண்ய வனத்தில் துர்க்கையம்மன் கோவில் ஒன்று இருந்தது.
அந்த அம்மன் சந்நிதானத்திற்கு நேர் தெற்கே இரண்டு யோஜனை தூரத்தில் ஒரு மயானம் இருந்தது. அந்த மயானத்தில் ஒரு முருங்க மரம் இருந்தது. அந்த முருங்க மரத்தில் ஒரு வேதாளம் தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருந்தது. அந்த வேதாளத்தை வசப்படுத்திக் கொள்பவருக்கு சகலவி தமான ஊழியமும் வேதாளத்திடமிருந்து பெறமுடியும்! அந்த வனத்தில் நெடுங்காலமாக தபஸ் செய்து கொண்டிருந்த ஞானசீலன் என்கிற முனிவன் வேதாளத்தையும், துர்க்கையம்மனையும் வசப்படுத்திக் கொண்டு பலவி தமான சித்திகளும் பெற விரும்பினான். அவன் துர்க்கையம்மனின் சந்நிதானத்தின் முன் யாக குண்டம் வளர்த்தினான்.
அதனால் திருப்தியுற்ற துர்க்காதேவி அவன் பிரசன்னமாகியபோது, “தாயே! நீண்ட ஆயுளும் அரசபதவியும் முன் எனக்கு வேண்டும்! நீ எப்போதும் என்னிடத்தில் இருக்க வேண்டும்! வேதாளம் என் கைவசமாக இருக்கவேண்டும்! பூலோகத்து மன்னாதி மன்னர்களெல்லாம் எனக்கு அடங்க வேண்டும்! அந்த விக்கிரமாதித்தன் கொலுவேறியிருக்கும் நவரத்ன சிம்மாசனத்தில் நானே ஏறி அழியா ஆயுளுடன் இராஜரீகம் செய்ய வேண்டும்” என்று பிரார்த்தித்தான்.
“ஆயிரம் அரசர்களைக் கொன்று யாகம் செய்தால், உன் எண்ணம் ஈடேறும்! மணிமகுடம் புனைந்த மன்னர்களின் சிரசுகளை வெட்டிஎன் பலிபீடத்தில் போட்டால் நீ கேட்ட வரம் தருவேன்!” என்று காளிமாதேவி கூறிவிட்டு, மறைந்து விட்டாள். முனிவனும் அதற்குச் சம்மதித்து வஞ்சகத்தினால் அரசர்களைக் கொன்று யாகத்திற்குத் தயாராகி வந்தான். தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது மன்னர்களின் தலைகளை வெட்டிக் கொணர்ந்து யாகத்தில் போட்டான். கடைசியாகப் பாக்கியிருந்த ஒரு தலைக்கு யாரைப் பிடிக்கலாம் என்ற யோசனையிலாழ்ந்த போது உஜ்ஜயினியில் கோலாகலமாக விக்கிரமாதித்த மகாராஜனின் தலையை பலி கொடுப்பதென்று ஆண்டுவரும் முடிவுக்கு வந்தான் முனிவன்.
அதன் பின்னர் முனிவன் கபடமாக விக்கிரமாதித்தன் சபா மண்டபத்தை அடைந்து ஒரு மாதுளங்கனியைக் கொடுத்தான். விக்கிரமாதித்தனே முனிவன் கொடுத்த பழத்தை வாங்கிப் பக்கத்தில் நின்று கொண்டிருந்த பொக்கிஷ அதிகாரியிடம் கொடுத்தான். இவ்விதம் பல நாட்கள் சென்றன. தினமும் முனிவன் வருவதும், பழம் கொடுப்பதுமாகவே இருந்தது.
ஒருநாள் முனிவன் பழம் கொடுத்து விட்டுசென்ற பிறகு. விக்கிரமாதித்தன் அதை வழக்கம்போல் பொக்கிஷ அதிகாரியிடம் கொடுக்கவில்லை. பொக்கிஷ அதிகாரி ஏதோ காரியமாக வெளியே சென்றிருந்தான். ஆகவே பக்கத்திலிருந்த பீடத்தில் அந்தப் பழத்தை மன்னன் வைத்தான். அந்தச் சமயம் அரண்மனையில் அருமையாக வளர்த்து வரும் கருங்குரங்கு அங்கு ஓடி வந்தது. மாதுளம் பழத்தைக் கண்டதும் ஆசையோடு எடுத்துக் கடித்தது. அதனுள்ளிருந்து இரத்தினக் கற்கள் கலகலவென்று கீழே கொட்டின. ஜாஜ்வல்யமாக ஜொலிக்கும் அவைகளைக் கண்ட விக்கிரமாதித்தன் பிரமித்து விட்டான். உடனே தன் பொக்கிஷ அதிகாரியை வரவழைத்து, “நான் தினமும் உன்னிடம் கொடுத்துவரும் மாதுளம் பழங்களை என்ன செய்கிறாய்?” என்ற கேட்டான். ‘அவைகள் அனைத்தையும் பொக்கிஷத்திலேயே வைத்திருக்கிறேன்!” என்று அதிகாரி சொல்லி விட்டு. அவற்றை அங்கு கொணர்ந்தான். மாதுளம் பழங்களை உடைத்துப் பார்க்கையில் ஒவ்வொன்றிலும் இரத்தினக் கற்கள் இருப்பது வெளியாயிற்று.
இரத்தினக் கற்களைப் பார்த்த விக்கிரமாதித்தன் அளவிலாத மகிழ்ச்சி கொண்டான். அவைகளை பரீக்ஷித்துப் பார்க்க இரத்தின வியாபாரியை அழைத்து வரச் செய்தான்.
“வியாபாரி! நாம் இந்த உலகத்தை விட்டுச் செல்லும் போது எதையும் எடுத்துச் செல்வதில்லை. தருமம் ஒன்றுதான் தொடர்ந்து வரும். ஆகவே, இந்த உலகத்தில் தருமத்திலிருந்து பிறழ்வதால் பலன் இல்லை. இந்த இரத்தினக் கற்களில் ஒவ்வொன்றின் மதிப்பையும் நன்றாக ஆராய்ந்து எடுத்து உண்மையாகச் சொல்” என்று விக்கிரமாதித்தன் கேட்டான்.
அதைக் கேட்ட இரத்தின வியாபாரி மன்னனை நோக்கி “அரசே! தாங்கள் கூறியது முற்றிலும் உண்மையே. தருமத்தை உடையவர்கள் எல்லாவற்றையும் உடையவர் ஆகிறார்கள். வாஸ்தவத்தில் தருமம் ஒன்றுதான் நம்மை எப்போதும் தொடர்ந்து வருகிறது. அது இரண்டு உலகங்களிலும் உதவுவது. கேளுங்கள் மகாராஜா! நிறத்திலும், தன்மையிலும், அழகிலும் ஒவ்வொரு இரத்தினக் கல்லும் பழுதில்லாமல் சுத்தமாக இருக்கிறது. ஒவ்வொன்றும் பத்து கோடி பொன் பெருமானம் உள்ளது என்று சொல்வதுகூட அதன் உண்மை மதிப்பைக் குறிப்பிடுவதாகாது. உண்மையிலேயே ஒவ்வொரு கல்லும், ஓர் உலகத்துக்கே மமானது!” என்று தெரிவித்தான்.
விக்கிரமாதித்த பூபதி பெரு மகிழ்ச்சி கொண்டான்; இரத்தின வியாபாரிக்கு அநேக ஆடையாபரணங்களைப் பரிசாக வழங்கி மரியாதை செய்தான். பிறகு அத்தகைய மாதுளங்கனிகளைக் கொடுத்த முனிவனை விசாரியாமல் போனோமே என்று அவன் வருந்தினான். மற்றொரு சமயம், முனிவன் வழக்கம் போல மாதுளங்கனியோடு வந்த போது. முனிவனுக்கு பொற்பீடமளித்து அதில் அமரச் செய்து உபசாரங்கள் செய்தான் விக்கிரமாதித்தன். ‘முனிவரே! தாங்கள் மாதுளங்கனிகள் மூலம் எனக்கு அளித்திருக்கும் இரத்தினக் கற்கள் ஒன்றின் மதிப்புக்குக் கூட என் ராஜ்யம் ஈடாகாது. அப்படியிருக்க. கோவாணாண்டியாக உள்ள தாங்கள், எதற்காக எனக்கு இத்தனை இரத்தினக் கற்களைப் பரிசளிக்க வேண்டும்? இந்தக் காரணத்தை எனக்குத் தெரிவிக்க வேண்டும்!” என்று விக்கிரமாதித்தன் வேண்டிக் கொண்டான்.
“புவி மன்னா! இம்மாதிரியான விஷயங்களைப் பற்றி பகிரங்கமாகப் பேசுவது முறையல்ல. முக்கியமாக மந்திரம், தந்திரம், மருந்து. மனிதர்களுடைய நற்குணங்கள் குடும்ப விவகாரம். விலக்கப்பட்ட ஆகாரத்தைச் சாப்பிடுவது. அண்டை அயலார் பேசும் அவதூறு, வதந்தி ஆகிய விஷயங்களைப் பற்றி பகிரங்கமாகப் பேசலாகாது. எந்த விஷயமும் மூன்று பேர் காதுகளுக்கு விழுந்து விட்டால், அது இரகசியம் அல்ல; இரண்டு பேர்களுக்கு மட்டும் தெரிந்திருந்தால் அதைப் பிறர் அறியமாட்டார்கள். ஒருவருக்கு மட்டும் தெரிந்திருந்தால், அதைப் பிரம்மாவாலும் தெரிந்து கொள்ள முடியாது. ஆகவே. இது விஷயமாக உன்னிடம் நான் தனியாகப் பேச வேண்டும். அதுதான் முறை!” என்றான் கபட ஞானி.
அவ்வாறே விக்கிரமாதித்தனும் முனிவரைத் தனியே அழைத்துச் சென்று, ‘முனிவரே, நீங்கள் எனக்கு ஏராளமான இரத்தினக் கற்களைக் கொடுத்திருக்கிறீர்கள். ஆயினும், நான் ஒரு நாளைக்காவது உங்களுக்கு ஆகாரங்கூட அளித்ததில்லை. உங்களுக்கு என்ன வேண்டுமென்பதைத் தெரிவியுங்கள்!” என்று கேட்டான்.
“எனக்கு ஓர் இலட்சியம் உண்டு! அதை நீ கொடுப்பதாக வாக்குக் கொடுப்பாயாகில் அதை நான் சொல்லுகிறேன்!” என்றான் ஞானசீலன். விக்கிரமாதித்தனும் அவ்வாறே அளித்தான்.
“புவி சிரேஷ்டா! வனாந்திரத்திலுள்ள துர்க்கையம்மனை சேவித்து தந்திரங்களாலும் ஜபதபங்களாலும் ஒரு ஹோமத்தை நான் நடத்தவேண்டும். அஷ்டமா சித்திகளும் அதன் பயனாகக் கிட்டும். அதற்காக நீ ஒருநாள் முழுவதும் என்னுடன் இருக்க வேண்டும். இதைத் தான் நான் யாசிக்கிறேன். அவ்வி தம் நீ என்னிடமிருப்பதால் என்னுடைய உச்சாடனம் பலிதமாகும்!” என்று தெரிவித்தான் யோகி
“சரி நான் வருகிறேன். என்றைக்கு நான் வரவேண்டும்?” என்று கேட்டான் விக்கிரமாதித்தன்.
“வருகிற கிருஷ்ண பக்ஷத்து சதுர்த்தசியும் செவ்வாய் கிழமையும் கூடின அன்றைய தினம் இராத்திரியில் நீ மட்டும் தனியாக ஆயுதம் தாங்கி நான் இருக்குமிடம் தேடி வரவேண்டும்!” என்றான் யோகி.
“சரி தாங்கள் செல்லலாம். நான் நிச்சயமாக வருகிறேன்” என்றான் விக்கிரமாதித்தன்.
அவனுடைய வாக்குறுதியை பெற்றுக் கொண்டு முனிவன் காட்டிற்குச் சென்றான்.
யோகி குறிப்பிட்டுச் சென்ற தினமும் வந்தது. விக்கிரமாதித்தனும் ஆயுதந் தரித்தவனாய் தன்னந்தனியாக நாட்டை அடைந்து, யோகியின் இருப்பிடத்தை நாடிச் சென்றான். அவன் வருவதைக் கண்ட யோகி, ஓடோடியும் வந்து அவனை வரவேற்று உபசரித்து உட்கார வைத்தான். அவ்விடத்தில் அமர்ந்த பிறகு அரசன் நிதானமாகத் தன்னைச் சுற்றித் திரும்பி திரும்பிக் கவனித்தான். அங்கே அவன் கண்ட காட்சி?
பயங்கரமான கோர உருவங்களுடன் பலவி தமான குறளிகளும் பூதப் பிசாசுகளும் குதித்துக் கூத்தாடி தாண்டவமாடின. இவைகளைக் கண்ட அரசன் பயமோ அச்சமோ கொள்ளவில்லை.
“மா முனிவரே, எனக்கு என்ன கட்டளையிடுகிறீர்கள்?” என்று யோகியைப் பார்த்துக் கேட்டான் விக்கிரமாதித்தன்.
“புஜபராக்கிரமா! நீ வந்திருப்பதால் இந்த ஓர் உதவியைச் செய்! இங்கிருந்து நேர் தெற்கே இரண்டு யோஜனை தூரத்தில் ஒரு மயானம் இருக்கிறது! அங்கே ஒரு முருங்க மரத்தின் மேல் உயரமான கிளையில் ஒரு பிணம் தலைகீழாக தொங்கிக் கொண்டிருக்கிறது. அது யார் கைக்கும் அகப்படாதது. நீ மிகவும் பராக்கிரமம் பொருந்தியவனாதலால் உன் கைக்குத்தான் அது அகப்படும்! அதை எப்படியாவது நீ உபாய தந்திரத்தின் மூலம் கூட்டிக் கொண்டுவந்து என்முன் விடவேண்டும்!” என்று தெரிவித்தான் யோகி. மறுமொழி சொல்லாமல் பிணத்தைக் கொண்டுவரக் கிளம்பினான் விக்கிரமாதித்தன்.
அந்த இரவில் பயங்கரமான இருள் எங்கும் சூழ்ந்து கவ்விக் கொண்டிருந்தது. அன்றிரவு திடீரென்று மழை வேறு கொட்ட ஆரம்பித்து விட்டது. எப்படிப்பட்ட மழை? வானத்தில் உள்ள நீர் முழுவதும் அந்த ஒரே இரவில் பூமியில் கொட்டிவிட வேண்டும் என்பதைப் போல் அந்தரத் தாரையாகப் பெய்தது. குறளிகள் நாற்புறமும் கூச்சல் போட்டுக்கொண்டிருந்தன. இவ்வளவு கோரத்தைக் கண்ட எந்த மனிதனும் பின் வாங்கிவிடுவான். ஆயினும் விக்கிரமாதித்தன் நிலை கலங்கவில்லை; தைரியமாகப் போய்க் கொண்டிருந்தான்.
வெள்ளக் காட்டின் வழியே செல்லும் விக்கிரமாதித்தனின் கால்களைப் பாம்புகள் சுற்றிக் கொண்டன. மந்திரங்களை உச்சரித்துக் கொண்டே அவைகளை உதறித்தள்ளி விட்டு நடந்தான் வீராதி வீரன். பயங்கரமான அந்த இரவிலே இரண்டு யோஜனை தூரம் அவன் நடந்து, யோகி குறிப்பிட்ட மயானத்தை அடைந்தான். அங்கே குறளிகளும் பூத பிசாசங்களும் மனிதர்களைப் பிடித்துவந்து அவர்களின் வயிற்றைக் கிழித்து ரத்தத்தை உறிஞ்சி எக்காளமிட்டன. பிணங்களைச் சுவைத்துத் தின்றும், பிள்ளைகளின் ஈரலை ருசித்துப் பார்த்தும் ஆனந்தக் கூத்தாடின. துஷ்டமிருகங்கள் நாற்புறமும் திரிந்தன.
இவைகள் ஒன்றையும் லட்சியம் செய்யாமல் விக்கிரமாதித்தன் நேராக முருங்கமரத்தை அடைந்தான். மரத்தை அவன் நிமிர்ந்து பார்த்த போது அடி முதல் நுனிவரையில் ஒவ்வொரு கிளையும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. நானா பக்கங்களிலும், “பிடி, பிடி, கொல்லு கொல்லு” என்று பிசாசுகள் சப்தம் போட்டுக் கொண்டிருந்தன. விக்கிரமாதித்தன் சிறிதும் அதைரியம் கொள்ளாமல் பக்கத்தில் நெருங்கிப் பார்த்தான். கிளை ஒன்றில் பிணம் ஒன்று தலைகீழாக கட்டித் தொங்கவிடப் பட்டிருந்தது.
அதைப் பார்த்த விக்கிரமாதித்தனுக்கு உவகை உண்டாயிற்று. ‘அப்பாடா, இவ்வளவு கஷ்டங்களுக்குப் பிறகு ஒரு முடிவு நெருங்கி யதே!” என்று சந்தோஷத்தோடு அந்த மகா ராஜன் மரத்தின் மேலேறினான்; கத்தியின் ஒரே வீச்சால் கயிற்றை அறுத்து பிணத்தைக் கீழே தள்ளினான். கீழே விழுந்த பிணம் பல்லை “நற நற” வென்று கடித்தது மேலும் அழத் தொடங்கி விட்டது. அதன் அழு குரலைக் கேட்ட ராஜன் ஆச்சரியம் அடைந்தவனாய், “இந்தப் பிணம் உயிருடன் இருக்க வேண்டும்” என்று தனக்குள் எண்ணியவனாய் கீழே இறங்கினான்.
என்ன ஆச்சரியம்? கீழே கிடந்த பிணத்தைக் காணவில்லை. திடுக்கிட்டுப்போன விக்கிரமாதித்தன் தலை தானாகவே உயர நிமிர்ந்து கிளையைப் பார்த்தது. அந்த இடத்தில் மறுபடியும் பிணம் தொங்கிக் கொண்டிருந்தது. மகாராஜன் ‘சரசர’வென்று மரத்தில் ஏறி. பிணத்தைத் தன் கையால் கட்டிப் பிடித்துக் கொண்டு கீழே இறங்கினான். அதை ஒரு துணியால் மூடிக்கட்டி தோளின் மீது போட்டுக் கொண்டு யோகியிடம் செல்ல ஆரம்பித்தான்.
உடனே பிணத்தினுள் புகுந்திருந்த வேதாளம், விக்கிரமாதித்தனைப் பார்த்து, “நீ யார்? என்னை எங்கே தூக்கிச் செல்லுகிறாய்?” என்று கேட்டது.
“நான் உஜ்ஜயினி பட்டணத்து விக்கிரமாதித்த மகாராஜன்! உன்னைக் கொண்டு வரும்படி யோகி உத்திரவிடவே, தூக்கிச் செல்கிறேன்.!” என்று பதில் அளித்தான் அவன்.
“ராஜாதி ராஜனே! நான் யார் தெரியுமா? யாருக்கும் கட்டுப்படாத வேதாளம்! என்னைத் தூக்கிச் செல்வதாயிருந்தால் ஒரு நிபந்தனை உண்டு. வுழியில் நீ வாய் திறந்து பேசினாயானால் நான் மறுபடியும் கட்டவிழ்த்துக்கொண்டு முருங்க மரத்துக்குப் போய் விடுவேன்” என்றது. அதன் பிரகாரமே விக்கிரமாதித்த மகாராஜன் மௌனமாக வேதாளத்தை தோளில் சுமந்து கொண்டு நடக்கத் தொடங்கினான்.
சிறிது தூரம் சென்றதும், வேதாளம் மெல்ல விக்கிர மாதித்தனிடம் பேசத் தொடங்கியது:
“மகாராஜனே! அறிவு, ஞானம், விவேகம், பாண்டித்தியம், இவைகளை உடைய பெரியோர் தங்கள் பொழுதை சாஸ்திர விசாரணையிலும், கவிதை ஆராய்ச்சியிலும் கழிப்பார்கள். முட்டாள்களும், மந்த புத்தியுள்ளவர்களும், தங்கள் பொழுதைத் தூங்குவதிலும், கேளிக்கைகளிலும் கழிப்பார்கள். ஆகவே, இந்த வழி நடைக் காலத்தையும் பிரயோஜனப்படக்கூடிய வகையில் கழித்தல் நலமல்லவா? பிரயாணத்தில் கஷ்டம் தெரியாமலிருக்க நா ன் ஒவ்வொரு புதிர்க் கதையாய் சொல்லுகிறேன், கேள்!” என்று சொல்லியது.
விக்கிரமாதித்தன் வாய் திறந்து பேசவில்லை. வேதாளம் மேலும் மேலும் பேசலாயிற்று.
“கேளுமையா, ராஜனே! கதையை வெறுமனே கேட்டுக் கொண்டு போக விடமாட்டேன். நான் ஒவ்வொரு கதையும் சொல்லிவிட்டு ஒரு புதிர் போடுவேன். அதற்குச் சரியான விடை சொல்லாவிட்டால் உன் தலை நூறு சுக்கல்களாக வெடித்துவிடும்” என்றும் சொல்லியது. விக்கிரமாதித்தன் என்ன செய்வான்? வேதாளத்தின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு புதிரை அவிழ்த்துச் சரியான விடை சொல்லாவிட்டாலோ தலை வெடித்துவிடும்! ஆரம்பத்திலே சொல்லியுள்ள நிபந்தனைப்படி அவன் வழியிலே வாய் திறந்து பேசவும் கூடாது. பேசினால் மறுபடியும் வேதாளம் கட்டவிழ்த்துக் கொண்டு பழையபடி முருங்க மரத்திற்குப் போய் தலைகீழாகத் தொங்கிவிடும்!
பார்த்தான் விக்கிரமாதித்த மகாராஜன். திரும்பவும் முருங்க மரத்தை அடைந்து, மரத்திலேறி வேதாளத்தை கட்டிப்பிடித்துத் தோளில் சுமந்து கொண்டு வரமுடியும் என்ற தைரியம் ஏற்பட்டது.
ஒவ்வொரு முறையும் வேதாளம் ஒரு கதை சொல்லிப் புதிர்போடும். தன் தலை நூறு சுக்கல்களாக வெடிக்காதிருக்க விக்கிரமாதித்தன் வாய் திறந்து பதில் சொல்லி விடுவான். உடனே வேதாளம் முருங்க மரத்திற்குப் போய்விடும். இவ்வி தம் இருபத்து நான்கு முறைகள் வேதாளம் விக்கிரமாதித்தனுக்குப் புதிர் கதைகள் சொல்லியது. ராஜனும் சளைக்காமல் திரும்பத் திரும்ப முருங்கமரத்தை அடைந்து வேதாளத்தைப் பிடித்துக் கட்டித் தூக்கி வந்தான்.
– தொடரும்…
– விக்கிரமாதித்தன் கதைகள், வடமொழி மூலங்களைப் பரிசோதித்து எழுதியவர்: ராசு, தமிழ்ப் பாடங்களைப் பரிசோதித்து எழுதிவர்: அரு.ராமநாதன், முதற்பதிப்பு: ஜனவரி 1958, பிரேமா பிரசுரம், சென்னை.